தமிழ் அரங்கம்
Wednesday, September 28, 2005
கோக்கும் - குடிநீரும்
நீ என்ன செய்போகிறாய்?
வறட்சியென்றால் என்னவென்றே அறியாத கேரளாவின் நீர்வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தில் 2000ம் ஆண்டு இந்தியாவிலேயே தனது மிகப்பெரிய ஆலையை அமைத்தது கோக். நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியெடுத்து இரண்டே ஆண்டுகளில் பிளாச்சிமடாவை நீர் ஆதாரமற்ற பாலை நிலமாக மாற்றியது.
உத்திரப்பிரதேசம் (வாரணாசி): வாரணாசியில் இயங்கிவந்த பார்லேயின் ஆலையை வாங்கிய கோக், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியெடுத்தது. மேலும் தனது நச்சுக் கழிவுகளை வயல்வெளிகளிலும், கால்வாய்களிலும், கங்கை நதியிலும் கொட்டி ஊரையே சாக்கடையாக்கியது கோக். விவசாயிகள் தங்கள் வயல்களில் கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த முனைந்த பொழுது பல வினோதமான சரும நோய்களால் பீடிக்கப்பட்டனர். கொசுக்கள் பெருகி மலேரியா காய்ச்சல் பரவியது. மண் அழிந்தது, நீர் அழிந்தது, வாழ்வழிந்தது.
ராஜஸ்தான் (காலாதரா): பாலைனப் பகுதியான ராஜஸ்தானையும் கோக் விட்டு வைக்கவில்லை. அம்மாநிலத்தின் நீர்வளமிக்க பகுதியான காலாதராவில் 1999இல் ஆலை அமைத்த கோக், 24 மணி நேரமும் போர் பம்புகளை இயக்கி ஒன்பதே மாதங்களில் 1,74,301 கன அடி தண்ணீரை உறிஞ்சி எடுத்து காலாதராவையும் பாலைவனமாக்கியது.
மகாராட்டிரம் (தானே): 1997இல் தானேவின் வாடா தாலூக்காவில் ஆலை அமைத்த கோக் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. ஆற்றில் நீர் வரத்து இல்லாத பொழுதும் அணையிலிருந்து குழாய் மூலம் நீரை வரவழைத்து மக்களுக்கு நீரில்லாமல் செய்ததன் விளைவாகக் குடிக்கக் கூட நீரில்லாமல் ஊரை காலி செய்யும் நிலைக்கு மக்களைத் தள்ளியது கோக்.
இவை தவிர ஆந்திரம், வங்காளம், பஞ்சாப் என பெப்சி கோக் ஆலைஅமைத்த இடங்களிலெல்லாம் நன்னீர் வளங்களை அழித்தே தனது மென்பானத்தையும், பாட்டில் நீரையும் விற்பனை செய்கிறது. தனது பணபலம், அதிகார பலத்தின் மூலமாக கோக்பெப்சி தனது குற்றங்களையும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களையும் எந்த ஊடகங்கள் வாயிலாகவும் உலகத்திற்குப் போய்ச் சேராமல் இருட்டடிப்பு செய்கிறது.
நன்றி: புதியகலச்சாரம்
-----------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment