நெய்தல் குறிப்புகள்
நாளங்காடி, பொழுதங்காடி
யவனர் வந்து கால்தடம் பதித்து...
நீட்டி முழக்கும் நெய்தற்குறிப்பில்
சேர்த்துக் கொள்ளுங்கள் இதையும்
கோட்டுச்சேரி சுனாமி குடியிருப்பில்
வெறிநாய் வந்து கால்தடம் பதித்து
கைக்குழந்தையைக் கடித்துக் குதறிய காட்சியையும்!
உறங்கிக் கிடக்கும் குழந்தை அழகில்
ஈ மொய்த்தாலே தாய்மனம் பதைக்கும்
தௌ;ளுப்பூச்சி கடித்தாலே தேகம் சிவக்கும்
பிள்ளைமுகம் நாய் கடித்தால்
யார் மனம் பொறுக்கும்?
ஊருக்கு வெளியே குடியிருப்பு
சாவுக்கு வெளியே காத்திருப்பு.
கருவறை நீந்தி நீர்மடி குதித்து
தலைமுறை கலந்த பரதவர் உறவை
கொலை செய்தோம் என்ற குற்ற உணர்வில்
பார்ப்பவர் முகத்தில் பழகத் தயங்கி
கூசிப் பின்வாங்குது கடல்.
""உலகவங்கியில் முதலீடு செய்த
தமிழகத்துப் பிணங்களுக்குத் நானே முதல்வர்
இவை என்னுடைய பிணங்கள்''
தமிழகம் தரிசாக்கிப் படையல் கொள்ளும்
பாலைத் தெய்வத்தின் ஊளை கண்டு
பல இடங்களில் உள்வாங்கிக் கொண்டது கடல்.
""தேசியப் பேரழிவாகத் தெரிவு செய்த பிணங்களை
மாநிலத்து நிதியாக மாற்றீடு செய்து
நீ பேர் வாங்கிப் போகவா இலவு காத்தோம்?
இது அந்நிய மூலதனத்தின் ஆயுள் காப்பீடு
இந்தியப் பிணங்களைத் துண்டாடாதே
எங்கள் பிணங்களில் கை போடாதே!'' என
பிணங்களைச் சுரண்டும் கூட்டணி பார்த்து
ஓடி ஒளியுது சமுத்திர நண்டு.
அந்நிய நிர்வாணம் நம் தண்ணீரைப் பழிக்க
மணல்வெளி போர்த்திய மீன் வலைகளை
கழட்டி எறியச் சொல்லும் பறங்கியர் குரல்கள்
சூரியக் குளியலைக் கடை பரப்ப
கொளுத்தப்படும் குப்பங்கள்.
வலைவீசக் கடல் இல்லை, உலை வைக்க நிலமில்லை.
உழைப்பவர் கண்களில் புதிய உப்பளங்கள்.
தேர்தல் முத்துக்களைத் தெருவில் நிரல் பரப்பி
வாகைப் பூவோடு வருகிறார்கள்
யவனர்கள், பறங்கியர்
கூடவே புரட்சித் தலைவி, புரட்சிப் புயல்,
தமிழினத் தலைவர், காவலர், ஏவலர்......
செத்த ஓட்டுப் போக மத்த ஓட்டை வேட்டையாட
பிணங்களின் மீது வீசிய காசு
உன்னது என்னதென்று பேரிரைச்சலோடு
மனிதக் கூச்சம் சிறிதுமின்றி
ஊரைச் சுற்றி வளைக்குது வெறிநாய்கள்.
மு துரை. சண்முகம்
தமிழ் அரங்கம்
Monday, May 8, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment