தமிழ் அரங்கம்

Sunday, September 16, 2007

ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்

னது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள் தரும் கல்விக் கடனை நம்பியிருந்தார். கார் வாங்கவும், ஆடம்பரப் பொருட்கள் வாங்கவும் ஆளைத் தேடிப் பிடித்து கடன் தரும் வங்கிகள், சிறு காய்கறி வியாபாரியான பன்னீர் செல்வத்தை அலைக்கழித்து, அவமானப்படுத்தி வெறும் கையாகத் திருப்பி அனுப்பி விட்டன.

ஓட்டுக் கட்சிகள், இது அதிகாரிகளின் தவறு எனக் குற்றம் சுமத்துகின்றன. வங்கி அதிகாரிகளோ, கடன் விதிமுறைகளைக் காட்டி நழுவிக் கொள்கிறார்கள். இந்த மழுப்பல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், காசில்லாதவன் உயர்கல்வி பெற முடியாது என்ற உண்மை நமது முகத்தில் அறைகிறது. உயர்கல்வி வழங்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்ட அரசு, அதை மூடி மறைப்பதற்காகக் கல்விக் கடன் என்ற கவர்ச்சி வியாபாரத்தை நடத்துகிறது.

பன்னீர் செல்வத்தின் தற்கொலை, இயலாமையினால் நிகழ்ந்துவிட்ட துயரச் சம்பவம் அல்ல. அது, கல்விக் கொள்ளைக்கு எதிரான ஏழை மக்களின் கலகக் குரல்.

கல்விக் கடன் கேட்டு வங்கி அதிகாரிகள் முன் கைகட்டி நிற்பதைவிட, கல்வி தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்த்துப் போராடுவதுதான் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி. போராடினால் படிப்பு பாழாகிவிடும் எனச் சிலர் மாணவர்களை அச்சுறுத்தலாம். ஆனால், கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து முழுவீச்சோடு போராடாமல் இருப்பதால்தான், கல்வி எட்டாக் கனியாக மாறி வருகிறது என்பதை வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?

No comments: