பழங்குடியினப் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோரி, ராசஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் நடத்திய போராட்டம், நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்டுவிட்டதோடு, ஓட்டுக்கட்சிகளின் சமூகநீதிக் கொள்கையின் ஓட்டாண்டிதனத்தையும் அப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. மனுநீதியின்படி, ஆடுமாடு மேய்ப்பதுதான் குஜ்ஜார்களின் குலத்தொழில். ஆங்கிலேய காலனியாதிக்கத்தின்பொழுது, இச்சாதியினர் குற்றப்பரம்பரையினராக வகைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். போலி சுதந்திரத்திற்குப் பிறகு, அரியானா, உ.பி. பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் குஜ்ஜார்கள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களாகவும்; காசுமீரிலும் இமாச்சலப் பிரசேதத்திலும் பழங்குடியினச் சாதியினராகவும் வகைப்படுத்தப்பட்டனர்.
ராசஸ்தான் மாநிலத்தில் 1980க்கு முன்புவரை பிற்படுத்தப்பட்ட சாதியினராகப் பிரிக்கப்பட்டிருந்த குஜ்ஜார்கள், அதன் பின்பு மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இன்றும்கூட, ஆடுமாடு மேய்ப்பதும், விவசாயமும்தான் பெரும்பாலான குஜ்ஜார் சாதி மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதைவிட்டால் இராணுவத்தில் சாதாரண சிப்பாயாகச் சேர்ந்து பணியாற்றுவதுதான் இவர்களுக்குத் தெரிந்த இன்னொரு தொழில். ஏறத்தாழ 60 ஆண்டுகள் இடஒதுக்கீடு சலுகையை அனுபவித்து வந்தாலும் கூட, ராசஸ்தானில் குஜ்ஜார் சாதியைச் சேர்ந்த ஒரேயொருவர்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்பின்தங்கிய, தேங்கிப் போன சமூகப் பொருளாதார நிலையின் காரணமாக, தங்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இராசஸ்தானைச் சேர்ந்த குஜ்ஜார்கள் நீண்ட நாட்களாகக் கோரி வருகின்றனர். 2003ஆம் ஆண்டு நடந்த ராசஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது, காங்கிரசிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க, ராஜ்புதனர்கள் ஜாட் குஜ்ஜார் என்ற சாதிக் கூட்டணியை பா.ஜ.க. உருவாக்கியது. மேலும், பா.ஜ.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், குஜ்ஜார் சாதியைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்போம் என்றும் வாக்குறுதி அளித்தது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி, ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைப் பழங்குடியினராக அறிவிக்கும் அதிகாரம் மாநில அரசிற்குக் கிடையாது. அதற்கான பரிந்துரையை மைய அரசிற்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசிற்கு உண்டு. ராசஸ்தான் மாநில பா.ஜ.க. அரசு, குஜ்ஜார்களுக்குச் சாதகமாக இப்பரிந்துரையைக் கூடச் செய்யாமல், குஜ்ஜார்களின் கோரிக்கையை இழுத்தடித்து வந்தது.குஜ்ஜார்களுக்குச் சாதகமாகப் பரிந்துரை செய்தால், அரசியல் அதிகார செல்வாக்குமிக்க ""மீனா'' என்ற பழங்குடியின சாதியினரைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் பா.ஜ.க.வின் இழுத்தடிப்புக்குக் காரணம். பா.ஜ.க.வின் 120 சட்டமன்ற உறுப்பினர்களுள், 20 பேர் ""மீனா'' சாதியைச் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீனா சாதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஆதிக்க சாதியினரான ""ஜாட்'' சமூகத்தை, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் சேர்த்தது. இது, கல்விவேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதில் ஜாட் சாதியினருடன் போட்டி போட முடியாத நிலையை குஜ்ஜார்களுக்கு ஏற்படுத்தியது. இன்னொருபுறம், தாராளமயத்தால் விவசாயம் போண்டியானதன் காரணமாக, பொருளாதார நெருக்கடியையும் குஜ்ஜார்கள் சந்தித்தனர்.இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க, குஜ்ஜாரிகளைப் பழங்குடியினராக அறிவிப்பதுதான் ஒரே தீர்வு என குஜ்ஜார் சாதித் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்நிலையில்தான், முன்னாள் இராணுவ அதிகாரி கிரோரி சிங் என்பவர் தலைமையில் செயல்படும் குஜ்ஜார் இடஒதுக்கீடு போராட்டக் கமிட்டி, குஜ்ஜார்களைப் பழங்குடியினராக உடனே அறிவிக்கக்கோரி, மே 29ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது.
மே 29 தொடங்கி ஜூன் 4ஆம் தேதி முடிய நடந்த இப்போராட்டத்தில் 21 குஜ்ஜார்கள் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ராசஸ்தானைப் பொறுத்தவரை பொதுமக்களின் போராட்டங்களைத் துப்பாக்கிச் சூட்டில் ஒடுக்குவது அபூர்வமானதல்ல. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில், இப்போராட்டத்தையும் சேர்த்து, 16 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அரசு பயங்கரவாத அடக்குமுறை ஒருபுறமிருக்க, குஜ்ஜார்களுக்கு எதிராக மீனா சாதியினரைத் தூண்டிவிட்டது, பா.ஜ.க. அரசு. குஜ்ஜார்மீனா சாதியினருக்கு இடையே நடந்த மோதலில் 5 பேர் இறந்து போனார்கள்.
சட்டபூர்வமான வழியில், அமைதியான முறையில் தொடங்கிய குஜ்ஜார்களின் போராட்டம், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகுதான், ரயில் தண்டவாளங்களைச் சேதப்படுத்துவது, அரசு பேருந்துகளுக்குத் தீ வைப்பது போன்ற வன்முறைக் கலகமாக மாறியது. போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அரியானாவிலும், தில்லியிலும் குஜ்ஜார்கள் நடத்திய போராட்டம், அடுத்த தேர்தலில் தங்களின் சாதிக் கூட்டணிக் கணக்கைப் பாதித்துவிடும் என்ற பயத்தை பா.ஜ.க. தலைமைக்கு ஏற்படுத்தியது. இதன்பிறகுதான், ராசஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, குஜ்ஜார் இடஒதுக்கீடு போராட்டக் கமிட்டி தலைவர் கிரோரி சிங்குடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டார்.""ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்; அக்கமிட்டி குஜ்ஜார்களின் கோரிக்கையை ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை கொடுக்கும்'' என இப்பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இம்முடிவை ஒப்பந்தமாகக் கூட எழுதிக் கொடுக்க மறுத்ததன் மூலம், பா.ஜ.க. அரசு குஜ்ஜார்களை மீண்டும் ஏமாற்றி விட்டது.
குஜ்ஜார்களின் கோரிக்கையை ஒடுக்கப்பட்ட சாதிகளுள் ஒன்றான மீனா சாதியினர் எதிர்த்தது ஒருபுறமிருக்க, அவர்களைவிடத் தீவிரமாக பார்ப்பனமேல்சாதி கும்பல் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. ""குஜ்ஜார்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதியினரும் குஜ்ஜார்களைப் போலவே தங்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் எனப் போராடத் தொடங்கி விடுவார்கள்'' எனத் "தேசிய' பத்திரிகைகள் பீதியூட்டின.மேலும், ""இடஒதுக்கீடு கொள்கை சாதி மோதலைத்தான் தூண்டி விடுகிறது. குஜ்ஜார்களின் நிலையை வைத்துப் பார்க்கும்பொழுது, சாதி ரீதியான இடஒதுக்கீட்டால் ஏழைகள் எந்தப் பயனும் பெற முடியாது என்பது தெளிவாகி விட்டது. எனவே, அனைத்துச் சாதியிலும் உள்ள ஏழைகள் பயன்பெறும்படி, பொருளாதார அளவுகோலைக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கு வேண்டும்'' எனப் பார்ப்பனமேல்சாதி கும்பல் தனது நயவஞ்ச ஆசையை வெளியிடுவதற்கு இப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது.இடஒதுக்கீடு கொள்கை இப்படிப்பட்ட நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், இதற்கு இடஒதுக்கீடு என்ற சமூக சீர்திருத்தக் கொள்கை காரணம் இல்லை. மாறாக, தாராளமயம் காரணமாக அரசு வேலை வாய்ப்பு சுருங்கிக் கொண்டே போனதும்; தரகு முதலாளிகள் தங்களின் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மறுப்பதும்; வேலைவாய்ப்பை அள்ளி வழங்குவதாகக் கூறப்படும் தகவல்தொழில்நுட்பத் துறை, ஆங்கிலம் படித்த பார்ப்பனமேல்சாதி கும்பலின் தனித்தீவாக இருப்பதும்; விவசாயம், சிறு தொழில்கள் நசிந்து வருவதன் காரணமாக அரசு தரும் கல்விவேலை வாய்ப்பைப் பெற போட்டி அதிகரித்து வருவதும் தான் இந்த நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளன.இந்த நெருக்கடிக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை மாற்றக் கோர மறுக்கும் பார்ப்பனமேல்சாதி கும்பல், இடஒதுக்கீடு கொள்கையை மாற்றத் துடிக்கிறது. இதன் மூலம், அரசுத் துறையை மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மனப்பால் குடிக்கிறது.
இப்பார்ப்பன மேல்சாதிக் கும்பலின் பேராசைக்கு, உச்சநீதி மன்றம் பக்கத் தூணாக நிற்கிறது. குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தின் பொழுது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியானதைக் கண்டு கொள்ளாத உச்சநீதி மன்றம், சில அரசு பேருந்துகளும், பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டதை தேசிய அவமானம் என ஊதிப் பெருக்கியது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் மீது வழக்குப் போட வேண்டும் என மிரட்டியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட குஜ்ஜார்களின் மீது வழக்குப் போடமாட்டோம் எனப் பேச்சு வார்த்தையின் பொழுது ஒத்துக் கொண்ட ராசஸ்தான் மாநில பா.ஜ.க. அரசு, உச்சநீதி மன்ற உத்தரவைச் சாக்காகக் காட்டி, குஜ்ஜார் சாதி சங்கத் தலைவர் கிரோரி சிங் உள்ளிட்டு பலர் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டது.
அதேசமயம், சமூகநீதிக் கட்சிகளோ இப்போராட்டத்தின் பொழுது காந்தி குரங்குகளைப் போல நடந்து கொண்டன. குறைந்தபட்சம், குஜ்ஜார்மீனா சாதிகளுக்கு இடையே நடந்த மோதலை நிறுத்துவதற்குக் கூட அக்கட்சிகள் முயலவில்லை. பார்ப்பனமேல்சாதி ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஒற்றுமையைக் கட்டுவது என்ற ""சமூக நீதி''க் கொள்கை, நடைமுறையில் அதற்கு எதிரான திசையில் பயணம் செய்கிறது.
""ஏற்றத்தாழ்வு மிக்க சமூக அமைப்பில் இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கைகள் சமத்துவத்தைக் கொண்டு வந்து விடாது; தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டம் போலவே, இடஒதுக்கீடு கொள்கையைச் செயல்படுத்துவதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. இந்த வரம்பை மீறி, ஒடுக்கப்பட்டோர் உரிமை பெறுவதற்கான ஒரே உத்தியாக இடஒதுக்கீட்டைச் செயற்படுத்தும் பொழுது, சாதியக் கண்ணோட்டம்தான் வலுப்படும்'' என பு.ஜ. பலமுறைச் சுட்டிக் காட்டியதை இப்போராட்டம் மெய்ப்பித்து விட்டது.
· செல்வம்
தமிழ் அரங்கம்
Saturday, August 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment