தமிழ் அரங்கம்

Sunday, May 11, 2008

நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி!


நேபாள நாட்டில் முன்னேறி வரும் புதிய ஜனநாயகப் புரட்சியின் முதற்கட்டமாக அந்நாட்டின் மன்னராட்சியை வேறோடு பிடுங்கி எறிவதில் இறுதி வெற்றியை நேபாளக் கம்யூனிச (மாவோயிச)க் கட்சி நெருங்கியிருக்கிறது. இது போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திர வெற்றியைக் குறிக்கிறது. நேபாளப் புரட்சியின் வெற்றி அந்நாடு மட்டிலான முக்கியத்துவம் கொண்டதாக மட்டும் இருக்காது. உலக அளவிலான வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அதுமட்டுமல்ல; சித்தாந்த ரீதியிலான முக்கியத்துவம் உடையதாகவும் அமையும்.

சோவியத் ஒன்றியம், சீனா உட்பட முன்னாள் சோசலிச நாடுகளில் பாட்டாளிவர்க்க அரசுகள் வீழ்த்தப்பட்டு மீண்டும் முதலாளித்துவம் மீட்கப்பட்டு விட்டன. சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகிய இரு மேல்நிலை வல்லரசுகளுக்கிடையிலான உலக மேலாதிக்கப் போட்டியில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அமெரிக்கத் தலைமையிலான ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் நிறுவப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய மேலாதிக்க உலகமயமாக்கலின் கீழ் பின்தங்கிய மூன்றாம் உலகநாடுகளில் மறுகாலனியாதிக்கம் நிறுவப்பட்டு வருகிறது. ""கம்யூனிசம் தோற்றுப் போய்விட்டது, (முதலாளிய) ஜனநாயகமே சிறந்த அரசியல் அமைப்புமுறை, சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமே சிறந்த பொருளாதார அமைப்பு முறை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது; வேறு விதமாகச் சொன்னால் "சித்தாந்தம் முடிவுக்கு வந்துவிட்டது' அதாவது முதலாளித்துவஏகாதிபத்திய சித்தாந்தம் தவிர வேறு எந்த சித்தாந்தமும் இருக்க முடியாதவாறு எல்லாவற்றுக்கும் சமாதி கட்டி விட்டோம்'' என்று இட்லரின் நாஜி, முசோலியின் பாசிசத்தை விடவும் வக்கிரவெறியோடு ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகள் எக்காளமிட்டார்கள்.

உலகெங்கிலும் உள்ள போலி கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகளின் இந்த ""சித்தாந்தம் முடிவுக்கு வந்துவிட்டது'' என்ற பிரகடனத்தைக் கண்டஞ்சி, பயபீதியில் நடுங்கிப் போய், தமது வாலை பின்னங்கால்களுக்கு இடையே மடித்துக் கொள்ளும் நாய்களைப் போல மார்க்சிய லெனினிய சித்தாந்தப் பசப்புகளையெல்லாம் கைவிட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் போன்ற வாசகங்களைத் தமது கட்சித் திட்டத்திலிருந்து நீக்கி விட்டனர். ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள் உலக சமூக மன்றம் என்ற பெயரில் ஒன்றுகூடி முன்வைத்த ""மாற்று உலகம் ஒன்றுண்டு'' எனும் மலட்டுத் தனமான முழக்கத்தை அவர்களின் நிழலின் கீழ் நின்று கொண்டு தாமும் அதையே ஒப்பாரிப் பாடலாக ஒலித்தனர்.

இவ்வாறான பாதகமான சூழலில், உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் செயல்தந்திரத்தை ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் தொடுக்கும் சமயத்தில், கடந்த பத்தாண்டுகளாக ""கம்யூனிசமே வெல்லும்!'' என்ற செம்பதாகையை உயர்த்திப் பிடித்து, நேபாளப் பிற்போக்கு ஆளும் கும்பலுக்கு எதிராக மக்கள் யுத்தப் பாதையில் நேபாள கம்யூனிச (மாவோயிச)க் கட்சியினர் வெற்றிகரமாக முன்னேறிக் காட்டினார்கள். இதன் மூலம் காலனிய, அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடுகளில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்ற மாவோ சிந்தனையின் பொருத்தப்பாட்டையும், ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்குக் காரணமாக ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பு என்ற சங்கிலியின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கும் என்ற லெனினியக் கோட்பாட்டையும் நிரூபித்துக் காட்டினார்கள்.

பிழைப்புவாதம் மற்றும் திரிபுவாதத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இனவாதம், மொழிவாதம், மனிதநேயம், சமூகநீதி, முன்பின் நவீனத்துவம் என்று பல வண்ண தொண்டு நிறுவன சீர்திருத்தவாதங்கள் புரிந்தவர்கள் எல்லாம் ""இனி மண்ணுக்கேற்ற கோட்பாடுகள் வகுத்துக் கொண்டு செயல்படவேண்டும்; பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய மார்க்சியலெனினிய மூலவர்கள் முன்வைத்த மரபுவழி கோட்பாடுகள் எல்லாம் காலாவதியாகி விட்டன'' என்று முடங்கிவிட்ட நிலையில், நேபாள மாவோயிஸ்டுகள் உறுதியுடன் நின்றார்கள்; மார்க்சியலெனினிய மாவோ சிந்தனையின் அனைத்தும் தழுவிய செவ்வியல் கோட்பாடுகள் மற்றும் போதனைகளின் இன்றைய புரட்சிக்கான பொருத்தப்பாட்டை நிரூபித்துக் காட்டினார்கள்.

நேபாள அரசியல் நிர்ணயசபைக்கான நடந்து முடிந்த தேர்தலில் நேபாள மாவோயிஸ்டு கட்சி அடைந்துள்ள வெற்றி, அதற்கு முன்பு அதன் சண்டை நிறுத்தம் மற்றும் இடைக்கால அரசில் பங்கேற்பு ஆகியவற்றை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கும் சில போலி புரட்சியாளர்கள், போலி முற்போக்குகள், போலி ஜனநாயக அரசியல் அறிஞர்கள் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல பிதற்றுகிறார்கள்.

""நேபாள மாவோயிஸ்டுகள் பத்தாண்டுகளாக மக்கள் யுத்தப் பாதையில் ஆயுதப் போராட்டத்தை நடத்தி, பல மாவட்டங்களில் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தபோதும், சண்டை நிறுத்தத்தை அறிவித்து, ஆயுதங்களைப் பூட்டி வைக்கவும் புரட்சிப் படைகளை முகாம்களில் அடைத்து வைக்கவும் ஒப்புக் கொண்டு, தேர்தல்களில் பங்கேற்பது சமரசசரணடைவுப் பாதைக்குப் போவதையே குறிக்கும்'' என்கிறார்கள், இந்திய மாவோயிஸ்டுகள் உட்பட "இடது' சந்தர்ப்பவாதிகள். ""ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி மக்கள் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்திய ஆதரவு முதலாளித்துவக் கட்சியான நேபாளக் காங்கிரசு மற்றும் திரிபுவாதக் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து இடைக்கால அரசிலும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களிலும் பங்கேற்பது வலது சந்தர்ப்பவாதச் சரிவாகும்'' என்றும் சாடுகிறார்கள்.

நேபாளத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பருண்மையான அரசியல் நிலைமைகள், அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு இடையிலான உறவு, புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை கடைப்பிடிக்க வேண்டிய போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரக் கோட்பாடுகளுக்கான மார்க்சியலெனினிய வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவை பற்றிய தமது ஒட்டாண்டித்தனத்தைத் தான் மேற்கண்ட விமர்சனத்தின் மூலம் "இடது' சந்தர்ப்பவாதிகள் வெளிப்படுத்துகிறார்கள். புரட்சியின் முன்னேற்றத்தை ஆயுதபலம், படைபலத்தை மட்டும் கொண்டு எடைபோடுவதும், இராணுவப் பாதையில் மட்டும் வழிநடத்துவதும் எல்லாத் தருணங்களிலும் அரசியல் பலத்தையும், அரசியல் போராட்டங்களையும் புறக்கணிப்பதும் மார்க்சியலெனினிய நடைமுறையாக இருக்க முடியாது. அதுவும் எவ்வித அடிப்படையும் காரணமுமின்றி ஆட்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் சண்டை நிறுத்தம் என்று ஒரு முறையல்ல இரண்டுமுறை போனவர்கள் இவ்வாறு வறட்டுவாதம் புரிவது வேடிக்கையாக உள்ளது.

உலக மேலாதிக்கத்தை நிறுவியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய பிராந்திய துணை வல்லரசு மற்றும் இந்திய இந்துத்துவ பாசிஸ்டுகள் உட்பட உலகப் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாங்கிப் பிடித்தும்கூட, நேபாள பாசிச மன்னராட்சி நீடித்திருக்க முடியாமல் வேரறுந்து வீழும் தருணம் வந்துவிட்டது; அதை வேரோடு பிடுங்கி எறிவதற்கான அகநிலை, புறநிலைக் கூறுகள் ஒன்றுதிரண்டு விட்டன; நேபாளப் புரட்சியின் மையம் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மாறிவிட்டது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் விடுதலை படையின் கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டம் என்பதிலிருந்து, நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சி என்ற அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான காலம் கணிந்து விட்டது. தக்க தருணத்தில் பொருத்தமான அரசியல் முழக்கத்தை முன்வைத்து, மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கத் தவறுவதுதான் புரட்சிக்குத் துரோகமிழைக்கும் "வலது' சந்தர்ப்பவாதச் சமரச சரிவாக இருந்திருக்கும். இதையெல்லாம் மார்க்சியலெனினிய விவேகத்துடன் மிகச் சரியாக மதிப்பீடு செய்து, செயல்பட்டது, நேபாள மாவோயிசக் கட்சி.

""பாட்டாளி வர்க்கம்' எதேச்சதிகார ஆட்சியின் எதிர்ப்பை வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்கும் பொருட்டும், முதலாளிய ஊசலாட்டத்தைச் செயலிழக்கச் செய்து முடக்கும் பொருட்டும் விவசாய மக்கள்திரளுடன் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகப் புரட்சியை முழுமையாகவும் இறுதிவரையும் நிறைவேற்ற வேண்டும். முதலாளிய எதிர்ப்பை வன்முறையைப் பயன்படுத்தியும், விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் ஊசலாட்டத்தை செயலிழக்கச் செய்து முடக்கவும் பாட்டாளி வர்க்கம் மக்கள்திரளின் அரைப்பாட்டாளிப் பிரிவினருடன் கூட்டுச் சேர்ந்து சோசலிசப் பரட்சியை நிறைவேற்ற வேண்டும்'' என்று 1905ஆம் ஆண்டே லெனின் போதித்தார். இந்த மார்க்சியலெனினிய அரசியல் போர்த்தந்திர அணுகுமுறையும் கோட்பாடும்தான் நேபாளத்தில் முன்னேறிவரும் புதிய ஜனநாயகப் புரட்சியில் நேபாள மாவோயிச கட்சியால் ஆக்கப்பூர்வமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நேபாள முதலாளிய வர்க்கம், நேபாள முடியாட்சியை வேரோடு பிடுங்கி எறியும் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதில் எப்போதுமே உறுதி காட்டியதில்லை. ஓருடல் இருதலையென்று தன்னோடு ஒட்டியிருக்க வேண்டியதுதான் என்கிற முறையில்தான் முடியாட்சி என்று கருதியே வந்திருக்கிறது. முடியாட்சிக்கு முடிவுகட்டி, ஒரு அரசியல் சட்ட நிர்ணயசபை மூலம் மக்களின் ஜனநாயக குடியாட்சியை நிறுவுவதற்கான மக்கள் எழுச்சி இயக்கம் வெடிக்கும் போதெல்லாம், நேபாள காங்கிரசு தலைமையிலான நேபாள முதலாளிய வர்க்கம் துரோகமிழைத்து முடியாட்சியுடன் சமரசம் செய்து கொண்டு அரசியல் சட்ட அமைப்பின் படியான மன்னராட்சியை நிறுவுவதற்குத்தான் எத்தணித்தது. முதலாளிய ஜனநாயகத்துக்கான கோரிக்கையைக்கூட கைவிட்டு, மன்னராலும் பழைய பிரபுத்துவத்தாலும் திணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளற்ற பஞ்சாயத்து ஆட்சிமுறை போன்ற அதிகாரமில்லாத அரசியல் சட்ட அமைப்பை ஏற்றுக் கொண்டது. பின்னர், மன்னராலேயே பெயரளவுக்கான அந்த ஆட்சி அமைப்பும் தூக்கியெறிப்பட்டு எதேச்சதிகார ஆட்சியே பல ஆண்டுகள் நீடித்தது. 1990களில் நடந்த மக்கள் எழுச்சி மூலம் பலகட்சி நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, பின்னர் அதுவும் கலைக்கப்பட்டது. இறுதியாக, 2000ஆம் ஆண்டு அரண்மனை மன்னர் குடும்பப் படுகொலைகளைகளுக்குப் பின், ஞானேந்திராவின் பாசிச மன்னராட்சி நிறுவப்பட்டது.

மன்னராட்சிக்கு எதிராக நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்துவது, மாபெரும் மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பது என்ற இருவேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்த புரட்சிகர மார்க்சியலெனினிய இயக்கம், நேபாள மாவோயிசக் கட்சி மற்றும் நேபாளக் கம்யூனிச கட்சி (ஐக்கிய மையம்) ஆகிய இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்தது. மன்னராட்சிக்கு எதிராக 2006 ஏப்ரலில் மக்கள் எழுச்சி வெடித்தபோது இவையிரண்டும் கூட்டுச் சேர்ந்து அரசியல் நிர்ணய சபை மற்றும் மக்கள் ஜனநாயக குடியரசு முழக்கத்தை முன்வைத்து தலைமையேற்றன. இவ்விரு பிரிவினரும் முறைப்படி ஐக்கியப்பட்டு 2008 அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். எல்லைக்கப்பால் இருந்து சமூக விரோதபாசிசக் கூலிப் படையை ஏவி, இனவெறியைத் தூண்டி நேபாளப் புரட்சியை சீர்குலைக்கும் மன்னராட்சியை உயிர்ப்பிக்கும் ஏகாதிபத்திய, இந்திய விரிவாக்க இந்துத்துவ சக்திகளின் சதிகளை முறியடித்தனர்.

முதலாளித்துவ மன்னராட்சி என்பதிலிருந்து முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியை ஏற்கும்படி நேபாள காங்கிரசு தலைமையிலான நேபாள முதலாளிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதுவரை நேபாள வரலாறு காணாதவாறு அந்நாட்டு உழைக்கும் மக்கள், தேசிய இனச் சிறுபான்மையினர், பழங்குடியின மக்கள் அனைவரும் வாக்குரிமை பெறுமாறு அரசியல் நிர்ணயசபை மற்றும் மக்கள் ஜனநாயகக் குடியரசு முழக்கங்களை முன்வைத்து மக்கள்திரள் இயக்கங்களை கட்டியமைத்ததோடு, நேபாளப் புரட்சியில் ஊசலாட்ட சமரச சரணடைவு சக்திகளை தனிமைப்படுத்தி முடக்குவதிலும், அரசியல் நிர்ணய சபையில் மிகப் பெரிய அளவில் நிலைநாட்டிக் கொள்வதிலும், நோபள மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், அதேசமயம் உள்ளேயும் வெளியேயும் இருந்துவரும் மேலும் பல சவால்களை எதிர்கொண்டு முறியடித்து நேபாள புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரு துணை வல்லரசு நாடுகளுக்கிடையே பூகோள ரீதியில் சிக்கியுள்ள சின்னஞ்சிறு நாடு நேபாளம். உலக நாடுகளை உருட்டி மிரட்டியும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் தேவைப்படும்போதெல்லாம் பல நாடுகள் மீது படையெடுத்து, ஆக்கிரமித்து உலக மேலாதிக்கம் செலுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கெனவே தனது பயங்கரவாதப் பட்டியலில் முத்திரைக் குத்தி சேர்க்கப்பட்டுள்ள நேபாள மாவோயிஸ்டுகளின் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக அரசு நேபாளத்தில் அமைவதை சகித்துக் கொள்ளாது. அது, பின்தங்கிய பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ள நேபாளத்திற்கு எதிராக ஏகாதிபத்திய உலகமயமாக்கம் என்ற பொருளாதாரத் தாக்குதலை தொடுப்பதற்கும், அவசியமானால் ஆக்கிரமிப்புப் படைகளை ஏவி தாக்குதல் தொடுப்பதற்கும் எப்போதும் எத்தணித்துக் கொண்டேயிருக்கும்.

நேபாளத்திலும், வீழ்த்தப்படும் பிற்போக்கு மற்றும் போலி கம்யூனிச சக்திகளும் பன்மடங்கு பலத்துடன் திருப்பித் தாக்கி, நேபாளப் புரட்சியை பின்னிழுப்பதற்குத் தன்னாலான முயற்சிகளையெல்லாம் செய்யும்.
இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு தகுந்த செயலுத்திகளை வகுத்து புரட்சியை வழிநடத்துவதற்கான மிகப் பெரிய பொறுப்பில் நேபாள மாவோயிசக் கட்சி உள்ளது. அதன் செயலுத்திகளை கொச்சைப்படுத்தி, உலக நாடுகளிலுள்ள புரட்சிகர இயக்கங்களின் இடதுவலது சந்தர்ப்பவாதிகள்கூட சாடக் கூடும். இதற்கு மாறாக, இன்றைய உலகப் புரட்சியின் ஒளிவிளக்காக திகழும் நேபாளப் புரட்சியில் நேபாள மாவோயிசக் கட்சி மேற்கொள்ளும் புதிய முயற்சிகளை மார்க்சியலெனினிய ஒளியில் பரிசீலித்து, அதன் முன்னெடுப்புகளை ஆக்கப்பூர்வமான முறையில் ஆதரிக்க வேண்டியது உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமையாகும்.

No comments: