தமிழ் அரங்கம்

Tuesday, May 9, 2006

தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா?

தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா?


கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத ஓட்டுக் கட்சிகளோ மிகவும் குறைவு!) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன்? எப்படி? எதற்காக?



இந்தக் கொள்கை அமலாக்கப்பட்டு, சாதனைகள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் கிடையாது. மாறாக, இதனால் உலக நாடுகளில் பலவும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் ஆழமாக வீழ்ந்து, திவாலாகிப் போனதாகத்தான் தெரிகிறது. இந்தக் கொள்கையை அமலாக்கும் ஆட்சியாளர்கள் அடுத்தடுத்துத் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுகிறார்கள்.



வாக்காளர்களைக் கவர்வதற்குத் தோதான செயல்பாடுகளில் ஈடுபடுவது தானே ஓட்டுக் கட்சிகளின் இயல்பு! ஆனால், பாருங்கள், நாட்டின் தேர்தல் அரசியல் கட்சிகள் அனைத்துமே வாக்காளர்கள் வெறுக்கும் கொள்கைகளைச் செயல்படுத்துகிறார்கள்! ஏனென்றால் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியானாலும், தோல்வியடைந்து எதிர்க்கட்சியானாலும் தனியார் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வருவாய் கிடைத்து விடுகிறது; அளவில்தான் வேறுபாடு இருக்கிறது. ஆகவே, வாக்காளர்களைக் கவர்வதற்கு அவர்கள் விரும்பும் கொள்கைகளை முன்வைப்பது அவசியமில்லை.



மேலும், ஓட்டுக் கட்சி தமது கொள்கைகளை முன்வைத்து வாக்குகளைப் பெறுவது கிடையாது; வெற்றி பெறுவதற்கு வேறுபல வழிமுறைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தேசியமயமாக்கம்தான் தனது பொருளாதாரக் கொள்கை என்று கூறி வாக்காளர்களை ஈர்த்தது போல, இப்போது தனியார்மயமாக்கம்தான் (இதுதான் அவர்கள் பின்பற்றும் கொள்கை) என்று எந்த அரசியல் கட்சியும் துணிவாகவும் வெளிப்படையாகவும் கூறிக் கொள்வதில்லை. அதைத் தமது இரகசியத் திட்டமாகவும் கொள்கையாகவும் வைத்துக் கொண்டு சதித்தனமாக திருட்டுத்தனமாக நிறைவேற்றி வருகிறார்கள்.



தேசியமயமாக்கம்,

அரசுடைமையாக்கம் என்பதே தனியார்துறையின்

தோல்வியிலிருந்தும் அதன்

தேவைக்காகவுமே உருவாக்கப்பட்டது என்பது இன்றைய

இளையதலைமுறைக்குத்

தெரியாது.


இதிலிருந்து தெரியவில்லையா தனியார்மயமாக்கம் என்பது பலரும் கருதுவதுபோல வெறுமனே ஒரு பொருளாதாரக் கொள்கை அல்ல. அரசின் ஆதிக்கத்திலுள்ள பொதுச் சொத்துக்களை மக்கள் செல்வங்களையும் நாட்டுச் செல்வாதாரங்களையும் தனியார் தரகு முதலாளிகளும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் அந்நிய ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகளும் கொள்ளையடிப்பதற்கு மறுபெயர்தான் தனியார்மயமாக்கம். அதனால்தான் இரகசியமாக சதித்தனமாக அக்கொள்கையைச் செயல்படுத்துகிறார்கள்.



தனியார்மயம் முதலிய புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஏகாதிபத்திய நிறுவனங்கள் திணிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே, பின்னாளில் ஜனதா கூட்டணியாக உருவெடுத்த பார்ப்பன பனியா கும்பலின் அப்பட்டமான முகவர்கள் இங்கே வாதாடி போராடி வந்திருக்கிறார்கள். பார்ப்பன அரசியல் குருவான இராஜாஜி அவர்களுக்குத் தலைமையேற்றார். நேரு காந்தி பரம்பரையின் பழைய பொருளாதாரக் கொள்கையை ""லைசென்சு பர்மிட் கோட்டா'' ஆட்சி என்று அவர்கள் கேலி செய்தனர். பதிலுக்கு இவர்களை ""ஏகபோக முதலாளிகள் ஏகாதிபத்தியங்களின் ஏஜெண்டுகள், பிற்போக்காளர்கள், சிண்டிக்கேடர்கள்'' என்று காங்கிரசு கம்யூனிஸ்டு அணியினர் சாடினர்.



இவ்வாறு இங்கு தனியார்மயமாக்கம் முதலியவை புகுத்தப்படுவதற்கு முன்பாக அதற்கு ஆதரவான தளம் அப்பட்டமான பிற்போக்கு பார்ப்பன பனியா கும்பலால் உருவாக்கப்பட்டிருந்தது. முதலில், ருசிய சீன எதிர்ப்பு தேசியவெறி, கம்யூனிச சோசலிச எதிர்ப்பு என்பதில் தொடங்கி (தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்த போது அரசியல்வாதிகள் மீது பொதுவான வெறுப்பைத் தூண்டி அரசியலற்றவாதத்தைப் பரப்பி) அரசுத்துறை சார்ந்த பொருளாதாரத்தைச் சாடுவது, தேசியமயத்தை எதிர்ப்பது என்பதாக தனியார்மயமாக்கம், ஏகபோக ஏகாதிபத்திய ஆதரவுப் பிரச்சாரம் செய்தனர். இப்போதும் இடஒதுக்கீடு எதிர்ப்பு, சிறுபான்மை மற்றும் தேசிய இன மக்கள் உரிமை எதிர்ப்பு பிற்போக்கு பாசிச சக்திகளால்தான் புதிய பொருளாதாரக் கொள்கை தாங்கிப் பிடிக்கப்படுகிறது.



ஆனால் தனியார்மயமாக்கத்தின் விளைவாக நேரடி பாதிப்புக்குள்ளாகும் மக்கள் பிரிவினர் அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடுகிறார்கள். பால்கோ அலுமினிய ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்துப் போர்க்குணத்தோடு போராடிய தொழிலாளர்கள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டனர். உத்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் மின்சாரத்துறை தனியார்மயமாக்கத்தை எதிர்த்த தொழிலாளர் மக்கள் போராட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுப் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.



தனியார்மயமாக்கம், நிர்வாகத் திறமைமிக்கதாக மாற்றி, தொழில் தரம் உயரும் என்ற வாதமும் தற்போது தகர்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாம் மும்பை மற்றும் அரசியல் தலைநகரமாம் டெல்லியின் மின் விநியோகம் ரிலையன்சு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. சமீபத்திய பேய்மழை வெள்ளப் பெருக்குக்குப் பிறகு மின் இணைப்பு பல நாட்கள் துண்டிக்கப்பட்ட மும்பை பல நாட்கள் இருளில் மூழ்கி தொழிலும் பாதிக்கப்பட்டுக் கிடந்தது. மும்பைப் புறநகரில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பழைய மின்வாரியம் விரைந்து செயல்பட்டு சரி செய்தும், தனியார் நிறுவனமான ரிலையன்சு பல நாட்கள் உறங்கிக் கிடந்தது.



இதே ரிலையன்சு நிறுவனம் அடிக்கடி மின் அளவை மின்னணு இயந்திரத்தை மாற்றி பயனீட்டு அளவை பன்மடங்கு கூட்டிக் காட்டி தில்லுமுல்லுகள் செய்து கொள்ளையடிப்பதாக டெல்லி வாழ் நுகர்வார் குழுக்கள் புகார் கூறி வருகின்றன. தொலைத்தொடர்புச் சேவை நடத்தும் இந்த நிறுவனம் வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை எல்லாம் உள்ளூர் அழைப்புகளாகக் காட்டி, அரசு நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கட்டணத்தொகை மோசடி செய்துள்ளது.



இவ்வாறு தனியார் நிறுவனங்களின் மோசடிகள், தில்லுமுல்லுகள் பலவும் அவ்வப்போது அம்பலமாகி வருகின்றன. தனியார்மயமானால், ஊழியர்கள் கடமைப் பொறுப்போடு வேலை செய்வார்கள், அரசு நிறுவனங்களில் நடப்பது போல பணிகளைத் தட்டிக் கழிக்க முடியாது என்பது போன்ற கருத்துக்கள் நடுத்தர மக்களிடம் நிலவுகிறது. ஆனால் இதெல்லாம் கீழ்நிலைத் தொழிலாளர்களுக்குத்தான் எப்போதும் பொருந்தும். இவர்களுக்குத்தான் தொழிற்சங்க உரிமைகள், பணிஊதிய சலுகைகள் மறுக்கப்பட்டுக் கடுமையாக அடக்கி ஒடுக்கியும் சுரண்டப்படுகிறார்கள்.



உயர் அதிகாரிகளுக்குப் பாலியல் சுற்றுலா உட்பட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் வரியேய்ப்பு முதலிய மோசடிகள் செய்து சிக்கிக் கொள்ளும்போது இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றன. அந்தச் சமயத்திலும் பிற நிறுவனங்களோடு தொழில் உறவுகள் (விற்பனை வாங்குவதில் சேவை முதலிய) ஒப்பந்தங்கள் போடும்போதும், கட்டுமானப் பணிகள் போன்ற வேலைகளின் போதும், பணியாளர்கள் நியமனத்தின் போதும் தனியார் நிறுவனங்களிலும் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகின்றது.



எரிந்து போனவர் ஒரு தற்கொலைப்

படையைச் சேர்ந்தவர்தான்! ஆனால்,

எந்தவொரு தீவிரவாத இயக்கத்தின்

தற்கொலைப் படையுமில்லை.



""வேலையில்லாத் தற்கொலைப் படை''யைச் சேர்ந்தவர்!



சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார்

நிறுவனங்களில் அடுத்தடுத்து தற்காலிக

வேலைகளிலிருந்து விரட்டப்பட்டவர்.



நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வதற்காக என்று சொல்லி அமெரிக்காவின் மோசடி நிறுவனமான என்ரானுடன் ஒப்பந்தம் போட்டு அந்நிய தனியார்துறையில் தபோல் மின்திட்டம் மராட்டியத்தில் அமைக்கப்பட்டது. நாட்டுக்குப் பெருஞ்சுமையாகி விடும் என்று இத்திட்டத்தை முற்போக்கு இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. இத்திட்டத்தில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடியதாக ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டே, எதிர்ப்பை மீறி, காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோது தபோல் மின்திட்டம் அமைக்கப்பட்டது. என்ரான் நிறுவனத்தின் மிகையான மின்கட்டண வசூலுக்கு ஈடுகொடுக்க முடியாத மராட்டிய மாநில அரசுக்குப் பதிலாக இந்திய அரசு பல நூறு கோடி தண்டம் கட்டியும், ஒப்பந்தத்தை மீறியதாக உலக நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதாக மிரட்டுகிறது, என்ரான்.



புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு ஏராளமான தொழில் நிதி மற்றும் பங்குச் சந்தை நிறுவனங்கள் முளைத்தன. அத்தனையும் போலியானவை என்று விரைவிலேயே தெரிய வந்துவிட்டது. கொள்ளை இலாபவட்டி ஆசைகாட்டி நடுத்தர மக்களிடமிருந்து கொஞ்ச நஞ்சச் சேமிப்புகளையும் சூறையாடி விட்டு இந்த நிறுவனங்கள் மழைக்காலக் காளான்களாய் மறைந்து போயின. அடுத்து பொதுத்துறை நிதி நிறுவனங்களின் சேமிப்புகள் பங்கு பத்திர ஊழல்கள் முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டன.



மோட்டார் வாகன உற்பத்தி முதல் குளிர்பானங்கள் குடிதண்ணீர் விற்பனை வரை அந்நிய ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்களின் ஏகபோகம் நிறுவப்பட்டது. அந்த நிறுவனங்களோடு இந்தியத் தரகு முதலாளிகளும் சேர்ந்து தொழில்களை நவீனமயமாக்கி விரிவுபடுத்தியபோது இலட்சக்கணக்கான சிறிய பெரிய உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டும், ஆட்குறைப்பு செய்யப்பட்டும் கோடிக்கணக்கானோர் வேலை பறிக்கப்பட்டுத் தெருவில் வீசப்பட்டனர். சுற்றுச்சூழலை நாசமாக்கி மக்களைக் கொள்ளை நோய் மரண வாசலில் தள்ளும் தொழில்கள் பெருகின.



கொள்ளை இலாபந்தரக் கூடிய நுகர்பொருள் உற்பத்தி (அழகு சாதனப் பொருட்கள், பொழுது போக்குச் சாதனங்கள் போன்றவை), வங்கி காப்பீடு சுற்றுலா சினிமா வானொலி வானொளி விளம்பரம் தொலைத்தொடர்பு போன்ற சேவைத்துறைத் தொழில்களில் மட்டுமே தனியார் தரகு முதலாளிகள் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுகின்றனர். அதேசமயம் தனியார் தரகு முதலாளிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டுமான வசதிகளைப் பெருக்கித் தருவதற்கான முதலீடும் பணிகளும் இன்னமும் அரசுத் துறை பொறுப்பிலேயே நடக்கின்றன.



இதைவிட மோசமானது என்னவென்றால், மக்களிடமிருந்து பலவழிகளிலும் திரட்டப்பட்ட சேமிப்பு, அந்நிய உள்நாட்டுக் கடன்கள் மூலம் பெறப்பட்ட கடன் தொகையையும் கொண்டு இலாபகரமாக நடத்தப்பட்ட பொதுத்துறைத் தொழில்கள் எல்லாம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு தனியார் தரகு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இந்தத் துரோக வேலையைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு ஒரு தனி அமைச்சகமே ஏற்படுத்தப்பட்டது.



நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் அவசியமானவை என்று கூறப்பட்ட மின்உற்பத்தி விநியோகம், கப்பற்துறைமுகம், இரயில்வே சாலைப் போக்குவரத்து, செய்தித் தொடர்பு வசதிகள் அனைத்தும் தனியார் தரகு முதலாளிகளுக்கு விற்கப்படுகின்றன. இன்றியமையாத் தேவையென்று கூறி மக்கள் நிலங்களைக் கையகப்படுத்தி, மேற்படி வசதிகள் செய்து தரப்படுகின்றன. பொதுநலச் சேவைக்கானவை என்று கூறப்பட்ட மருத்துவம், கல்வி, குடிநீர், சுகாதாரம் போன்றவையெல்லாம் இலாபம் தரக்கூடிய தொழில்களாக மாற்றப்பட்டுத் தனியார் கொள்ளைக்கு வழிவகை செய்யப்படுகின்றன. ஆற்றுமணல், புறம்போக்கில் உள்ள கற்பாறைகள், காடுகள் எல்லாம் தனியார் தரகு முதலாளிகளின் கொள்ளைக்கு ஏலம் விடப்படுகின்றன.

முன்பெல்லாம் தேசியமயம், தனியார் ஏகபோக ஆதிக்க ஒழிப்பு, இந்திய மயம் என்று கூச்சல் போட்டார்கள். அப்போது பல மாநிலங்களில் காந்தி நேரு காங்கிரசு கட்சியின் ஏகபோக ஆட்சிகள் கவிழ்ந்து, மத்தியில் அதன் ஆட்சி ஆட்டங் கண்டிருந்தது. இந்த முழக்கத்தை வைத்து அன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல்களில் செழிப்பான அறுவடை செய்து கொண்டார்கள்.



நாட்டின் பெரிய வங்கிகள், பெட்ரோலிய வியாபாரம், கனரகத் தொழில்கள், சுரங்கத் தொழில்கள், போக்குவரத்துத் தொழில்கள் என்று ஆரம்பித்து, பால் மீன் முட்டை கோழி கறிக்கடைகள் நடத்துவது வரை அரசுத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொழில்துறையில் ஏகபோக ஆதிக்கத்தைத் தடுக்கவும் அந்நிய மூலதன ஊடுருவலைத் தடுக்கவும் சட்டங்கள் வந்தன. அந்நிய நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் குவிப்பைத் தடுப்பதற்கு காப்புவரித் தடைகள் போடப்பட்டன.



அன்றைய ""அந்தப் பொருளாதாரக் கொள்கை நாட்டை பின்தங்கிய நிலைக்குத் தள்ளிவிட்டது; நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையிலும் நெருக்கடியிலும் சிக்கி விட்டது'' என்று கூறி அதற்கு எதிராக வந்திருப்பதுதான் புதிய பொருளாதாரக் கொள்கை.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகியன அடங்கிய இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையின் மகிமைகள் என்று பலவும் சொல்லப்படுகின்றன.

""தேசியமயம் முதலிய பழைய பொருளாதாரக் கொள்கை நாட்டின் தொழில் பொருளாதார வளர்ச்சிக்குக் கேடு விளைவித்து விட்டது; அரசுத்துறை பொதுத்துறைத் தொழில்கள் வெள்ளை யானையைக் கட்டித் தீனி போடுவது போன்று பெரும் நட்டம் ஏற்படுத்திவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிலும், தொழில்நுட்பமும் நவீனப்படுத்தப்படும். தனியார்துறை என்றாலே நிர்வாகத்திறமை ஊக்கம், முன்முயற்சி, பொறுப்பு போன்றவை தானே பொதிந்திருக்கும். வீண்விரயம், காலதாமதம் இருக்காது. போட்டி மனப்பான்மையால் தரம் பராமரிக்கப்படும். தனியார்துறை அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர்கள் மேல்மட்ட நிர்வாகத்துக்கும் நுகர்வோருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை உணர்ந்து வேலை செய்வார்கள். குற்றம் குறை நேர்ந்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருக்கும். அனாவசியமான அரசியல் தலையீடு, அதிகார முறைகேடு, சிகப்பு நாடாமுறை, தேவையற்ற தொழில் தகராறுகள் இருக்காது.''



""மேலும் மறைமுக நேரடி அந்நிய மூலதனம் முதலீடு குவியும்; தொழில் வளம் பெருகும். உலகச் சந்தையில் போட்டி போட்டு இந்தியத் தொழில்கள் நவீன உற்பத்தி, நிர்வாகத்திறமை, தரமான சரக்கு என்று வளரும். மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறும்'' என்று இப்போது கூறுகிறார்கள்.



ஆனால், தேசியமயமாக்கம், அரசுடைமையாக்கம் என்பதே தனியார்துறையின் தோல்வியிலும் தேவைக்காகவுமே உருவாக்கப்பட்டது என்பது இன்றைய இளையதலைமுறைக்குத் தெரியாது. அதாவது இரும்பு எஃகு, சாலை ரயில் போக்குவரத்து, மின்உற்பத்தி, செய்தித் தொடர்பு, அணைக்கட்டு நீர்ப்பாசன வசதி போன்ற துறைகளில் பெருமளவுக்கு முதலீடு போடுமளவுக்குத் தனியார் முதலாளிகளிடம் அப்போது மூலதனமும் இல்லை; இவற்றின் மூலமான இலாப விகிதமும் குறைவாகவே இருந்தன. இத்தேவைகளை அரசுத்துறை மூலமாக நிறைவேற்றிக் கொண்ட அவர்கள், கொள்ளை இலாபம் கிடைத்த நுகர்பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தினர்.



அப்படியிருந்தும் புதிய முதலீட்டுக்கும் நவீனமயமாக்கத்துக்கும் போதிய மூலதனக் குவிப்பை தனியார்துறை முதலாளிகள் எட்ட முடியாமல் நூற்றுக்கணக்கான பெரிய, ஆயிரக்கணக்கான சிறிய ஆலைகள் நலிவுற்று நெருக்கடியில் சிக்கிக் கொண்டன. நெருக்கடியிலிருந்து அவற்றை மீட்கும் முகமாக நலிவுற்ற ஆலைகளை அரசுடைமையாக்குவதும், வங்கிகளை அரசுடைமையாக்கி மூலதனக் குவிப்பை அடையவும் தேசியமயமாக்கம் முதலிய பொருளாதாரக் கொள்கைகள் புகுத்தப்பட்டன.



தேசியமயமாக்கம் என்ற பெயரில் நடந்த அரசுடைமையாக்கம் என்பது எந்த வகையிலும் சோசலிசத்தன்மை வாய்ந்ததோ, நாட்டின் பொதுமக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு நன்மை செய்யும் சீர்திருத்தமோ கிடையாது. உண்மையில் அது தொழிலையும் பொருளாதாரத்தையும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தில் வைப்பதாகும். இதற்கேயுரிய அதிகார முறைகேடுகள் இலஞ்ச ஊழல் காரணமாகவும், தனியார் தரகு முதலாளிகளுக்கும் பண்ணை நிலப்பிரபுக்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாகவும் தொடர்ந்து பின்பற்றப்பட்ட இராணுவமயமாக்கம் காரணமாகவும் அரசுக்கு மேலும் பெரும் பொருளாதார நெருக்கடியும் அந்நிய உள்நாட்டுக் கடன் சுமையும் பல்கிப் பெருகின.



இவற்றின் விளைவாக, உலக வங்கி, சர்வதேச நிறுவனம் மற்றும் பிற ஏகாதிபத்திய அமைப்புகளின் பெரும் கடன் கேட்டுக் கையேந்திய இந்திய அரசுக்கு பல்வேறு கடும் நிபந்தனைகள் கட்டளைகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரச் சீர்திருத்தம், கட்டுமான மறுசீரமைப்புக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் திணிக்கப்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்து கிடக்கும் நாடுகளின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் மாய மருந்தாக மந்திரமாகச் சொல்லப்படுவதுதான் இந்தச் சூத்திரம்.



ஆனால் இச்சூத்திரம் அமலாக்கப்பட்டதன் விளைவாக உலகின் பலநாடுகளிலும் ஆலைகள் தொழில்கள் மூடப்பட்டன. பொருளாதார நெருக்கடிகள் முற்றி, திவாலாகிப் போயின. வறுமை வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினிச் சாவுகள் பெருகின. அதனால்தான் இப்போது ""மனிதமுகம்'' கொண்ட சீர்திருத்தம் செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது.





சில வாரங்களுக்கு முன்புதான் அது நடந்தது. கோவையை நெருங்கிக் கொண்டிருந்த சேரன் துரித ரயில்வண்டி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து, இரண்டு பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. இரயில் பெட்டியின் கழிவறையில் எரிந்து கரிக்கட்டையாகிப் போன ஒரு இளைஞனின் பிணம் கிடந்தது.

காற்றில் இலையசைந்தால் கூட தீவிரவாதிகள் என்று பீதியுற்று கண்மண் தெரியாமல் சரமாரியாகச் சுடும் போலீசுச் சூரப்புலிகள் துப்புத்துலக்குவதற்கு முன்பே வழக்கமான புரளி கிளப்பிவிட்டார்கள்: ""யாராவது தற்கொலைப் படைத் தீவிரவாதியாக இருக்கலாம்!''



கடைசியில் ஒருவழியாக உண்மை தெரிய வந்தது. எரிந்து போனவர் ஒரு தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்தான்! ஆனால், எந்தவொரு தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப் படையுமில்லை. ""வேலையில்லாத் தற்கொலைப் படை''யைச் சேர்ந்தவர்! கோவைப் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டயப் படிப்புப் படித்த வேலையில்லா இளைஞர். சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் நிறுவனங்களில் அடுத்தடுத்து தற்காலிக வேலை செய்து விரட்டப்பட்டவர். வாழ்க்கையில் வெறுப்படைந்து வீடு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார்.



""2012இல் இந்த நாட்டில் நாற்பது கோடிப்பேர் வேலை தேடி அலைவார்கள். தனியார்துறையும் அரசுத்துறையும் சேர்ந்து ஒரு ஆறுகோடிப் பேருக்குத்தான் வேலை தர முடியும்'' என்று எச்சரிக்கிறார் டாடா நிறுவனத்தின் இயக்குநர். இந்த எச்சரிக்கையின் எதார்த்த விளைவை நேரிலே அனுபவித்தவன்தான் தன்னைத்தானே கொளுத்திக் கொண்ட அந்த இளைஞன்.



ஆனால், நாட்டின் முதன்மைக் கோமாளி அப்துல் கலாம், மாணவர்கள் இளைஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், ""கனவு காணுங்கள்! 2020இல் இந்த நாடு ஒரு மேல்நிலை வல்லரசாகிவிடும்!''



அந்த இளைஞன் கண்ணை மூடினாலும் சரி, திறந்தாலும் சரி இருண்ட எதிர்காலமே தெரிந்திருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்விகளும் தொடர்ந்த வெறுப்புமே அவர் சாவைத் தழுவிக் கொண்டதற்கான காரணங்கள். தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற சூத்திரம் அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கி 15 ஆண்டுகளாகி விட்டன. இருந்தும் இதுதான் நிலைமை.



மனித முகங்கொண்ட சீர்திருத்தம், அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவு எரிந்து கரிக்கட்டைகளாகிப் போகும் முகங்களைக் கொண்டவர்களாக மனிதர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது!

மு சிவராஜ்

No comments: