ஆணாதிக்க சமூக பொருளாதார பண்பாடே ஒழுக்கக்கேடான பாலியலாகின்றது.
ஆணின் பாலியல் தேவைகளின் வரையறுகளே, பெண்ணின் மீதான பாலியல் கோட்பாடுகளாக இருந்தன, இருக்கின்றன. இதில் இருந்தே பெண்ணின் பாலியல் என்பது வரையறுக்கப்பட்டது. இந்த வகையில் பாலியல் என்பது, நிலபிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒழுக்கமாகவும், பெண்ணின் கற்பாகவும் கூட மாறியது. ஆண் இதில் இருந்து விதிவிலக்கு பெற்றவனாக, அதுவே சமூக அங்கீகாரம் பெற்ற ஒரு பண்பாடாகவும் மாறியது.
ஆனால் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் தகர்வு இதையும் மாற்றி அமைக்கின்றது. பெண்ணை ஆண் விரும்பியவாறு நுகரும் வகையில் சமூகத்தை மாற்றிவருகின்றது. இங்கு கடந்தகாலத்தில் நிலவிய சமூக கூட்டுறவாக்கம் அவசியமற்ற ஒன்றாகிவிட்டது. பெண்ணை சந்தையில் வாங்கும் ஒரு சரக்காக கருதும் வண்ணம், சமூகப் பொருளாதார கூறு ஆண் பெண் உறவையே சிதைத்துள்ளது. முதலாளித்துவம் ஒரு சமூக பொருளாதார உறவாக மாறிய போது, கூலிகளை சந்தையில் பெற்ற போது சமூக உறவுகள் எப்படிச் சிதைந்ததோ, அதே போன்ற ஆண்கள் பெண்களை சந்தையில் பெற்று நுகரும் நிலைக்கு உலகமயமாதல் பெண்களை இட்டுச் செல்லுகின்றது. பெண் மேலும் பாலியல் பண்டமாகவே அடிமையாகின்றாள். இதையே சிலர் பெண் விடுதலை என்கின்றனர்.
இந்த நிலையில் நிலப்பிரபுத்துவ பெண்ணை அப்படியே நுகர்வது என்பது முரண்பாடாகின்றது. பெண் சுயேட்சையாக பாலியல் நுகர்வுக்கு தானாக இணங்கிப் போகும் பெண்ணின் உலகக் கண்ணோட்டம் மட்டும் தான், ஆணின் இன்றைய தேவையை பூர்த்திசெய்யும். இதைத்தான் ஆதிக்கம் பெற்றுவரும் உலகமயமாதல் ஆணாதிக்கம், பெண்ணுக்குரிய பெண் விடுதலை என்கின்றது. இதற்கு எடுபட்டுப் போகும் பெண், இதை பெண் விடுதலையாக கருதும் போக்கையே தீவிர பெண்ணியமாக பிதற்றுகின்றனர். சமூகம பற்றிய புரிதல் இன்றி இது கொலுவேறுகின்றது. இயல்பாக உலகமயமாதல் சமூக பொருளாதார அமைப்பு உருவாக்கிவரும் நவீன ஆணாதிக்கத்தை, சமூக இயக்கத்துடன் தொடர்பற்ற அறிவுயீவிகள் தான் பெண்ணியமாக தத்துவார்த்த அடிப்படையை திணிக்கின்றனர்.
உண்மையில் இது பெண் தானாக கண்டுபிடித்தவையல்ல. மாறாக ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணின் மீது திணித்தவை. இதற்கு சமூகத்தில் மாறிவரும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கும் நுகர்வு வெறி, பெண்ணை விபச்சார நிலையில் வழி காட்டுகின்றது. ஒழுக்கக்கேடான இந்த பண்பாடின் கட்டமைப்பே, உலகமயமாதல் தான். உலகமயமாதல் சந்தையில் பொருட்களை குவித்து அதை வரைமுறையற்ற வகையில் எப்படி நுகரத் தூண்டுகின்தோ, அப்படித் தான் பெண்ணையும் நுகரத் தூண்டுகின்றது. பெண் உலகச் சந்தையின் கூண்டில் விடப்பட்ட விளம்பரப் பொம்மை போல், கவர்ச்சியான பாலியல் பொருள் தான். இது உடல் சார்ந்தது.
ஆனால் ஒரு மாற்றம். சந்தையில் எப்படி ஆண் நுகர முடியுமோ, அப்படி பெண்ணும் நுகர முடியும். இரண்டு உயிரிகள் என்ற வகையில், நுகர்வு பரஸ்பர நுகர்வின்றி சாத்தியமில்லை. சந்தையில் கூலியை வாங்கும் மூலதனம் போன்று, பெண்ணை நுகரும் ஆணாதிக்கம் செயல்படுகின்றது. இந்த ஆணாதிக்க நுகர்வு ஒழுக்கத்தையே, பெண் விடுதலை என்கின்றனர். இன்று பெண்ணியம் பேசும் பலரும், இதன் தீவிரமான ஆதரவாளர்கள். இவர்கள் எடுத்துக் கொள்ளும் பல்வேறு கருத்துகளின் நடத்தைகளில், இந்தக் கூறுகளை சரியாகவே இனம் காணமுடியும்.
இதை நாம் சமூக வெறுப்பூட்டல்களில் சரியாகவே இனம் காணமுடியும்;. நிலப்பிரபுத்துவம் ஆணாதிக்க பெண்ணின் கடமையாக வரையறுக்கப்பட்ட அனைத்தையும், பெண் வெறுக்க வேண்டும் என்று இந்த பெண்ணியம் புகட்டுகின்றது. மாறாக ஒரு ஆண் எப்படி சமூக மறுப்பாளனாக வாழ்கின்றானோ, அப்படி பெணணும் வாழ்வதே பெண்ணியம் என்கின்றது. இது எப்படி பெண்ணியமாகும். இது நிச்சயமாக இந்த ஆணாதிக்க அமைப்பில், ஆணாதிக்கமயமாதல் தான். சந்தை நிலப்பிரபுத்துவ பெண்ணின் கடமைகளை சிதைக்கும் போது, சந்தைக்கு அது அதிக லாபம் தருகின்றது. உதாரணமாக பெண் சமைக்க மறுத்தால் மிகப் பெரிய பன்னாட்டு உணவுவிடுதிகள் அதிக லாபம் அடைகின்றது. குழந்தைக்கு சொந்த பாலைக் கொடுக்க மறுத்தால், பன்னாட்டு குழந்தை உணவு விநியோகஸ்தர்கள் அதிக லாபம் அடைகின்றனர். இப்படி பற்பல. உண்மையில் பெண் தான் தக்கவைத்திருந்த பல அறிவியலை ஆணாதிக்க அமைப்பிடம் இழந்து போகின்றாள். அதை ஆணாதிக்க சந்தை கைப்பற்றுகின்றது. சமூகத்தில் சிறியளவில் பண்பாடு சார்ந்து மரபாக பாதுகாத்த பலவிதமான உணவு சார்ந்த பழக்கவழக்கங்கள் பெண்ணுக்கு நுகர்வுச் சுதந்திரத்தை பரிசளித்து விட்டு, அவளிடம் இருந்து அறிவியல் உண்மைகள் பறிக்கப்படுகின்றது அல்லது அழிக்கப்படுகின்றது. உலகமயமாதல் குறிப்பாக இதில் கவனம் எடுத்துச் செய்கின்றது. இப்படி பற்பல.
இதன் சமூக விளைவு என்ன. பன்னாட்டு நிறுவனங்கள் சுதந்திரமான தேர்வை மறுத்து தரும் ஒரு சிலவற்றை, மக்கள் மந்தையைப் போல் உண்ணப் பழக்கப்படுகின்றனர். இங்கு பெண் சுதந்திரமாக பல தேர்வுகளை கொண்டிருந்தாள் என்ற அரசியல் உண்மையைக் கூட, பெண்ணியத்தால் கண்டுகொள்ள முடியாத அவலம் எற்படுகின்றது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பன்மையான சமூகத் தேவையை மறுத்து, பெரும்பாலானவற்றை அழித்து மிகுதியை தனது கண்டுபிடிப்பாக்குகின்றது. உண்மையில் பெண் இவற்றை இழந்து போகின்றாள்.
மறுபக்கத்தில் பெண் தன்னிடம் இருந்த அறிவியல் கூறை இழக்க, ஆண்களே மிகச் சிறந்த சமையல்காரனாக மாறுகின்றான். இன்று உணவு சார்ந்த கலை, படிப்படியாக ஆணின் ஆதிக்கத்துக்கு வந்துள்ளது. இப்படி பெண் தான் கண்டுபிடித்த பல அறிவியல் உண்மைகளை இழந்தாளோ, அப்படி தன்னிடம் எஞ்சி இருக்கும் அறிவியல் கூறுகளை இழப்பது உலகமயமாதலில் வேகம் பெற்றுள்ளது. இதையே தீவிர பெண்ணியம் பெண்ணியம் என்கின்றது.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெண் ஆணின் கருவியாகி, ஆணாதிக்கத்தை எப்படி பாதுகாக்கின்றாளோ, அப்படித்தான் உலகமயமாதல் சமூக அமைப்பில் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் கருவியாகின்றாள்.
நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கக் கூறுகளை மறுத்து, ஏகாதிபத்திய பாலியல் நுகர்வுப் பெண்ணாக மாறுவது பெண்விடுதலையல்ல.
உதாரணமாக
1.தீவிரவாதப் பெண்கள் என்று தம்மைத்தாம் கூறிக் கொள்ளும் உலகமயமாதல் பண்பாட்டின் கும்மியடிகள், பெரும்பாலானோர் குழந்தை வளர்ப்பை வெறுக்கின்றனர். குழந்தை வளர்ப்பு என்பதை நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகம் பெண்ணின் கடமையாக வரையறுத்தது என்பது உண்மை. ஆணால் அதை மறுதலித்து குழந்தை வளர்ப்பை நிராகரிக்கும் உலகமயமாதல் ஒழுங்கு பெண்ணியமல்ல. இதில் சனத்தொகை குறைப்பு என்ற உலகமயமாதல் சதியும், இந்த பெண்ணிய கும்மியடிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சமூக நடவடிக்கை. பெண்ணிடம் அது காணப்பட்ட போது, சமூக நோக்கில் மிக உயர்ந்த, ஆணாதிக்கத்திடம் இல்லாத ஒரு பண்பாகும். சமூக நோக்கங்களையும், சமூகக் கூறுகளை மறுத்து உருவான ஆணாதிக்க சமூக அமைப்பில், பெண் கடந்து வந்த சமூகக் கூறுகளை தன்னிடம் எச்சமாக வைத்திருந்தாள். இதை ஆணாதிக்கத்தின் இழிவான சமூகக் கூறுகளில் இருந்து அகற்றி, அதை சமூகத்தின் பெருமைக்குரியதாக மாற்றிப் போராட வேண்டிய பெண்ணியம், அதற்கு எதிராக ஆணாதிக்கத்தை நோக்கி தன்னைச் சிதைப்பதையே பெண்ணியமாக காட்டுகின்றனர். உண்மையில் இதன் சமூகக் கூறுகள், தனிமனித சமூகவிரோத ஆணாதிக்க கூறுகளாக சிதைந்துவிடுகின்றது.
2.கர்ப்பப்பையை வெட்டியெறிவோம் என்று பெண்ணியப் புலம்பல்கள், எதைத்தான் சொல்ல முனைகின்றது. பெண்ணின் பெருமைகளை சிறுமைப்படுத்துவதில் முடிகின்றது. ஆணாதிக்க சமூகத்துக்கு முந்தைய பெண்ணின் பெருமைகள், இந்த கருப்பையில் குழந்தையை சுமப்பதில் காணப்பட்டது. தனிச்சொத்துரிமை ஆணாதிக்கம் இதைச் சிறுமைப்படுத்தியது. இதன் வழியில் பெண் தனது சொந்தக் கருப்பையையே சிறுமைப்படுத்துவது அதைவிடக் கேவலமானது. ஆணாதிக்கத்தின் வழியில் அதை மேலும் இழிவாக்குகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் கருப்பையை சிறுமைப்படுத்தி, அதை தனது வாரிசுக்குள் சிறைப்படுத்தியது. உலகமயமாதல் ஆணாதிக்கம் கருப்பையை நுகருவதற்கு இடைஞ்சலாகவே கருதுகின்றது. கருவைத் தாங்கும் ஒரு பெண் தனது நுகர்வுக்கு தடையாக இருக்கின்றாள் என்பதை, நுகர்வு ஆணாதிக்கம் புகட்டுகின்றது. இதையே கவ்விக் கொண்டு, கருப்பையை அறுத்தெறிவோம் என்கின்றனர். இப்படி புலம்புவோர் தமது நுகர்வு வெறியை தக்கவைப்பதில் மட்டும் கவனமாக உள்ளனர். நுட்பமாக பார்த்தால், ஆணுடன் பாலியல் உறவை கொள்வதை மட்டும் இது மறுதலிக்கவில்லை. இங்கு உடல் சார்ந்த பாலியல் நுகர்வு முதன்மை பெறுகின்றது. இதனால் தான் பெண் உறுப்பை அழிப்பதைப் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை.
3.வரைமுறையற்ற பாலியல் சுதந்திரத்தை கோருவதே பெண்ணியம் என்கின்றனர். இது பழைய காட்டுமிராண்டி சமூகத்தின் நிலைக்கு சரிந்து செல்வதை குறிக்கின்றது. பழைய காட்டுமிராண்டிச் சமூகத்தில் இருந்த பாலியல் என்பது, பெண்ணை பாலியல் சார்ந்த ஒரு உடல் பண்டமாக கருதி ஒரு நுகர்வு வெறியுடன் இருக்கவில்லை. விரும்பி இணையும் ஒரு இயற்கையான ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. அந்த வகையில் இன்று இருப்பதில்லை. சந்தையில் உள்ள ஒரு பொருளை அடங்காவெறியுடன், தேவையைக் கடந்து நுகரும் வெறியுடன் தான் மேட்டுக்குடிகள் நுகருகின்றனர். அதே உள்ளடகத்தில் தான் ஆணாதிக்க உலகமயமாதல் பெண்ணை பாலியல் ரீதியாகவும் நுகருகின்றது. இதையே பெண்ணையும் நுகரக் கோருவதால், இதைப் பெண்ணியம் என்கின்றனர்.
மனிதன் தான் இயல்பாக விரும்பிய இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த போது அங்கு பாலியலில் வக்கிரம் இருக்கவில்லை. தனியுடமை சமூகம் உருவான போது, தனிப்பட்ட ஆண்களின் சொத்துடமை ஆதிக்கம் வளர்ச்சியுற்ற போது, பாலியல் கூறும் திரிபடைந்தது. ஆண் பெண்ணை தனது தனிமனித சொத்துடமை கண்ணோட்டத்தில் நோக்கி, தான் மட்டும் நுகரும் சமூக அமைப்பை படைத்தபோது, பெண்ணை அவன் ஒரு பாலியல் கருவியாக கருதத் தொடங்கினான். தனிமனித சமூக அமைப்புக்கு ஏற்ப அனைத்து செல்வத்தையும் தனதாக்கும் குறிக்கோளுடன் சமூகத்தைச் சுரண்டியதைப் போல், பெண்ணையும் தனது பாலியல் நுகர்வுக்குள் உள்ளடக்கி வரைமுறையற்ற வகையில் சுரண்டத் தொடங்கினான்.
பெண்ணின் சுயேட்சையான தேர்வு என்பது, ஆணின் தனிமனித சொத்துரிமைக்கு முன்னால் மறுதலிக்கப்படத் தொடங்கியது. பெண் மீதான ஆண்களின் வரைமுறையற்ற பாலியல் நுகர்வுச் சுதந்திரம், காட்டுமிராண்டித்தனமானதாக மாறியது.
இதில் இருந்து பெண் தப்பிக்கவேண்டிய ஒரு நிலை பெண்ணுக்கு ஏற்பட்டது. பெண் ஒரு பலமான ஆணின் துணையை நாட நிர்ப்பந்திக்கப்பட்டாள். இதன் மூலம் தனது சொந்தத் தெரிவை பாதுகாக்க முடிந்தது.
இதுவே தனிச்சொத்துரிமை அமைப்பில் பெண் படிப்படியாக தான் தேர்ந்தெடுத்த ஒரு கற்பு நெறியாகியது. தான் விரும்பும் ஆணுடன் வாழும் உரிமையை இது பாதுகாக்கும் அடிப்படையில், பெண் இந்த வழியை தேர்ந்தெடுக்க முடிந்தது. இது உருவாகி வந்த தனிமனித சொத்துடைமை சமூக அமைப்புக்கு ஏற்றதாகவும் மாறியது.
ஆனால் இதுவும் பின்னால் திரிபடைந்தது. பெண் தான் தேர்ந்தெடுத்து வாழும் கற்பு என்ற சுயம் சார்ந்த உள்ளடகத்தை, தனிச் சொத்துரிமை வாரிசு ஆண் தனக்கு இசைவாக்கி தன்னுடன் மட்டும் வாழும் ஒழுக்கமாக்கினான். இதுவே பல கட்டங்களை கடந்தும், வாழ்க்கை பூராவும் குறித்த பெண் கற்புடன் குறித்த ஆணுடன் வாழ நிர்ப்பந்திக்கும் வகையில் கற்பு திரிபடைந்தது.
இன்று தீவிர பெண்ணியல்வாதிகள் கற்பு என்பதை நிராகரிப்பதாக பிரகடனம் செய்கின்றனர். இதன் மூலம் பெண்ணின் தேர்வு இந்த ஆணாதிக்க அமைப்பில் மீண்டும் மறுக்கப்படுகின்றது. மாறாக நுகர்வு என்ற உலகமயாதலின் கோட்பாட்டில், பெண் உடல் சார்ந்த ஒரு பண்டமாக மாற்றப்பட்டு விபச்சாரியாக்கப்படுகின்றாள். உலகமயமாதலில் பெண் ஆண்களின் தேவையை ப+ர்த்தி செய்யும், நுகர்வு பண்டமாகவே மாற்றப்படுகின்றாள். இப்படி விரிவாக நாம் பலவற்றை ஆராய முடியும்.
தமிழ் அரங்கம்
Sunday, December 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment