தமிழ் அரங்கம்

Wednesday, April 2, 2008

மின்வெட்டு – டாலர் மதிப்பு சரிவு தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்


மின்வெட்டு – டாலர் மதிப்பு சரிவு
தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்

"பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்; வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.'' இவையெல்லாம், கடுமையான மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நெசவாலை முதலாளிகளிடம் தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள். உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய 1960களில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ""வாரத்துக்கு ஒருநாள் பட்டினி கிடப்பீர்'' என்று நாட்டு மக்களுக்குச் செய்த உபதேசத்துக்குச் சற்றும் குறையாத பொறுப்பற்ற யோசனைகளே இவை.

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தின் தேவையைவிட அதிகமாக மின்னுற்பத்தி செய்வதை, அது வெளியிட்டிருக்கும் நாட்காட்டிகளில் கூடச் சாதனையாக அறிவித்துள்ளது. அமைச்சர் வீராசாமியே பலமுறை இதனைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில், உண்மை நிலவரமோ வேறுவிதமாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் அறிவிப்பின்றியே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே நேரம் தவறி விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் அடிக்கடி மின்தடையால் நின்று போய், நீர்ப்பாய்ச்சலின்றி விவசாயம் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்துக்குக் குடிநீர் வழங்கிவரும் தாமிரபரணி மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இம்மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அம்மாவட்டத்தின் பல பகுதிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டினால் தவிக்கின்றன. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வுக்கு ஆதாரமான நெசவாலைகளுக்கும் விசைத்தறிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்காததால், கோவைதிருப்பூர் பகுதிகளில் நெசவுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடைத் தொழிலில் கூட மின்சாரத் தட்டுப்பாட்டை ஜெனரேட்டர்களை வைத்து இயக்கி சமாளித்துவிட முடியும். ஆனால், விசைத்தறியோ கடும் மனித உழைப்பைக் கொண்டு குறைந்த லாபத்தில் இயங்கும் தொழிலாகும். இத்தொழிலுக்கு தினமும் 5 மணி நேர மின்வெட்டு என்றால், அத்தொழில் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இப்பாதிப்புகள் அனைத்தும் தொழிலாளர் தலையில் சுமத்தப்பட்டு, அவர்களது ஊதியமும் கணிசமாகக் குறைந்துள்ளது.

கோவை ஈரோடு மாவட்டங்கள், தமிழகத்தின் மின்சாரத்தில் 13.5%ஐ நுகரும் அளவுக்கு நெசவாலைகள், நூற்பாலைகளைக் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் பல சமயங்களில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது. இதனால் நெசவாலைகளும் நூற்பாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் 15%க்கு மேல் இலாபத்தில் சரிவைக் கண்டுள்ள நெசவுத் தொழிலை மின் பற்றாக்குறையானது மேலும் நலிவடையச் செய்துவிடும் என்று தென்னிந்திய ஆலை அதிபர்கள் சங்கம் (சிமா) கூறுகிறது. இதுதவிர, தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் தொடரும் மின்வெட்டால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அரசு புள்ளி விவரங்களின்படி தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தி 10,000 மெகாவாட் ஆகும். இதில் 55% தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 28% மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 11% தனியார் மின்உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 3.5% வெளிமாநிலங்களிலிருந்தும் பெறப்படுகிறது.

இது தவிர, காற்றாலைகள் மூலம் ஏறத்தாழ 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மின்வெட்டு தொடரக் காரணம் என்ன? ""காற்றாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்களிலிருந்து அண்மைக் காலமாக மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம்'' என்கிறார் அமைச்சர் வீராச்சாமி.

அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் இந்நேரத்தில் மின்உற்பத்தி எப்படி முடங்கிப் போகும்? மேலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மிகக் குறைவானதுதான். ஆனால், தற்போதைய மின்தட்டுப்பாடோ 30%க்கு மேலாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

கடந்த இருபது ஆண்டுகளாக மின்னுற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் புழங்கிவரும் எந்திரங்களோ, கருவிகளோ புதுப்பிக்கப்படவில்லை; சீரமைக்கப்படவில்லை. மின்தடையைப் பழுதுநீக்கி சரிசெய்யும் துறையிலும் பராமரிப்பிலும் பல்லாயிரக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல், தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். சென்ற ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இறுதியாக்கப்பட்டு முடிக்கப்படாததால் பல வேலைகள் கிடப்பில் உள்ளன. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளும் குளறுபடிகளுமே மின்தடைக்கு முக்கிய காரணங்களாகின்றன.

இதுதவிர, தினசரி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ரீதியில் கணக்கற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தரகுப் பெருமுதலாளிகளுடனும் தமிழக அரசு போட்டுக் கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள் 24 மணி நேரத் தங்குத் தடையற்ற மின் வழங்கலை முன்னிபந்தனையாகக் கொண்டுள்ளன. புதிதாக உருவாகி வரும் 120 தொழில் பூங்காங்களால் மட்டும் 700 மெகாவாட்டுகள் வரை மின்தேவை கூடுதலாகியுள்ளது.

ஆனால், கூடுதல் மின்தேவையை ஈடு செய்யும் வகையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. அதிக உற்பத்தியை ஈட்டி, அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வெல்லும் மேட்டூர் மின்நிலையத்திலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதிலிருந்தே அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

பத்தாண்டுகளுக்கு முன் தனியார் மின் உற்பத்தி 0.4 சதவீதமாக இருந்தது. தனியார்மயம் தேசியக் கொள்கையாகிவிட்ட பிறகு, இன்று தனியார் மின் உற்பத்தி 28.18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்தனியார் நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தி தமிழக அரசு மின்சாரத்தை வாங்குவதால் ஆண்டுக்கு
ரூ. 1216 கோடி வரை நட்டமடைந்து வருகிறது. இதனால் மின்னுற்பத்தியை அதிகரிக்கவோ, பராமரிப்புப் பணிகளைச் செய்யவோ முடியாமல் மின்வாரியம் தடுமாறுகிறது.

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை வெட்டி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு, அதேநேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில் பூங்காக்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலானவற்றுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், அரசின் மின் விநியோகத்தின் மீது அவநம்பிக்கை உருவாகவும், தனியார் மின்சார விநியோகத்தை மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யவுமான எதிர்விளைவையே உருவாக்கி வருகிறது.

மின்வெட்டால் கடும் பாதிப்புக்குள்ளான தமிழகம், நிர்வாகக் குளறுபடிகளைச் சீரமைத்தால் நெருக்கடியிலிருந்து மீண்டு விட முடியும். ஆனால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கமோ, தமிழகம் உள்ளிட்டு நாட்டு மக்கள் அனைவரையும் மீள முடியாதபடி மரணக் குழியில் தள்ளும் பேரபாயமாகும்.

தாராளமயம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைச் சாவுக்குத் தள்ளியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் முதலாகத் தொடரும் டாலர் மதிப்புச் சரிவினால், ஏற்றுமதியைச் சார்ந்துள்ள ஜவுளித் தொழிலும் ஆயத்த ஆடைத் தொழிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளன. இத்தொழில்களை நம்பியுள்ள 3.5 கோடி தொழிலாளர்களின் எதிர்காலமோ இருண்டு கிடக்கிறது. இந்திய ரூபாய்க்கு நிகராக, டாலரின் மதிப்பு 12%க்கு மேல் குறைந்து விட்டதால், மும்பையில் பல நிறுவனங்கள் ""லேஆப்'' அறிவித்துள்ளன. ஏறத்தாழ 70,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். திருப்பூரில் ஏற்கெனவே 10,000 பேர் வேலையிழந்து, மேலும் 50,000 பேர் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். ஜவுளித் தொழிலில் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாலர் மதிப்புச் சரிவானது, நாடெங்கும் 80 லட்சம் பேரின் வேலையைப் பறித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழகத்தையும் நாட்டையும் மறுகாலனியாக்கம் எனும் கொள்ளைநோய் சூறையாடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளோ மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்து போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுவதைப் போல நாடகமாடுகின்றன. மறுகாலனியாக்கம் எனும் மையமான விவகாரத்தை விட்டுப் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு சூரத்தனம் காட்டும் இந்த ஓட்டுக் கட்சிகள், தலைக்கே பேராபத்து வந்துள்ளபோது தலைவலிக்கு மருந்து கேட்கின்றன.

· தனபால்

No comments: