பட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த உண்மையாகியுள்ளது.
அந்நாட்டு ஏழை மக்கள் இப்போது மண்ணைத் தின்றால்தான் உயிர் வாழ முடியும் என்று கற்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவ்வாறு கற்றுத் தந்திருப்பது எல்லாம்வல்ல இறைவனல்ல, ஏகாதிபத்தியம்!
வெளிறிய மஞ்சள் நிறக் களிமண்; அதைக் குழைத்து அச்சில் வார்த்து காயவைத்து, சிறிது உப்பு சேர்த்து உண்கின்றனர் ஹெய்தி நாட்டின் ஏழை மக்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலைத் தணிக்க இக்களிமண்ணைச் சிறிதளவு மருந்து போல உட்கொள்வதென்பது அந்நாட்டு வழக்கம். இப்போது இக்களிமண்ணே ஏழைகளின் முழுமையான உணவாகி விட்டது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்கு வாசலில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் கியூபாவுக்கு அருகிலுள்ள சின்னஞ்சிறு நாடுதான் ஹெய்தி. ஏறத்தாழ ஒரு கோடி கருப்பின மக்களைக் கொண்டுள்ள இந்நாடு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தாலும் பின்னர் அமெரிக்க மேலாதிக்க வல்லரசாலும் சூறையாடப்பட்டு, இன்று உலகின் ஏழ்மை சூழ்ந்த நாடுகளில் ஒன்றாகிப் பரிதவித்து நிற்கிறது. ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்பட்டு ஹெய்தியின் கைக்கூலி ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கக் கொள்ளையால், அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வேலையிழந்து வாழ்விழந்து பட்டினியில் பரிதவிக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் பலமடங்கு அதிகரித்து விட்டது.
இந்நிலையில் ""ரஸ்க்'' ரொட்டியைப் போல, அச்சில் வார்த்து காய வைக்கப்பட்ட களிமண்ணைத் தின்று பசியைப் போக்கிக் கொள்கின்றனர், அந்நாட்டு ஏழைகள். இக்களிமண் ரொட்டி வாயில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டு தீராத நோய்களுக்கு இம்மக்கள் பலியாகி வருகிறார்கள். ஹெய்தியின் அவலம் மெதுவாகக் கசிந்து உலகையே அதிர்ச்சியுறச் செய்ததும், ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அவசர நிலைப் பிரகடனம் செய்து, அந்நாட்டுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு உலக நாடுகளைக் கோரியுள்ளது.
இது ஏதோ ஹெய்தி நாட்டில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளால் உலகின் சிவப்பு விளக்குப் பகுதியாகச் சீரழிக்கப்பட்டு விட்ட தாய்லாந்து நாட்டில், ஏழை விவசாயிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியில் பரிதவிக்கின்றனர். பசிக் கொடுமையிலிருந்து மீள, அவர்கள் மூங்கில் புழுக்கள், ஈசல்விட்டில் பூச்சிகள், காட்டெறும்புகள் முதலானவற்றைப் பிடித்து வறுத்துத் தின்னும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வல்லரசு கனவு காணும் இந்தியாவின் உ.பி.மாநிலத்தில் முஷாகர் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் நத்தைகளையுமே உணவாக உட்கொள்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உலகின் பல ஏழை நாடுகளில் இத்தகைய அவலங்கள் தொடரும் அதேநேரத்தில், மாரிடானியா, செனகல், கினியா, பர்கினா பாசோ, மொராக்கோ முதலான ஆப்பிரிக்க நாடுகளிலும், உஸ்பெகிஸ்தான், யேமன் முதலான ஆசிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டிலும் உணவுக் கலகங்கள் வெடித்துப் பரவுகின்றன.
இந்தியா உள்ளிட்டு இந்த ஏழை நாடுகளை மட்டுமின்றி, உலகையே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்னும் கொள்ளைநோய் கவ்வியுள்ளது. கடந்த ஓராண்டுக்குள் மக்காசோளத்தின் விலை 50 சதவீதமும், அரிசியின் விலை 25 சதவீதமும், கோதுமையின் விலை இருமடங்காகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடும் ஐ.நா. மன்றம், உலக அளவில் தானியக் கையிருப்பு 57 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்றதொரு படுமோசமான நிலைமை ஏற்பட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஈராண்டுகளாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடுகிடு விலையேற்றத்துக்கு ""உயிரி எரிபொருள்'' எனும் ஏகாதிபத்திய திட்டமே முதன்மையான காரணமாகும். உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சிலவகையான கிழங்குகள், எண்ணெய் வித்துக்கள் முதலான விவசாய விளைபொருட்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாலேயே இந்த விலையேற்றமும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.
உலகின் எரிபொருள் தேவையை ஈடுகட்டவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், புவி வெப்பம் உயர்ந்து வருவதைத் தடுக்கவும்தான் உயிரி எரிபொருள் திட்டம் என்று ஏகாதிபத்தியங்கள் வாதிட்டாலும், இது ஏழை மக்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் வக்கிரத் திட்டமாகவே உள்ளது. மேலும், பெட்ரோல், நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருளுக்கு மாற்றீடாக உயிரி எரிபொருள் அமைந்து விடாது என்றும் இதனால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்றும் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன.
இதுதவிர, ஏகாதிபத்திய உலகின் மேட்டுக்குடி கும்பல்களது உணவில் இறைச்சியானது முக்கிய இடம் பெறுகிறது. வகைவகையான இறைச்சி உணவின் தேவையை நிறைவு செய்யக் கூடுதலாக இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக கணிசமான அளவுக்கு உணவு தானியங்கள் கால்நடைகளுக்குத் தீனியாகத் திருப்பிவிடப்பட்டுக் கொழுக்க வைக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு கிலோ இறைச்சிக்காக 8 கிலோ உணவு தானியம் கால்நடைகளுக்குக் கொட்டப்படுகிறது. இதனாலும் உணவு தானியப் பற்றாக்குறையும் விலையேற்றமும் ஏற்படுகிறது.
மேலும், ஏகாதிபத்திய அராஜக உற்பத்தியால் புவி வெப்பம் அதிகரித்து, இயற்கைச் சீற்றங்களால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதாலும், மக்கட்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப விவசாய உற்பத்தி நவீனப்படுத்தப்படாமல் ஏகாதிபத்தியங்களால் நாசமாக்கப்பட்டு வருவதாலும், ஏகாதிபத்திய உலகின் நிதியாதிக்கக் கும்பல்கள் ஊக வணிகத்தின் மூலம் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து வருவதாலும் உலகெங்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏகாதிபத்தியம் உலகம் மிகக் கொடியது. மனித இனம் பட்டினியால் மாண்டு போனாலும் பரவாயில்லை, எமக்கு இலாபம்தான் வேண்டும் என வெறியோடு அலையும் ஏகாதிபத்தியவாதிகள் உலகில் நீடிக்கும்வரை, உலகைக் கவ்வியுள்ள பட்டினிப் பேராயத்திலிருந்து மனித இனம் மீள முடியாது. ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் அரசியல் புரட்சிகள் நடக்காமல், சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்காமல் மனித இனம் இனிச் சுதந்திரமாக உயிர் வாழவும் முடியாது.
இம்மாபெரும் புரட்சிப் போருக்கு நாம் அணிதிரளப் போகிறோமா? அல்லது விதியை நொந்து கொண்டு ஹெய்தி மக்களைப் போல களிமண்ணைத் தின்றுச் சாகப் போகிறோமா?
· குமார்
அவலத்திலும் இலாபவெறி! ஏகாதிபத்தியவாதிகளின் வக்கிரம்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியால் சிக்கித் தவிக்கும் தாய்லாந்து நாட்டின் ஏழைகள் மூங்கில் புழுக்களைப் பிடித்து வறுத்து உண்கிறார்கள். இப்போது அதையும் பறித்துக் கொண்டு அம்மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட ஏகாதிபத்திய நிறுவனங்கள் கிளம்பியுள்ளன.
தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில், ஏழைகள் உண்ணும் புழு, பூச்சிகளைத் தரம் உயர்த்தி அவற்றை டப்பாக்களில் அடைத்து விற்கும் வழிமுறைகளை ஆராய்வதற்காக, தாய்லாந்தில் உள்ள சியாங்மை நகரில் கடந்த பிப்ரவரி 18ஆம் நாளன்று, ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண் கழகம் ஒரு ஆய்வரங்கத்தை நடத்தியுள்ளது. உலகெங்கும் 1400 வகை புழுபூச்சிகளை மனிதர்கள் மருந்தாக உண்பதாகவும், அவற்றில் புரதச் சத்து மிகுந்துள்ளதாகவும், இவற்றை சுகாதாரமான முறையில் தயாரிப்பதன் மூலம் புதிய வியாபாரச் சந்தையை உருவாக்க முடியும் என்றும் அந்த ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது.
உடனே பல்வேறு ஏகாதிபத்திய நிறுவனங்கள், புழுபூச்சிகளைப் பிடித்து வறுத்து டப்பாக்களில் அடைத்து வியாபாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டன. முதலாளித்துவ செய்தி ஊடகங்களோ ""இயற்கையான புரதச் சத்து நிறைந்த புழுபூச்சிகளின்'' அருமை பெருமைகளை அடுக்கத் தொடங்கி விட்டன. ஈசல் வறுவலும், எலிக்கறியும் இனி டப்பாக்களில் விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
No comments:
Post a Comment