தேசாபிமானி. கேரள சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு. இடதுவலது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு, அது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டில் தேசாபிமானி நாளேட்டுக்காக கம்யூனிஸ்டுகள் நிதி திரட்டியபோது, கோழிக்கோடு மாவட்டம் சொம்பாலா கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரும் எழுதப் படிக்கத் தெரியாத விவசாயப் பெண் தோழருமான பாலோரமாதா, தனது கன்றுக்குட்டியை நன்கொடையாக அளித்தார். கூலிஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் வர்க்க அடித்தளமாகக் கொண்டு இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் தேசாபிமானி நாளேடும், இன்று சாராய வியாபாரிகள், லாட்டரி சீட்டு முதலாளிகள், சீட்டுக் கம்பெனி முதலாளிகள் முதலானோரைத் தமது வர்க்க அடித்தளமாகக் கொண்டு சீரழிந்து நிற்கிறது.
சந்தியாகு மார்ட்டின்; தென்னிந்தியாவின் மிகப் பெரிய லாட்டரி சூதாட்ட முதலாளி. சிக்கிம்பூடான் லாட்டரி சீட்டு ஏஜெண்டான இவனது சொத்து மதிப்பு, ஏறத்தாழ ரூ.4000 கோடிக்கு மேலிருக்கும் என்று பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் லாட்டரி சூதாட்டத்தின் மூலம் கோடி கோடியாய்க் குவித்துள்ள சமூக விரோதியான மார்ட்டின், இப்போது சி.பி.எம். கட்சியின் "தோழராகி' விட்டான். கேரள சி.பி.எம். கட்சித் தலைவர்களுடன் கூடிக் குலாவும் அவன், தேசாபிமானி நாளேட்டுக்கு ரூ.2 கோடியை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளான்.
கேரளத்தை ஆளும் சி.பி.எம். முதல்வரான அச்சுதானந்தன் கோஷ்டிக்கும், கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் கோஷ்டிக்குமிடையே நடக்கும் நாய்ச் சண்டை, கட்சி சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகாரச் சண்டையாக முற்றிவிட்ட நிலையில், இக்கோஷ்டிச் சண்டையின் ஊடாக இந்த விவகாரம் மெதுவாகக் கசிந்து இப்போது கேரள மாநிலமெங்கும் நாறுகிறது.
இதனால் சி.பி.எம். கட்சியின் யோக்கியதை சந்தி சிரிக்கத் தொடங்கியதும், ""தேசாபிமானி நாளேடு வெளியிட்ட கடன் பத்திரங்களைத்தான் மார்ட்டின் ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார்; கடன் பத்திரம் முதிர்ச்சியுறும்போது வட்டியோடு அத்தொகையைச் செலுத்துவோம்'' என்று கேரள சி.பி.எம். தலைவர்கள் பசப்பினர். இப்படி கடன் பத்திரங்களை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்; அப்படி எதுவும் நடக்கவில்லையே என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதும், இதனால் சட்டச் சிக்கல் ஏதும் வருமோ என்று சி.பி.எம். தலைவர்கள் பீதியடைந்தனர். ""தேசாபிமானி சார்பில் கடன் பத்திரங்கள் எதுவும் வெளியிடவில்லை; தேசாபிமானி நாளேட்டில் லாட்டரிச் சீட்டு விளம்பரம் வெளியிட மார்ட்டின் அட்வான்சாக ரூ. 2 கோடி கொடுத்துள்ளார்'' என்று புதிய விளக்கமளித்தனர். பின்னர் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் முன்னிலையில் "விசாரணை' நடத்தி, இந்தப் பணத்தை மார்ட்டினிடம் திரும்ப ஒப்படைப்பது என்று முடிவாகியுள்ளது.
இப்படி நன்கொடைகள், பங்குகள் விற்பனை, கடன் பத்திரம் முதலானவை தேசாபிமானியோடு நின்று விடவில்லை. சி.பி.எம். கட்சியின் ""கைரளி டி.வி.''இன் 25 லட்ச ரூபாய் பங்குகளை சென்னையைச் சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரியான "தோழர்' புருசோத்தமன் வாங்கியுள்ளார். கேரளத்தில் 36 பேரின் சாவுக்குக் காரணமான கள்ளச் சாராயத் "தோழர்' மணியச்சன் பல லட்ச ரூபாய்க்கான பங்குகளை வாங்கியுள்ளார். இப்படி சமூக விரோதிகள் சி.பி.எம். கட்சியின் "தோழர்' களாகி விடும்போது, அவர்கள் தமது சமூக விரோத மக்கள் விரோதச் செயல்களுக்கு சி.பி.எம். கட்சியிடம் ஆதரவும் அங்கீகாரமும் கோர மாட்டார்களா? தேசாபிமானி விவகாரத்தில் நடந்துள்ள இன்னுமொரு பேரம் இதை மெய்ப்பித்துக் காட்டுகிறது.
எல்.ஐ.எஸ். என்ற சீட்டுக் கம்பெனி, கேரளத்தில் தனது முதலீட்டாளர்களை ஏய்த்து கோடி கோடியாய்ச் சுருட்டிய மோசடி நிறுவனமாகும். இம்மோசடி நிறுவனத்தின் மீதான வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி.யான சென்குமார், சி.பி.எம். கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். விசாரணை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்போதே இம்மோசடி நிறுவனம், ""ஜோதிஸ்'' என்ற பெயரில் புதிய சீட்டுக் கம்பெனியைத் தொடங்கி நடத்தி வருகிறது.
இந்த மோசடி சீட்டுக் கம்பெனி, வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக தேசாபிமானி நாளேட்டின் பொது மேலாளரான வேணுகோபாலிடம் ஒரு கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து பேரம் பேசியது. வேணுகோபாலும் காரியத்தைக் கச்சிதமாக முடித்துத் தருவதாக உறுதியளித்து லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால், அவர் வாக்களித்தபடி வழக்குகளிலிருந்து இம்மோசடி நிறுவனத்தைத் தப்புவிக்க முடியவில்லை. காலம் கடந்து கொண்டிருந்தது. லஞ்சம் கொடுத்தும் கூட இம்மோசடிக் கம்பெனிக்கே ""அல்வா'' கொடுத்துவிட்டார் "தோழர்' வேணுகோபால்.
ஆத்திரமடைந்த இம்மோசடிக் கம்பெனி முதலாளிகள், சி.பி.எம். கட்சியின் இதர பிரமுகர்களிடம் புலம்ப, அவர்கள் தங்களுக்கு உரிய பங்கு தரப்படாமல் ஏய்த்ததால் கோபமடைந்து, இந்த விவகாரத்தை வெளியே கசிய விட்டனர். அதைத் தொடர்ந்து, தேசாபிமானி நாளேட்டின் பொதுமேலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் வேணுகோபால் நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சி.பி.எம். தலைவர்கள்அமைச்சர்களின் பெயர்கள் வெளிவராமல் மூடிமறைத்து, கட்சித் தலைமை இந்த லஞ்ச பேர விவகாரத்தை அமுக்கிவிட்டது.
கேரள சி.பி.எம். கட்சியின் யோக்கியதை இப்படியிருக்க, மே.வங்க சி.பி.எம். கட்சியோ இன்னுமொரு படி முன்னேறி, பாசிசப் பயங்கரவாதக் கட்சியாகப் பரிணமித்துள்ளது.
மே.வங்கத்தின் ஹுக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூரில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை தொடங்குவதற்காக, இடது முன்னணி அரசு விளைநிலங்களை ஆக்கிரமிப்பதை எதிர்த்து அக்கிராம விவசாயிகள் உறுதியுடன் போராடி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 18ஆம் நாளன்று தபாசி மாலிக் என்ற 18 வயதான இளம்பெண் மீது பாலியல் வன்முறை ஏவப்பட்டு, டாடா கார் திட்ட நிலத்தில் எரித்துக் கொல்லப்பட்டார். மே.வங்கத்தையே உலுக்கிய இப்படுகொலையைச் செய்தது திரிணாமுல் காங்கிரசு நக்சல்பாரிகள் ஆகிய எதிர்த்தரப்பினர்தான் என்று சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ வார ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்கரசி'' வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது. சிங்கூர் விவசாயிகள் டாடா கார் ஆலைத் திட்டத்துக்கு ஆதரவாக நிற்பதாகவும், போராட்டத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த எதிர்க்கட்சிகளின் எத்தணிப்புகள் தோல்வியடைந்ததாலும், இப்படுகொலையைச் செய்து பயங்கரவாத பீதியூட்டி வருவதாக மே.வங்க சி.பி.எம். கட்சியினர் கதை கட்டினர்.
ஆனால், இவையனைத்தும் பொய் என்றும், இக்காமவெறிப் படுகொலைச் செய்தது சி.பி.எம். கட்சிக் குண்டர்கள்தான் என்றும் இப்போது மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) நடத்திவரும் விசாரணையில் அம்பமலாகியுள்ளது. தேபு மாலிக் என்ற குண்டர்படைத் தலைவனும், அவனது கூட்டாளிகள் நால்வரும், அவனை வழிநடத்திய சிங்கூர் வட்டாரக் கமிட்டிச் செயலாளர் சுஹ்ரித் தத்தாவும் மையப் புலனாய்வுத் துறையால் கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக, ஹூக்ளி மாவட்டக் கமிட்டி உறுப்பினரான திபாகர்தாஸ் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கூர் வட்டாரக் கமிட்டிச் செயலாளரான சுஹ்ரித் தத்தா, சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலை நிறுவுவதற்கும், விளை நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் முன்னின்றவர். விவசாயிகளின் போராட்டம் வலுக்கத் தொடங்கியதும், டாடா ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி வேலியும் தடுப்புச் சுவரும் கட்ட சி.பி.எம். குண்டர்களைத் திரட்டி அந்த வேலையை மேற்பார்வையிட்டவர்.
சி.பி.எம். குண்டர் படைத் தலைவனாகிய தேபு மாலிக், இப்பகுதியில் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்ததோடு சுஹ்ரித் தத்தா, திபாகர்தாஸ் ஆகியோரின் விசுவாச அடியாளாகவும் செயல்பட்டு வந்தான். இத்தலைவர்களோடு சேர்ந்து அவன் வலம் வருவதைக் கண்டு சி.பி.எம். ஊழியர்களே அவனிடம் பயம் கலந்த மரியாதை காட்டினர். டாடா ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி வேலியும் தடுப்புச் சுவரும் அமைத்தவனும் இவன்தான். போராடும் விவசாயிகள் இந்த வேலிக்குச் சேதம் விளைவித்து விடாதபடி இவன் தலைமையிலான குண்டர் படை, சி.பி.எம். கட்சியின் உத்தரவுப்படி இரவு நேர காவல் பணியை மேற்கொண்டு வந்தது.
தபாசி மாலிக், குத்தகை விவசாயியும் மீன் வியாபாரியுமான மனோரஞ்சன் மாலிக்கின் ஒரே மகள். சிங்கூர் விளைநிலப் பாதுகாப்புக் குழுவில் ஊக்கமுடன் செயல்பட்டு வந்த அவர், விரைவிலேயே அப்பகுதியில் பிரபலமானார். சிங்கூர் விவசாயிகளின் போராட்டத்தை மிருகத்தனமாக ஒடுக்கிய போதிலும் மீண்டும் அங்கு போராட்டம் மூண்டெழுவதைக் கண்டு பீதியடைந்த சி.பி.எம். தலைவர்கள், போராட்டத்தில் முன்னணியில் நிற்போரின் பட்டியலை குண்டர் படையிடம் கொடுத்து, அவர்களை உரிய முறையில் கவனிக்குமாறு உசுப்பேற்றி விட்டனர்.
டாடா கார் ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்வேலிக்கு அருகில்தான் தபாசி மாலிக்கின் வீடு உள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் நாளன்று நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வெளியே வந்த தபாசி மாலிக்கை இக்குண்டர் படை வாயில் துணியை வைத்து அடைத்து இழுத்துச் சென்று பாலியல் வன்முறையை ஏவி, அந்நிலத்தில் வெட்டப்பட்டிருந்த குழியில் தள்ளிக் கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளது. இப்போது, மையப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தேபு மாலிக், தனது கூட்டாளிகளையும் எஜமானர்களையும் காட்டிக் கொடுத்து விட்டான்.
பீதியடைந்த சி.பி.எம். கட்சித் தலைமை, ""தேபு மாலிக் சி.பி.எம். ஆதரவாளன் அல்ல; சி.பி.எம். தலைவர்களுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்புமில்லை'' என்று கூசாமல் புளுகியது. கட்சியோடு தொடர்பில்லாத ஒருவன் எதற்காக டாடா கார் அமையவுள்ள நிலத்தில் இரவுக் காவல் வேலையை செய்ய வேண்டும்? அவனை அப்பணிக்கு அமர்த்தியது யார்? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை சி.பி.எம். கட்சித் தலைமை பதிலளிக்கவில்லை. இதுவொருபுறமிருக்க, தபாசி மாலிக் கொல்லப்பட்ட நாளிலும் அதன் பின்னரும் குண்டர்படைத் தலைவன் தேபுமாலிக்குடன் சி.பி.எம். தலைவர் சுஹ்ரித் தத்தா தொலைபேசியில் உரையாடியுள்ளதை ஆதாரங்களுடன் மையப் புலனாய்வுத் துறை வெளிக் கொணர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 29ஆம் தேதியன்று சுந்தர்நகர் வழக்கு மன்றத்துக்கு தேபு மாலிக்கும் சுஹ்ரித் தத்தாவும் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சியினரும் உழைக்கும் மக்களும் திரண்டு இக்கொலைக்காரர்களை துடப்பக்கட்டை செருப்பு மாலையுடன் வரவேற்று, அவர்களைத் தூக்கில் போடக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். சி.பி.எம். கட்சியின் கொலைகார கோரமுகம் மாநிலமெங்கும் அம்பலமானதும், ""இது மைய அரசின் அரசியல் சதி; பொய்க் குற்றம் சாட்டி சி.பி.எம்.மின் கௌரவத்தைக் குலைக்க நடக்கும் சதி'' என்று ஒப்பாரி வைத்த சி.பி.எம். தலைமை, தமது கட்சிக்குள்ளேயே ஒரு விசாரணை நாடகத்தை நடத்தி சுஹ்ரித் தத்தா நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. சங்கரராமனைக் கொல்ல கூலிப்படையை ஏவிவிட்ட காஞ்சி காமகே(õ)டி ஜெயேந்திரன் கைது செய்யப்பட்ட போது, ""பெரிவாள் இப்படியெல்லாம் செய்திருக்கவே மாட்டார்'' என்று பார்ப்பன கும்பல் தாமே தீர்ப்பளித்துத் திருப்திபட்டுக் கொண்டதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்பதை அக்கட்சியினர்தான் விளக்க வேண்டும்.
கொலைகாரர்களையும் பயங்கரவாதிகளையும் பயிற்றுவித்துப் பாதுகாக்கும் பாசறையாக சி.பி.எம். கட்சி மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிய திரிணாமுல் காங்கிரசு கட்சித் தலைவியான மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் 2ஆம் நாளன்று படுகொலை செய்யப்பட்ட தபாசியின் தந்தை மற்றும் சிங்கூர் நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களாலும் போலீசாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களோடு பிரதமர் மற்றும் அரசுத் தலைவரைச் சந்தித்து மைய அரசின் தலையீட்டைக் கோரி மனு கொடுத்ததோடு, பாதிக்கப்பட்டோரை பத்திரிகையாளர்கள்முன் நிறுத்தி, சி.பி.எம்.மின் பாசிச பயங்கரவாதத்தை நாடெங்கும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அதேநாளில், சிங்கூரில் விளைநிலங்கள் டாடாவுக்காக ஆக்கிரமிக்கப்பட்டதால், வேலையிழந்து, வாழ்விழந்து பட்டினியில் பரிதவித்த கூலி விவசாயி சங்கர்தாஸ் மாண்டு போனார். தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் 78 மாதங்களாக அவர் பட்டினியால் பரிதவித்ததையும், சங்கர்தாசைப் போல 100க்கும் மேற்பட்ட கூலி விவசாயக் குடும்பங்கள் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருப்பதையும், நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தருவதாக வாக்களித்துவிட்டு ஏய்க்கும் சி.பி.எம். கூட்டணி அரசின் யோக்கியதையையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. சி.பி.எம். கட்சியோ சங்கர்தாஸ் பட்டினியால் சாகவில்லை என்று கோயபல்சு பாணியில் புளுகிக் கொண்டிருக்கிறது.
புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தனது வர்க்க அடித்தளத்தை மாற்றிக் கொண்டு முதலாளித்துவ கட்சியாக பாசிச பயங்கரவாதக் கட்சியாகச் சீரழிந்து விட்டது. சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் உழைக்கும் மக்களின் நலனுக்கானது என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால், கேரளத்திலும் மே.வங்கத்திலும் நடந்துள்ள அண்மைக்கால நிகழ்வுகளே அவர்களது மூட நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.
· மனோகரன்
No comments:
Post a Comment