பி.இரயாகரன்
23.04.2007
ஒரு தீவிரமான வன்முறை கொண்ட பொலிஸ் ஆட்சி தான், பிரான்சின் சமுதாய முரண்களை ஒழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிப்படுகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் முன்னணியில் வெற்றி பெற்ற வேட்பாளரே, இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவார் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவருகின்றது.
பொலிசாருக்கு அதிக அதிகாரங்களும், வரைமுறையற்ற கைதுகள் மூலமும், சிறைத்தண்டனைகள் மூலமும், சமுதாயத்தின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற மனித அற்பத்தனங்களே இத் தேர்தலில் மேலோங்கி காணப்படுகின்றது. சமுதாயத்தில் இந்த முரண்பாடு ஆழமாகி, ஒரு வெறியாகி வெளிப்படுகின்றது.
இதன் மூலம் அனைத்து பிரஞ்சு மக்களின் நலனை பூர்த்தி செய்யப் போவதாக, பொய்யாக பீற்றிக்கொள்ளுகின்றனர். மக்களை ஏமாற்றி குறுகிய நிறவாதம் முதல் ஆசை காட்டல் வரையிலான அற்பத்தனங்கள் மூலம் வெற்றி பெற முனைகின்றனர்.
அண்மைய பிரஞ்சு வரலாற்றில் இந்த தேர்தலில் அதிக மக்கள் வாக்களிக்கும் அளவுக்கு, சமுதாயம் இரண்டாக பிளந்து கடுமையான முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தைப் பிளந்து, சமூகத்தின் பிளவுக் கோட்பாடுகளுக்குள் தீர்வுகளை முன்னிறுத்தி, தேர்தல் வெற்றி சாதிக்கப்படுகின்றது.
நாசிக்கட்சிகளின் கொள்கைகளை உள்வாங்கியதன் மூலம், அதை தீவிர வலதுசாரிகள் தமது வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக இணைத்துக் கொண்டதன் மூலம், ஒரு பகுதி நாசிகளை முதல் சுற்றில் அணிதிரட்ட முடிந்தது. இரண்டாவது சுற்றில் நாசிகளின் முழு ஆதரவில் வெற்றி பெறுவது என்ற திட்டத்துக்கு அமைய, வலதுசாரிகள் தமது கொடூரமாக பக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் நடைமுறை சார்ந்த விளைவே மனிதத்தை சிதைப்பது தான.
ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் மேலான தீவிரமான தாக்குதலுக்கு தயாராகும் ஒரு பொலிஸ் ஆட்சி நிறுவப்படும் என்ற நம்பிக்கைக்காக வாக்களிப்படுகின்றது. இதன் மூலம் ஒடுக்குபவன் நம்பும் சட்ட ஒழுங்கை பேணமுடியும் என்ற நம்பிக்கை தான், தேர்தல் முடிவுகளாகின்றது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் வாழ்வுக்கான போராட்டங்களையும், வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் அராஜக நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.
இந்த வகையில் தான் ஒடுக்குபவர்கள் என்றுமில்லாத பொலிஸ் வன்முறையைக் கையாள்வார்கள். ஆனால் இந்த வழிகள் எதிர்மறைத் தன்மை கொண்டதாக, மனித விரோத செயலாக அமைவதை வரலாறு மறுபடியும் நிறுவும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் வாழ்வு ஆதாரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தான், அதிதமான வன்முறைகளும், சமுதாயத்தில் அராஜகத்தன்மையும் அதிகரிக்கின்றது. இதை பொலிஸ் ஆட்சி மூலம் நிவர்த்தி செய்ய முடியாது.
சமுதாயத்தில் நிலவும் இந்த நிலைமைக்கான காரணம் இடதுசாரிகளின் அரசியல் அற்பத்தனத்தின் விளைவாகும். இடதுசாரிகள் என்றும், கம்ய+னிஸ்டுக்கள் என்றும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் ஓட்டுண்ணிகளாக வாழ்வோரின் காட்டிக்கொடுப்புத்தான் காரணமாகும். இந்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் வேலைத்திட்டம் முதல் தொழிற்சங்கங்கள் வரை மூலதனத்துக்காக நக்கித்தின்னுகின்ற ஓட்டுண்ணிகளின் சீரழிவான பாதைதான், சமுதாயத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வை இழந்துள்ள நிலையில், சமுதாயம் போராடும் ஆற்றலை இழந்து, உதிரியான தனிமனித அராஜகத்தன்மைகள் அதிகரிக்கின்றது. சமுதாயத்தின் பிரச்சனைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல், ஆளுமையையும் இதன் மூலம் இழந்து விடுகின்றது. இது பொலிஸ் ஆட்சி மூலம், சட்ட ஒழுங்கு மூலம் தீர்க்கப்படும் என்று நம்பி, அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனர். இந்த வகையில் சமுதாயத்தின் அறிவு மட்டமும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து புரிந்து கொள்கின்ற பகுத்தாய்வுத் தன்மையையும் சமுதாயம் இழந்துவிடுகின்றது.
வர்க்க உணர்வு பெற்ற அரசியல் நிலையை துறந்துவிடுகின்ற போது, இடையில் நிற்கின்ற வர்க்கப் பிரிவுகள் பாசிசத்தை தெரிந்து எடுப்பது தற்செயலாக நிகழ்கின்றது. தனக்கு ஆபத்தற்றதாக நம்புகின்ற சில தேர்வுகள், சமுதாயத்தில் ஒரு பிரிவு மீது தாக்குதலாக மாறுகின்றது இப்படி இழிவான அரசியல் உணர்வை பெற்று, கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது நிகழ்கின்றது. குருட்டுத்தனமான சில சமுதாய நம்பிக்கைகள், தீர்வென்று நம்புகின்ற எடுகோள்கள், சுய விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகாத சமுதாய அமைப்பில், அதை ஆதரிக்க தூண்டுகின்றது. இதனுடன் தனிப்பட்ட பாதிப்புக்கள், இயல்பாக மற்றவனுக்கு எதிராக வாக்களிக்கும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.
இந்த சூதாட்டத்தில் வாக்கு போடுகின்ற உழைக்கும் வர்க்கம் பெறப்போகும் அறுவடையோ, மிக மோசமானதாகவே இருக்கும். மனித துயரங்களும், மனித கொடூரங்களும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். சதாரணமான தொழில் உரிமை முதல், அனைத்தையும் பறிகொடுக்கின்ற நிலைக்கு சமூகம் தரம் தாழ்த்தப்படும். கடந்த காலத்தில் போராடிப் பெற்ற அடிப்படையான (தொழில்) உரிமைகள், சட்டங்கள் அனைத்தையும் இழப்பார்கள். வரைமுறையற்ற வேலை நேரம் முதல், வெளிநாட்டவர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை வரை, எதிர்பார்த்து அதற்காக சிலர் தெளிவாக வாக்களிக்கின்றனர்.
குறிப்பாக வெளிநாட்டவர் மீதான ஒடுக்குமுறையை கோரும் வாக்காளர்கள் தான், இந்த வெற்றியை குறிப்பாக உணர்த்தி நிற்கின்றனர். இயல்பான வழமையான வலதுசாரிய சுரண்டல் கோட்பாட்டை முன்வைத்து, இந்த தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக பிரஞ்சு அல்லாத வெளிநாட்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்துக் கொள்ளும், வன்முறை சார்ந்த வெறியுடன் வாக்களிக்கப்பட்டது. நாசிக்கட்சியின் தீர்மானகரமான ஆதரவுடன் தான், இந்த அதிகார மையம் ஜனநாயகத்தின் பெயரில் உருவாக்கப்படுகின்றது.
நாசிச பாசிட்டுகளும், கிட்லரின் வாரிசுகளுமான பிரஞ்சு தீவிர வலதுசாரிகள் கட்டமைக்கும் அவதூறுகளை உள்வாங்கியே, வலதுசாரிகள் ஆட்சிக்கு வரமுனைகின்றனர். இதை மறுத்தல்ல. 1930, 1940 களில் நாசிசம் சார்ந்த வெளிப்பாடுகள் கொண்ட ஒரு வன்முறையை, சமுதாயம் மீது கையாளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கின்றது. ஆளும் வர்க்கங்கள் வலது இடது களைந்த நிலையில், வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் சிதைந்து போன வரலாற்றில் தான், இந்த தேர்தல் முடிவுகள் அமைகின்றது. அரசியலில் பாசிசம் அரங்கேறுவதை தடுத்து நிறுத்தும் ஆற்றல், இடதுசாரிக் கட்சிகள் என்று கூறிக்கொண்டும், கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டும் பிழைக்கும் கட்சிகளிடமோ கிடையாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் அடக்குமுறையையும், ஒடுக்கு முறையையும் அனுபவிப்பதையே, ஜனநாயகமாக்கி விடுவதையே வரலாறாக மீண்டும் நிறுவிக் காட்டும். வரலாறு மீண்டும் வர்க்க உணர்வு பெற்ற ஒரு முன் முயற்சிக்காகவே, காத்து நிற்க வேண்டிய அவலத்தில், பிரஞ்சு சமூகம் தனது புரட்சிகரமான வரலாற்றை இழந்து நிற்கின்றது என்பதே எதார்த்த உண்மையாகும்.
No comments:
Post a Comment