"மனித வாழ்வு எவ்வளவோ மகத்தானது.
ஒரு மனிதன் தன் அநுபவத்
திரட்சியை,
ஆற்றலை இந்தச் சமூகத்துக்குக் கையளிக்கிறானே
அதுதான் மனித
வாழ்விலேயே உயர்வானது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது மூதாதையர் தந்த
அறிவையும், அநுபவத் திரட்சியையும்
ஒவ்வொருவரும் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
ஆகையால் இந்தப் பங்களிப்புகளிலெல்லாம்
எமக்கு ஈடுபாடு
இல்லையென்று யாரும் சும்மா இருந்துவிட முடியாது.
நாம் நிச்சியம் எமது
சமூகத்திற்கு எம் ஆற்றலையும், அறிவையும்
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்". -புதியதோர் உலகத்தில் கோவிந்தன். பக்கம்:61.
ப. வி. ஸ்ரீரங்கன்
10. 11. 2007
கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை "நமது அரசியல்" இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது. இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம். எனினும், இன்றைய புலிகளின் போராட்டச் செல் நெறி மீளவும் நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு பெரியவொரு நிகழ்வு இன்றைய போராட்ட வாழ்வில் நிகழ்கிறது. சர்வதேச நலன்களாலும், தென்கிழக்காசியாவின் கேந்திர அரசியல் போக்குகளாலும் இலங்கையின் மக்கள் வேட்டைக்குட்பட்டு வருகின்ற இன்றையபொழுதில் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவர் படுகொலை செய்யப்படுகிறார். இதுவொரு திட்டமிட்ட சதியாகவே புலப்படுகிறது. இலங்கைவாழ் மக்களின் இனவேறுபாடுகளைக் களைந்து ஒரு இன ஐக்கியம் உருவாவதற்கும் அதனூடாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைப் புரட்சிகரமான வகைகளில் தீர்ப்பதற்கான போராட்டப் பாதைக்கு இத்தகைய கொலைகள் பெரும் பின்னடைவைத் தருகிறது. இதனால் இனங்களுக்கிடையில் பரஸ்பரம் அவநம்பிக்கைகளும், இனக்குரோதமும் வளர்க்கப்பட்டு, இனவாதிகளின் அரசியலுக்கு மீளவும் எண்ணையூற்றப்படுகிறது. மக்கள் ஆதரவையிழந்துவந்த புலிகளின் போராட்டத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சும் உந்துதலைத் தமிழ்ச் செல்வனின் மரணமிட்டுச் செல்கிறது. இதை எதிர்பார்த்து அரசியல் செய்யும் வலதுசாரிக்கட்சிகளின் இன்றைய எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்ட இந்தக் கொலையில் எவரது பங்கு உண்டென்பதைவிட நாம் மேலே செல்வோம்.
இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது. இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில் (கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும். இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும். இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும். இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும். இத்தகைய தரணத்தில் நாம் சந்த்திக்கும் இழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்யூனிச அறிக்கையின் ஆரம்ப வாசகம். இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள். நாம் ஒரே மொழியைப்பேசி, ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல. நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு! அடக்குபவர்களாகவும், அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம். இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது. அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.
பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க, பால்-நிறபேதங்களும், சாதிய-இன, மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல. இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது. ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும், அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமையையும் இதற்குள் திணிக்கிறது. இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும், அவலமும் தோற்றம் பெறுகிறது. இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை கரும்புலிகள்-தமிழ்ச் செல்வன்கள் உயிரைப் பறித்தாலும் தமது அரசியல் மற்றும் ஆளும் தளத்தை இழக்காதிருப்பதற்காக இன்னும் ஆயிரம் கொலைகளை இனம் மொழி தாண்டிச் செய்து முடிக்கும்.
இது இனவாதத்தைப் புதுமுறைமைகளில் பேசுவதற்குத் தயாராகிறது. இலங்கை அரசாகவிருந்தாலென்ன அல்லப் புலிகளாக இருந்தாலென்ன புதுப்புது அர்த்தத்தோடு "தேசிய மற்றும் விதேசிய"பண்புகளைக் கொட்டியபடி தத்தமது இருப்பைக் காத்து வரும்பொழுது, இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு" அறிவுத்தளத்தைக் காவுகொள்ளத் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. அது, தமிழர் பக்கம் தமிழீழம் என்றும், சிங்களவர் பக்கம் பெளத்த இராச்சியச் ஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் கோசமிடுகிறது. இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது. இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது. சமூகத்தின் மிக முக்கியமான மனிதவளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் துகள்களாகவே இருக்கிறது! இந்த ஸ்த்தானத்தை அது எந்நேரமும் வைத்திருக்க விரும்புகிறது, அதற்காகத் தன்னைத் தியாகத்திலும், வீரத்திலும் ஒரு அவதாரமாக்க முனைந்து கொண்டே தனக்கு நிகரான வேறொரு ஆற்றலில்லையென்று "ஒளிவட்டம்"கட்டிக் கொண்டிருக்கிறது. இதை வாழ்வுக்கான வியூகமாக அது புரிந்து வைத்திருப்பதால் இதைச் சுற்றிய எண்ணவோட்டத்தை மிகையான அளவுகளில் சமூகத்தில் திணிக்கிறது.
இங்கே மொழிக்காக, இனத்துக்காக, தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது. இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும், மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை. இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை. வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் "தேசிய" அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது. இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் "வடிவ மனிதர்களாகி" பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக (ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு "பொற்காலக் கற்பனைகளைத்"தயா¡ப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின் ( தேசம், தேசியம், இனம், பண்பாடு, மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது. உண்மையான "இருப்பானது"நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே, இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு, பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் "வியாபித்த"மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது "வர்க்க"அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.
இங்கே தாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது. இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது. இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே. மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது. இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது. இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது. இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை, தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது. இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக "மக்கள் விரோதமாக" இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம" மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
இங்கே பொய்மையையும், கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை, மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன. இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்" மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும் ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத ்"திருத்திய" நேர்த்தியான-அவசியமான கொலையென்றாரானால், அவர் கடைந்தெடுத்த "கொலைக் கிரிமனல்" என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய "அரசியல்-பொருளியல்" வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல. திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை- தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய "அலகுகளை" உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை. இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது. மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை. இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது. இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது. இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம். இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட "எதிர்பார்ப்புகளால்"ஆனதாகா! இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைப்புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.
இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும் கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் , புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது. இங்கு"விரோதி, துரோகி" என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை. இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்."தியாகி துரோகி" என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாக விதைத்துவரும் தமிழக் குறுந்தேசியமானது தனது இருப்பை இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.
இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது. ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.அவ்வாறு நிகழும் தரணங்களில்தாம் தத்தமது தனிநபர் வாதத்துக்கும் அதீத காழ்ப்புணர்ச்சியை முன்தள்ளி, ஒழுக்கம்-நாணயம் குறித்தும் சமூகத்தை இன்னும் கீழ் நிலைக்குள் தள்ளி அதிகாரத்தோடு கைகுலுக்கிறது(இது மிக மோசமான சேறடிப்பைத் தனது தோழமைக்கு எதிராகவே செய்து முடிக்கிறது.இந்தப் போக்கை ஈழத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் தற்போது நாம் பார்த்து வரலாம்).இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி "ஏதோ எப்படியோ"சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும், இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு எமது நம்பிக்கைகளை மானுடநேசிப்பின்பால் நோக்கித்தள்ளவேண்டியுள்ளது.
அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும், அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது. இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.
இன்றைய நிலையில் எவரெவர் "புரட்சிக் கட்சி"க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே. தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு, அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை. அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது. இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை. இங்கேதாம்"மனமுடக்கங்களும், சிதைவுகளும்" தனிநபர்வாதமாக மாறுகிறது. இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம். எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள், போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை. நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள். சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றதக்கப் போராட்டச் செல் நெறியோடு போராடுகின்றன. இங்கே நண்பன் யார், எதிரி யார்? என்ற மதிப்பீடுகளின்றி தம்மை எதிர்ப்பவர்கள்-விமர்சிப்பவர்கள் அனைவருமே எதிரிகளென்னும் இந்தப் பார்வைக்குத் தமிழ் பேசும் மக்களின் உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியம்-இந்தியத் தரகு முதலாளியம் போன்றவைகள் எப்போதுமே நட்பு சக்திகளாகின்றன. இதனால் தமிழ் பேசும் மக்களின் உண்மையான விடுதலை அந்நியப் பேரங்களுக்கான வியூகத்துக்குள் வீழ்ந்து தமிழ்வீரப் புதல்வர்களின் தியாத்தைத் தனதாக்கிக்கொள்கிறது.
இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின் நலனும் ஒன்றல்ல என்பதே.
இயக்க நலன் தவிர்க்க முடியாது தமிழ்பேசும் மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன் இயக்க நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல. அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு. எனினும் அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும், இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும், இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.
புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது. அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது. அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று. இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது. அவர்களுக்குச் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க முடியவில்லை. உணர்ச்சிவகை அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது! இதனால் புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம், அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள், போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது. தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள். இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி , சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.
எங்களுடைய போராட்ட ஆரம்பமானது எவ்வளவுதாம் புரட்சி பேசினாலும் அது உண்மையில் ஒரு புரட்சிகரக் கட்சியின் வழியில் நகர்த்தப்பட்ட முன்னெடுப்புகளில்லை!இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது எமது சமுதாயத்தின்முன் விரிந்து கிடக்கும் குட்டிமுதலாளியப் பண்பாகும். வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படையாக இருப்பதால் எந்தெந்த வர்க்கம் தத்தமது நலனுக்கான முன்னெடுப்பில் கட்சியில் ஆதிக்கம் பெற்றுக் கொள்கிறதோ அந்த வர்க்கமே கட்சியின் முன் நகர்வை-போராட்டச் செல் நெறியை, யுத்த தந்திரோபத்தைச் செய்கிறது-அந்த வர்க்கத்தின் முரண்பாடுகளேயேதாம் அது கையாள முனைகிறது. எமது தேசிய விடுதலையமைப்புகள் முன்வைத்த கோசங்கள் பல இந்த வகையிலே எழுந்தவை. இனவொதுக்கல், தரப்படுத்தல், தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்துக்காக குரல் கொடுத்த கட்சிகள் தமது சமுதாயத்துக்குள் உழைப்பவர்களை நாயிலும் கேவலமாகப்"பறையன், நளவன், பள்ளன், அம்பட்டன், வண்ணான்"என்று சாதி சொல்லி அடக்கியபடி இவற்றைக் கேட்டுக் கொண்டது. சிங்கள அரசிடம் தமிழருக்கான தனி மண்ணைக் கேட்ட அதே அரசியல் தனக்குள் ஒடுக்கப்படும் தலித்துக்களை எந்தவுரிமையுமின்றி வாழ நிர்ப்பந்தித்து. இத்தகைய வரலாற்றுத் தவறுகளிலிருந்துதாம் போராட்ட இயக்கங்கள் தம்மைத் தகவமைத்தன. அவை தமது படையணிக்கு அடியாளகமட்டுமே தலித்துக்களை இணைத்தார்களேயொழிய புரட்சிகரக் கட்சியைக்கட்டிப் போராடுவதற்கல்ல. இத்தகைய குட்டி முதலாளியப் பண்பானது இயக்கங்களுக்குள் போட்டியை வெளியிலிருந்து திணிப்பதற்குமுன் உள்ளேயே முகிழ்க்கும் கருவூலங்களை இந்த நடுத்தரவர்க்க மேல் சாதிய ஆதிக்கக் கல்வி செய்து முடித்தது. இந்தத் தரணங்களின் யாழ்ப்பாண வேளாள ஆதிக்க மனதானது அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இனம் கண்டு அழித்தொழித்தது. இதுவே உட்கட்சிக் கொலைகளுக்கு ஆரம்பமான கருத்தியலை போராட்ட இயக்கங்களுக்கு வழங்கியது. இதன் உச்சத்தை அந்நிய நலன்கள் செய்து முடித்தன!
இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது. தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும, ; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை, சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.
மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டுப் போர் மக்களை அழித்து வருகிறது. சாதாரணமாகப் போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின்பால் கவனஞ் செய்தும் "ஆயுதங்கள்"நம்மைக் கட்டிப் போடுகிறது! மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது. ஈழ இயக்கங்களிள் எந்தப் பக்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது. இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.
யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த மரணவோலமும், பயங்கரவாதமும், காட்டுமிராண்டித்தனமும்-கொலையும், கொள்ளையுமே நமது மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய், ஒரு தலைமுறையே யுத்தத்தில் மூழ்கி முடவர்களாகிப் போனது அங்கத்தில் மட்டுமல்ல அறிலும்தாம். இத்தகையவொரு சமூக இழிநிலையில் அந்தச் சமுதாயத்தின்பால் இன்னமும் நம்பிக்கையோடு அதைக் காலத்துக்கேற்ற முறைமைகளில் மக்களின் நலன்களை முன் நிறுத்துவதற்கான தகமைக்கிட்டுச் செல்லத் தூண்டுவது அவசியமாகும்.
எனவே வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் தவிர்க்க முடியாது அரங்கிற்கு வருகிறது. இங்கே ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளை வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!
தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை, வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும், அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும். இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது. இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம். புலிகளுக்கூடாக விரியும் அல்லது கட்டமைக்கும்"தேசியம்"சாரம்சத்தில் விதேசியம் என்பதைப் புரியம் தரணங்களைப் புரிவதற்குத் தேசியத்தைப் புரட்சிகரமாக நிறுவம் போக்குகளை நாம் உள்வாங்க வேண்டும். அது, ஆளும் வர்க்கங்கள் அடியெடுத்துவரும் பிற்போக்குத் தேசிய வாதமில்லை. இதைத்தாம் லெனின் வார்த்தையில் சொன்னால்:"தேசிய வாதம் என்பது எப்பவும் முதலாளிகளின் கோட்டைக்குள்ளிருந்து வரும். "என்பதாகும். இதை மிக நேர்த்தியாகப் புரிவதற்குத் தேசியம் குறித்து மேலும் புரிவதற்கான சந்தர்ப்பங்களை நாம் தருவோம்.
தொடரும்.
ப. வி. ஸ்ரீரங்கன்
10. 11. 2007
No comments:
Post a Comment