தமிழ் அரங்கம்

Saturday, February 23, 2008

இலங்கையில் முதன்மைப் பிரச்சனை புலிப் பாசிசமா?

பி.இரயாகரன்
13.11.2006

தை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது. சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் தேனீ மற்றும் ரீ.பீ.சீல் சிவப்பு கம்பளம் விரித்து, புலியெதிர்ப்பு அரசியலை விபச்சாரம் செய்தவர்கள் தான் இவர்கள். திடீரென்று அதில் இருந்து பிரிந்து, புதிய புலியெதிர்ப்பு அணியாகவே மறுபடியும் வந்துள்ளனர்.

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விபச்சாரத்தை கைவிட்டு ஓடவெளிக்கிட்டவர்கள், கையில் கிடைத்த சிவப்பு துணியை போர்த்திய படி ஓடி வந்தனர். மறுபடியும் மிக மோசமான அப்பட்டமான பேரினவாதிகள் தான் நாங்கள், என்பதை அடித்துக் கூறுகின்றனர். இதை சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளனர். வெட்கக்கேடான ஆபாசமாக சிவப்பு சாயம் அடித்த இவர்களின் அரசியல் படி, தமிழ் மக்களுக்கு என்று தனித்துவமான அரசியல் பிரச்சனைகள் எதுவும் கிடையாது என்பதே இவர்களின் அரசியலாகும். பேரினவாதம் என்பது கற்பனையானது. அது தமிழ் பாசிட்டுகளினது, தமிழ் முதலாளிகளின் சொந்தக் கண்டுபிடிப்பு என்பதே, இவர்களின் அரசியல் முடிவு. அதை பேரினவாதத்துக்காக வாலாட்டி குலைக்கும் போது அதை உதிர்த்து விடுகின்றனர். 'இலங்கை அரச இயந்திரம் பௌத்த சிங்கள இனவாதத்தாற் கட்டுப்படுத்தப்படுகிறது, ... என்பது பெரும் பொய்யாகும்." என்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் மீதான பேரினவாத இனவொடுக்குமுறை பற்றிய திரொக்சிய அரசியல் பார்வை இதுவாகும்.

இதனால் இவர்கள் பேரினவாதிகள் போல், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்று எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அதேபோல் இவர்கள் முன் வைப்பதும் கிடையாது. மக்களை அணிதிரட்ட எதுவுமிருப்பதில்லை. இவர்களின் இந்த பேரினவாத நிலையை, அவர்களின் சொந்த மார்க்சிய வார்த்தையில் சொன்னால் 'சுயநிர்ணய உரிமை" அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது." என்று ஒரே வார்த்தையில் அடித்துக் கூறி விடுகின்றனர். தமிழ் மக்களின் எதிரி கூட இப்படி கூறியது கிடையாது. இப்படிக் கூறி தமிழ் மக்களின் எதிரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர். இதே அரசியல் நிலையைத் தான் ஜே.வி.பியும் இனவாதமாக கொப்பளித்து அதை தமிழ் மக்களின் முகத்தில் காறி துப்புகின்றது.

சுயநிர்ணயம் என்பது தமிழ் மக்களுக்கு கிடையாது என்பதால், பேரினவாதத்தை ஆதரிக்க கோருகின்றனர். அதை அவர்களின் சொந்த மார்க்சிய நடைமுறை சார்ந்த பேரினவாத அரசியலாகவே கூறுகின்றனர். 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு" செல்வது தான் அவசியம் என்கின்றனர். இதைத்தான் அவர்கள் தமது சொந்த அரசியலாக நடைமுறையாக கொள்கின்றனர். இதைத்தான் இவர்கள் மக்களுக்கு மாற்றுவழியாக காட்டுகின்றனர். பாசிச ஒழிப்பு என்ற பெயரில், தம்மையொத்த ஒரு கைக்கூலிகளாக எப்படி இருத்தல் என்பதையே, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் முதலாளித்துவம் பற்றி பூசைகாட்டியபடி விளக்குகின்றனர். இந்த அரசியல் ஆபாசத்தைத் தான், அவர்கள் திரொஸ்கிய மார்க்சிய நிலை என்கின்றனர். இவர்கள் ஜே.வி.பியின் வலது பேரினவாத 'இடது" நிலையைப் பின்பற்றும், வலது திரோஸ்கிய வாதமே பேரினவாதமாக கொப்பளிக்கின்றது.

தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் இவர்கள், எல்லாவற்றையும் புலியாக, புலிப் பாசிசமாக காட்டியே புலியெதிர்ப்பு அரசியலை பிதற்றுகின்றனர். பேரினவாத பாசிட்டுகளுடன், கூடி நிற்க திரொஸ்கியத்தின் பெயரில் அழைக்கின்றனர். இந்த அழைப்பையே 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற் கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம்." என்கின்றனர். நல்ல நகைச் சுவையான வேடிக்கை தான், போங்கள். இதை மார்க்சியம் என்றால் கைகொட்டி சிரிப்பார்கள். ஏதோ நிபந்தனையுடனாம்! சரி அந்த நிபந்தனை தான் என்ன? புலிப் பாசிசத்தை அழித்த பின்பு திரோஸ்கிகளிடம் ஆட்சி தரவேண்டும் என்பதோ அந்த நிபந்தனை? ஐயோ பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.

இவர்கள் மனதில் நினைக்கும் நிபந்தனையுடன் ஆதரிக்கும் இலங்கை அரசைப் பற்றிக் கூறும் போது 'இலங்கை நேரடியான ஆசியப் பிராந்தியத்தில் இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ உதவிகட்கு கட்டுப்படும் சக்தியாகி விட்டது. அவைகளின் சொற்கேட்கும் சார்புநிலைச் சக்தியாகிவிட்டது." என்று கூறுகின்றனர். அப்படி என்றால், சார்புநிலை சக்தியாக முன்னம் என்னவாக இருந்தனர்? அது எப்படி எப்போது இல்லாது போனது? உலகத்தை கொள்ளையடித்த களைப்பில், ஏகாதிபத்தியம் இலங்கை கடற்கரையில் பொழுதுபோக்குக்கு படுத்துக்கிடந்து மீன் பிடிக்கின்றனரோ!

ஏகாதிபத்தியம் புலிகளை தடைசெய்த பின்பும், அவர்களை அழிக்காது, சும்மா விட்டிருக்கு என்ற கடுப்பே இப்படி புலம்ப வைக்கின்றது. புலியை அழிக்காது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்க ஏகாதிபத்தியம் கோருகின்றது என்ற கோபம், அரசின் மனித உரிமை மீறல் பற்றியும் ஏகாதிபத்தியம் முன்வைக்கின்றது என்ற ஆத்திரமே உளறவைக்கின்றது. (ஏகாதிபத்தியம் ஏன் இதை செய்கின்றது என்பது மற்றொரு விடையம்.) ஏகாதிபத்தியத்தை விடவும், இலங்கை அரசு உடனடியாக யுத்தம் மூலம் புலியை அழிப்பதால் நிபந்தனை என்று கூறியபடி ஆதரிப்பதே, இவர்களின் அரசியலாகின்றது. இங்கு என்ன நிபந்தனை என்று மட்டும் தயவு செய்து கேட்டுவிடாதீர்கள். நாங்கள் சொல்லுவோம், ஆனால் அது என்னவென்று இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இப்படி இலங்கையின் சார்புநிலை பற்றி கூறுபவர்கள் தான், இந்த சார்பு அரசு புலிகளை அழித்தால் ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இங்கு அழிப்பது இந்தியா உள்ளிட்ட அன்னிய சக்திகள் அல்லவா? அப்படியாயின் உங்கள் நிபந்தனை இலங்கை அரசுக்கா? அல்லது அதை வழிநடத்தும் அன்னியருக்கா? இப்படி அன்னிய சக்திக்கு பாய்விரிப்பது திரோஸ்கிய விபச்சாரமில்லையோ? இங்கு 'இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ" உதவிக்கு இலங்கை கட்டுப்பட்டது என்பதே ஒரு திரிபாகும. இது இவர்களின் மற்றொரு அரசியல் திரிபு. உலகமயமாதலை பாதுகாக்க விடையத்தை மேலெழுந்தவாரியாக திரித்து, ஏகாதிபத்தியத்தை உள்ளடக்க ரீதியாக இலங்கையில் பாதுகாப்பதாகும். இப்படி பல. ஆனால் அவற்றை இக்கட்டுரை விவாதிக்க முற்படவில்லை.

இவர்களும் ரீ.பீ.சீ மற்றும் தேனீக்கும் இடையில் என்ன வேறுபாட்டுடன் ஓடிவந்து, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் என்ன கூறுகின்றனர் என்பதை சுருக்கமாக பார்போம். இதன் மூலம் நுட்பமாக புலியெதிர்ப்பின் பன்மைப் போக்கை தெளிவுபடுத்த முடியும்.

பேரினவாதத்துடன் கூட்டுச்சேர்ந்தே புலிகளை அழிக்கவும், அதை பகிரங்கமாக அங்கீகரிக்க மறுக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீ நிலைப்பாடு தான், இவர்களின் அடிப்படையான அரசியல் முரண்பாடு. இதற்கு முதலாளித்துவம் என்ற சொல்லை உச்சரித்து பசப்புகின்றனர். இந்த ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடான முரண்பாட்டை 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு இவர்களால் போகமுடியவில்லை. இலங்கை அரசு புலிகள் இடையே நடுநிலமை உண்டெனக் கருதிக்கொண்டு இரு பகுதிகளையும் தாக்கத் தொடங்கினர். இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும் எனக் கூறினால் அது சிங்களத் தேசியவாதத்தை ஆதரிப்பதாய் கருதப்பட்டு விடும் என்று கருதியதால் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பாய்ந்தனர்." இது தான் இந்த புலியெதிர்ப்பின் பின் பூத்துக் குலுங்கும் புதிய அவதாரம். இதற்கு சோபாசக்தியின் சத்தியக்கடதாசி, தனது முந்திய நிலைக்கு மாறாக துணைபோவது அறியாமையா? அல்லது ரீ.பீ.சீ மற்றும் தேனீ மீதான எதிர்ப்பா? இதை மறுபிரசுரம் செய்த தூண்டில் முன்னும் இக்கேள்வி பொருந்திநிற்கின்றது.

ரீ.பீ.சீ மற்றும் தேனீயில் இருந்து பிரிந்தவர்களின் அரசியல, பேரினவாத அரசை நேரடியாக ஆதரிப்பது தான். அரச பயங்கரவாதத்தை புலிப் பாசிச அழிப்பில் அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய மறுக்கும் மேற்கத்தைய நாடுகளை, இதன் அடிப்படையில் எதிர்க்க வேண்டும். புலியை ஏகாதிபத்தியம் அழித்தால், சூக்குமமான அந்த நிபந்தனையுடன் நாம் மறுபடியும் அரசியல் முலாம் பூசி ஆதரிக்க கோருவோம்.

இதை விடுத்துவிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதும், இதை அண்மைக்காலமாக ஏகாதிபத்திய வாலில் தொங்கியபடி முன்வைக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீயின் நிலையை பினாற்றல் என்பது இவர்களின் புலியெதிர்ப்பு நிலை. இதனால் தான் இவர்கள் ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடன் முரண்பட்டனர்.

இந்த ஒட்டுமொத்த அரசியல் விபச்சாரத்தைத் தான் இவர்கள் 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற்கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம். புலிப்பயங்கரவாதம் மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டால் ஐயோ இது சிங்கள அரசை ஆதரிப்பதாகிவிடும் என்று அரசியலில் களங்கப்படாத கற்புடன் இருப்பதாய் கருதும் சிலர் குரலிடுவார்கள்.." என்ற கூறி வாருங்கள் என்று அழைக்கும் திரொஸ்கிகள், தங்களுடன் சேர்ந்து கற்பழிக்க கோருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு அவசியம் என்பதை ஏகாதிபத்தியத்தின் பின் நின்று வலியுறுத்தும், ரீ.பீ.சீ மற்றும் தேனீ புலியெதிர்ப்புக் கும்பலுடன் முரண்பட்டு நிற்கின்றனர். இதை மூடிமறைக்கவே, முதலாளித்துவம் என்ற அந்தச் சொல் மட்டும் உதவுகின்றது. புலியை அழிப்பதே இவர்களின் அரசியலாகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க மறுபவர்களுடனும், புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இவர்களின் அரசியலாகும். தேனீ மற்றும் ரீ.பீ.சீயில் இருந்து பிரிந்து வந்த இந்த புதிய கொண்டோடி புலியெதிர்ப்பு அணியில் தமிழரசன், மற்றும் அழகலிங்கமும் கொலுவேற்று இருக்கின்றனர். இதற்கு சோபாசக்தியும் அவரின் சத்தியக்கடதாசியும் எந்தவகையில், எதன் அடிப்படையில் துணைபோகின்றது என்பது மற்றொரு புதியதொரு விடையம்.

மேலே எழுப்பிய கேள்விகளை விடவும், சோபாசக்தியின் முன்னைய திரொக்ஸ்கிய நிலையா இதற்கு மேலும் கூடுதலாக துணைபோகின்றது?. இந்த இருவரும் தமது திரொஸ்கிய அடுக்குமொழியுடன், முதலாளித்துவம் என்ற சொல்லைக்கொண்டு அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இந்த அரசியல் வித்தை அப்பட்டமான ஆபாசமான பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.

நீங்கள் இந்த அரசியல் புலியெதிர்ப்பு ஆபாசத்தை புரிந்துகொள்ள 'சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் என்ற கட்டுரையை '' என்ற http://www.satiyakadatasi.com/?p=52#respond பகுதியில் காணமுடியும்.

இப்படி புலியெதிர்ப்பின் மற்றொரு கடைகோடிக்குள் நின்று இவர்கள் குலைப்பது எப்படி? அதைத் தெரிந்து கொள்வது அவசியம் இவர்கள் எப்போதும் விடையத்தை எடுத்து விவாதிப்பது கிடையாது. சொற்களைக் கொண்டு வித்தை காட்டுவது, இவர்களின் அரசியல் மரபு. விடையத்தை எடுத்து நேரடியாக பதிலளிப்பதில்லை. மாறாக விடையத்துக்கு வெளியில் அலட்டுவதே நிகழ்கின்றது. மார்க்சிய சொற்கள், மார்க்சிய சொற்கோவைகளை கொண்டு சதா புலம்புவர். இன்று முதலாளித்துவம் பற்றி பேசும் இவர்கள், அந்த தேனீக்கு பின்னால் நின்று குலைத்ததையிட்டு, எந்த சுயவிமர்சனமும் செய்யப் போவதும் கிடையாது. அந்த அரசியல் தான் மறுபடியும் அரங்கேறுகின்றது. ஏன் இன்று ரீ.பீ.சீ மற்றும் தேனீ பற்றிய இன்றைய மதிப்பீட்டை, அன்று வைக்காது எப்படி கூடிக்குலாவி விபச்சாரம் செய்ய முடிந்தது. அதில் இருந்து ஏன் தாங்கள் விலகினோம் என்று கூறுவது கூட வெளிப்படையாக கிடையாது.

தங்கள் பேரினவாத நிலையை நியாயப்படுத்த புலி, புலிப்பாசிசம் பற்றி மட்டும் கதைக்க முற்படுகின்றனர். பாசிசத்தின் பின்னால் உள்ள அரசியல் போக்கைப் பற்றி இவர்கள் அக்கறைப்படுவதில்லை. பாசிசம் என்பது சுரண்டலின் உச்ச வடிவம். மக்களை அமைதியாக சுரண்ட முடியாது என்ற நிலையில், சுரண்டலை பாதுகாக்கவும் தொடரவும் கையாளும் ஒரு வடிவம் தான் பாசிசம். இதை புரிந்து கொள்ளாது இதை மறுதலித்து, இலங்கை அரசின் பின் பாசிச ஒழிப்பின் பெயரில் கூத்தடிப்பது தான் இவர்களின் உயர்ந்தபட்ச அரசியல்.

புலிப்பாசிசத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால், இதில் இருந்து வேறுபட்ட தமிழ் மக்களையும், அவர்களின் ஜனநாயகக் கோரிக்கையையும் தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக மக்களைச் சார்ந்து நின்று போராட வேண்டும். அந்தப் போராட்டத்தை மட்டும் கோரவேண்டும். அதை மட்டும் ஆதரிக்க வேண்டும். இல்லாத அனைத்தும் நிச்சயமாக தெளிவாக மற்றொரு பாசிசமே. உள்ளடகத்தில் பேரினவாதத்தின் புலியெதிர்ப்புக் கூச்சலாகத்தான் இருக்கும். இதற்கு புலிப் பாசிசத்தின் பெயரில், திரொஸ்கிய சிவப்பு சாயமடிக்கலாம். ஆனால் மக்களினதும், அவர்களின் வாழ்வியல் பிரச்சனைக்கும் யாரும் சாயமடிக்க முடியாது. முதலில் நாம் சிலவற்றை தெளிவுபடுத்தவேண்டும்.

1.தமிழ் மக்களுக்கு பிரச்னைகள் உண்டு எனபதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?

2.தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியம் என்று ஏற்றுக்கொள்கின்றோமா?

3.தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்றால், அதற்குரிய தீர்வு என்ன?

4.புலி, புலி பாசிசத்தை ஒழிப்பது எப்படி?

5.புலியை ஏதோ ஒரு வகையில் ஒழிக்க முனையும் ஏகாதிபத்தியம், மற்றும் இலங்கை இந்திய அரசை, நாங்கள் எப்படி எந்த அரசியல் வழியில் எதிர்க்கின்றோம்?

6.புலியெதிர்ப்பு அணியை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றால், எப்படி? எந்த அரசியல் அடிப்படையில்?

இந்தக் கேள்விகளுக்கு திரோக்சிய புலியெதிர்ப்பு அணியும் சரி, மற்றவர்களும் சரி நேரடியாக தெளிவாக பதிலளிப்பது கிடையாது. சுற்றி வளைத்து சீPட்டி அடிப்பார்கள். உண்மையில் ஏன் இவர்கள் பதிலளிப்பதில்லை.

மக்களின் ஜனநாயக (தேசிய பொருளாதார சார்ந்த பண்பாட்டு மொழிக்) கோரிக்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை வெறும் கருத்து சுதந்திரத்துக்கான தமது கோரிக்கையாக மட்டும் திரிக்கின்றனர். பேரினவாதம் பாசிசமாக இருப்பதை மறுத்து, அதை ஒப்பீட்டின் அளவில் சுருக்கி மிதமானதாக காட்டிவிடுகின்றனர். அரசை ஆபத்தில்லாத ஒன்றாக காட்டி விபச்சாரம் செய்யும் இவாகள், புலிப்பாசிசத்தை மட்டும் ஓரு பூதமாக காட்டுகின்றனர். இலங்கையின் முதல் எதிரியாக புலியைக் காட்டி, அரசை இரண்டாம் பட்சமான மிதவாதக் கூறாக காட்டிவிடுகின்றனர். இதன் மூலம் அரசை ஒரு ஆபத்தில்லாத மிதவாத நண்பனாக காட்டி, அதை சார்ந்து நின்று புலியை அழிக்க கோருகின்றனர். ' புலிப் பாசிசம் அழிவதென்பது தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பொதுவான ஜனநாயக அரசியலுக்கு அவசியமானதாகும்." என்று கூறி, அரசை ஆதரிக்க கோருகின்றனர். அரசை ஜனநாயக அரசாக சித்தரிக்கின்ற அரசியல் விபச்சாரம் அரங்கேறுகின்றது. அதையே 'சர்வதேச நிலமைகளும் தீவிரமாகக் கடந்த வருடங்களில் மாற்றம் அடைந்தமையும், தமிழ் சிங்கள இனவாதம் கடந்த இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று, தமது திரோஸ்கிய பேரினவாத நிலைக்கு சுயவிளக்கம் தருகின்றனர். இலங்கையில் ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதாக பம்மாத்து விடுகின்றனர். 'தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பொதுவான ஜனநாயக அரசியலுக்கு" ஏகாதிபத்திய எதிர்ப்பு, பேரினவாத எதிர்ப்பு அவசிமற்றது என்பதே இதன் சாரமாகும். இதைத்தான் 'புலிப் பாசிசத்தை எதிர்த்து நடைபெறும் அரசியல் - இராணுவப் போராட்டங்களில் புலிகளை எதிர்க்கும் தமிழ், சிங்கள ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் ஆதரிக்க வேண்டும்." என்கின்றனர். புலிபாசிசத்தை எதிர்க்கும் ஏகாதிபத்தியத்துடன் கூட கூட்டுச் சேரக் கோருகின்றனர்.

புலியெதிர்ப்பு அரசியலே, மக்கள் விரோத அரசியலாக புளுத்து வெளிவருகின்றது. மக்கள் தமது சொந்த எதிரிகளுக்கு எதிராக, தமது சொந்த அதிகாரத்தை நோக்கி போராடுவதையே இது மறுதலிக்கின்றது. இதனால் மக்கள் நலன் சார்ந்த அரசியலை, இந்த புலியெதிர்ப்பு திரொஸ்கியவாதிகளால் முன்வைக்க முடிவதில்லை. உள்ளடகத்தில் இவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்தையும் புலிப் பாசிச பிரச்சனையாக திரிக்கின்றனர். இதனால் தான் இவர்கள் தமிழ் மக்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வை முன்வைப்பதில்லை. எதார்த்தம் இதற்கு எதிராக நடைமுறையில் செயல்படுகின்றது. இந்த நிலையில் யாராவது தீர்வை வைத்து இந்த பிரசனையைத் தீர்த்தால், அதில் தொங்கும் ஒரு சாத்தனாகவே இவர்கள் தொடர்வார்கள்.

உண்மையில் இலங்கை பேரினவாத அரசை ஆதரிப்பதற்கு அப்பால், இவர்களிடம் புலி, புலி பாசிசத்தை ஒழிப்பததற்கு மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டம் என எதுவும் கிடையாது. அதாவது நடைமுறைப் பிரச்சனை மீது மாற்று அரசியல் வழி கிடையாது. நடைமுறை பிரச்சனைக்கு அப்பால், பாசிசத்தை ஒழிப்பது பற்றி வீம்புக்கு ஒப்பாரிவைக்கின்றன்றனர். அரசியல் நடைமுறைப் பிரச்சனை மீது, அதன் உள்ளடகத்தில் செயல்படுவதன் மூலம் மட்டும் தான், பாசிசத்தை மக்கள் நலன் சார்ந்து நின்று ஒழிக்கமுடியும். இதுவல்லாத அனைத்தும் மற்றொரு பாசிசம் தான்.

மக்கள் நலனை சார்ந்து நிற்றல் என்பது, மக்களின் தேசிய பிரச்சனைகள் மீது சார்ந்து நிற்றலே ஒழிய இதற்கு அப்பால் வேறு எதுவுமல்ல. இதுபற்றி இவர்களிடம் எந்தத் தீர்வும், மாற்றும் கிடையாது. புலியை ஒழிக்க யாருடனும் எப்படியும் சேரத் தயார். மேலதிகமாக இதற்கு நிபந்தனையுடன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

புலியை ஒழிக்க பேரினவாதம் முதல் ஏகாதிபத்தியம் வரை ஆதரிப்பது அவசியம் என்கின்றனர். இது தான் புலியெதிர்ப்பின் சாரம். அது தான் 'தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பொதுவான ஜனநாயக அரசியலுக்கு" அவசியமான நிபந்தனை என்கின்றனர். மார்க்சியம், முதலாளித்துவம் என்ற சொற்கோவைக்கு அப்பால், புலியெதிர்ப்பில் இவர்களிடம் அரசியல் ரீதியாக இருப்பது, மக்களின் எதிரியுடன் நேரடியாக துணைபோவதுதான்.

'தேசிய நலன்கள் பாசிசத்தை அழிப்பதைவிட முக்கியமானவையா?" என்று பிதற்றுகின்றனர். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி அழிப்பது? திரோஸ்கிய வாதிகளே! ஸ்ராலினிசம் அது இதுவென்று அலட்டாமல் பதிலை சொல்லுங்கள். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி ஒழிப்பது?

தேசியம் பாசிசத்துக்கு எதிராக இருப்பதையும், தேசியம் ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாதத்துக்கு எதிராக இருப்பதையும், இவர்களால் ஒரு கணம் கூட ஜீரணிக்க முடிவதில்லை. புலிகளின் பெயரில், புலிப் பாசிசத்தின் பெயரில், தேசிய எதிர்ப்பு இவர்களின் செமியாக் குணமாகி வாந்தியாகின்றது. தேசியம் என்பது சாராம்சத்தில் உலகமயமாதல் எதிர்ப்பையும், அதையொட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டது. இதை மறுதலிக்கும் இவர்கள், அன்னிய சக்திகளையும் அரச இயந்திரத்தையும் நம்பி, மக்களை அவர்கள் பின் செல்லக் கோருகின்றனர். மக்களின் சொந்த அரசியல் வழியில் நம்பிக்கையற்ற, ஓட்டுண்ணிகளின் செயல்பாடாக இது வக்கரிக்கின்றது.

இந்த நிலையில் பாசிசத்தை மக்கள் மட்டும் தான் ஒழிக்க முடியும். இதற்கு வெளியில் எதுவுமல்ல. இலங்கை மக்களும், சர்வதேச சமூகத்துக்குமே இந்தக் கடமையுள்ளது. அரசு, அன்னிய அரசுகள், கூலிக் குழுக்களால் பாசிசத்தை ஒழிக்கமுடியாது. அது மற்றொரு பாசிசத்தையே, மாற்றாக கொண்டு வரும். இதன் பின்னால் திரொஸ்கிகள் அன்னக்காவடி எடுத்து அரோகரா போட்டு ஆடலாம், ஆனால் மக்கள் ஆட முடியாது. அதாவது ஆட மாட்டார்கள்.

தேசியத்தை விட பாசிசத்தை அழிப்பதே முதன்மையானது என்கின்றீர்களே? நல்ல பொருத்தப்பாடான புலியின் அதே அரசியல் புளுத்து வருகின்றது. புலிகள் கூறுகின்றனர் நாங்கள் நிரந்தர தீர்வைப் பற்றி பேசமாட்டோம், மனிதாபிமான பிரச்சனையை மட்டும் பேசுவோம் என்றனர். இரண்டையும் ஒன்றுக்குகொன்று எதிராக நிறுத்தி புலம்பியது போன்றதே, பாசிச ஒழிப்பும். பாசிசத்தை ஒழிப்பது மட்டும் தான் முதல் நிகழ்ச்சி நிரல், தேசிய நலன் நிகழ்ச்சி நிரலில் இருக்க முடியாது என்கின்றார்கள். புலிகளுடன் இணங்கிப் போகும் நல்ல வேடிக்கையான இலங்கை அரசியல்.

தேசிய நலனை மறுக்கும் ஏகாதிபத்தியத்துடனும், அதையே அமுல்செய்யும் இலங்கை பேரினவாத அரசுடனும், கூட்டுச் சேர்ந்த புலியை அழிக்க தேசிய நலன்கள் தடையாக உள்ளது. இதனால் தேசிய நலனா! அதுவென்ன என்பதும்! அல்லது அதை பிறகு பார்ப்போம் என்பதும் இந்த புலியெதிர்பாளர்களின் அரசியலாகின்றது. பாசிசத்தை ஒழிக்க அன்னிய சக்திகளுடன் இணைய தடையாக உள்ள, தேசியத்தை இழிவாடி வம்பளக்கின்றனர். மக்கள் சார்ந்து பாசிச ஒழிப்பு பற்றி இவர்கள் கடுகளவு கூட எண்ணுவதில்லை. நாம் முன்பு சுட்டிகாட்டியது போல், முதலில் தமிழீழம் பின் ஜனநாயகம் என்று கூறும் புலிகளின் நிலைக்கும், இதே போல் முதலில் ஜனநாயகம் பிறகு சமூக முரண்பாடுகளை தீர்த்தல், என்ற ரீ.பீ.சீ மற்றும் தேனீ கும்பலின் புலியெதிர்ப்பு நிலைக்கும், முதலில் பாசிச ஒழிப்பு என்பது சமாந்தரமானது. முதலில் புலிப் பாசிச ஓழிப்பு, அதன் பின்பு தான் அனைத்தும் என்பது இந்த இடது வேடமிட்ட வலது புலியெதிர்பாளர்களின் அரசியல் நிலையாகும். மக்களைச் சார்ந்திருப்பதில் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் ரீதியாக விலகுகின்றதோ, அந்தளவுக்கு இந்த மக்கள் விரோதப் போக்கு அரங்கேறுகின்றது. அது சொல்லும் விதம் மட்டும் நாசுக்காகவே மாறுபடுகின்றது.

பாசிசம் தேசிய நலனை மறுதலிக்கின்றது என்ற அரசியல் உள்ளடக்கம், திரோஸ்கிய மலடுகளுக்கு புரிவதில்லை. மக்களின் நலன்கள் தான் தேசியம். மக்களின் நலன்களை ஏகாதிபத்தியம், பேரினவாதம், புலிகள் என யாருமே ஏற்றுக்கொள்வது கிடையாது. தேசியம் சமன் பாசிசம் என்ற திரொஸ்கிய மலட்டுத்தனம் ஆற்றலற்றது. சொந்த மக்களின் நம்பிக்கையற்றது. மக்களின் எதிரிகளுடன் சேர்ந்து நின்று முரண்பாடுகளை தீர்க்க கோருகின்றது.

பாசிசத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தேசியத்தை மக்களின் தமது சொந்த நலனில் இருந்தே முன்னெடுக்க வேண்டும். அதையே வழிகாட்ட வேண்டும். அதற்கு துப்பில்லை. பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்பவர்கள், அதே கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவர்களின் செயல்பாடுகளின் கோட்பாடுகள், தேசியம் சார்ந்ததாக இருக்காது. இதனால் தான் தேசியத்தை மறுக்கின்றனர். தேசிய மறுப்பின் அனைத்து தளமும் இப்படி தான் எங்கும் உள்ளது.

சாராம்சத்தில் தேசியம் என்பது என்ன? முதலில் அது பாசிசமல்ல. புலிகளின் போராட்டம் தேசிய போராட்டமல்ல. மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளே சாராம்சத்தில் தேசியமாகவுள்ளது. ஓரு தேசத்தில், ஒரு தேசியத்தில் வாழும் மக்கள், தமது சொந்த பொருளாதார தேசிய வாழ்வை பாதுகாப்பது தான் தேசியம். யாரிடமிருந்து பாதுகாப்பது. உலகமயமாதலாக ஒருங்கு திரண்டு வரும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து, அதையே ஆளும் கோட்பாடாக கொண்ட குறுகிய இனவாத மதவாத சக்திகளிடமிருந்து, மக்கள் தமது உழைப்பை, உழைப்பின் ஆதாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் எதிரியையும் குறித்து நிற்கின்றது. இதனடிப்படையில் தேசிய பண்பாடு, தேசிய கலாச்சாரம், தேசிய மொழி என அனைத்தையும் சிதைக்கவும், சீரழிக்கவும் முயலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசியம் போராடக் கோருகின்றது. புலிப் பாசிசம் தனித்துவமாக இந்த உலகயமாதலுக்கு வெளியில் அது செயல்படவில்லை என்பதுடன், அது சுயாதீனமாக செயல்படவே முடியாது.

ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசியத்தின் சகல கூறுகளையும் அழிக்கும் போது, அதை எதிர்த்து நிற்பதன் சாரம்தான் தேசியம். புலிகள் கோருவது தேசியத்தையல்ல. புலிகளின் பாசிசம் தேசியமல்ல. எல்லா மக்கள் விரோதிகளும் விதிவிலக்கின்றி, பாசிசத்தை தேசியம் என்று கூறும் புலியின் நிலையை அங்கீகரித்து, அதற்கு சாதகமாக அல்லது எதிராக தமது மக்கள் விரோத போக்கை அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசம் தேசியமல்ல என்று கூறி யாரும் தேசியத்தை முன்வைப்பதில்லை. இதனால் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களின் தேசிய நலனில் நம்பிக்கையற்று, பாசிச ஒழிப்பில் அன்னிய சக்திகளின் கூலிப்பட்டாளமாகின்றனர்.

பாசிச ஒழிப்பில் இவர்கள் ஆதரிக்கும் ஏகாதிபத்திய உலகமயமாதல், தேசியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் அழிக்கின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை உள்ளடங்கியது. இது திரோஸ்கிய மலட்டுத்தன அறிவுக்கும், குருட்டுப் பார்வைக்கும் தெரிவதில்லை. இதனால் புலி அழிப்பு முதல் அனைத்தும் மக்கள் விரோதமாகவே அவதரிக்கின்றது.

இப்படி மக்களின் தேசிய பொருளாதாரத்தை அழிப்பவனுக்கு காவடியெடுப்பவர்கள் தான், 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்கின்றனர். நல்ல நகைச்சுவை. ஏதோ புதிதாக சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றனர் திரொஸ்கியின் பெயரில் திரொஸ்கிஸ்ட்டுகள். இதையே திரொஸ்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் எதிராக, அதாவது மக்களுக்கு எதிராகக் திரொஸ்கி கூறியது தான். அதே சரக்கு, இன்று சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறி தூசுதட்டி, அதே போட்டை புலிப் பாசிசத்தின் துணையுடன் திரும்ப ஊரறிய மாட்ட முனைகின்றனர்.

தேசிய சுயநிர்ணய உரிமையை மறுத்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் தான் திரொஸ்கி. இது மட்டுமல்ல விவசாயிகளின் புரட்சிகர பாத்திரத்தையே மறுத்தவர் தான் இந்த திரோஸ்கி. இப்படி மக்களின் புரட்சிகர பாத்திரத்தையும், மக்களின் அடிப்படை உரிமையையும் எதிர்த்த திரொஸ்கியின் அரசியல் போக்குகளை எதிர்த்து தான், லெனினால் புரட்சியை நடத்த முடிந்தது. திரோஸ்கி லெனின் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்ற புரட்சியுடன் ஓட்டுண்ணியாக ஓட்டிக்கொண்ட போது, அவரின் தத்துவ ரீதியான எதிர்ப்புரட்சிகர போக்கும் ஓட்டிக்கொண்டது. நடந்த புரட்சியை குழிபறிக்க லெனினுடன் முரண்படாத காலம் எதுவும் திரோஸ்கிக்கு கிடையாது. புரட்சிக்கு பிந்திய லெனின் தத்துவார்த்த நீண்ட போராட்டங்களை, திரொஸ்கிக்கு எதிராகவே நடத்தவேண்டிய துரதிஸ்டம் லெனினுக்கு ஏற்பட்டது. பல்வேறு விடையங்களில் இந்த நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டது. புரட்சிக்கு பிந்திய விடையங்களில் லெனின் அவதானம் செலுத்த முடியாத அளவுக்கு, திரொஸ்கியின் எதிர்புரட்சிகர பாத்திரமே லெனின் நேரத்தையே மட்டுப்படுத்தியது. லெனின் மறைவின் பின் இதே நிலை ஸ்ராலினுக்கு ஏற்பட்டது.

இன்று இதை மூடிமறைக்க ஸ்ராலினிசம் என்று கூறி கொச்சைப்படுத்த முனைவது லெனினிசத்தைத் தான். அதாவது மார்க்சியத்தைத் தான். இதனால் தான் சுயநிர்ணயத்தை மிக மோசமானதாக காட்டி, புலிப் பாசிச துணையுடன் இழிவாடுகின்றனர் திரொஸ்கிகள். இவர்கள் இப்படி என்றால் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் சுயநிர்ணயத்துக்கு தனது ஏகாதிபத்திய சார்புக்கு ஏற்ப புது விளக்கம் அளிக்கின்றார். 11.11.2006 ஜெர்மனி ஸ்ருட்கார்ட்டில் நடந்த புலியெதிர்ப்பு கூட்டம் ஓன்றில் 'மாற்று அரசியலை நோக்கிய பார்வை" என்ற தலைப்பில் 'சுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் தமது சுயவிருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயமாகவும், சுதந்திரமாகவும், தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும். மக்களின் விருப்பமும், அங்கீகாரமுமே அரசின் ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பாகும்." என்கின்றார். மக்கள் வாக்கு போடுவது தான் மக்களின் சுயநிர்ணயம் என்கின்றார். அதை அவர் 'மக்களின் இறைமை அதிகாரம் வாக்குச் சீட்டின் மூலம் பிரயோகிக்கப்படுகிறது" என்கின்றார். சுயநிர்ணயத்தை திரிப்பதில் புலிகளின் தம்பி தான் நாங்கள், ஆனால் ஜனநாயகவாதி என்கின்றனர். சுயநிர்ணயத்தை இப்படி தத்தம் நோக்குக்கு ஏற்ப திரிப்பது, மறுப்பது இவர்களின் கைக்கூலித்தனத்துக்கு ஏற்ப கைவந்த கலையாகின்றது. இதையே தான் மற்றொரு கடைக்கோடியில் நின்று திரொஸ்கிய புலியெதிர்ப்பு கும்பலும் செய்கின்றது.

திரொஸ்கிய லெனினிய விரோத கருத்தை இன்று மறுபடியும் ஓப்புவிக்கின்றனர். சுயநிர்ணயம் என்ற லெனினிய சகாப்தம் முடிந்துவிட்டது என்றால், அதற்கு பதிலாக என்ன வந்துள்ளது. தேசங்களை, தேசியங்களை உலகமயமாதல் பொருளாதாரம் சூறையாடவில்iiயா? புலிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை தேசத்தை, தேசியத்தை மறுதலிக்கவில்லையா? மக்களுக்கு சுயநிர்ணயம் கிடையாது என்று சொல்வதில், புலிகள் முதல் திரொஸ்கிகள் வரை ஓரே கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இதையே ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் மற்றொன்றாக திரித்து மறுக்கின்றார். இவற்றை எல்லாம் மறுத்தபடி மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த, தன்னியல்பாகவே தாம் அறியாமால் இதைக் கோருகின்றனர். இதற்காக சூக்குமமாக தமது சொந்த வாழ்வின் ஊடாக போராடுகின்றனர். இது மிக நுட்பமானது ஆனால் உள்ளடக்க ரீதியானது.

இந்த நிலையில் சுயநிர்ணயத்தைக் கோரும் பாட்டாளிவர்க்கம், தனது வர்க்க நிலை காரணமாக இதற்கு எதிரான அனைத்தையும் எதிர்த்து போராடுகின்றது. அதுவும் குறித்த தேசிய எல்லைக்குள் இது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்க புரட்சிகள் சாராம்சத்தில் தேசியமாகவே உள்ளது. உலகில் ஓரே நாளில் ஒரே வினாடியில் உலகமயமாதலை எதிர்த்து புரட்சி வந்துவிடாது. இதை வரலாறு காட்டியுள்ளது. எதார்த்தம் இதை நிறுவுகின்றது.

நாடுகளின் ஏற்றத் தாழ்வான பொருளாதாரம், சமூகங்களிடையே வேறுபட்ட முரண்பாடுகள், முரண்பாடுகளின் ஒரு சீரற்ற தன்மை, புரட்சிக்குரிய தயாரிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புரட்சிக்கு தலைமை தாங்கும் தலைமைகளின் சீரற்ற பார்வை, பாட்டாளி வர்க்க கோட்பாட்டு ரீதியான உள்வாங்கல்களிலும் அதை பிரயோகிப்பதிலும் உள்ள குறைபாடு, தலைமைகள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதும், நாடுகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது போன்ற பல்வேறு காரணங்கள் தேசங்களின், தேசியத்தின் தனித்துவத்தை நிர்ணயம் செய்கின்றது. நாடுகளின் சுயநிர்ணயத்தை பாதுகாப்பதை, தற்பாதுகாப்பதை கோருகின்றது. பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய உணர்வு பெற்று இருப்பதை, அதை நடைமுறையில் செயல்படுத்துவதை இது மறுதலித்துவிடவில்லை. தேசங்கள், தேசியத்தின் உள்ளடக்கத்தை இதை முரணாக்கிவிடுவதில்லை.

சர்வதேசியத்தை தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது, தேசியத்தை சர்வதேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது முற்றிலும் தவறானதும் உள்நோக்கம் கொண்டதுமாகும். இதை தமிழ் மக்களின் எதிரிகள் அனைவரும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். தேசியம் இரு கூறுகளாகவே எதார்த்தத்தில் இருந்தது, இருக்கின்றது.

1.பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கூறு

2.முதலாளித்துவ தேசியக் கூறு.

இரண்டுக்கும் தனித்தனி நோக்கம் உண்டு. புலிகள் பாட்டளிவர்க்க தேசித்தையோ, முதலாளித்துவ தேசியத்தையோ முன்னெடுக்கவில்லை. அது தேசியத்தை மறுக்கும் ஓரு இராணுவ பாசிச மாபியாக் குழு. அது ஓரு இனத்தின் தேசியக் கூறை தான் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டு தான், தன்னைத் தான் நிலை நிறுத்த முடிகின்றது. இந்த உண்மையை இனம் கண்டு, தமிழ் மக்களின் தேசியக் கூறை (பாட்டாளி வர்க்க கூறு, முதலாளித்துவக் கூறு) வேறுபடுத்தி, அதைப் புலியில் இருந்து தனிமைப்படுத்தி போராடாத எமது வரலாறும் எமது கோட்பாடுகளும் தான் புலியின் அரசியல் இருப்பாகின்றது. புலியின் இருப்புக்கு யார் காரணம் என்றால், மக்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் தேசியக் கூறை புலியில் இருந்து பிரித்து, அதற்காக போராடாத பாட்டாளி வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ பிரிவுகளின் கோட்பாட்டு தெளிவுமின்மையும் நடைமுறையின்மையும் தான் இன்றுவரை காரணமாக உள்ளது. இதை மறுதலிக்கும் திரோஸ்கிய புலியெதிர்ப்பு, இலங்கை அரசின் பின் விசுவாசமாக கோட்பாட்டு ரீதியாகவே வாலாட்ட வைக்கின்றது.

தேசியத்தில் உள்ள பாட்டாளி வர்க்க சர்வதேசிய கூறே இன்னமும், அடிப்படையான புரட்சியின் முக்கியமான உந்துவிசையாகவுள்ளது. முதலாளித்துவத்தின் தேசியக் கூறு, எதார்த்த்ததில் பலவீனமாகியுள்ளது. முதலாளித்துவ தேசியக் கூறை எந்த மூன்றாம் உலக நாட்டு (கியூபா உட்பட, ஆனால் வேறுபாடு உண்டு) அரசுகளும் பின்பற்றவில்லை. மாறாக அவ் அரசுகள் உலகமயமாதல் அமைப்பின் ஓரு அடியாட்படையாக கூலிக்கும்பலாகவே வீழ்ந்து கிடக்கின்றது. உள்ளுர் உற்பத்தி முறையில் உள்ள தேசிய முதலாளித்துவ கூறுகள், தமது உற்பத்தியில் உலகமயமாதல் உற்பத்திக்கு எதிராக தமது தற்காப்பை அடிப்படையாக கொண்டு போராட முனைகின்றது. ஒன்றில் மரணிக்கின்றது அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரத்துக்குள் உறுஞ்சப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு கணமும் தேசிய உற்பத்திகள் கடுமையான போராட்டத்தை சதா நடத்துகின்றது.

இந்த நிலையில் தான் பாட்டாளி வர்க்க தேசியம் மிக முக்கியமான புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றது. தேசிய உற்பத்தியை பாதுகாக்க முனைப்பாக முனைகின்றது. தனது சொந்த வாழ்விற்கான சமூக ஆதாரத்தை அழிப்பதை அது மறுதலிக்கின்றது. தனது உழைப்பை பிடுங்கும், அதை மறுதலிக்கும் உலகமயமாதலை எதிர்த்து நிற்கின்றது. உலகமயமாதல் உற்பத்தி தேசிய உற்பத்தியை சுரண்டுவதை, அதை அழிப்பதை மறுதலிக்கின்றது. தனது வாழ்வு சார்ந்து, தேசிய மொழி பண்பாடு என அனைத்தையும் பாதுகாக்க முனைகின்றது. சுயநிர்ணயம் என்பது உலகமயமாதலை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. தனி மனிதன் தனது சுயநிர்ணயத்தை கோருவது எவ்வளவு முக்கியமோ, அதுவே தேசத்துக்கும் பொருந்தும். தனிமனித சுயநிர்ணயம் மற்றவர் சுயநிர்ணயத்தை மறுத்தல் அல்ல, மாறாக அங்கீகரித்தலாகும். இதுவே தேசியத்துக்கும் பொருந்துகின்றது. தனிமனிதன் தனது சுயநிர்ணயத்தைக் கோருகின்ற போது, அதை தேசத்துக்கு மறுப்பது அபத்தமாகும்.

அபத்தமாகவே சிந்தித்து அலம்பும் தமிழரசன் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும். புகலிட நாடுகளில் தம்மை இடதுசாரிகளென்று கருதிக்கொள்ளும் ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள் தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்." என்று எங்களையே குறிப்பிடுகின்றார். பாசிசத்தை எதிர்த்து தொடர்ச்சியாக நாங்கள் போராடி வருகின்ற எமது காலத்தில், இந்த திரொஸ்கிய குசும்புகள் எந்த உலகத்தில் இருந்தனர். எங்கே இந்த பாசிசத்தை எதிர்த்து நின்றனர் என்று தேடினாலும், எங்கும் கிடைக்குதில்லை. அண்மைக்காலமாக அன்னக்காவடியாட்டம் தேனீக்கு பின்னால் பிரதிட்டை செய்தவர்கள், இன்று ஆகாகா யுகப் புரட்சி என்கின்றனர். யாருடன் எப்படி என்றால் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செய்யப்போவதாக பிதற்றுகின்றனர். ஆகவே 'பழந்தோம்பு" என்று கிண்டல் அடிக்கின்றனர்.

'தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்" என்ற எதிர்வு கூறலை எம்மை நோக்கிக் கூறுகின்றனர். எப்படித்தான் இந்த எதிர்வு கூறலை கூற முடிகின்றது என்றால், எங்கள் கருத்துகளை விமர்சிக்க முடியாத மொத்த விளைவே எதிர்வு கூறலாகின்றது. இப்படித் தான் அரசியல் சேறடிக்க முடிகின்றது. பிரச்சனையை நேரடியாக விவாதிக்க துப்பேயில்லை. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்கின்றனர். இது புலிகள் தமிழ் தேசிய விடுதலை நடத்துவதாக, திரொஸ்கிய மதிப்பீட்டின் முடிவில் இருந்து வெளிப்படுகின்றது. நாங்கள் அப்படி மதிப்பிடவில்லை. இது அவர்களுக்கும் எமக்குமான தெளிவான அரசியல் வேறுபாடு. இப்படித் தான் அனைத்து சர்வதேச நிலைபாட்டிலும் வேறுபாடு உண்டு. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்று கூறுவதன் மூலம், திரோஸ்கிகள் உள்ளடக்கத்தில் ஆச்சரியப்படதக்க வகையில் புலிகளின் கோட்பாட்டு ரீதியான உடன்பாட்டுக்குள் புலிகளின் தேசிய ஆசான்களாகிவிடுகின்றனர். புலிகள் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை என்ற எமது அரசியல் நிலை மட்டும் தான், புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றது. மற்றவை எல்லாம் புலியெதிர்ப்பை அரசியலாக முன்வைக்கின்றது. ஆகவே மாற்று அரசியல் வழியற்று, அரசு மற்றும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு துணைபோவதையே அரசியலாக்கின்றது.

நாங்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை உயர்த்துவதால் அதை 'ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள்" என்கின்றனர். திடீரென பாசிசத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து புரட்ட வந்தவர்கள், இப்படி புலம்பவது நிகழ்வது உண்டு. சுயநிர்ணயத்தை உயர்த்துவதானது, பாசிசத்தை பாதுகாப்பது எனக்கூறி வட்டமடிக்கின்றனர். ஆனால் எதார்த்தம் சார்ந்த எமது போராட்ட வரலாறு, எமது கோட்பாட்டு தெளிவு இலங்கையில் மிகத் தனித்துவமானதும், தெளிவானதுமாகும். யாருக்கும் நாம் சோரம் போனது கிடையாது. கோட்பாட்டு ரீதியாக யாரும் செய்ய முடியாததை 'பழந்தேம்பு"கள் ஆகிய நாம் நடைமுறையில் செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் கண்ட நெருக்கடிகள், அவதூறுகள், இழிவாடல்கள் எல்லையற்றது. நாம் அதை துணிச்சலாக எதிர்கொண்டு, மக்களின் விடுதலைக்காக தனிததுவமாகவே கோட்பாட்டு துறையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.

'பழந்தேம்பு" என்று கூறி சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வை வைக்கின்றீர்கள். தமிழ் மக்களுக்கு தேசியப் பிரச்சனை இல்லை என்பதே, நேர்மையாக சொல்லமுடியாத உங்கள் உள்ளார்ந்த நிலை. சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், ஜே.வி.பி போல் பதில் சொல்ல முனைகின்றீர்கள். ஆனால் சொல்லும் அரசியல் நேர்மை துணிவு கிடையாது. அலட்டலே எஞ்சிவிடுகின்றது. உங்கள் புலியெதிர்ப்பு தோழமை பூண்டு, ஜே.வி.பியை இனவாதிகள் அல்ல என்கின்றனர். இலங்கையில் இனவாதிகளாக 'சிஹல உருமய போன்ற சிங்கள இனவாதப் போக்கின் அழிவைத் தடுத்து நிறுத்த முயலும் சிறிய இனவாத சக்திகள் தோன்றிய போதும்" என்று கூறி, இனவாத அமைப்பாக எதுவுமில்லை என திரித்து காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்றார்கள் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும்" இதன் சாரம் இலங்கையில் பிரதான எதிரி அரசல்ல, புலி என்பதாகும். நாங்கள் இதைத் தெளிவாக மறுதலிக்கின்றோம். எமது முதன்மையான எதிரி புலியல்ல, பேரினவாத அரசே. இதன் பின்னுள்ள ஏகாதிபத்தியமுமே. ஏகாதிபத்தியம் வேறு இலங்கை அரசு வேறல்ல. 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று ஊரையே ஏமாற்ற கரடிவிடத் தேவையில்லை. இலங்கை அரசு ஜனநாயக அரசல்ல. மாறாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஆட்சியாளராக செயல்படும் பேரினவாத அரசு, பாசிசத்தையே அடிப்படையாக கொண்டது.

புலிப் பாசிசம் மக்களின் முன் நேரடியாக அம்பலமாகின்றது. அரச பாசிசம் மறைமுகமாக, ஆனால் கொடூரமாக செயல்படுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பேரினவாத பாசிசம் அங்கீகரித்தால் அல்லது ஒரு தீர்வை வழங்கினால் புலிபாசிசத்தின் முடிவு தீர்மானகரமாகவே நிகழ்ச்சிக்கு வந்துவிடும்.

புலிபாசிசத்தை பாதுகாப்பது பேரினவாத பாசிசமே. பேரினவாத அரச பாசிசம் தான், புலிப் பாசிசத்தின் அரசியல் மூலம். இது கூடத் தெரியாத மலட்டு அரசியல் தான் திரொஸ்கியம். மக்கள் பலத்தை சார்ந்து நிற்பதையும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க மறுப்பதுவும் திரொஸ்கியத்தின் மையக்கூறாகும். அது 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று கூறி, மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்று நாம் கூறும் போது, திரொஸ்கிகள் அதை தமது திரொஸ்கிய கருத்துக்கு ஏற்ப திரிக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்பது, அந்த மக்கள் தமது சொந்த தேசிய பொருளாதாரத்தைக் கொண்டு வாழ்வை தீர்மானிக்கவும், அது சார்ந்த பண்பாட்டு மொழியை அடிப்படையாக கொண்ட ஒரு தேசமாக இருக்க கோருவதையே உள்ளடக்கியது. இதன் மூலம் மற்றைய சமூகங்களின் பரஸ்பர இருப்பையும், அவாகளின் உரிமையையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கின்றது. எல்லா மக்களைப் போலவும், தேசிய அடிப்படையிலான தேசியத்தைச் சார்ந்து வாழும் ஜனநாயக உரிமையை மறுப்பது என்பதே, திரொஸ்கியத்தின் மைய அரசியலாக உள்ளது.

இந்த திரொக்ஸ்கி முரண்பாட்டில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" என்கின்றனர். நல்லது நண்பர்களே. நீங்கள் சரியான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை, மக்களை அதற்காக ஆயுதபாணியாக்கி நடத்த வேண்டியது தானே. இது மட்டும் தான் சரியான வழி. அதைச் செய்ய வேண்டியது தானே. இது மட்டும் தான் புலிப் பாசிசத்தை ஒழிக்கும். ஆனால் இதை கேள்வியாக எழுப்பும் நீங்கள், அதை நடைமுறையில் மறுதலிக்கின்றீர்கள். இந்தக் கேள்வியை எம்மை மடக்க, எமது இன்றைய நிலையைக் கேலிசெய்ய முட்டாள் தனமாக முன்வைக்கின்றீர்கள். இதுவே உங்களுக்கு ஏன் பொருந்தாது?

'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" இப்படி நாங்கள் சொன்னது கிடையாது. எமது கடந்தகால விமர்சனங்கள் முதல், நாங்கள் நடைமுறையில் போராடிய காலங்களில் கூட, இப்படி நாங்கள் ஒரு அரசியல் வழியை பின்பற்றியது கிடையாது. புலிகளை ஜனநாயக உபதேசங்கள் மூலம் மாற்ற முடியாது. இது எங்கள் அரசியல் வழி கிடையாது. நாங்கள் புலிகளை விமர்சிக்கின்றோம் என்றால், விமர்சனம் மூலம் சிந்திக்கத் தூண்டி ஒரு மாற்றத்தை நோக்கிய மாற்று வழிக்காகத் தான். ஒரு விமர்சனம் என்பது மாற்றத்தைக் கோருவதுதானே ஒழிய திருந்துவதையல்ல.

மாற்றத்தை மக்கள் மட்டும் தான் தமக்காக நடத்தமுடியும். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக ஆயுதத்தை ஏந்துவதன் மூலம் தான், மாற்றம் உண்மையானதாக அமையும். புலிகளே அழிந்தாலும், இதுவே அனைத்தும் சார்ந்த உண்மையாகும். எம் மீதான விமர்சனம் குற்றச்சாட்டு என்ற வகையில், நாம் செய்வது என்பது நடைமுறை சார்ந்த ஓரு போராட்டத்தைத் தான். கடந்தகால இடதுசாரிகளின் தவறுகளால், (எம்மை உள்ளடக்கியது தான்) துரதிஸ்டவசமாக சூழல் சார்ந்து நடைமுறையில் மக்களுடன் நேரடியாக நாம் இல்லையென்ற போதும், நாம் சமூகத்தின் மத்தியில் நடைமுறை சார்ந்த வகையில் நிற்கின்றோம். இதை யாரும் செய்யவில்லை. மக்களின் பிரச்சனைகள் மீது, அவர்களை கருத்தியல் ரீதியாக சூழல் சார்ந்த எல்லைக்குள் மக்களை அணுகுவதை நாம் தள்ளிப் போடவில்லை.

இந்த இடத்தில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது?" நல்லதொரு கேள்வி. இதற்கு தெளிவான பதிலும், நடைமுறையையும் கோருகின்றது. தமிழ் தேசிய விடுதலை இன்று நடைபெறவில்லை என்று தெரிகின்ற போதே, உண்மையான தேசிய விடுதலைக்கு போராட வேண்டித் தானே அனைவரையும் கோருகின்றது அல்லவா! அதைத்தான் நாங்கள் நடைமுறையில் முன்வைக்கின்றோம். இதைத்தான் திரோஸ்கிகள் முதல் அனைத்து புலியெதிர்ப்பாளர்களும் எதிர்க்கின்றனர். இதுதான் எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளில் மையமானது. இதனால் எம்மை புலி என்கின்றனர். நன்றாக உங்கள் எதிர் புரட்சிகர மக்கள் விரோத தன்மைக்கு ஏற்ப உரத்துச் சொல்லுங்கள்.

தமிழ் தேசிய விடுதலையை சரியாக முன்னெடுத்தல் என்பதே, தமிழ் மக்களின் மீதான அனைத்து பிரச்சனைக்குமான சரியான அரசியல் தீர்வாகும். இதற்கு மாறாக கேள்வியிலேயே அதை மறுப்பது தான் 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்ற வாதம். இப்படி எதிர்நிலையில் நின்று வள்ளென்று குலைக்க முடிகின்றது.

அடுத்து எம்மை இழிவுபடுத்தவே 'புலிகளின் அடிமட்ட அங்கத்தவர்களை பாசிசத்திலிருந்து விடுவித்து ஜனநாயகப் போதமூட்டி தமிழ்த் தேசியத்தின் பரிசுத்தமான சக்திகளாக்க முடியுமா? இது முடியுமென்று சில ஸ்ராலினிச அரசியல் போதனையாளர்கள் பஞ்சணைக் கனவுகளைக் கொண்டுள்ளனர்." நாங்கள் பஞ்சணை கனவு காண்கின்றோம் என்றால், புலியின் பின் சென்றவர்களை என்ன செய்வது? நீங்கள் வழிகாட்டுவது போல், கொல்வதற்கு துணை செய்யக் கோருகின்றீர்கள்? அதாவது இலங்கை அரசின் வெற்றிக்கு ஆதரவளித்து விபச்சாரம் செய்ய கோருகின்றீர்களா? இது எமது வழியல்ல, இது திரோஸ்கிய விபச்சார வழியாகும். இந்த திரோக்சிய வழி என்ன? 'இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும்" என்பதே.

புலிகளில் உள்ள பத்தாயிரக்கணக்கான அவர்களின் தியாகமனப்பான்மையை இழிவுபடுத்துவதோ அல்லது அவர்களை அதற்காக கொன்று போட உதவுவதோ எமது அரசியலாக ஒருநாளும் இருக்கமுடியாது. இது உள்ளடக்கத்தில் மக்களுக்கு எதிரான கூலிக் குழுக்களின் படுகொலை அரசியலாகும். புலிகளில் உள்ள ஒவ்வொருவரினதும் தியாக மனப்பான்மையை வென்றெடுக்கும் வகையில், தவறான வழியில் செல்வதை தெளிவுபடுத்தி அவர்களை கொல்வதற்கு பதில், மக்களுக்காக சிந்திக்க தூண்டவேண்டும். சொந்த தாய் தந்தைக்காக, தனது சமூகத்துக்காக போராடுவதன் அவசியத்தை, அந்தக் கடமையை உணரவைத்து வெல்லப்பட வேண்டும். இதை நாங்கள் மட்டும் தான் செய்ய முனைகின்றோம். இது எம்முன்னுள்ள கடுமையான ஆனால் தெளிவான அரசியல் பணியாகும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வாக அனைத்தும் மாற்றம் அடைகின்றது. இப்படித்தான் மக்கள் புரட்சி நடக்கின்றது. மக்கள் புரட்சிக்கு புலியின் அடிமட்ட உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று, நாங்கள் உங்களைப் போல் கூறும் இயங்கியல் மறுப்பாளர்கள் அல்ல. நீங்கள் கூறுவது போல் 'புலிகள் அறிவுக் குறைபாட்டாலா ஜனநாயகத்தை அறியாததாலா பாசிசவாதிகள் ஆனார்கள்? சாதாரண முதலாளித்துவ ஜனநாயகத்திற்குள் கூட வரமுடியாத பாசிஸ்டுகள்தான் அதில் நிறைந்துள்ளனர்." இது அப்பட்டமான இயங்கியல் மறுப்பாகும். பாசிசம் பற்றிய அறிவுக் குருட்டின் இயலாமை, இயங்கியல் மறுப்பாகின்றது. பாசிசம் என்பது சுரண்டும் முதலாளித்துவ ஜனநாயக வடிவத்தில் ஏற்படும் நெருக்கடியில் ஏற்படும் பண்பு மாற்றம் தான் பாசிசம். இதன் பிரதிநிதிகள் தான் புலிகள். இதற்கு வெளியில் அல்ல. இது கட்டமைக்கப்பட்ட வடிவங்களில் புலிக் குழுவுக்கு என்று சிறப்பு அம்சங்கள் உண்டு. பாசிசத்தின் எல்லா இடங்களிலும் இது காணப்படுகின்றது. இல்லாது 'புலிகள் மக்கள் இயக்கமல்ல. மாறாக இராணுவரீதியிற் கட்டப்பட்ட ஆயுதமேந்திய மக்களுக்குப் புறம்பான குழுவாகும்." என்பதால், அது பாசிசமாக இருப்பதில்லை. மாறாக பாசிசம் சுரண்டல் வடிவத்தின் ஒரு பண்பு மாற்றத்துக்குள்ளான ஒரு வடிவம் தான். அதன் பிரதிநிதிகள் தான் புலிகள். புலிக்கு எதிரான போராட்டம் சாராம்சத்தில் சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டம். இதைப்பற்றி யாரும் பேசுவது கிடையாது. அதனால் தான் பாசிச அரசியல் உள்ளடகத்தையே திரிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடுவதைத் தவிர, மாற்று வழிகள் அனைத்தும் அது சார்ந்த கோட்பாடுகளும் அனைத்தும் விதிவிலக்கற்ற வகையில் படுபிற்போக்கானவையாகும். இந்த வகையில் மக்களுக்கான எமது போராட்ட வழி மிகத் தெளிவானது.

No comments: