தமிழ் அரங்கம்

Wednesday, May 7, 2008

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் : நஞ்சாக்கப்படும் உணவு

இந்திய நாடு மரபணுமாற்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது. கத்தரிக்காய்; தமிழக மக்களின் உணவில் முக்கிய இடம்பெறும் காய். குண்டு கத்தரி. நீள கத்தரி, நாம கத்தரி, வெள்ளை கத்தரி என்று அதில் பல ரகமுண்டு. இப்போது புதிய ரகமாக பி.டி.கத்தரிக்காய் வரப்போகிறது. அதென்ன பி.டி.கத்தரிக்காய்?

இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய். காய்ப்புழுத் தாக்குதலை எதிர்க்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிச் செடியிலிருந்து காய்க்கும் புதிய வகை கத்தரிக்காய். பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல், செடியின் உள்ளே பொதிந்துள்ள மரபணுவை மாற்றி விடுவதன் மூலம் பூச்சிகள் செடிகளைத் தாக்குவதைத் தடுக்கும் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய கத்தரிச் செடியில் விளைவதுதான் பி.டி.கத்தரிக்காய்.

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இப்புதியவகை கத்தரி விதைக்கப்பட்டு, செடிகள் வளர்ந்து காயும் பிஞ்சுமாக செழித்து நின்றன. அமெரிக்க விதைக் கம்பெனியான மான்சாண்டோவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் கூட்டுச் சேர்ந்து இரகசியமாக இப்புதிய ரக கத்தரியைப் பயிரிட்டு கள ஆய்வு செய்து வந்தன. இதையறிந்த தமிழக வேளாண் காப்புக் குழு, ஈரோடு இயற்கை விவசாயிகள் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் சிலர் பல்கலைக் கழக வளாகத்தில் கத்தரி தோட்டத்தின் அருகே திரண்டு விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் இந்த ஆராய்ச்சியை நிறுத்தக் கோரி கடந்த பிப்ரவரி 22ஆம் நாளன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், பல்கலைக் கழக நுழைவு வாயிலில் உள்ள பெயர்ப் பலகையில்,"" தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தற்போதைய உரிமையாளர் மான்சாண்டோ'' என்று எழுதி ஒட்டிவிட்டுக் கலைந்து சென்றனர்.

உடனே இப்பல்கலைக் கழக துணைவேந்தரும் பதிவாளரும், ""பட்டினிச் சாவுகளைத் தடுத்து பல லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு விவசாயமும் சமுதாயமும் பயனடைய வேண்டும் என்பதற்காக இப்பல்கலைக் கழகம் செயல்படுகிறது; அதனடிப்படையிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கள ஆய்வு செய்யப்படுகின்றன'' என்று நியாயவாதங்களை அடுக்கியதோடு, போராடியவர்கள் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் எதிரானவர்கள் என்று சாடி, போராடிய அமைப்புகள் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களும் உயிரி தொழில் நுட்பப் புரட்சியும் விவசாய உற்பத்தியைப் பெருக்குமா? மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களால் மனித இனத்துக்குப் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா? இவை குறித்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களாலும் அவற்றின் பூக்கள், காய்கள், கிழங்குகள், விதைகளாலும் மனித இனத்துக்கு ஒவ்வாமையும் இனம் புரியாத பல்வேறு நோய்களும் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற மரபியல் விஞ்ஞானியான ப்ரென்னர் என்பவர், ""மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று கூற பெரும்பாலான விஞ்ஞானிகள் தயங்குகிறார்கள். ஏனென்றால், அவர்களின் ஆயுட்காலத்திலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆபத்தானவை'' என்று நிரூபிக்கப்பட்டுவிடும் என்கிறார்.

மனித இனம் மட்டுமின்றி, இப்பயிர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தாவரங்களுடன் ஒட்டுறவு கொண்டுள்ள பல்வேறு பூச்சிகள், நுண்ணுயிர்கள் மட்டுமின்றி நன்மை செய்யும் மண்புழுக்களும் இப்புதிய வகைப் பயிர்களால் அழிக்கப்படுகின்றன. மறுபுறம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மகரந்தங்கள் களைகளின் மகரந்தங்களுடன் சேர்ந்து, களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட புதியவகை "சூப்பர்' களைகளை உருவாக்கி விடுகின்றன. இவற்றை எந்த களைக் கொல்லி மருந்தாலும் கட்டுப்படுத்தவே முடியாது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம், அது பயிரிடப்படும் பகுதிகளில் காலனியாதிக்கம் செய்யக்கூடியது. அதாவது, பிற தாவரங்களின் வளர்ச்சியை அழித்து, தான் மட்டும் செழித்து வளரும் தன்மை கொண்டது. மகரந்த சேர்க்கை மூலம் பாரம்பரிய விவசாயப் பயிர்களை அழித்து விடும் ஆற்றல் கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் பூக்களில் தேன் சுரக்குமா, அவற்றைத் தேனீக்கள் உறிஞ்சினால் என்ன பாதிப்பு ஏற்படும், அத்தேனை மனிதர்கள் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

இவை ஒருபுறமிருக்க , மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திப் பயிர்களில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை; மாறாக, அப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003 முதல் 2006 வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம், மிசிசிபி மற்றும் அர்கன்சாஸ் மாநிலங்களில் நடத்திய ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. எனவேதான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்புக்குழு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் களச்சோதனை முறையில் பயிரிடுவதற்குக் கூட தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், இத்தொழில் நுட்பத்திற்கும், இதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏழை நாடான இந்தியாவில் 2002இல் மரபணு மாற்றப்பட்ட கடுகும், 2003இல் 8 விதமான பருத்தியும் அனுமதிக்கப்பட்டு நாடெங்கும் 30 இலட்சம் ஏக்கரில் களப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், ம.பி;மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட பருத்தியானது பாரம்பரிய பருத்தியைவிட 5 மடங்கு குறைவான விளைச்சலையே தந்து, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்தியுள்ளது. விரக்தியடைந்த விவசாயிகள் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த உண்மைகளை நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போதே அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், எவ்விதக் கட்டுப்பாடோ வரைமுறையோ இன்றி எல்வா வகையான உணவு தானியப் பயிர்களுக்கும் மரபணு மாற்ற ஆராய்ச்சிகளையும் களப்பரிசோதனைகளையும் இந்திய அரசு தாராளமாக அனுமதித்து வருகிறது. ஏழை நாடான இந்தியா இத்தொழில் நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச் சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது. பி.டி. பருத்தியிலிருந்து தொடங்கி கடுகு, கத்தரிக்காய், சோளம் என அனைத்து உணவுதானியங்களும் மட்டுமின்றி, இந்திய விவசாயத்தின் உயிர்நாடியான நெல் சாகுபடிக்கும் பேராபத்தாக பி.டி. நெல்லும் வந்துவிட்டது.

அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனமும் ஐதராபாத் பல்கலைக் கழகமும் கூட்டுச்சேர்ந்து வறட்சியைத் தாங்கும் நெல் ரகத்தை மரபணு மாற்றம் மூலம் உருவாக்க ஆராய்ச்சி செய்கின்றன. வைட்டமின்""ஏ'' சத்து நிறைந்த நெல் ரகத்தை உருவாக்க புதுதில்லி, ஐதராபாத், கோவை ஆகிய இடங்களிலுள்ள அரசின் வேளாண் ஆய்வு மையங்கள் சுவிட்சர்லாந்து ஏகபோகக் கம்பெனியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. ""தங்க அரிசி'' எனும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசியை உருவாக்க பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமும் கூட்டுச் சேர்ந்து ஆய்வுகள் நடத்துகின்றன.

கட்டுப்பாடற்ற இத்தகைய களப்பரிசோதனைகள் பயிர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய மக்களையும் சோதனைக்கூட எலிகளாக்கி பரிசோதிக்கும் கொடுமையும் இந்திய அரசின் துணையோடு நடந்து வருகிறது. ஏறத்தாழ 72 லட்சம் பேர் பயனடைவதாகக் கூறப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை இந்திய அரசு உலக வங்கி கடனைக் கொண்டு நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ""கேர்'' எனும் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனம் மூலம் மரபணு மாற்றப்பட்ட சோயாமாவையும் சோயா எண்ணெய்யையும் வழங்கி அத்தாய்மார்கள்குழந்தைகளிடம் அதன் விளைவுகளை 2002ஆம் ஆண்டில் சோதித்துப் பார்த்துள்ளனர். இந்த உணவின் தன்மை, விளைவுகள் பற்றிக் கண்டறிய எவ்வித பகுப்பாய்வு முறையும் இதுவரை இல்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை.

பி.டி.பருத்தி விதைகள் ஆந்திர, மகாராஷ்டிர பருத்தி விவசாயிகளைத் திவாலாக்கி, தற்கொலைக்குத் தள்ளிவிட்ட பின்னரும் இந்தக் கொலைகார தொழில்நுட்பத்தையும் சோதனைகளையும் முற்றாகத் தடைசெய்ய மறுத்து வருகிறது இந்திய அரசு. ஏனென்றால், இது உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவு!

இந்த அடிமைத் தனத்தையே இரண்டாவது பசுமைப் புரட்சி என்று ஆளும் காங்கிரசு கும்பல் கொண்டாடுகிறது. ஏற்கெனவே உரம், பூச்சி மருந்துகளுக்காக ஏகாதிபத்தியக் கம்பெனிகளிடம் அண்டி நிற்கும் இந்திய விவசாயிகளை, விதைக்காகவும் கையேந்த வைத்து, இந்திய விவசாயத்தின் சுய சார்புத் தன்மையை முற்றாக அழித்துவிட வேண்டும் என்பதுதான் இரண்டாவது பசுமைப் புரட்சியின் பின்னுள்ள சதித்திட்டம்.

தலைப்பாகைக்கு மட்டுமல்ல; தலைக்கே பேராபத்து வந்துவிட்ட நிலையில், இம்மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு விடுதலைப் போரைத் தொடுக்காமல் பேரழிவிலிருந்து மீளவும் முடியாது.

· சுடர்

No comments: