குஜராத் படுகொலை:
ஆவணப்படம்
நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.
உணர்ச்சி வசப்பட வைக்கும் எழுத்துக்களின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவு குறித்த வரையறை எதுவுமில்லைதான். ஆனால், அது நிச்சயமாகக் காட்சி ஊடகத்தின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவை விடக் குறைவுதான்.
சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால், குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் ""ஒரே அழுகுரல், எங்கும் புகை, ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருக்கின்றன, வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணங்களாக மனிதர்கள், அலறி ஓடுகின்ற மக்கள், துரத்தி வரும் இந்து மதவெறியர்கள்....'' — இப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் அப்படி ஏதுமில்லை. பிஜேபியின் சித்தாந்தம் பாசிசம்தான் என்பதையும், பிஜேபி, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலெல்லாம் பாசிசக் கூட்டம்தான் என்பதையும், மிகத் தெளிவாக, ரத்த சாட்சியங்களாக நம்முன் வைக்கிறது இந்த ஆவணப்படம், நாம் இனிமேல் குஜராத்தை என்றென்றைக்கும் மறந்து விட முடியாதபடி. இப்படத்தின் பெயர்: ஃபைனல் சொல்யூஷன் இறுதித் தீர்வு. படத்தை எடுத்தவர் ராகேஷ் சர்மா.
இந்து நஞ்சு
படத்தின் துவக்கத்திலேயே, படுகொலையினால் பாதிக்கப்பட்ட, படுகொலைகளை நேரில் பார்த்த முசுலீம் குடும்பத்துச் சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. ஒரு நொடியில் நாம் அதை உணர்ந்து விடுவதால் ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது. படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.
பக்தியை, கடவுளை, மதத்தை, மதவெறியை, கலவரம் மூலமாக, படுகொலைகள் மூலமாக, பாலியல் வன்முறை மூலமாக, தேர்தல் வெற்றியாக மாற்ற முடியும் என்பதைப் பாசிஸ்டுகள் நிரூபித்துக் காட்டுகிற விதத்தை தெளிவாக நாம் புரிந்து கொள்ளும்போது, படம் முடியப் போகும் நேரத்தில், மீண்டும் அதே சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதைக் கேளுங்கள்.
இஜாஜ் படித்துக் கொண்டிருப்பது யூ.கே.ஜி.
இஜாஜ்: 1... 2... 3... எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு... பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.
கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?
இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!
கே: யாரை?
இ: இந்துக்களை!
கே: ஏன்?
இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!
கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக நினைக்கிறாய்?
இ: .....கட்டாயம் அவர்களைக் கொல்வேன்!
கே: ஏன்?
இ: நான் அவர்களைச் சேதப்படுத்துவேன்!
கே: எல்லா இந்துக்களும் மோசமானவர்களா?
இ: அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்!
கே: எந்த மாதிரி?
இ: நான் அந்தக் கெட்ட வார்த்தைகளைப் பேசமாட்டேன்.
கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?
இ: (யோசித்து) இல்லை.
கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?
இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.
கே: சரி! நா ஒரு இந்து.
இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.
கே: நான் அவர்களைப் போல இல்லையா?
இ: (இல்லையெனும்படித் தலையசைக்கிறான்)
கேள்வி: அப்புறம்?
இஜாஜ்: நீங்கள் ஒரு முசுலீம்.
— குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.
இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள், ராமபக்தர்களான இந்துப் பாசிஸ்டுகள். தம்மை இந்துக்கள் என்று நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிபவர்கள் இஜாஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?
அது யாரோ வெறியர்கள் செய்தது என்றால், உங்களின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதால் அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து என்பார்களே, அதை அப்படியே பார்க்க முடிகிறது. அதுவும் இது இந்து நஞ்சு.
நன்றி புதியகலச்சாரம்
-----------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும். விரிவான கட்டுரைக்கு http://www.tamilcircle.net/
தமிழ் அரங்கம்
Sunday, September 25, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment