தமிழ் அரங்கம்

Thursday, February 21, 2008

மகிந்த சிந்தனை என்றால் என்ன?

பி.இரயாகரன்
15.09.2007

லங்கையில் அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் மகிந்தாவின் குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதுதான், மகிந்த சிந்தனை. இதை நிறுவும் ஆட்சி, இன்று என்றுமில்லாத வகையில் நெருக்கடிக்குள்ளாகி நாடு சீரழிகின்றது. மக்கள் தமது அடிப்படை தேவைகளைக் கூட வாங்க முடியாத வகையில், அன்றாடம் விலையேற்றத்தை மகிந்த சிந்தனை திணிக்கின்றது. நாடு சர்வதேசக் கடனை நம்பி, நடுக்கடலில் தத்தளிக்கின்றது. இதையெல்லாம் மூடிமறைக்கவே, புலிப் பயங்கரவாதத்தின் பெயரில் ஒரு யுத்தப் பிரகடனம்.

புலிகள் புலித் தமிழீழம் மூலம், தமிழ் மக்களுக்கு சொர்க்கத்தைப் படைக்கப் போவதாக கூறித் தான், தமிழ் மக்களை ஒடுக்கி ஒரு பாசிச புலிச் சர்வாதிகாரத்தை திணித்துள்ளனர். இதுபோல், அரசு புலிப் பயங்கரவாதிகளை ஒழிப்பதன் மூலம், இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு, இராணுவ சர்வாதிகாரத்தை அனைத்து மக்கள் மீதும் திணிக்கின்றது. இப்படிப்பட்ட மகிந்த சிந்தனை மூலமாக, குடும்ப அதிகாரமும் குடும்பப் பொருளாதாரமும் வீங்கி வெம்புகின்றது.

இதன் விளைவு என்ன. தமிழ் மக்களில் பெரும்பான்மை மக்களை முற்றாகவே அகதி வாழ்வுக்குள் தள்ளிவிட்டது. இதன் விளைவால் அகதி மக்கள், தமது அனைத்து பொருளாதார வளத்தையுமே முற்றாக இழந்துவிட்டனர். வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சர்வதேச நிதி கும்பலிடமும், தன்னார்வ சதி கும்பல்களிடம், மக்கள் தமது உழைப்பு சார்ந்த தன்மானத்தை இழந்து கையேந்தி அலையும் கூட்டமாக மாற்றப்பட்டுவிட்டனர்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், இலங்கையில் எந்தப் பொருளையும் சுதந்திரமாக வாங்கி நுகர முடியாது. அந்தளவுக்கு புலிப் பயங்கரவாதிகளின் பெயரில், ஒரு பொருளாதாரத் தடை. தமிழ் மக்களோ தெரு நாய்களாகப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர். அன்றாடம் கைது, கடத்தல், காணாமல் போதல், படுகொலை என்பதே இயல்பான நிலையாகியுள்ளது. தமிழ் மக்களை இரத்தத்தை உறைய வைக்கும் இயல்பான பீதிக்குள், சிறைவைத்துள்ளனர். அனைத்துச் சிந்தனையையும், சுதந்திரத்தையும் இது கண்காணித்து, கருவறுக்கின்றது. ஒட்டுமொத்தமாகவே செயற்படும் சுதந்திரத்தை தமிழ் மக்கள் முற்றாகவே இழந்துவிட்டனர். தமிழ் இனம் தனது தேசிய அடிப்படைகளையும், தேசிய இருப்புக்கான சமூகக் கூறுகளையும் இழக்கும் வண்ணம், அவர்கள் சமூக ரீதியாக இழிந்து போகுமாறு சின்னாபின்னப்படுத்தி சிதைக்கப்படுகின்றனர்.

மகிந்த சிந்தனை இது மட்டுமல்ல. தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த பொருளாதார அடிப்படைகளையும், ஆதாரங்களையும் திட்டமிட்டு அழிக்கின்றது. ஒவ்வொரு தமிழ் பிரதேசமும், சிங்கள பேரினவாத இராணுவ சூறையாடலுக்குள் சிக்கிச் சிதைகின்றது. தமிழ் இனம் பல கூறுகளாக சின்னாபின்னப் படுத்தப்படுகின்றது.

இப்படி மகிந்த சிந்தனையானது தனது இராணுவ சர்வாதிகாரத்தை, தமிழ் மக்கள் மீது ஒரு தலைப்பட்சமாக திணிக்கின்றது. அதை நடைமுறைப்படுத்த தமிழ் கூலிக் குழுக்களை ஆயுதபாணியாக்கியுள்ளது. அவர்களிடையே முரண்பாட்டை ஊதி, அதைக்கொண்டு தமிழ் இனத்தை கூறு போடுகின்றது. எங்கும் எதிலும், தமிழரிடையே ஒரு காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகின்றது. அராஜகத்தையே தமிழ் பகுதியில் மகிந்த சிந்தனை உருவாக்கியுள்ளது.

இவை அனைத்தும் புலிகளின் பெயரில், ஒரு இராணுவ சர்வாதிகாரம் மூலம் இவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ் பிரதேசத்தின் எதார்த்தம். தமிழ் மக்கள் மேலான இந்தக் காட்டுமிராண்டித்தனமாக செயலை நியாயப்படுத்த, சிங்கள மக்கள் மேல் என்றுமில்லாத சுமையை சுமத்திவிடுகின்றனர். சிங்கள மக்கள் அன்றாட வாழ்வுக்காகவே மாரடிக்கின்ற அளவுக்கு, வாழ்க்கைச் சுமை சுமத்தப்படுகின்றது. இராணுவ இயந்திரம், மக்களின் மொத்த வளத்தையும் சூறையாடிச் செல்லுகின்றது. இந்த மகிந்த சிந்தனையை அமுல்செய்யும் குடும்பம், இதன் மூலம் இலங்கையில் மிகப்பெரிய கோடீஸ்வரக் கும்பலாகின்றது.

இந்த நிலையில் சர்வதேச விலைக்கு, இலங்கைச் சந்தை தடம் புரண்டு செல்லுகின்றது. மக்களின் தேவையை சர்வதேச விலையில் வாங்க நிர்ப்பந்திக்கின்றது மகிந்த சிந்தனை. ஆனால் மக்களின் கூலியோ, சர்வதேச மட்டத்தை கிட்டக் கூட நெருங்க முடிவதில்லை. அத்துடன் இலங்கை நாணயம், அன்றாடம் தனது பெறுமதியை இழக்கின்றது. இதனால் மக்கள் வாழ்க்கைத் தரம் அன்றாடம் வீழ்ச்சி காண்கின்றது. வாழ்க்கையின் வீழ்ச்சியால், மக்கள் தமது தேவையை பூர்த்தி செய்ய பணம் இருப்பதில்லை. இப்படி மக்களைப் பட்டினியில் தள்ளிவிட்டு, அந்தப் பொருட்களை வாங்கிய கடனுக்காக மகிந்த சிந்தனையை ஏற்றுமதி செய்கின்றது. என்ன ராஜதந்திரம், என்ன வக்கிரம்.

இந்த மகிந்த சிந்தனை தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களையும் சொந்த நாட்டில் வாழ முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. மறுபக்கம் இராணுவ பொருளாதாரமோ, பாரிய ஊழல் மூலம் கோடிகோடியாக மகிந்த சிந்தனை சுருட்டுகின்றது.

இதை விமர்சிப்பவர்கள், புலிகளின் பெயரில் கைது செய்யப்படுகின்றனர். அத்துடன் கடத்தல், படுகொலை என்ற பொது அச்சுறுத்தலை எங்கும் எதிலும் விடுக்கின்றனர். எங்கும் அச்சத்தையும், பீதியையும் வாழ்வாக்கிவிடுகின்றனர். மாபியாத்தனம் சமூகத்தின் போக்கில் வளர்ச்சியுறுகின்றது.

இப்படிப்பட்ட மகிந்த சிந்தனையைப் பற்றி பலரும் சிலாகிக்கின்றனர். சிலர் அதனைப் போற்றுகின்றனர். சிலர் அதைத் திட்டுகின்றனர். இலங்கை ஜனாதிபதியின் மகிந்த சிந்தனையில் இனப்பிரச்சனை முதல் உள்நாட்டு திட்டமிடல் வரை காயடிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி கூறுகின்றது மகிந்த சிந்தனைப்படி தான், அவருக்கு ஆதரவு வழங்கியதாக! புலியெதிர்ப்பு குள்ளநரி ஆனந்தசங்கரியும், மகிந்த சிந்தனையை ஏற்றிப் போற்றுகின்றது. இப்படி பல விதமானவர்களின், பலவித அரசியல் கிறுக்குத்தனங்கள்.

இப்படிப்பட்ட மகிந்த சிந்தனை எதைத்தான் எதார்த்தத்தில் செய்கின்றது.

1. அது தனது சொந்த குடும்ப அதிகாரத்தை நிறுவியுள்ளது.

2. ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை, அனைத்து மக்கள் மீதும் திணித்துள்ளது.

3. உலகமயமாதலை தீவிரமாக அமுல்படுத்துகின்றது.

4. தமிழ் இனத்தின் இருப்பையே அழித்து, அதை அடக்கி ஒடுக்குகின்றது.

5. அனைத்து சிந்தனைச் சுதந்திரத்தையும் விமர்சன சுதந்திரத்தையும் ஓடுக்கி, அதன் உணர்ச்சியையே அறுத்தெறிகின்றது

6. நாட்டின் அனைத்து முற்போக்கு கூறுகளையும் ஓடுக்கி, பிற்போக்கு கூறுகளை முன்னிலைக்கு கொண்டு வருகின்றது.

7. காட்டுமிராண்டித்தனமான அதிகாரப் பண்பாடும், பொருளாதார சூறையாடலும், சமூக ஒழுக்கமாகின்றது.

இவற்றின் மூலம் இலங்கையை ஏகாதிபத்திய நலன்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்தையும் மறு ஒழுங்கமைக்கின்றது. தேசிய கூறுகளை அழித்து விடுகின்றது. மாறாக பிற்போக்கான தேசிய கூறுகள் மூலம், நாட்டை அன்னியனுக்கு தாரைவார்த்து, நாட்டைத் திவாலாக்கி வருகின்றது. தேசிய பொருளாதாரத்தை முற்றாகச் சிதைத்து, பன்னாட்டு முதலாளிகளின் விருப்பமும் தேவையும் ப+ர்த்தி செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் புலிப்பயங்கரவாதத்தின் பெயரில் நடக்கும், தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் மூலம் கவனமாக மூடிப் பாதுகாக்கப்படுகின்றது.

இதற்கு ஏற்ற வகையில் இராணுவ சர்வாதிகாரத்தை நடைமுறையாக்குகின்றது. புலியின் பெயரால், புலிகளை வெற்றி கொள்வதாக பீற்றிக் கொண்டு நடத்துகின்ற ஒரு இராணுவ ஆட்சி தான், மகிந்த சிந்தனை. இப்படி தனது குடும்பத்தவர்கள் மூலம் நிர்வகிக்கின்ற, ஒரு பாசிச சர்வாதிகார கட்டமைப்பாகும்.

இந்த சர்வாதிகார பாசிசம் எப்படி கட்டமைக்கப்படுகின்றது.

1. எதிர்தரப்பை விலைக்கு வாங்குகின்றது. மறுதளத்தில் செயலற்றதாகி முடக்குகின்றது. இல்லாது போனால் போட்டியாளரை உயிருடன் இல்லாது ஒழிக்கின்றது.

2. புலிப்பயங்கரவாதம் என்ற பெயரில் நடக்கும் புலியொழிப்பு என்பது, படுகொலைகள் கடத்தல்கள் காணாமல்போதலாகி விட்டது.

3. தனது கட்டுபாடல்லாத பிரதேசம் முழுவதின் மீதும், ஒரு முழுமையான யுத்த பிரகடனத்தை செய்து, அதையே ஆணையில் வைத்துள்ளது.

4. தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் வண்ணம், சகல சமூக பொருளாதாரக் கூறுகளையும் திட்டமிட்டு அழிக்கின்றது. அத்துடன் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குதல் நடத்துகின்றது.

5. தமிழ் பகுதியிலான பன்னாட்டு நிறுவனங்களின் அன்னிய நிறுவனங்களினதும் தேவைகளை, தனது யுத்த ஆக்கிரமிப்பு மூலமே கைப்பற்றி தாரைவார்க்கின்றது.

இப்படி ஒட்டமொத்த மனிதவிரோத செயல்கள் தான் மகிந்த சிந்தனை. அன்னிய மூலதனத்தின் நலன்கள் தான் மகிந்த சிந்தனை. இதற்கு பின்னால் சிங்கள தேசியம் என எதுவும் கிடையாது. மாறாக குடும்ப அதிகாரம் மூலமான, இராணுவ சர்வாதிகாரம் தான் மகிந்த சிந்தனை. இந்த சிந்தனை நோக்கம் என்பது, பாசிச வழிகளில் நாட்டை முற்றாக உலகமயமாக்குவது தான். இதன் மூலம் இலங்கையில் தனது குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதாகும். அதாவது அதிகார அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதுதான், மகிந்த சிந்தனை. இந்த மகிந்த சிந்தனை மக்களை அடக்கியொடுக்கி செழித்து வாழ்கின்ற ஒரு கும்பலுக்கு, மாமா வேலை பார்க்கின்றது.

No comments: