தமிழ் அரங்கம்

Sunday, May 7, 2006

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்

டுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.


எதிரொளிக்கும் ஃபுளோரசென்ட் பட்டைகள் கொண்ட சீருடை, தொப்பி, ஆரஞ்சு நிறக் கையுறை, ஆள் உயர இரும்பு பிரஷ், மண் அள்ளும் ஷவல், சாம்பல் நிறத்தில் நடமாடும் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி, உதிரிக் குப்பைகளை ஒய்யாரமாக ஏற்றிச் செல்லும் சிறிய ரக வாகனங்கள், வீதிகளின் மூலையில் கரும்பச்சை நிறத்துடன் இருப்புக் கொண்டிருக்கும் பெரிய குப்பைத்தொட்டி, அதை அப்படியே அலக்காகத் தூக்கித் தனது முதுகில் சாய்த்துக் கொள்ளும் தானியங்கி லாரிகள், சிப்பாய்களைப் போல அவற்றின் ஓரங்களில் தொங்கிக் கொண்டு செல்லும் துடிப்பான தொழிலாளிகள், சாலையில் படிந்திருக்கும் மண்ணை நக்கித் துடைக்கும் நவீன எந்திரங்கள் எழுப்பும் விநோத ஓசை, வாக்கி டாக்கியுடன் சுற்றித் திரிந்து இவற்றை மேற்பார்வையிடும் சூபர்வைசர்களின் மிடுக்கு... இது ஓனிக்ஸ்.


""அடடா... இது சென்னை நகரமா, அல்லது ஹாலிவுட் படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கும் ஐரோப்பிய நகரமா'' என்று பார்ப்பவர்களையெல்லாம் வியக்க வைக்கிறது; ""எவ்வளவு நீட்டா இருக்கு பாருங்க, என்ன இருந்தாலும் பிரைவேட்னா பிரைவேட்தான் சார்.'' என்று தனியார்மயக் கொள்கைக்கு "ஜே' போடவும் வைக்கிறது சென்னையில் இயங்கும் ஓனிக்ஸ் எனும் பன்னாட்டுத் துப்புரவுத் தொழில் நிறுவனம்.


சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை 2000 என்றெல்லாம் கனவு கண்ட முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலின், சென்னையை சிங்கப்பூராக்க வேண்டுமானால் அங்கே குப்பை அள்ளும் கம்பெனியை வைத்து சென்னையிலும் குப்பை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். லண்டன் மாநகரத்திலும் சிங்கப்பூரிலும் குப்பை அள்ளும் ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் வந்து இறங்கியது. துப்புரவுப் பணியிலும் தனியார்மயம் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் மந்தைவெளி, ஐஸ் ஹவுஸ், கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணியை ஏழேகால் ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது ஓனிக்ஸ் நிறுவனம்.


""காசுக்கு வழியில்லாதவன்தான் குப்பை பொறுக்குவான், இவ்வளவு பெரிய வெளிநாட்டுக் கம்பெனி நம்ம நாட்டுல வந்து குப்பை பொறுக்குறான்னா அவனுக்கு என்ன காலக்கொடுமையோ'' என்று நினைத்து விடவேண்டாம். கொடுமை பன்னாட்டுக் கம்பெனிக்கல்ல, அதன் பணியாளர்களுக்குத்தான்.


""ஓனிக்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம்! மலையாய்க் குவிந்தன குப்பைகள்! நோய் பரவும் அபாயம்!'' என்று அலறின சென்னை நாளிதழ்கள். ஆனால் மலையாய்க் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் துயரம்தான் அவர்களை வேலைநிறுத்தத்திற்குத் தள்ளியிருக்கிறது என்ற உண்மையை மட்டும் அவை அணுவளவும் வெளியிடவில்லை. "வழக்கமான சம்பள உயர்வு, போனஸ் பிரச்சினைதான்' என்று பொய்யாகச் சித்தரித்து ஓனிக்ஸின் மேனாமினுக்கித் தோற்றத்திற்கு உள்ளே புழுத்து நெளிந்து கொண்டிருந்த அடக்குமுறைகள் அம்பலமாகாமல் இருட்டடிப்பு செய்தன.


ஓனிக்ஸ் தொழிலாளர்களை நேரில் சந்தித்த போதுதான் அழகு, சுத்தம் என்ற சொற்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது ஒரு அப்பட்டமான பயங்கரவாதம் என்பது தெரியவந்தது.


""எங்களை மனிதர்களாக நடத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களாக நடத்து'' என்ற ஒரு வரியில் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிவிடுகின்றன. ""தொழிலாளர்களை ரீ டிரெய்னிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தாதே; விசாரணை என்ற பெயரில் வேலை நீக்கம் செய்யாதே; தொழிலாளர்களைக் கேவலமாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு; ஆட்குறைப்புசெய்வதை நிறுத்து; சம்பளப் பாக்கிகளைக் கொடு'' என்பவைதான் தொழிலாளர்களின் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளின் உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய பணிநிலைமைகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.


போகிற போக்கில் அலட்சியமாக நாம் வீசும் குப்பை, மூக்கைப் பிடித்துக் கொண்டு தெருவில் விட்டெறியும் செத்த எலி, கடைக்காரர்கள் கொட்டும் அழுகிய காய்கறிகள், ஓட்டல்கள் வெளியேற்றும் கெட்டுப்போன சோறு, கருச்சிதைவில் வெளியேறிய குழந்தை உள்ளிட்ட மருத்துவமனையின் ஆபத்தான கழிவுகள், லாரியில் அடிபட்டுச் செத்த நாய்கள்... இவையனைத்தும் நாட்கணக்கில் அகற்றப்படாமல் கிடக்கும் காட்சியைக் கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். துப்புரவுப் பணியாளர்கள் இயங்கினால்தான் சென்னை என்பது மாநகரம், இல்லையேல் மறுநாளே இது நரகம். ஆனால் அவர்கள் இயக்கப்படுவது எப்படி?


ஓனிக்ஸ் குத்தகைக்கு எடுத்துள்ள சென்னை நகரின் 3 மண்டலங்களுடைய துப்புரவுப் பணிக்காக ஏற்கெனவே மாநகராட்சி ஒதுக்கியிருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 6000. அதே பணியை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வைத்து முடித்து வருகிறது ஓனிக்ஸ் நிறுவனம். தனியாரின் திறமை இங்கிருந்து தொடங்குகிறது.


130 பெண்கள் உட்பட ஓனிக்ஸ் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 2300. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 டிவிசன்கள், ஒரு டிவிசனுக்கு 60 தொழிலாளர்கள், ஒரு சூபர்வைசர், லாரி டிரைவர். 8 மணி நேரத்தில் ஒரு தொழிலாளி சுத்தம் செய்ய வேண்டிய சாலையின் நீளம் 1400 மீட்டர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர். ஒரு துளி தூசும் இல்லாதபடி மறுபடி மறுபடி பெருக்க வேண்டும். வெறும் 300 சதுர அடி வீட்டைக் கூட்டி முடிப்பதற்குள் முதுகு பிடித்துக் கொண்ட கதையை இலக்கியமாகப் பேசும் நபர்கள் 1400 மீட்டர் கடைவீதியைக் கற்பனையிலாவது ஒருமுறை கூட்டிப் பார்க்க வேண்டும்.


இரும்புத் துடைப்பானால் குப்பையைத் தள்ளிக் கொண்டும், பொடி மண்ணை பிரஷ்ஷால் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டும் குனிந்த தலையுடன் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளியின் கைகள் ஓய்ந்து ஒரு கணம் நிற்பதையோ, அவர்கள் உட்கார்ந்திருப்பதையோ சென்னைவாசிகள் யாராவது எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் 5,6 பேராக டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் குடிப்பதையும், புகையிலை போடுவதையும் பார்த்திருப்பீர்கள். 4 ஓனிக்ஸ் தொழிலாளிகள் சேர்ந்து டீ குடித்தபடி நிற்பதை யாராவது பார்த்ததுண்டா?


இதுவரை கவனித்திராதவர்கள் இனி கவனித்துப் பாருங்கள். வியர்வையைத் துடைப்பதற்காகக் கூட அவர்கள் ஒரு கணம் ஓய முடியாது. வயர்லெஸ்ஸ{டன் வண்டியில் சுற்றிக் கொண்டே இருக்கும் சூபர்வைசரின் கண்ணில் பட்டால் எந்த விளக்கத்தையும் அவன் காதில் வாங்க மாட்டான். உடனே மெமோ. சூபர்வைசரின் அனுமதியில்லாமல் சிறுநீர் கழிக்கக் கூட ஒதுங்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் மக்களிடம் பேசக்கூடாது. முகவரியை வைத்துக் கொண்டு வழிகேட்கும் மக்களிடம் கூடப் பேசக் கூடாது. நட்புணர்ச்சியுடன் கடைக்காரர்கள் ரெண்டு வாழைப்பழமோ டீயோ கொடுத்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது. குடித்தால், சாப்பிட்டால் மறுகணமே வேலைநீக்கம்.


இரண்டு பத்து நிமிடங்கள் தேநீர் இடைவேளை, சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் போக, 8 மணி நேர வேலை. கல்லாய்ச் சமைந்திருக்கும் சந்து முனீஸ்வரன்களுக்குக் கூட கழிவை வெளியேற்ற வழியுண்டு; ஒன்றரை கி.மீ. துப்புரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளிக்கு 10 நிமிட இடைவேளைக்குள் சிறுநீர் கழிக்க இடம் தேடுவதே பெரும் போராட்டம்.


எந்தச் சோற்றுக்காக இத்தனைப் பாடுபடுகிறார்களோ அதை நிம்மதியாகத் தின்ன முடியாது. அன்றைக்கு ஒதுக்கப்பட்ட சாலையில் ஏதாவது ஒரு கடையில் சோற்று டப்பாவைக் கொடுத்து வைத்து, இடைவேளை நேரத்தில் அந்தக் கடைக்கு ஓடிவந்து அள்ளி விழுங்கி விட்டு 30 நிமிடத்தில் விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர வேண்டும். துர்நாற்றம் போகக் கை கால் முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடவோ, சாப்பிட்ட பின் சற்று அமரவோ கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.


அன்றாடம் 8 மணி நேரம் சாலையோரக் குப்பையையும் மண்ணையும் அழுந்தத் தேய்த்துச் சுத்தம் செய்யும் உள்ளங்கை புண்ணாகும். ஒரு தானியங்கி எந்திரத்தைப் போல நிமிடத்திற்கு 25,30 முறை முன்னும் பின்னும் இயங்கும் தோள்பட்டை மூட்டுக்கள் என்னாகும்? ஒரே ஆண்டில் சவ்வுகள் கிழிந்து தேய்ந்து போன எந்திரம்போல "கடக் கடக்' என்று ஓசை எழுப்புகின்றன தொழிலாளர்களின் தோள்பட்டைகள். ஆண்டுக்கு இரண்டு மாதம் வேகப்பந்து வீசும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே பிரச்சினை வருகிறது. அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை, 20 லட்சம் செலவு!


இப்படித் "தேய்ந்து' போகும் தொழிலாளர்களைக் கழித்துக் கட்ட கொடூரமான தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது ஓனிக்ஸ் நிர்வாகம். வேகம் குறைந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு "நின்னால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம்' என்று அவர்களுக்கு அடுக்கடுக்காக மெமோ கொடுத்து அலுவலகத்துக்கு அலைய வைப்பது; அப்போதும் வேலையை விட்டு ஓடவில்லையென்றால் "ரீ டிரெய்னிங்' என்ற பெயரில் இறுகிப் போன மண் மேடுகளைத் தன்னந்தனியாக சவல் போட்டு பெயர்த்தெடுக்கும் கொடிய தண்டனையை வழங்குவது இந்தக் கொடுமைகள் தாளாமல் பரிதாபத்துக்குரிய அந்தத் தொழிலாளர்கள் தானே வேலையை விட்டு ஓடுகிறார்கள்.


ஆனால் தேய்ந்து போன லாரிகளை ஓனிக்ஸ் இவ்வாறு கழித்துக்கட்டுவதில்லை. ""ஆரம்பத்துலதான லாரியெல்லாம் பந்தாவா இருந்திச்சு. இப்ப எந்த வண்டியிலுமே ஷாக் அப்சர்வர் வேலை செய்யறதில்லை. குப்பைய ஓவர் லோடு ஏத்தி வண்டி ஓட்ட முடியாம இடுப்பு வலி தாங்கல சார். குப்பை கொட்றப்ப எரிஞ்சு புகைமூட்டமாக இருக்கும். எதிர்ல வர்ற ஆளும் தெரியாது. வண்டியும் தெரியாது. குப்ப பொறுக்குறவங்க மேல வண்டி ஏறிடும். நைட்ல எங்காளுகளே வண்டி ஏறி செத்ததுண்டு டிரைவர்னு வேலைக்கு சேர்ந்தேன். தினம் 3 டிரிப் அடிக்கணும். முடிச்சிட்டா நீயும் போய் குப்பை வாருன்னு கட்டாயப்படுத்துறாங்க. முடியலீங்க. வேலைய விட்டுரலாம்னு இருக்கேன்.'' இது ஒரு டிரைவரின் குமுறல்.


ஓனிக்ஸிலிருந்து ராஜினாமா செய்து விட்டு ஓடிய தொழிலாளர்கள் சுமார் 4000 பேர். சில ஆண்டுகளிலேயே இத்தனைப் பெரிய வெளியேற்றம். வேறெந்தத் தொழிலிலும் காண முடியாதது. இளம் குருத்துக்களை வேலைக்கு எடுத்து, அவர்களுடைய எலும்பையும் தசையையும் கரும்புச் சாறு பிழியும் எந்திரம் போல முறுக்கிப் பிழிந்து 4000 பேரைத் துப்பியிருக்கிறது ஓனிக்ஸ்.


ஒரு தொழிலாளியின் சம்பளம் 2300 ரூபாய். ஆண்டுக்கு 24 நாட்கள் விடுப்பு. மூட்டு வலி, சுவாசக் கோளாறு, வயிற்று வலி, குடலிலும் சீறுநீரகத்திலும் மண் தங்குதல் இவை எல்லாத் தொழிலாளர்களுக்கும் வரும் நோய்கள். எனவே கூடுதல் விடுப்பு எடுப்பது தவிர்க்க முடியாதது. கூடுதலாக விடுப்பு எடுத்தாலோ, முன் அனுமதியின்றி எடுத்தாலோ, ஒருநாள் விடுப்புக்கு 4 நாள் சம்பளம் (ரூ. 340) வெட்டு.


சூபர்வைசர்களின் சம்பளம் 15,000 ரூபாய். ஒவ்வொருவரும் 60 தொழிலாளிகள் மற்றும் சுமார் 40 கி.மீ நீளச் சாலைக்குப் பொறுப்பு. இந்தப் பணிச்சுமையால் வேட்டை நாய்களாகவே அவர்களை மாற்றியிருக்கிறது நிர்வாகம். குப்பையின் எடையும் தண்டிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூடக் கூட அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து, பரிசுகள்.


டன் ஒன்றுக்கு 650 ரூபாய் என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 1200 டன் குப்பை அள்ள வேண்டுமென்பது மாநகராட்சிக்கும் ஓனிக்ஸ{க்கும் இடையிலான ஒப்பந்தம். இந்தக் கணக்கின்படி ஓனிக்ஸின் மாத வருவாய்


ரூ. 2 கோடி 35 லட்சம். 2300 தொழிலாளர்களுக்கு (மொத்த ஊதியம் சராசரி ரூ. 3000 என்ற கணக்கில்) வழங்கப்படும் ஊதியம் 69 லட்சம் மட்டுமே. பிற செலவினங்கள் போனாலும் தோராயமாக மாத லாபம் ஒரு கோடி ரூபாய். குப்பையின் எடையைக் கூட்டுவதற்காக கட்டிடம் இடித்த கற்களை அள்ளி, குப்பைக் கணக்கில் சேர்த்துக் காசு பார்க்கிறது ஓனிக்ஸ். அவ்வப்போது பிடிபடும் இந்த மோசடியை லஞ்சத்தால் சரிக்கட்டியும் விடுகிறது.


இந்த ஒரு கோடி ரூபாய் லாபத்தைப் பெறுவதற்காக ஓனிக்ஸ் இறக்கியிருக்கும் தொழில் நுட்பமென்ன? போட்ட முதலீடு என்ன? நம்மூர்க் குப்பைதான் முதலீடு. கசக்கிப் பிழியப்படும் நம் தொழிலாளர்களின் உழைப்புதான் தொழில்நுட்பம். கம்ப்யூட்டர் திரையையும் லாபக் கணக்கையும் தவிர வேறெதுவும் தெரியாத ஒரேயொரு வெள்ளைக்கார நிர்வாகியை மட்டும்தான் சென்னையில் இறக்கியிருக்கிறது ஓனிக்ஸ். வந்திறங்கிய ஒருசில ஆண்டுகளிலேயே 4000 இளைஞர்களை உயிருள்ள குப்பைகளாக்கி வீசியிருப்பதுதான் ஓனிக்ஸின் "திறமை'. ஈவிரக்கமற்ற சுரண்டல்தான் ஓனிக்ஸ் வழங்கும் சுத்தத்தின் இரகசியம்.


தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோஹனஸ்பர்க்கில் குடிநீரைத் தனியார்மயமாக்கி, ""ப்ரீ பெய்டு அட்டை வாங்க முடிந்தவர்களுக்கு மட்டும்தான் குடிநீர்'' என்ற கொடிய திட்டத்தை அமல்படுத்திய வயோலியா என்ற பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தின் கிளைதான் ஓனிக்ஸ். காசில்லாதவனுக்குக் குடிநீரில்லை என்ற இந்தக் கொடிய திட்டத்தின் விளைவாக லட்சக்கணக்கான கறுப்பின ஏழைமக்கள் கழிவுநீரையும் குட்டை நீரையும் குடித்து காலராவுக்கு இரையாகினர்.


அதே வயோலியா நிறுவனம்தான் சென்னை மாநகரக் குடிநீர் வழங்கல் வாரியத்தின் ஆலோசகராகவும் அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குப்பையில் லாபம் பார்க்கும் ஓனிக்ஸ், குடிநீரில் லாபம் பார்ப்பதெப்படி என்பதை நமது மாநகராட்சிக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கிளைதான் கழிவுகளிலிருந்து நம்மைப் "பாதுகாக்க' வந்திறங்கியிருக்கிறது. ஓனிக்ஸின் ஒப்பந்தம் நீடிக்கப்படும்; மெல்ல மெல்ல சென்னை முழுவதுற்கும் அது விரிவுபடுத்தப்படும்.


ஏனென்றால், தனியார்மயம்தான் அரசின் கொள்கை. பணி உத்திரவாதம், குறைந்த பட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமைகள் போன்ற "தொந்திரவுகள்' நீக்கப்படாமல் இருப்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழையத் தயங்குகின்றன என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை உடனே ஒழித்தால்தான் ஓனிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியுமென்றும் கூறுகிறார் மன்மோகன் சிங்.


அரசு இனி வழங்கவிருப்பதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்புகள்தான். ஓனிக்ஸ் தொழிலாளர்களில் பலர் எம்.ஏ., பி.ஏ. பட்டதாரிகள். பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அவர்களுடைய மாதச் சம்பளம் 2300 ரூபாய். குடியிருக்கும் இடத்திலிருந்து குப்பை அள்ளும் இடத்திற்கு வந்து போக பேருந்துக் கட்டணம் தினமும் 10 ரூபாய். தேநீர்ச் செலவு குறைந்தது 10 ரூபாய். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஒருநாள் சம்பளம் வெட்டு அந்த வகையில் மாதம் 340 ரூபாய். மிஞ்சுவது மாதம் 1340 ரூபாய். மருத்துவச் செலவு அதில்தான், சீருடையைத் துவைக்கும் செலவு அதில்தான். சோறும் வீட்டு வாடகையும் அதில்தான். இதுதான் தனியார்மயம் வழங்கும் "வேலை வாய்ப்பு'.


இனி இது ஓனிக்ஸ் தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்ல, உங்கள் பிரச்சினை. இத்தகைய வேலைவாய்ப்புக்கு நீங்கள் தயாரா?


மு க.மு.

4 comments:

Santhosh said...

மிகவும் பயனுள்ள பதிவு. நானே நிறைய முறை இது போன்ற வற்றை பார்த்து இருக்கிறேன். என்ன பண்றது லஞ்சத்தை ஒழிக்கும் வரை நம்மாள பல விஷயங்களை சரி செய்ய முடியாது. யாராவது நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தால் தான் உண்டு.

மு. மயூரன் said...

பிரயோசனமானபதிவு. இந்தமாதிரியான"உலகின் மறுபக்கம்" கொண்டிருக்கும் பிரச்சனைகளை தொடர்ச்சியாக தந்துகொண்டிருக்கிறீர்கள்.

எனக்கு கொழும்பில் சுத்திகரிப்பை குத்தகைக்கு எடுத்திருக்கும் அபான்ஸ் நினைவுக்கு வருகிறது.

எல்லாவற்றைய்ஞ்ம் விட இரயாகரன், உங்கள் பதிவுக்கு வந்திருக்கும் முதல் பின்னூட்டம் தான் நிறைய சிந்திக்க வைக்கிறது.

"லஞ்சத்தை ஒழித்தால் எல்லாம் சரியாகிடும் சார்"

இந்த மாதிரி அற்புதமான உண்மையைய மீள கண்டறிந்து உலகத்துக்கு சொன்ன ஷங்கர் , சுஜாதா போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மகேஸ் said...

ஓனிக்ஸ் நிறுவன ஊழியர்களின் நிலை இவ்வளவு பரிதாபமானதா? நான் என்னவோ கையுறைகள், காலுறைகள் எல்லாம் அணிந்து சுகாதாரமாக வேலை செய்கிறார்கள் என்றல்லாவா நினைத்திருந்தேன்.

Srikanth Meenakshi said...

(கில்லிக்கு நன்றி)

முக்கியமான செய்திகளை உள்ளடக்கிய பதிவு. நன்றி. தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்களும் அமலாக்கங்களும் இல்லாவிட்டால், தனியார்மயமாக்குதல் என்பது எத்தனை ஆபத்தானது என்பதை இன்னொரு முறை வெளிச்சம் போட்டுக்காட்டும் கட்டுரை.