பி.இரயாகரன்
10.02.2007
கொலைகள், ஒரு நாளில் எத்தனை கொலைகள். இவை பட்டியலிட முடியாதளவில் நடக்கின்றது. கொல்பவனும் தமிழன், கொல்லப்படுபவனும் தமிழன். ஏன் ஏதற்கு கொல்லப்படுகின்றோம் என்று தெரியாத, ஒரு நிலையில் கொல்லப்படுகின்றோம். இன்று நீ நாளை நான், இப்படி கொல்லப்படுகின்றோம். மரணத்தின் தேசமாக, தேசியமாக பாடை கட்டிச் செல்லுகின்றது எமது தேசம்.
ஒவ்வொரு மரணமும் வெளியிடும் கண்ணீர் கிளை நதியாகி ஒட, அவையே தேசத்தின் தேசியத்தின் நதிகளாகின்றது. சிங்கள தமிழ் வேறுபாடின்றி தலைவர்கள் பல்லைக்காட்டி சிரிக்கின்றனர். ஆயுதத்தை தூக்கி காட்டி கொக்கரிக்கின்றனர். அனைவரும் தமிழ் மக்களின் நிம்மதியான அமைதியான சமாதானமான வாழ்வுக்காகத்தான், தாம் இப்படி நடந்து கொள்வதாக வெட்க மானமின்றி கூறிக்கொள்கின்றனர்.
ஒவ்வொரு கொலையாக நாம் பிரேதப் பரிசோதனை செய்து, அவற்றின் பரிணாமத்தை அதன் வக்கிரத்தையும் இனம்காட்ட முடியாத அளவுக்கு சமுதாய வரட்சி ஒரு பக்கம். மறுபக்கத்தில் இவை போன்றவற்றை செய்பவர்கள், ஈவிரக்கமற்ற சமூக அடிப்படையற்ற அராஜகத்தை வாழ்வாக கொண்ட காட்டுமிராண்டிகள். அவர்களுக்கு இவையே வாழ்வாக, இரசனையாக, பெருமையாக, பீற்றிக் கொள்ளும் வீரமாக, தமது வெற்றியாக, தமது திறமையாகவும் கூட இருக்கின்றது. அவர்கள் எந்த சமூகம் பற்றி கூச்சலிடுகின்றனரோ, அந்த சமூகத்துடைய இன்பங்கள் துன்பங்களில் பங்கு கொள்ளாத அலுக்கோசு லும்பன்களின் காட்டுமிராண்டித்தனம் தான், அன்றாடம் நடக்கும் தொடர் கொலைகள். இந்த அலுக்கோசு தனத்துக்கு ஏற்ற அரசியல் தான், இன்று அனைத்துமாகிவிட்டது. இதன் மீதான விமர்சனங்கள், கண்டனங்கள் அவர்களுக்கு உறைப்பதில்லை. மாறாக அவர்களையும் கொல்ல அலைகின்ற ஒரு வெறிபிடித்த தெரு நாயாக சமூகத்தினுள் புகுந்து அலைகின்றது.
இவற்றை எல்லாம் மீறி, இந்த கொலைக்கான சமூக பின்புலத்தைக் காட்டுகின்ற, நியாயத்தைப் பேசுகின்ற, பொழுதுபோக்குக்கு அரிசியல் விபச்சாரம் செய்கின்றவர்களின் சொந்த வக்கிரத்தை, கேள்விக்குள்ளாக்க முனைகின்றோம். இதன் மூலம் மலடாகிப் போன சமூகத்தில், சமூக விழிப்புணர்ச்சிக்காக குறைந்தபட்ச எமது எதிர்வினைதான் இது.
இந்த வகையில் கிழக்கில் பேரினவாதம் நடத்திய ஆக்கிரமிப்பைக் கொண்டாட விரும்பிய ஜனாதிபதியின் வக்கிரமும், புலிகள் ஒரு கொலை மூலம் நடத்திய மறுவக்கிரமும் மனிதத்துவத்தையே உறையவைத்துள்ளது. இதை கண்டித்தவர்களின் வக்கிரம், மற்றொரு பரிணாமத்தில் மக்களையே கேனப்பயலாக்கியது.
கிழக்கில் பேரினவாதம் நடத்திய ஆக்கிரமிப்பை, தனது சொந்த தனிப்பட்ட அரசியல் வெற்றியாக கொண்டாடச் சென்ற பேரினவாத ஜனாதிபதி, ஒரு குடும்பத்தின் வாழ்வுக்கே வேட்டு வைத்துள்ளான். உலகத்தையும், சொந்த மக்களையும் ஏமாற்ற அவருக்கு தேவைப்பட்ட படத்துக்காக, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அப்பாவி தமிழ் மக்கள் தேவைப்பட்டனர். 'பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஜனநாயக" ஜனாதிபதி முன் மக்கள் தேவைப்பட, அவரின் இராணுவம் மக்களை கட்டாயப்படுத்தி கொண்டு சென்றது. ஜனாதிபதியோ தமிழ்ச்செல்வன் பாணியில், பல்லைக்காட்டி நடித்தான். அவர் ஜனநாயகத்தின் தலைவர் என்பதால் நடிப்புக்கு மக்கள் தேவைப்பட்டனர். இந்த வகையில் கட்டாயப்படுத்தி பொட்டிடவைத்து, மாலை அணிவித்த ஐயர் கொல்லப்பட்ட செய்தி, இதன் மூன்று பக்க வக்கிரத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
1. ஒரு ஜனதிபதி முன்னால் எப்படி மக்கள் கொண்டுவரப்பட்டு நடிக்கவைக்கப்பட்டனர் என்ற செய்தி
2. இந்த கொலை மூலம் புலிப்பாசிட்டுகளின் தொடர் கொலைகளின் நியாயத்தன்மை மறுபடியும் அம்பலமாகியுள்ளது.
3. இதை கண்டித்தவர்கள் புலிக்கு எதிராக மட்டும், குலைக்கும் நாய்கள் தான் என்பதை மறுபடியும் நிர்வாணமாக்கி விடுகின்றனர்.
இந்தக் கொலையைத் தொடர்ந்து, அந்தக் குடும்பம் கதறியழும் ஒலி பி.பி.சியில் வெளியானது. அந்தக் குடும்பம் தான் மட்டும் கதறியழும் போது கூறும் செய்திகள், மனித உணர்வுகளையே சிலிர்க்கவைத்து ஒரு கணம் இரத்தத்தையே உறையவைத்தது. பொட்டு இட்டு, மாலையை அணிந்த ஐயர், தனது மரணம் வரை அவர் அனுபவித்த உளவியல் சார்ந்த வாழ்வின் அனுபவத்தை அவரின் மனைவி வெளிப்படுத்திய போது, எமது நெஞ்சை ஒரு கணம் அதிரவைத்தது. இப்படித்தான் தமிழ் மக்களின் பெரும்பகுதி வாழ்கின்றது. எந்த நேரமும் எந்தக் கணமும், எமது சொந்த மரணத்தை எதிர்பார்த்து வாழ்வதே வாழ்வாகிவிட்ட எமது வாழ்வை, அந்த மனைவியின் கதறல் ஊடான செய்தி உறையவைத்தது. ஒரு ஈவிரக்கமற்ற பாசிசத்தின் கொடூரத்தை, சொல்லாது சொன்ன ஒரு செய்தியும் கூடத்தான் இது. மக்களுக்கும் இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கும் இடையில் உள்ள பாரிய இடைவெளியை மறுபடியும் தெளிவுபடுத்தி விடுகின்றது.
இந்தக் கொலையை புலியெதிர்ப்பு பிரிவும், கிழக்கு மேலாதிக்கப் பிரிவும் புலிக்கு எதிராக குற்றம்சாட்டி கண்டித்தன. ஆனால் இந்த கண்டனத்தின் பின்னுள்ள அரசியல், கேடுகெட்ட ஒரு அரசியலாகவும் இழிவுக்குரியதுமானது. செத்த ஐயரை மறுபடியும் இந்தக் கும்பல் கொன்றது.
உதாரணத்துக்கு கருணாவின் நேரடி இணையமான தமிழ் அலை ' வாகரையில் மஹிந்த ராஜபக்ஷவை அன்பால் ஆசீர்வதித்த மதகுருவுக்கு பிரபா குழு துப்பாக்கியால் ஆசீர்வாதம்" என்ற தலைபிட்டு, இந்த ஐயரை மறுபடியும் கொன்றனர்.
அந்த கும்பல் வெளியிட்ட செய்தியில் 'அண்மையில் வாகரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரபா குழுவிடம் இருந்து படையினரால் மீட்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்வையிட்டதோடு, பொது மக்கள், சமயப் பெரியார்கள் மற்றும் படையினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் வாகரைக்கு சென்றிருந்த ஜனாதிபதியை பொது மக்களும் படையினரும் வரவேற்க, மதப் பெரியார்கள் வரவேற்றதோடு ஆசீர்வாதமும் வழங்கியிருந்தனர்.
இறைவனுக்கு தொண்டு செய்ய புறப்பட்ட மதப் பெரியார்கள் ஒவ்வொரு மனித இதயத்திலும் இறைவன் வாழ்கிறான் என்ற தத்துவத்தை உணர்ந்தவர்கள் சமூகத்தில் ஜாதி, மத, மொழி பேதங்கள் மறந்து யார் அழைத்தாலும் அவர்களை அன்பினால் வரவேற்று ஆசீர்வாதிப்பது அவர்களின் தர்மமாகும்.
அத்தருமத்திற்கேற்ப வாகரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அன்பினால் ஆசீர்வதித்த மத குருவான சந்திவெளி பிள்ளையார் கோயில் பரமேஸ்வரக் குருக்கள் ஜயா அவர்களை பிரபா குழு துப்பாக்கி ரவைகளினால் நேற்று இரவு 800 மணியளவில் சந்திவெளி பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் வைத்து கொன்று குவித்து ஆசீர்வதித்துள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான பரமேஸ்வரக் குருக்கள் (56 வயது) ஜயா அவர்கள் ஜனாதிபதியை ஆசீர்வதித்தது தவறா? ஜனாதிபதி வாகரைக்கு வந்தது போன்று, அந்த இடத்தில் பிரபாகரன் வந்திருந்தாலும் அவரையும் ஆசீர்வதிப்பது மதகுருமாரின் தருமமாகும். அதுவே நடந்துமிருக்கும்." என்கின்றது. இதனடிப்படையில் தான், அனைத்து கிழக்கு மேலாதிக்கவாதிகளும், புலியெதிர்ப்பு பிரிவினரும் இந்த கொலையை தமது தேவையின் எல்லைக்குள் திரித்தனர்.
குறித்த ஐயர் தானாக அந்த இடத்துக்கு செல்லவில்லை. அன்பால் ஆசீhவதிக்கவென்று, தானாக அவர் விரும்பி அங்கு செல்லவில்லை. பேரினவாத இராணுவம், அவர்களின் ஜனாதிபதியும் உலகை ஏமாற்றுவதற்காக கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று 'அன்பையும் ஆசீர்வாதத்தையும்" பெற்றவர். ஐயரின், ஏன் அந்த சமூகத்தின் விருப்புகள் எதையும் கேட்டறியாது ஒரு கும்பலின் செயல்கள் மூலம் உலகத்துக்கு ஒரு நாடகம் ஆடிக்காட்டப்பட்டது. இப்படி ஐயர் பொட்டிட்டதும், மாலை அணிவித்ததும் அரங்கேற்றப்பட்ட ஒரு அரசியல் நாடகம். இதற்கு கருணா என்ற பாசிச கும்பல் துணை நின்றது. இதைத் தான் கருணாவின் இணையம், தனது சொந்த பாசிச கைக்கூலித்தனமான வக்கிரத்துடன் நியாயப்படுத்துகின்றது. இந்தச் செயலைச் செய்தவர்கள் தான், மக்களின் ஏன் ஜனநாயகத்தின் காவலர்கள் என்று பீற்றுகின்றனர். இந்தப் பொட்டையும், மாலையையும் பெற்றக் கொண்ட அந்த போக்கிரி ஜனாதிபதி, இதற்காக இந்த ஜனநாயகம் வேஷத்துக்காக வெட்கி தலைகுனியவில்லை.
மாலை அணிவிக்கப்படவும், பொட்டிட வைக்கவும் காரணமாக இருந்த ஐனாதிபதியின் செயலால் கொல்லப்பட்ட ஐயரின் மரணத்தின் பின், பேரினவாத சர்வாதிகாரி பெயரளவில் புலிக்கு எதிரான கண்டனமாகவே இதைக் கண்டிக்கின்றனர். தனது திமிர் பிடித்த அடாத்தான பாசிச செயலுக்காக எந்தவிதத்திலும் வெட்கப்படவில்லை. அந்த பேரினவாத சர்வாதிகாரியின் அரசியல் ஒருபுறம் என்றால், மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு மற்றும் கிழக்கு மேலாதிக்கவாதிகள் ஜனாதிபதியின் வளர்ப்பு நாய்களாகவே குலைத்துக் கொண்டு வாலையாட்டுகின்றனர்.
இந்த கொலைகார பாசிச புலிகளை குற்றம் சாட்டுபவர்கள், அந்த ஐயரை கடத்திச் சென்று இந்த கொலைக்கு காரணமானவர்களின் ஈனத்தனத்தை கண்டிக்கவில்லை. அதற்கு எதிராக செய்தி போட, அவர்களின் கைகள் மறுப்பது மட்டுமின்றி, மூளை சொந்தமாக மக்களுக்காக இயங்க மறுக்கின்றது. இப்படி அந்த கொலைக்கு திட்டமிட்ட வகையில் துணை சென்றனர், துணை செல்லுகின்றனர்.
மறுபக்கத்தில் புலிகளின் பாசிச கொலைகார கும்பல் நடத்திய வெறியாட்டம் அம்மணமாகி நிற்கின்றது. சொந்த விருப்புடன் செய்யப்படாத ஒரு நடத்தை மீதான வெறியாட்டம், அவர்களின் தொடர்ச்சியான இடைவிடாத மொத்த கொலை வரலாற்றையும் அம்மணமாக்குகின்றது. இப்படித் தான் அவர்களின் கொலைகள், கொலைக்கான காரணங்கள் அனைத்தும் போலியானவை, பொறுக்கித்தனமானவை. இதை ஐயரின் மனைவியின் கதறல் நிர்வாணமாக்கிவிடுகின்றது. இதற்கு பின்னால் குழுமாடுகளின் வக்கிரமான விதண்டாவாதமான நியாயப்படுத்தல்கள் அனைத்தும் இழிவுக்குரியவை.
ஒருவனின் சொந்த விருப்பமற்ற நிலையிலும், சூழலாலும் நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு மனிதனின் செயல்கள் மீதான, பாசிச பயங்கரவாத கொலைவெறியாட்டங்கள், ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் உள்ள காரணத்திலான பொய்மையும், அதன் வக்கிரமும் தமிழ் இனத்தின் மொத்த அழிவுக்கே இட்டுச் செல்லுகின்றது.
இக் கொலை கிழக்கில் இருந்த புலிகளுக்கு இருந்த சமூக அடிப்படைகளைக் கூட வெடிவைத்துள்ளது. அனைவருக்கும் நன்கு தெரிந்த வகையில் பயன்படுத்தப்பட்ட ஒரு செயல் மீதான காட்டுமிராண்டித்தனம், அந்த மக்களின் வெறுப்புக்குரிய ஒரு செயலாக மறுபடியும் மறுபடியும் மாறியதில் வியப்பு ஏதுமில்லை.
No comments:
Post a Comment