ஜே.வி.பி. கட்சி ஒரு இனவாதக் கட்சியா? இல்லையா? என்ற அடிப்படையில் 12.5.2005 அன்று ரி.பி.சி. வானொலியில் ஒரு குதர்க்கமான விவாதத்தையே நடத்தினர். புலிகள் ஆதரவு நபர் ஒருவர் ஜே.வி.பி.யை இனவாதிகள் என்று கூற, ரி.பி.சி.யின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் இனவாதிகள் இல்லவே இல்லை என்றார். இதற்கு ஆதரவாகத் தேனீ இணையத்தள ஆசிரியரும் களமிறங்கி பக்கப்பாட்டு பாடினார். இதைத் தொடர்ந்து இந்தக் கூத்தரங்கம் தொடருகின்றது.
புலி அல்லாதவர்களுக்குப் புலிக் காய்ச்சல் பிடித்த பின்பாக, எல்லாவற்றையும் புலிப் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதன் மொத்த விளைவுகளே இது. இவர்கள் உலகத்தையே புலிக் கண்ணாடி கொண்டு பார்ப்பதன் மூலம், உலகத்தின் பொதுப்போக்கையே புலிக்குச் சாதகமா? பாதகமா? என்ற அடிப்படையில் அனைத்தையும் திரித்து விடுகின்றனர். புலிகள் அல்லாத மாற்று இதுவே என்ற ஒரு கண்ணோட்டத்தை, வானொலி மற்றும் இணையங்கள் ஊடாகத் தவறாகப் புனைந்து விடுகின்றனர்.
இவர்கள் யாருக்கும் மக்களைப் பற்றி ஒரு துளியும் அக்கறை கிடையாது. ஜனநாயகம், சுதந்திரம் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மிகக் கேவலமாகக் கொச்சைப்படுத்தி, அனைத்தையும் புலிகளுக்கூடாகவே விளக்கும் எல்லை வரை சென்றுள்ளனர். புலியல்லாத கருத்துக்களில் இவை ஊடுருவி புரையோடிக் காணப்படுகின்றது.
புலிகள் ஜே.வி.யை.யை இனவாதிகள் என்ற சொல்லுகின்றார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்தக் குழு நலனுக்கு ஜே.வி.பி.யால் ஏற்படும் குறித்த பாதிப்பில் இருந்து தான் எதிரொலிக்கின்றனர். அரசியல் ரீதியாக ஜே.வி.பி.யின் பெரும் தேசிய இனவாதத்தை அம்பலப்படுத்த முடியாத நிலையில், புலிகள் தமது சொந்த குழு நலன் சார்ந்தே இனவாதிகள் என்கின்றனர். தமது அதிகாரத்தைத் தமிழ் மக்கள் மேல் மேலும் ஆழமாக நிறுவி ஒட்டச் சுரண்ட, அவர்களுக்குத் தேவையான ஒரு கட்டமைப்புக்கான தடையைத் தான் அவர்கள் இனவாதம் என்கின்றனர். இதற்கு அரசியல் சட்ட அமைப்பு ரீதியாக ஜே.வி.பி. கொடுக்கும் எதிர்ப்பினையே இனவாதமாகப் புலிகளும், நக்கித் திரியும் புலிப் பினாமிகளும் காட்டுகின்றனர்.
இதை அரசியல் ரீதியாக ரி.பி.சி.யும், புலி எதிர்ப்பு இணையங்களும் எதிர்கொள்ள வக்கற்றுப் போகின்றன. இதனால் புலிகளின் முடிவுக்கு மாற்றாக எதிர்மறையில் அனைத்தையும் முடிவெடுக்கும் அரசியல் இழிநிலைக்கு, கண்ணை மூடிக் கொண்டு குதர்க்க வாதத்தைச் செய்கின்றனர். மறுபக்கத்தில் புலிகளின் மக்கள் விரோதப் பாசிசப் போக்கு, இவர்களின் அரசியல் மேலாண்மையைத் தக்க வைக்கின்றது. தமது அரசியல் நிலைப்பாட்டைத் தூய்மையானதாக இதன் மூலம் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் சிலருக்கு ஒளிவட்டம் போடுகின்றனர்.
இதன் ஒரு அங்கமாகவே ஜே.வி.பி.யை இனவாதிகள் அல்ல என்கின்றனர். இதற்கு ரி.பி.சி. அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் படிப்படியாக ஜே.வி.பி.யின் கொள்கை வகுப்பாளராக மாறி, அவர்களைச் சிங்கள இனவாதிகள் அல்ல என்கின்றனர். நக்கித் திரியும் புலிப் பினாமிகளைப் போல், ஜே.வி.பி. பினாமிகள் பலர் புலியெதிர்ப்பின் ஊடாக வளர்ச்சியுறுகின்றனர்.
ஜே.வி.பி.யைக் காப்பாற்ற சிவலிங்கம் கொடுத்த விளக்கமே ஆச்சரியமானது. ஜே.வி.பி. பொருளாதார ரீதியாக இனப்பிரச்சினையை அணுகுவதாகவும், பொருளாதாரக் காரணங்களால் தான் தீர்க்கப்பட முடியும் என்ற அடிப்படையில் சிந்திப்பதால், அவர்களை இனவாதிகள் அல்ல என்கின்றார். இதைப் பார்த்தால் போகிறபோக்கில் புலிக்குப் பாலசிங்கம் போல், ஜே.வி.பி.க்கு ரி.பி.சி. சிவலிங்கம் உத்தியோகபூர்வமான கொள்கை வகுப்பாளராக மாறினாலும் ஆச்சரியமானதல்ல. புலிகள் துப்பாக்கியால் அனைத்தையும் தீர்வு காண முனைவது போல், இவர்கள் புலிகளின் வக்கற்றத் தன்மையைப் பயன்படுத்தி உருவாகும் மேலாண்மையைக் கொண்டு, அனைத்தையும் புரட்டிவிடுகின்றனர்.
ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாத அரசியல் கட்சி தான். அவ்வளவு ஏன் ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சியே என்று அடித்தே கூறுகின்றோம். இதற்கான அடிப்படையான காரணம் என்ன? நாங்கள் அவர்களின் வரலாற்றில் பல தொடர்ச்சியான பேரினவாதப் போக்கையும், சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலையும் காட்ட முடியும். ஆனால் அதற்குள் இக்கட்டுரை செல்ல போதிய அவகாசமில்லை. சமகாலப் போக்கில் எதார்த்தத்தில் எப்படி சிங்கள பேரினவாதிகளாக உள்ளனர் என்பதை, தெளிவாக அம்பலப்படுத்த முனைகின்றோம்.
முதலில் ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சி அல்ல என்றால், அவர்கள் யார் என்பதைத் தெளிவாக ஒவ்வொருவரும் விளக்கவேண்டும்.
அவர்கள் முரணற்ற ஒரு முதலாளித்துவ கட்சியா? அல்லது சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியா? அல்லது பல கலவைகளைக் கொண்டு நாடகமாடும் சிங்களப் பேரினவாதக் கட்சியா? எது என்பதை முதலில் ஜே.வி.பி.க்காக வாலாட்டி நிற்பவர்கள் தெளிவாக்க வேண்டும். புலிக்குக் குதர்க்கமாகத் தமது அரசியல் மேலாண்மையைக் கொண்டு பதிலளிப்பதல்ல, மக்கள் நலன் சார்ந்த அரசியல். தமிழ் சிங்கள மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிரான வகையில் ஜே.வி.பி. பற்றி புனைந்து காட்டும் புலியெதிர்ப்பு பிரிவினரின் அரசியல் இழிநிலையை இனம் காணவேண்டியது அவசியமாகின்றது.
நாம் தெளிவாக ஜே.வி.பி. ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி அல்ல என்கின்றோம். திட்டவட்டமாகவே அவர்கள் சிங்களப் பேரினவாதக் கட்சியே என்கின்றோம். ரி.பி.சி. ஆய்வாளர் சிவலிங்கம் தமது அரசியல் ஆய்வில், ஜே.வி.பி. பொருளாதார ரீதியாகவே இனப்பிரச்சினையைப் பார்ப்பதால் அது இனவாதக் கட்சி அல்ல என்கின்றார். நகைக்காதீர்கள் நல்லதொரு வரலாற்று ரீதியான அரசியல் ஆய்வு. யாரும் இதுபோல் இதுவரை, ஜே.வி.பி.க்கு இந்தளவுக்குப் பினாமியாகவில்லை தான். தமிழ் மக்களின் சாபக்கேடு என்னவோ, பினாமியத்தில் தான் உருப்போடுகின்றதோ?
அனைத்து இனவாதக் கட்சிகளும் பொருளாதாரக் காரணங்களுக்கு ஊடாகவே இனப்பிரச்சினையைப் பார்க்கின்றன, அணுகுகின்றன. இதில் புலிகள் கூட விதிவிலக்கல்ல. பொருளாதாரக் காரணங்களால் தான் இனப்பிரச்சினை உருவாக்கப்பட்டது. அதேபோல் இதற்குள் சம்பந்தப்பட்ட அனைவரும், பொருளாதாரக் காரணங்களுடன் தான் இதை அணுகுகின்றனர். இது ஜே.வி.பி.க்கு விசேட விதிவிலக்கல்ல. இனப்பிரச்சினையில் சம்பந்தப்படும் அனைவரும் பொருளாதாரக் காரணங்களுடன் தான் அணுகுகின்றனர். சிலர் அதைப் பகிரங்கமாகக் கூறுகின்றனர். சிலர் அதைக் கூறுவதில்லை அவ்வளவே. இதை யாரும் மறுக்க முடியாது.
பொருளாதாரக் காரணங்களால் தான் இனப்பிரச்சினை உருவானது என்று கூறும் போது, அதற்கான தீர்வு தான் என்ன? இதற்குத் தீர்வு இனவாதமாக இருப்பதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான வரலாறாக உள்ளது. இதில் ஜே.வி.பி. விதிவிலக்கல்ல. முதலில் ஜே.வி.பி. இலங்கையில் குறைந்தபட்சம் இரண்டு தேசிய இனங்கள் உண்டு என்பதையே ஏற்றுக் கொள்வதில்லை. இதைவிட இரண்டு சிறுபான்மை இனங்கள் உண்டு என்பதைக் கூட கொள்கையளவில் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இனப்பிரச்சினையில் இந்த நிலைப்பாட்டை எடுக்க மறுக்கும் அனைவரும், பேரினவாதிகளாகவோ அல்லது குறுந்தேசிய இனவாதிகளாகவோ இருக்கின்றனர். இதற்கு யாரும் விளக்கு பிடித்து ஒளி காட்டத் தேவையில்லை.
இரண்டு தேசிய இனங்களும், இரண்டு சிறுபான்மை இனங்களும் இருக்கின்றன என்றால், குறித்த நாட்டில் அவர்களின் அரசியல் அதிகாரம் உறுதி செய்யப்பட வேண்டும். எந்த விசேட சலுகையையும் எந்த இனமும் அனுபவிக்காத சட்டத்திட்டங்களின் மூலம், இனங்களின் ஐக்கியப்பட்ட ஆட்சி அமைப்புக்கு ஏற்ற ஒரு அரசு இருக்கவேண்டும். இது சுயநிர்ணய அடிப்படையில் அமைய வேண்டும். அப்படி இல்லாத நிலையில் அதை முன்வைத்து குறைந்த பட்சம் போராட வேண்டும். இதை ஜே.வி.பி. செய்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது.
இரண்டு தேசிய இனங்கள் ஒன்றுபட்ட நாட்டில் ஐக்கியப்பட்டு வாழ வேண்டுமென்றால், குறைந்தபட்சம் எந்த அரசியலை முன்னிறுத்தி கிளர்ச்சி செய்யவேண்டும். இதை மட்டும் யாரும் முன்வைப்பதில்லை. மாறாக மார்க்சிய தலைவர்களின் படங்களைத் தூக்கிக் காட்டியபடி, சிவப்புச் சட்டையைப் போட்டபடி கவர்ச்சிகரமான விளம்பரங்களால் தான் தம்மைப் புரட்சியாளராகக் காட்டுகின்றனர். இல்லை என்று மறுத்து யாரும் எதையும் நிறுவிக் காட்ட முடியாது. தமிழ்ச்செல்வன் பல்லைக் காட்டுவது போல் ஜே.வி.பி. புரட்சி வேசம் போட்டே மக்களை ஏமாற்றுகின்றது. இங்கு விளம்பர உத்திதான் அனைத்துக்குமான அரசியல் அடிப்படையாக உள்ளது.
மார்க்சிய அடிப்படையில் இருந்து இவர்கள் எதையும் மக்களுக்காகக் கற்றுக் கொடுப்பதில்லை. அவர்கள் விளம்பரத்துக்காகக் கொண்டு செல்லும் மார்க்சியத் தலைவர்களின் முரணற்ற அரசியலை, ஆணையில் வைக்க வேண்டும். ஆனால் ஜே.வி.பி. பச்சை இனவாதத்தையே அதற்குப் பதிலாக முன்வைக்கின்றனர். எப்படி என்று நாம் தெரிந்து கொள்ள, அவர்கள் படமாக மட்டும் விளம்பரம் செய்யும் லெனின், என்ன சொன்னார் என்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.
""ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும்'' என்று லெனின் கூறிய கருத்து தெளிவாகவே ஜே.வி.பி.க்கு எதிராக உள்ளது.
ஜே.வி.பி.க்கு எந்தவிதத்திலும் இது விதிவிலக்கல்ல. ஜே.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாதிகள் தான் என்பதையும், அவர்கள் ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோகும் கயவர்கள்தான் என்பதையும் லெனினின் கருத்தே தெளிவாக்கி விடுகின்றது. அதாவது இவர்கள் சிறுபான்மை இனத்தை ஒடுக்கும் கயவர்கள்தான். ஏகாதிபத்திய நோக்கத்துக்கு துணை போகின்றவர்கள்தான். இதற்கு யாரும் ஒளிவட்டம் கட்டி கொச்சையாக விளக்கம் தரமுடியாது.
1993களில் ஜே.வி.பி.யின் இன்றைய தலைவரை நான் பிரான்சில் சந்தித்த போது, தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையே மறுதலித்தார். அவர் லெனினின் தேசிய இன சுயநிர்ணயக் கோட்பாடு இலங்கைக்குப் பொருந்தாது என்றார். ஏன் பொருந்தாது என்று கேட்டால், அதற்கு இந்த மார்க்சியப் பொருளாதாரக் கோட்பாட்டாளரிடம் எந்தப் பதிலும் இல்லை. இதையே தமது அரசியல் கோட்பாடாக வரிந்ததுடன், இனவாதிகளாகவே தம்மை அரசியல்மயப்படுத்தினார்கள்.
இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரானது என்ற பெயரில், மலையகத் தமிழ் மக்களை ஒடுக்குவோம் என்ற பெயரில் ஜே.வி.பி.யின் அரசியல் வகுப்புகள் அன்று எடுக்கப்பட்டது. இது அப்படியே இன்று இடம் பெயர்ந்துள்ளது அவ்வளவே. அக்காலத்தில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு அனுசரணையாகவே ஜே.வி.பி.யின் சந்தர்ப்பவாத, இனவாத வேலைத்திட்டம் இருந்தது. ஏன் ஜே.வி.பி. தொடங்கிய வரலாறே சண்முகதாசன் என்ற தமிழனின் தலைமையில் புரட்சியா? என்ற அடிப்படையிலான காரணமும் முக்கியமாக பங்கு வகித்தது. சண்முகதாசனின் சரியான சர்வதேசிய வழிக்கு எதிராகவே ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதக் கட்சி உருவானது. ஆரம்பம் முதலே புரட்சிக்கு எதிராகத்தான், இனவாத அடிப்படையில் தனிநபர் பயங்கரவாத வழிகளில் தான் தன்னைத் தகவமைத்தது.
சிறுபான்மை தேசிய இனத்தின் பெரும் தேசிய இனவெறிக்கு எதிரான போராட்டம், பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையில் இல்லாத, படுபிற்போக்கான வலதுசாரி தலைமையில் நடைபெற்றாலும் கூட, லெனின் நிபந்தனை விதிவிலக்கற்ற ஒன்று. சிறுபான்மை தேசிய இனங்களின் படுபிற்போக்கான அரசியல் போக்குகளை விமர்சிப்பதை இது எந்த விதத்திலும் தடுக்கவில்லை. பெரும் தேசிய பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை விமர்சிக்காது, அதை எதிர்த்து அரசியல் கிளர்ச்சி செய்யாது, சிறுபான்மை இனங்கள் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியல் அனைத்தும், படுபிற்போக்கான பெரும் தேசிய இனவாதம்தான்.
சிறுபான்மை இனங்கள் தம் மீதான ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் போது, அதையும் லெனின் தெளிவாக முரணற்ற வகையில் விளக்கி விடுகின்றார்.
""சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை... தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம் என்பதை வலியுறுத்த வேண்டும்... அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும்'' என்றார் லெனின்.
இந்த அடிப்படையில் தான், நாம் புலிகளைத் தெளிவாக விமர்சிக்கின்றோம். இந்த அடிப்படையில் தான் முரணற்ற ஜனநாயகத்தை, சிறுபான்மை தேசிய இனங்களின் பால் கையாள முடியும்.
இந்த அடிப்படையில் தான் குறுந்தேசிய இனவாதிகளான புலிகளின் அரசியலை விமர்சன ரீதியாக அணுகி அம்பலப்படுத்துகின்றோம். இதனடிப்படையில் தான் தொடர்ச்சியான வீரமிக்க போராட்டம் மண்ணில் நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக 1990இக்கு முந்திய காலத்தில் உட்படுகொலை மற்றும் வெளிப்படுகொலைகளில் கொல்லப்பட்ட பலர், இந்த அரசியல் நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். அவர்களையே இன்று புலியெதிர்ப்பு அரசியல் கோட்பாட்டு ரீதியாகவே மறுதலித்துள்ளது. மாறாக அவர்களின் கோட்பாட்டுக்கு எதிராகவே, புலிகளைப் போல் மக்களுக்கு எதிராகவே புலியெதிர்ப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர்.
தேசிய இனங்கள் பால் சுயநிர்ணய அடிப்படையில், அணுக மறுக்கின்ற, அனைத்துப் போக்குகளும் படுபிற்போக்கானவையே. இதனடிப்படையில் விமர்சிக்கவும், போராடவும், கிளர்ச்சி செய்யவும் வேண்டும். இல்லாத அனைத்தும் குறுந்தேசிய இனவாதகமாகவும், பெருந் தேசிய பேரினவாதமுமாகவே எஞ்சுகின்றன. இதனடிப்படையில் தான் சிறுபான்மையைச் சேர்ந்த நாம் புலிகளையும் விமர்சிக்கின்றோம். பெரும்பான்மையைச் சேர்ந்த ஜே.வி.பி.யையும் விமர்சிக்கின்றோம். இதற்கு வெளியில் அல்ல. அதாவது எங்கெல்சு கூறியது போல் ""அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒரேவிதமான நலன்களையும் ஒரேவிதமான எதிரியையும் கொண்டுள்ளனர். மேலும் ஒரேவிதமான போராட்டத்தையே அவர்கள் நடத்த வேண்டியுள்ளது'' என்ற உள்ளடக்கத்தின் அடிப்படையில்தான், நாம் அனைத்தையும் அணுகுகின்றோம்.
புலிகள் போன்ற பாசிச அமைப்புகள் சுயநிர்ணய அடிப்படையில் செயல்படாது குறுந்தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பதால், எந்தவிதத்திலும் சிறுபான்மை தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமையை மறுக்க முடியாது. இது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பெரும்பான்மையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்க முடியாது. மறுக்கின்ற அனைத்தும் நிச்சயமாக சிங்களப் பேரினவாதம் தான். ஏகாதிபத்திய நலனுக்கு இது துணை போவதுதான். வரலாற்று இயக்கத்தை எப்போதும் எங்கும் தீர்மானிப்பவர்கள் மக்களே ஒழிய, எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அல்ல. ஒரு பிற்போக்கான அதிகாரக் கட்டமைப்பு பிரிந்து சென்றால், அந்தப் பிற்போக்குக்கு எதிரான போராட்டத்தை அந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களின் போராட்டங்கள் தான் அதற்கு முடிவு கட்ட வேண்டுமே ஒழிய, பேரினவாதச் சக்திகளோ, ஒடுக்கும் இன மக்களோ அல்ல.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஜே.வி.பி. அடிப்படையில் ஒரு சிங்கள பேரினவாதத்தின் கட்சியாகவே உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் முரணற்ற வகையில் செயல்பட முடியாத ஒரு இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. இந்தக் கட்சி சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை முன்வைத்தும், தமிழ் மக்கள் மத்தியில் ஐக்கியத்தை வலியுறுத்தியும் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரத்தைச் செய்ய முடியாத கட்சி, ஒரு சர்வதேசியக் கட்சியல்ல. மாறாகப் பேரினவாதத்தினைச் சுற்றிவளைத்து பிரச்சாரம் செய்யும், ஒரு பச்சை இனவாதக் கட்சிதான் ஜே.வி.பி. காலம்காலமாகத் தமிழ் மக்களை ஒடுக்கியே வளர்ச்சியுற்ற பேரினவாத இனவாதக் கட்சியுடன், கூட்டுச் சேர்ந்து இனவாதத்தை ஒழிக்கும் பொருளாதார அரசியலை நடத்துகின்றனராம். நம்புங்கள். இப்படி ரி.பி.சி.யின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் மூச்சிழுக்க அறிவிக்கின்றார். தமிழ் மக்களை ஒடுக்கி உருவான ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் அரசு இயந்திரத்தில் இருந்தபடி, பொருளாதார விடுதலையைப் பற்றியும், அதனூடாகத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் வழிகாட்டுவதாகக் கூறுவது நகைப்புக்குரிய அரசியல் சூழ்ச்சியாகும்.
ஜே.வி.பி. கூட்டுச் சேர்ந்து உருவாக்கிய இந்த அரசு இயந்திரமே, சிங்களப் பேரினவாதத்திலானது. இந்த அரசு இயந்திரம் சிங்களப் பேரினவாதமாக உள்ள நிலையில், அதன் உறுப்பாக அதன் சூழ்ச்சிமிக்க நடவடிக்கையில் இணைந்து நிற்கின்றது. ஜே.வி.பி. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை பேரினவாத நோக்கில் இருந்தே அணுகுகின்றது. குறைந்தபட்சம் பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து சீரழிந்துள்ள போலி கம்யூனிஸ்ட் கட்சி அளவுக்குக் கூட, முற்போக்காகச் செயல்பட முடியாத அளவுக்கு ஜே.வி.பி. இனவாத அரசியலையே முன்வைக்கின்றனர். இங்கு ஜே.வி.பி. பாட்டாளி வர்க்க கட்சியாகக் கூட இருக்க வேண்டாம், குறைந்தபட்சம் முரணற்ற கட்சியாகக் கூட இல்லை. ஒரு தேசிய பூர்சுவாக் கட்சி எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாட்டைக் கூட ஜே.வி.பி. எடுக்கவில்லை. மாறாக உலகமயமாதல் என்ற கட்டமைப்பின் எல்லைக்குள், தாளம் போடும் ஒரு இனவாதக் கட்சியாகவே ஜே.வி.பி. உள்ளது.
புலிகளை ஒடுக்க இந்தியாவுடன் கூட சேர்ந்து கொள்ளும் சமிக்கைகளைக் கூட அப்பட்டமாகவே விடுகின்றனர். சுனாமியின் பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட படைகள் நாட்டில் இறங்க கம்பளம் விரித்து விட்டவர்களே இவர்கள் தான். அன்று வந்த அமெரிக்கா இராணுவம் மீண்டும் செல்லாது இலங்கையில் தங்கி நிற்பதற்குத் துணையாக இருப்பவர்களும் இவர்கள் தான். புலிக்கு எதிராக யாரெல்லாம் எதைச் செய்கின்றனரோ, அவற்றை விசுவாசமாக வாலாட்டி ஆதரிக்கின்றனர். புலிக்கு ஆதரவான அனைத்தையும் எதிர்க்கின்றனர். இதை யாரும் எவரும் மறுக்க முடியாது. அரசின் பங்காளிகள் என்ற வகையில், தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்தையும் ஆதரிப்பதும், தமிழ் மக்களுக்குச் சாதகமான அனைத்தையும் எதிர்ப்பதும் ஜே.வி.பி.யின் சமகால அரசியல். ஜே.வி.பி.யின் நவீனப் பொருளாதார விளக்கம் இதைத்தான் செய்கின்றது என்றால், புலியெதிர்ப்பு அணியினரும் இதையே செய்கின்றனர். இதனால் தான் ஜே.வி.பி.யின் பினாமியாக நக்கத் தொடங்குகின்றனர்.
புலிகள் கோரும் கட்டமைப்புக்களை எதிர்ப்பதில் ஜே.வி.பி.யும், புலியெதிர்ப்பினரும் கூட்டு சேர்ந்து நிற்கின்றனர். ஐக்கியத்தின் அடிப்படையில், பிரிந்து போகாத ஒரு இணக்கப்பாட்டைப் புலிகள் வந்தடைவார்களாயின், அதற்கான முயற்சியை எதிர்ப்பது பிரிவினையைத் தூண்டுவதாகவே அமையும். இங்கு சுயநிர்ணய உரிமைக்குப் புலிகள் துரோகம் இழைத்தாலும் சரி, படுபிற்போக்கான ஒரு தேசிய இணக்கப்பாடான ஒரு கட்டமைப்பை உருவாக்கினாலும் சரி, மக்களுக்கு எதிரான அனைத்தையும் விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டுமே ஒழிய, தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு உருவாக்கப்படும் தீர்வை மறுப்பது அப்பட்டமான பெரும் தேசிய இனவாதமாகும். தீர்வு தவறானது என்றால் அதற்கு மாற்றான ஒன்றை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும். மறுதலிப்பு என்பது, மாற்றுத் தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். ஜே.வி.பி.யும் சரி, புலியெதிர்ப்பு அணியினரும் சரி எங்கே அப்படியொரு கிளர்ச்சியைச் செய்கின்றனர். மாறாக இலங்கை பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமும் புலி தொடர்பாக எடுக்கும் எதிரான நிலைப்பாட்டை ஆதரித்தபடி, சார்பான நிலைப்பாட்டை எதிர்த்தபடி, பெரும் தேசிய இனவாதக் கட்டமைப்பையே தமது சொந்த அரசியல் கிளர்ச்சியாக்குகின்றனர்.
மாறாக லெனின் எப்படி கிளர்ச்சி செய்யக் கோருகின்றார். ""எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக் கொள்வது, பிரிந்து போகின்ற பிரச்சினை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேட உரிமைகளையும் எல்லாத் தனித்துவப் போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப் பார்ப்பது.''
இதைத்தான் லெனின் ஆணையில் வைத்து தேசிய இனப்பிரச்சினையில் அணுகக் கோருகின்றாரே ஒழிய, ஜே.வி.பி.யைப் போல் சிங்களப் பேரினவாதத்தையல்ல. ஜே.வி.பி. மேலும் ஒருபடி முன்னே சென்று, பொருளாதார விடுதலைதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ற பகட்டுகின்றனர். அந்தப் பொருளாதாரத் தீர்வை முன் வைத்து அரசியல் திட்டத்தை வைக்கவோ, அதனடிப்படையில் கிளர்ச்சியோ செய்யமாட்டோம் என்கின்றனர். இதைப்போல் தான் புலிகள் தாம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் தான், தமிழ் மக்களுக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வழங்குவோம் என்கின்றனர். இப்படித்தான் பெரும் தேசிய இனவாதிகளும், குறுந்தேசிய இனவாதிகளும் தத்தம் பங்குக்கு, அனைத்து விடையத்திலும் மக்களின் முதுகில் ஏறி நின்று சவாரி செய்கின்றனர்.
எதார்த்தத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளில் அரசும் புலிகளும் இணங்கிப் போகும் மக்கள் விரோதக் கூறுகளை விமர்சிப்பதன் ஊடாகவே, மக்கள் நலன் சார்ந்த தீர்வை முன்னிறுத்த வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டே பேச்சு வார்த்தை தொடங்கிய போது, ஒரு தனி நூல் மூலம் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களையே வெளிக் கொண்டு வந்தேன். இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும் என்ற நூல் மூலம், தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது முதல், பிரச்சினைக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவாகவே சுட்டிக் காட்டினேன். பேச்சுவார்த்தை என்ற நாடகம் மூலம் மக்களுக்கு எதிரான அழுங்குப்பிடியான இழிவான சமூக விரோதப் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தும் மனித இழிவுகளை, மற்றொரு நூல் மூலம் அம்பலப்படுத்தி விமர்சித்துள்ளேன். அதாவது பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னரான இரண்டு வருடத்தில் மக்கள் எப்படி மிகக் கேவலமாக அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை என்ற நூல் மூலம் அம்பலம் செய்துள்ளேன். எதையும் மக்கள் நலனில் நின்று சீர்தூக்கிப் பார்க்கவும், மாற்றாக மக்கள் நலன் சார்ந்த தீர்வையும் முன்தள்ளி கிளர்ச்சி செய்வதுமே, மக்கள் நலன் சார்ந்த அரசியல் வழியாகும்.
புலிகளும் அரசும் இணக்கப்பாடான பொதுக் கட்டமைப்பை வந்தடைவதை எதிர்ப்பது கூட பெரும் தேசிய இனவாதம் தான். இதைத்தான் ஜே.வி.பி. செய்கின்றது. பொதுவாக அரசும் புலிகளும் வந்தடையும் இணக்கப்பாட்டில் மக்களுக்கு எதிராக உள்ளனவற்றை மட்டும் அம்பலப்படுத்தி, மாற்றானதொன்றை முன்வைத்து விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டும். ஜே.வி.பி. பொதுக்கட்டமைப்பு தொடர்பாகக் காட்டும் எதிர்ப்பு, மக்களின் அடிப்படை நலனை முன்னிறுத்தி செய்யப்படவில்லை. மாறாக மக்கள் நலன் சார்ந்த எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. சிங்களப் பேரினவாதத்தையே ஆணையில் வைத்து வக்கரிக்கின்றனர்.
அரசும் புலிகளும் இணங்கிப் போக முயலும் இணக்கப்பாட்டின் விளைவுகளையும், உள்ளடக்கத்தையும் விமர்சிப்பதை எதுவும் தடுத்துவிடாது. விமர்சனம் மற்றும் கிளர்ச்சியூடாக மக்கள் நலன் சார்ந்த உள்ளடக்கத்தை, பொதுக்கட்டமைப்பில் கொண்டு வரக் கோருவதுமே அவசியமான சரியான அரசியல் வழியாகும். புலிகளே ஒரு பாசிஸ்டாக இருப்பதால், அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வியல் ஆதாரங்களையே அழிக்கின்றனர். இந்தப் பொதுக் கட்டமைப்புகள் மேலும் தமிழ் மக்களின் தொண்டைக் குழியிலேயே கை வைத்து, அவர்களை நெரிக்கும் என்பதே உண்மை. ஆனாலும் கூட இந்தப் பொதுக்கட்டமைப்பை எதிர்க்கவும் முடியாது. ஆதரிக்கவும் முடியாது. ஏன் இப்படி நாம் கூறுகின்றோம்? உண்மையில் மக்கள் நலன்களில் இருந்து இவை உருவாகி விடுவதில்லை. மாறாக நாம் மாற்று ஒன்றையே மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்றோம். அதன் அடிப்படையில் இதை விமர்சிக்கின்றோம்.
இனப்பிரச்சனை என்பது வெறும் புலிப் பிரச்சனையல்ல. இலங்கையில் பிரதான எதிரியாக இருப்பது ஏகாதிபத்தியத்துடன் கூடி நின்று, தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதச் சிங்கள அரசே, இங்கு புலிகள் அல்ல பிரதானமான எதிரி. இதனால் மட்டும் தான் புலிகள் பாசிசத்தைக் கடந்தும், ஒரு கணிசமான சமூக அடிப்படைகளுடன் நீடிக்கின்றனர். இங்கு வன்முறை மற்றும் அதிகாரங்கள் அனைத்தும் இதன் மேல்தான் இயங்குகின்றன. அமைதிக்கால நீடிப்பில் புலிகள் ஆழமாகத் தனிமைப்பட்ட நிலையிலும் கூட, இலங்கை இனவாத அரசு இயந்திரம் புலிகளுடான ஒப்பீட்டளவில் தமிழ் மக்கள் மேலான வன்முறையைக் கட்டுப்படுத்தியுள்ள நிலையிலும், புலிகளின் நீடிப்புக்கான காரணம் இனவாதக் கட்டமைப்புத்தான். இதில் மாற்றம் இன்றி புலிகள் எந்த விதத்திலும் அரசியல் ரீதியான அஸ்தமனத்தை வந்தடைய மாட்டார்கள். இதற்கு வெளியில் பாசிசக் கட்டமைப்பால் ஏற்படும் உட்சிதைவுகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. அதேபோல் விவாதிக்கவும் முற்படவில்லை. அது மற்றொரு தளத்தில் இயங்குகின்றது.
இலங்கையில் பாட்டாளி வர்க்கம் செயலற்று போயுள்ள நிலையில், இனப் பிரச்சினையாகப் புரையோடிப் போயுள்ள எமது சமூக அமைப்பில் நாம் போராட வேண்டியுள்ளது. இந்த நிலையில் மக்களின் தொடர்ச்சியான துன்பத்தை, அவர்களே உணரும் வகையில் பிரச்சாரம், கிளர்ச்சி, போராட்டம் என்ற வடிவில் முன்னெடுக்க முனைவதே சரியான கிளர்ச்சி வடிவமாகும். இதற்கு வெளியில் அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்கள் தீர்மானிப்பவர்களாக மாறி, சில முடிவுகளை வந்தடைகின்றார்கள். அது எமது விருப்பத்தையும், எமது நோக்கத்தையும் மீறி இயங்குகின்றது. இங்கு நாம் அதன் உள்ளடக்கத்தின் மீது, அதன் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தி விமர்சித்தே கிளர்ச்சி செய்ய வேண்டும். மக்களுக்கு எதிரான இரண்டு எதிரெதிரான போக்குகள் செய்து கொள்ள முயலும் ஒரு உடன்பாட்டை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது மக்கள் நலனுக்கு எதிரானதாக அமையும். அத்துடன் இந்த உடன்பாடுகள் ஒன்றுக்குச் சார்பானதாகவும் ஒன்றுக்கு எதிரானதாகவும் அல்லது இரண்டுக்கும் சார்பானதாகவும் அல்லது இரண்டுக்கும் எதிரானதாகவும் கூட இருக்கும். ஆனால் அவை மக்களுக்கு எதிராக இருப்பதில் தமக்குள் ஒன்றுபடுகின்றன. இதனடிப்படையில் தான் ஒவ்வொன்றையும் சீர்தூக்கி அணுக வேண்டும்.
எந்தச் சமூகப் பிற்போக்கான போக்கும் கூட, எப்போதும் மக்களின் சில அடிப்படையான சமூகக் கோரிக்கையின் பின்னால் தன்னைத்தான் தகவமைக்கின்றது. இதில் உள்ள முற்போக்கு மற்றும் பிற்போக்கு கூறுகளைப் பிரித்தறிந்து, பிற்போக்கை அம்பலப்படுத்தியே கிளர்ச்சி செய்ய வேண்டும். மக்களின் நியாயமான அனைத்து கோரிக்கையையும் அங்கீகரித்து அதற்காகவும் கிளர்ச்சி செய்ய வேண்டும். தேசிய இனப்பிரச்சினையில் எப்படி அணுக வேண்டும் என்பதை லெனின் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றார்.
""எந்தத் தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எல்லாவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை. தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழுஅளவுக்குச் சுதந்திரமான ஜனநாயக வழியில் தீர்க்கப்படுதல், எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்தவிதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைக்கு ஊறு செய்வதாகவோ'' இருக்கக் கூடாது என்கின்றார். இதனடிப்படையில் தான் பொது இணக்கப்பாடுகளையும், அதன் மக்கள் விரோதக் கூறுகளையும் இனம்கண்டு அணுகவேண்டும். இதை செய்வதில்லை.
இங்கு ஜே.வி.பி. நிரந்தரத் தீர்வின் பின்னாலான, இடைக்கால அமைப்பு சார்ந்த அதிகாரம் என்ற அரசியல் கோசம் கூட, அடிப்படையில் இனவாதம் தான். இதை ஜே.வி.பி. கூறுகின்றபோது ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகின்றது. இதைப் புலிகள் கோருகின்றார்கள் என்று சொல்வதால், இது விதிவிலக்காகிவிடாது. விரும்பியோ விரும்பாமலோ அரசும், புலிகளும்தான் இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க முனைகின்றனர். இந்த எதார்த்தத்தை உடனடியாக யாரும் மாற்ற முடியாத வகையில், இலங்கை பாட்டாளி வர்க்கம் செயலற்று கிடக்கின்றது. இந்த எதார்த்தத்தை யாரும் புரிய மறுத்தாலும் கூட, யுத்தம் ஒரு மாற்றாகின்றது. இதுவும் நிலைமையை எந்தவிதத்திலும் இருப்பதை விட முற்போக்காகப் படைத்துவிடாது. மேலும் மனித அவலத்தை அதிகரிக்கவே வழிசமைக்கும். இது எதார்த்தத்தின் மீதான உண்மையாக உள்ளது.
இந்த நிலையில் ஜே.வி.பி. பொதுக்கட்டமைப்பை எதிர்ப்பதன் ஊடாக, யுத்தத்தையே கோருகின்றனர். பாட்டாளி வர்க்கம் செயலற்ற நிலையில் இருப்பதால், மற்றொரு தளத்தில் முடிவுகள் மக்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்றன. இப்படி உருவாகும் பொதுக்கட்டமைப்பின் பின்னுள்ள மக்கள் விரோதக் கூற்றை அம்பலப்படுத்தி, மக்களுக்குச் சார்பானதை முன்வைத்து கோரி கிளர்ச்சி செய்வதே சரியானது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என எதையும் முன்வைக்காத ஜே.வி.பி. பொதுக்கட்டமைப்பை எப்படி மறுதலிக்க முடியும்? இது முன்பு சிங்கள அரசுகள் காலத்துக்குக் காலம் தமிழ்த் தரப்பினருடன் செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் எதிர்த்த எதிர்க்கட்சிகள், எதையெல்லாம் விதிவிலக்கின்றி செய்தனரோ, அதையே ஜே.வி.பி. எள்ளளவும் பிசகாது செய்து இனவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பெற முனைகின்றனர் அவ்வளவே. இதனால் இரண்டு தேசிய இனங்கள் இலங்கையில் உண்டு என்பதையே ஏற்க மறுக்கின்றனர். இனங்களுக்கு இடையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இணங்கி வாழும் சமூக அடிப்படையை அங்கீகரிக்க மறுக்கின்றனர். ஜே.வி.பி. இந்த நிலையில் நிரந்தரத் தீர்வின் பின்பான இடைக்கால அரசு என்ற கோசம், சந்தர்ப்பவாத அரசியல் நாடகத்தையே நடத்துகின்றனர்.
இலங்கை அரசியலில் இனப்பிரச்சினையை எதார்த்தத்தில் திடீரென யாரும் கடந்துவிட முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வை முதலில் நேர்மையாக மக்களுக்கு முன்வைத்து கிளர்ச்சி செய்யாத போராட்டம் அப்பட்டமாகவே மக்கள் விரோதத் தன்மை கொண்டது. மக்கள் முன் நேர்மையாக அரசியல் செய்பவர்கள், நிச்சயமாக இரண்டு இனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இரண்டு தேசங்களும் ஒன்றாக வாழவும், பிரிந்து வாழவும் உள்ள உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதற்காகக் கிளர்ச்சி செய்யவும், போராடவும் வேண்டும்.
இது இல்லாத அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதே. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழும் உரிமை என்பது, பிரிந்து வாழும் உரிமையின் அடிப்படையில் தான் உண்மையான கூட்டான இணைவு சாத்தியமாகின்றது. இது இல்லாத எல்லா நிலையிலும் ஆணாதிக்கமே அந்தக் குடும்ப அமைப்பின் அதிகார வடிவமாக இருக்கின்றது. இது போன்றுதான் தேசிய இனப்பிரச்சினையும், ஆணாதிக்க கொடுமையால் பெண் பிரிந்து செல்வதை அல்லது தற்காலிகமாகத் தன்னும் பிரிந்து செயல்வதை ஆண் மறுத்தால் அதை ஆணாதிக்கமாகத்தான் நாம் காண முடியும். பெண் பிற்போக்கான கூறுகளைக் கொண்டிருந்தாலும் கூட, ஆணாதிக்கப் போக்கின் ஊடாக அதை நியாயப்படுத்த முடியாது. அதுபோல் பெண்ணின் உரிமையை அங்கீகரிக்க முடியாது என்றோ அல்லது எமது பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் பொருந்தாது என்று ஜே.வி.பி.யைப் போல் குதர்க்க வாதமோ செய்யின், அது நிச்சயமாக ஆணாதிக்கம் தான். இங்கு ஆண் ஆணாதிக்கவாதியாக இல்லாவிட்டாலும் கூட, பெண் பிரிந்து செல்வதைத் தடுக்கும் உரிமை கிடையாது. ஆனால் விமர்சிக்கவும், திருத்தவும் முனையலாம். பிரிந்து செல்லும் உரிமை மீதான இணக்கப்பாட்டின் மேல் தான் ஐக்கியம் என்பது உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க முடியும்.
இரண்டு தேசிய இனங்கள் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து செல்வதா? என்ற பிரச்சினை மீது அப்படியே இது பொருந்தும். படுபிற்போக்கான தேசிய பிரிவினையைக் கூட, தடுக்கும் உரிமை ஒடுக்கும் தேசியத்துக்குக் கிடையாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் இதை விமர்சிக்க முடியும். அதேநேரம் தமது சொந்தக் கிளர்ச்சியைப் பெரும் தேசிய இனவெறிக்கு எதிராக நடத்த வேண்டும். இது ஒடுக்கும் தேசியப் பாட்டாளி வர்க்கத்தின் தலையாயக் கடமை. சிறுபான்மை தேசிய இனப்பாட்டாளி வர்க்கம் தான், பிரிந்து செல்லும் பிற்போக்கு கூறுகளுக்கு எதிராகப் போராட வேண்டும். இதற்குப் பெரும் தேசிய சர்வதேசியவாதிகள், சர்வதேசிய எல்லைக்குள் உதவவும், ஆதரவு வழங்கவும் முடியும். ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பெயரில், அந்த இனத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய முடியாது. இது பெரும் தேசியவாதமாகவே அமையும். மாறாகப் பெரும் தேசியத்தின் அனைத்து இனவாதப் போக்கையும் விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டும்.
குறிப்பாக அமெரிக்க முதல் இந்தியா வரை எமது தேசிய இனப்பிரச்சினையில் தலையிடுவதையும், தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்படுவதையும், ஈவிரக்கமின்றி பெரும் தேசிய இனம் விமர்சித்து கிளர்ச்சி செய்ய வேண்டும். ஏகாதிபத்தியம் அழித்தொழிக்கும் சொந்த (ஒடுக்கும் இனத்தின்) தேசிய உரிமைக்காகப் போராடவேண்டும். இதன் மூலம் சிறுபான்மை தேசிய இனத்துக்கு முன்மாதிரியாகவும் சரியாகவும் வழிகாட்ட முடியும். அதேநேரம் சிறுபான்மை இனத்தின் தேசிய உரிமைக்காக, அன்னிய சக்திகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும்படி தூண்டவேண்டும். தேசியம் என்பது வெறும் புலி தொடர்பானவையல்ல.
குறிப்பாகப் பெரும் தேசிய இனத்தின் மேல் உலகமயமாதல் நடத்தும் தேசிய அழிப்பை முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடவேண்டும். இந்த வகையில் சிறுபான்மை இனங்களையும் எதிர்த்துப் போராட கோர வேண்டும். இங்கு ஏகாதிபத்தியத்துக்குத் தேசியத்தின் பெயரில் தேசியத்தைக் காட்டிக் கொடுக்கும் அனைத்தையும், ஈவிரக்கமின்றி விமர்சிக்க வேண்டும். தேசியத்தின் அடிப்படைக் கூறு, ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்தே தொடங்குகின்றது. இதன் ஊடாகப் பிற்போக்குத் தேசியக் கூறுகளைத் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும். உண்மையான முரணற்ற தேசியக் கூறை முதன்மைப்படுத்தி, பெரும்பான்மை இனத்தின் ஒடுக்கும் பிற்போக்குத் தேசியக் கூறுகளையும், சிறுபான்மை இனத்தின் பிற்போக்கு இனவாதத்தையும் அம்பலப்படுத்தி கிளர்ச்சி செய்ய வேண்டும்.
இதை ஒரு நாளுமே ஜே.வி.பி. செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்தியம் இலங்கையில் தலையிடும்போது, அதைப் புலிக்கு எதிராக மாற்றுவதையே ஜே.வி.பி. அங்கீகரிக்கின்றது. எல்லா பெரும் தேசிய இனவாதிகள் போல் எந்த முரணும் இன்றி இதில் செயல்படுகின்றனர். அதேநேரம் புலிக்கு எதிரான ஏகாதிபத்திய நடத்தைகளை ஆதரிக்கின்றனர். அண்மையில் இந்தியாவின் நலன்கள் பற்றி கூட ஜே.வி.பி. புலம்புகின்றது.
புலிகளை ஒடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கூட ஜே.வி.பி. ஆதரிக்கின்றது. இதைத்தான் சிங்களப் பேரினவாதச் சக்திகள் அனைத்தும் விதிவிலக்கின்றி செய்கின்றன. இதையே தான் ஜே.வி.பி. செய்கின்றது. இதை இல்லை என்று சொல்ல, எந்த விதமான அடிப்படையையும் யாரும் காட்ட முடியாது. இங்கு சில அரசியல் சூனியங்கள் ஜே.வி.பி. சுனாமியைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவியதைப் பற்றி கூக்குரலிடக் கூடும். தமிழர்களுக்கு உதவி செய்த அவர்கள் இனவாதிகளா? என்று கேள்விக் கேட்கக் கூடும். இனவாதிகள் இப்படி உதவ முடியுமா? என்று எம்மைப் பார்த்து ஏளனமாகக் கேள்வி எழுப்ப முனைவர். இப்படி யாராவது கூறின் அவர்களின் அரசியல் கடந்து எதையும் அது பிரதிபலிக்கவில்லை.
இங்கும் நாங்கள் இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. என்று தெளிவாகவே மீண்டும் கூறுகின்றோம். இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, சர்வதேச சில நடைமுறைகளை எடுத்துக் காட்ட முடியும். ஏகாதிபத்தியம் உலகமயமாதல் ஊடாக உலகின் மூலை முடுக்கெல்லாம் சூறையாடுகின்றது. அதேநேரம் மனிதாபிமான உதவி என்ற பெயரில், தனது கைக்கூலிகளான அரசு சாராத தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக, சுரண்டப்பட்ட மக்கள் மத்தியில் தன்னை மனிதாபிமான நேசன் என்று கவர்ச்சி காட்டுகின்றது. அதாவது சூறையாடியதில் ஒரு பகுதியை மீண்டும் அந்த மக்களிடையே கொண்டு சென்று மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்றனர். அந்த மக்களை ஏமாற்றி உலகமயமாதலுக்கு ஏற்ப, மக்களைப் பக்கவாத்தியம் பாடவைக்கும் ஒரு நிகழ்ச்சியே இந்த மனிதாபிமான உதவி. இதையே இன்று உலகின் மூலை முடுக்கெங்கும் செய்வதை விதிவிலக்கின்றி நாம் காண முடிகின்றது.
இதையே புலிகளும் செய்ய முனைகின்றனர். சுனாமி நிவாரணத்தைத் தமது பெயரில் கொடுப்பதை விரும்புகின்றனர். அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களிடையே புல்லுருவிகளைப் போல் படர்ந்து படமெடுக்கின்றனர். அதையேதான் ஜே.வி.பி. செய்தது. ஆனால் புலிகளை விட இவர்கள் அதைத் திறமையாகவும் நுட்பமாகவும் செய்தனர். ஜே.வி.பி. தன்னைத்தான் தகவமைத்து மூடி மறைக்கப்பட்டுள்ள கலவைக் கோட்பாடுகளே, இதற்குப் பக்கபலமாக அமைந்தது. ஜே.வி.பி.யின் அடிமட்டத்தில் உள்ள தியாக மனப்பான்மையுடன் கூடிய அப்பழுக்கில்லாத சேவை மனப்பாங்கு சார்ந்த உணர்வைப் பயன்படுத்தியே, பாதிக்கப்பட்ட மக்களை அணுகியது. இந்த அடிப்படை புலிக்குக் கிடையவே கிடையாது. ஜே.வி.பி.யின் தலைமை பாதிக்கப்பட்ட மக்களின் சமூக அறியாமை மீது பொருளாதார ரீதியான உதவிகள் ஊடாக வளைத்துப் பிடிக்கும் தந்திரத்தையே கையாண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இழிந்து போன இந்தச் சமூக அமைப்பில், தமது கையாலாகாத்தனத்திலிருந்து பொருளாதார ரீதியாகவும் மனிதாபினமான ரீதியான உதவி சார்ந்தும் அவர்களை நேசிப்பது இயல்பு.
ஜே.வி.பி. பொருளாதார ரீதியாகவே அந்த மக்களை வளைத்துப் பிடிக்க முனைந்தனர். அந்த மக்களின் இனப்பிரச்சினைக்கான முரணற்ற தீர்வின் ஊடாக அணுகவில்லை. இனரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வின் ஊடாக அணுகாது, மந்திரிப் பதவியைக் கொண்டும் பணத்தைக் கொண்டும் தனக்குப் பின்னால் அணிதிரட்டும் நவீன விளம்பர அரசியல் வடிவங்களையே ஜே.வி.பி. கையாளுகின்றது. அரசியல் ரீதியாக ஜே.வி.பி. எதைச் செய்கின்றது என்றால், சிங்களப் பேரினவாத ஆட்சி அமைப்பையே கட்டிப் பாதுகாக்கின்றனர். லெனின் வார்த்தையில் அதைக் கூறின்
""நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமை பற்றிய கோஷத்தை முன்வைத்து ஆதரித்து பேசத் தவறினால் நாம் பூர்சுவாக்களின் நோக்கத்துக்கே உதவுவோம் என்பது மட்டுமல்ல, ஒடுக்கின்ற தேசிய இனத்தின் நிலப்பிரபுகளின், அதன் வரம்பிலா ஆட்சியின் நோக்கத்துக்கே கூட உதவுவோம்''
ஜே.வி.பி. தன்னைத்தான் மூடிமறைத்தபடி இதைத்தான் செய்கின்றது. இனப் பிரச்சினையில் மட்டுமல்ல, உலகமயமாதல் பற்றிய அதன் அடிப்படை நிலைப்பாட்டிலும் கூட இதைத்தான் செய்கின்றது. ஒட்டுமொத்தமாக ஜே.வி.பி. பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்தும் கலையைத்தான் அன்று முதல் இன்று வரை தனது சொந்த அரசியலாக ஆணையில் வைத்துள்ளது.
No comments:
Post a Comment