ஓட்டுக் கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் மக்கள் விரோதத் தன்மை அம்பலப்பட்டு நாறிப் போய்விட்ட நிலையில், ""நீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசிப் புகலிடம்; நீதிபதிகள் அனைவரும் நடுநிலையாளர்கள், கறைபடாத புனிதர்கள்'' என்றொரு மாயை சாதாரண மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கக் கூடிய பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்பகளை ""பிரேதப் பரிசோதனை'' செய்து பார்க்கும்பொழுதுதான், அவற்றின் பசுந்தோல் போர்த்திய புலி வேடம் அம்பலத்துக்கு வரும்.
தனது உத்தரவை மீறிவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, ""தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும்'' என இன்று கருணாநிதியை மிரட்டும் உச்சநீதி மன்றம், டிச.6, 1992 அன்று, தனது உத்தரவை மீறி, பா.ஜ.க.வின் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் பாபர் மசூதி இடிப்புக்குத் துணை போனதைக் கண்டு ஆவேசப்படவில்லை. மாறாக, கல்யாண் சிங்குக்கு ஒருநாள் சிறை தண்டனை என்ற அடையாள தண்டனையை இரண்டு வருடம் கழித்துக் (1994ஆம் ஆண்டு) கொடுத்தது. இறுதியில் இந்தத் ""தண்டனை''யும் கூட நீதிமன்றம் முடிவடையும் நேரத்தில் கொடுக்கப்பட்டதால், கல்யாண் சிங் தண்டனையை அனுபவிக்காமலேயே, வெளியே வந்தார்.
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்து மதவெறியர்கள், பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைத்த ராமன் சிலை தொடர்பான வழக்கு, இன்று வரை தீர்ப்புக் கூறப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. அதேசமயம், பாபர் மசூதியை இடித்துவிட்டுச் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள ராமன் கோவிலில் வழிபாட்டு உரிமை கோரி ""விசுவ இந்து பரிசத்'' தொடுத்த வழக்கில், ""ராமர் கோவில் சிலைகளுக்குப் பாதுகாப்பான முறையிலும், பக்தர்கள், யாத்திரிகர்களின் பார்வைக்கு வசதியாகவும் போதிய தூரத்தில் நின்று வழிபட அனுமதிக்க வேண்டும்; கோவிலுக்கப் போடப்பட்டுள்ள துணிக் கூடாரத்தைப் பாதுகாக்கவும், பனி, வெயில், மழைக் காலங்களில் பூசாரிகள் அங்கு தங்கி பூசைகள் நடத்தப் போதுமானவைதானா என்பதைப் பார்த்துத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்'' என அடுக்கடுக்காகக் கட்டளைகள் போட்டு, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கூடாரத்திற்கு, சட்டபூர்வ அந்தஸ்து வழங்கியது, லக்னோ உயர்நீதி மன்றக் கிளை.
மேலும், ""பகவான் ராமன் ஒரு கற்பனைக் கட்டுக்கதை அல்ல; இந்த நாட்டின் தேசிய கலாச்சாரத்திலும் கட்டுமானத்திலும் இடம் பெற்றுள்ள ஒரு எதார்த்தம்; அரசியல் நிர்ணய சட்டத்தின் ஒரு அங்கம் என்று 1949, நவ.26ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய மூலப் பிரதியின் பக்கங்களில் உள்ள சித்திரங்கள் காட்டுகின்றன'' என ராமர் பற்றிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கருத்துக்கு முட்டுக் கொடுத்தது, லக்னோ உயர்நீதி மன்றக் கிளை.
இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு பார்ப்பன நீதிபதிகளுள் ஒருவரான ""தில்ஹரி'' என்பவர், ஏற்கெனவே ""பாபர் மசூதி ராம ஜென்ம பூமி'' வழக்கில் இந்து மதவெறியர்களின் சார்பில் வழக்காடிய வக்கீல் என்பதும்; அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்ற இசுலாமியர்களின் மனு நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். கும்பல் பாபர் மசூதியை இடித்துத் தள்ள சதித் திட்டம் தீட்டியதற்கும், அதற்காகப் பயிற்சி எடுத்ததற்கும், ஏராளமான ஆதாரங்கள் இருக்கும்பொழுது, ""அயோத்தி மசூதி இடிப்புச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியது அல்ல; ராம பக்தர்களான கரசேவகர்களால் தன்னெழுச்சியாக எதிர்பாராத வகையில், நடந்துவிட்டது'' என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்தை பஹ்ரி நடுவர் மன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் மைய அரசால் தடை செய்யப்பட்டிருந்ததை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மசூதி இடிப்பு நாயகனான அத்வானி மீது ஆரம்பத்தில் ""கலவரத்தைத் தூண்டிவிடும்படி பேசினார்'' என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டும்தான் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான், அத்வானி மீது மசூதி இடிப்பு தொடர்பான சதிக் குற்றம் சுமத்தப்பட்டு, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
பின்னர், அலகாபாத் உயர்நீதி மன்ற உத்தரவின்படி, லக்னோ சிறப்பு நீதிமன்றம் அத்வானி மீதான சதிக் குற்றச்சாட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்திய நீதிமன்றங்களின் ""மதச்சார்பின்மை'' மோசடித்தனமானது என்பதை நிரூபிப்பதற்கு, இன்னுமா தீர்ப்புகள் வேண்டும்? ராமன் தொடங்கி பொது சிவில் சட்டம் வரையிலான பிரச்சினைகளில், ஆர்.எஸ்.எஸ்.இன் கருத்து எதுவோ அதுவே "மாட்சிமை தங்கிய' நீதிபதிகளின் கருத்தாகவும் இருக்கிறது.
""நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள முசுலீம் தீவிரவாதிகளைத் தூக்கில் போட வேண்டும்'' எனப் பிரச்சாரம் செய்கிறது, ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டப்பட்ட அப்சலுக்கு எதிராகப் போதிய சாட்சி இல்லாதபோதிலும், சமூகத்தின் பொது மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அந்த காசுமீரி முசுலீமுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது, உச்சநீதி மன்றம்.
""கருணாநிதி, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிவிட்டதாக''க் கூப்பாடு போடும்'' உச்சநீதி மன்ற நீதிபதிகள், ""பாபர் மசூதி வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம்'' என இந்து மதவெறிக் கும்பல் திமிரோடு பேசி வருவதைக் கண்டு கொள்வதே இல்லை.
கோவை குண்டு வெடிப்பிலும், மும்பய்க் குண்டு வெடிப்பிலும் முசுலீம்களைத் தண்டித்து ""நீதி''யை நிலைநாட்டும் நீதிமன்றங்கள், அக்குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான கோவை கலவரத்தையும் மும்பய்க் கலவரத்தையும் நடத்திய இந்து மதவெறியர்கள் மீது விசாரணை நடத்தக் கூட மறுக்கின்றன.
மும்பய் கலவரத்தின் பொழுது, சிவசேனாவின் ""சாம்னா'' பத்திரிகையில் கலவரத்தைத் தூண்டும் வண்ணம் எழுதப்பட்ட தலையங்கங்களை ஆதாரமாகக் காட்டி, பால் தாக்கரேயைத் தண்டிக்கக் கோரி, மகாராஷ்டிரா அரசின் முன்னாள் தலைமைச் செயலர் மும்பய் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்நீதி மன்றமோ, ""இந்துமுசுலீம் உறவு சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதால், இப்போது பழையனவற்றைக் கிளற வேண்டாம்'' எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. பால் தாக்கரேயோ, ""என்னைக் கைது செய்தால் மும்பய் நகரமே மீண்டும் தீப்பற்றி எரியும்'' என நீதிமன்றத்திற்கு எதிராக மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகவும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment