மழை பொய்த்துப் போகும் காலங்களில்தான் காவிரியில் நீர்கேட்டு கர்நாடகாவிடம் கையேந்தும் நிலைமை உள்ளது என்றால், நல்ல மழை பெய்தும் கூட, தமிழகமே கட்டிப் பராமரித்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் அதன் கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் உரிமையைக் கூட அடாவடியாக மறுக்கிறது, கேரள அரசு. இப்படியே போனால் பாலாறு, காவிரி ஆகியவற்றைத் தொடர்ந்து வைகையும் வறண்டு போய் தமிழ்நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பு பாலைவனமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும், தேர்தல் நலனுக்காக ஓட்டுக் கட்சிகளும் தமிழக நலனில் அக்கறையுள்ள சில சிறிய அரசியல் அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே இது குறித்துப் பேசி வருகின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் இது குறித்து அதிகம் தெரிந்து கொண்டு அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம், தமிழக மக்களிடம் அதிகம் செல்வாக்கு செலுத்தும் ஓட்டுக் கட்சிகளும் செய்தி ஊடகங்களும் இந்த எரியும் பிரச்சினையை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்வதில்லை.
அதே நேரத்தில் கேரளத்து அரசியல் கட்சிகளோ (இடதுசாரிகள் உட்பட) இப்பிரச்சினையை அடித்தட்டு மக்களிடம் திரித்துச் சொல்லி தேசியஇனவெறியைக் கிளப்பி விட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளோ, இப்பிரச்சினையை குறைந்தபட்சம் சாமான்ய மக்களுக்குப் புரிய வைக்கவும் முயலவில்லை. இது எப்படி இருக்கிறது என்றால், ""பறித்தவன் பதறியதும், பறிக் கொடுத்தவன் ஊமையாகி விட்டான்'' என்ற வாய்மொழிக்கேற்ப தமிழக ஓட்டுக் கட்சிகளும் அமைதியாகி விட்டன.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், உச்சநீதி மன்றத் தீர்ப்பான 142 அடி நீர் அளவு உயர்த்த வேண்டும் என்ற ஆணையை கேரள அரசு நிராகரித்து விட்டது.உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் சரி, அதற்கு முன்பிருந்த ஜெயாவும் சரி இது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவர்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பேசி தீர்க்கலாம் என்று இழுத்தடிப்பது ஏன்?
தேசிய இனவெறியைக் கிளப்பிவிடும், நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசு மீது உச்சநீதி மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசையும் வலியுறுத்தவும் இல்லை. மத்திய அரசும் இதில், "கழுவும் மீனில் நழுவும் மீனாகவே' செயல்பட்டு தமிழகத்தின் நியாயமான உரிமையைப் புறக்கணித்து வருகிறது.
அப்படி என்றால் இதில் நமக்கு உரிமையில்லையா? முழு உரிமை உண்டு. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. இதன் உண்மை நிலவரம் தான் என்ன?
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பருவ மழையானது, அடிக்கடி பெய்யாமல் போனதால், விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்பைப் போக்க, அன்றைய ஆங்கிலேய அரசு அதாவது, சென்னை மாகாண அரசு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் நீரானது, வீணாக அரபிக்கடலில் கலப்பதைத் தடுத்து, தென் மாவட்டங்களின் நீரின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிவு செய்தது.
இதற்கான இடத்தைத் தெரிவு செய்து, திருவிதாங்கூர் மன்னருடன் சென்னை மாகாண அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. (அணை இருக்கும் இடம் திருவிதாங்கூர் மன்னனுக்கே சொந்தமில்லை என்பது வேறு விசயம்). இதனடிப்படையில் உறுதி செய்து கொண்ட பின்பே சென்னை மாகாண அரசு அணையைக் கட்ட முடிவு செய்தது. பென்னி குக் என்ற ஆங்கிலேய பொறியாளர் தலைமையில் 1874ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட துவங்கியது.
1895இல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட இந்த அணையின் நீரை, ஒரு குகையின் மூலமாக திருப்பி, தமிழகத்தின் தென் மாவட்ட விளைநிலங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் உரிமையை 999 ஆண்டுகள் வரை 1886இல் அக். 9ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டது.
முல்லைப் பெரியாறு நீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிட்டது தமிழக அரசு. அதனடிப்படையில், கேரள அரசுடன் 1970 மே 29இல் தமிழக அரசானது, பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின் போது, கேரள அரசோ, ஒரு கோரிக்கையை முன் வைத்தது.
அதாவது, ஏற்கெனவே போட்ட முதல் ஒப்பந்தத்தில் அணைக் கட்டுவதால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்திற்கு வாடகையாக, ஒரு ஏக்கருக்கு
ரூ. 5 வீதம் ரூ. 40,000த்தை தமிழக அரசு செலுத்தி வந்தது. அதை தற்போது ஒரு ஏக்கருக்கு ரூ. 30 வீதம் உயர்த்தி தரும்படி கேரள அரசு கோரியது. தமிழக அரசும் இதற்கு ஒப்புக் கொண்டு நீரில் மூழ்கும் 8000 ஏக்கருக்கு ரூ. 30 வீதம் 2,40,000 ரூபாயை ஆண்டுதோ றும் இன்றுவரை செலுத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, கேரள அரசோ, 1976இல் தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து நிறுத்தி, அதைதானே எடுத்து செல்லும் நோக்கத்தில், 1976இல், 555 அடி உயரத்தில் (முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரியது) இடுக்கி அணையைக் கட்டியது.
இடுக்கி அணைக்குப் போதிய நீர் கிடைக்காததால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க, கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். இடுக்கி அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்றும் ஆலோசனைக் கூறியுள்ளார். இடுக்கி அணைக்குத் தேவையான அளவு நீரைப்பெறும் நோக்கத்தில் தான் கேரள அரசு பல சதிவேலைகளையும், புரளியைக் கிளப்புவதையும் செய்கின்றது.
இடுக்கி அணைக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக தமிழக வனப் பகுதியில் இருந்த செண்பகவள்ளி அணையை சதித்தனமாக உடைத்து விட்டது, கேரள அரசு. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் அந்த அணையைக் கட்டித் தர ஒப்புக் கொண்டு அதற்காக தமிழக அரசிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டு இன்னமும் அணையைக் கட்டித் தராமல் ஏய்த்து வருகிறது.
இடுக்கி அணைக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பெரியாறு அணைக்கான இயற்கையான நீர்வரத்துப் பாதையை மறித்து கெவி அணை, பம்பா அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை ஆகிய புதிய சிறு அணைகளை கட்டி இயற்கை நீரோட்டத்திற்கு எதிராக உயரமான இடங்களுக்கு இராட்சத "பம்பு'கள் கொண்டு மலைகளைத் தாண்டி நீரேற்றி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு சென்றது. முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒப்பந்தத்தை மீறி கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பொறியாளர்களைக் கைது செய்தும் வழக்குப் போட்டும் வாகனங்களை பறிமுதல் செய்தும் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டேயிருந்தது. இருந்தபோதும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆட்சியாளர்கள் பொறியியலாளர்கள், அதிகாரிகளின் முறையீடுகளை கண்டு கொள்ளாது தொடர்ந்து கேரள அரசுக்குத் துணையாக தமிழகத்திற்கு துரோகமிழைத்தே வந்திருக்கின்றனர். அணையை இயக்குவது, படகு விடுவது, அணைக்கான பாதைகளை பயன்படுத்துவது — என்று பல உரிமைகளை தாரை வார்த்திருக்கின்றனர்.
அணை பலவீனம் அடைந்து விட்டதாகக் காரணம் காட்டி, கேரள அரசும் தமிழக அரசும் போட்ட ஒப்பந்தபடி அன்றைய எம்.ஜி.ஆர். அரசு முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 1.6 கோடி ரூபாயை ஒதுக்கி, 1241 அடி நீளம் கொண்ட அணைக்கு 10 அடிக்கு ஒரு பில்லர் வீதம், 125 அழுத்தமானப் பில்லர்களை உள்பக்கம் எழுப்பி, 55 அடி அகலம், 155 அடி உயரத்தில், ஒரு சப்போர்ட் அணையை (பேபி டேம்) கட்டி உபரியாக 3 செட்டர்களையும் பொருத்தி மேலும் பலப்படுத்தியது. அவ்வப்போது ஏற்படும் கசிவையும் நிறுத்த சுண்ணாம்பு, சிமெண்டுப் பாலை அணையின் உட்புறத்தில் இறக்கி தொடர்ந்து பலப்படுத்தியும் வந்துள்ளது.
இதை மைய மண் இயங்கியல் வல்லுநர்கள் (இந்த வல்லுநர் குழுவில் கேரள அரசு சார்பில் எம்.கே.பரமேஸ்வரன் இருந்தார்) அதிநவீன கருவிகள் கொண்டு ஆய்வு செய்து பேபி டேமுக்கு வலிமை இருக்கிறது என்று 14 ஜூன் 2000த்தில் சான்றும் அளித்தனர். இதனடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்திக் கொள்ள சான்றும் அளித்து விட்டது.
இந்த சான்றை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம் 142 அடி நீரை உயர்த்தலாம் என்று .2006இல் தீர்ப்பும் அளித்து விட்டது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்து, தீர்ப்பை மறுசீராய்வு செய்யும்படி மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, கேரள அரசு. மனு செய்தவர்கள் அதன் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்பது தானே நியாயமானது. சாதகமாக இருந்தால் ஏற்பது, இல்லையெனில் மறுப்பது என்பது அயோக்கியத்தனம் இல்லையா? மேலும் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, கேரள நீர்ப் பாசனம் நீர் சேமிப்புச் சட்டம் என 2003இல் திருத்தம் கொண்டு வந்தது மோசடி இல்லையா?
இந்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதி மன்றம். உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்க மறுப்பதோடு, தமிழகத்தின் நியாயமான பாதிப்பைக் கூடப் பார்க்க மறுக்கிறது.
136 அடியாக நீர் குறைப்பதால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர்வரத்து குறைந்து, 1,25,000 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகி விட்டன. மின்சாரமும் 140 மெகாவாட் மின் உற்பத்தியானது 56 மெகாவாட் மின் உற்பத்தியாக குறைந்து விட்டது. இதனால் தமிழகத்திற்கு 130.80 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதோடு 1980 முதல் 2006 வரை ஏறக்குறைய ரூ. 3561.6 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலத்தையே நம்பி வாழ்ந்து வந்த மதுரை, தேனி, இராமநாதபுரம் மாவட்டத்து மக்களும் வயிற்றுப் பிழைப்புக்காக அண்டை மாநிலங்களைத் தேடி ஓடுகின்றனர். ஆனால், கேரள மக்களுக்காக, தமிழகம் உற்பத்தி செய்து அனுப்பும் உணவுப் பொருட்களுக்கு தேவையான நீரின் அளவோ 511 டிஎம்சியாகும். அந்த நீரையாவது தரவேண்டுமென்ற எண்ணம் கூட இவர்களுக்கு இல்லை.
உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லும் மார்க்சிய கோட்பாட்டை சொல்லிக் கொண்டே, இந்திய தொழிலாளர்களைப் பிளவுப்படுத்தும் முதலாளித்துவ தேசிய இனவெறியைப் புகுத்தி கொண்டதன் விளைவுதான் இது என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர்.
இவர்களின் தேசிய இனவெறிக்கு ஒத்து ஊதும் வேலையைத்தான் தமிழக சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் அவர்களும், "உச்சநீதி மன்ற தீர்ப்பை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும்' என்கிறார். இதற்கு சபாநாயகரும் ஒத்து ஊதுகிறார். அதேபோல் தமிழ் மாநிலத் தலைவர்கள் வரதராஜனும், எம்.பாலகிருஷ்ணனும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும் பேசி தீர்க்க வேண்டும் என்று மடையை மாற்றி விடுகின்றனர்.
படித்தவர்கள் நிரம்பிய கேரள மக்களிடையே அறிவியல்பூர்வமான ஆதாரங்களை மறுத்து, மேலோட்டமான சில வாதங்களை முன் வைத்து பீதியூட்டும் பிரச்சாரம் நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு 102 ஆண்டுகளாகி விட்டன; பழங்கால தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டது; பூமி அதிர்ச்சி நிகழ வாய்ப்புள்ள பகுதியில் உள்ளது; அணை உடைந்தால் கேரளத்தின் ஐந்து மாவட்டங்களில் வாழும் 35 இலட்சம் மக்களின் உயிரும், பல ஆயிரம் கோடி சொத்துக்களும் அழியும் என்று கூறுகிறார்கள்.
உலகின் எல்லாப் பகுதிகளிலுமே ஏதாவது ஒரு அளவு அதிர்ச்சிக்குள்ளாகும் வாய்ப்புள்ளது; ஆனால் முல்லைப் பெரியாறு அணைக்கு அவ்வாறான வாய்ப்பிருப்பதாக யாரும் நிரூபிக்கவில்லை. மகாராட்டிரம் கொய்னா அணைப்பகுதியில் பல கிராமங்களை விழுங்கிய பூமி அதிர்ச்சி நிகழ்ந்துள்ள போதிலும் அந்த அணை இடிக்கப்படவில்லை, பழமையான தொழில் நுட்பங் கொண்ட அணைகள் இடிக்கப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதைப் போலவே, ஆயிரம் ஆண்டுகளாகியும் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் தற்போதும் உள்ள அணைகளுக்கும் சான்றுகள் உள்ளன.
ஒப்பந்த காலமான 999 ஆண்டுகளுக்கு, நூறு சதவீதம் எந்தவித ஆபத்தும் பாதிப்பும் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணை நீடித்திருக்கும் என்று எந்த முட்டாளும் வாதிட மாட்டான். அதேசமயம் நிபுணர்களின் ஆய்வு முடிவுப்படி 152 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கினாலும் உடனடி ஆபத்தில்லை என்பதுதான் உண்மை. உலகிலுள்ள எல்லா அணைகளுக்கும், பலநூறு மாடிகள் கொண்ட வானுயரக் கட்டிடங்களுக்கும் கூட இது பொருந்தும். சொல்லப் போனால் மனிதனின் கட்டுமானங்கள் எல்லாமே காலத்தாலும் இயற்கை பேரழிவுகளாலும் பாதிக்கப்படக் கூடியவைதாம். எரிமலைப் பூமியாகிய ஜப்பானில், குறிப்பாக டோக்கியோவில் எந்த உத்திரவாதத்தில் வானுயரக் கட்டுமானங்களும் அணு உலைகளும் நிர்மாணிக்கப்படுகின்றன. நவீன காலத்தில் ஆபத்து விளைவிக்கக் கூடிய கட்டுமானங்கள் எல்லாமே நிபுணர்களால் கண்காணிக்கப்படுவதும், தேவையானபோது தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுவதும்தான் நடைமுறையாக உள்ளது.
அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையும் கருத்தப்பட வேண்டும்; ஆனால் கேரள மக்களிடையே மூட நம்பிக்கை வகையிலான பீதியூட்டப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை தகுதியுடைய நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், 152 அடி உயரத்துக்கு ஆபத்தின்றி நீரைத் தேக்க முடியும். இதுதவிர தகுதியுடைய பொறியியலாளர்களால் கண்காணிக்கப்பட்டு, இயக்கப்படுகிறது. தேவையான பலப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் தேவையான அளவு நீரை தகுந்தநேரத்தில் சீராக வெறியேற்றவும் முடியும்; பெரியாறு அணைக்கு கீழே அதைவிட ஐந்து மடங்கு அதிகமான கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் உள்ளது. இரண்டு அணைக்கும் இடையுள்ள 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல சிறிய தடுப்பணைகள் கட்டி மேலும் உத்தரவாதமாக்கிக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் கூட, 999 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக நீடிக்காது என்றாலும், தேவையான போது மாற்று அணைகட்டிக் கொள்ளவும் 1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி உரிமையுண்டு.
ஆனால் யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ளும் சிலர், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதியதொரு அணையைக் கட்டிவிடலாம் என்று யோசனைக் கூறுகிறார்கள். இப்படிக் கூறுவது தற்போதுள்ள அணை பாதுகாப்பற்றது என்ற கேரளாவின் நிலையை எவ்வித தொழில்நுட்ப ஆதாரமுமின்றி ஆதரிப்பதாகும். அப்படிப் புதிய அணையைக் கட்டி, பழைய ஒப்பந்தத்திற்குப் பதிலாக புதிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, இடுக்கி அணைக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பெறுவதை நிபந்தனையாக்குவது; எஞ்சிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு விற்பது என்ற கேரளாவின் உள்நோக்கத்தையும் ஆதரிப்பதாக உள்ளது. புதிய அணை கட்டினால், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்குவதால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் அதே அளவு தண்ணீரையும் மின்சாரத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்குவதாக கேரளா உறுதி கூறவில்லை என்பது முக்கியமானது.
கேரளம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் தானம் செய்வதைப் போலவும், ஆகவே தமிழகம் அதை உரிமையாகக் கோர முடியாது; யாசகமாகத்தான் கோர முடியும் என்பதைப் போலவும் நடந்து கொள்கின்றன. காவிரிப் பிரச்சினையில் நீர்ப் பிடிப்பு மேல்கை பகுதியைக் கர்நாடகம் கொண்டிருந்தாலும், சர்வதேச நதிநீர் விதிகளின்படி, கடைமடைப் பகுதியான தமிழகத்திற்கு இயற்கையான உரிமையுண்டு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு உரிமை உண்டு. மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள கேரளமும் கர்நாடகமும் அதன்படியான நடுவர்மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை ஏற்று அமலாக்கியே தீரவேண்டும்.
நடுவர்மன்ற மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை அமலாக்க மறுக்கும்போது, மத்திய அரசு அம்மாநில அரசுமீது இராணுவ நடவடிக்கைகள் உட்பட எல்லாவிதமான நடவடிக்கைகளையம் மேற்கொள்ள வேண்டும்; இதை மத்திய அரசு செய்யாதபோது, மத்திய அரசின் எல்லா அதிகாரங்களையும் தமிழகம் ஏற்க மறுப்பதற்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. இந்த நியாயத்தையும் உரிமையையும் உறுதி செய்வதுதான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையாகும். இதுவொன்றுதான் இரு வேறு தேசிய இனங்களைக் கொண்ட அண்டை மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான வழியாகும். அவ்வாறின்றி, ""இந்திய தேசிய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் மாநில மக்கள் அமைதித் தீர்வு காணவேண்டும்'' என்று பாதிக்கப்படும், பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு தரப்பையும் பார்த்து ""தேசிய வாதிகள்'' உபதேசம் செய்கின்றனர்.
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்னும் ஆயுதத்தைக் கையிலெடுப்பது ஒரு நிரந்தர, நீண்டகாலத் தீர்வாக இருக்கும் அதேசமயம் கேரளம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் எதிராக, பொருளாதார முற்றுகை, பரம்பிக் குளம், ஆழியாறு, மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை உட்பட கேரளாவுக்கான சாலை மற்றும் இரயில் பாதைகளை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் தமிழகத்திற்கு எவ்வளவு அவசியமோ அதைப்போலவே தமிழகத்திலிருந்து அம்மாநிலங்கள் அடையும் பொருளாதார உதவிகள் அவற்றுக்கு அவசியமானவை என்பதை உணர்த்தியே தீரவேண்டும். இது பழிவாங்கும் செயலல்ல; படிப்பிக்கும் செயலாகும்.
· ஆர்.கே.
2 comments:
இது தான் ஒரே தீர்வு.,, பாலில் இருந்து காய்கறி வரை நம்மை நம்பி இருக்கும் .... களுக்கு நிச்சயம் பாடம் புகட்ட வேண்டும்.
நம்ம நாட்டில் நீதி என்ற........க்கோமாளிகள் நடத்தும் ஒரு நாடகம்.
ஆற்காடு வீராச்சாமிகிட்ட விளக்கம் கேட்க தெரிந்த நீதிபதி போல,ஏன் உச்ச நீதிபதி குமார சாமிகிட்டே ஏன் காவிரி விவகாரத்தை கேட்க கூடாது?
அச்சுதானந்தனையும் அது போலவே கூப்பிட்டு விளக்கம் கேட்க வேண்டும்.
இல்லை என்றால் ஒரு மலையாழியும் இங்கே இருக்கக் கூடாது
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்னும் ஆயுதத்தைக் கையிலெடுப்பது ஒரு நிரந்தர, நீண்டகாலத் தீர்வாக இருக்கும்.
Brilliant, if such rights are available and if Kerala and Karnataka declare themselves to be
independent soverign nations with
soverignity over natural resources in their territorial limits what will happen.Whom should Tamil Nadu approach - UN?. Your solutions are worse than the disease.
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை - do you folks really under what this means and what are the implications of this
right.Try to think beyond slogans and cliches.
Post a Comment