உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம் :
மறுகாலனியாதிக்கத்தின் பிடி இறுகுகிறது
தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் இந்திய விவசாயமும், சிறுதொழிற்துறையும், வங்கி, காப்பீடு, கல்வி போன்ற சேவைத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது, தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகள் அனைத்திலும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த மாற்றங்கள்தான் திணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஏழை நாடுகளின் இம்மூன்று துறைகளையும் ஒரே அடியில், முற்றிலுமாகத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஏகாதிபத்திய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் முயன்று வருகின்றன.
கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் 2001ஆம் ஆண்டு நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் நான்காவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, இத்துறைகள் குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வர, ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகின்றன. ஏழை நாடுகளின் ஆளும் கும்பலுக்குச் சில சலுகைகளைக் கொடுப்பதன் மூலம், உடன்பாட்டைச் சாதித்துவிட ஏகாதிபத்திய நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சதித் திட்டத்திற்கு உலக வர்த்தகக் கழகம் சூட்டியுள்ள பெயர்தான் ''தோஹா வளர்ச்சி சுற்று பேச்சுவார்த்தை!''
இந்த நோக்கத்தை மையமாக வைத்து, மெக்சிகோ நாட்டில் உள்ள கான்கன் நகரில் 2003ஆம் ஆண்டு உலக வர்த்தகக் கழகத்தின் ஐந்தாவது அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிற்கு எதிராக உலகு தழுவிய அளவில் எழுந்த எதிர்ப்பாலும்; ஏழை நாடுகளைப் பிரித்தாளும் ஏகாதிபத்திய நாடுகளின் சதி வெற்றி பெற முடியாமல் போனதாலும்; ஏழை நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எதிர்பார்த்த சலுகைகள், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து கிடைக்காததாலும் இந்த ஐந்தாவது மாநாடு தோல்வியில் முடிந்தது.
இதன்பின், 2004 ஜூலையில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் கூட்டத்தில் ''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுவார்த்தைகள்'' குறித்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையே ஓர் சமரச உடன்படிக்கை ஏற்பட்டது.
இதன்படி, அரசாங்கம் நடத்தும் ஏலங்களில் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களைப் போல கலந்து கொள்ளும்படி, ஏழை நாடுகளின் அரசாங்கக் கொள்முதல் கொள்கையை மாற்றியமைப்பது
ஏழை நாடுகளின் எந்தத் தொழிலிலும் பன்னாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் மூலதனம் போடுவதற்கு முழுச் சுதந்திரம் அளிப்பது
ஏழை நாடுகளின் தொழிற் போட்டி சட்டத்தை மாற்றியமைப்பது ஆகிய அம்சங்களைப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்கிக் கொள்வது என்றும்; விவசாயம், தொழிற்துறை காப்பு வரிகள், சேவைத் தொழில் குறித்து மட்டும் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இச்சமரச ஏற்பாட்டின் பின், ஹாங்காங் நகரில் டிசம்பரில் மாதம் இரண்டாவது வாரம் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் ஆறாவது அமைச்சர்கள் மாநாட்டில், இந்த அம்சங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்களின் வேளாண் பொருட்களுக்குக் கொடுத்து வரும் ஏற்றுமதி மானியத்தை 2013ஆம் ஆண்டோடு நிறுத்திவிட வேண்டும்.
வேளாண் பொருட்கள் ஏழை நாடுகளில் அளவுக்கு அதிகமாக இறக்குமதியாகும் பொழுது, அல்லது அந்நாடுகளின் வேளாண் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள், வேளாண் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வையை உயர்த்திக் கொள்ளலாம்.
தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள், தீர்வைகளைக் குறைப்பதில் ஏழை நாடுகளுக்குச் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக, குறிப்பிட்ட சில உற்பத்திப் பொருட்களை, தீர்வை குறைப்பு வட்டத்துக்குள் கொண்டு வராமல் இருக்கும் சலுகை ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்.
இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அடுத்த ஆண்டிற்குள் முடிவு எடுக்கப்படும். தாவர வகைகள், நுண்ணுயிர்களின் மீது காப்புரிமை கோருவது; சேவைத் தொழிலைத் தாராளமயமாக்குவது குறித்து ஏழை நாடுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என இந்த ஹாங்காங் அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஹாங்காங் அறிக்கை உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள 149 உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பாக உலக வர்த்தகக் கழகத்தில் நடந்த விவாதங்களைக் காட்டி, உலக வர்த்தகக் கழகத்தை ஜனநாயக அமைப்பாகச் சிங்காரிக்கிறார்கள். ஆனால், ஏகாதிபத்திய நாடுகள் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் ஏற்றுமதி மானியத்தை 2010ஆம் ஆண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஏழை நாடுகளின் சாதாரண கோரிக்கையைக்கூட ஏகாதிபத்திய நாடுகள் விவாதத்தின் பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன.
ஐரோப்பிய யூனியன், தனது பொது விவசாயக் கொள்கையை 2013ஆம் ஆண்டில் பரிசீலிக்கும் வரை, மானியக் குறைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்திருந்தது. அமெரிக்கா, 2008 தொடங்கி 2013க்குள் தனது ஏற்றுமதி மானியத்தில் 53 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக, ''உலக வேளாண் வணிகத்தில் துணிச்சலான சீர்திருத்தங்கள்'' என்ற திட்டத்தில் அறிவித்திருந்தது. இதன்படிதான், ஏற்றுமதி மானியத்தை நிறுத்திக் கொள்ளும் இலக்காக 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய யூனியன், கடந்த 200203ஆம் ஆண்டில் மட்டும் தனது நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், விவசாய கம்பெனிகளுக்கும் கொடுத்துள்ள மொத்த மானியம் 3,60,000 கோடி ரூபாய். இதில், ஏற்றுமதிக்காக கொடுக்கப்பட்ட மானியம் 15,750 கோடி ரூபாய்தான். அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் பல்வேறு விதமான மானியங்களில், 5 சதவீதம் கூடப் பெறாத இந்த ஏற்றுமதி மானியத்தை மட்டும்தான், 2013ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளன. மலையைக் கிள்ளி எலியைப் பிடித்த கதையாக, இந்த அற்பமான சலுகைதான் உலக வர்த்தக கழகத்தைச் சேர்ந்த 125 ஏழை நாடுகளுக்குக் கிடைத்திருக்கிறது.
அமெரிக்கா, தனது நாட்டு பருத்தி விவசாயிகளுக்குக் கொடுத்துவரும் மானியத்தை மட்டும் 2008ஆம் ஆண்டு முதல் நிறுத்திக் கொள்வதாக, இம்மாநாட்டில் டாம்பீகமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் ''பெரிய மனதால்'' பலன் அடையப் போவது நான்கே நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகர்கள்தான்.
இது ஒருபுறமிருக்க, உலக வர்த்தகக் கழகத்தில் எவ்வளவுதான் சலுகைகள் வழங்கப்பட்டாலும், 40 மிகவும் வறிய ஏழை நாடுகளுக்கு, எந்தவொரு பலனும் கிட்டப் போவதில்லை என உலக வங்கியே வெளிப்படையாகக் கூறியிருக்கிறது.
உண்மை இப்படியிருக்க, தாராளமயத்தின் ஆதரவாளர்களோ, இந்த மாநாட்டு அறிக்கை ஏழை நாடுகளின் விவசாயிகளுக்கு சொர்க்க வாசலையே திறந்து விட்டதைப் போலப் பீற்றிக் கொள்கிறார்கள். ''சமனற்ற போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த கட்டாயத்தில் இருந்து இந்திய விவசாயிகள் தப்பித்து விட்டதாகவும்; அவர்கள் ஏற்றுமதி செய்வதற்குப் புதிய சந்தைகள் கிடைத்திருப்பதாகவும்'' இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
தாராளமயத்திற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்டா பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள்? ஒரிசாவையும், மகாராஷ்டிராவையும் சேர்ந்த பழங்குடி இன மக்களும், அவர்களின் குழந்தைகளும் ஒருவேளை சோறுகூடக் கிடைக்காமல் பட்டினியால் செத்த பொழுது, அவர்களுக்கு ரேசன் அரிசியை இலவசமாகத் தர மறுத்தது, மைய அரசு. அதேசமயம் வெளிநாடுகளுக்கு மானிய விலையில் அரிசியையும் கோதுமையையும் ஏற்றுமதி செய்தது. அந்நியச் செலாவணிக்காக நடந்த அந்த வியாபாரத்தை நியாயப்படுத்துபவர்களால் மட்டுமே, ஹாங்காங் அறிக்கையைக் கொண்டாட முடியும்.
தாராளமயத்தின் பின் விவசாயத்தில் நுழைந்துள்ள ஐ.டி.சி. போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காகவே விவசாயம் செய்யும் புதுப்பணக்கார விவசாயிகள் இவர்களுக்குத்தான் ஹாங்காங் அறிக்கை இலாபகரமானதாக இருக்குமேயொழிய, கந்துவட்டிக்காரனிடம் கடன்பட்டு விவசாயம் செய்யும் சிறிய நடுத்தர விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பலனும் கிட்டப் போவதில்லை.
உலக வங்கியின் கட்டளைப்படி, கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியம் படிப்படியாக வெட்டப்பட்டு, ஏதோ பெயரளவிற்குத்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய மானியம் என்பதே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்ட நிலையில், அதில் இனியும் வெட்டுவதற்கு மிச்சம் எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான், இதுவரை மானியத்தை வெட்ட மறுத்துவந்த அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் 2013இல் ஏற்றுமதி மானியத்தை நிறுத்தும்பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் மானியத்தைக் குறைக்க வேண்டியதில்லை என்ற ''சலுகை'' வாரி வழங்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பே, இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, 1,429 வேளாண் பொருட்களை, எங்கிருந்து வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற ''சீர்திருத்தம்'' நம்நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தத் தாராள இறக்குமதி, ரப்பர், தேயிலை, காபி, பருத்தி, தென்னை, எண்ணெய் வித்துக்கள், பழங்கள், பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பல இலட்சக்கணக்கான விவசாயிகளைப் போண்டியாக்கி, அவர்களை விவசாயம் செய்ய முடியாமல் முடக்கிப் போட்டு விட்டது.
விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரும் வேலைவாய்ப்புகளை வழங்கிவந்த சிறு தொழிற்துறைக்குக் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளும், பாதுகாப்பும் தாராளமயத்தின் பின் நீக்கப்பட்டதால், இந்தியாவெங்கும் பல இலட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடிக் கிடக்கின்றன. இப்படி விவசாயமும், சிறு தொழில் துறையும் அரசால் கைவிடப்பட்டு, அழிக்கப்பட்ட பிறகு, தாராள இறக்குமதியில் இருந்து இத்தொழில்களைப் பாதுகாக்க உலக வர்த்தகக் கழகத்தால் சலுகைகள் வழங்கப்படுவது குரூர நகைச்சுவையாகத்தான் இருக்க முடியும்!
அதனால்தான், இந்த மாநாட்டை எதிர்த்து ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகளும், உழைக்கும் மக்களும், ''உலக வர்த்தகக் கழகம், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய பறவைக் காய்ச்சலைவிட மிகவும் அபாயகரமானது'' என முழக்கமிட்டார்கள்.
வெறும் மூங்கில் கழிகளைக் கொண்டு ஹாங்காங் போலீசாரோடு மோதிய தென்கொரிய நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ''நாங்கள் தீவிரவாதிகள் கிடையாது. எங்களின் வாழ்க்கை எப்படிச் சீரழிந்து போய்விட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம்'' என்றார்.
ஹாங்காங் நகரத் தெருக்களில் உலக வர்த்தகக் கழகத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள், சலுகைகள் கேட்டோ, அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளைத் திறந்துவிடக் கோரியோ போராடவில்லை. மாறாக, ஒரு மோசமான ஒப்பந்தத்தைவிட, ஒப்பந்தம் போடாமல் கலைவதே மேலானது என்று தான் அவர்கள் கோரினார்கள்.
''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தையின் தலையெழுத்து முடிந்துவிட்டது'' எனக் கை கழுவி விடப்பட்ட நிலையில், அதற்கு ஹாங்காங் ஒப்பந்தம் உயிர் ஊட்டியிருக்கிறது. உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்த உருகுவே சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு இணையாக, தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தை கருதப்படுகிறது. எனினும், இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே, ஹாங்காங் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறது, நயவஞ்சக காங்கிரசு கும்பல். இந்திய நாடாளுமன்றம், ஏகாதிபத்தியங்கள் ஆட்டிப் படைக்கும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.
காங்கிரசு கூட்டணியை முட்டுக் கொடுக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் ஹாங்காங் மாநாடு குறித்து வர்த்தக அமைச்சர் கமல்நாத்துக்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு, இன்னொருபுறம் அதை எதிர்த்து அறிக்கை போர் நடத்தும் பித்தலாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகளுக்கோ, உள்ளூர் பொறுக்கி அரசியலைவிட, ஹாங்காங் ஒப்பந்தம் ஒன்றும் முக்கியமான தலைபோகும் விசயமாகத் தெரியவில்லை.
1999ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் மூன்றாவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, உலக வர்த்தகக் கழகத்திற்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும், போலி கம்யூனிஸ்டுகள், தன்னார்வக் குழுக்கள், பின் நவீனத்துவவாதிகள், அராஜகவாதிகள் என்ற வானவில் கூட்டணியால்தான் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.
''இந்த உலகம் விற்பனைக்கு அல்ல'' போன்ற கவர்ச்சிகரமான ஜனரஞ்சகமான முன் வைத்து இப்போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், உலக வர்த்தகக் கழகம் ஏழை நாடுகள் மீது திணிக்கும் மறுகாலனி ஆதிக்கத்திற்கான தீர்வை, இந்த ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள்ளேயே இவை தேடுகின்றன. இதன் காரணமாகவே, ஏழை நாட்டு விவசாயிகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள், ஒரு அடையாள எதிர்ப்பு என்பதைத் தாண்டி வளர்த்துச் செல்லப்படுவதில்லை. இது மட்டுமின்றி, ஏழை நாட்டு மக்களின் மறுகாலனி ஆதிக்கத்திற்கான எதிரான கோபத்தை மழுங்கடிக்கும் பாதுகாப்பு ''வால்வு''களாகவும் இப்போராட்டங்கள் மாறிவிடுகின்றன.
இதற்கு மாற்றாக, ''சோசலிசமே ஒரே தீர்வு'' என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டிப் போராடும் பொழுதுதான், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும்.
மு செல்வம்
நன்றி புதியஜனநாயகம்
தமிழ் அரங்கம்
Tuesday, January 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment