தமிழ் அரங்கம்

Friday, February 29, 2008

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

பி.இரயாகரன்
23.09.2007

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,



தனது வானொலிப் பேட்டி ஒன்றில் 'தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் - தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?" என்று புலம்பியுள்ளார். புலிகள் சந்திக்கும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீளும் நப்பாசை, இதில் பிரதிபலிக்கின்றது. இதனால் அனைத்து புலி ஊடகங்களும், இதனை முதன்மை கொடுத்து பிரசுரித்துள்ளனர்.

ஆனால் நிலைமை என்ன? மக்களுக்கு எதிரானவர்களை, மக்களே தோற்கடிக்கின்றனர். இதுதான் நடக்கின்றது. இதனைக் கூட புலிகளால் உணர முடியாதளவுக்கு, புலியிசம் பிரபானிசமாகி எங்கும் எதிலும் புளுக்கின்றது.

இப்படி புலியிசம் தனக்குள்ளாகவே, அழுகி நாறுகின்றது. மறுபக்கத்தில் மக்களே தமது சொந்த வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கின்றார்கள். இந்த வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிணநாற்றத்துடன் கூடிய சொந்த மரணத்தை கண்டு, புலிகள் உளறத் தொடங்குகின்றனர். தனது புலியிசத்தை தாமே வலிந்து நடுச் சந்தியில் நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க அலம்புகின்றனர்.

புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய இந்த புலியிச நெருக்கடிகளை களைவதற்கு, புலியிசம் முனையவில்லை. மாறாக அதை பாதுகாக்க, புறநிலை மாற்றத்தைப் பற்றி கனவு காண்கின்றனர். தமது எதிர்கால மரணத்தை, புறநிலை மாற்றம் தடுக்கும் என்ற சுயநம்பிககையை கனவாக காண்கின்றனர். அதை நிகழ்காலத்தில் சொல்லி, ஒப்பாரியாகவே புலம்புகின்றனர்.

புலிகள் தொடர்ச்சியாக சந்திக்கின்ற அரசியல் இராணுவ நெருக்கடிகள், அகநிலை சார்ந்ததே ஒழிய புறநிலை சார்ந்ததல்ல. அகநிலையில் மாற்றமின்றி, புற நிலையில் எந்த மாற்றமும் நிகழாது. இந்த அரசியல் உண்மையை மறுக்கும் புலி யோகி, புறநிலை மீது அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஒடக் கோருகின்றார். அக நிலையை பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை தான், இதில் உள்ள வேடிக்கை. இப்படி வித்தை காட்டி, முக்கி முனங்கியாவது ஈன வேண்டும் என்கின்றார். தாய் மரணித்தாலும், முண்டத்தை ஈனுவது முக்கியம் என்கின்றார்.

போராட்டத்தின் பெயரில் ஆயிரம் ஆயிரம் மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு, புலியிசத்தை அனைத்தையும் தூக்கிவைத்து வேடிக்கை காட்டமுனைகின்றனர். பாவம் யோகி, தானே தனக்கு ஊதி, தானே ஆடும் நம்பிக்கை. அதை அவர் கூறும் விதம் தான் நகைச்சுவையானது. 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்கின்றார். அனைத்தையும் தலைவரின் மீது பொறுப்பாய்ப் போட்டுவிட்டு, மறுபடியும் தப்பி ஒடிவிடுகின்றார். ஒரு அரசியல் வழி, அரசியல் நம்பிக்கை என்று எதையும் முன்வைத்து, மக்களை அகவழி சார்ந்து வழிகாட்ட முடிவதில்லை.

சரி 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்று கூறும் இந்த யோகி, கடந்த காலத்தில் எப்படி புலிகளில் இருந்து காணமல் போனார்? அன்று அவரை வழிநடத்திய தலைவர் மாத்தையாவுக்கு அரசியல் எடுபிடியாகி திரிந்த, அந்த அன்றைய நம்பிக்கைகள் என்னவாயிற்று! மாத்தையாவின் கால்களைச் சுற்றியதால், புலிகளின் வதை முகாம்களைத் தரிசித்து, அதைத் தாண்டி புனர்ஜென்மம் பெற்று வந்த வேகத்தில் புலம்ப வைக்கின்றது.

எந்த நம்பிக்கையும், எந்த முன் முயற்சியும், புலிகளின் உள்ளான ஒரேயொரு அகமாற்றத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு மட்டும் தான் சாத்தியம். ஆனால் அது புலியிச வரலாற்றில் இனியும் எப்போதும் நிகழாது. புலியிசம் என்பது மக்களுக்கு எதிராக மட்டும் தான், நிலைபெற்று நீடிக்க முடியும் என்பதால், மாற்றம் என்பது இனியும் நிகழமுடியாது. புலியிசத்தின் முடிவுதான் அதன் வரலாறாக மாறும்.

இந்த நிலையில் எந்த மாற்றமும் புறத்தில் நிகழ்ந்தாலும், புற மாற்றங்கள் புலியிசத்துக்கு எதிரானதாகவே செயல்படுமே ஒழிய, சார்பாக மாறாது. சார்பாக மாற்ற, புலிகளுக்கும் மக்களுக்கும் எந்த அரசியல் பொருளாதார உறவும் கிடையாது. புலிகள் தமது எதிரியாக, மக்களை நிறுத்தி வைத்து, அதையே அரசியல் செய்வது தான் புலியிசமாகும்.

இந்த நிலையில் யோகி 'புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது என்னவெனில், நாங்கள் உதவுவோம், தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது. நாங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும். இந்நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களுக்குரிய பணி என்னவென்று சொன்னால் அங்கு போராடுகின்ற நோக்கம் இதுதான். எங்களுடைய குறிக்கோளில் தடம்புரண்டதில்லை." மக்களையே வெறுக்கின்ற, சதா வெறுப்பேற்றுகின்ற புலியிச குறிக்கோள் தான் என்ன? மக்களின் சமூக பொருளாதார வாழ்வாதாரங்களுக்கும், புலிகளுக்கும் என்ன அரசியல் பொருளாதார உறவு உண்டு. மக்களின் குறிக்கோள் வேறு. புலியின் குறிக்கோள் வேறு. இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டமுடியாதவை.

இப்படி தடம் புரண்டு வெகுதூரம் சென்றுவிட்ட வண்டியை, மீளவும் தண்டவாளத்தில் ஏற்றமுடியாது. ஏன், அதை மீள ஏற்றவே புலிகள் அனுமதிப்பதில்லை என்பதில் உள்ள குறிக்கோளில் மட்டும், அவர்கள் தடம் புரளாது ஒட முனைகின்றனர். இது அவர்களின் சொந்த அழிவு வரை என்பதில், அவர்கள் தடம் புரண்டது கிடையாது.

'தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது." என்கின்றனர். இப்படி மக்களா சொன்னார்கள். இல்லை. நீங்கள் தான் தோற்றவனுக்கு உதவக் கூடாது, என்று சொல்லி வந்தீர்கள். ஏன் இதை இப்போது மறந்து போனீர்கள்? தோற்றவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை என்று கூறியவர்கள் யார்? நீங்கள் தான். கிட்லர் பாணியில் கூறியவர்கள் நீங்கள். இப்படி வரலாற்றையே மாற்றி எழுதியவர்கள் நீங்கள். வெற்றி என்று கூறி, அனைத்தையும் துடைத்தெறிந்தீர்கள். உங்கள் தோல்விகளை, அழகாக பூசி மொழுகினீர்கள். பாட்டுப் பெட்டியை அலறவிட்டு, அதை மட்டும் கேள் கேள் என்றீர்கள். இன்று, வெடிச் சத்தமும் பிணமும் இன்றி, எந்த வீட்டுச் சோறும் அவியமாட்டேன் என்கின்றது. பிணத்தை அறுத்து, அதையே அவித்து அவித்து கொட்டி என்ன பயன். அதுவே வினையாகி உங்களுக்கு எதிராக எழுந்து நிற்கின்றது. அனைத்தும் பொய்யும் போலியுமாகி நிற்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் கூறுகின்றீர்கள் 'நாங்கள் எவ்வளவுக்களவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும்." என்கின்றீர்கள். சரி அந்த 'அவர்கள்" யார்? 'எங்களுடன்" என்ற நீங்கள் யார்? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன அரசியல் உறவு உண்டு? சரி, ஏன் அந்த 'அவர்கள்" உங்களுடன் 'உறுதியாக இருக்க வேண்டும்? சதா 'அவர்களுக்கு" எதிராக செயல்படும் நீங்கள், அவர்களை உறுதியாக எம்முடன் இருக்கவேண்டும் என்பது அரசியல் வேடிக்கை தான்.

மறுபக்கத்திலோ மக்கள் உங்களுடன் உறுதியாக நிற்கின்றனரா என்பதற்கு முன்னர், உங்களால் அப்படி நிற்க முடியுமா என்று அரசியல் ரீதியாக பாருங்கள். எங்கே உங்கள் கடந்தகால வீம்புகள் எல்லாம் ஓடி ஒளித்துவிட்டது. ஏன் சவக்களை அடிக்கின்றது? அரசியல் என்பதை அடிதடியாக்கினீர்கள். நாலு சொற்களில் அரசியல் செய்தீர்கள். இதைச்செய்த பலர் காணாமல் போகின்றனரே, ஏன்? கோட்டை கொத்தளங்களாக உருவான பிரமைகளும் நம்பிக்கைகளும், மணல் மேடாக சரிந்து வீழ்கின்றனவே ஏன்? உங்கள் உறுதியெல்லாம் இப்படிப் பொலபொலவென சிதைந்து போனது ஏன்?

இதை சிந்திக்கும் ஆறாவது மனித அறிவு புலியிசத்திடம் கிடையாதா? நீங்கள் ஆறறிவற்ற புலியாகத் தான் இருக்க விரும்புகின்ற வீம்புத்தனம் தான், உங்களையே இன்று ஓடவைக்கின்றது. வன்முறையை நம்பி, கொள்ளையை ஆதாரமாக கொண்ட, கோட்பாடற்ற வெறும் நம்பிக்கைகள் எதையும் பாதுகாக்காது. சொந்த அமைப்பே கண் மண் தெரியாது ஓடத் துவங்கி விடுகின்றது.

நம்பிக்கை என்றால், எதன் மீது நம்பிக்கை? எதன் மீது தான், மக்களை உறுதியாக நிற்கக் கோருகின்றீர்கள்? இன்று எப்படி கடந்தகால தியாகங்கள் தூற்றப்படுகின்றதோ, அப்படி எல்லாம் தியாகங்களும் தூற்றப்படும். இது இந்த புலி அரசியல் உள்ளடகத்தில், பொதிந்து காணப்படுகின்றது. உங்கள் முன்னாள் குரு மாத்தையா கதை, இப்படித் தான் இன்று உங்களால் தூற்றப்படுகின்றது. உங்களுடன் காலாற நடந்த கருணா கதியும் அது தான். போற்றுவதும், தூற்றுவதும் அக்கம்பக்கமாகி அரசியலாகிவிடுகின்றது. நாளை முழுப்புலிகளின் தியாகத்தையும் தூற்றுவது கூட, உங்களால் மட்டுமே சாத்தியமானது. அதுவே உங்கள் கடந்த காலம். இப்படியான அரசியல் வங்குரோத்து புலியின் உள்ளேயே, அனைத்தையும் செயலற்றதாக்கின்றது.

அதை பிரதிபலித்த யோகி கூறுகின்றார் 'பொதுவாக மனித இயல்பு எப்படிப்பட்டதென்றால், வெற்றிகளைக் கண்டு பூரிப்பதும், தோல்விகளைக் கண்டு துவளுவதும்தான். இந்த இயல்பு பொதுவானது. இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்ற மனிதர்கள், இதனையெல்லாம் பொதுவாகப் பார்க்கின்ற மனிதர்கள், தெளிவான பார்வை உடையவர்களுக்கு நம்பிக்கையூட்டி, தொடர்ச்சியாக அவர்களது பங்களிப்புக்கு உற்சாகமூட்டி, தொடர்ந்து செயற்பட வேண்டிய சூழல்தான் இருக்கிறது. அதாவது வெற்றியின்போது பலர் கூட இருப்பார்கள். தோல்வியின்போது ஒருவரும் உடன் இருக்கமாட்டார்கள் இதனைப் பலமுறை சந்தித்திருக்கிறோம்." ஏன் உடன் இருக்க மாட்டார்கள்? இந்த கேள்விக்கு புலியிசம் பதிலளிக்காது, பதிலளிக்க முடியாது. வெற்றியும் தோல்விகளும் அந்த மக்களுடையதாக இருக்காத வரை, அது தாம் அல்லாத அன்னியனுடையதாக பார்க்கப்படும். இதில் சம்பந்தப்படாத மக்கள், அதில் இருந்து ஒதுங்கிச் செல்வது இயல்பு. வெற்றியும் சரி, தோல்வியும் சரி, மக்களின் சொந்த வாழ்வுடன் தொடர்பற்ற ஒன்றாக இருப்பதன் மொத்த விளைவு இது.

இந்த நிலையில் வெற்றி பெறும் போது யார் குதூகலிக்கின்றனர்? இதன் மூலம் இலாபம் பெறுபவர்கள் தான். தோல்வி பெறும் போதோ, சுயநலத்துடன் அதைவிட்டுவிட்டு தப்பி ஒடுகின்றார்கள். புலியிசத்தின் பின் உள்ளவர்கள் சுயநலப் பேர்வழிகளே. ''உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்ததே" என்ற உங்கள் சொந்த விதிக்கமைய ஒடுகின்றனர். தப்பமுடியாது அகப்பட்டவன் மட்டும், தொடர்ந்து இப்படி உளறமுடிகின்றது. சுயநலத்தை அடிப்படையாக கொண்ட புலியிசம், மக்களின் இயக்கமல்ல. இதற்கேற்ற சுயநல இயக்கம் தான், புலியிசம். மக்கள் இதில் சம்பந்தப்படாத வகையில், இதையொட்டி வாழ்கின்றவர்களாகவும், ஒதுங்கி வாழ்கின்றவர்களாகவே உள்ளனர். கணிசமானவர்கள் பொழுதுபோக்க கொசிப்பதன் மூலம், இதையொட்டி வம்பளந்து காலத்தை கழிப்பவர்கள். தோல்வி ஏற்படும் போதும், அதையும் தூற்றி, பொழுது போக்குபவர்களும் இவர்கள் தான். இப்படித்தான் இந்த இயக்கம் உள்ளது.

இப்படிப்பட்ட இயக்கத்தில் நம்பிக்கையூட்ட, அகநிலையாக மக்களை அரசியல் ரீதியாக அணுகுவதில்லை. மாறாக புறநிலையை நம்பக் கோருகின்றனர். 'அதனால் அனைத்துலக ரீதியாக அரசு மட்டங்களிலும், மக்கள் மட்டங்களிலும் ஒரு விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இது தொடர்பான சில கருத்துருவாக்கங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால் அவையெல்லாம் செயல்வடிவம் பெற வேண்டும். முன்பைவிட அனைத்துலகம் என்பது தமிழ் மக்கள் விடயத்தில் ஆழமான ஒரு விழிப்புணர்வை இப்போது பெற்றுள்ளது என்பது உண்மை. அது ஒரு முழுமையான விழிப்புணர்வு பெற்ற நிலைமைக்கு அப்பாற்பட்டு செயற்படுமானால், நாங்கள் போராடத்தான் வேண்டும். அதற்குப் பக்கபலமாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களும் நிற்கத்தான் வேண்டியிருக்கும்." என்ன அறிவுசார் அரசியல்! புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் போதான மனித அழிவுகளையும் சிதைவுகளையும் காட்டி, ஏகாதிபத்தியம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. அதைத் தான் புறநிலை மாற்றமாக புலிகள் காண்கின்றனர். சொந்த மரணத்தைக் கூட, அரசியலாக காட்டி ரசிக்கின்ற மனவிகாரங்கள். ஏகாதிபத்தியம் வடிக்கும் முதலைக் கண்ணீரை, ஆறாக மாற்றிவிட முடியும் என்று புறநிலை மீது நம்பிக்கை ஊட்டுகின்ற விபச்சாரங்கள். புலிகள் இந்தக் கற்றுக்குட்டித்தனத்தையே அனைவரையும் நம்பக் கோருகின்றனர். ஏகாதிபத்தியம் என்பது ஏகாதிபத்தியம் தான் என்பதையே, இது மறுக்கின்றது.

ஏகாதிபத்தியத்தை ஏகாதிபத்தியமாக அறிவித்து, மக்களின் தேசியத்தை முன்னெடுக்க மறுக்கின்றவர்களின், வரட்டுத்தனமான குளறுபடிகள் இவை. ஏகாதிபத்தியத்துக்கு தொண்டூழியம் செய்து, தமிழ் தேசியத்தின் உண்மைத்தன்மையை அழிக்கின்ற வழியில் தமிழ் மக்களை விபச்சாரம் செய்யக் கோருகின்றனர். புலிகள் அழியும் போது ஏற்படும் மனித அழிவுகளையே, மூலதனமாக்கி புலிகள் பிழைக்க முடியுமா என்று பாருங்கள் என்பதை இது கோருகின்றது.

இப்படிப்பட்ட நிலையில் புலியிசத்தால் எதையும் தன்னளவில் நம்பிக்கையைக் கொடுக்க முடியவில்லை. அதை 'காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை" என்கின்றனர். தீர்க்கதரிசனமிக்க வழிகாட்டும் உங்கள் தலைவர் எங்கே? எல்லாவற்றையும், எல்லா நேரத்திலும் வழிகாட்டியதாக கூறிய தலைவருக்கே மொட்டை அடித்து, அதை 'காலமும் சூழலும்" என்று கூறும் காலகட்டத்தில் புலிகள் சரிந்து வீழ்ந்து நிற்கின்றனர். ஏன் இந்த நிலை? இதைவிட 'வேறு ஒரு வழியும் இல்லை" என்று புலியிசத்தால் ஒப்பாரிவைக்க முடிகின்றது.

இப்படி சிதைந்து சின்னபின்னமாக மாறும் புலிகள், தமது சொந்த சுயநலத்தையே உலக அரசியல் என்கின்றனர். 'உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்தே செயற்படும். தமிழர்களைப் பொறுத்தவரையில், எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் முழுமையான அர்ப்பணிப்போடு, அந்தப் போராட்டத்தினுடைய சரியான விடயங்களை தெளிவாகச் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும். அதில் இடையிடையே குழப்பம் இருக்கத் தேவையில்லை. இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" அரசியல் என்பதை சுயநலம் சார்ந்தது என்கின்றார். அரசு என்பது சுயநலம் சார்ந்தது என்கின்றார்.

இப்படி தியாகத்தையே கொச்சைத்தனமாக்குகின்றனர். அரசியலும், அரசும் சுயநலம் சார்ந்தது என்று கூறும் இவர்கள், தமிழ் மக்களுக்கும் இதைத் தான் சொன்னார்கள், செய்தார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான கொலைகள். தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வையே இதற்காக அழித்தனர். 'எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில்" என்று கூறுவது, புலியின் நலனைத்தானே ஒழிய, மக்களின் நலனையல்ல. இந்த சுயநலம் சார்ந்து 'நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம்". ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக் கூடாது என்கின்றனர். அதாவது 'அதனை ஒதுக்கி வைத்துவிட்டு" புலியின் சொந்த சுயநலத்துக்காக மக்கள் தியாகம் செய்து மாரடிக்கவேண்டும் என்றாகின்றது. மக்களாகிய நீங்கள் தியாகத்தை செய்யுங்கள், ஆனால் அதைக் குழப்பக் கூடாது என்கின்றனர். என்ன சுயநலம். புலியிசம் என்பது இதுதான் என்கின்றனர். 'இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை" என்கின்றனர். மக்களுக்காக பேசக்கூடாத புலியிசம், இதற்குள் இரண்டில் ஒன்று என்று எதுவுமில்லை. பின் நடுநிலையாவது மண்ணாங்கட்டியாவது.

'கொப்புத் தட்டுகின்ற வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டாம்" என்கின்றனர். கொப்புத்தட்டுவதல்ல மக்களின் வேலை. தமது வாழ்வுக்கு இடைஞ்சலாக உள்ள அந்த ஆலமரத்தையே அகற்றுவது தான். இந்த ஆலமரம் அமெரிக்காவாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி, மக்களுக்கு ஒன்று தான். 'கொப்புத் தட்டி" எதுவும் மக்களுக்கு சார்பாக மாறிவிடாது. 'கொப்புத் தட்டுகின்ற"தாக புலியிசம் எதை கருதுகின்றதோ, அதற்கு மாறாக கொப்புகள் தானாகவே உயிரற்றதாகி பட்டு ஒடிந்துகொண்டு இருக்கின்றன. இதனால் தான் 'காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை" என்று புலம்ப வேண்டியுள்ளது.

தமது இருப்பு சார்ந்த புலம்பலை 'தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரின் தொன்மையை, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினுடைய ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை கேள்விக்குறியின்றி வெளியிட வேண்டும். இந்த விடயத்தில் அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது" என்கின்றனர். யார் குழம்பியுள்ளனர் என்றால், அது புலிகள் தான். இதனால், அதென்ன எனத் தெரியாது பிரதிபலிக்கின்றது. 'தமிழ்த் தேசிய உணர்வு" தான் என்ன? 'தமிழரின் தொன்மை" என்ன? ' ஆழமான அர்ப்பணிப்பு உணர்வு " என்ன?

இதன் அரசியல் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? மக்களை அடக்கியொடுக்கி வாழும் புலியிசம், இதன் உணர்வை, உணர்ச்சியை நலமடிக்கும் பாசிட்டுகள் தானே. மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை மறுத்து, எந்த அரசியல் உரிமையையும் யாராலும் பெறமுடியாது. சுயநலம் தான் அரசியல், அரசு என்று விளம்பரம் செய்யும் புலியிசம், அந்தளவுக்கு மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். மக்கள் தான் தமது வரலாற்றை எழுதுபவர்களே ஒழிய, புலிகள் அல்ல. வரலாறு இதற்கு மாறாக தலைகீழாகி விடாது.


No comments: