தமிழ் அரங்கம்

Sunday, October 14, 2007

தமிழ்மணத்தில் உள்ள மக்களின் எதிரிகள் யார்?

பி.இரயாகரன்
14.10.2007

யாரெல்லாம் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்பனியத்தையும், புலியிசத்தையும் ஆதரிக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களின் எதிரிகள். அந்த மக்களின் எதிரிகளே, எமது எதிரிகள். இவர்களுடன் நாம் இணக்கம் காணமுடியாது. சமரசம் காணமுடியாது. எந்த எதிரியுடனும் இணக்கமான ஒரு விவாதத்தை நடத்தமுடியாது. இந்தப் பிரிவுகள் தாம் செய்வதற்கு, அறிவியல் பூர்வமான அடிப்படைகள் எதுவும் அதனிடம் கிடையாது.

என்ன செய்கின்றது, நுட்பமாக, ஒரு நீக்கல் ஊடாக, பலவீனங்களின் ஊடாக உட்புகுகின்றது. பின் எதிர்ப்பை அழிப்பது, மட்டுப்படுத்துவது, அரிப்பது, கடிப்பது, குதறுவது, இழிவாடுவது, திசைதிருப்புவது, முரண்பாட்டை உருவாக்குவது, நேரத்தை இதற்குள் முடக்குவது என்று பல வழிகளில், பல விதங்களில் செயலாற்றுகின்றது.

ஏகாதிபத்தியமாகட்டும், பார்ப்பனியமாகட்டும், புலியிசமாகட்டும், இதைத்தான் அவர்கள் தமிழ்மணத்தில் செய்கின்றனர். இந்த எதிரியை, இந்த எதிரி வர்க்கத்தின் பண்பை புரிந்து கொள்ளாது, எதிரியை எதிர்த்து கருத்துத்தளத்தில் போராட முடியாது. மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் மேல் ஏறுகின்ற சுழற்சிக்குள், அரட்டையடிக்க, அலட்டமுடியாது. கொசிப்புக்கும், கொழுப்பேறிய திமிருக்கும் நாம் துணை போகமுடியாது. இவை சமூகம் மீது நிறுவப்பட்ட, தன்னை பாதுகாத்துக் கொண்ட ஒரு இழிவான ஒழுக்கக்கேடான வடிவம். அடக்குமுறையில் தங்கி, மனித குலத்துக்கு எதிராக இயங்குகின்ற மனித விரோத வர்க்கங்களால் பிரதிநிதித்துப்படுத்தப்படுகின்றது. இதற்குள் நாம் செயலாற்றப் போகின்றோமா, அல்லது வெளியில் உள்ள பரந்துபட்ட மக்களிடமா (வாசகர்) என்பதே எம் முன்னுள்ள அடிப்படையான கேள்வி. இவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கப் போகின்றோமா?

இதற்குள் செயலாற்றுவதை தவறு என்கின்றோம். குறுகிய எல்லையில் பதிவிடுவதை விட, பொதுத்தளத்தில் இயங்குவதும், அம்பலப்படுத்திப் போராடுவதும் மட்டுமே சரியானது. சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால், எதிரியால் தனது மனிதவிரோத கோட்பாட்டால் விவாதத்தை நடத்த முடியாது. மக்களிடம் செல் என்ற நடைமுறைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பரந்துபட்ட வாசகரிடம் நேரடியாக செல். உன் நேரத்தை, உனது செய்தியை அவர்கள் மத்தியில் பொதுத் தளத்தில் வை. எதிரியை அம்பலப்படுத்து, எதிர்த்துப் போராடு.

இதை விட்டு விட்டு அவனுடன் சேர்ந்து கொசியாதே! அவனுடன் சேர்ந்து விவாதியாதே! மக்களின் எதிரி, எம் எதிரி. இதை மறவாதே. எதிரியை, எதிரியாகப் பார். எதிரியை வாசகர் முன் சரியாக அடையாளம் காட்டு. அனைத்தையும் தனிமனிதனுக்கு வெளியில், எதிரியை கோட்பாட்டு ரீதியாக பார்.

தமிழ் மணத்தில் சர்ச்சைக்குரியது எது? சமூகம் சார்ந்த விவாதங்கள் தான். அது அறிவியல் பூர்வமாக சர்ச்சைக்குள்ளாவதில்லை. சென்னையை நாறடிக்கும் கூவம் நதி போல், ஏகாதிபத்திய ஆதரவு நஞ்சுகளால் சர்ச்சைக்குள்ளாகின்றது. அது பார்ப்பனியமாக, புலியிசமாக தமிழ் மணத்தில் நாறுகின்றது. இந்த கூவத்தில் பிறந்து வளர்ந்த நுளம்புக் கூட்டம், தமிழ் மணத்தில் மொய்த்துக் கிடக்கின்றது. சமூகம் பற்றிப் பேசுகின்ற போது, அதை மொய்த்து இரத்தத்தை உறிஞ்சி எதிர்ப்பு சக்தியையே இல்லாததாக்க முனைகின்றது.

இந்த ஏகாதிபத்திய, பார்ப்பனிய புலியிச மக்கள் விரோதிகள், சமூகத்தின் உணர்வில் இருந்து படிப்பதில்லை. அறிவைத் தேடிச் செல்வதில்லை. சமூகத்தை ஓடுக்குவதை அடிப்படையாகக் கொண்ட பிழைப்புவாத, சந்தர்ப்பவாத வழிகளில் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

ஏகாதிபத்தியமும், பார்ப்பனியமும், புலியிசமும் இரத்தத்தை உறுஞ்சும் கூவம் நுளம்புகளாக அலைகின்றனர். இதைச் செய்ய கருத்துச் சுதந்திரமாம். இந்த மனிதவிரோத கழிசடைகள் தாங்கள் எதை எழுதினாலும், அதை அனுமதிக்க வேண்டுமாம். தாம் பாதுகாக்கும் ஏகாதிபத்தியம், பார்ப்பனியம், புலியிசமும், எதார்த்த நடைமுறையில் மக்களுக்கு வழங்க மறுக்கின்ற ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் எதிரிக்கு எதிரான சக்திகளிடம் கோருகின்றனர். இப்படி எதிரி தமது கருத்துச் சுதந்திரம் பற்றிப் பினாற்றுகின்றான். இதன் மூலம் அவர்கள் செய்ய நினைப்பது, தமக்கு எதிரான எதிர் தளத்தை அழிப்பது தான். இதற்கு வெளியில் அவர்கள் சதைகள் ஆடவில்லை. மக்களின் அடிப்படை உரிமைக்காக, மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் இவர்கள் கோருவதில்லை. அதில் எந்த அக்கறையும் கிடையாது. இது வெளிப்படையானது.

இவர்களின் ஒரு பிரிவு முன்பு மக்கள் சார்பு கருத்துத் தளங்கள் மீது, தூசணங்களால், பாலியல் வக்கிரத்தால் பேந்தவர்கள். இன்று அவை மட்டுறுத்தப்பட்ட ஒரு நிலையில், அதைக் கொசுக்கடியாக மாற்றி உனது நேரத்தை உறிஞ்சி தம்மீதான எதிர்ப்பை அழிக்க முனைகின்றனர்.

என்ன செய்கின்றனர். விவாத உள்ளடக்கம் மீதாக, அறிவியல் பூர்வமாக விவாதிக்கமுடியாது. சம்பந்தமில்லாத வகையில் உளறுவது, ஆட்களுக்கு இடையில் பிளவை விதைக்க முனைவது, ஒப்பீட்டில் ஆட்களை இழிவாடுவது, சம்மந்தமில்லாத புதிய விடையங்களை திணிப்பது, தொடர்பில்லாத கேள்விகள் கேட்பது என்று விவாத விடையத்தை சீரழிப்பது. இப்படி அறிவு நாணயம் எதுவுமற்ற கொசுக்கடிகளை, எப்படி நாம் அனுமதிக்க முடியும்.

ஏகாதிபத்தியம், பார்ப்பனியம், புலியிசம், தனது சொந்தக் கோட்பாட்டை, சொந்த நடைமுறையை நியாயப்படுத்த முடியாது. இந்தப் பிரிவுடன் அறிவியல் பூர்வமான விவாதம் செய்யமுடியுமா? முடியாது. பிறகு என்ன விவாதம் இவர்களுடன் வேண்டிக் கிடக்கின்றது. இந்தக் கோட்பாடுகள், அறிவால் வெல்லப்படுவதில்லை. சூழ்ச்சியால், சதியால், வன்முறையால் தான் தன்னை தக்கவைக்கின்றது. இதற்கு நாம் பலியாகப் போகின்றோமா? அல்லது எதிர்த்துப் போராடப் போகின்றோமா?

ஏகாதிபத்தியம், பார்ப்பனியம், புலியிசம் தமது சொந்த ஒழுக்கக்கேட்டை பற்றி வாய் திறப்பதில்லை. அதற்கு பதிலளிப்பதுமில்லை. நேர்மையீனம், ஒழுக்கக்கேடுகள் அனைத்தும் இதற்குள் தான் புழுக்கின்றது. அப்படியிருக்க, எதைப் பற்றி ஒன்றாகக் கூடி பரஸ்பரம் விவாதிக்கப் போகின்றீர்கள்.

மனிதனை மனிதன் சுரண்டுவதையிட்டு, சாதிய ஒடுக்குமுறையை இட்டு, ஆணாதிக்க ஒடுக்குமுறையையிட்டு, இன ஒடுக்குமுறையை இட்டு, நிற ஒடுக்குமுறையையிட்டு, மதவொடுக்குமுறையையிட்டு அலட்டிக்கொள்ளாத இந்த பிரிவுடன், எதைப் பற்றி நீங்கள் விவாதிக்க முடியும். இதை எதிர்த்துப் போராடும் உன்னிடமே, இதை ஓடுக்குவதற்காக கோருவதே கருத்துச் சுதந்திரம், விவாதமுமாகும். இது அவர்களின் மற்றொரு ஆயுதம். சூழ்ச்சியை சதியை அடிப்படையாக கொண்டு இயங்குன்றது. அது அறிவால் அல்ல.

இதன் நுட்பம் என்பது, சமூகம் பற்றிய உனது விவாதத்தளத்தில் அதைக் கோருகின்றது. நஞ்சைக் கக்கி, அதை அழித்துவிட முனைகின்றது. இந்த நுளம்புகள் உன் இரத்தத்தை உறிஞ்ச, உன் உடம்பில் இயங்கும் சுதந்திரம் வேண்டுமாம்! இதனால் சொந்த உடம்பில் தங்கி, உயிர் வாழ முடியாது. நுளம்பின் இந்த விதிதான், ஏகாதிபத்தியம் பார்ப்பனியம் புலியிசம் என அனைத்தும், மற்றவனில் உழைப்பில் அடிமைத்தனத்தில் வாழ்வதால் அது வாழ்கின்றது. இங்கு எதிர்ப்பின் மீது, சுதந்திரம் கோருகின்றது. வேடிக்கை என்னவென்றால், இந்த பாசிசக் கட்டமைப்பில், இது ஒடுக்கி வாழ்வது என்ற தனது சொந்த நிலையில் இருந்தும் கோருவது வேடிக்கை.

அவர்கள் எம்மிடம், எமது எதிர்ப்பின் மீது சுதந்திரம் கோருகின்றனர். சொந்தத்தில் தமது இழிவான மலிவான மனித விரோத செயல்களை பாதுகாத்தபடி உள்ளவர்கள். இந்த தமது ஒழுக்கக்கேட்டைப் பற்றி எந்த விமர்சனமுமின்றி, அதை எம் மீதும் சமூகம் மீதும் பேந்துவிடுவதை, நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். அதற்கான உரிமையைக் கோருகின்றனர்.

மனித குலத்தை அழிக்கின்ற, தமிழ் மணத்தில் இயங்குகின்ற ஏகாதிபத்தியம், பார்ப்பனியம், புலியிசத்துக்கு, எமது எதிர்ப்பு சக்தி மீது சுதந்திரம் வழங்கினால் நாம் அழிக்கப்பட்டு விடுவோம். தமிழ்மணத்தில் இயங்கும் ஏகாதிபத்தியம் பார்ப்பனியம், புலியிசத்தை எதிர்த்து போராட வேண்டியதை கவனத்தில் எடுக்கத் தவறினால், அவர்களின் தனித்துவமான நடைமுறை அழிக்கப்பட்டுவிடும்.

யாருக்கு கருத்துச் சொல்லுகின்றீர்கள்? எதிரிக்கா? வாசகர்களுக்கா? இதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏகாதிபத்தியத்தையும், பார்ப்பனியத்தையும், புலியிசத்தையும் கொண்டுள்ளவனை திருப்தி செய்ய வேண்டிய அவசியம் உனக்கு உண்டா? சமரசம் காண வேண்டிய அவசியமான புள்ளி எதுவும் உனக்கு உண்டா? இல்லை. இந்தக் கோட்பாடுகள், மக்களின் எதிரி தளத்தில் இயங்குவது உலகமறிந்தது. அதை புரிந்தல்லவா, நீ செயற்படவேண்டும். அவனுடன் விவாதிக்க உனக்கு எதுவும் கிடையாது. எதிரியை எதிர்த்துப் போராடு. பொதுத்தளத்தில், வாசகரை மையமாக வைத்து, அவர்களைச் சார்ந்து போராடு. எதிரியை உ(எ)னது இரத்தத்தில், உன் உடலூடாக ஊடுருவி, உ(எ)னது எதிர்ப்பு சக்தியை அழிப்பதை அனுமதிக்காதே.

எதிரியைக் கருத்தியல் தளத்தில் பார். நண்பனையும், சக வழிப்போக்கனையும் அப்படித்தான் பார். தனிமனிதனாக யாரையும் பார்க்காதே. அப்படி வகைப்படுத்தாதே. யார்? எவர்? என்று தேடாதே. கருத்தைத் தேடு. கருத்தில் இருந்து எதிரியையும், நண்பனையும் வகைப்படுத்து.

கொசிப்பதை, வம்பளப்பதை நிறுத்து. மக்களிடம் செல் என்ற கோட்பாட்டுக்கு இணங்க, பரந்துபட்ட வாசகரிடம் செல். குறுகிய எல்லைக்குள், குறுகி விவாதியாதே. பரந்த தளத்தில், அறிவை விருத்திசெய்து விவாதி.

இன்று இந்த இழிவான சமூக அமைப்பில், நீ தேடும் உன் அங்கீகாரமா முக்கியம் அப்படி நீ எண்ணியிருந்தால், அதை சுயவிமர்சனம் செய். மக்களுக்கு செய்யவேண்டிய பணி பரந்தது. அதை மறக்காதே. அதை நோக்கி உன் மையக் கவனத்தைக் குவி.

உன் முன்னால் உன் எதிரி தூசு என்பதை மறந்துவிடாதே. அவனிடம் அறிவில்லை. நேர்மை இல்லை. மக்களின் முதன்மையான எதிரிகளிடம் இருப்பதோ சூழ்ச்சியும், சதியும், வன்முறையும். இதற்குள் பலியாகாது எதிர்த்து நில்! இதை எதிர்த்துப் போராடு! எதிரியை எதிரியாகவே பிரகடனம் செய்!

1 comment:

thiagu1973 said...

ஈழத்தமிழர் பிரச்சனை புலிகள் பிரச்சனை எனும் ரீதியாக மாறியது
சரியா தவறான்னு தெரியலை

ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்
புலி எதிர்ப்பில் எப்படி பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்களோ
அதே போல புலி ஆதரவில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்

அதுதான் புரிந்தது சிலருடன் விவாதிக்கையில்