தமிழ் அரங்கம்

Thursday, January 26, 2006

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

பி.இரயாகரன்
25.01.2006


திட்டமெதுவுமின்றி புலிகள் அன்றாடம் தாம் செய்தவற்றை, நியாயப்படுத்தி தாமே கூறுவதே புலிகள் அரசியலாகியது. திட்டமாக வெளியிடப்பட்டவை எவையும், அவர்கள் தமது சொந்த இயக்க நடைமுறையாக கொண்டது கிடையாது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், அவர்களாக வெளியிட்ட சொந்த வேலைத்திட்டம் எதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. இந்த வகையில் கட்டுரையில் சில பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளேன். அன்ரன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் இந்த வகையில் அமைந்ததே. புலிகள் தாம் செய்ததை நியாயப்படுத்த, தம்மை மறுக்கின்ற முரணை உள்வாங்கியதே இந்த நூல். உண்மையில் புலிகளின் லும்பன் தனமான நடத்தைகளுக்கு, அரசியல் முலாம் பூசுவதே புலியின் அரசியலாக உள்ளது. பாலசிங்கமே அதன் பிதாமகன். இந்த நூலின் முன்பகுதி மீதான, சுருக்கமான விமர்சனத்தை இக்கட்டுரை அவர்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலம் செய்கின்றது.

தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானித்ததும், தீர்மானித்துக் கொண்டிருக்கும் புலிகளின் நடவடிக்கைகளில் அன்ரன் பாலசிங்கத்தின் தலையீடே விசித்திரமானது. எப்போதும் புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல் வாதங்களை கண்டுபிடிப்பதைத் தான், அவரின் மதிநுட்பமாக புலிகள் காட்டிவந்தனர். இந்தப் போக்கே புலிகளின் இன்றைய அரசியலாகியது. லும்பன் தனத்தில் புலிகள் செய்வதை நியாயப்படுத்தும் அனைத்து வாதங்களும், இதற்குள் தான் மண்டிக் கிடக்கின்றது. புலிகளின் அன்றாட இராணுவ நடிவக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல், எந்த வித்திலும் மக்களின் சமூக பொருளாதார நலன் சார்ந்தவையாக என்றும் அமையவில்லை. மக்களின் சமூகப்பொருளாதார வாழ்வாதாரங்கள் சார்ந்த, அதற்கேற்ற இராணுவ வடிவங்கள் எதையும் புலிகள் என்றும் கொண்டிருக்கவில்லை. இதுவே இன்றைய எதார்த்தம்.

இந்த எதார்த்தம் ஆயிரக்கணக்கான மக்களின் தலைகளை உயிருடன் உருட்டிவிடுவதில் முடிகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், புலிக்கு இசைவானதாக்கி திரித்து விளக்குவதில் முடிகின்றது. தமிழ்மக்களின் நியாயமான போராட்டம் சிதைந்து சீரழிந்து அது என்னவென தெரியாது உருக்குலைந்து அழுகத் தொடங்கியுள்ளது. மக்களின் சமூகப் பொருளாதார நலன்கள் மறுக்கப்பட்டு, புலிகளின் நலன்கள் முதன்மைபெற்ற ஒரு அரசியல் வடிவமே வெம்பி வீங்கி காணப்படுகின்றது.

இதையே ~~விடுதலை என்ற பாலசிங்கத்தின் நூலின் முதல் கட்டுரை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. "எம்.ஜி.ஆரும் புலிகளும்" என்ற பாலசிங்கத்தின் முதல் கட்டுரை, எம்.ஜி.ஆர் என்ற நடிகனை, மக்கள் விரோதியை, காம வெறியனை, ஒரு ஊழல் பேர்வழியை நியாயப்படுத்துவதில் இருந்து அரங்கேறுகின்றது. அதே தளத்தில், தமது சொந்த கைக் கூலித்தனத்தை; சிறப்பாக எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த எம்.ஜி.ஆர் சினிமா என்ற விளம்பர கவர்ச்சி ஊடகம் ஊடாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்த ஒரு கைதேர்ந்த நடிகன். இவன் ஒரு மக்கள் விரோத பாசிட் கூட. தமிழக மக்களை அடக்கியாண்ட, அவர்களை சூறையாடிய ஒரு கொடுங்கோலன். இந்தக் கொடுங்கோலனை பற்றி புலிகளும், பாலசிங்கமும் கொடுக்கும் படிமமே விசித்திரமானது. பாலசிங்கம் கூறுகின்றார் "… இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர்… அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி" இதுதான் எம்.ஜி.ஆர் பற்றிய புலிகளின் சொந்த அரசியல் மதிப்பீடு. இந்த எம்.ஜி.ஆர் மக்களுக்காக என்னதான் செய்தான். சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல் முதல் சாராயம் காய்ச்சி கொள்ளையடிப்பது வரை அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக இருந்தவன். அரசு சொத்தையும், மக்களின் சொத்துகளையும் முறைகேடாக பயன்படுத்தியவன்;. பல மக்கள் போராட்டங்களை அடக்கியொடுக்கியவன். சில துப்பாக்கி சூட்டை போராட்டங்கள் மீது நடத்தி பலரைக் கொன்றவன். பல பத்தாயிரம் மக்களை போராட்டங்களின் போது கைது செய்து சிறைகளில் தள்ளி தாலியறுத்தவன்;. எம்.ஜி.ஆர் மோகன்தாஸ்சும் தேவாரமும் இணைந்து வடஆர்காடு, தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோதல் என்ற பெயரில் சுட்டு படுகொலை செய்த ஒரு பாசிட். இப்படி பற்பல.

இவனைத்; தான் புலிகள் ஒரு மாமனிதனாக, விடுதலை விரும்பியாக காட்டுகின்றனர். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது" என்கின்றனர். இப்படி புலிகள் ஒரு தலைப்பட்சமாக கூறுவது நிகழ்கின்றது. ஏன் இப்படி கூற முடிகின்றது என்றால் புலிகளின் குறித்த நலன் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து, ஒரு மக்கள் விரோதியை மக்களின் தோழனாக காட்டுகின்றனர். புலிகளுக்கு பணமும், அவர்களின் நடவடிக்கைகளை பினாமியாக ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை மாமனிதர்களாக காட்டுவதே புலிகளின் அரசியல். இதுவே இன்றைய புலிகளின் எதார்த்தப் போக்கும் கூட. அதன் அடிப்படையில் தான் எம்.ஜி.ஆரைப் புகழ்கின்றனர்.

புலிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கோடிக்கணக்கில் கொடுத்த பணம், இந்திய துறைமுகத்தில் இருந்து ஆயுதங்களை கடத்திக் கொடுத்த விவகாரம், மற்றைய இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்து புலிகளிடம் கொடுத்த நிகழ்ச்சி போன்ற பலவே, புலிகள் எம்.ஜி.ஆர் பற்றி கொண்ட அரசியல் நிலைப்பாட்டுக்கு காரணம். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதோ செய்தார் என்ற அடிப்படையில் புலிகள் புகழவில்லை. தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு, பொது அரசியல் நலனை திரித்து விடுவது நிகழ்கின்றது. இந்த அரசியல் வழியைப் போற்றி புகழ்வது நிகழ்கின்றது. நல்லதொரு உதாரணமாக, சிங்கள பேரினவாத கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தமிழக மக்கள் வழங்கிய நிதியை, புலிகளின் குறுகிய நோக்கத்துக்கு முறைகேடாக எம்.ஜி.ஆர் வழங்க முற்பட்டதும், அதை புலிகள் பெற்றுக் கொண்டதுமான நிகழ்வு எதைக் காட்டுகின்றது என்றால் மக்கள் விரோதத் தன்மையின் கூட்டுப் பண்பை வெளிப்படுத்துகின்றது. இந்த மோசடிக்காகவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கி, மருத்துவமனை ஒன்றை அமைக்க உள்ளதாக கூறி, உலகத்தை ஏமாற்றி நாலு கோடி ரூபா பணத்தை பெற்ற நிகழ்வையும், அந்த மோசடியையும் இந்த நூல் கூறத் தவறவில்லை. இது அம்பலமான போது, அதை திருப்பிக் கொடுத்தது ஒருபுறம் நிகழ, எம்.ஜி.ஆர் அதற்கு பதிலாக கறுப்பு பணமாக அதை வழங்கியதை இந்த நூல் சொல்லுகின்றது. இந்த மோசடிப் பணம் எங்கிருந்து எப்படி எம்.ஜி.ஆருக்கு கிடைக்கின்றது?.

ஏழைகளின் நண்பனாக நடித்தபடி மக்களின் பணத்தை கொள்ளை அடித்ததையும், சட்டத்துக்கு புறம்பாக பணமூட்டைகளின் பின்னால் பதுங்கிக் கிடந்த எம்.ஜி.ஆரின் வேஷம் அருவருக்கத்தக்கவை. இதை விமர்சனமின்றி புலிகள் புகழ்வது எதைத்தான் காட்டுகின்றது. ஆம் மக்களின் பணத்தை எப்படியும் சூறையாடி பயன்படுத்தலாம் என்ற புலிகளின் சொந்த சிந்தாந்தத்தையே நியாயப்படுத்துகின்றது. அன்று ஒரு நிதி மோசடிக்காக உருவான அதே புனர்வாழ்வுக்கழகம் தான், இன்று வரை புலிப் பினாமியமாக உலகெங்கும் அத்தொழிலை செய்கின்றது. மக்களுக்கான நிவாரணம் என்ற பெயரில் நடப்பது அப்பட்டமான ஒரு மோசடி. நூல் பெருமையாக பீற்றி ஒத்துக் கொள்வது போல், எம்.ஜி.ஆர் ஆசியுடன் தொடங்கிய மோசடி எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் சமூகப் பாத்திரம் பொதுவாழ்வில் கோமாளியாகவே இருந்தது. எதை எப்படி செய்வான் என்று யாரும் கூற முடியாத ஒரு பச்சோந்தியாகவே இருந்தவன். தற்புகழ்ச்சிக்காக தனக்குத் தானே நிறைய பட்டங்களை சூட்டிக் கொண்டவன். இதைத்தான் இன்று புலிகள் செய்கின்றனர். அரசு சொத்துகளை முறைகேடாக தனிப்பட்டவர்களுக்கு தாரை வார்த்தவன். பல நடிகைகளை மிரட்டி தனது வைப்பாட்டியாகவே வைத்திருந்தவன். அதற்காகவே தனது அதிகாரத்தையும், பணப்பலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தியவன். அவன் உருவாக்கிய வாரிசு பற்றி, மிகச் சரியாக புதியகலாச்சார இதழில் குறிப்பிட்டது போல் "ஒரு மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை. ஆங்கிலக் கான்வென்டிலிருந்து ஆணாதிக்கம் கோலோச்சும் கோடம்பாக்கம் திரையுலகிற்குள் திடீரெனத் திணிக்கப்பட்டு, அங்கே ஒரு அரைக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு, எம்.ஜி.ஆரின் பாசிசக் குரூரங்களை அனுபவித்து, பின்னர் அவற்றையே தானும் உட்கிரகித்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதை நெடியது." என்கின்றது. இதே குரூரங்கள் தான் எம்.ஜி.ஆரின் பண்பு.

தனக்கு பின்னால் ஒரு பொறுக்கி தின்னும் கூட்டத்தையே உருவாக்கி அதில் தன்னைத்தான் மிதப்பாக்கியவன். பெரியாரியவாதியாக கூறிக் கொண்டு, குறி கெட்ட அனைத்தையும் செய்த ஒரு ஏமாற்று பேர்வழி. மக்களுக்காக அழுவதற்காகவே தனது கண்கள் இரண்டிக்கும் "கிளிசரினை" விட்டு அழும், கைதேர்ந்த ஒரு நடிகனாகவே வலம்வந்தவன். தமிழீழப் போராட்டத்தை தனது சொந்த பிழைப்புவாத போட்டி அரசியலுக்கு ஏற்ப திறமையுடன் பயன்படுத்தியவன். அதில் புலிகள் இணைந்து கொண்ட நிகழ்வை, நியாயப்படுத்தும் அரசியல் விளக்கம் தான் பாலசிங்கத்தின் இந்தக் கட்டுரை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரமே ஏகாதிபத்திய சதி; தான். சோவியத் ஏகாதிபத்தியத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட உலகளாவிய முரண்பாட்டில், அமெரிக்கா சார்பாக இலங்கைப் பிரச்சனையில் களமிறக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசு சோவியத் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டிய காலத்தில், அது சார்பான தமிழ் இயக்கங்களை உருவாக்கியதுடன் இருந்தவற்றை வளர்த்தெடுத்தனர். இதனடிப்படையில் அமெரிக்காவும் தனது பங்குக்கு தனக்கேற்ற குழுக்களை வளர்த்தெடுக்க முனைந்தன. இதன் போதே எம்.ஜி.ஆர் என்ற நடிகனூடாக, புலிகளுக்கு தீனிபோட்டு வளர்த்தெடுக்கப்பட்டனர். இந்த உண்மையின் ஒரு பக்கத்தை மூடிமறைத்தபடியே இந்த நூல் வெளிக்கொண்டு வருகின்றது.

புலிகள் இயக்க வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய பணமும், ஆயுதங்களுமே மூலகாரணம் என்பதை இந்த நூல் ஒத்துக் கொள்கின்றது. தமிழ்மக்கள் தான் புலிகளை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர் என்று பின்னால் கூறுவது அபத்தமாகும். அன்னிய நிதிகளும், அன்னிய ஆயுதங்களும் தான், லும்பனான புலிகளைப் புலிகளாக்கியது. புலிகளின் அனைத்து நடவடிக்கையும் இதைத் தாண்டி நகரவில்லை. மக்களின் சமூக பொருளாதார உறவுக்கு வெளியில் இப்படிதான் புலிகள் உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். அவர்களின் எடுபிடிகளாக கூட இருந்தனர். 14.05.1985 இல் அனுராதபுரத்தில் அப்பாவி மக்கள் மேலான தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர். அன்று வில்பத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் இத் தாக்குதலை நடத்தியதன் பின்னனியில் இந்திய அரசு இருந்ததை, பின்னால் பாலசிங்கம் இந்தியாவுக்கு எதிரான பேட்டியொன்றில் குறிப்பிடுகின்றார். இந்த தாக்குதலை அந்தநேரம் புலிகள் மறுத்றுவிட்ட மறுப்பறிக்கையும், பின்னால் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதையும் நாம் எப்படிப் சுய அறிவுடன் புரிந்து கொள்வது.

முதலில் தாக்குதலை தாம் செய்யவில்லை என்றதும், பின் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதும் இங்கு அரசியல் நேர்மையற்ற போக்கை அம்பலமாக்குகின்றது. மறுபக்கத்தில் இந்த தாக்குதலை செய்ய புலிகள் எதை இலஞ்சமாக பெற்றனர் என்பது மர்மமாகவே உள்ளது. இப்படி சோரம் போகும் அரசியல் வழியும், பின் அதை நியாயப்படுத்தும் அரசியலும் தான் இன்று வரை புலி அரசியலாக உள்ளது. இதைத்தான் பாலசிங்கத்தின் இந்த கட்டுரை செய்கின்றது. தமிழ் மக்களின் போராட்டம் மக்கள் நலன் சாhந்ததாக அமையாத வரலாற்றுக்கு, இந்த இரண்டு பிரதான ஏகாதிபத்திய தலையீடும் முக்கியமான காரணமாகவே அமைகின்றது.

ஆனால் மக்களை ஏமாற்றவும், தம்மை மக்கள் நலன் சார்ந்ததாக காட்டவும் புலிகள் பின்நிற்கவில்லை. புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை உள்ளடங்கிய கொள்கை விளக்க நூலை (இது ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்தது.) "சோசலிச தமிழீழம் எனறே தலைப்பிடுகின்றனர். அதில் புலிகளின் அரசியல் இலட்சியம் என்ற பகுதியில் ~~தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு … அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். ஆனால் அதையா இன்று அவர்கள் கொண்டுள்ளனர்? அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ….ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்… " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கும் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. … வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு… பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி அந்த அறிக்கை நீண்டு செல்லுகின்றது.

இதை நாங்கள் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் அடிப்படையான ஆரம்ப அரசியல் ஆவணம் இப்படித் தான் சொல்லுகின்றது. இப்படித் தான் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டனர். இன்று இந்த இலட்சியத்தையே கைவிட்டுவிட்டனர். இன்று புலிகளில் உள்ள 99 சதவீதமானவர்களுக்கு தாங்கள் இப்படி ஒரு அரசியல் அறிக்கை விடட்தே தெரியாது. ஏன் பாலசிங்கத்துக்கே இது ஞாபகம் இருக்காது. மக்களின் நலன்களை கூறி இயக்கம் கட்டியவர்கள், அதை அப்படியே புதைகுழிக்கு அனுப்பினர். தமது சொந்த திட்டத்தை மட்டுமல்ல, அந்த கருத்தை கோரியவர்களையும் கூட புதைகுழிக்கு அனுப்பினார்கள். மக்கள் நலனை இந்த திட்டத்தின் ஒரு பகுதி தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதை கைவிட்ட அனைத்து செயல்பாடும் மக்கள் விரோதமானவையே. இன்று புலிகளின் திட்டத்தில் உள்ளவற்றையே வலியுறுத்தினால் கிடைப்பது மரணதண்டனை. புலியின் எதிரியாக, துரோகியாக, எட்டப்பனாக, கைக்கூலியாக பலவாக புலிகள் வருணிப்பது அன்றாட விடையமாகிவிட்டது. சொல்லப்போனால் முன்னைய புலிகளின் திட்டத்தை முன்னிறுத்தி போராட்டத்தைக் கோரினால் அல்லது போராடினால் அதற்கு பரிசாக கிடைப்பது மரண தண்டனைதான்;

இதனடிப்படையில் ஏற்பட்ட முரண்பாடுதான் புலிகளின் முன்னைய பிளவாகியது. அதை மறைக்க பாலசிங்கம் முனைகின்றார். அதை அவர் "இயக்கத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டதால் அவர் (உமாமகேஸ்வரன்) அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புளாட் என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்" என்று கூறுகின்றார். உண்மையில் உமாமகேஸ்வரன் இயக்கப் பிளவில் சம்பந்தப்படவேயில்லை. உமாமகேஸ்வரன் இயக்கத்தைவிட்டு பாலசிங்கம் கூறும் காரணத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தவர். அவர் தனிமனிதனாகவே வெளியேற்றப்பட்டு வெளிச் சென்றவர். உமாமகேஸ்வரன் புலிகளில் இருந்தது வரை, அவர்தான் அதன் தலைவராக இருந்தவர்.

இயக்கப் பிளவு பின்னால் ஏற்பட்டது. மேற்கூறிய கோட்பாட்டின் அடிப்படையில் பிளவாகியது. இந்தப் பிளவில் சுந்தரம், நாகராஜா வாத்தி, ஐயர், நெப்போலியன் … என இருபது பேரளவில் விலகினர். இதன் பின்பு இவர்கள் கூட குறிப்பிட்ட கோட்பாட்டில் இயங்காமல், பழையபடி புலிப் பாணியில் இயங்கியதால் பலர் (சுந்தரம் போன்றவர்களைத் தவிர) விலகினர். இதன் போதும் பின்புமே உமாமகேஸ்வரனை சுந்தரம் தன்னுடன் இணைத்துக் கொண்டவர். பழையபடி புலிப்பாணியில் இயங்கத் தொடங்கியது.

இங்கு ஒரு வரலாற்றையே பாலசிங்கம் திரித்துக் காட்டுவதுடன், முதல் பிளவை அரசியலுக்கு வெளியில் ஒரு பொம்பிளைப் பிரச்சனையாக காட்டமுனைகின்றார். அதனால் ஏற்பட்ட உடைவாக காட்டுவது நிகழ்கின்றது. இதை எம்.ஜி.ஆர் என்ற பொம்பளை பொறுக்கி அங்கீகரித்தாக, பாலசிங்கம் தானாகவே கூறுகின்றார். புலிகளில் ஏற்பட்ட பிளவு அரசியல் ரீதியானது. அந்த அரசியல் மக்கள் நலனை கோரியது. ஆனால் அது தொடர்நது அப்படி இயங்க முடியவில்லை. உண்மையில் புலிகள் வெளியிட்ட "சோசலிச தமிழீழம்" என்ற அரசியல் அறிக்கையின் உள்ளடகத்தை புலிகளே சமகாலத்தில் எப்படி மறுக்கின்றனர் என்பதற்கு பாலசிங்கமே இந்த நூலில் அதை தன்னையறியாமலேயே விளக்குகின்றார்.

அவர் அதை எம்.ஜி.ஆர்க்கு கூறும்போது "விடுதலைப் புலிகள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம்…. ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்" என்கின்றார். கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றால் எப்படி "சோசலிச தமிழீழம்" வரும். புலிகள் வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கப் போவதாக கூறிய இயக்கம். ஆனால் தாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். ஒன்றுக்கு பின் ஒன்று முரணாகவே மக்களையும் சமூகத்தை ஏமாற்றும் ஒரு அரசியல் மோசடியைத் தவிர, வேறு எதையும் இது கூற முனையவில்லை. ஏன் நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து விடுத்த கூட்டு அறிக்கையில் "தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிச புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்" தமது இலட்சியம் என்று கூறியே பிரபாகரன் கைnழுத்திட்டார். இன்றைய அரசியல் துரோகிகளும் அன்றைய விடுதலை இயக்கமும் கூடத்தான் கையெழுத்திட்டனர். இதே சமகாலத்தில் தான் பாலசிங்கம் தாங்கள் சோசலிச இலட்சியத்தை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். சாதி ஒழிப்பு, உழைக்கும் மக்களின் சுபீட்சம் என்று எதையும் பெற்றுத்தர புலிகள் போராடப் போவதில்லை என்பதையே பாலசிங்கம் இந்த நூலில் மூடிமறைத்து கூறுகின்றார். அவை மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் மோசடியான வார்த்தைப் பிரயோகங்களே என்பதைத் தான், முன்னைய தமது சொந்த அறிக்கையை மறுத்து கூறமுனைகின்றார். இப்படி நூற்றுக்கணக்கான எடுத்துக் காட்டுகளை புலிகளின் முன்னையதுக்கும் பிந்தியதுக்கும் இடையிலும், சமகாலத்திலும் எடுத்துக் காட்டமுடியும். ஒரு கட்டத்தில் இந்த மோசடியை எம்.ஜி.ஆரின் நிலையுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். "… நீங்கள் ஏழைகளின் துயர் துடைக்கத் தொண்டாற்ற வில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். எங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்று புல்லரிக்கும் வார்த்தைகள் மாயாஜாலத்தை அடிப்படையாக கொண்டது. எம்.ஜி.ஆர் எதை தனது மக்களுக்கு எப்படி செய்தாரோ, அதையே பிரபாகரன் எமது மக்களுக்கு செய்ய முனைகின்றார். இதைத்தான் பாலசிங்கம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றார். தமிழகத்தின் கதியே எமது கதி என்று பாலசிங்கத்தை விட யாரும் இதை திறம்பட விளக்கமுடியாது. தமிழகத்தில் சாதியம், ஆணாதிக்கம், சுரண்டலும் கோலோச்சும் வக்கிரமே, எமது போராட்டத்தின் இறுதி முடிவு என்பதைத் தான் இது பறைசாற்றி நிற்கின்றது.

பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அரசியல் வேறுபாட்டை விளக்குவதே, தாம் அறிவித்த சொந்த இலட்சியத்துக்கு முரணாது. பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அமைப்பு வேறுபாட்டை விளக்கும் போது "சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்க்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகள் இலட்சிய உறுதிப்பாடும் எவையும் மற்றைய அமைப்பினரிடம் காணமுடியாது" மற்றைய இயக்கத்தில் இருந்து புலிகள் இதனடிப்படையில் வேறுபடுவதாக கூறுவது, அரசியலின் செயலாற்றல் இல்லாமையின் ஒரு வெளிப்பாடாகும். இங்கு அவர்கள் தமது சிறப்பு தகுதியாக உயிரை அர்ப்பணிக்கும் இயல்பு என்ற பண்பு, போராட வந்த அனைத்து இயக்க உறுப்பினர்களினதும் பண்பாகவே இருந்தது. இதை புலிகள் உருவாக்கவில்லை. போராட வந்த மனிதர்களிடம் அது இருந்தது. அதனால் அவர்கள் போராட வந்தனர். அதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. புளாட்டுக்குள் நடந்த நூற்றுக்கணக்கான உட்படுகொலையின் (1983-1986) போது, உயிரைத் தியாகம் செய்யும் உன்னதமான பண்புடன், மக்களின் உயரிய நலனுக்காக அவர்கள் போராடி மரணித்தனர். இப்படி பல தளத்தில் பலர் புலிகளின் வரலாறு எங்கும், புலிகளின் மக்கள் விரோத போக்குக்கு எதிராகவும் மாண்டுள்ளனர். மக்களுக்காக போராடுவது இன்று பொதுவாக புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலில் காணமுடியாத ஒன்று. இலட்சிய மனப்பாங்குடன் போராட வந்த அனைவரும் தமது உயிரை தியாகம் செய்யும் உயர் பண்புடன் தான் போராடினர். எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழன் என்ற போராட்ட மரபை எப்படி எம்.ஜி.ஆர் தனது சொந்த பிழைப்புவாத அரசியலுக்கு குழிதோண்டி புதைத்து அதில் வக்கரித்து கிடந்தானோ, அதையே புலிகளும் செய்கின்ற ஒரு வரலாற்று சாட்சியாகவே இந்த நூல் உள்ளது.
24.08.2005

No comments: