தமிழ் அரங்கம்

Wednesday, January 30, 2008

தமிழ் ஒரு நீச மொழி பூசைக்குகந்ததல்ல

நியூஸ்கேப் என்ற புதியதொரு செய்திதொகுப்பு தளத்தில் வந்துள்ள கட்டுரை கீழே உள்ளது. செய்திவிமர்சனம் என்ற புதிய செய்திவிமர்சனம் தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகளை வெறுமே வறட்டுத்தனமாக படிக்காமல் பல்வெறு பிற செய்திகளுடன் தொடர்பு படுத்தி தொகுப்பான புரிதலுக்கு வருவதற்க்கு இந்த தளங்கள் உதவும்.

கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!

பார்ப்பன இன வெறி தட்டி போர்டு

மிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.

எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.

தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.

மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.


செய்திரசம்.

தட்டி போர்டில் உள்ளது:


சைவப்பெரியோர்களே!

சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.

சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.

சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட "சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?" என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.

இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி

ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி


___________
நன்றி அசுரன்






No comments: