தமிழ் அரங்கம்

Saturday, February 2, 2008

மார்க்சியம் சந்தித்து வரும் சவால்கள்

அகிலன்
01.02.2008

லகில் பல தத்துவங்களும் தத்துவக் கோட்பாடுகளும் தோன்றியுள்ளன. புத்தம் முதல் பின் நவீனத்துவம் வரை என பெரும் பட்டியலே இடலாம். இவை அனைத்தும் மனித சமுகத்தில் புராண இதிகாசங்களாக, பக்தி மார்க்கமாக போதனைகளாக, சமூக சீர்திருத்தக் கருத்துக்களாக, அரசியல் பொருளாதார கலாச்சார கோட்பாடுகளாக பிரதிபலிக்கின்றன.

மனித சமூகத்தில் இத்தத்துவ ஓட்டங்களின் மத்தியில் தான் மார்க்சிச தத்துவமும் பிறந்தது. மார்க்சிசத்திற்கு கிட்டத்தட்ட 160 வயதாகின்றது. கார்ல் மார்க்ஸ் இத்தத்துவத்தைப் படைப்பதற்கு பெரும் கஸ்டங்களின் மத்தியில், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். பஞ்சம் பசி பட்டினிக்கு மத்தியில் வாழ்ந்தார். பல நாட்கள் உணவின்றி வெறும் உருளைக்கிழங்கோடு அவரது குடும்பம் வாழ்ந்தது. பிறந்த நாட்டில் வாழ முடியாது, அயல் நாடுகளில் நாடோடியாய் திரிந்தார். கஸ்டம் வறுமை நோய் காரணமாக, அவருடைய பிள்னைகளில் சிலர் சிறுவயதிலேயே காலமானார்கள். அவருடைய ஓர் பிள்ளை இறந்த பொழுது அடக்கம் செய்வதற்கு, பிரேதப்பெட்டி கூட வாங்க முடியவில்லை. பலநாட்கள் அப்பிள்ளை ஓர் முலையில் பிணமாகவே இருந்தது. மொத்தத்தில் அவரும் அவருடைய குடும்பமும், வாழ்க்கையின் விழிம்பு நிலைக்கு கீழ் தள்ளப்பட்டனர். இப்படிப்பட்ட அவல வாழ்வின் மத்தியிலேயே, மார்க்ஸ் மார்க்சிச தத்துவத்தைப் படைத்தார்.

1848ல் மார்க்சும் ஏங்கெல்சும் மார்க்சிச தத்துவத்தைப் உலகிற்குப் பிரகடனப்படுத்திய பொழுது, உலகப் பிற்போக்கு வாதிகளும் முதலாளித்துவ சக்திகளும் ஐரோப்பாவில் பூதம் ஒன்று புறப்பட்டுள்ளது என ஓலமிட்டனர். அஞ்சி நடுங்கினர்.

உண்மையில் மார்க்சியத்தின் முக்கிய சாரம் தான் என்ன? மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்றார். மனிதன் தோன்றி சமுதாயமாகி இன்றைய சமகாலம் வரை, பல சமுதாய அமைப்புக்கள் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக கடந்து வந்திருக்கின்றது என்றார். புராதன சமதர்மம், ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ விவசாயிகள், முதலாளி தொழிலாளி என சமூகம் கடந்து வந்திருக்கின்றது. இதுவரை தொடராக இருந்து வந்த இந்த சமுதாய அமைப்புக்களில், முதலாளித்துவ சமுதாயத்தில் தலை கீழான மாபெரும் பாய்ச்சல் ஓன்று நிகழுமென்றார். கடந்து வந்த சமுதாயங்களில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அடங்கி ஒடுங்கி ஆளும் வர்க்கங்கள் கொடுத்தவை சலுகையாகவும் கூலியாகவும் இருந்தது. இதற்கு மாறாக முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கமும், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும், நடைமுறையில் உள்ள அரசு இயந்திரத்தை புரட்சியின் முலம் உடைத்தெறிந்து, அதனிடத்தில தமது சொந்த அரசுகளை நிறுவுவர் என்றார்.

இதுவே பாரிஸ் கம்யூன் புரட்சியாக, ருசியா சீனப் புரட்சியாகியது. மேலும் பல நாடுகளின் புரட்சிகளாக மாறியது. மனித சமூகத்தை சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பகுத்தாய்ந்ததன் விளைவாகவே, மார்க்ஸ் இந்த முடிவிற்கு வந்தார். இதனாலேயே இத் தத்துவம் இன்றும் உயிரோட்டமுள்ள, புரட்சிகரத் தத்துவமாக விளங்குகின்றது.

காலத்திற்கு காலம் மார்க்சிச லெனினிச மாவோவாதிகளால் புடம் போடப்பட்டு, உலக நாடுகள் பலவற்றில் அந்நாடுகளின் நிலைமைகளுக்கேற்ப பிரயோகிக்கப்பட்டு, அது நடைமுறையில் வெற்றியும் கண்டு வந்தது.

இருந்தபொழுதிலும் மார்க்சிச தத்துவம் காலத்திற்கு காலம் பல சவால்களையும் சந்தித்து, தத்துவப் போரின் மூலம் முன்னேறி வந்துள்ளது. இப்படி திரொட்சியத்திற்கு எதிரான தத்துவப் போரையே எதிர்கொண்டது.

திரொட்சியத் தத்துவத்தின் சாரம் நிரந்தப் புரட்சியும், தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை உருவாக்க முடியாது என்பதுமேயாகும். தொழிலாளி வர்க்கம் மட்டுமே உலகின் புரட்சிகரமான வர்க்கம் என்றது. அவ் வர்க்கம் தனது முழு ஆட்சியை நிறுவும்வரை, உலக அளவில் புரட்சி நிரந்தரமாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் என்றார். இதுவே திரொட்சியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடாகும்.

இதனால் திரொட்சிக்கு தொழிலாளி வர்க்கத்தை தவிர ஏனைய வர்க்கங்களின் புரட்சிகர பாத்திரத்தை மறுத்தார். விவசாயி வர்க்கம் புரட்சிக்கு தகுதியற்ற வர்க்கம் என்றார். ருசியப்புரட்சி நடைபெற்ற போது ருசியாவின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் விவசாயிகள் ஆவர். தொழிலாளி வர்க்கம் அதிக எண்ணிக்கையில் இல்லை. இக்காலகட்டத்தில் தொழிலாளர் விவசாயிகளை இணைத்தே ருசியப் புரட்சியை லெனின் நடத்தினார்.

அப்போது இந்நடைமுறையை திரொட்ஸ்கி ஏற்கவேயில்லை. தொழிலாளி வர்க்கம் தற்காலிகமாக விவசாயி வர்க்கத்துடன் இணைந்துள்ளது என்றார். விரைவில் தொழிலாளி வர்க்கம் விவசாயிகளிடமிருந்து பிரிந்து, தனித்து தமது புரட்சியினை நடத்துவர் என்றார். தொழிலாளி வர்க்கம் ருசியாவில் மட்டுமல்ல உலகம் பூராவும் நிரந்தரமாகப் போராடிக் கொண்டே இருப்பர் எனறார்.

இத்தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையானது சீனப்புரட்சியைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிசத்திற்கு எதிரான ஸ்டாலின் அவர்களின் ஐக்கிய முன்னணிப் போராட்ட முறையையும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காலகட்டத்தில் ஆசிய நாடுகளில் சுதந்திரத்திற்கான போராட்டங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய முதலாளித்துவ சக்திகளோடு ஏற்படுத்திய ஐக்கிய முன்னணியிலான போராட்டங்களையும் ஆதரிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக திரொட்ஸ்கியத்தை விமர்சனக் கண்கொண்டு பார்ப்போமாகில், அதன் நடைமுறை சமகால புரட்சிக்கு சாத்தியமற்ற ஒரு கோட்பாடு என்ற முடிவிற்கே வரலாம். இதனாலேயே ஸ்டாலினோடு முரண்பட்ட நிலைக்கு சென்று, நாட்டைவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது.

இதையடுத்து மார்க்சிய லெனினிசவாதிகள் எதிர் கொண்ட தத்துவப் போராட்டம் திரிபுவாதத்திற்கு எதிரானதாகும். சோவியத்யூனியனில் ஸ்டாலினின் மறைவோடு குருஷ்சேவின் தலைமை பதவிக்கு வந்தது. வந்தவுடனேயே ருசியப் புரட்சிக்குப் பின் லெனின் ஸ்டாலின் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட, சோசலிச பொருளாதாரம் அரசியல் நடைமுறைகள் அனைத்தும் தலைகீழாக திரித்து புரட்டப்பட்டன. அத்தோடு குருச்சேவின் தலைமை சமுதாய மாற்றம் பற்றிய புதிய கோட்பாடாக, ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகஜீவனம் எனப் பிரகடனப்படுத்தினர். சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஆயுதப் போரின் மூலம் வர்க்கப் புரட்சியை நடத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் தேவை இல்லை என்றார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதன் மூலம், சோசலிச சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார். இதையே வாக்கப் போராட்டமற்ற, சமாதான சகஜீவனக் கோட்பாடு என வரையறுத்தார்.

இக்கோட்பாடு சம்பந்தமாக சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் மாபெரும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. இக்காலகட்டத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியும், மாவோவும், இத் தத்துவம் மார்க்சிச லெனினிசத்தையும், தொழிலாளி வர்க்கப் புரட்சியையும் சிதைக்கும் திரிபுவாதத் தத்துவம் என அம்பலப்படுத்தினார். இத்தத்துவப் போரின் ஊடாக சர்வதேச கம்யூனினிஸ்ட் இயக்கம் பிளவுபட்டது. வர்க்கப் போராட்டத்தை மறுத்த திரிபுவாதமும், வர்க்க போராட்டத்தைக் கோரிய மார்க்சிச லெனியவாதியமாகவும் பிளவுபட்டது.

இத் தத்துவம் முதலாளித்துவத்தை மீட்டது. சோவியத் யூனியன் பல துண்டாக உடைந்தது. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்நாடுகளின் முதலாளித்துவ சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு சீரழிவான அரசியல் நடத்துகின்றனர். இப்போக்குகளால் உலகளாவிய ரீதியில் உண்மையான மார்க்சிச லெனினிச வாதிகள் மத்தியிலும், புரட்சிகர இயக்கங்கள் மத்தியிலும் ஓர் தேக்க நிலை உருவாகியது.

இந்நிலை ஏற்பட்டதற்கு, புரட்சிக்கு பிந்திய சமுதாயங்களில் ஏற்பட்ட திரிபுவாதமும், அதைத் தொடர்ந்த முதலாளித்துவ மீட்சிகளுமே முக்கிய காரணமாகும். அத்தோடு ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைளும் இதற்கு துணையாக இருந்தன.

19ம் நுற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, சர்வதேச ரீதியாக தொழிலாளி வாக்கப் புரட்சிகளை உணர்வு பெற்ற பாட்டாளி வாக்கம் நடத்துகின்றது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கமும், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும், தத்தமது நாடுகளில் தமது சொந்த அரசுகளை நிறுவமுனைகின்றன. இதைக் கண்ணுற்ற உலக முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் பயப்பீதி அடைந்துள்ளதோடு, இதை இல்லாமல் செய்ய தங்களாலான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் முதலில் இவர்கள் மத்தியில் சர்வதேச ஒற்றுமையும், இதன் ஊடே பல மாற்றங்கள் நடந்தேறியதையும் நாம் கண்டாக வேண்டும்.

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக ஓழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவம் என்ற பண்பு மாற்றம் நடந்தேறியுள்ளது. உலகமயமாதல் என்ற பொருளியல் அமைப்பின மூலம், மனித வாழ்வின் சகல கூறுகளும் அதன் தேவைக்கேற்ற விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தொழில் நுட்பப் பகிர்வு, உலக சந்தை, ராணுவக் கூட்டு போன்றவற்றின் மூலமும் சாத்தியமாகியுள்ளது. மனிதன் மிக ஆனந்தமாக வாழ்கின்றான் என்ற மாயையும், அதற்கேற்ற வகையில் கருத்தியல் நடவடிக்கைகளையும் விளம்பரங்களையும் மேற்கொண்டுள்ளது. இன்றைய நவீன தொழில் நுட்ப யுகத்தில், எந்த பரம ஏழையும் கடைக்கு சென்றால், வீட்டிற்கு சாப்பாட்டுப பொருட்கள் வாங்குவதை விட கைத் தொலைபேசி வாங்கினால் என்ன என்று எண்ணும் மனநிலைக்கு விளம்பரம் மனித மூளையை ஆக்கிரமித்துள்ளது. இந்த கருத்தியலுக்கு அவனை உலகமயமாதல் கொண்டு செல்லுகின்றது. இக்கருத்தியல், திட்டமிட்ட பலமான மூளைச்சலவை முறைகளையே உற்பத்தியாக்குகின்றது. இது இன்றைய சமூக அமைப்பின் சகல அம்சங்களிலும் ஊடுருவிவிட்டது.

நவீன முதலாளித்துவம் முன்போல் இல்லாது பெரும் கருத்தியல் தன்மை கொண்டதாக வளர்ந்துள்ளது. நடைமுறையில் முன்பு தனி முதலாளிகள் இருந்த இடத்தில், இன்று கம்பனிகள் - கார்ப்பரேசன்கள் இன்னும் பல நவீன கூட்டு நிறுவனங்கள், கூட்டு தொழிற்சாலைகள் உருவெடுத்துள்ளன. நவீன இயந்திர மயமாக்கம் தொழிலாளி வர்க்கத்தை உடல் உழைப்பில் இருந்து அந்நியமாக்கியுள்ளது.

மொத்தத்தில் இன்றைய உற்பத்தி நுகர்வுப் பொருள் கலாச்சாரம். அதன் ஊடாக விளம்பரங்கள், சினிமா முதல் கணனி இயந்திரம் வரை சகல ஊடகங்களிலும் உடுருவியுள்ளது. இது போராடும் இளம் சந்ததியின் கலகக்குரலை, புரட்சிகர போராட்ட உணர்வுகளை மழுங்கடித்து திசைதிருப்புகின்றது. உலகில் புரட்சியும் சமுதாய மாற்றமும் நடைபெறாமல் தடுக்க, முதலாளித்துவம் கண்டுபிடித்துள்ள நவீன மருந்துகள் இதைப்போல் பலவுள்ளன.

சமகால உலகில் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் உலகமயமாதல் ஏன்ற பொருளியல் நடைமுறை மூலம் எவ்வளவு தான் மூளைச்சலவை செய்கின்ற வித்தைகளில் ஈடுபட்டாலும், இவை தற்காலிகமானதே.

இன்று உலகளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களின் அதிவிரைவான விலையேற்றம், வேலையை இழத்தல், வேலையில்லாத் திண்டாட்டம் உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்கள், பணவீக்கம், பங்குச்சந்தை நெருக்கடிகள் போன்றவற்றால், சுரண்டல் அடக்குமுறை வன்முறை பன்மடங்காகியுள்ளது. இவற்றை முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தவோ, இதற்கு தீர்வு காணவே முடியாது திணறுகின்றது.

எங்கெங்கு சுரண்டல் அடக்குமுறை உண்டோ, அங்கு வர்க்கப் போராட்டம் உண்டு. வர்க்கப் போராட்டம் உள்ளவரை, மார்க்சியசத்தின் தேவை இருந்தே தீரும்.


No comments: