பி.இரயாகரன்
24.09.2007
கடைந்தெடுத்த பிற்போக்குவாதக் கட்சி தான் ஜே.வி.பி. தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் இயங்குகின்ற, சுரண்டும் வர்க்க நலனுக்கான உழைக்கின்ற கட்சியே ஜே.வி.பி. இதை நாம் இரண்டு பிரதான கூறுகளிலும் இனங காணமுடியும்.
1. இலங்கை தொழிலாளார் வர்க்கத்தின் கடமைகள் என்ன என்பதில், ஜே.வி.பி நிலைப்பாடுகள் சார்ந்து காணமுடியும்.
2. சமூக ஒடுக்குமுறைகள் மீதான ஜே.வி.பி யின் அரசியல் செயல்தளம் மீதும் இனம் காணமுடியும்.
இலங்கை தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள் என்ன?
தனது சொந்த பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுவதற்காக, ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிவது தான், அதன் அரசியல் கடமையாகும். அந்த வகையில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து கிளர்ச்சிகரமாக புரட்சி செய்யவேண்டும். இதைவிடுத்து, திடட்மிட்ட அரசியல் சதிகளை செய்வதல்ல. மக்கள் தான் தமது புரட்சியை செய்யவேண்டும். மக்களை அதனடிப்படையில் அணிதிரட்ட வேண்டும். இதையா ஜே.வி.பி செய்கின்றது ?
ஜே.வி.பி என்ன செய்கின்றது. தூக்கியெறிய வேண்டிய முதலாளித்துவ அரசுடன் அரசில் பங்கேற்கின்றது. சொந்த முரண்பாட்டுடன் வெளியில் இருந்து அரசை ஆதரிக்கின்றனர். அரசின் பெரும்பாலான பல்வேறு நடவடிக்கைக்கு துணை போகின்றது. அதேநேரம் ஒரு மாற்று எதிர்கட்சியாக முரண்படுகின்றனர். பாட்டாளி வர்க்கம் தூக்கியெறிய வேண்டிய வர்க்கத்துடன், கூடி அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். பாட்டாளி வர்க்க கிளர்ச்சிக்கான, ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதில்லை. மக்களை கீழ் இருந்து அவர்களின் அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் அணி திரட்டுவதில்லை. மாறாக மேல் இருந்து அரசியல் சதி செய்கின்றனர்.
கட்சித்திட்டம் முதல் யுத்த தந்திரம் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டது. இனவாதத்தின் பின் அமைப்பாக அணிதிரளும் இந்தக் கும்பல், புத்த மதவாதத்தின் பின்னால் ஓட முனைகின்றனர். ஆட்சியை மேல் இருந்து கைப்பற்ற, அனைத்து மக்கள் விரோத சக்திகளுடனும் ஜக்கிய முன்னணி கட்டுகின்றனர்.
இந்த லாவணி அரசியல் நடத்தும் ஜே.வி.பி, பாட்டாளி வர்க்கத்தின் எதிரியை சார்ந்த அரசை சதிசெய்து கைப்பற்ற முனைகின்றனர். மறுபக்கத்தில் இலங்கை உலகமயமாக்கலில் வேகம் பெற்று செல்லுகின்றது. அதற்கு துணையாகவே இப்படியாக ஜே.வி.பி ஆதரவு வழங்குகின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள், அன்றாடம் வாழ்வு இழந்து போகின்றனர். ஜே.வி.பி ஆதரிக்கும் அரசு சப்பித் துப்பும் மக்கள், அநாதரவாகி நிற்கின்றனர். ஜே.வி.பி இதற்காக அந்த மக்களை அணிதிரட்டி போராடுவது கிடையாது.
தாம் அரசை கைப்பற்ற, ஜக்கிய முன்னணி அமைத்து நெகிழ்ச்சியாக விடையங்களை கையாளுகின்றனராம். யாருக்காக? எந்த மக்களுக்காக அரசை கைப்பற்ற போகின்றனர்? அந்த மக்களின் அரசியல் கோரிக்கைகள் என்ன? எதுவுமில்லை, சதியை சொந்த நலனாக வைக்கின்ற ஒரு சதிகாரக் கும்பல் தான் ஜே.வி.பி.
இந்த ஜே.வி.பி ஆதரவுடன் ஆட்சி அமைத்த காலத்தில், நாட்டின் நிலைமை என்ன? 1978 ஆம் ஆண்டில் இலங்கை வாழ் மக்களின் கடன் நபருக்கு 2181 ரூபாவாக மட்டும் இருந்தது. இது 2002 இல் 77500 ரூபாவாக இருந்தது. இது 2004 ஆம் ஆண்டில் 96,813 ரூபாவாகவும், 2007 இல் இறுதியில் 153,280 ரூபாவாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருபுறம் திறந்த பொருளாதார கொள்கை அதாவது உலகமயமாதல், மறுபுறம் யுத்த பொருளாதார கொள்கை என இரண்டையும் ஜே.வி.பி என்ற முதலாளித்துவ இனவாதிகள் ஆதரிக்கின்றனர்.
உண்மையில் இந்த கடனோ பிரமிப்பை ஊட்டக்கூடியது. இலங்கை செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டுக் கடன்
1999 65,451.4 கோடி ரூபா
2000 72,207.9 கோடி ரூபா
2001 79,591.8 கோடி ரூபா
2002 84,061.9 கோடி ரூபா
இவை ஜே.வி.பி அரசியல் காலத்திலும் தொடர்ந்து நடக்கின்றது. 1988 இல் இலங்கையின் வெளிநாட்டு கடன் 11430 கோடியாகவே இருந்தது. வட்டி கடன் மீளமைப்பு ஏற்றுமதி வருமானத்தில் 28 சதவீதமாக மாறியது. 2001 இல் வட்டிக்காக மட்டும், இலங்கையில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 25 சதத்தையும் கட்டத் தொடங்கினர். இதுவே 2002 இல் 35 சதத்தையும் கட்டும் நிலைக்கு இலங்கைத் தேசியம் மறுகாலனியாகியது. உள்நாட்டு கடன் மற்றும் மீள் அளிக்கப்பட வேண்டிய வட்டியும் 27500 கோடியாக அதிகரித்தது. இந்தளவு நடக்கின்ற போதும், ஜே.வி.பி என்ன செய்கின்றது. வர்க்கப் போராட்டமா செய்கின்றது. இல்லை. அரசுடன் கூடிக்குலாவி விபச்சாரம் செய்கின்றனர். அரசியல் சதி செய்து ஆட்சியைக் கைப்பற்ற முனைகின்றனர். கடனை ஒருவகையில் பெருக்கும் யுத்தத்தை ஊக்குவிக்கின்றனர். யுத்த செய்ய பணம் வேண்டும். அதை ஜே.வி.பி உழைத்தா கொடுக்கின்றது. நாட்டை விற்று யுத்தம் செய்வதை ஆதரிக்கின்றனர். மக்கள் பட்டினி கிடந்து கடனையும், வட்டியையும் கட்ட வேண்டும் என்பது ஜே.வி.பி கொள்கை. ஜே.வி.பியின் இந்தக் கொள்கையால் பாட்டாளி வர்க்கம் தான் துன்பப்படுகின்றனர்.
இந்த வழியில் தான் பாட்டாளி வர்க்க புரட்சியை ஜே.வி.பி நடத்துகின்றது. உலகமயமாதல் இலங்கையை சூறையாடி வருகின்ற நிலையில், ஜே.வி.பி கண்டும் காணாத ஆதரவுடன் அதை அனுமதிக்கின்றனர். பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்தால் தானே, அதற்கு எதிராக அது போராடும்.
புலியொழிப்பு பெயரில் தமிழரை ஒடுக்கும் பேரினவாத யுத்தத்தை ஆதரிக்கும் ஜே.வி.பி, அதற்காக நாட்டை விற்றாலும் பரவாயில்லை என்ற வக்கிரமான நிலை. இன்று இதன் மீது மகிந்த குடும்ப சர்வாதிகாரம் நிறுவப்படுகின்றது. அது புலியொழிப்பு என்ற போர்வையில் நடக்கின்றது. அதையும் ஆதரிக்கின்றது. ஜே.வி.பி. கடைந்தெடுத்த அரசியல் போக்கிரிகள் என்பதைத் தவிர, வேறு எதுவும் அவர்களிடம் கிடையாது.
அன்னியனோ உல்லாசமாக நாட்டினுள் புகுந்து சூறையாடுகின்றான். 2001 இல் 8.2 கோடி டொலராக (அண்ணளவாக 820 கோடி ரூபா) இருந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள், 2002 23 கோடி டொலராக (2300 கோடி ரூபாவாக) அதிகரித்தது. இது 2003 இல் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 5000 கோடி ரூபாவாக இருந்தது. நாட்டில் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் 2003 இன் கடைசிப் பகுதியில் 290 கோடி அமெரிக்க டொலராக (அண்ணளவாக 29000 கோடி ரூபாவாக) அதிகரித்தது. 2004 இறுதியில் 300 கோடி அமெரிக்க டொலராக (அண்ணளவாக 30000 கோடி ரூபாவாக) உயரும் என்று பெருமையுடன் அரசு அறிவித்து இருந்தது இந்தளவுக்கு நாடு சூறையாடப்பட்டு கொண்டு இருக்கின்றது. ஜே.வி.பி புலியை ஒழிக்கும் அரசுக்கு, காவடியாகி நிற்பதைத்தான் பாட்டாளி வர்க்க புரட்சி என்கின்றனர்.
இலங்கை ஏகாதிபத்தியத்தாலும், அதற்கு துணையான அரசாலும் சூறையாடப்படுகின்றது. ஜே.வி.பி பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கம்பளம் விரிக்கின்றது. 1970ம் ஆண்டு இலங்கையில் இருந்த 40 சதவீதமான காட்டுப்பகுதி இன்று 22 சதவீதமாக குறைந்து போனது. நாட்டில் மக்கள் ஒரு நேர உணவுக்கு உழைத்து வாழ முடியாது போய்விட்டனர். இதனால் 2001 இல் 12 லட்சம் பேர் அரபு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றனர். 1998 முதல் 2002 வரையான காலத்தில் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் அரபு நாட்டு தொழில் செய்யும் பெண்கள் 47800 கோடி ரூபாவை, மற்றவன் குண்டி கழுவி உழைத்தனர். இதுவே இலங்கை பிரதான முதல் வருவாயில் ஒன்றாகிவிட்டது. 1998 இல் இதன் மூலம் 7900 கோடி ரூபாவை திரட்டிய அரசு, 2002 இல் 12000 கோடியை திரட்டியது. இன்று 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றவனுக்கு குண்டி கழுவி வாழ்கின்ற வாழ்க்கை.
40 வருசமாக பாட்டாளி வர்க்க புரட்சி நடத்துவதாக கூறும் ஜே.வி.பி காலத்தில், நாட்டை மூலதனம் சூறையாடுவதை இப்படி பட்டியல் இடமுடியும். இதை மாற்றும் புரட்சிகர நம்பிக்கையைக் கூட ஜே.வி.பி உருவாக்கியது கிடையாது. எந்த புரட்சிகர அரசியல் முன்முயற்சியைத் தன்னும் உருவாக்க முனையவில்லை.
மாறாக சிவப்புக் கொடியையும், தலைவர்களின் படத்தையும், புரட்சிர வசனங்களையும் கொண்டு பம்மாத்துகின்ற பம்பல்களை கடைவிரிக்கின்றனர். இது பாட்டாளி வர்க்க புரட்சியாகிவிடாது. மாறாக இலங்கையில் ஜே.வி.பி மூலம், முதலாளித்துவ சூறையாடலுக்கு உதவும் நவீன கருவிகள் தான் இவை.
No comments:
Post a Comment