தமிழ் அரங்கம்

Tuesday, December 18, 2007

""போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்!

""போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்!
நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்போம்!''
— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்



ஆகஸ்ட்15; போலி சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஆட்சியாளர்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அதிகார மாற்றம்தான் என்பதை விளக்கியும், அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் துரோகத்தனத்தைத் திரைகிழித்தும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட உழைக்கும் மக்களை அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.


திருச்சியில், இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.8.07 அன்று மாலை திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, இந்தியாவை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் தண்டபாணி தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நாட்டை அடிமைப்படுத்தியுள்ள ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியும், மீண்டும் ஒரு சுதந்திரப் போருக்கு அணிதிரள உழைக்கும் மக்களை அறைகூவியும் முன்னணியாளர்கள் உரையாற்றினர்.


உசிலம்பட்டியில், ஆகஸ்ட் 15 அன்று மாலை முருகன் கோவில் அருகே ""காலனியாதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போரின் வீரமரபைப் பின் தொடர்வோம்! மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போரை முன்னெடுப்போம்!'' என்ற முழக்கத்துடன் இப்பகுதியில் இயங்கும் வி.வி.மு. பொதுக்கட்டம் கலைநிகழ்ச்சியை நடத்தியது. தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் தோழர் நடராஜ், தோழர் நாகராசன், தோழர் மோகன், தோழர் காளியப்பன் ஆகியோர் போலி சுதந்திரத்தைத் திரைகிழித்தும் நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டுள்ள சர்வகட்சி ஆட்சியாளர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தியும் சிறப்புரையாற்றினர்.


இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் குறிப்பாக, ""செட்டிநாட்டு சிதம்பரம், பட்டினிதாண்டா நிரந்தரம்'' என்ற பாடலும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.


நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.

— பு.ஜ. செய்தியாளர்கள்.




சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிராக
ஓசூர் விவசாயிகளின் போராட்டம்!


ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம், பைரமங்கலம், குண்டுமாரனப்பள்ளி, ஒன்னல்வாடி, அஞ்செட்டிப் பள்ளி, சனமாவு, அக்கொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களைப் பறித்து 3640 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் ஜி.எம்.ஆர். குழுமம் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இம்மண்டலத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.


""லிட்டில் இங்கிலாந்து'' என்று வெள்ளைக்காரர்களால் காலனியாட்சிக் காலத்தில் அழைக்கப்பட்ட இப்பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரளவுக்கு செழிப்பான பகுதியாகும். இங்கு பெருமளவில் விளையும் வாழை, முட்டைக்கோஸ், உருளை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சென்னை, பெங்களூர் முதலான பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தகைய வளமான விளைநிலங்களையும் விவசாயிகள் வாழ்வுரிமையையும் பறித்துவிட்டு, இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் துடிக்கிறது தி.மு.க. அரசு.


இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, ஏறத்தாழ ஓராண்டு காலமாக, இப்பகுதியில் இயங்கிவரும் வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளிடம் விழிப்புணர்வூட்டி வந்தன. தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும் இக்கிராமங்களில் வீச்சாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு விவசாயிகளை அணிதிரட்டின. இப்பிரச்சாரத்தால் உந்தப்பட்ட விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கடந்த 17.8.07 அன்று அக்கொண்டப்பள்ளியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் ஒப்புதலின்றி நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என்று வட்டாட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் போராடும் மக்களை சமரசமப்படுத்த முயற்சித்தனர்.


இந்தப் பசப்பல்களை ஏற்க மறுத்த இப்பகுதிவாழ் விவசாயிகள் 23.8.07 அன்று விவசாய நிலங்களை தர மறுப்பதாகவும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும் அறிவித்து ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். விவசாயிகளின் விழிப்புணர்வையும் போராட்டத்தையும் கண்டு அரண்டு போன அதிகார வர்க்கமும் போலீசும்,"தொழில் வளர்ச்சி பெருகும்; 70 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்' என்றெல்லாம் புளுகி எதிர்ப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இவற்றை அம்பலப்படுத்தி முறியடிக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிக்கவும் வி.வி.மு.வினர் விவசாயிகளை அணிதிரட்டி வருகின்றனர்.


— விவசாயிகள்
விடுதலை
முன்னணி,

கிருஷ்ணகிரி
மாவட்டம்.



ஒரு கிலோ அரிசியும் இரண்டு ரூபாய்; சிறுநீர் கழிக்கவும் இரண்டு ரூபாய்!
— கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


வேலூர் நகரின் மத்திய பேருந்து நிலையம் ""எக்ஸ்னோரா'' என்ற தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைத்தால் நிர்வாகம், பராமரிப்பு, சேவை என அனைத்துமே மேம்பட்டு சிறப்படையும் என்று கருதும் மேதாவிகள் இப்பேருந்து நிலையத்துக்கு வந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.


இப்பேருந்து நிலையத்தினுள்ளே வந்து செல்ல சாலை வசதியில்லை. பயணிகளுக்கு நிழற்குடை இல்லை. ஆட்டோ நிறுத்தம்கூட இல்லாததால் மூட்டை முடிச்சுகளோடு பயணிகள் அவதிப்படுகின்றனர். கிட்ட நெருங்கவே முடியாதபடி முடைநாற்றமடிக்கின்றன கழிப்பறைகள்; அவற்றில் சிறுநீர் கழிக்க கட்டணமாக இரண்டு ரூபாயை வழிப்பறி செய்கிறது எக்ஸ்னோரா.


பேருந்து நிலையத்தின் யோக்கியதை இப்படியிருக்க, வேலூர் நகரமோ சேறும் சகதியுமான சாலைகள், கழிவுநீர் தேங்கி பன்றிகள் உருளும் சாக்கடைகள், அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் என குடலைப் புரட்டும் நாற்றத்தால் திணறுகிறது. பெரும் ஒப்பந்தக்காரர்களும் எக்ஸ்னோரா போன்ற "தொண்டு' நிறுவனங்களும் பகற்கொள்ளையடிக்க, நகராட்சியோ இக்கொள்ளையர்களுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.


மக்களின் அடிப்படை வசதிகளை அறவே புறக்கணித்துவிட்டு, அவற்றைத் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிட்டுள்ள நகராட்சியை அம்பலப்படுத்தியும், பேருந்து நிலையத்தை எக்ஸ்னோராவிடமிருந்து பிடுங்குவது உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகம் முன்பாக 20.8.07 அன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ம.க.இ.க. நடத்தியது. தனியார்மயத்தின் யோக்கியதையை நாறடித்த இந்த ஆர்ப்பாட்டம், வேலூர் நகர மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.

1 comment:

ரவி said...

Vazthukkal !!!!!!!!!!!!! Sirappaaga Irukkirathu Katturaigal....!!!!!!