தமிழ் அரங்கம்

Sunday, October 9, 2005

உலக வங்கியின் நோக்கம் என்ன?

உலக வங்கி தன்னுடைய நோக்கத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறது. ''தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசாங்கத்திடமிருந்து பிடுங்கி ஒரு சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகத் தண்ணீரின் விலையை மலிவாக நிர்ணயம் செய்யும் அபாயத்தை அப்போதுதான் தடுக்க முடியும்'' என்று டிசம்பர் 2003இல் ம.பி. மாநில அரசுக்குக் கொடுத்த கடனுக்கான நிபந்தனையாக உலக வங்கி இதைத் தெரிவிக்கிறது.

1998இல் மத்திய அரசும், உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள நீர்ப்பாசனத் துறை குறித்த அறிக்கை ''பாசனநீரின் விலையைப் படிப்படியாக உயர்த்த முடியாது. அதிரடியாக உயர்த்துவதுதான் நல்ல பலனைத் தரும் என்று ஆந்திர அனுபவம் காட்டுகிறது'' எனக் கூறுகிறது.


மைய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மே 1999இல் வெளியிட்டுள்ள ஆவணம் உலக வங்கியின் முடிவுகளை வழி மொழிகிறது. ''தண்ணீர்ச் சேவை என்பது ஒரு தொழிலாகக் கருதப்பட்டு வர்த்தக நோக்குடன் நடத்தப்பட வேண்டும். போட்ட முதலுக்கு போதிய லாபமும் ஈட்ட வேண்டும்'' என்கிறது.

* ஓரளவு வாங்கும் சக்தியுள்ள நுகர்வோர் நிறைந்த நகர்ப்புறங்களில் குடிநீர் விற்பனையை கொள்ளை லாபம் தரும் தொழிலாக மாற்றி அதனைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல்.

* வாங்கும் சக்தியில்லாத ஏழை விவசாயிகள் நிறைந்த கிராமப்புறத்தில் பாசனக் கால்வாய்கள் மற்றும் ஏரி குளங்களை உள்ளூர்ப் பண்ணையார்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் ஒப்படைத்து பாசனக் கட்டணம் வசூலித்தல்; இலவச மின்சாரத்தை ரத்து செய்வதன் மூலம் குழாய்க் கிணற்றுப் பாசனத்தை முடக்குதல்; இதன் மூலம் ஏழை நடுத்தர விவசாயிகளை மட்டுமல்ல, பணக்கார விவசாயிகளையும் விவசாயத்தை விட்டே வெளியேற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பண்ணையார்களின் கட்டுப்பாட்டிற்குள் விவசாயத்தைக் கொண்டு வருதல்.

- இந்தியாவின் நகர்ப்புறங்களையும் கிராமப்புறங்களையும் தண்ணீரின் மூலம் அடிமைப்படுத்த உலக வங்கி வகுத்திருக்கும் இரண்டு அம்சத் திட்டம் இதுதான்.

உலகின் உணவு உற்பத்தி முதல் தொழில் உற்பத்தி வரையிலான அனைத்தையும், காடுகள், மலைகள், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்ற வேண்டும். அவற்றைத் தாம் விரும்பிய வகையில் சூறையாடவும், கொள்ளை லாபமீட்டவும் உலக முதலாளிகள் உரிமை பெற்றிருக்க வேண்டும். இதற்குத் தடையாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சட்டங்கள், மக்களின் உரிமைகள், அரசியல் ரீதியான இடையூறுகள் ஆகியவற்றை அகற்றுவதுடன் தொலைநோக்குடன் சிந்தித்து பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குப் பாதையும் அமைத்துத் தரவேண்டும் - இவைதான் உலக வங்கியின் நோக்கங்கள்.

இதனடிப்படையில் அது வகுத்துள்ள தண்ணீர் தனியார்மயத் திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏற்கெனவே பல்வேறு படிநிலைகளில் அமலாகிக் கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு சான்றுகளைப் பார்த்தாலே போதும், வரவிருக்கும் விபரீதத்தை நாம் புரிந்து கொண்டு விட முடியும்.

ஏக்கருக்கு 8000 ரூபாய் பாசனவரி மகாராட்டிரா சட்டம்!

ஆறு குளம் ஏரி போன்ற பொது நீர் நிலைகளிலிருந்து பாரம்பரியமாகப் பாசனம் செய்து வரும் விவசாயிகள் அந்தத் தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. இந்த ஆணையை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றும் விதத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று மகாராட்டிர அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது.

''மகாராட்டிரா நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்'' என்ற இந்தச் சட்டம், ''நீர்வளத்தைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, இயக்குவது ஆகிய அனைத்துச் செலவுகளையும் ஈடு செய்யும் விதத்தில் தண்ணீரின் விலை நிர்ணயிக்கப்படும்'' என்கிறது. ''இதன்படி ஒரு ஏக்கர் பாசனத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8000க்கும் மேல் ஒரு விவசாயி செலுத்த வேண்டியிருக்கும்'' என்கிறார் முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் திரு. தேசர்தா.

இதுமட்டுமின்றி, ''பல மாவட்டங்களில் சொட்டு நீர்ப்பாசன முறை மட்டும் தான் அனுமதிக்கப்படுமென்றும், இந்தக் கருவிகளை நிறுவாத விவசாயிகளுக்குப் பாசன நீர் தரப்பட மாட்டாது'' என்றும் கூறுகிறது இச்சட்டம். இக்கருவிகளை நிறுவுவதற்கு மட்டுமே ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் செலவாகும். அதனை இயக்குவது மற்றும் பராமரிப்பதற்கான செலவுகள் தனி. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட விவசாயிகள் ஒன்றரை மடங்கு பாசனவரி கட்டவேண்டுமென்றும் கூறுகிறது இச்சட்டம். அதாவது ஏக்கருக்கு 12,000 ரூபாய்.

''தண்ணீரின் விலையை அரசாங்கம் தீர்மானிக்காது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீர்வளத்துறை வல்லுநர், தனியார்துறை முதலாளி ஆகிய மூவர் கொண்ட 'ஒழுங்குமுறை ஆணையம்'தான் ஆண்டுதோறும் பாசன நீரின் விலையை நிர்ணயம் செய்யும்'' என்றும் கூறுகிறது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தின் விளைவை ஒரே வரியில் சொல்கிறார் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாய சங்கத் தலைவர். ''இதுவரை பாசன வசதி இல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்தான் தற்கொலை செய்து கொண்டார்கள். இனி பாசன வசதி பெறுபவர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்!

''ஏப்ரல் மாதம் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த கையோடு மே 10ஆம் தேதியன்று, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது மகாராட்டிர அரசு. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என்று விளக்கமும் சொல்லியிருக்கிறது.

பாசன நீரையும், நிலத்தடி நீரையும் விவசாயிகளிடமிருந்து 'பாதுகாத்து' பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாட்டை கச்சிதமாக முடித்து விட்டது காங்கிரசு அரசு. இப்படியொரு சட்டம் கொண்டு வரப் போவதாக எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் சட்டத்தின் நகலை சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூடப் படிக்கத் தராமல், ஒரே நாளில் 16 சட்டங்களில் ஒன்றாகக் குரல் ஓட்டு மூலம் விவசாயிகள் மீதான இந்த 'மரண தண்டனை' நிறைவேற்றப்பட்டு விட்டது.

தமிழகத்திலும் பாசனநீருக்கு வசூல்!

பாசன நீருக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் வசூலிப்பது என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறொரு வழிமுறையையும் உலக வங்கி கையாள்கிறது. இந்த வழிமுறை தமிழ்நாட்டில் தற்போது மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

''புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கும், ஏற்கெனவே உள்ள பாசனக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், ஏரிகள், கிளைக் கால்வாய்கள் ஆகியவற்றைப் புனரமைத்துப் பயனாளிகளின் பொறுப்பிலேயே அவற்றைப் பராமரிக்க வழிவகை செய்யவும் நீர்வள ஆதாரத் தொகுப்புத் திட்டம்2 என்ற திட்டத்தினை 3900 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு தயாரித்து, இதற்கு உலக வங்கியின் நிதி உதவியைப் பெற உள்ளது'' என்று மார்ச் 23ம் தேதியன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்.அதாவது, அணைக்கட்டுகள் முதல் பாசனக் கால்வாய்கள் வரை எதையும் இனி அரசு தன் செலவில் பராமரிக்காது. அதைப் பயன்படுத்துபவர்கள்தான் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது அரசு. அதாவது, பாசனநீருக்குப் பணம் கொடுக்க முடிந்த விவசாயிக்கு மட்டும்தான் தண்ணீர். மற்றவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு பணம் கொடுப்பவர்களுக்குப் பெயர்தான் 'பாசன நீர்ப் பயனாளிகள்'.

ஒவ்வொரு பாசனப் பகுதியிலும் 'பாசன விவசாயிகள் சங்கம்' என்ற ஒன்றை உருவாக்க வேண்டுமாம். 25 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள 'விவசாயி'தான் அதன் தலைவராக முடியுமாம். தண்ணீரின் விலை அங்கே தீர்மானிக்கப்படுமாம். இதுதான் உலக வங்கியின் திட்டம். தமிழக அரசின் பொதுப்பணித்துறையே முன்நின்று பாசன விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பாசன நீரைப் பெறுவதற்கு விவசாயிகள் கொண்டிருந்த பாரம்பரிய உரிமைகளும், நீரைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றி வந்த மரபுகளும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டு விட்டன. ''பணம் கொடுப்பவனுக்குப் பாசனநீர்'' என்ற இந்த விதி ஏழை நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டுத் துரத்தும். அவர்களது நிலங்களைப் பண்ணையார்கள் பறித்துக் கொள்ளவும் வழி வகுக்கும்.

இவையெதுவும் வெறும் ஊகமல்ல. ஒரிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில், 'தண்ணீர்ப் பஞ்சாயத்து' என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பாசன நீர் முழுவதையும் பண்ணையார்களிடம் ஒப்படைப்பதில் முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் 'தண்ணீர்ப் பயனாளிகள் சங்கத்தை'த் துவக்கி வைப்பதற்கு வந்த உலக வங்கித் தலைவர் உல்பன்சனையும், 'பயனாளி' களையும் விரட்டியடித்தார்கள், தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்ட ஏழை விவசாயிகள

நன்றி தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

3 comments:

கீதா said...

என்னங்க இது.. படிக்க படிக்க அதிர்ச்சியா இருக்கு. இதெல்லாம் எங்க போய் முடியும்??

கீதா
http://geeths.info

தமிழரங்கம் said...

உலகில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ள, எனது நூல் ஒன்று முழுமையாக இந்த இணையத்தில் உள்ளது பார்க்கவும்
http://tamilcircle.net/books/book-07/Book-07-titles.html

மணிப்பக்கம் said...

அதிர்ச்சியாகத்தான் உள்ளது. காங்கிரஸ் அரசு நாட்டை விற்கவும் துணிவார்கள் என்னும் என் எண்ணம் இப்பொழுது மேலும் வலுப்பெறுகிறது!