தமிழ் அரங்கம்

Monday, May 14, 2007

புலியெதிர்ப்பு கும்பல் நடத்திய கோமாளிக் கூத்துகள் நிர்வாணமாகின்றது

புலியெதிர்ப்பு கும்பல் நடத்திய கோமாளிக் கூத்துகள் நிர்வாணமாகின்றது

பி.இரயாகரன்

13.05.2007

புலியெதிர்ப்பு கும்பல் நடத்தும் கோமாளிக் கூத்தில் அரசியல் விட்டுக்கொடுப்பு சாத்தியமா? இல்லை. இவை அல்லாத தளத்தில், அரசியல் விட்டுக்கொடுப்புகள் சாத்தியமா எனின், ஆம். அது மக்கள் நலனில் மட்டும் சாத்தியமானது. இதை மூடிமறைக்கவே, பலர் அரசியல் இல்லாதவர்களாக காட்டி நடிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் விட்டுக்கொடுப்பின் பெயரால், எப்படியும் எந்த வகையிலும் சோரம் போகலாம். ஒரு கொப்பில் தொங்கிக் கொண்டு, அங்கும் இங்குமாக தாவித்திரியலாம். ஏன் அங்குமிங்கமாக தாவுகின்றீர்கள் எனக் கேட்டால், மக்களுக்காக என்பார்கள். மக்களுக்காக எப்படி எந்த வழியில் என்று கேட்டால், தமது மூஞ்சையை புலியெதிர்ப்புக்குள் புதைக்கின்றனர்.


புலிகளின் அரசியல் சாரம் என்பது மாபியாத்தனமும், பாசிசமுமாகும். இதைச் சாதிக்க அடி உதை மிரட்டல் முதல் படுகொலைகள் என்பது, அனைத்து மக்களும் நன்கு அறிந்ததே. இதை மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை மக்கள் சொந்த வாழ்வியலாக உணர்ந்து இசைந்து வாழ்கின்றனர். இதை எதிர்ப்பதும், இதற்கு எதிர்வினையாற்றுவதும் என்பது சரியானது. ஆனால் இதுவே அரசியலாகிவிடுமா? எனின் இல்லை.


புலிகள் தமது பாசிச மாபியா இருப்புக்காக, அவர்கள் தமிழ் மக்களிடமிருந்து எதைத் திருடி வைத்திருக்கின்றார்கள் எப்படி அவர்களால் தமது பாசிச மாபியாத்தனத்தை தக்க வைக்க முடிகின்றது.? இதைப்பற்றி எல்லாம் புலியெதிர்ப்பு கும்பல் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்? இதைப் பற்றி பேச மறுத்து, விட்டுக்கொடுப்பு, ஓற்றுமை, ஜக்கியம் என்பது கடைந்தெடுத்த மோசடி. உண்மையில் இவை புலிகள் முன்வைக்கும் அதே வாதம். தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேச மறுப்பதே, இதன் மையமான உள்ளடக்கமாகும். மாறாக அன்றாட சம்பவங்கள் மீது கொசிப்பை அரசியலாக்க முனைகின்றனர்.


உண்மையில் புலியெதிர்ப்பின் பெயரில், தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி புலியல்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்வதில்லை? அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை, அன்றாட சம்பவங்கள் சார்ந்த அரசியல் கொசிப்பில் தீர்க்க முனைகின்றனர். இப்படி மக்களுக்கு வெளியில், தமது சொந்த கொசிப்பு வழியில், தமக்கு பின்னால் உள்ள முன்னைய பாசிச குழுக்களின் பின்னால் நின்று தீர்க்க முடியும் என்கின்றனர்.


மறுபக்கத்தில் புலிகளின் இருப்பு என்பது மாபியாத் தனத்தையும் பாசிசத்தையும் தேசியத்தையும் ஒருங்கிணைத்து, அதை ஒரு அரசியல் உரிமையாக முன்வைக்கின்றனர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துகாகத் தாம் போராடுவதாகவும், தமது பாசிச மாபியாத்தனங்களை இதற்காகத்தான் செய்வதாக, தமிழ் மக்களை நம்பவைக்க முனைகின்றனர். இதை மக்கள் நம்புகின்றார்களோ இல்லையோ, இது ஒரு அரசியல் போக்காக உள்ளது. எந்த நேரமும் பொய்யும் புரட்டும், தாம் புனிதமான ஒழுக்க சீலராக பறைசாற்றுவது வரையிலான, இழிவான நடத்தை கொண்ட மூகமுடி கழிசடைப் பேர்வழிகள் தான் புலிகள். இது ஒரு இழிவு கெட்ட, வியாபாரமான அரசியல் நடத்தையாக உள்ளது. தம் பின்னால் அணி திரட்டும் ஒவ்வொருவனையும் கொலைகளை ரசிக்கின்றதும், இதையே அரசியல் வக்கிரமாக கொண்ட மனநோயாளர்களை கொண்டே, புலிகள் தம்பக்கம் குதர்க்கமான நியாயப்படுத்தல்களைச் செய்கின்றனர்.


உண்மையில் இப்படியாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மறுப்பதே புலிகளின் அரசியலாகும். இந்த நிலையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை, புலிகளின் மாபியா பாசிச நடத்தைகளில் இருந்து மீட்பதன் மூலம் தான், தமிழ் மக்களை மீட்க முடியும். மக்களில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இப்படி மட்டும் தான் சிந்திக்கமுடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னிறுத்தி, அவர்களில் இருந்து புலிகளை அன்னியப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்த முடியும். இந்த வழியில் தான், புலிகளின் மாபியாத்தனத்தை கொண்ட பாசிசத்தை அடியோடு இல்லாது ஒழிக்கமுடியும். இதுவல்லாது, மக்களுக்காக போராடும் மாற்று வழிகள் எதுவும் கிடையாது. மக்களின் உரிமைகள் உள்ளடங்கிய ஒரு மாற்று அரசியல் தான் மக்களுக்கானது. இது தான் உண்மை. மாற்று அரசியலின்றி, யாராலும் மக்களுக்காக போராட முடியாது. மாற்று அரசியலின்றி மக்களுக்காக தாம் போராடுவதாக கூறுவது பாசாங்குத்தனமானது. உண்மையில் போலியானதும், பொய்யானதுமாகும். இதைத்தான் புலிகள் செய்கின்றனர் என்றால், மறுபக்கத்தில் இதுவே புலியெதிர்ப்பாக உள்ளடகத்தில் இருப்பதையும் காணமுடியும்.


மக்களுக்காக போராடாமல் இருத்தல் என்பதில் புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத புலியெதிர்ப்பு அணியின் அரசியலும் கூட. இதை யாராலும் மறுத்து நிறுவமுடியாது.


உண்மையில் இதற்குள் அரசியல் ரீதியாக சோரம் போதலையே, அரசியல் வாழ்வாக கொண்டவர்கள் புலிகள் மற்றும் புலியல்லாத தளத்தில் கும்பலலாக நிரம்பிவழிகின்றனர். அடிப்படையில் மக்களின் முதுகில் குத்துவது தான், இவர்களின் கைதேர்ந்த அரசியல் வழி. புலியல்லாத தளத்தில் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர்கள் கூட, புலி மற்றும் புலியல்லாத அரசியலில் இவர்கள் கற்றுக்கொண்ட அரசியல் தான் என்ன?


இப்படிப்பட்டவர்களின் தனிமனிதர்களின் குண இயல்புகளைக் கடந்து, தனிமனித உறவுகளைக் கடந்து, இவர்களுடனும் அரசியல் ரீதியாக போராடவேண்டிய சூழலும் அவலமும். மக்களைப் பற்றிக் கடுகளவு கூட சிந்திக்காத சமூக இயங்கியல்.


நாம் சதா உயர்வாழ்வுக்கான போராட்டத்தினூடாகவும், இதையும் எதிர்கொள்கின்றோம். புலிகளோ ஆயுதம் மற்றும் பணத்தை வைத்துக்கொண்டு, எதையும் எப்படியும் செயல்படுவதில் பலம் பொருந்தியவர்கள். ஆனால் அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் பலமற்ற கோழைகள். மக்களை கண்டு அஞ்சும் அடக்குமுறையாளர்கள். இப்படிப்பட்ட மக்களின் எதிரியை எதிர் கொள்ளும் போராட்டத்தில், நாம் புலிகள் அல்லாத தளத்தில் போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். ஏன்?


புலிகளில் இருந்து மக்களின் விடுதலை என்பது, மற்றொரு புலியை உருவாக்குவதல்ல. மக்களுக்கு வெளியிலான செயல்பாடுகள் அனைத்தையும், நாம் ஈவிரக்கமின்றி எதிர்க்கின்றோம். ஏன் எதிர்க்கின்றோம் என்றால், அவையும் கூட மக்களுக்கு எதிரானது என்பதால். மக்கள் சம்மந்தப்படாத, மக்கள் உரிமைகளை பேசாத, புலிகளில் இருந்து மக்களை விடுவிக்க முனைவதாக கூறுகின்ற அனைத்துக் கோட்பாட்டையும், நடைமுறைகளையும் நாம் எதிர்க்கின்றோம். மக்களுக்காக, அவர்களின் அரசியல் உரிமைக்காக போராடுவதை தவிர, மாற்று அரசியல் என்பது மக்களின் முதுகில் குற்றும் ஏமாற்று வித்தையாகும். இந்த வகையில் எந்த விட்டுக்கொடுப்பும் மக்களுக்கு வெளியில் கிடையாது. மக்களுக்காக போராடுங்கள், அப்போது நாங்கள் அதில் விட்டுக் கொடுக்கமுடியும். அதை அவர்கள் செய்ய முன்வருவதில்லை.


மக்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்பதைத் தான், விட்டுக்கொடுங்கள் என்கின்றனர். இதுவே புலியினது மட்டுமல்ல, புலியெதிர்ப்பின் மையமான அரசியல். மக்களுக்காக போராடாமல் இருத்தலே, அவர்களை ஒருங்கிணைக்கின்றது. இதுவே அரசியல் ரீதியானதும், எதார்த்தமான உண்மையுமாகும்.


உண்மையில் இவர்கள் கோருவது, மக்களுக்கான அரசியலை கைவிட்டு செயல்படவேண்டும் என்கின்றனர். அரசியல் அல்லாத வெறும் புலியெதிர்ப்பாக தம்மைப் போல் இருப்பதன் மூலமே, விட்டுக்கொடுப்பை பூர்த்தி செய்யக் கோருகின்றனர். இப்படி குறுகிய சொந்த நலன்களுடன், மூடிமறைக்கப்பட்ட திட்டங்களுடன் கும்பல் சேர்க்கின்றனர். இந்த இணைப்புக்கான அரசியல் புள்ளியோ புலியெதிர்ப்பு. நாணமற்ற கடிவாளம் மூலம், தமது அடையாளம் இழந்து குறிகோள்களின்றி தலைதெறிக்க ஒடுகின்றனர்.


இப்படி மக்கள் அரசியலை பின்னுக்கு வைக்கும் படியும், புலியை ஒழிக்கும் வரை அதை முன்வைக்க கூடாது என்கின்றனர். சரி இவர்கள் முன்வைக்கும் விடுதலை? அதுவும் யாருக்கு?


உண்மையில் அரசியல் என்பது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது என்பதை மறுக்கின்றனர். மக்களின் வாழ்வைப் பற்றிப் பேசாது, அவர்கள் எதிர்கொள்ளும் எந்த முரண்பாட்டையும் தீர்க்க முடியாது. இதில் புலியெதிர்ப்பு முரண்பாடு கூட.


மக்கள் அரசியலைப் பேசாது சமூக முரண்பாடுகளை தீர்க்க முடியும் என்று கூறி, புலியெதிர்ப்பின் பின்னால் அரங்கேற்றுவது என்ன? மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.


இப்படி மக்களுக்கு எதிராக செயல்படுவர்களாக உள்ளனர். அனைத்துவிதமான மக்கள் சார்ந்த அரசியல் ரீதியான செயல்பாடுகளை மறுப்பது. புலிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் முன்னிலைப்படுத்தி கும்பல் சேர்ப்பது. அதையே அரசியலாகச் செய்வது. ஒட்டு மொத்தத்தில் மக்களில் இருந்து விலகியிருக்க முனைவது. மக்கள் விரோத நடத்தைகளுக்கு துணைபோவது, இதன் அரசியல் சாரமாகும். இப்படி புலிகளின் பின்னால் அணிதிரண்டவர்கள் எப்படி எந்த வகையில் சொந்த மக்களுக்கு எதிராக செயல்பட முடிகின்றதோ, அப்படித்தான் இந்த புலியெதிரிப்பின் பின்னும் அச்சொட்டாக அரங்கேறுகின்றது. இதை யாராலும் மறுக்க முடியுமா?


புலிகள் பற்றிய பிரச்சனையின் அரசியல் சாரம் என்ன? மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய அரசியலை முன்னனெடுக்கத் தவறியதுதான். அதாவது மக்கள் அரசியலை மறுத்தோடியவர்கள். இதன் மூலம் மக்கள் விரோத அரசியலையே முனனெடுத்தவர்கள். மக்களிடம் இருந்து விலகிய லும்பன் குழுக்களாக, மக்களில் இருந்து விலகி அன்னியமாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். மக்களின் அரசியல் கோரிக்கையை, தமது லும்பன் தனத்துக்கு ஏற்ற குறுகிய கோரிக்கையாக்கி, அந்த மக்களையே தமது இராணுவ பொருளாதார பலத்தைக் கொண்டு அடக்கியொடுக்குவதே அவர்களின் அரசியலாகியது. தமிழ் மக்களின் வாழ்வை அழிப்பது தான், அதாவது மக்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை மறுப்பது தான் புலி அரசியல்.


இதை புலியெதிர்ப்பு, அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாகுவதில்லை. அரசியலற்ற புலியெதிர்ப்புக் குழுவாக, கும்பலாக ஒருங்கிணைந்து இருப்பதில் வியப்பேது! இவர்களை ஒருங்கிணைப்பது அரசியல் அல்ல, புலியெதிர்ப்புத் தான். இதை நாங்கள் புலியெதிர்ப்பு என்று கூறுவதில் எந்த தவறும் கிடையாது. புலிகளின் அதே அரசியல் நடைமுறை வழியில் பயணிப்பது தான், புலியெதிர்ப்பாகும். மக்களை மக்களின் அரசியல் பிரச்சனைகளில் இருந்து அணிதிரட்டுவதை எதிர்க்கும் அரசியல் தான், இவர்களின் மாற்று எதிர்வினையாகும்.


புலியெதிர்ப்பு அரசியல் சாரம் என்பது, அதே புலிச் சாரம் தான். நாம் இப்படி கூறுவது குழப்பமற்றது, தெளிவானது. அதாவது அரசியல் ரீதியானது. புலியின் அரசியல் என்னவென்று ஆராய மறுப்பதுதான் புலியெதிர்ப்பு. இதன் மூலம் தனது அரசியல் என்ன என்ற பிரச்சனையை தவிர்க்கின்றது. புலியை எதிர்த்தல், புலி அவர்களை எதிர்த்தல் என்பதின் பின்னுள்ள சித்து விளையாட்டுக்கள் இதுதான். இதற்கென எந்த அரசியல் சாரமும், மக்கள் நலனும் இருப்பதில்லை.


புலியெதிர்ப்பின் பின் கும்பல் சேரும் போது, புலிக்கு எதிரான அனைத்தையும் காவும் சாவியாகின்றது. பின் அதை சுமக்க முடியாது தலையில் ஏற்றி சுமக்கின்றது. பின் அதற்கு விளக்கம் கொடுப்பது அல்லது நியாயப்படுத்துவதே, அதன் அரசியல் எல்லை. நுட்பமாக பார்த்தால் தனித்துவமான, சுயாதீனமான அரசியல் செயல்பாடுகள் அற்றவர்கள். கும்பலாக கோவிந்தா போடுபவர்கள். மற்றவர்களின் எடுபிடிகளாக இருப்பவர்கள். மக்களின் நலன்களை இனம் காணாது, ஒரு இருண்ட சூக்குமத்தில் அந்தரத்தில் மிதப்பவர்கள். இதற்கு பின்னுள்ள காரணங்கள் என்ன?


1. இதை ஒருங்கிணைத்து வழிநடத்தக் கூடியவர்களின் பின்னணி அரசியல் நிலைப்பாடு படுபிற்போக்கானது. இதன் பின்னணியில் சில வலதுசாரிய புலியல்லாத மக்களின் எதிரி சார்பான துரோகக் குழுக்கள் இயங்குகின்றது. அத்துடன் பொதுவான வலதுசாரி தமிழ் சிந்தனைமுறை சார்ந்து புலியெதிர்ப்பு அரங்கேறுகின்றது. அதே சிந்தனையை, வலதுசாரி புலியெதிர்ப்பு அரசியலாக எதார்த்தத்தில் உள்ளது.


அரசியல் என்பது புலிகள் தொடர்பானது மட்டுமல்ல சர்வதேச ரீதியானதும் கூட. இந்த வகையில் இவர்களின் சர்வதேச நிலைப்பாட்டை உரசிப் பார்ப்பதன் மூலம், இலகுவாக புலியெதிர்ப்பு வலதுசாரிய அரசியலை புரிந்து கொள்ளமுடியும். சர்வதேச நிலையைப் பற்றி புலியெதிர்ப்பு வலதுசாரிகளின் மதிப்பீடுகள் கூட, அந்தநாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத எல்லையில் படுபிற்போக்கானது. இவர்களால் தமிழ் மக்களை வழிநடத்தவோ, அரசியல் ரீதியான மாற்றத்தை தமிழ் குடிமக்களின் உணர்வுகளில் ஏற்படுத்தவோ முடியாது.


2. புலியெதிர்ப்பின் பின் உள்ளவர்கள் மக்களின் வாழ்வை, அரசியல் ரீதியாக கற்றுக்கொள்வது கிடையாது. சம்பவ ரீதியாக நிகழ்ச்சிகளை காண்பதும், உதிரியான செய்தி வடிவில் தகவலை பரிமாறுவதுமான வலதுசாரிய கொசிப்யே புலியெதிர்ப்பு அரசியலாகின்றது. அரசியலற்ற கொசிப்பு வெளிப்படுத்தும் குதர்க்கமே, புலியெதிப்பு அறிவாகிவிட்டது. சமூக மலட்டுத்தனமே இவர்கள் விருப்பு சார்ந்த அரசியல் எல்லை. இதை வழிநடத்த முனைபவர்கள், தமக்கு தெரிந்த கிணற்றுத் தவளை அரசியலைக் கொண்டு மக்களை வெளுக்கின்றனர். மக்களின் உரிமைகள் சார்ந்த அரசியல் அறியாமையை உருவாக்கிய புலிகள், எதைச்செய்கின்றனரோ அதை இவர்களும் கும்பலாக செய்ய முனைகின்றனர். மக்களின் சொந்த செயலுக்கு வழிகாட்டும் அரசியல் விழிப்புணர்ச்சி என்பது, புலி பற்றிய விழிப்புணர்ச்சியல்ல.


3. புலியெதிர்ப்பு அணியினர் தாம் கொண்டிருந்த கடந்தகால குழுவாத அரசியல் தொடர்புள்ளவர்களாக அல்லது அதன் எடுபிடிகளாக அல்லது அதன் பாதிப்புகளை கொண்டவர்களாக அல்லது புலியல்லாத அனைத்தையும் கண்மூடிக் கொண்டு ஆதரிப்பவராக உள்ளனர். இது ஒரு விசித்திரமான உண்மை. உண்மையில் குழுவாத குழுக்களின் கும்பல் அரசியல், மக்களுக்கு எதிரானதும் படுபிற்போக்கானதுமாகும். இது வலதுசாரி அரசியலை சாரமாக கொண்டது. புலியெதிர்ப்பு, அதனுடன் அரசியல் ரீதியாக உறவை துண்டிக்க மறுப்பவர்களை அடிப்படையாகக் கொண்டது. அதை அரசியல் ரீதியாக விமர்சிக்க மறுப்பவர்களைக் கொண்டது. அதில் உள்ள நபர்களுடன் அரசியல் ரீதியாக ஏதோ ஒரு தளத்தில் சேர்ந்து நிற்பவர்களைக் கொண்டது. இப்படிப்பட்ட வலதுசாரிய புலியெதிர்ப்பு, எதைத்தான் மக்களுக்கு நேர்மையாக வழிகாட்ட முடியும். ஒரு நாளும் முடியாது.


இப்படி தீவிர புலியெதிர்ப்பு அணி கும்பலாக பலம் பெற்ற அண்மைய காலத்தைய கொசிப்பை சற்றுத் திருப்பிப் பார்ப்போம்.


1. இவர்கள் சாதித்தது என்ன?


2. எதை இவர்கள் முன்னிலைப்படுத்தினர்?


1. கருணா விவகாரம் தொடர்பாக இவர்கள் நடத்திய ஆய்வுகள், விவாதங்கள், பேட்டிகள் முதல் மக்களுக்கு சொல்ல முனைந்த அனைத்தும் வெற்றுவேட்டுத்தனமாகியுள்ளது. நாங்கள் சொன்னவைகள் அப்படியே அரசியல் ரீதியாக நிகழ்ந்துள்ளது. நாங்கள் கொண்டிருந்த அரசியல் சார்ந்த உண்மை, பளிச்சென்று அனைத்தையும் தகர்த்து நிற்கின்றது. எங்கள் அரசியல் ரீதியான விவாதமுறைதான் மிகச் சரியானது என்பதை மறுபடியும் நிறுவியுள்ளது.


உண்மையில் அரசியல் ரீதியாக சரியாக விமர்சித்து சரியான வழிக்கு கொண்டு வரவேண்டிய பணியை கைவிட்டதன் மூலம், கருணா போன்ற வலதுசாரிய கொலைகாரர்களை ஊக்கப்படுத்தியவர்கள் யார்? அவர்கள் மக்கள் பக்கம் வருவதை தடுத்த குற்றம் புலியெதிர்ப்புக்கு உண்டு. அதாவது இந்த கொலைகார வலதுசாரி அரசியலுக்கு புலியெதிர்ப்பு துணை நின்றதன் மூலம், கொலைகளுக்கு உடந்தையாகவும் துணையாகவும் புலியெதிர்ப்பு அரசியல் இருந்துள்ளது என்பதே உண்மை.


கருணா குழுவின் உடைவை நாம் முன் கூட்டியே எதிர்வுகூறியிருந்தோம். ஆனால் அதை ஒரு அரசியல் ரீதியாக நிகழும் என்றே மதிப்பிட்டோம். ஆனால் அது அப்படி நிகழவில்லை. காரணம் இரண்டு.


1. புலியெதிர்ப்பு அணி கருணாவின் அரசியல் வழி சரியென்று நியாயப்படுத்தி, வலதுசாரி கொலைகார மாபியாக் கும்பலாக நீடிப்பதை அரசியல் ரீதியாக பாதுகாத்தனர்.


2. கருணா கும்பல் வலதுசாரிய அரசியல் வழியில் ஆயுதம், பணம் என்ற ரீதியில், அதிகளவுக்கு இராணுவத்தின் கூலிக் கும்பலாக சிதைந்தனர். இதன் மூலம் அரசியல் ரீதியான பிளவாக அல்லாது, கூலிக் கும்பலுக்கிடையான மோதலாக மாறியது.


இவையும் எதிர்பார்க்கப்பட்டது தான். புலியெதிர்ப்பு அணி கருணா விவகாரம் ஊடாக மக்களுக்கு கற்றுக்கொடுத்தது எதை? மக்கள் விரோதிகளை மக்கள் சார்பானவராக காட்டி கும்மியடித்தைத் தான். வலதுசாரி புலியெதிர்ப்பின் போக்கிலித்தனத்தை இது வெளிப்படுத்தியது.


3 .ஜே.வி.பி பற்றி புலியெதிர்ப்பு கொடுத்த அல்வா நகைச்சுவையாகவே அம்லமாகின்றது. ஜே.வி.பியை இடதுசாரிகளாக காட்ட, முதிர் முட்டாள்களின் தொடர்ச்சியாக நடத்திய முண்டியடிப்புகள். உலகமயமாதலை எதிர்ப்பதாக பாசாங்கு செய்யும் ஜே.வி.பி, அதை தமிழர் விடையத்தில் மட்டும் தோண்டியெடுத்து செய்கின்றது. அதாவது தமிழர் உடைய உரிமை விடையத்தில் மட்டும், அதை காண்கின்ற வலதுசாரிய இனவாத அரசியல். நாம் அவர்கள் பற்றி கூறியவை அரசியல் ரீதியாக மிக சரியாக இருக்கின்றது. ஜே.வி.பி பற்றி புலியெதிர்ப்பு மக்களுக்கு கூற முனைந்தது அனைத்தும் வெற்றுவேட்டுதனமாக இருப்பதையே இன்று பார்க்கின்றோம்.


4. மகிந்த அரசு பற்றிய புலியெதிர்ப்பு அரசியலின் அரசியல் கொசிப்புக்கள் அனைத்தும் சந்தியில் நிர்வாணமாகி நிற்கின்றது. எதைத்தான் இப்படி மக்களுக்கு உணர்த்த முனைகின்றனர்.


இப்படி அரசியல் ரீதியாக வலதுசாரி புலியெதிர்ப்பு கும்பல், கும்பலாக கூடி சாதித்தது என்ன? எதையும் மக்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. சம்பவங்கள் மற்றும் மற்றவர்களின் வலதுசாரி மக்கள் விரோத நிலைக்கு எடுப்பார் கைப்பிள்ளையாகி நியாயப்படுத்தும் கொசிப்புகளை வம்பளந்தனர். புலிகளிடமிருந்து மக்களை அரசியல் ரீதியாக மீட்க, எந்த முன்முயற்சியும் எடுக்க முடியாத அளவுக்கு புலியெதிர்ப்பு கொசிப்பே அரங்கேறியது, அரங்கேறுகின்றது. வலதுசாரிய கும்பலாக கும்பல் சேருகின்ற நடைமுறை. இடதுசாரிய கோசங்கைள இதற்கு அணையாக்க முனையும் வலதுசாரிய சூழ்ச்சியும் சதிகளும். கடந்தகால வலதுசாரிய குழுக்களின் கடைகெட்ட அதே உத்தியும் வழிமுறையும், அதே வக்கிரத்துடன் ஒருங்கே அரங்கேறுகின்றது. அதே மக்கள் விரோதக் குழுக்கள், புலியெதிர்ப்பு அனைத்து தளத்திலும் மெதுவாக, ஆனால் வன்மமாக வெளிப்பட்டு நிர்வாணமாகின்றது. பாவம் இதை நம்பி சவாரி செய்யும் அப்பாவிகளும், அப்பாவி மக்களும். ஜனநாயகம் என்ற பெயரில் முன்னைய இயக்கங்களும், சில உதிரிகளும் சேர்ந்து புலியெதிர்ப்புக் கும்பலாக கும்பல் சேர்ந்து நடத்திய கோமாளிக் கூத்து, கருணாவின் பாசிச வரலாறு போல் தானாகவே கலைந்து போகத்தான் போகின்றது.






No comments: