தமிழ் அரங்கம்

Friday, January 27, 2006

இங்கேயும் ஒரு அபுகிரைப்

இங்கேயும் ஒரு அபுகிரைப்
வீரப்பனைத் தேடுவது என்ற பெயரால் மலைவாழ் மக்களின் மீது அதிரடிப்படை ஏவிவிட்ட சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் சதாசிவம் கமிசனால் உறுதி செய்யப்பட்டுள்ளன


சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை வேட்டையாடுவதற்காக, தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைகள், சத்தியமங்கலம், தாளவாடி, கொள்ளேகால் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் மீது நடத்திய மனித உரிமை மீறல்களைப் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. வீரப்பனைக் ''கொன்ற'' தமிழக அதிரடிப்படையின் ''வீர சாகசத்தை''ப் புகழ்ந்து தள்ளிய முதலாளித்துவ பத்திரிகைகளால்கூட, அதிரடிப் படைகளின் அட்டூழியங்களைப் பூசி மெழுகிவிட முடியவில்லை.

தமிழக கர்நாடக அதிரடிப் படைகள் நடத்திய பாலியல் வன்முறைகள், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள், இரத்த சாட்சிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பவானி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ச.பாலமுருகன், அதிரடிப்படையால் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டதை, ''சோளகர் தொட்டி'' என்ற நாவல் மூலம் இலக்கிய சாட்சியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய மனித உரிமை கமிசனால் நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிசன், தமிழககர்நாடக அதிரடிப் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய பொழுது, இந்த அதிரடிப் படைகள் மலைவாழ் மக்களின் மீது ஏவிவிட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், போலி மோதல் கொலைகள் அம்பலமாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சதாசிவா, மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் நரசிம்மன் ஆகியோரைக் கொண்டு 1999ஆம் ஆண்டு ஜூனில் உருவாக்கப்பட்டது இந்த கமிசன். மலைவாழ் மக்களில் 193 பேர், தமிழக கர்நாடக அதிரடிப் படைகளைச் சேர்ந்த 28 போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு 243 பேரிடம் விசாரணை நடத்தி, சதாசிவம் கமிசன் 2003ஆம் ஆண்டு டிசம்பரில் தனது அறிக்கையை தேசிய மனித உரிமை கமிசனிடம் ஒப்படைத்தது.

இந்த கமிசன் உருவாக்கப்பட்டதையும், விசாரணை நடத்துவதையும் ஏற்றுக் கொள்ளவே மறுத்து வந்த தமிழக கர்நாடக மாநில அரசுகள், வீரப்பனோடு சேர்த்து சதாசிவம் கமிசன் அறிக்கையையும் புதைத்துவிட கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயன்று வந்தன. எனினும், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கமிசனின் அறிக்கையை வெளியிடக் கோரித் தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் மனுதாரர் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.பி.குணசேகரனுக்கு, சதாசிவம் கமிசன் அறிக்கை தேசிய மனித உரிமை கமிசனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

''தமிழக கர்நாடக அதிரடிப் படைகளால் அக்.3 1990க்கும் ஜூலை 18, 1998க்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் 66 பேர் போலி மோதல் படுகொலைகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; இந்தச் சட்ட விரோதமான படுகொலையை மறைக்க, வீரப்பன் கும்பலோடு நடந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தமிழக கர்நாடக அதிரடிப்படைகள் நடத்திய நாடகத்தையும் கமிசனின் அறிக்கை தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

''அதிரடிப் படைக்கும், வீரப்பன் கும்பலுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் இம்மோதல்களின் உண்மைத் தன்மை குறித்து, பல்வேறு சாட்சியங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்றவை என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ள சதாசிவம் கமிசன், ''ஒரு மோதல் நடந்தால், அதில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பும், ஒருவரை நோக்கி ஒருவர், மிக விரைவாக, குறுக்கும் நெடுக்குமாகச் சுட்டுக் கொண்டிருப்பது நடந்திருக்கும். ஆனால் இந்த மோதல்களில் அப்படி இங்கொன்றும் அங்கொன்றுமாக, பல்வேறு திசைகளில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை'' என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த 66 பேரும், தலையின் முன்புறமோ, பின்புறமோ அல்லது உடம்பின் முன்புறமோ, பின்புறமோ சுடப்பட்டு இறந்து போயிருப்பதை ஆதாரமாகக் காட்டி, இவை அனைத்தும் போலி மோதல் படுகொலைகள்தான் என்பதை சதாசிவம் கமிசன் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

பெங்களூரில் இயங்கி வரும் தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்தின் துணை இயக்குநர் என்.ஜி.பிரபாகர், ''இந்த 66 பேரில், 28 பேர் ஆறு தப்படியில் இருந்து அறுநூறு தப்படி தூரத்திற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; மூன்று பேர் 550 மீட்டர் தொலைவிற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; ஆறு பேர் மிக மிக அருகாமையில் இருந்து அதாவது, ஆறு தப்படிக்கும் குறைவான தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்'' சதாசிவம் கமிசனில் சாட்சியமாக அளித்து, அதிரடிப் படையின் மோதல் நாடகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மிக மிக அருகாமையில் இருந்து சுடப்பட்ட இந்த ஆறு பேரில், புட்டா என்பவர், வாய்க்குள் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். குமத்ஸா என்பவரின் உடலில் பாய்ந்துள்ள ஒரு குண்டு, மூன்று இன்ஞ் தூரத்தில் இருந்தும், குஞ்சப்பா என்பவரின் உடலில் பாய்ந்துள்ள ஒரு குண்டு ஒன்பது இன்ஞ் தூரத்தில் இருந்தும் சுடப்பட்டுள்ளது. இவர்களைப் போல, வீரப்பனின் நம்பகமான கூட்டாளியாக இருந்த சேத்துக்குளி கோவிந்தனின் மனைவி பாப்பாத்தியும்; மணி என்ற மற்றொரு பெண்ணும் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

''மோதலில் நடந்த மரணம் என்றால், இறந்தவர்களின் உடலில் துப்பாக்கி தோட்டாவின் புகைபடிய வாய்ப்பில்லை; ஆனால், இந்த 66 பேரின் உடலில் தோட்டாவின் புகை இருந்திருக்கிறது.''

''அதிரடிப்படை கூறும் ஒரு மோதல் மரணம், மாதேஸ்வரன் மலைப்பகுதியில் அதிகாலை 5.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணிக்கே மைசூர் ஆர்.டி.ஓ. மோதல் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து மாதேஸ்வரன் மலை 140 கி.மீ தூரத்தில் உள்ளது. அதற்குள் ஆர்.டி.ஓ. அந்த இடத்திற்கு எப்படி வர முடியும்? எனவே, இந்த 'மோதலை' போலீசாரே உருவாக்கியுள்ளனர்.''

''மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்த 66 பேரின் நெருங்கிய உறவினர்கள் கூறியவற்றைப் பற்றித் தீர விசாரிக்காமல், ஒதுக்கித் தள்ளியிருப்பது ஒன்றே, அதிரடிப்படையின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது'' எனப் பல்வேறு கோணங்களில் இருந்து, அதிரடிப் படையின் மோதல் நாடகத்தை சதாசிவம் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

''ராஜேந்திரன் என்பவரது மனைவி லட்சுமியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்து, அவரை அதிரடிப்படை பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கிறது. இவரைப் போல பல பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல பெண்களின் உடம்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய பாலியல் வன்முறை, மின்சாரத் தாக்குதலால் ஏழு பெண்கள் நிரந்தர ஊனமடைந்துள்ளர். ராஜப்பா என்பவரது மனைவியை வயதான பெண் என்றும் பாராமல் 4 அதிரடிப்படை போலீசார் அடித்தே கொன்றுள்ளனர். விசாரணை என்ற பெயரில் கூட்டிச் செல்லப்பட்ட பெண்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்'' என அப்பாவி மலைவாழ் பெண்களின் மீது ஏவிவிடப்பட்ட சித்திரவதைகளும், அதிரடிப்படையின் காமவெறியும், களியாட்டங்களும் அறிக்கையில் பட்டியல் போட்டுக் காட்டப்பட்டுள்ளன.

''ஒர்க்ஷாப்'' என்று அழைக்கப்பட்ட அதிரடிப்படையின் மாதேஸ்வரன் மலை முகாம் சட்டவிரோதமான சிறையாகவும், சித்திரவதைக் கூடமாகவும் செயல்பட்டு வந்ததையும் சதாசிவம் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ''அப்பாவி மலைவாழ் மக்கள் பலரை தடா வழக்கில் சேர்ப்பதற்கு முன்பாக, இந்த ஒர்க்ஷாப்பில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து ஆண்பெண் என்ற வேறுபாடின்றி, அவர்களின் உடம்பிலும், பிறப்புறுக்களிலும் கிளிப்புகளைப் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை கமிசனின் அறிக்கை உறுதி செய்திருக்கிறது.

''தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட அதிரடிப் படைகள் என்பது ஆயுதப் படைப் பிரிவு போன்றதுதான். அப்படைகளுக்கு போலீசு நிலையம் போலச் செயல்படக் கூடிய அதிகாரம் கிடையாது. அதாவது, அதிரடிப் படைக்கு யாரையும் கைது செய்யவும், காவலில் அடைத்து வைக்கவும் அதிகாரம் இல்லாதபொழுது, அப்படைகள் தங்களின் அதிகார எல்லைகளை மீறிச் சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளன'' என சதாசிவம் கமிசன் குற்றஞ் சுமத்தியுள்ளது.

இச்சட்டவிரோதக் காவல், கைது குறித்த கமிசனின் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழகப் போலீசு துறையின் இயக்குநர் மற்றும் அதிரடிப் படைகளின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேவாரம், ''தனக்கு நாடு முழுவதும் யாரையும் கைது செய்யும் அதிகாரம் உண்டு; அதனால் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிரடிப் படைக்கும் கைது செய்யும் அதிகாரம் உண்டு'' எனப் பதில் அளித்தார். ஆனால், கமிசன் தேவாரத்தின் ''வானளாவிய அதிகாரம்'' குறித்த இந்தப் பதிலை ''சட்டரீதியாகச் செல்லத்தக்கதல்ல'' எனக் கூறி, ஒதுக்கித் தள்ளிவிட்டது.

வீரப்பனைத் தேடிப் பிடிக்க முடியாத அதிரடிப் படை, 121 பேரை வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ''தடா''வில் கைது செய்து, மைசூர் சிறையில் அடைத்தது. ''போலீசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதக் காவலில் அடைக்கப்பட்டு, அருவெறுக்கத்தக்க வகையில், மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தங்களின் சட்டவிரோதமான கைதை நியாயப்படுத்துவதற்காகவே, இவர்களைப் பொய் குற்றச்சாட்டின் கீழ் தடாவில் கைது செய்துள்ளனர்'' என சதாசிவம் கமிசன் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ''தடாவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 121 பேரில், 38 பேரின் வழக்குகளை மாநில அரசின் தடா மறுஆய்வு கமிட்டி முறைப்படி தீர விசாரித்திருந்தால், அந்த 38 பேரும் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்காது'' எனச் சுட்டிக் காட்டியுள்ள சதாசிவம் கமிசன், ''செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்த இந்த 38 பேருக்கும் உரிய நட்டஈடு வழங்க வேண்டும்'' என்றும் பரிந்துரை செய்துள்ளது.

அதிரடிப் படையால் ''தடா''வின் கீழ் கைது செய்யப்பட்ட 121 பேரில், 14 பேர் தவிர மீதி அனைவரும் எவ்விதக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுள் 46 பேரின் மீது தடாவை ஏவியதற்கு, அவர்கள் அதிரடிப்படையிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் போலீசால் காட்ட முடியவில்லை. இந்த ஒப்புதல் வாக்குமூலம் கூட நம்பத்தகுந்ததாக இல்லை என்பதை சதாசிவம் கமிசன் மட்டுமல்ல, இவர்களை விடுதலை செய்த தடா நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது.

முமுமு
பல ஆண்டுகளுக்கு முன் போலீசின் அத்துமீறல்களை விசாரித்த ஒரு நீதிமன்றம் ''போலீசார் காக்கிச் சட்டை போட்ட கிரிமினல்கள்'' எனத் தீர்ப்பளித்தது. அது மறுக்க முடியாத உண்மை என்பது சதாசிவம் கமிசன் விசாரணையில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அதிரடிப்படை வீரர்களைத் தூண்டிவிட்டு சதாசிவம் கமிசன் நியமிக்கப்பட்டதையே எதிர்த்து வழக்குப் போட வைத்த கர்நாடக மாநில அரசு, ''அதிரடிப்படை நடத்திய மோதல்கள் போலியானவை என்று கூற போதிய ஆதாரம் இல்லை; தடய அறிவியல் பரிசோதனைக் கூட துணை இயக்குநர் பிரபகாரன் சாட்சியம் அளிக்க, எந்தவொரு சமயத்திலும் அழைக்கப்படவேயில்லை'' எனக் கூறி சதாசிவம் கமிசன் அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.

பாசிச ஜெயா தலைமையில் உள்ள தமிழக அரசோ, ''சதாசிவம் கமிசன் குறிப்பிடும் அத்துமீறல்கள் 199394ஆம் ஆண்டில் நடந்தவை; சட்டப்படி இந்த அத்துமீறல்களை, அவை நடந்த ஒரு வருடத்திற்குள் விசாரித்திருக்க வேண்டும்; ஆனால் சதாசிவம் கமிசனோ 1999ஆம் ஆண்டில்தான் விசாரணையை நடத்தியது. எனவே, கமிசனின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது'' எனச் சட்டவாதத்திற்குள் புகுந்து தப்பித்துக் கொள்ள முயலுகிறது.

ஈராக்கின் அபுகிரைப் சிறைச்சாலையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அமெரிக்கச் சிப்பாய்களில் ஒருசிலர் தவிர்க்க முடியாமல் தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அபுகிரைப்புக்கு இணையாக மலைவாழ் மக்களின் மீது சித்திரவதைகளை ஏவிவிட்ட அதிரடிப்படை வீரர்களுள் ஒருவர் கூடத் தண்டிக்கப்படாமல், அரசாலேயே காப்பாற்றப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழக கர்நாடக மாநில அரசுகள், அதிரடிப் படைக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெகுமதிகளை அளித்து, காக்கிச் சட்டை கிரிமினல்களுக்குக் கொம்பு சீவி விடுகின்றன. அரசு பயங்கரவாதம் என்ற சட்டபூர்வ பாசிசம் அரங்கேறி வருவதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது.

சதாசிவம் கமிசன் கூட, தன்னிடம் சாட்சியம் அளித்த 243 பேரின் வாக்குமூலங்களில், 89 பேரின் வாக்குமூலங்களைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. மீதியுள்ளவர்களின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்வதோடு, போலீசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி கமிசன் முன் சாட்சியம் அளிக்க வர முடியாமல் போனவர்களின் வாக்குமூலங்களையும் சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த சதாசிவம் கமிசன் அறிக்கையை, மலைவாழ் மக்கள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டம்தான் வெளி உலகிற்குக் கொண்டு வந்தது. இப்படிப்பட்ட மக்கள்திரள் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டும்தான், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நட்டஈடும் கிடைக்கவும்; தேவாரம் உள்ளிட்ட அதிரடிப்படை கிரிமினல்களைத் தண்டிப்பதற்கான நிலைமையையும் உருவாக்க முடியும்.
மு ரஹீம்
நன்றி :புதியஜனநாயகம்

No comments: