தமிழ் அரங்கம்

Thursday, October 13, 2005

மக்களின் வாழ்வை

மிதிக்கும் புலம்பல் அரசியல்

இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் ஐரோப்பாவின் இன்றைய முடிவுகளையிட்டு கூறியவை, தமது சொந்த குழுவாத இராணுவ எல்லையைத் தண்டியவையல்ல. மக்களின் நலனையிட்டு அலட்டிக் கொள்ளாத அதே நேரம், சொந்த மனித விரோத நடத்தையையிட்டு அலட்டிக் கொள்ளாது புலம்பமுற்படுகின்றார். ஐரோப்பியா என்ற எகாதிபத்தியம் பற்றிய, தேசிய உணர்வு எதுவுமற்ற நிலையில் இந்தப் புலம்பலே வெறும் அலட்டலாகவே மாறியது. கிளியைப் போல் பினாற்றும் இந்த அலட்டல், வழமைபோல் எதுவும் நடைமுறைக்கு உதவாத சொற்களின் கோவையாக இருக்கின்றது. இருந்தபோதும் கூட தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இந்த இராணுவ கும்பல்வாத புலிகளே இருப்பதால், இதனை நாம் மக்கள் நோக்கில் இருந்து பரீசிலிப்பதை அவசியமாக்கின்றது.

தமிழ்ச்செல்வன் "இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் பங்கேற்றுள்ள இருதரப்பினரில் ஒருதரப்பாகிய தமிழரின் நியாயத்தைச் சொல்லும் பாதைகளை தனது பயணத் தடை மூலம் ஐரோப்பிய ஒன்றியம் மூடியிருப்பதாக" கூறுகின்றார். தமிழ்ச்செல்வன் கூறுவது போல் எந்த சமூக நியாயத்தையும் யாரும் தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் சமூக நியாயமல்லாத எதையும் யாரும் தடுத்த நிறுத்தமுடியும். ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த ஏகாதிபத்திய மேலான்மை மூலம், தனது தடைகள் மூலம் தமிழரின் நியாயங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு இனத்தின் நியாயத்தை உலக மக்களிடம் சொல்வதை யாரும் தடுக்க முடியாது. இங்கு உள்ள அடிப்படை விடையமே, தமிழர் தரப்பில் நின்று எமது நியாயத்தையே நாங்கள் சொல்ல தவிறிவிட்ட எமது அரசியல் நிலையில், அவை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு புதைகுழிக்கு அனுப்பபட்டுவிட்டது. தமிழரின் நியாயம் என்று எதையெல்லாம் நாம் இன்று சொல்ல முனைகின்றோம். உண்மையில் மக்களின் சமூக பொருளாதார நியாயங்களை நாம் சொல்வதில்லை. புலிகளின் சொந்த நலன் சார்ந்த நியாயங்களையே, தமிழரின் நியாயங்களாகிவிட்ட நிலையில், உலக மக்களிடம் சொல்வதற்கு என எதுவும் இருப்பதில்லை. இந்த தடைக்கு முன்னம் ஐரோப்பிய மக்களுக்கு என்ன நியாயத்தைத் தான் புலிகள் சொன்னர்கள். எமது தலைவர் பிரபாகரன் என்று சொன்னதைத் தவிர, வேறு எதைத்தான் சொல்ல முடிந்தது. தமிழர்தரப்பு நியாயம் என்று சொல்வதற்கு புலிகளிடம் எதுவும் இருப்பதில்லை.

ஐரோப்பியத் தடை தெளிவாக புலிகளிடம் ஒரு செய்தியைக் கூறுகின்றது. அதாவது படுகொலைகளை நிறுத்தும் படி. சிறுவர்களை இராணுவ நடவடிக்கைக்கு திரட்டுவதை நிறுத்துக் கோருகின்றது. மிக நுட்பமாக இதனடிப்படையில் தடை அறிவிக்கப்பட்டது. கொல்வதும், சிறுவர்களின் சமூக அறியாமையை சுயநலனுக்கு பாவிப்பதையும் தமிழர் தரப்பு நியாயமாக எப்படி நாம் எற்றுக் கொள்வது. யாராலும் இதை தமிழரின் உரிமை என்று கூற முடியுமா? ஆனால் தமிழ்ச்செல்வன் இதற்கு நேர்மையாக பதிலளிக்காது "தமிழர் தாயகத்தில் எமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டு வருவது தீவிரமடைந்து வருகின்றன. இதை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்." என்கின்றார். தமது தரப்பு மீதான கொலைகளை இதற்கு மாற்றாக வைத்து, தாம் கொல்லும் உரிமையை நியாயப்படுத்துகின்றனர். புலிகள் தரப்பில் சார்ந்தவர்கள் ஒப்பிட்டளவில் சிறுபகுதியினர் மட்டுமே. தமிழர்கள் பெருமெடுப்பில் கொல்லப்பட்டதைப் பற்றி பேசாது, தமது தரப்பில் கொல்லப்பட்டத்தை மட்டும் பேசுகின்றார். தமிழரின் எகபிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வதில் உள்ள முரண்நிலை இது.

தமது தரப்பு அல்லாத கொலையைக் கண்டிக்கத் தவறுவதுடன், கொலைகளை தொடர்ந்தும் புலிகள் அன்றாடம் செய்கின்றனர். ஏன் இந்த தடைக்கு பின்பும் கொல்லப்படுகின்றனர். இது சற்று மாறி அடித்துக் கொல்வது என்ற புதிய வடிவில் மாற்றம் காண்கின்றது. புலிகள் தரப்பின் மீதான தாக்குதல்கள் குறிப்பாக மட்டகளப்பிலேயே அதிகமாக உள்ளது. அங்கு புலியில் இருந்து பிரிந்த கருணா தரப்பு உடன் நடக்கும் பரஸ்பர மோதலே இக் கொலைகளின் அடிப்படையாகும்;. இந்த மோதலில் யாரும் தலையிடக் கூடாது என்ற பிரகடனம் செய்த புலிகள் தான், இன்று தொடரும் பரஸ்பர மோதலில் கொல்லப்படுபவர்களையே தம்தரப்பு மீதான கொலைகளாக காட்டுகின்றனர்.

இன்று இதையும் தாண்டி கிழக்கில், இராணுவம் மீதான ஒரு தரப்பாக தொடாச்சியான குண்டுத் தாக்குதலை புலிகள் நடத்துகின்றனர். இதை வடக்குகிழக்கு எங்கும் பொது நடைமுறையாக்கவே புலிகள் தீவிரமாக முனைகின்றனர். யுத்தத்தைத் துண்டும் வகையில், இவை உந்தித் தள்ளப்படுகின்றன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு நோக்கிய ஒரு கவணத்தை திருப்புவதற்கு பதில், சொந்த மக்கள் விரோத நடத்தைகளை மூடிமறைக்கவே குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கின்றனர். இது ஐரோப்பிய தடையை எந்தவிதத்திலும் மாற்றுவதற்கு பதில் தீவிரமாக்கும். ஐரோப்பிய தடையில் உள்ள எகாதிபத்திய அம்சத்தை தனிமைப்படுத்தி அதை அம்பலப்படுத்தி ஐரோப்பிய மக்களை வென்றெடுக்கும் உத்தி, இங்க தமிழ்ச்செல்வனால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகின்றது. தொடர் கொலைகளை நிறுத்தவும், சிறுவர்களை படையணிக்காக கடத்துவதை நிறுத்தவும் தவறும் புலிகள், அதை செய்யும் உரிமையைத்தான் ஐரோப்பிய தடடையை நீக்குவதற்குடாக கோருகின்றனர். இது ஒரு முரண்நிலையானதும், அறிவியலுக்கு உதாவதும் கூட.

ஐரோப்பிய தடையை நீக்கக்கோரிய கையெழுத்து வேட்டையும், ஊர்வலங்களும், எழுச்சி மாகநாடுகள் எதுவும் இந்த தர்க்கத்தின் முன் வீண்விரயமாகிவிடும. தமிழ்மக்களை அன்றாடம் கொன்று குவிக்கும் உரிமைக்காக, தம் மீதான தடை நீக்கக் கோருவது அர்த்தமற்றவை. மாறக நடைமுறையில் கொலைகளை நிறுத்தி, முன்மாதிரியாக சுயவிமர்சனம் செய்து தடைக்கு எதிராக அதில் உள்ள ஏகாதிபத்திய உள்ளடகத்துக்கு எதிராக போராடவேண்டும். இந்த போராட்டதத்தை மறுக்கும் வரை, இவை எல்லாம் விலலுக்கு இறைத்த நீராகவே அமையும். ஐரோப்பிய மக்களைக் கூட தமக்கு சார்பாக வென்றுறெடுக்க முடியாது. இந்த நிலையில் தான் தமிழ்ச்செல்வன் "யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்த வேண்டும்." என்ற வாய்கூசாது கூறுகின்றார். சிங்களப் பேரினவாதம் தான் ஒப்புக்கொண்ட விதிகளை அழுல்படுத்துவதற்கு முன்னம், அதைக் கோரும் எமது தரப்பு அதில் நேர்மையாக செயல்படுவது அவசியமானது. சொந்த அரசியல் நேர்மையில் நின்று தான், மற்றவனின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பமுடியும். நான் நேர்மையினமாக இருந்து கொண்டு, மற்றவனின் நேர்மையினம் பற்றி சிலாகிப்பது அர்த்தமற்றவை.

இதில் முக்கியமானது புலிகள் ஒருதரப்பாக தமிழர் தரப்பைக் கொல்வதும், சிறுவர்களை கடத்திச் செல்வதும். இதை நாங்கள் செய்யும் உரிமை தான், யுத்தநிறுத்த ஒப்பந்த விதி என்று தமிழ்ச்செல்வன் கூற முனைகின்றார். இது புலி இராணுவவாத கும்பல்களின் அரசியலற்ற வெட்டித்தனத்தின் விளைவே இப்படி வெளிவருகின்றது. இந்த நிலையில் இந்தத் தடையை "இலங்கைத் தீவில் அமைதியைக் கொண்டு வரும் இருதரப்பினருடைய சம அந்தஸ்தை, சம அங்கீகாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக" தமிழ்ச்செல்வன் தாங்கள் விரித்த வலையின் மேல் நின்று கொண்டு பிதற்றுகின்றார். உண்மையில் சம அந்தஸ்து என்ற நிலையை பலவீனமாக்குவது ஐரோப்பிய யூனியனா அல்லது நாங்களா என்ற கேள்வியை நேர்மையாக புலிகள் எழுப்பி விடையளிக்க வேண்டும். தமிழர் தரப்பை ஒரு தரப்பாக நாமே கொன்று குவிப்பதால் தனித்தரப்பாக இருக்கும் அங்கீகாரத்தை இழந்துவரும் தீவிரமான இன்றைய நிலையைத்தான் முதலில் கேள்வியாக எழுப்பவேண்டும். அதற்கு பின்புதான் ஏகாதிபத்தியங்களின் சொந்த உள்நோக்கை தமிழச்செல்வன் கூறுவது போல் அல்லாது, ஏகாதிபத்திய உள்ளடகத்தில் கேள்விக்குள்ளக்க வேண்டும்.

சம அந்தஸ்துடனான உங்கள் நிலையை நீங்களே தகர்த்த படி, அதை மற்றவன் தகர்ப்பதாக கூறுவதே நகைப்புக்குரியது. இப்படி நாம் செய்தபடி "சர்வதேச சமூகத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை பலவீனமடைந்து போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்ற கூறுவது வேடிகை தான். இதை தமிழ்மக்களின் பெயரில் இதைக் கூறவது மிகக் கேவலமானது. மக்கள் தான் வன்முறையில் ஈடுபடுவதாகசுவும், தமிழ் மக்கள் தான் கொலை செய்வதாகவும் புலியின் அரசியல் விளக்கங்கள் ஒருபுறம் அடிக்கடி கூறப்படுகின்றது. இதன் மூலம் மக்களின் பெயரில் பிரபானிசமே சந்திக்கு வருகின்றது.

சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழப்பதாக தமிழ் செல்வன் கூறும் போது, இது புலியின் நம்பிக்கை பற்றிய பிரச்சனையாகவே மாறுகின்றது. இந்த நம்பிக்கையினம் தாம் கொலை செய்யும் உரிமை மீது கோரமுடியும் என்ற பிரபானிசத் தத்துவத்தை, மக்களின் பெயரில் வெளியிடுவதே அபத்தமாகும். மக்களா கொலை செய்யச் சொன்னார்களா? மக்களா அறியப்பருவம் கொண்ட தமது பச்சிளம் சிறு குழந்தைகளை, கடத்திச் சென்று பயிற்சி அளிக்கச் சொன்னர்கள்? இதன் மீது தடை வரும் பொது, மக்கள் நம்பீக்கை தகர்ந்து நிற்கின்றார்கள் என்று வாய்கூசாது எப்படித் தான் இப்படி அபத்தமாகவே புலிகளால் சொல்ல முடிகின்றது.

இப்படி அப்படி புலம்புவது பின் "யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தினோம்." என்ற கூறுவது என்பது, கபடர்களின் நேர்மையற்ற ஒரு செயல். தமிழ் மக்களையே அவாகளின் பெயரில் எமாற்றும் நரித்தனம.; கேள்விக்குள்ளாகத வாய்பூட்டு அரசியல் சர்வாதிகாரத்தில், இப்படி எதையும் எப்படியும் சொல்லிவிட்டுச் செல்லாம் என்ற நிலையில் இன்று தமிழ் மக்களின் சமூக அவலம் உள்ளது.

இந்த நிலையில் "கதிர்காமரின் கொலையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ளாமல் சிறிலங்கா அரசின் ஒருதலைப்பட்சமான முறைப்பாடுகளையும் குற்றச்சாட்டுகளையும் மட்டும் நம்பி ஐரோப்பிய ஒன்றியம் இப்படியான முடிவுகளை எடுக்கக் கூடாது" என்று கூறுவதற்கு முன், இது போன்ற நடத்தை நெறிகளை நீங்கள் கொண்டிருப்பதை நீங்கள் நடைமுறையில் மாற்றி காட்டியிருக்க வேண்டும். அமர்தலிங்கத்தின் கொலையின் போது கூட, அதை நீங்கள் அல்ல என்றீர்கள். புலியில் இருந்து பிரிந்து சென்ற சிலரின் உதிரி நடவடிக்கை என்றீர்கள். பின் தமிழ்ச்செல்வன் கொலைக்கான காரணத்தை தலைவரிடமே கேட்க் வேண்டும் என்றார். ராஜிவ் கொலையில் போது நீங்கள் அல்ல என்றீர்கள். இதை புதியஜனநாயகம் குழு செய்தாக கூறினீர்கள். பின் உதிரி குழுக்களின் நடவடிக்கை என்றிர்கள்;. இதை பின் ஒரு துன்பவியல் சம்பவம் என்று இன்று வருணிக்கின்றீர்கள். 1985 இல் அணுதாரபுரத்தில் நடந்த 150க்கு மேற்பட்ட கொலையை மறுத்தீர்கள். பின் அதை இந்தயா தந்த பணத்துகாக செய்தாக கூறினீர்கள். இப்படி பற்பல. இப்படி பல கொலைகளுக்கு நடந்தது.

நேர்மையான அரசியல் முன்மாதிரி இல்லாத உங்கள் நடத்தை நெறிகள், உண்மையில் நீங்கள் ஒன்றை செய்யவிட்டாலும் கூட உங்களுக்கு அது பொருந்திவிடும் நிலையில் நீங்கள் இருப்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அதை மாற்றுவதே அவசியமானது. புலிகள் பூனையாகிவிடவில்லை. இது சிலருக்கு எற்பட்ட மாலைக் கண் நோயால் அப்படி விபரிதத் போதம், உண்மை அப்படியல்ல. முதலில் நாம் எதையும் செய்யவில்லை என்று சொல்ல முன், நாம் நிச்சயமாக எம்மையும் எமது நடத்தைகளை சுயவிமர்சனம் செய்து சீரிய நடைமுறையில் மாறியிருக்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன் கூறுகின்றார் "அமைதி முயற்சிகளில் இரண்டு தரப்புகள் இருக்கின்றன." என்ற கூற்று, எப்படி தொடரும் கொலையை நியாயப்படுத்த போதுமானது. உண்மையில் இப்படி கூறியபடி தொடரும் கொலைகள், படிப்படியாகவே அமைதி முயற்சியில் ஒரு தரப்பு சார்ந்த தீர்வாக மாறும் ஒரு நிலையை நோக்கிய, எகாதிபத்திய நகர்வுகள் மாறிச் செல்வதையே துரிதமாக்கின்றது. அதாவது புலிகள் தாங்களாகவே அதில் இருந்து விலகி, ஒரு தரப்பாக அரசு தீர்வை முன்வைக்கும் வகையில் தம்மைத் தாம் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் பின்பாகவே சர்வதேச நகர்வு உள்ளது. இந்த சர்வதேச நகர்வை புரிந்து கொள்ளாமல் அலட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை. இந்த நிலையில் "சமதரப்பு என்ற அடிப்படையில் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைச் சொல்வதற்கான பாதைகளை மூடிவிட்டு மற்றொரு தரப்பான சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கிற குற்றச்சாட்டுகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது என்பது எந்த விதத்திலும் நியாயமற்றது" என்ற கூறுகின்றனர். உண்மையில் தளித்தரப்பாகவே விலகிவரும் புலிகள் நடத்தைகள் உள்ளது. இதை புலிகளின் கொலைக் கலச்சாரம் தூண்டிவருகின்றது. இந்த நிலையை சிறிலங்கா பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமும் எற்படுத்தியதற்கு அப்பால், புலிகள் தாமவே இந்த நிலையை எற்படுத்தி வருவது முதன்மையான ஒன்று. ஏகாதிபத்தியமும், பேரினவாதிகளும் புலிகளின் நடத்தை நெறிகளில் இருந்தே, இதற்கான சாதகமான கூறுகளைப் பெறுகின்றனர். அவர்கள் தனித்து எந்த முடிவுகளையும் அந்தரத்தில் எடுக்கவில்லை. புலிகளின் நடத்தைகளில் இருந்து, தமது நோக்கத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கின்றனர். தமிழ்மக்களின் தேசியம் சார்ந்த ஜனநாயக கோரிக்கையில் இருந்து, இந்த முடிவை எடுக்கும் ஒரு நெம்புகோலை மக்கள் வழங்கிவிடல்லை. மக்களுக்கு எதிராக இயங்க கங்கயம் கட்டி நிற்கும் புலிகளின் சொந்த நடத்தை நெறிகள் தான் இதை வழங்குகின்றன.

இந்த நிலையில் இந்தத் தடை "தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி இருக்கிறது. தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். தமிழர்கள் மீது இன வன்முறையை, ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்துவிட சிங்கள இனவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதுபோல் இம்முடிவு அமைந்திருக்கிறது." "ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினால் சிங்கள இனவாத சக்திகள் பலமடைந்திருக்கின்றன." என்று கூறுவதில் உள்ள உண்மைக்கு அப்பால், இந்த நிலமையை உருவாக்கிய எமது தரப்பு மனித விரோதச் செயலுக்காக நாம் வெக்கப்பட வேண்டும். பேரினவாதத்தை எப்பொதும் பலப்படுத்தி வந்தவை எமது சொந்த நடவடிக்கைகளே. எமது சொந்த நடத்தை நெறிகள் மகக்ளுக்கு எதிராக மாறுகின்ற போது, அதை மக்களுக்கு எதிரான மற்றைய சக்திகள் பயன்படுத்துவது இயல்பானது. இதையே இன்று புலிகள் செய்கின்றனர்.

இதில் இருந்து தப்பிப்பிழைக்கவே தமிழ்ச்செல்வன் வழமையான வகையில் "எங்களைப் பொறுத்த வரையில் சமாதான முன்னெடுப்புகளில் காத்திரத்துடனும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவில் வலுவுடனும் இருக்கிறோம்." இது காலவாதிகிப் போன வழமையான புலிகளின் விளையாட்டு அனுகுமுறை. பேரினவாதம் பலம்பெற்று வரும் இன்றைய நிலையில், இந்த தந்திரம் யாராலும் நேர்மையாக இருப்பதாக கருதுவதில்லை. வழமையானதும், குருட்டு தனமானதுமான அனுகுமுறை. இலங்கை அரசு மட்டுமல்ல, உலகமே இந்தச் சூழச்சியை புரிந்து கொள்கின்ற இன்றைய நிலையில், தமிழ்மக்கள் கூட இதை நம்பத் தயாரற்ற நிலையில் உள்ளனர். இப்படி கூறுவது, தம்மைத்தாம் திருத்தி செய்கின்ற ஒன்றுதான். தமிழ்செல்வன் ஒரே வார்த்தைகளை மீள மீள கூறுகின்ற ஒரு கிளிப்பிள்ளையாக இருப்பதால், இதைத் தாண்டி எதையும் சமூகத்தின் முன் வைக்க முடிவதில்லை. நடைமுறைக்கும், சொல்லும் வார்த்தைக்கும் உள்ள இடைவெளியும், வழமையான வகையில் அமைகின்றது. அவர்களே தாம் வெட்டும் புதைகுழியில் புதைந்து போகும் வகையில் மாறி வருகின்றது. இதை பேரினவாதம் பெருவெற்றிக் களிப்புடன் காண்கின்றது. புலிகள் தாமகவே தாம்மை தனிமைப்படுத்தி வெறும் இராணுவக் கும்பல் வாதத்துக்குள் மூழ்கடிந்து நிற்கின்றது. தனது குழுவாத சொந்தக் கோரிக்கைக்களை கூட சிதைக்கும் உத்தியுடன் இயங்குகின்றது. இந்த நிலையில் "நீண்டகாலமாக இன வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம் கொடுத்த எம்மக்கள் அரசியல் விழிப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் அனைத்தும் நீதியான முறையிலேயே நடைபெற்று வந்துள்ளது." என், மக்களின் பெயரில் தமிழ்ச்செல்வன் ஒபபாரி வைக்கின்றார். தமிழ் மக்கள் பேரினவாதத்தை எப்படி புரிந்து, அதை எப்படி தமது சொந்தக் கோரிக்கையாக முன்வைக்கின்றனர் என்பதில் இருந்தே அனைத்தும் அம்பலமாகி விடுகின்றது. மக்கள் தமது சொந்த அரசியல் பொருளாதார சமூகக் கூறுகளில் இருந்து, பேரினவாதத்தைப் புரிந்து நிற்கின்றனர் என்று, தமிழ்சசெல்வனால் ஒரு நாளுமே கூற முடியாது. புலிகளே அதை புரிந்து கொண்டது கிடையாது. புலிகளின் அடிமைகளாகவே அடிமைப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் கதி அதைவிடக் கீழனாதே.

இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் "..காலம் காலமாக மாறி மாறி வந்த சிறிலங்கா அரச தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதிலும் தமிழ் மக்களின் மீதான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்துவதிலும்தான் ஈடுபட்டு வருகிறார்கள்." என்று கூறுவது மூலம், சொந்த மக்கள் விரோத நடத்தைகளை நிவர்த்தி செய்யமுடியாது. தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் பெயரில் மக்களையே காலகாலமாக எமாற்றும் போது, அதை பேரினவாதத்தால் மிக இலகுவாகவே எமாற்ற உதவுகின்றது. பேரினவாதம் தமிழ் மக்களை எமாற்ற, நாமே காரணமாக இருக்கின்றோம். இதற்கு எமது சொந்த நடத்தைகள், சொந்த அரசியல் நெறிகள் தான், இலகுவாக பேரினவாதம் மக்களை எமாற்ற உதவுகின்றது. நாங்கள் சரியாக இருந்தால், எந்த பேரினவாதமும், எந்த எகாதிபத்தியமும் எமது மக்களை எமாற்றமுடியாது. நாங்கள் எதை இந்த உலகத்திடம் கோருகின்றோம். எமது மக்களின் சொந்த சமூக பொருளாதார வாழ்வியல் மீதான உரிமையைக் கோருகின்றோமா? அல்லது புலிகளின் இராணுவ நலன் சார்ந்தவற்றை கிறக்குபுத்தியுடன் கோருகின்றோமா?

இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் கூறுகின்றார் "நீண்ட சமாதான காலத்தின் மீது தமிழ் மக்கள் விரக்தியும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் தங்களுடைய அரசியல் அபிலாசைகளை நேரடியாக திரண்டு வந்து சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கிற நிகழ்வுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளன." என்ன வெற்றுவேட்டுத் தனம். மக்களை பினாமி அமைப்புகளின் வெயரில், மக்களின் சொந்தக் கோரிக்கைகள் அல்லாத புலிக் கோரிக்கைகளின் பெயரில் கூட வைக்கும் கும்பல் சேர்க்கும் நடத்தைகள் மூலம், எதையும் தமிழ்மக்கள் உண்மையில் பெறப்போவதில்லை. மாறாக மேலும் மேலும் புலிகள் மக்களிடம் இருந்து அன்னியமாவதுடன், உலகில் இருந்தும் கூட அன்னியமாகின்றனர்.

விரிவான கட்டுரைக்கு http://tamilcircle.net/news/europ.htm

No comments: