தமிழ் அரங்கம்

Friday, March 9, 2007

திசைதவறிய தேசிய விடுதலைப் போர்

அசாம்-உல்ஃபா :

திசைதவறிய தேசிய விடுதலைப் போர்


டந்த ஜனவரி 58 ஆகிய நான்கு நாட்களில் எழுபதிற்கும் மேற்பட்டவர்களை அசோம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் (உல்ஃபா) கொன்றிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பீகாரிலிருந்து பிழைப்புக்காக அசாமுக்குப் போய் அசாமிய மற்றும் அங்குள்ள வங்காளி ""பாபு''க்களுக்குச் சேவைசெய்யும் பீகாரி உழைப்பாளிகள். இப்போது அந்தப் பீகாரி தினக்கூலிகள் சாரை சாரையாக கண்ணீரும் கம்பலையுமாக பீகாருக்குத் திரும்புகின்றனர். இந்தக் கொலைகளுக்கு "உல்ஃபா'வினர் உரிமை பாராட்டிக் கொள்ளவில்லை. அதேசமயம் "உல்ஃபா' துணைத் தலைவர் பிரதீப் கோகோய், ""இந்தக் கொலைகள் எல்லாமே அசாம் அரசாங்கமே செய்தவைதாம். சமாதான முயற்சியில் உல்ஃபாவுக்கு அக்கறையில்லை என்று காட்டி, அந்த அமைப்பின்மீது அவதூறு கிளப்புவதற்காகச் செய்யப்படும் சதியின் ஒரு பகுதி"" என்றும் கூறியுள்ளார். ஆனால், உல்ஃபாவின் அதிகாரபூர்வ ஏடான ""சுதந்திரம்'' அசாமுக்குள் நுழையும் இந்திபேசும் மக்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறது. ""அசாமிய மண் குட்டி ராஜஸ்தானாகவும், குட்டி பீகாராகவும், குட்டி கொல்கத்தாவாகவும் மாறி வருகிறது; இந்தியக் காலனியவாதிகளுக்கும் அசாம் மக்களுக்கும் இடையே போர் நடந்து வரும் இந்தச் சமயத்தில் அசாமுக்குள் பிற மாநிலத்தவர்கள் வருவதால் ஏற்படும் இழப்புகளுக்கு அவர்கள்தாம் காரணமும் பொறுப்பும் ஏற்க வேண்டும்'' என்று அந்த ஏடு எச்சரித்திருக்கிறது. இந்த எச்சரிக்கையையும், கடந்த கால அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய பீகாரிகள் படுகொலைகளுக்குக் காரணம் "உல்ஃபா'தான் என்றே கருத வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட கொலைகள் 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இப்போது நடக்கின்றன.


அசாமில் இருந்து அந்நியர்களை வந்தேறிகளை வெளியேற்றும் இயக்கம் தொடங்கி கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. காலனி ஆட்சிக் காலத்திலேயே வங்காளிகளும் மார்வாடி குஜராத்திகளும் அசாமில் பெருமளவு குடியேறி பொருளாதார ஆதிக்கம் பெற்றனர். வங்கதேசப் போரின்போது பெருமளவு கிழக்கு வங்க அகதிகள் இலட்சக்கணக்கானோர் குடியேறினர். இத்தகைய வரலாற்று நிகழ்வுகளால் அசாமிய மக்கள் தமது தேசிய இன அடையாளத்தை இழப்பதாகக் குமுறினர். இதன் விளைவாக 1980களின் ஆரம்பத்தில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் தலைமையில் ""அந்நியர்களை வெளியேற்றும்'' போர்க்குணமிக்க போராட்டங்கள் வெடித்து, இந்திய அரசையே கலங்கடிக்கச் செய்தன. அந்தப் போராட்டங்களை வங்கதேச அகதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, குறிப்பாக எல்லா இசுலாமியர்களுக்கும் எதிராகத் திருப்பிவிட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பார்ப்பனபாசிச கும்பல் எத்தணித்தது. பார்ப்பன பனியா தரகு முதலாளிய ஏகாதிபத்திய நலன்களுக்காக, அரச பயங்கரவாதத்தை ஏவி பல்வேறு தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி ஏக இந்திய அரசியல் அமைப்பைக் கட்டிக் காத்து வருகிறது, காந்திநேரு பரம்பரை காங்கிரசு. ""அந்நியர்களை வந்தேறிகளை வெளியேற்றும்'' போராட்டம் அசாமிலுள்ள இசுலாமியர்களுக்கும், போடோ முதலிய தேசிய சிறுபான்மை பழங்குடி இனங்களுக்கும் எதிரானதென்று திரித்து, பிளவுபடுத்தி மோதவிட்டு இரத்தம் குடித்தது; இந்திய உளவுப் படையான ""ரா'' மூலம் ஆயுதங்களும் பயிற்சியும், நிதியுமளித்து மத்திய அரசுக்கெதிரான போராட்டங்களை அசாமியர்களுக்குள்ளேயான சிவில் யுத்தமாக மாற்றியது.


பல ஆயிரம் பேரைப் பலிகொண்ட இந்தப் பிரச்சினையில் இரண்டு போக்குகள் ஏற்பட்டன. தலைமையில் ஒரு பிரிவு மத்திய ஆட்சியாளர்களாகயிருந்த ராஜீவ் கும்பலுடன் சமரச ஒப்பந்தம் செய்து கொண்டது; அசாம் கண பரிசத் என்ற அரசியல் கட்சி அமைத்துக் கொண்டு தேர்தலில் குதித்து சில ஆண்டுகள் ஆட்சி நடத்தி, இலஞ்ச ஊழலில் மூழ்கி மேலும் மேலும் பிளவுற்று பலவீனமடைந்து விட்டது. இரண்டாவது பிரிவு, இந்திய காலனிய ஆட்சியிலிருந்து பிரிந்து செல்லும் தேசியஇனப் போராட்டமாக இயக்கத்தை வளர்த்தெடுத்து, அதற்காக அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற தலைமறைவு அமைப்பைக் கட்டி ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியது. தேசிய முதலாளிய சக்தியால் தலைமையேற்கப்பட்ட தேசிய இன விடுதலைப் போராட்டம், தனது இலட்சியத்தையும் அதற்கேற்ற வழிமுறையையும் கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல, பஞ்சாபின் காலிஸ்தானிகளைப் போல குறுகிய இனவெறி இயக்கமாகவும், சுத்த இராணுவவாதிகளாகவும் சீரழிந்து போயிருப்பதையே, பிற தேசிய இன உழைக்கும் மக்களைப் படுகொலை செய்வதும், நியாயப்படுத்த இயலாத கொலைகள் புரிவதுமான நிகழ்வுகள் காட்டுகின்றன. நியாயமான தேசிய இனக் கோரிக்கையைக் கையிலெடுத்து, ஒடுக்கும் பெருந்தேசிய அரசுக்கு எதி ராக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக இவ்வாறு சீரழிந்த இயக்கங்களை ஆதரிப்பது குறுகிய தேசிய இனவெறி பாசிசத்துக்குத் துணைபோவதாகும்.

No comments: