கடந்த மார்ச் மாதத்தில், உலகத்தின் கூரை என்றழைக்கப்படும் திபெத்தில் சீன ஆட்சியாளர்களுக்கு எதிராக வெடித்த கலவரம், இதுவரை கண்டிராத மூர்க்கத்தனத்துடன் நடந்துள்ளது. இக்கலவரத்தை ஒடுக்க சீன இராணுவம், போராடிய திபெத் மக்களையும் புத்த மத குருமார்களையும் மிருகத்தனமாகத் தாக்கியது என்றும் மீண்டும் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன. சீன இராணுவம் நடத்திய தாக்குதலிலும் துப்பாக்கிச் சூட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
திபெத்தின் புத்தமத அரசரான தலாய்லாமா, 1959 மார்ச் 10ஆம் நாளன்று சீனாவின் "அடக்குமுறை'யிலிருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த நாளை, "திபெத்திய விடுதலைக்கான எழுச்சி நாளாக' அவரது விசுவாசிகள் கடைபிடித்து வருகின்றனர். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடக்கவிருப்பதால், உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் தலாய்லாமாவின் ஆதரவாளர்கள் மார்ச் 10ஆம் தேதி முதலாக போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வந்தனர். இதில் திபெத்திய உழைக்கும் மக்களும் கணிசமாகப் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டங்கள், அரசு அலுவலகங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு மிகப் பெரிய வன்முறைக் கலவரமாகத் தீவிரமடைந்ததும், சீன அரசு இராணுவத்தை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியுள்ளது.
இந்தக் கலவரத்துக்கு தலாய்லாமாதான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர், சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள். திபெத் விவகாரத்தில் பொறுமையைக் கடைபிடிக்குமாறு உபதேசிக்கிறது, அமெரிக்கா. இந்திய அரசோ, நீண்டகாலமாகவே திபெத், சீனாவின் ஓர் அங்கம்தான் என்று ஒருபுறம் கூறிக் கொண்டே, மறுபுறம் தலாய்லாமாவை ஆதரித்து சீனாவுக்கு எதிரான சீர்குலைவு வேலைகளை இரகசியமாகச் செய்து வருகிறது. அகண்ட பாரத லட்சியத்துடன் இந்திய தேசிய இனங்களை துப்பாக்கி முனையில் ஒடுக்குவதையே நோக்கமாகக் கொண்ட இந்துவெறி பாசிஸ்டுகளின் தலைமைத் தளபதியான அத்வானி, திபெத் தேசிய இன மக்களின் மீது சீன அரசு காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவியுள்ளதாகக் கூப்பாடு போடுகிறார். திபெத், சீனாவின் ஓர் அங்கம்தான் என்று கூறும் இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள், தற்போதைய கலவரம் சீனாவின் ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் பிரிவினைவாத சதி என்று சாடி, சீன அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்துகின்றனர். தமிழினப் பிழைப்புவாதிகளோ, திபெத்திய போராட்டத்தைத் தேசிய இன உரிமைப் போராட்டமாகச் சித்தரித்து சீன அரசின் அடக்குமுறையை எதிர்க்கின்றனர்.
எங்கெல்லாம் அடக்குமுறைக்கெதிராக மக்கள் போராடுகிறார்களோ, அங்கெல்லாம் அப்போராட்டத்தை ஆதரிப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை என்ற அடிப்படையில், திபெத்தில் நடக்கும் போராட்டத்தை நாம் ஆதரிப்பதா? அல்லது இது பிளவுவாத பிரிவினைவாத சதிச் செயல் என்று சீன அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்துவதா?
சீனாவில் முதலாவதாக தோழர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்தது. தற்போது, கம்யூனிச முகமூடி அணிந்த அதிகார வர்க்க முதலாளித்துவ ஆட்சி நடக்கிறது.
சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உலகமயமாக்கலுக்கு ஏற்ப உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருவதாலும், ஆட்குறைப்பு தகுதியற்றவர்களை நீக்குவது முதலான நடவடிக்கைகளாலும் அந்நாட்டில் வறுமையும் வேலையின்மையும் பெருகி வருகிறது. தொழிற்கூடங்களில் கொத்தடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. விவசாயம் நாசமாக்கப்பட்டு, ஏற்றுமதி அடிப்படையான விவசாய உற்பத்தி திணிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து வாழ்விழந்த விவசாயிகள் பெருநகரங்களில் குவிகின்றனர். விவசாயிகளும் தொழிலாளர்களும் கேடுகெட்ட சீன முதலாளித்துவக் கொடுங்கோலாட்சிக்கு எதிராக தன்னெழுச்சியான கலகங்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதும், இவற்றை சீன முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மிருகத்தனமாக ஒடுக்குவதும் தொடர்கிறது.
சீனாவின் மைய மாநிலங்களிலேயே இந்த நிலைமை என்றால், ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய திபெத் பிராந்தியத்தின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. உலகமயமாக்கலுக்கு ஏற்ப திபெத்தில் பெருந்திட்டங்களும், சுற்றுலாபோக்குவரத்துத்துறை வளர்ச்சியும் நடந்துள்ள போதிலும் அவற்றின் பலன்கள் மக்களுக்கானதாக அல்லாமல், சீன முதலாளித்துவ கும்பலும் பன்னாட்டு ஏகபோக கும்பலும் ஆதாயமடைவதாகவே உள்ளன. உலக முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப திபெத்தின் உற்பத்தியும் பொருளாதாரமும் கலாச்சாரமும் மாற்றப்பட்டு வருவதால், அங்கு வறுமையும் வேலையின்மையும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக முறைகுலைவுகளும் தீவிரமாகி வருகின்றன.
இந்நிலையில், திபெத்திய மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டு, எதிர்ப்புரட்சி லாமா கும்பல் இழந்த சொர்க்கத்தை மீட்க, சீன அரசின் ஒடுக்குமுறை எதிர்ப்பு எனும் முகமூடியுடன் கலகத்தில் இறங்கியது. இதற்குமுன் நடந்த கலகங்களைப் போலின்றி, கடந்த மார்ச் இறுதியில் திபெத் தலைநகர் லாசாவில் நடந்த கலகத்தில் கணிசமான அளவுக்கு உழைக்கும் மக்களும் சீன அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது, உலக முதலாளித்துவத்தின் தேவைகளுக்கேற்ப திபெத்தின் பொருளாதாரமும் கலாச்சாரமும் சிதைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் குமுறலும்தானே தவிர, இது திபெத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அல்ல. சீன முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டங்களைக் கட்டியமைத்து தலைமையேற்க அங்கு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லாத நிலையில், திபெத்திய மக்களின் அதிருப்தியை பிற்போக்கு சக்திகள் அறுவடை செய்து கொண்டு, தமது நோக்கங்களுக்கு ஏற்பத் திசைதிருப்பி ஆதாயமடைகின்றன.
தேசிய இன விடுதலைக்கான நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு எதுவும் திபெத்தில் இல்லை. தற்போதைய கலகத்தை ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களே கட்டியமைத்து வழிநடத்தியுள்ளன. திபெத்திய இளைஞர் காங்கிரசு, திபெத்திய மகளிர் கழகம், குசுசும் திபெத்திய இயக்கம் (முன்னாள் அரசியல் கைதிகளின் இயக்கம்), திபெத்திய தேசிய ஜனநாயகக் கட்சி, சுதந்திர திபெத்துக்கான (இந்தியாவிலுள்ள) மாணவர் இயக்கம் ஆகிய ஐந்து பெரிய தன்னார்வ நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து நன்கு திட்டமிட்டு இக்கலகத்தை நடத்தியுள்ளன. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் தருணத்தில் இதைச் செய்ததன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஒருபுறம், கம்யூனிச முகமூடி அணிந்த சீன முதலாளித்துவ ஆளும் கும்பல். மறுபுறம் தேசிய இன முகமூடி அணிந்த திபெத்திய பிற்போக்குக் கும்பல். இவற்றிலே எந்தத் தரப்பின் நியாயத்தை ஏற்க முடியும்? அரசு எந்திரத்தைக் கையில் வைத்துள்ள சீன ஆளும் கும்பலின் மிருகத்தனமான ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டும்; ஏனென்றால், அதுதான் மிகக் கொடிய அரசு பயங்கரவாத அடக்குமுறை என்று மதிப்பிட்டு, திபெத்திய பிற்போக்குக் கும்பலின் எதிர்ப்புரட்சி கலகத்தை நியாயப்படுத்த முடியுமா? இந்தியாவாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் ஆதரித்து ஊட்டி வளர்க்கப்படும் கைக்கூலி லாமா கும்பலை தேசிய இனப் போராளிகளாகக் கருத முடியுமா? முடியாது. இரண்டுமே ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யக்கூடிய, ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக் கூடிய பிற்போக்குக் கும்பல்கள்தாம். அவற்றிலே இடதுசாரி வலதுசாரி, முற்போக்கு பிற்போக்கு என்று எடைபோட்டு பார்த்து எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.
திபெத்திய லாமா கும்பலின் கலகத்தைப் போலவே 1980களில் பஞ்சாபில் பிந்தரன்வாலே தலைமையிலான சீக்கிய மதவெறி பயங்கரவாத கும்பல், தேசிய இன முகமூடியுடன் இந்திய அரசுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலில் இறங்கியது. அன்று பிரதமராக இருந்த பாசிச இந்திரா, அரசு பயங்கரவாதத்தை ஏவி அக்கும்பலை மிருகத்தனமாக ஒடுக்கினார். இவற்றிலே எந்தத் தரப்பின் நியாயத்தை ஏற்க முடியும்? இரண்டுமே பாசிச பிற்போக்குக் கும்பல்கள்; இவ்விரு தரப்பையும் நிராகரித்து, இருதரப்புக்கும் எதிராகப் போராடுவதன் மூலமே ஜனநாயகத்தையும் நியாயமான தேசிய இன உரிமையையும் நிலைநாட்ட முடியும் என்ற நிலைப்பாட்டுடன் அன்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் பிரச்சாரபோராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் சில போலி புரட்சியாளர்களும் சில இனவாதக் குழுக்களும் காலிஸ்தான் பயங்கரவாத கும்பலின் கலகத்தை தேசிய இன உரிமைக்கான போராட்டமாகச் சித்தரித்து, அதை ஆதரித்து, அரசு பயங்கரத்தை மட்டும் எதிர்த்தன. பிற்காலத்தில், தமது நிலைப்பாட்டை இரகசியமாகக் கை கழுவின.
இதேபோல, சீனாவில் 1989இல் ""ஜனநாயக ஆட்சிமுறை''யைக் கோரி மாணவர்கள் போராடியபோது, அதை சீன முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மிருகத்தனமாக ஒடுக்கியபோது, சீன மாணவர் போராட்டம் நியாயமானது, ஜனநாயக உரிமைகளுக்கானது என்று பத்திரிகைகளும் குட்டி முதலாளித்துவவாதிகளும் துதிபாடினர். ஆனால் சீன மாணவர் போராட்டம் மக்கள் ஜனநாயகத்துக்கானதல்ல; கேடுகெட்ட முதலாளித்துவ ஜனநாயகத்துக்கானதுதான். ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் அப்பட்டமான முதலாளித்துவத்தை நிறுவத் துடிக்கும் சீன ஆளும் கும்பலின் ஒரு பிரிவும், அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டியுள்ள போலி கம்யூனிச ஆளும் கும்பலும் நடத்திய மோதல்தான் சீன மாணவர் போராட்டமாக வெளிப்பட்டது. இரு தரப்புமே முதலாளித்துவத்தின் இரு வேறுபட்ட கும்பல்களாக உள்ள நிலையில் அவற்றில் எதை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும்? இவ்விரு தரப்பையும் நிராகரித்து, இரு தரப்புக்கும் எதிராகப் போராடுவதன் மூலமே மக்கள் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் சீன மக்கள் சாதிக்க முடியும் என்ற நிலைப்பாட்டையே அன்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் மேற்கொண்டனர்.
திபெத்தில் தற்போது நடந்துள்ள கலகமும் அதற்கெதிராக சீன அரசின் ஒடுக்குமுறையும் இந்த வகைப்பட்டதுதான். இருப்பினும் இதற்கு தேசிய இனச் சாயம் பூசி இனவாத பிழைப்புவாதிகள் ஆதரிக்கக் கிளம்பியுள்ளனர். அதிலும் தலாய்லாமா கும்பலமானது அப்பட்டமான ஏகாதிபத்தியக் கைக்கூலி கும்பல் என்று உலகெங்கும் அம்பலமான பின்னரும், வலிந்து சென்று அக்கும்பலை ஆதரிக்கின்றனர். இதற்காக, தோழர் மாசேதுங்கை ஆக்கிரமிப்பாளனாகக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தவும் அவர்கள் தயங்கவில்லை. வரலாற்றுப் புரட்டுகளுடன், திபெத் போராட்டத்தை ஆதரிப்பதுதான் மார்க்சியலெனினியம் என்று வேறு ஏய்க்கக் கிளம்பியுள்ளனர்.
1949இல் சீனாவில் தோழர் மாசேதுங் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்று, நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் தூக்கியெறியப்பட்டு உழைக்கும் மக்கள் விடுதலை அடைந்தனர். உழைக்கும் மக்களின் புதிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டங்களில் இறங்கி, விவசாயிகள் தமது புரட்சிகர அரசியல் அதிகாரத்தை நிறுவினர். சீனாவின் ஒரு பகுதியாக நீடித்து வந்த திபெத்தில், புத்தமத குருமார்களான லாமாக்களின் கொடூர கொத்தடிமைத்தனமான ஆட்சிக்கு எதிராக விவசாயிகள் போராடி வந்த சூழலில், இதர பகுதிகளில் நடந்ததைப் போலவே திபெத் மக்களின் விடுதலைக்கு 1950இல் சீன செஞ்சேனை உதவியது. செஞ்சேனையின் உதவியோடு திபெத்திய மக்கள் லாமாக்களின் கொடுங்கோலாட்சியை வீழ்த்தி, அடிமைத்தளைகளை அறுத்தெறிந்தனர். அரண்டு போன லாமா கும்பல் 1951இல் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு ஓடிவந்து, சீன அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி திபெத்தில் அமைதியான முறையில் விவசாய சீர்திருத்தங்களைச் செய்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளிருந்தே சதிகளைச் செய்துவந்த லாமா கும்பல், 1959இல் ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி கலகத்தில் இறங்கியது. கம்யூனிஸ்டுகளைக் கொலை செய்தும், அரசு அலுவலகங்கள் பள்ளிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும் வெறியாட்டம் போட்டது. அக்கும்பலை ஒடுக்க சீன செஞ்சேனை திபெத்தில் நுழைந்ததும், தலைமைக் குருவும் மத அரசருமான தலாய்லாமா தனது விசுவாசிகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இன்னும் சில லாமா கும்பல்கள் மேற்கத்திய நாடுகளுக்குத் தப்பியோடின. திபெத்திய விவசாயிகள், விவசாயப் புரட்சிக் கமிட்டிகளை நிறுவி நிலச்சீர்திருத்தத்தையும் ஜனநாயகத்துக்கான இயக்கத்தையும் தொடர்ந்து நடத்தி மக்கள் அதிகாரத்தை நிறுவினர். 1965இல் திபெத்திய தேசிய இனத்தின் விருப்பப்படி, சீனாவின் சுயாட்சி உரிமை பெற்ற பிரதேசமாக திபெத் மாறியது. 1970களில் சீனாவில் நடந்ததைப் போலவே திபெத்திலும் கலாச்சாரப் புரட்சி நடந்து, திபெத்திய உழைக்கும் மக்கள் பழைய மரபுகள் மூட நம்பிக்கைகளை விட்டொழித்து புத்த மடாலயங்களை பள்ளிக் கூடங்களாக மாற்றியமைத்தனர்.
மறுபுறம், இந்தியாவில் தஞ்சமடைந்த லாமா கும்பலுக்கு கொடைக்கானல், பெங்களூரு மற்றும் இமாசலப் பிரதேசம், உ.பி. மாநிலங்களில் எஸ்டேட்டுகளும் பழத்தோட்டங்களும் அளித்து ஆதரித்த நேரு அரசு, உ.பி.யின் தர்மசாலாவில் லாமா கும்பல் தனது தலைமை நிலையத்தை நிறுவிக் கொள்ளவும் உதவியது. தலாய்லாமா, ""வெளிநாட்டில் வாழும் திபெத்திய அதிபர்'' என்று பட்டம் சூட்டிக் கொண்டார். திபெத் விவகாரத்தை வைத்து கம்யூனிச சீனாவை சீர்குலைக்கத் துடித்த அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், லாமா கும்பலுக்கு இரகசியமாக ஆயுத உதவிகள் செய்து உசுப்பி விட்டன. "ஆசிய ஜோதி' நேரு அரசு இதற்கு உடந்தையாகச் செயல்பட்டது. லாமா கும்பல் திபெத்தில் நுழைந்து பாலங்கள் சாலைகளைக் குண்டு வீசித் தகர்ப்பது, பயிர்களை அழிப்பது முதலான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. அதன்பிறகு நேருவின் வாரிசு இந்திரா ஆட்சியில், அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. உதவியுடன் எஸ்.எஃப்.எஃப் என்ற பெயரில் சிறப்பு எல்லைக் காவல்படை உருவாக்கப்பட்டு, உ.பி. மாநிலம் டேராடூனுக்கு அருகே சக்ரடா மலைப்பகுதியில் லாமா கும்பலுக்கு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி அளித்து சீனாவுக்கு எதிராக ஏவியது. பாசிச இந்திரா கொலை மீதான விசாரணையின்போது, இந்த உண்மைகள் வெளிவந்து நாடெங்கும் நாறியது.
சீனாவில் கம்யூனிச கட்சியையும், ஆட்சியையும் உள்ளிருந்தே முதலாளித்துவ கும்பல் கைப்பற்றி, அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டிய பிறகு, 1979இல் தலாய்லாமாவின் மூத்த சகோதரரான கியாலோதோண்டுப், சீன ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1980களிலும் 1990களிலும் பின்னர் 2002இலும் இரு தரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தின.
சீன முதலாளித்துவப் பாதையாளரான டெங்சியாவோ பிங் முன்வைத்த ""ஒருநாடு; இரு வேறு பொருளாதார முறைகள்'' என்ற கொள்கைப்படி, பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கும், போர்ச்சுகீசிய காலனியாக இருந்த மாகாவ்வும் முந்தைய தமது அரசியல்பொருளாதார முறைகளுடன் சீனாவுடன் இணைந்துள்ளன. அதேபாணியில் திபெத்தும் நீடிக்க வேண்டும் என்று கோருகிறது, லாமா கும்பல். ஆனால், திபெத் நீண்ட நெடுங்காலமாக சீனாவுடன் ஐக்கியப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் ஐக்கியப்படுத்த வேண்டியதில்லை. மேலும், லாமாக்கள் கோரும் முந்தைய அரசியல்பொருளாதார நிலைமை என்பது நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சியாகும். அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை நாகரிக உலகம் ஏற்காது'' என்று சீன அரசு 2004இல் வெளியிட்ட திபெத் பற்றிய வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, சீன அதிகார வர்க்க முதலாளித்துவ ஆட்சியாளர்கள், அப்பட்டமான முதலாளித்துவ அரசியல் பொருளாதார முறைகளை ஏற்கின்றனர். லாமாக்கள் கோரும் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை அரசியல் பொருளாதார முறைகளை ஏற்கத் தயாராக இல்லை.
""தனிநாடு'', ""சுதந்திர திபெத்'' கோரிக்கைகளைக் கை விடுவதாக அறிவித்துள்ள தலாய்லாமா, சீனாவுடன் ஐக்கியப்பட்ட சுயாட்சி உரிமை கோருகிறார். அந்த சுயாட்சி என்பது சீன அரசின் தலையீடற்ற ஆட்சியதிகாரம் என்கிறார். அதாவது, நிதி, இராணுவம் முதலானவற்றில் சீன அரசுடன் ஐக்கியப்படும் அதேசமயம், ஆட்சியதிகாரம் தம்மிடமே இருக்க வேண்டும்; அரசு வடிவம் தம்மாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறார். இதுதவிர, குயின்ஹைய், கன்சு, சிச்சுவான், யுன்னான் மாநிலங்களில் திபெத்தியர்கள் வாழும் பகுதிகளை திபெத் சுயாட்சிப் பிரதேசத்துடன் இணைக்க வேண்டும் என்பது லாமாக்களின் கோரிக்கை. வரலாற்று ரீதியாக, திபெத் மொழி பேசும் இப்பகுதிகள் திபெத்திய ஆட்சியின் கீழ் இருந்ததில்லை என்றும், சீனாவிலுள்ள 50க்கும் மேற்பட்ட சிறிய தேசிய இனங்கள் மொழி அடிப்படையில் தனித்தனி சுயாட்சிப் பிரதேசங்களைக் கோரினால் சீன சமுதாயத்தில் பிளவையும் மோதலையுமே ஏற்படுத்தும் என்றும் சீன அரசு இதனை ஏற்க மறுக்கிறது.
இவ்விரு தரப்புக்குமிடையே நிலவும் அதிகாரத்துக்கான இந்த தகராறு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கும் சீன முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்குமிடையிலான உறவைப் பொருத்து பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்படலாம்; அல்லது பகை நிலைக்கும் செல்லலாம். இதிலே எந்தத் தரப்பு வெற்றி பெற்றாலும், அது ஏகாதிபத்திய உலகக் கட்டமைவைப் பலவீனப்படுத்தப் போவதில்லை; மாறாக, பலப்படுத்துவதாகவே உள்ளது.
எதிர்ப்புரட்சி பிற்போக்குக் கும்பலின் தலைவரான தலாய்லாமாவின் கைக்கூலித்தனத்திற்காக, ஏகாதிபத்திய உலகம் அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கி கொண்டாடிய பின்னரும், அவரை வலிந்து துதிபாடி ஆதரிக்கிறார், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலரான திருவாளர் பெ.மணியரசன். ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியாகச் செயல்பட்டாலும், ""விடுதலை கோருவோருக்கு விடுதலை கூடி வர வேண்டும் என்ற நோக்கமிருக்கும்... அந்த லட்சிய வேட்கையை, நேர்மையைக் கொச்சைப்படுத்தக் கூடாது'' என்று கூச்சமின்றி வக்காலத்து வாங்குகிறார். இதே வழியில் அமெரிக்காவுடன் இணக்கம் கண்டு "ஒருவகை' தன்னாட்சியைப் பெற்றுள்ள குர்திஷ் "எடுபிடி சுயாட்சி'யை வரவேற்கிறார். நாளை, இந்திய மேலாதிக்கவாதிகளுடன் இணக்கம் கண்டு துரோகிகள் தலைமையில் ஈழத்தில் "ஒருவகை' தன்னாட்சி மலர்ந்தாலும், அதையும் மணியரசன் போன்ற பிழைப்புவாதிகள் ஆதரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.எங்கேயாவது, யாராவது தேசிய இன உரிமை என்ற முகமூடியுடன் கிளம்பிவிட்டால் போதும், உடனே அதை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய இனவாத பிழைப்புவாதிகளின் கொள்கையாகி விட்டது. போதாக்குறைக்கு, இப்பிழைப்புவாதத்தையே மார்க்சியலெனினியம் என்று கூறி ஏய்க்கவும் இவர்கள் கிளம்பியுள்ளனர். ஆனால், இதற்கும் மார்க்சிய லெனினியத்துக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை.
""... ஒவ்வொரு தேச விடுதலை இயக்கத்தையும், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்காற்றிலும், பாட்டாளி வர்க்கம் ஆதரித்தே தீரவேண்டும் என்று இதற்குப் பொருளல்ல. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கக்கூடிய, தூக்கியெறிவதாக இருக்கக் கூடிய தேசவிடுதலை இயக்கங்களை தவறாமல் ஆதரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். குறிப்பிட்ட சில ஒடுக்கப்பட்ட நாடுகளில் நடக்கும் தேசவிடுதலை இயக்கங்கள், பாட்டாளி வர்க்க இயக்க வளர்ச்சியின் நலன்களுடன் மோதுபவையாக உள்ள நிகழ்வுகள் எழக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், அவற்றுக்கு ஆதரவு தருவது என்ற பிரச்சினைக்கு அறவே இடமில்லை''என்கிறார் தோழர் ஸ்டாலின். (பார்க்க: ""லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்'' என்ற நூல்)
இதுதான் தேசிய இன விடுதலை குறித்த மார்க்சியலெனினியக் கோட்பாடு. மணியரசன் முன்வைப்பது மார்க்சியலெனினியம் அல்ல, மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி ஏய்க்கும் அயோக்கியத்தனம்!
· பாலன்
No comments:
Post a Comment