மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா
கிரிமினல் போர்ஜரி வேலைகள், திருட்டு, இலஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகர மூலை முடுக்குகளிலெல்லாம் தனது அங்காடிகளை விரிவுபடுத்தவும் இருக்கிறது.
இதனால், சென்னை மாநகரத்திற்கும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கும் தேவையான காய்கனிகளை விநியோகித்து வரும் கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்பொழுதே 40% வீழ்ச்சி அடைந்து விட்டதாகக் குமுறுகிறார்கள் வியாபாரிகள். கோயம்பேட்டுக்கு வரும் சில்லறை வணிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர்கள் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.
ஏற்கெனவே பான்டலூன் நிறுவனம் வடபழனியில் தொடங்கியிருக்கும் பிக் பஜார், ஆர்.பி.ஜி குழுமத்தின் ஸ்பென்சர் டெய்லி, ஜெர்மன் நிறுவனமான ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன. இன்னும் டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளும் நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க இருக்கிறார்கள். இதுவன்றி, அமெரிக்காவின் வால்மார்ட், ஜெர்மனியின் மெட்ரோ, பிரான்சின் காரஃபோர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் பிரம்மாண்டமான சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கவிருக்கின்றன.
சென்னை நகரில் நாளொன்றுக்கு நடைபெறும் காய்கனி விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய். இதை அப்படியே விழுங்கிவிடத் துடிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சில்லறை வணிகத்தில் உலகிலேயே நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் 4 கோடிப் பேர். சுமார் 20 கோடிப் பேருக்குச் சோறு போடும் இந்தச் சில்லறை விற்பனைத் தொழில் முழுவதையும் விழுங்கி விடத் துடிக்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள்.
சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத் தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவீடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் ஒழித்துவிட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள்?
""காய்கறி வாங்கினால் சர்க்கரை இலவசம்; 100 ரூபாய்க்கு காய் வாங்கினால் ஒரு டோக்கன்; தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு டெலிவரி, 50,000 ரூபாய்க்கு ரிலையன்ஸ் விபத்துக் காப்பீடு'' என்று சலுகைகளை வாரி வழங்குகிறது, ரிலையன்ஸ். இதில் மயங்கி அங்கே வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.
சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளையும், அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் ""விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இடைத்தரகர்களை ஒழித்து விடுவதால் நுகர்பவர்களுக்கும் மலிவான விலையில் பொருள் கிடைக்கும்'' என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
பொள்ளாச்சி சந்தையில் விவசாயியிடமிருந்து காய்கனிகளையும் தானியங்களையும் கொள்முதல் செய்யும் வியாபாரி முதல், அதைத் தள்ளுவண்டியில் போட்டு வேகாத வெயிலில் தெருத்தெருவாகக் கூவி விற்கும் தள்ளுவண்டிக்காரர் வரையில் எல்லோரும் இடைத்தரகர்களாம். இவர்களையெல்லாம் ஒழித்து விட வேண்டுமாம். இப்படி ""கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஒழித்துக் கட்டிவிட்டு வால்மார்ட்டையும் டாடா, பிர்லா, அம்பானியையும் வளர்த்துவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது'' என்று வெளிப்படையாக கூறும் ஒரு தேசத்துரோகி இந்த நாட்டுக்கு நிதியமைச்சராக இருக்கும்போது மக்கள் எப்படி வாழ முடியும்?
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் மற்ற கடைகளில் விற்பனை படுத்துவிடும் என்பது மட்டுமல்ல பிரச்சினை. கொள்முதல் சந்தைகள், மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை இவையெல்லாம் பொருளாதாரத்தின் ஒரு முனை. விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தித் துறைகள் பொருளாதாரத்தின் மறுமுனை. ஒருமுனையைத் தன் பிடிக்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தின் மறுமுனையான உற்பத்தித் துறை முழுவதையும் தம் வசப்படுத்திக் கொள்ள முயல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
தானிய ஏகபோகத்தின் விளைவுதான்
விலைவாசி உயர்வு!
பொருள் உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவற்றில் இன்று கோடிக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் ஈடுபட்டிருப்பதனால்தான் விலைவாசி ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவையனைத்தும் வால்மார்ட், கார்கில், ஐ.டி.சி., அம்பானி, டாடா, பிர்லா என 10, 20 முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் என்ன நடக்கும்? பிறகு அவன் வைத்ததுதான் விலை. இன்று சிமெண்ட் முதலாளிகள் தமக்குள் பேசி வைத்துக் கொண்டு விலையை ஏற்றியிருப்பதைப் போலவே, நாளை அரிசி, கோதுமை, வெங்காயம், தக்காளி அனைத்திலும் இவர்கள் பகற்கொள்ளை அடிப்பார்கள்.
""சில்லறை விற்பனையில் வால்மார்ட்டும் ரிலையன்சும் நுழைந்தால் நுகர்வோருக்கு உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும், விவசாயிகளுக்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு நியாய விலை கிடைக்கும்'' என்ற பேச்செல்லாம் முழுப்பொய். கத்தரிக்காய்க்கு நியாயவிலை கொடுப்பதற்காகத்தான் 3000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு குஜராத்திலிருந்து வந்திருக்கிறானா அம்பானி? துணிக்கும் துடைப்பக் கட்டைக்கும் நல்ல விலை கொடுப்பதற்காகத்தான் வால்மார்ட் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறதா?
நேற்று வரை காய்கனி வாங்கிய மார்க்கெட்டையும், காய்கறிக் கடையையும், மளிகைக் கடையையும் மறந்துவிட்டு, விளம்பரத்தையும், ஏ.சி. ஷோரூமையும் இலவசத் திட்டங்களையும், கண்டு மயங்கி இன்று "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடைக்குச் செல்லும் படித்த முட்டாள்களும் இதை நம்புகிறார்கள்.
ஃபிரெஷ்ஷான புற்றுநோய்!
""பாக்கெட்டில் போடாமல் திறந்து வைத்திருக்கும் பொருளை வாங்காதீர்கள்'', ""ஈ மொய்க்கும் பொருளை வாங்காதீர்கள், சுத்தமான பொருளை வாங்குங்கள்'', ""பில் கொடுக்காத கடையில் பொருள் வாங்காதீர்கள்'' என்று சிறு வணிகர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நயவஞ்சகமாகக் கட்டவிழ்த்து விடுகிறது அரசு. பில் போட்டு விற்க முடியாத சிறிய மளிகைக் கடைகள், சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகிய அனைவரையும் நுகர்வோரை ஏமாற்றும் கிரிமினல்கள் என்பதைப் போல வேண்டுமென்றே சித்தரிக்கிறது அரசு.
சிறுவணிகர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் யோக்கியதை என்ன? பளபளப்பான தாளில் பேக்கிங் செய்து விற்கப்படும் காட்பரீஸ் சாக்லெட்டிற்குள் புழு இருக்கிறதென்று பல ஊர்களிலிருந்து புகார் வந்து மகாராட்டிரா மாநிலம் முழுவதும் அதன் விற்பனை தடை செய்யப்படவில்லையா? கோக் பெப்சி பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சியும், பல்லியும், ஆணியும் கிடக்கவில்லையா? புற்று நோயை உருவாக்கும் பூச்சி மருந்துகள் அதில் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கோக்கும் பெப்சியும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லையா?
கலர் கலரான ஜிகினாத்தாள் பாக்கெட்டுகளில் சரம் சரமாகக் கடைகளில் தொங்கும் "லேஸ்' நொறுக்குத் தீனிகளில் கலந்திருப்பது என்ன? பல மாதங்கள் விற்காமல் கிடந்தாலும் காரல் வாடை வரக்கூடாது என்பதற்காக அதில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்றும், அந்த நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்னும் பள்ளிப் பிள்ளைகளுக்கு மாரடைப்பு வருவது உறுதி என்பதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையில்லையா?
பில் போடாத அண்ணாச்சி!
பில் போட்டுத் திருடும் அம்பானி!
பில் போட்டுக் கொடுத்துவிட்டால் நுகர்வோரின் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்? ரிலையன்ஸ் தொலைபேசியின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பேசிய அழைப்புகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயைப் பில் போட்டுத்தான் வசூலித்தார் அம்பானி. அரசு தொலைபேசியின் சேவையைப் பயன்படுத்தி இப்படி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டு, வெளிநாட்டு அழைப்புகளையெல்லாம் உள்ளூர் அழைப்புகள் என்று கணக்கெழுதி 1300 கோடி ரூபாய் மோசடியும் செய்தார். ஆயுள் தண்டனை வழங்கவேண்டிய இந்தக் கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் முழுத்தொகையைக் கூட வசூலிக்காமல் கொஞ்சம் அபராதம் மட்டும் வாங்கிக் கொண்டு நண்பர் அம்பானியை "மன்னித்து' விட்டுவிட்டார் அமைச்சர் தயாநிதி மாறன்.
சென்ற ஆண்டு ரிலையன்ஸ் மொபைல் நிறுவனம் அறிவித்த "ஃபிலிம் தமாகா' என்ற பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு 8888 என்ற எண்ணுக்கு 6 ரூபாய் கட்டணம் செலுத்தி 6000 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, 36,000 ரூபாய் பில்லையும் கட்டிவிட்டு, ""இதுவரை போட்டியும் நடத்தவில்லை, யாருக்கும் பரிசும் கொடுக்கவில்லை'' என்று ரிலையன்ஸ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர் (இந்து, மார்ச், 16). எத்தகைய சில்லறைத்தனமான மோசடியிலும் இறங்கத் தயங்காதது அம்பானியின் நிறுவனம் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
இனி எங்கே போவது?
எல்லா தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள் அனைவரும் கடைசியாக வந்து சேரும் புகலிடம்தான் சில்லறை வணிகம். இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வயிற்றிலடித்து சொத்து சேர்க்கலாம் என்று ஒரு முதலாளி நினைக்கிறான் என்றால் அவனை விடக் கொடூரமான கொலைகாரன் வேறு யாராவது இருக்க முடியுமா?
ஆனால், அரசாங்கம் இவர்களைத்தான் அரவணைக்கிறது. இவர்கள் பேச்சுக்குத்தான் ஆடுகிறது. வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை நுழைப்பதற்காக டெல்லி சிறுவணிகர்களின் கடைகளுக்குப் பூட்டு போடுகிறது உச்சநீதி மன்றம். சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் நடைபாதை வியாபாரிகளை புல்டோசர் வைத்து அப்புறப்படுத்துகிறது அரசு. இதையும் மீறி உயிரோடிருக்கும் சிறு வணிகர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்களின் உத்தரவின் பேரில் வாட் என்ற வரி விதிப்பு முறை நாடு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது.
எங்கே போனார்கள்
ஓட்டுக் கட்சிகள்?
உலகத் தமிழர்களுக்காகவெல்லாம் சீறும் புரட்சிப் புயல் வைகோ, அம்பானிக்கு எதிராக சீறாத மர்மம் என்ன? சதாம் உசேனைத் தூக்கிலிட்ட அமெரிக்காவுக்கே கண்டனம் தெரிவித்த புரட்சித் தலைவி அம்பானிக்கு ஒரு கண்டனம் தெரிவிக்காத இரகசியம் என்ன? மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவதற்கு மன்மோகன் சிங்கிடம் கறாராகப் பேரம் பேசத் தெரிந்த அய்யா ராமதாசு, அம்பானியை விரட்டாவிட்டால் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று கறாராகப் பேசாத மாயமென்ன? தன்னுடைய திருமண மண்டபம் இடிக்கப்படுவதை உலகப் பிரச்சினையாக்கிய கேப்டன், கோயம்பேடு தொழிலாளர்களின் வாழ்க்கை இடிக்கப்படுவதை எதிர்த்து வீரவசனம் கூடப் பேசவில்லையே ஏன்? மத்திய அரசையே ஆட்டிப்படைப்பதாகப் பெருமை பீற்றிக் கொள்ளும் மார்க்சிஸ்டுகள் அம்பானி விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்?
""ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியால் சாகப் போகிறோம்'' என்று கருணாநிதியிடம் சென்று கதறி அழுதாலும் அவர் எல்லோருக்கும் 2 ரூபாய் அரிசி வேண்டுமானால் கொடுப்பாரே தவிர, அம்பானியையும் வால்மார்ட்டையும் ""வெளியே போ'' என்று மட்டும் சொல்லமாட்டார். ஒருவேளை, வாய்தவறிச் சொல்லி விட்டால் அடுத்த கணமே அவர்தான் பதவியிலிருந்து வெளியே போக வேண்டியிருக்கும்.
தேர்தல் பாதை தீர்வல்ல!
இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், தமிழினம் என்று ஓட்டுக் கட்சிகள் பேசும் பேச்செல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் வாய்ச் சவடால்கள். இவர்களுடைய வாய்ச்சவடால்களால் அம்பானியின் கடையிலிருந்து ஒரேயொரு கத்தரிக்காயைக் கூட வெளியே தூக்கியெறிய முடியாது.
அம்பானி என்பவன் தனியொரு முதலாளி அல்ல. கோயம்பேடு பிரச்சினை தனியான பிரச்சினையும் அல்ல. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் ஒரு விளைவாகத்தான் இன்று சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைகின்றன. இதனைக் காய்கனி வணிகர்கள் மட்டும் தனியாகப் போராடி வெல்ல முடியாது.
அம்பானியின் பின்னால் இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு எந்திரமும் போலீசும் கோர்ட்டும் மத்திய மாநில அரசுகளும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அம்பானிக்குப் பக்கபலமாக நிற்கின்றனர். இந்த மிகப்பெரிய எதிரியை எதிர்கொள்ள வேண்டுமென்றால் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஓரணியில் திரண்டு போராடினால் தான் முடியும்.
மக்களிடம் செல்வோம்!
மறுகாலனியாக்கத்தை வெல்வோம்!
ரிலையன்ஸ் நிறுவனத்தால் வாழ்க்கையை இழந்த வியாபாரிகள் கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருப்பதனால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது. கூடைக்காரப் பெண்களும், தள்ளுவண்டி வியாபாரிகளும், மளிகைக் கடை அண்ணாச்சிகளும் ரிலையன்சின் கடை வாசலில் மறியல் செய்ய வேண்டும்.
எங்கெல்லாம் ரிலையன்ஸ் கடை இருக்கிறதோ அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளும் மளிகைக் கடைகாய்கறிக் கடைக்காரர்களும் ரிலையன்ஸ் எதிர்ப்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தம் கடைகளில் இருந்தபடியே செய்ய முடியும். காய்கறி விற்கும் பெண்கள் தம் கூடைகளில் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத் துண்டறிக்கைகளைக் கொண்டு சென்று வீடு வீடாக இந்தக் கருத்தைப் பரப்ப முடியும்.
பிழைப்பதற்குரிய எல்லா வழிகளும் அடைபட்டு, கடைசியாகக் கையை ஊன்றிக் கரணம் போட்டு, கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து தெருத்தெருவாக அலைந்து திரிந்து வாடிக்கையாளர்களை உருவாக்கி, இரண்டு வேளை கஞ்சி குடிக்க ஒரு வழியை உருவாக்கிக் கொண்டால், கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல நுழைந்திருக்கிறான் அம்பானி. இந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறது அரசு.
பாம்பைப் பார்த்து நடுங்கி அன்றாடம் செத்துப் பிழைப்பதை விட ஒரே போடாய்ப் போட்டு விடுவதுதான் அறிவுக்கு உகந்த செயல். மானமுள்ள வழியும் அதுதான்!
···
""சிறு வணிகத்தை விழுங்க வரும்
ரிலையன்ஸ், வால்மார்ட்டே
வெளியேறு!''
என்ற பிரசுரத்தில் இருந்து
இக்கட்டுரை சுருக்கி
வெளியிடப்பட்டுள்ளது.
பிரதிகள் கிடைக்குமிடம்:
இரா. சீனிவாசன், புதிய கலாச்சாரம்,
18, முல்லைநகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை 83.
···
No comments:
Post a Comment