தமிழ் அரங்கம்

Monday, August 27, 2007

தொடர்ச்சியாக நடக்கும் வாள் வெட்டுகள் கோடாலி கொத்துகள்

புலம்பெயர் சமூகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் வாள் வெட்டுகள் கோடாலி கொத்துகள்

பி.இரயாகரன்
27.08.2007

மிழ் சமூகத்தினை நாடி பிடித்து பார்க்கும் அளவுக்கு, இதன் விளைவு வக்கிரமாகவே வெளிப்படுகின்றது. ஒரு மனிதனை கோடாலி கொண்டு கொத்தவும், வாள் கொண்டு கண்ட துண்டமாக வெட்டவும் முடியும் என்பதை, தமிழ் சமூகம் மீண்டும் மீண்டும் தனது சொந்த வாழ்வியலில் நிறுவி வருகின்றது. எம் மண்ணில் தலையை வெட்டுவது, உடலைக் கொத்துவது, அடித்துக் கொல்வது முதல் பற்பல வகையான சித்திரவதைகளை செய்வது, அன்றாட அரசியல் நிகழ்வாகி நிற்கின்றது. இதைத் தமிழ் தேசிய அரசியலாக, ஜனநாயக மீட்பாக நியாயப்படுத்துகின்ற ஒரு சமூகத்தில் இருந்து வந்த புலம்பெயர் தமிழ் சமூகத்திலும், இந்த வன்முறை இயல்பானது இயற்கையானது.

அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற வாள்வெட்டும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இதில் ஒன்று. இந்தச் சம்பவம் நோர்வேஜிய சமூகத்தையே உலுக்கிவிட்டது. சமாதானம் அமைதி என்ற பெயரில் ஏகாதிபத்திய நோர்வே, இலங்கையில் தலையிட்டு. புலிகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நோர்வே நிகழ்வும், அதற்கான எதிர்வினையும் சற்று வேறுபட்டதாகியது.

புலிகளுக்கு பல வழிகளில் பணத்தை மறைமுகமாக கொடுக்கின்ற நோர்வே அதிகார மட்டங்களும், அதனுடன் தொடர்புடைய புலிப் பினாமிகளும் அதிர்ந்து போனார்கள். புலிகளுக்கு தொடர்பு உண்டா இல்லையா என்றான கேள்வி, சந்தேகம் சகல மட்டத்திலும் இன்று மேல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் புலிகள் செய்ததாக புலியெதிர்ப்பு சதிக் கும்பல், இணையத்தில் பேண்டனர். மறுபக்கத்தில் புலிகள் தாம் வன்முறையற்றவராக, நல்ல பிள்ளையாக காட்டிக்கொள்ள படாத பாடுபட்டனர். புலிப்பினாமிகளாக நோர்வே அரசியலில் ஈடுபட்டு, பணத்தை திருடும் புலி அரசியல்வாதிகள், ஜயோ தமிழனுக்கே அவமானம் என்று ஒப்பாரி வைத்தனர். நோர்வேஜிய அரசியல் மூலம் பணம் திருடும் இந்த தொழில்முறை வேஷதாரிகள், தமது சொந்த கறைபடிந்த கையைப்பிசைந்து கொண்டனர்.

இப்படியாக இந்த வன்முறைக்கான சூழலை கவனமாக பாதுகாத்துக் கொண்டனர். அந்த அரசியலில் நின்று, சூதுவாதற்ற தமிழ் சமூகம் பற்றி சுய புராணம் பாடத்தொடங்கினர்.

புலிகள் இதை புலிக்கெதிரான சதி என்றனர்.மறுபக்கத்தில் புலியெதிர்ப்புக் கும்பல் இதை புலிக்குள்ளான சண்டை என்றனர்.

இப்படி இந்த வன்முறையை ஆதரிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற, தாம் அல்லாத ஒன்றாக காட்டுகின்ற எல்லைக்குள் அரசியல் விபச்சாரம் செய்தனர். பாவம் தமிழ் மக்கள். இந்த அரசியல் போக்கால் மக்கள் சந்திக்கின்ற துயரமும், அவலமும் எல்லையற்றது. இதிவொன்று தான் இந்த வன்முறை.

புலம்பெயர் சமூகத்தின் இயக்கமல்லாத கோஸ்டிகளுக்கு இடையிலான வன்முறை என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. கனடா, பிரான்ஸ், இலண்டன், சுவிஸ் என்பன, முக்கியமான வன்முறை மையங்களாக உள்ளது. வருடாந்தம் இவர்களின் வன்முறை வரவுசெலவு போல் நீண்டது.

இந்த புலம்பெயர் வன்முறை என்பது வெட்டுக் கொத்து, கடத்தல், அடிதடி, துப்பாக்கிச் சூடு முதல் பற்பல விதமானது. அது வக்கிரமானது கூட.
இந்த கோஸ்டிகளின் இருப்பும், அதன் வாழ்வும் பொதுவான புலிகளின் பாசிச அரசியல் நீரோட்டத்துடன் ஒன்று கலந்தது. புலிகளுக்கு இந்த மாதிரி கோஸ்ட்டிகளின் தேவை அவர்களின் அரசியல் தேவையுடன் பின்னிப்பிணைந்தது. இதனால் அதைச் சார்ந்தும், ஆதரித்தும், உசுப்பியும் விடுகின்றனர். தாம் நேரடியாக சாதிக்க முடியாதவைகளை சாதிக்கின்ற எல்லையில், அரசியல் ரீதியாக புலிகள் இதைப் பயன்படுத்துகின்றனர், வளர்க்கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியாக இந்த வன்முறையை, தமது சொந்த அரசியல் நீரோட்டத்தின் போக்கில் பாதுகாக்கின்றனர்.

இந்த கோஸ்டிகளின் இருப்பு, அடிப்படையில் ரவுடிகளானது. ரவுடிசம் என்பது, தமிழ் சமூகத்தில் எதுவென்று பகுத்து பார்க்க முடியாத சூனியமான அரசியல் சூழலில் நிலவுகின்றது. இப்படி இன்று ரவுடிசமே எங்கும் எதிலும் வாழ்க்கையாகவே கலந்து கிடக்கின்ற சூழல், வரைமுறையற்ற ரவுடிசத்தின் விளைநிலமாக உள்ளது. தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்பது எதுவென்று தெரியாது, மேல் இருந்து பெண்ணுக்கு மட்டும் திணிக்கும் பாலியல் ஒழுக்கமாக மட்டும் சிதைந்துவிட்டது. ஒரு குறுகிய மனப்பாங்காக, கலாச்சாரமும் பண்பாடும் மேல் இருந்து அறிவியலுக்கு புறம்பாக வன்முறை மூலம் திணிக்கப்படுகின்றது. குழந்தை தமிழ் சமூகத்திடம் பெறுவது இது தான். குழந்தை இயல்பாக தமிழ் சமூகத்திடம் பெறுவதற்க்கு வேறு எதுவும் இருப்பதில்லை. இயல்பாக குழந்தை தமிழ் சமூகத்தில் இருந்து அன்னியமாகின்றது. வக்கிரமான உள்ளடகத்தில் இது பிரதிபலிக்கத் தொடங்குகின்றது. இந்த நிலையில் புலம்பெயர் நாட்டுக்கான கலாச்சாரத்தை அக்குழந்தைப் பெறத்தவறின், உதிரியான வன்முறைகொண்ட அராஜகக் கும்பல்கள் உருவாகின்றது. உண்மையில் தமிழ் மற்றும் புலம்பெயர் நாடுகளின் பண்பாட்டை கலாச்சாரத்தை இழக்கின்ற போது, அராஜகத்தனமே வாழ்வாகின்றது.

இதற்குரிய சூழல், எமது இன்றைய அரசியல் சூழலுடன் தொடர்புடையது. தமிழ் இனம் கடந்த முன்று பத்தாண்டுகள் வெளி மற்றும் உள் வன்முறைக்குள்ளானதன் விளைவால், இயல்பாகவே சமூகம் வக்கிரமடைந்து விட்டது.

தமிழ் மக்களின் வாழ்வு என்பது வன்முறையை சந்திப்பதும், வன்முறையை ஆதரிப்பதுமாகிவிட்டது. வாழ்வுக்காக போராடுவதை மறுத்து, வாழ்வை அழிக்கின்ற வன்முறைக்கு உட்படுவதும் அதற்கு துணைபோவதுமாகிவிட்டது. இதற்கு வெளியில் தமிழ் சமூகம் எதையும் சிந்திக்க, செயல்படுத்த முடியாத உள் மற்றும் புறச் சூழல். இது வன்முறை மூலம் உருவாக்கப்படுகின்றது. தமிழ் சமூகம் தனது சொந்த சுயத்தை குறுகிய குழுக்களிடம் இழந்துவிட்டது.

இதன் அரசியல் என்பது நியாயமான மனித வாழ்வுக்கான போராட்டத்தை நிராகரிக்கின்றது. மாறாக வாழ்வை மறுக்கின்ற உள் வன்முறையை ஆதரிக்கின்றது. இதன் எதிர் அரசியலோ, வெளி வன்முறையை ஆதரிக்கின்றது. இதுவே தமிழ் சமூகத்தின் மொழி முதல் அனைத்து அசைவுகளுமாகிவிட்டது.

தமிழ் சமூகத்தின் மீதான உள் வன்முறை மீதான நேசிப்பு, நியாயப்படுத்தல் மட்டும் தான், தியாகமாக போராட்டமாக திணிக்கப்பட்டு மெச்சப்படுகின்றது. சமூகம் தமது சொந்த அபிப்பிராயத்தை தெரிவிக்கவும், விமர்சிக்கவும் முடியாது. தமிழ் சமூகம் எந்த கருத்துமின்றி, மலடாக்கப்பட்டுவிட்டது.
ஒற்றைப் பரிணாமத்தில் திணிக்கப்படும் மொழி, சொற்கோவைகளுக்கு வெளியில் எந்த மொழியாடலும் செய்ய முடியாது. அறிவற்ற குருட்டுக் கூட்டமாக வாழ்வது தான், தமிழ் தேசியமாக கற்பிக்கப்பட்டு அது வன்முறையாக தமிழ் சமூகத்தின் மீது ஏறி உட்கார்ந்துள்ளது.
இந்த சமூக அமைப்பில் மொழி என்பது வன்முறை கொண்டது. அதன் பார்வை வன்முறை கொண்டது. அதன் இயக்கமே வன்முறை கொண்டது.
சமூகமாக வாழ்வதற்கான சொந்த சமூக அடிப்படையை இழந்துவிட்டது. உதிரியான வன்முறை கொண்ட, தனிமனிதர்களாக வெறும் சடலங்களாக வாழ்வதே உயிர் வாழ்வாகிவிட்டது. மற்றவன் மரணத்தில் மகிழ்ச்சியடைகின்ற வக்கிரம் புகுந்துவிட்டது. அதில் வாழ நினைக்கின்ற, வாழ்கின்ற அரசியலோ வன்முறையை அடிப்படையாக கொண்டது.
எம் மண்ணில் இதுவே அரசியல் இயக்கத்தில் புரையோடிவிட்டது. அது சித்திரவதையாக, கடத்தலாக, கொலைகளாக, தூசண மொழியாடலாக வக்கிரப்பட்டு அன்றாடம் வெளிப்படுகின்றது. அதன் வாரிசுகள் புலம்பெயர் மண்ணில் ரவுடிகளாகிவிடுகின்றனர். புலம்பெயர் நாட்டில் சட்ட திட்டத்துக்கு கட்டுப்படுத்தப்படுவதால், உதிரியான லும்பன் கோட்ஸ்டிகளாக ரவுடிகளாக உருவாகின்றனர். இவர்களோ மண்ணில் இயக்கங்களின் உள்ளே இருக்கின்றனர்.

எம் மண்ணில் ரவுடிசம் முதல் மாபியாத்தனம் வரை அரசியலாக, அதன் செயல்பாடாகிவிட்ட நிலையில், புலம்பெயர் நாட்டிலோ அது கோரமாக வெளிப்படுகின்றது.

இதில் உள்ள சோகம் என்னவென்றால், தந்தைமார் மற்றவனைக் கொல்வதை ஆதரித்து நிற்கின்றனர். குழந்தைகள் தமக்கு இடையில் அடிதடியில் ஈடுபடுகின்றனர். இந்த அடிதடி வன்முறையில் ஈடுபடுபவர்களின் அநேக குடும்பங்கள், சமூகத்தின் உள்ளான வன்முறையின் தீவிரமான ஆதரவாளராக இருக்கின்றனர். சமூகத்தினுள்ளான உள் வன்முறையை நியாயப்படுத்துகின்ற, அதை ஆதரிக்கின்ற, வக்கரித்து உறுமுகின்ற, (தூசண) மொழி வன்முறையை கையாளுகின்றவர்களாக இருக்கின்றனர். வன்முறையை வாழ்வாக ரசிக்கின்ற குடும்பச் சூழல், குழந்தைகளை லும்பன் தனமான வன்முறை வாழ்வுக்குள் இட்டுச்செல்லுகின்றது.

புலம்பெயர் நாட்டில் வன்முறைக்கான சூழல், புலியின் (புலியெதிர்ப்பு) அரசியல் நீரோட்டத்தில் வடிகாலாகவே பொதுவாக உள்ளது. மக்கள் வாழ்வதற்காக தாம் போராடுவதை மறுத்து இது அரங்கேறுகின்றது.

1. போராட்டம் என்ற பெயரில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படையான போராட்டத்தை நிராகரித்து, வாழ்வை மறுக்கின்ற வன்முறையைச் சார்ந்தே புலம்பெயர் வன்முறை உருவாகின்றது

2. இந்த உதிரிகளை குழுக்களாக ஒருங்கிணைக்கும் இடம் தமிழ் பாடசாலைகளே. தமிழ் பாடசாலைகளின் நோக்கம் என்பது, தமிழ் மக்களிடம் பணம் அறவிடவும், தமிழ் மக்களை புலியின் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிக்கும் அமைப்பு என்ற எல்லைக்கு உட்பட்டதே. இதனால் அது தமிழ் மொழி என்ற பெயரில், வன்முறையை நியாயப்படுத்தி, அதை கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத்தனமாக ஆதரிக்க கோருகின்றது. கல்வி என்ற பெயரில் வன்முறையை அரசியலாக கொண்டு ஒரு கும்பலின் சுயநலத்தை, நியாயப்படுத்த பாடசாலைகள் உதவுகின்றது. இங்கு கற்க வரும் ஒருவன் இந்த வன்முறையை கற்பதுடன், வன்முறை செய்யும் குழுவுக்குரிய நபர்களையும் அங்கு இனம் காண்கின்றான். குறிப்பாக இளம் பெண்களை கவர, இளைஞர் கும்பல் கல்வியின் பெயரில் இங்கு கொக்கரிக்கின்றனர்.

3. வன்முறைக்குரிய குழுச் சேர்தலை இணைக்கும் மற்றொரு இடம் தமிழ் கடைகள். எப்படி குடிகாரர்களையும் சூதாடிகளையும் சில கடைகள் வாடிக்கையாளராக உருவாக்கி கடையை அண்டி வாழ வைக்கின்றனரோ, அப்படித் தான் வன்முறைக் கும்பல் கடைகளின் முன்னால் நிலையாக கூடிவிடுகின்றனர்.

4. அடுத்து வன்முறையை கதாநாயகத் தன்மையுடன் வாழ்வாக தூண்டும் தமிழ் சினிமா. காதல் முதல் பொருட்களை அடையும் வழிகள் குறுக்குவழியைக் கொண்டது. அதாவது வன்முறை கொண்டதும், லும்பன் தனமான வக்கிரத்தினால் சினிமாவே வாழ்வாகின்றது. இந்த சினிமா தான் புலம்பெயர் சமூகத்தின் பொழுது போக்கு. இது வன்முறையை ஊட்டி வளர்க்கின்றது. இதை பொதுவான தமிழ் அரசியல் விமர்சிப்பது கிடையாது. அதற்கு எதிரான போக்கு என்பது, தமக்கு எதிரான போக்காக கற்பிக்கின்ற அரசியல் வன்முறை.

5. குடும்ப வன்முறையை தூண்டுகின்ற நாடகங்கள். கும்பத்தில் தாய், தந்தை, மனைவி, கணவன், குழந்தை, சகோதரர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கி வன்முறையை தூண்டுகின்றது. சதா மற்றவர் மீது பிழையை தேடிப் கண்டுபிடிக்கும் நாடகங்கள், சதியாக முதுகுக்கு பின்பாக வன்முறையை தூண்டுகின்றது. சதா தூற்றுதலும், புறுபுறுப்பையும் கொண்டு, மற்றவன் மீது சந்தேகத்தை ஊட்டுகின்ற கண்காணிக்கின்ற வாழ்வை நாடகம் திணிக்கின்றது. இது சதியை தூண்டுகின்ற வகையில், குடும்பத்தை வன்முறையின் களமாக்குகின்றது. இந்த நிலமையை தமிழ் தேசிய அரசியல் பாதுகாக்கின்றதன் மூலம், தனது சொந்த பாசிச வன்முறையை பாதுகாக்க முடியும் என்ற அரசியல் நிலை. இது உதிரியான வன்முறை கோஸ்டிகளுக்குரிய, அடித்தளங்களில் ஒன்றாகும்.

பொதுவாக இந்த கோஸ்ட்டிகளின் சண்டைக்குரிய காரணங்கள் அற்பத்தனமாக இருந்த போதும், வக்கிரம் கொண்டது.

1. தன்னை கதாநாயகனாக காட்டுகின்ற அற்ப வழியில் இந்த வன்முறையை கையில் எடுக்கின்றனர். எந்த சமூகநீதியுமற்ற கதாநாயகத் தனம், தனது சமூக விரோதச் செயலாக வக்கரிக்கின்றது.

2. ஒரு தலைப்பட்சமாக ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணை அடைகின்ற குறுக்கு வழியில், இந்த வன்முறை உருவாகின்றது

3. பெண்ணை கட்டாயப்படுத்தி அடைய முனைகின்ற பொறுக்கித்தனமான தரம்கெட்ட செயல்கள், வன்முறையாக உருவாகின்றது

4. எந்த உழைப்புமின்றி வீதியில் நிற்கின்ற இந்த கோமாளித்தனத்தை, அதன் குரங்குச் சேட்டையை மற்றவன் திரும்பிப் பார்த்தால், என்ன பார்வை என்று முறுகும் ரவுடித்தனம் இது இரண்டு ரவடிகளுக்கு இடையிலானதாக இருந்தால் வன்முறையாக வெடிக்கும்.

5. உழைப்பில் ஈடுபடாத இந்த புறம்போக்கு ரவுடிகள், பெற்றோரிடம் இருந்து பெறும் சொகுசைக் கொண்டு வெளிப்படுத்துகின்ற வக்கிரமான கேவலமான கோமாளித்தனமான நடத்தையும் வன்முறை வடிவம் பெறுகின்றது.

6. இந்த ரவுடிகளை சார்ந்து இயங்கும் கோயில்கள், சினிமா தியேட்டர்களில் ஏற்படும் முறுகல்கள், வன்முறைக்குள்ளாகின்றது.

7. பொதுவான அரசியல் ஆதரவுடன் இயங்கும் கும்பலின் வன்முறை சார்ந்த அதிகாரத் திமிர் வன்முறையாகின்றது.

மனிதம், மனிதத்தன்மையற்ற நடத்தைகள் இதன் பொது வெளிப்பாடாகின்றது. மொழியில் சாதாரணமாக உரையாடத் தெரியாத, மற்றவனுடன் பழகத் தெரியாத, மற்றவன் கருத்தை கேட்ட முடியாத, மனிதத்தன்மையை கொண்டிராத, ஜனநாயக பன்மைத் தன்மை கொண்டிராத உதிரிகள், கும்பலாக சேர்ந்து நடத்துகின்ற நடத்தைகள், தமிழ் சமூகத்தில் ஒரு கரும்புள்ளியல்ல.
ஒரு சிறிய பிரிவுதான் இதில் ஈடுபடுகின்றது என்று கூறிக்கொண்டு, பலரும் தப்பித்துக்கொள்ள முனைகின்றனர். இந்த அற்பத்தனமான மனிதர்கள் அனைவரும், இந்த வன்முறைக்குரிய சூழலை பாதுகாப்பவர்கள் தான். வாழ்வுக்காக போராடுவதை நிராகரிக்கும் சமூக அற்பத்தனம். குறுகிய குறுங்குழுவாத குழுக்களின் பாசிச மனிதவிரோத நடத்தைகளை (புலிகள் மற்றும் புலியெதிர்ப்பு குழுக்கள்) முன்னிலைப்படுத்திய ஒரு வன்முறையில், இதை அனுசரித்து போகின்ற வகையில், தன்னையும், தனது நிலையை பெருமையாக பீற்றித் தன்னை அற்பத்தனமாக நிலைநிறுத்தியுள்ளது. புலிகள், புலியெதிர்ப்பு என்று இரு பாசிச கும்பலும், இதற்குள் தான் அரசியல் செய்கின்றனர். மக்கள் மீது எந்த நம்பிக்கையுமற்ற இந்தக் கும்பல்களின் அரசியல், வன்முறையை அடிப்படையாக கொண்டது. சமூகத்தின் நியாயமான போராட்டங்களை எதிர்ப்பதிலும் ஒடுக்குவதிலும் தான், இவர்களின் அரசியல் வன்முறையாக நீடிக்கின்றது.

இந்த சமூகம் ஒரு சில சம்பவமாக இதைக் காட்டுகின்ற அரசியல் தளம், கேடுகெட்ட வன்முறை கோட்பாட்டாலானது. தொப்பியை அளவாக வெட்டி மற்றவன் மீது போடுகின்ற, அற்பத்தனத்திலானது. இந்தப் போக்கு நீடிக்கும் வரை, இந்த உதிரியான லும்பன்தனமான வன்முறையும் அரசியல் ரீதியாகவே நீடிக்கும்.

ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய கேள்விகள் அடிப்படையானது.

1. இந்த வன்முறைக்கான சூழல் என்ன?

2. இந்த வன்முறைக்குரிய குழுக்களை, அதன் இணைப்பை உருவாக்குகின்ற இடம், சூழல் எது?

3. இதற்கு எதிராக எப்படி, எதை நாம் செய்யப்போகின்றோம்?

4. எனது குழந்தை, எனது சகோதரன், எனது உறவினன், இதில் ஈடுபடமாட்டான் என்று, எந்த வகையில் நாம் இதை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

மனம் திறந்த விவாதங்கள், விமர்சனங்கள் இன்றி, சமூக உறுப்பினர்கள் தமக்கிடையில் இதை போட்டு சுக்குநூறாக உடைக்காத வரை, வன்முறைக்குரிய சூழல் தொடர்ச்சியாக அரசியல் ரீதியாகவே பாதுகாக்கப்படும்.

No comments: