பி.இரயாகரன்
24.05.2006
முன்னைய தொடரின் (பகுதி மூன்று)
சூக்குமமான இதற்கென்று ஒரு வரலாறு உண்டு. நாம் தெரிந்து கொள்ளாத, மனித வரலாறுகளே இவை. நாகரீகம் என்ற பெயரில் எமது குருட்டுத்தனத்தால், நாம் எம்மை போர்த்தியுள்ள மூகமுடிகளை தாண்டியதே இந்த வரலாறுகள். எமது மூதாதையர்கள் வதைபட்டு வதங்கிய கதையிது. பல நூறு கோடி மக்கள் மூலதனத்துக்காக தம்மை பலியிட்டு, தம் வாழ்விழந்து மரணித்துப் போன வாழ்க்கையின் கதையிது. கடந்த 200 முதல் 500 வருடங்களிலான கதையிது. நாம் எமது வாழ்வை தேடிக் கற்பதை மறுத்து, பாடப்புத்தகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் எமது குருட்டு அறிவைப் பெறுகின்றோம். எமது மனித இனத்தின் அவலத்தையே தெரிந்து கொள்ளாத முட்டாள்களாகவே வாழ்கின்றோம், வாழ்ந்து மடிகின்றோம். வயிற்றை நிரப்புவதில் மந்தைக்குரிய குணாம்சத்துடன், சில பணக்கார நிறுவனங்கள் உற்பத்தி செய்வதை தேடி நுகர்வதன் மூலம், வீம்பாகவே வாழ்ந்து நடிக்கின்றோம். உண்மையில் கடந்தகால மனித வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் கூட நாம் தெரிந்து கொள்ளாத, எமது போலியான வீம்பான அறிவின்மையின் வரட்டுத்தனத்தால், இவை எல்லாம் மூடிப் பாதுகாக்கப்படுகின்றது. எம்மை இன்று அடிமை கொள்ளும் இந்த மூலதனம் எப்படி உருவானது. பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் என்ற பிளவு எப்படி உருவானது.
இன்று நாம் நம்பும் காரணங்கள், நம்பவைக்கும் காரணங்கள், இது குறித்த விளக்கங்கள் அனைத்தும் திட்டமிட்டு போலியாக உருவாக்கி எம்மீது திணிக்கப்பட்டவை தான். தொடர்ந்தும் அவை திணிக்கப்படுகின்றன. மனிதனின் அறிவியல் சார்ந்த முட்டாள் தனத்தில் மேல் நம்பிக்கை வைத்து, மலட்டுத்தனத்தை சமூக ஆதாரமாக கொண்டே, அவை காலாகாலமாகவே புனையப்படுகின்றது. அரசியல் செய்வோர்கள் தொடங்கி , சமூகம் சார் எழுத்தாளர்கள் முதல் சமூகத்தை ஏமாற்றி அதில் பணம் சம்பாதிப்பவர்கள் வரை, அனைவரும் மக்களின் கடந்தகால நிகழ்கால அடிமைத்தனத்தைப் பற்றி திரிக்கின்றனர் அல்லது அதைப் பேசாது ஒதுக்கி மூடிமறைகின்றனர். உண்மையில் இதன் விளைவு என்பது, ஒரு தலைமுறை தனக்கு முந்திய தலைமுறையின் வாழ்வைக் கூட தெரிந்துகொள்ள முடியாத சமூக அவலத்தை அடைந்துவிடுகின்றது. சமூகம் தலைமுறை தலைமுறையாக கடந்த தலைமுறையைப்பற்றி அறிவூட்டி வந்த அறிவியல் என்பது, அறவே இன்று இல்லாது போகின்றது. ஒரு தொழிற்சாலையில் ஒரு பொருள் வெளிவருவது போல், மனிதன் வெறும் உற்பத்திப் பண்டமாக, ஒரு ஜடமாக படைக்கப்படுகின்றான். நாம் நுகரும் ஒவ்வொரு பொருளின் பின்னும் கண்ணீரும் மனித அவலங்களும் இன்றி, அவை எமது சுவையையும், ரசனையையும் உருவாக்கிவிடவில்லை.
இன்று மனிதனாக கூறிக் கொள்வோர் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் கூட புரிந்துகொள்ள முடியாத மனிதனாகின்றான். மனித இனத்தையே ஒரு சமூக உயிரியாக நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில், வெறும் பண்ட உற்பத்தி பொருளாக மனிதனின் சிந்தனையை மாற்றிவிட்டான். இப்படி மாற்றப்படுவதைத் தான், மூலதனம் மிக கவனமாக திட்டமிட்டு செய்கின்றது. மனிதன் வெறும் நுகர்வு இயந்திரமாக, மூலதனம் பெத்துப் போடுவதை கேள்வி கேட்காது விழுங்கும் ஒரு ஜடமான உறுப்பாக மாற்றி உள்ளான். சுயமுள்ள உயிரி என்ற உயிரின் ஆற்றலையே இதன் மூலம் மனிதன் இழந்து நிற்கின்றான். மனிதன் (இவன்) தான் நம்புவது எல்லாம், நினைப்பதெல்லாம் மூலதனத்தின் விருப்பங்களையே. இது சூக்குமமாக மனிதன் அறிந்து கொள்ள முடியாத வகையில் மலடாகவே உள்ளான். மனிதனின் சிந்தனையையும் செயலையும் தீர்மானித்து, அவற்றைக் கட்டளையிட்டு மூலதனம் எப்படி உருவாக்குகின்றது என்பதை, சுயமாக மனித வரலாற்றில் இருந்து அவனின் உழைப்பில் இருந்து தெரிந்து கொள்ளமுடியாத முட்டாளாக்கப்படுகின்றான். தன்னை உயிருள்ள பொருளாக சிந்திக்கவும், அரை அடிமையாக நவீனமாக இருப்பதையே சுய உணர்விழந்து ஏற்றுக் கொண்டு வாழும் வாழ்வையே, ஜனநாயகம் சுதந்திரம் என்கின்றான். இதை வரிந்து கட்டி ஏற்கவும், வண்டில் மாடு மாதிரி இழுக்கவும் பழக்கப்படுத்தப்படுகின்றான்.
மனிதனுக்கு முன்னால் பிரதிபலிப்பதும், எதிர்வினையாற்றுவதும் மூலதனத்தின் எதிர்வினைகள்தான். சுயமான வாழ்வியல் போக்குகளை மூலதனம் அனுமதிப்பதில்லை. அனுதினம் அவை நலமடிக்கப்படுகின்றது. கடந்தகால வாழ்வில் இருந்த மனித நலன்கள் எல்லாம் அழிந்து சிதைந்து போகின்றது. இதை நியாயப்படுத்தும் கருத்துகளின் வக்கிரங்கள், கடந்த காலத்தை சூக்குமமாக்குகிறது.
நமக்கு இந்த சமூக அமைப்பு புகட்டும் கடந்தகால உலகம் பற்றிய வாழ்வியல் உண்மைகள் அனைத்தும் நேரிடையானவை. அன்று உலகெங்கும் உழைப்பு, அதன் பயன்பாடும் சராசரியான அளவில் காணப்பட்டது. ஏழை பணக்கார நாடுகள் என்ற வேற்றுமை இன்று போல் அன்று இருக்கவில்லை. மனித ஏற்றத் தாழ்வுகள் மிகக் குறைவாக காணப்பட்டது. மக்களிடையேயான வாழ்வில் ஒரு சராசரித் தன்மை காணப்பட்டது. இப்படியான உலக மக்களின் வாழ்வு சிதைந்து வந்த காட்சிகளை நாம் ஆதாரப+ர்வமாகவே ஆராய்வோம்.
முதலில் நாம் உலக உற்பத்தியின் சராசரி அளவையும், அது இன்று சூறையாடப்படும் வடிவத்தையும் பார்ப்போம்.
உலகில் சராசரி தனிநபர் வருமானம் அதிகரித்து வந்துள்ளதையே, நாம் கடந்த 500 வருட வரலாற்றில் காண்கின்றோம். மக்கள் தொகை அதிகரித்த போதும் கூட, உழைப்பின் அளவோ பெறுமதியோ குறையவில்லை. மாறாக அது அதிகரித்துள்ளது. அதாவது சராசரி அளவு அதிகரித்தே வந்துள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளில் இந்த சராசரி அளவை பெற முடிவதில்லை. ஏன் 1500 களின் இருந்த சராசரியைக் கூட பெறமுடிவதில்லை. மக்கள் தொகை பெருக்கம் தான் வறுமைக்கு காரணம் என்பது, அப்பட்டமான மக்களை ஏமாற்றும் அரசியல் பொய்யாகும். செல்வம் பகிரப்படும் விதம் தான், வறுமைக்கு காரணம். சராசரி அளவை மனிதர்கள் பெறுவதில்லை. இது உலக வறுமையை எடுப்பாகவும் சிறப்பாகவும் விளக்குகின்றது. நாடுகளுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பது, ஏற்றுமதி என்ற பெயரில் உற்பத்தியான செல்வம் நாட்டைவிட்டு கடத்தப்படுவதே அடிப்படையான காரணமாகும். முன்பு செல்வம் ஏற்றுமதி செய்யப்படாத ஒரு நிலையில், செல்வம் உள்நாட்டில் உழைக்கும் மக்களிடையே பகிரப்பட்டது. இதனால் வறுமையின் அளவு குறைவாக இருந்தது. இன்று அப்படியல்ல. அவை நாட்டைவிட்டே கடத்தப்படுகின்றன. ஏற்றுமதி என்ற பெயரில் நாட்டைவிட்டு செல்வம் பறந்தோடுகின்றது. இது நாடுகளுக்கு இடையில் பாரிய ஏற்றத்தாழ்வான சமூக இடைவெளியை உருவாக்கியுள்ளது. இவற்றை மிகவிரிவாகவும், மிக நுட்பமாகவும் ஆராய்வோம். கடந்த 200 ஆண்டுகளில் செல்வம் பிரதேச ரீதியாக எப்படிப் பகிரப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
புதிய நாடுகள் - அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா ....
உலகத்தின் செல்வத்தின் இருப்பு பற்றியதும், பகிர்தல் பற்றிய ஒரு விளக்க அட்டவணையே இது. 1820 இல் உலக சராசரி வருமானம் 651 டொலரை விட சற்றுக் கூடுதலாக அல்லது சற்றுக் குறைவான விகிதத்திலேயே, உலகின் பல பிரதேசங்களின் சராசரி வருமானம் காணப்பட்டது. அந்தளவுக்கு உழைப்புக்கும் பகிர்வுக்குமிடையில் நாடுகளிடையேயான இடைவெளி மிகக் குறைவாக இருந்தது. இக்காலம் அடிமைகளைக் கடத்தி ஏற்றுமதி செய்வதைக் கைவிட்டு, காலனிகள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டமாகும். உழைப்பின் பலாபலன்கள் நாடுகளினுள் பகிரப்பட்ட காலம். இதற்கு மாறாக உழைப்பு ஏற்றுமதியாகிய காலகட்டத்தில், அதாவது 1992 இல் நாடுகளின் உழைப்பிலான பகிர்வு பாரிய ஏற்றத் தாழ்வைச் சந்தித்தது. உலக சராசரியான 5145 டொலர் அளவைவிட, பெரும்பாலான நாடுகளின் வருமானம் சில மடங்காக குறைந்தும், சில நாடுகளின் வருமானம் சராசரி அளவைவிட சில மடங்கு அதிகரித்தும் காணப்படுகின்றது. காலனிகளை வைத்திருந்த, மற்றும் நவ அரைக் காலனிகளை வைத்திருக்கின்ற நாடுகளின் வருமானம், காலனி நாடுகளின் வருமானத்தை விட பல மடங்காகியது. உண்மையில் ஏற்றத்தாழ்வு என்பது நாடுகளுக்கு இடையில் பல மடங்காகிவிட்டது. பிரதேச ரீதியாக ஏழைநாடுகளின் செல்வ உற்பத்தி பல பத்து மடங்காகிய போதும், தனிநபர் வருமானம் ஒரு சில மடங்காகத் தான் அதிகரித்தது. இதில் சில நாடுகளின் வருமானம் 1820 இருந்ததை விடவும் கீழ் நிலைக்கு சென்றுள்ளது.
பிரதேச ரீதியாக ஆபிரிக்காவின் மக்கள் தொகை 1820 க்கும் 1992 க்கும் இடையில் ஒன்பது மடங்காக அதிகரித்தது. அதேநேரம் தேசியவருமானம் அண்ணளவாக 26 மடங்காக அதிகரித்த போது, தனிநபர் சராசரி வருமானம் 2.85 மடங்காக மட்டும் அதிகரித்தது. அமெரிக்கா உள்ளிட்ட புதிய நாடுகளின் மக்கள் தொகை 1820 க்கும் 1992 க்கும் இடையில் 27.7 மடங்காக அதிகரித்தது. அதே நேரம் தேசிய வருமானம் 455 மடங்காக அதிகரித்த போது, தனிநபர் சராசரி வருமானம் 17 மடங்காக அதிகரித்தது. உழைப்பு உற்பத்தி செய்யும் செல்வம், நாட்டை விட்டு கடத்தப்பட்டு வருவதைக் காட்டுகின்றது. ஏற்றத் தாழ்வின் வளர்ச்சி என்பது உழைப்பு பகிரப்படாமையால், அது புடுங்கப்படுவதால் ஏற்படுகின்றது. செல்வத்தின் வீதம் அதிகரிக்க, சனத்தொகை வீதம் குறைந்த போது, செல்வத்தை உற்பத்தி செய்யும் ஏழைநாடுகளின் சராசரி வருமானம் குறைகின்றது. உண்மையில் உழைப்பு உற்பத்தி செய்யும் செல்வம் நாட்டைவிட்டு கடத்தப்படுகின்றது 1820 களில் உலகளவில் தனிநபர் வருமானதத்தில் பிரதேச ரீதியாக அதிக வேறுபாடு இருக்கவில்லை. உயர்ந்த பட்சம் இரண்டு மடங்கு தான் வேறுபாடு காணப்பட்டது.
பிரதேச ரீதியான இந்தத் தரவுகள், நாடுகளுக்கு இடையில் பகிரப்படும் விதம் மேலும் அதிக ஏற்றத் தாழ்வைக் கொண்டது. இதை மற்றொரு அட்டவணையில் நாம் விரிவாக பார்க்கவுள்ளோம். இது நாட்டின் உள் பிரதேசங்களில் ஏற்றத்தாழ்வையும், தனிநபருக்கு இடையில் பகிரப்படும் விதம் மேலும் மிக மோசமான அதீதமான இடைவெளியைக் கொண்டது. இதை நுட்பமாகவே நுணுகி ஆராய்வோம். 1820க்கும் 1992க்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 175 வருடங்களில் நடந்த மாற்றம் தான் என்ன?
சனத்தொகை அதிகரிப்பு முதல் தேசிய வருமானம், உள்நாட்டு வருமான அதிகரிப்பு என பிரதேச ரீதியாக இவ் அட்டவணை காட்டுகின்றது. சனத் தொகை அதிகரிப்பு எந்தவிதத்திலும் நாடுகளின் தேசிய வருவாயை பாதிக்கவில்லை. மாறாக பல மடங்காக்கியுள்ளது. தனிநபர் வருமானம் தான், தேசிய வருமானத்துடன் ஓப்பிடும் போது மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. உலக சராசரியில் உள்ள சீரான போக்கு, பிரதேச ரீதியாக பாரிய வேறுபாட்டை கொண்டு காணப்படுகின்றது. சில பிரதேசங்கள் அதிகரித்த தனிநபர் வருமானம், அதிகரித்த தேசிய வருமானம் என்பது வெளிப்படையாகவே அம்பலமாகின்றது. இது அதிகரித்த அதியுயர் நுகர்வைக் காட்டுகின்றது. சில பிரதேசங்கள் சபிக்கப்பட்ட ப+மியாக, குறைந்த நுகர்வை எடுத்துக் காட்டுகின்றது. இந்த நிலைமைக்கான காரணத்தை மூடிமறைத்து, இது இயல்பான ஒன்றாகவும், இதுவே ஆதியில் இருந்து நிலவியதாக கூறும் காரணங்கள் தான் பொதுவான சமூக அறிவாகவுள்ளது. உண்மை எதிர்மையானது. தேசங்களுக்கு இடையில் இருந்த சமச்சீர், மனித உழைப்பினால் பகிரப்பட்ட போது, பிரதேச ரீதியான இடைவெளி என்பது அறவே கிடையாது. இது கடந்த 200 ஆண்டுக்கு முன் கூட இருந்துள்ளது. ஆனால் இது இன்று அறவே மேற்குநாடுகளின் சூறையாடலால் மாற்றப்பட்டுவிட்டது. உண்மையில் இந்த மாற்றம், மற்றும் நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை சில நாடுகளைக் கொண்டு மேலும் குறிப்பாகவும் துல்லியமாகவும் பார்ப்போம். தனிமனித சராசரி வருமானம் டொலரில்.
(தனிநபர் வருமானம் 1900 டொலர் பெறுமதியில் ஒப்பீடு. 1994 அன்றைய டொலர் பெறுமதிப்படி, 2003 அன்றைய டொலர் பெறுமதி)
இது எமக்கு மேற்கின் சூறையாடலையும், மூன்றாம் உலக நாடுகளின் இழப்பையும் எடுத்துக் காட்டுகின்றது. தனிநபர் வருமானங்கள் மூன்றாம் உலகில் குறைந்து வருவதைக் காட்டுகின்றது. பெரும்பாலான பல நாடுகளில் நாட்டின் சராசரி தனிநபர் வருமானமே ஒரு டொலராகவுள்ளது. இந்த நிலையில் நாட்டினுள் காணப்படும் மேடுபள்ளமான இடைவெளி, ஏழைகளுக்கு எதுவுமற்றதாக்கின்றது. இந்தியா, பங்களாதேசம் கடந்த 200 வருடங்களில் எப்படி சூறையாடப்பட்டு வந்தது என்பதைக் காட்டுகின்றது. 200 வருடங்களுக்கு முந்திய தலா வருமானத்தையே, இன்றைய நிலையிலும் அந்த சமூகம் பெறுகின்றது என்பதே உண்மை. அதேநேரம் டொலரின் பெறுமான வீழச்சியுடனும் வாழ்க்கை செலவுடனும் இதை இணைத்து பார்க்கும் போது, அந்த மக்களுக்கு வாழ்க்கை என்பதே இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. 1950 க்கு பிந்திய தரவுகள் சையிர், எத்தியோப்பியா, தன்சானியா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானம் குறைந்தே வருகின்றது. இது உலகின் பல நாடுகளுக்கு பொருந்தும். இதனுடன் மேற்கை ஒப்பிடும் போது, மலைக்கும் மடுவுக்குமான வகையில் ஏற்றத் தாழ்வு கொண்டதாக மாறியுள்ளது. மேற்கு மூன்றாம் உலகை கொள்ளையிட்டதன் விளைவே இது. உண்மையில் உலகளாவிய ஜனநாயகம், சுதந்திரத்தின் உண்மையான சமூக விளைவே இது. மனிதனை மனிதன், நாடுகளை நாடுகள் சூறையாடுவது தான் இன்றைய சுதந்திரம் ஜனநாயகமாகும். இதற்கு வேறு அரசியல் விளக்கமே கிடையாது. மேற்கின் சூறையாடும் சுதந்திரம், ஜனநாயகம் மற்றய நாடுகளை கொள்ளையிட முன்பு, பகிரப்பட்ட செல்வம் உருவாக்கிய நுகர்வின் அளவை, இன்று ஏழை நாட்டு மக்கள் அனுபவிக்க முடியாத நிலைமையைத் தான் இந்த தரவுகள் ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு நாளும் இழப்பு துல்லியமாக ஏற்படுகின்றது. ஒருபுறம் தனிநபர் செல்வம் அதிகரிக்க, மறுபுறும் தனிநபர் செல்வம் குறைந்து வருகின்றது. இது உள்நாட்டில் பங்கிடப்படும் விகிதமே, மேலும் மேடு பள்ளமானது.
கடந்த 200 வருடங்களுக்கு முன் உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்த ஒரு சமூகம், பாரிய இடைவெளி உருவாக்கும் ஏற்றத்தாழ்வு உலகம் தழுவியதாக மாறும் என்று யாரும் அன்று கற்பனையில் கூட கண்டிருக்க முடியாது. அந்தவகையில் இன்று அது மாறிவிட்டது. அன்று உழைப்பு மட்டும் தான் அன்று உலகத்தின் நுகர்வு மீது தீர்மானகரமான சக்தியாக இருந்தது. இன்று உழைப்பு மீதான கொள்ளையே நுகர்வு மீதான தீர்மானகரமான சக்தியாக மாறிவிட்டது. இதையே கீழ் உள்ள அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது.
1990 டொலர் பெறுமதியில்
உள்நாட்டு உற்பத்தியில் இருந்த சீரான தன்மை, இன்று அழிக்கப்பட்டு வருகின்றது. உற்பத்தி அளவு சனத் தொகையின் விகிதத்தை நெருங்க முடியாத நிலையை அடைந்ததுள்ளது. 1820 மக்கள் தொகைக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையில் இருந்த சீரான போக்கு இன்று அழிக்கப்பட்டுவிட்டது. மாறாக சில நாடுகளை நோக்கி உற்பத்திகள் நகர்ந்துள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்திகள் கூட, இன்று, அவர்களுக்கு சொந்தமானவையல்ல. அவை தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியாகின்றது. தேசிய உற்பத்திகள் கூட இன்று மக்கள் நுகர முடியாது, குறித்த சில நாடுகளை நோக்கி ஏற்றுமதியாகின்றது. இன்று உலகில் ஒரு பகுதி மக்கள் கூட்டம் மட்டுமே நுகருகின்றனர். இன்று 20 சதவீதமான மக்கள் கூட்டம், அண்ணளவாக 80 சதவிகிதமான உற்பத்தியை நுகருகின்றனர். இந்த நுகர்வின் அளவை மேலும் அதிகரிக்கவும், நுகர்வோரின் அளவை குறைக்கவுமே உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கை முனைப்புக் கொள்கின்றது.
உள்நாட்டு உற்பத்தி 1820 இதில் இருந்தைவிட 1992 இல் 40 மடங்கு தான் அதிகரித்தது. ஆனால் ஏற்றுமதியின் அளவு கடந்த 175 வருடத்தில் 540 மடங்கால் அதிகரித்தது. உள்நாட்டு உற்பத்திகள் நாட்டை விட்டே ஒடுகின்றது. அதாவது 1820 இல் 700 கோடி டொலராக இருந்த ஏற்றுமதி 1992 இல் 378600 கோடி டொலராகியது. 1992 இல் உள்நாட்டு உற்பத்தில் ஏழில் ஒருபகுதி ஏற்றுமதியானது. ஆனால் 1920 இல் 100 க்கு ஒரு பகுதி மட்டும் தான் ஏற்றுமதியானது. இது உலகளவிலான முழுமையான புள்ளிவிபரத்தை அடிப்படையாக கொண்டது. உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் இது மேலும் மோசமான வகையில் ஏற்றுமதியாகின்றது. பொருளாதாரக் கொள்கை என்பதே, ஏற்றுமதி பொருளாதாரமாகி விட்டது. சொந்த நாட்டு மக்களின் நுகர்வு என்ற அடிப்படையில், உள்நாட்டு உற்பத்தி திட்டமிடப்படுவதில்லை. நுகர்வைப் பொறுத்தவரையில் ஏழைநாட்டு மக்களுக்கு அது மறுக்கப்படுவதுடன், அந்த மக்கள் தமது சொந்த தேசிய உற்பத்தியைக் கூட செய்யமுடியாத வகையில் அவை அழிக்கப்படுகின்றது. செய்யும் உற்பத்திகள் கூட ஏற்றுமதியாகின்றது. உண்மையில் வாங்கிய கடனுக்கான வட்டிக்காக, இவை எல்லாம் கூட்டியள்ளி எடுத்துச் செல்லப்படுகின்றது.
உழைப்பவனுக்கு அவனின் உழைப்பு சார்ந்த நுகர்வு மறுக்கப்பட்டு உருவாகும் வறுமை என்னும் பொருளாதாரம், உழையாதவனின் நுகர்வை அடிப்படையாக கொண்ட ஏற்றுமதி பொருளாதாரமாகும். உலகில் பெரும்பான்மை மக்களுக்கு நுகர்வு மறுக்கப்படுகின்ற நிலையில், சிறுபான்மையினரோ அதீதமாகவும் வக்கிரமாகவும் இழிவாகவும் நுகருகின்றனர். இதுவே இன்றைய உலகமயமாதல் பொருளாதாரமாகும். நுகர்வின் இழப்பு வறுமையின் தோற்றுவாயாக உள்ளது. ஏழ்மை செல்வத்தின் செழிப்பான வளத்தை வழங்குகின்றது. ஏழ்மையும் இல்லாமையும் உலகெங்கும் பெருக, செல்வம் அதீதமான வளத்தைப் பெறுகின்றது. இது எதிர்மறை அம்சமாகவே வளாச்சியுறுகின்றது.
இதுவே இன்றைய உலக பொருளாதாரக் கொள்கையாகும். சுதந்திரம், ஜனநாயகத்தின் அடிப்படையான குறிக்கோளுடன் கூடிய ஒரு கொள்கையாகின்றது. இதன் விளைவாகவே உருவாகும் வெள்ளையன் அல்லாத கறுப்பன் பற்றியும், மூன்றாம் உலக உழைப்பாளி பற்றி இழிவான மலிவான வாதங்கள் அனைத்தும் பொய்யானவை புரட்டுத்தனமானவை. எல்லாம் தமது சொந்த வளத்தை தக்கவைக்கவும், மற்றவனின் நுகர்வை மறுக்கவும் புனையப்படுபவைதான். வசதியானவன் அடிநிலையில் உள்ளவனை இழிவுபடுத்திக் காட்டும், ஆதிக்கம் பெற்ற சமூக கருத்தியலாகும்.
உலகமே பணக்கார நாடுகள் ஏழைநாடுகள் என்ற பிளவும், நாட்டின் உள்ளான ஏழை பணக்காரப் பிளவுகளும், இன்று எதார்த்தமான புதிரான ஒன்றாகவும், ஆதிகம் பெற்ற சமூக கருத்தியலாகவும் காட்டப்படுகின்றது. இது இயற்கையானதாகவும், இயல்பானதாகவும் கூட புனையப்படுகின்றது. ஆனால் மனித வரலாறும், இயற்கையும் அப்படி இருந்ததல்ல. மாறாக காலனிகளுக்கு முன்னம் அடிமைகளைக் கொண்ட கூலியற்ற உற்பத்தி, சிலரின், சில பிரிவு மக்களின் பெரும் செல்வக் குவியலாகவே மாறியது.
சில உதாரணங்களைப் பார்ப்போம் ~~1790 இல் இங்கீலீஷ் மேற்கிந்தியத் தீவுகளில் ஒரு சுதந்திரமான மனிதனுக்கு 10 அடிமைகள் வீதமும், பிரான்சில் 14 அடிமைகள் வீதமும், நெதர்லாந்தில் 23 அடிமைகள் வீதம் இருந்தனர். இது அன்று பிரிட்டன் முதல் அமெரிக்கா வரையிலான பொது நிலைமையாகும். அடிமைகள் இன்றி சுதந்திரமான மனிதர்கள், சுதந்திரமாக இருக்கவில்லை. அடிமைகளை வைத்திருந்திருந்ததால் சுதந்திரமானவராக இருந்தனர். அதாவது அவர்கள் தங்களைத் தாங்கள் சுதந்திரமானவர்களாக அழைத்தனர். தெதர்லாந்தில் 23 இல் ஒருவன் தான் சுதந்திரமானவன். 23 பேர் சுதந்திரமானவனின் அடிமைகள். சுதந்திரம் என்பது சுதந்திரமற்றவனின் மேல் நிறுவப்படும் செங்கோல் தான். சுதந்திரமற்றவன் சுதந்திரமானவனுக்கு தனது உழைப்பை வழங்குவதன் மூலம், சுதந்திரம் நுகரப்படுகின்றது.
இந்த சுதந்திரமற்ற அடிமைகள் சுதந்திரமானவர்களுக்கு என்ன செய்தார்கள். சுதந்திரமானவர்களுக்கு தமது உழைப்பை இலவசமாக வழங்கினார்கள். நெதர்லாந்தில் உள்ள ஒரு மனிதனுக்கு, 23 மடங்கு பெருக்கமுள்ள உழைப்பை இலவசமாக வழங்கினார்கள். சுதந்திரமான நெதர்லாந்து தன்னைப் போன்ற மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தை விட, 23 மடங்கு உழைப்பால் கொழுத்தது. இதுவே உலகெங்கும் நடந்தது. அடிமை வியாபாரம் இதனால் அன்று கொழுத்தோங்கியது. யாரெல்லாம் அடிமைகளை வைத்திருந்தனரோ, அவர்களின் சொத்தே பன்மடங்காக பெருகியது. இப்படி உழைப்பு சிலரால் அதிகளவில் சுரண்டப்பட்டது. அடிமைகளுக்கு ஒரு நேரக் கஞ்சி மூலம், அவர்களின் உழைப்பே புளியப்பட்டது. உழைப்பு தான் செல்வம் என்பதால், உழைப்பு புளியப்பட்டு செல்வம் குவியும் போது செல்வம் பலமடங்காகின்றது. இந்த செல்வம் அதாவது பணம் சும்மா உட்கார்ந்து பெட்டியில் இருப்புக் கொள்வதில்லை. தன்னை மேலும் பலமடங்காக பெருக்க அங்குமிங்குமாக அலைபாய்கின்றது. பணம் பெருக, புதிய உழைப்பு சுரண்டப்படுவது அவசியமாகின்றது. இதனால் புதிய அடிமைகளை கோருவது இதன் விதியாகின்றது. அதிக அடிமைகள், அதிக செல்வம் என்ற விதி எழுதப்படாத சட்டமாகின்றது. இதுவே அரச சட்டங்களாகி, அதுவே அந்த நாட்டின் ஜனநாயகமாகி எங்கும் எல்லா இடத்திலும் பொதுவிதியாகின்றது.
இப்படி நாட்டின் ஜனநாயக சட்டங்கள் பெரும்பகுதி மக்களுக்கு எதிராக இயற்றப்படுகின்றது. செல்வத்தை பெருக்க அடிமைகளைப் பெருக்குவது அவசியமாகின்றது. அடிமைகளின் உழைப்பை புடுங்க, அடிமைகளுக்கு எதிராக சட்டங்கள் மேலும் மோசமான ஒழுக்ககேடாகின்றது. அடிமைகளை பெருக்கும் சர்வதேச ஒப்பந்தங்கள், இராஜதந்திரிகளை உற்பத்தி செய்கின்றது. மிகப்பெரிய இராஜதந்திரமாக 1700 களில் கூறப்பட்ட ஒரு ஒப்பந்தம், அதாவது 'அஸியெந்தோ" உடன்படிக்கையாகும். இதன் படி ~~இங்கிலாந்து, ஆண்டு ஒன்றுக்கு 4800 நீக்ரோக்கள் வீதம் 1743 வரை, ஸ்பானிஷ் அமெரிக்காவுக்கு அனுப்பும் உரியையைப் பெற்றது அதாவது நீக்ரோக்களை (கறுப்பர்களை) பிடித்து அடிமையாக அனுப்பும் கோட்டாவை பெற்றுக் கொண்டனர். இன்றைய வர்த்தக கோட்பாடு போன்றதே, இந்த நாகரீக ஒப்பந்தங்கள். அடிமைகள் அமெரிக்க சந்தையில் அன்றைய டொலரில் 500 முதல் 1000 டொலர் என்ற பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டனர். அடிமைகளின் உழைப்பு அதை பலமடங்காக்கியது. இதன் செழிப்பு அடிமை வியாபாரத்தையே சர்வதேச வர்த்தகமாக்கியது. அன்று அடிமைகள் ஏற்றுமதியில் ஈடுபட்ட கப்பல் நிறுவனமான ~~லிவர்பூல் 1730 இல் 15 கப்பல்களையும், 1751 இல் 53 கப்பலையும், 1760 இல் 74 கப்பலையும், 1770 இல் 96 கப்பலையும், 1792 இல் 132 கப்பலையும் பயன்படுத்தியது. அன்று அடிமை வியாபாரம் கொழுத்த இலாபம் தரும் சர்வதேச தொழிலாக இருந்த அதேநேரம், அடிமைகளின் உழைப்போ பெரும் செல்வக் குவிப்பை உருவாக்கியது. பல கோடி மக்களின் உழைப்பு இலவசமாக உறிஞ்சப்பட்ட போது, சிலரின் செல்வமோ பெருக்கெடுத்தது. இவர்களே சுதந்திரமானவராக, தேசங்களின் உரிமையுள்ள பிரஜையாக வாழ்ந்தனர். இவர்கள் உருவாக்கிய மனிதவிரோதச் சட்டங்கள், அடிமைகளுக்கு பொருத்தமற்றதாக மாறியது. அடிமைகள் ஆடுமாடு நாய் போன்ற வளர்ப்பு அடிமைகள் தான். அவர்களின் உழைப்பு மட்டுமல்ல, பெண்கள் பாலியல் ரீதியாகவே ஆண்களால் விரும்பிய மாதிரி நுகரப்பட்டனர். தாய்மை குதறப்பட்டு குழந்தைகள் நுகர்வுச் சந்தையில் விற்கப்பட்டனர். ஆண் பெண் திருமண உறவுகள் நிரந்தரமானதாக இருக்கவும், அவர்களின் விருப்பார்ந்த தேர்வு என எதுவும் அனுமதிக்கப்படவேயில்லை. அடிமை வைத்திருந்த வெள்ளையின ஆணாதிக்க ஆணுக்கு இணங்கி, குழந்தையைப் பெறவேண்டியது கறுப்பின அடிமைகளின் தலைவிதியாக இருந்தது. இப்படி இந்தக் கொடூமைகளோ சொல்லிமாளாது. உதாரணமாக அடிமையை வைத்திருந்த ஒவ்வொரு வெள்ளையின பெண்ணும், தனது கணவர் கறுப்பு அடிமையுடன் கொண்டிருந்த பாலியல் உறவை வெறுத்தனர். கணவனை எதுவும் செய்ய முடியாத நிலையில், அவர்கள் மனநோயாளிகளாக கறுப்பின பெண்களை துன்புறுத்துபவராகவும் மாறினர். இப்படி பண்பாடே மாறிச் சிதைந்து இழிந்து வந்தது.
நாட்டின் சட்டங்கள், ஒப்பந்தங்கள், ஒழுக்கங்கள், பண்பாடுகள் அனைத்துமே அடிமை வியாபாரத்தை ஓட்டியதாக அதற்கு உட்பட்டதாக மாறியது. மதம் இதற்கு இசைவானதாக தனது ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தி, பைபிளையே எடுத்துக்காட்டாக எடுத்துக் காட்டியே விபச்சாரம் செய்தது. அன்று இது போன்ற இலாபம் தரும் சர்வதேச ஓப்பந்தங்களை செய்வதே, மிகப் பெரிய புகழுக்குரிய இராஜதந்திரமாகவும், ஏன் சமகால அரசியலாகவும் மாறியது. இந்த அடிமை வியாபாரம், அடிமைகளையிட்டு எதையும் சிந்திப்பது கிடையாது. வெள்iயினப் பன்றிகள் அடிமைகளை சொந்த நாட்டுக்கு கடத்திசென்று எலும்பைப் போட்டபடி, அடிமைகளுக்கு சொல்லொண்ணாக் கொடுமைகள் இழைத்தனர். இதனால் ஏற்பட்ட சொந்த சமூக சிதைவினால், அடிமைமுறைக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளாலும், அடிமை வியாபாரத்தையும் அடிமை முறையையும் கைவிட வேண்டியளவுக்கு உள்நாட்டில் நிலைமைகள் உருவானது.
இதில் இருந்து மூலதனம் தப்பிப்பிழைக்க மனிதர்களை கடத்தாது, நாடுகளையே அடிமையாக்கினர். காலனித்துவத்தின் ஒரு பக்கக் கதை இப்படித்தான் உருவானது. இது அந்த மக்களை சுரண்டவும், அந்த நாட்டின் வளத்தை அபகரிக்கவே வழிவகுத்தது. கப்பல் அடிமைகளை ஏற்றுவதற்கு பதில், அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் உருவான செல்வங்களை எற்றிச் செல்வதாக மாறியது. உழைப்பைப் பெறும் முறைகள் மாறிய போதும், உழைப்பு சுரண்டப்படுவதும், சூறையாடப்படுவதும் நின்றுவிடவில்லை. அது புதிய வடிவில் தொடர்ந்தது. இதையே நவீனத்துவம் என்கின்றனர். அன்று அடிமைகளைப் பற்றி, அந்த மனிதர்களைப் பற்றி எந்தச்சட்டமும், ஏன் உலக மனிதாபிமான கண்ணோட்டமும் கூட அசைந்து கொடுக்கவில்லை. அதுவே இன்று வரையிலான உலக ஒழுங்காக உள்ளது. அன்று அடிமையைக் கொண்டு அவன் உழைப்பை இலவசமாக பறித்தவர்கள், இன்று அதையே நாகரீக அடிமைகளாக்கி நாகரீகமாகவே பறிக்கின்றனர். இங்கு உண்மையில் மனித உழைப்பை சுரண்டுவதே, அன்று முதல் இன்று வரை அதன் பொதுவான சாரமாகவும் ஒழுக்கமாகவும் உள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வடிவம் மட்டும் மாறின. அனைத்து சட்டதிட்டங்களும், சமூக ஓழுக்கங்களும், ஜனநாயகமும், சுதந்திரமும் கூட மனித உழைப்பை சுரண்டுவதற்கு உட்பட்டதாகவே உள்ளது. அன்று தனிமனிதன் தனக்காக உழைத்து வாழ்ந்து விடமுடியும் என்ற அளவில், உழைப்பின் அடிப்படைகளை உழைப்பின் வளத்தையும் தனிமனிதன் கொண்டிருந்தான். இன்று அப்படியல்ல. இன்று இயல்பில் உழைப்பை சொந்தமாக கொண்டு வாழமுடியாத வகையில், இயற்கை வளங்கள் அனைத்தும் தனிமனித சொத்தாகிவிட்டது. தனிமனிதன் உழைப்பை பயன்படுத்தி வாழ, இயற்கை அவனுக்கு முன்னால் சுதந்திரமாக கிடையாது. இப்படி அடிமைமுறை வடிவத்தால் மாறிய போதும், உள்ளடகத்தால் உழைப்பை பிறர் அபகரிக்கின்றனர்.
அடிமைகளை வைத்து சொந்த நாட்டில் சுரண்டுவது அந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட போது, மூலதனம் அமைதியாக குந்தியிருக்கவில்லை. அதிகம் சுரண்டக் கூடிய இடங்களை நோக்கி மூலதனம் ஒடிச் சென்றது. மூலதனத்துடன் கொள்ளையடிப்போரும் கூடிச் சென்றனர். 1870க்கும் 1913க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த 1.75 கோடி பேர் இலங்கை, பர்மா, இநதோனேசீயா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனாவுக்கு சென்றனர். அவர்கள் செய்ததெல்லாம் அந்த மக்களை கொள்ளை அடித்து, அதை தமது சொந்த நாட்டுக்கு கடத்தி வந்ததுதான். இப்படி செல்வம் அபகரித்த வழிகள், பல சுற்று வழிகளைக் கொண்டவை.
காலனிகள் எங்கும் சுதேசிகளின் மரணத்தில் மூலதனம் தனது சுதந்திரத்தையும், தனது ஜனநாயகத்தையும் பாதுகாத்தது. அடிமைகளை வைத்திருந்தவர்களையே தேசத்தின் சுதந்திர மனிதர்களாக அழைக்கப்பட்டது போல், காலனிகளிலும் காலனித்துவவாதிகளே சுதந்திர மனிதர்களாக மாறினர். இவர்கள் செய்ததெல்லாம் சூறையாடல் தான். சுதேசிய மக்களை பட்டினி போட்டு ஈவிரக்கமின்றி கொள்ளையடித்தது தான். உதாரணமாக 1959-1770 இந்தியாவில் உற்பத்தியான அரிசி முழுவதையும் கொள்முதல் செய்து செயற்கையாகவே பட்டினியை உருவாக்கினார்கள். ~~1866 ஒரிஸ்ஸா மாநிலத்தில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் பட்டினியால் இறந்தனர் இப்படி காலனிய மக்களின் மரணங்களில் தான், ஏகாதிபத்தியம் கொழுத்தது. அவை செல்வம் உள்ள நாடுகளாக மாறின. இதன் விளைவு என்ன? சராசரியான உலகளாவிய வருமானத்தில் பெரிய வேறுபாடுகள் இன்றி, சீராகவே உலகம் தழுவிய அளவில் செல்வத்தின் பகிர்தல் சமச்சீராக இருந்த போக்கு மாறியது. காலனிகளின் உருவாக்கம் அந்த நாட்டு மக்களின் வாழ்வை அழித்தது. ஏற்றத் தாழ்வு உள்நாட்டிலும், நாட்டுக்கு நாடும் பல மடங்காகியது. தமது சொந்த சுரண்டலுக்கு தடையான மக்களினங்களையே ப+ண்டோடு அழித்தனர். இதையும் கூட காலனித்துவம் காட்டுமிராண்டித்தனமாகவே செய்தது.
காhல் மார்க்ஸ் அதை ஆதாhரத்துடன் எடுத்துக் காட்டுகின்றார். ~~புரட்டெஸ்டென்ட் மதத்தின், கண்ணியமிக்க காவலர்களான நியூ இங்கிலாந்தின் புனிதர்கள், 1703 ல் தங்கள் சபையில் நிறைவேற்றிய சட்டங்களின்படி ஒரு சிவப்பு இந்தியனின் மண்டைத் தோலுக்கு, அல்லது சிறைபிடிக்கப்பட்ட சிவப்பு இந்தியனுக்கு 40 பவுண் விலை நிர்ணயித்தனர். 1720 இல் ஒவ்வொரு மண்டைத் தோலின் விலையும் 100 பவுணாக உயர்ந்தது. 1744 ல் மாசாசூசெட்ஸ்-பே, ஒரு குறிப்பிட்ட சிவப்பு இந்திய இனத்தை கலகக்காரர்கள் என்று பிரகடனம் செய்த பின்பு விலைவாசி பின்வருமாறு இருந்தது. 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆணின் மண்டைத் தோல் 100 பவுன் (புதிய பவுன்). ஆண்கைதி 105 பவுண். பெண் மற்றும் குழந்தைக் கைதிகள் 55 பவுண். வேட்டைநாய்களையும், மண்டைத்தோல் உரித்தலையும் ~கடவுளாலும், இயற்கையாலும் தனக்கு அளிக்கப்பட்ட சாதனங்கள் என்று பிரிட்டிஷ் பார்லிமென்ட் பிரகடனம் செய்தது இப்படி இந்திய இனங்கள் பூண்டோடு வேட்டையாடப்பட்டது. அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரையில் இப்படி அழிக்கப்பட்ட மக்கள் இனங்கள் பற்பல.
தமது சுரண்டலுக்கு சுதேசிகள் இணங்க மறுத்த போது, அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து அடிமைப்படுத்த முனைந்தனர். அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவர்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடியே கொன்றனர். அந்த மண்ணின் வளத்தை சுரண்ட, அடிமைகளையும், அரை அடிமைகளையும் மற்றைய நாடுகளில் இருந்து கொண்டு வந்ததன் மூலம் செல்வத்தை திரட்டினர். இப்படி தான் தமது சுரண்டலுக்கு உட்பட மறுத்தவர்களை பழிவாங்கி, அந்த மண்ணில் அன்னியரைக் குடியேற்றினர். அன்று சுதேசிகளை கொல்வது கூட வருமானம் தரும் பிழைப்பாகியது. இதற்காக கொன்று வாழும் வெள்ளையினக் கும்பல்கள், தமது வேட்டைக்காக துப்பாக்கியும் கையுமாக சட்டபூர்வமாக திரிந்தனர். அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் தப்பியோடிய போது, அவர்களை பிடித்துக் கொடுக்கும் நிறுவனங்கள் நிலையான வருமானம் தரும் தனியார் தொழில் நிறுவனமாக இருந்தது. இதுபோல் அடிமைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கூட இயங்கின.
மிருகவேட்டை போன்று மனித வேட்டைகள் நடத்தப்பட்டன. உழைத்து வாழவிரும்பாத பலருக்கு, மனித வேட்டை மூலம் வாழ பல வழிகள் இருந்தன. மனித உழைப்பின் மீதான சுரண்டல், இதற்கு கூலி வழங்கியது. மனிதனை கொன்று வாழும் வாழ்வுக்கு ஆசைப்பட்டவர்களின் அதிகாரமாகவும், ஆட்சியாகவும் பல காலனிகள் மாறின. ப+ண்டோடு சில இனங்களை அழித்தே, செல்வம் கொண்ட மேற்கு நாகரீகங்கள் வித்திடப்பட்டன. இன்று வருடம் 10 கோடி மக்கள் இந்த நாகரீக அமைப்பால், தனது செல்வ இருப்பை தக்க வைக்கவும், பணத்தைப் பெருக்கவும் கொல்லப்படுகின்றனர். அன்றைய நிலையையும் அந்தக் கொடுமையையும் காhல் மார்க்ஸ் ஒரு உதாரணத்தின் மூலம் அம்பலப்படுத்துகின்றார். ~~ஜாவாவின் பாஞ்ஜீவாங்கி மாநிலத்தில் 1750 ல் 80000 மக்கள் இருந்தனர். 1811 ல் 8000 மக்களே இருந்தனர். எவ்வளவு இனிய வாணிபம்? என்றார். மனித வேட்டை, மனித வர்த்தகம், மனித உழைப்பை சூறையாடுதல் மூலம், ஒரு இனிமையான நாகரீகமான வாழ்வை ஒரு பகுதி மக்களுக்கு வழங்கியது. இது உருவாக்கிய மூலதன திரட்சி தான் இன்றைய (பின்) நவீனத்துவம். இது தான் இன்றைய சுதந்திரம், ஜனநாயகமாகும்.
இது ஒருபுறம், மறுபுறம் நேர்மையாக உழைத்து வாழ்ந்த சொந்த மக்களையே சூறையாடுவதாக இருந்தது. உதாரணமாக பிரிட்டனில் ~~குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட வேலையின் விகிதத்தில் அவர்களுக்குத் கூலி அளக்கப்பட்டது. கொடூரமே இதன் விளைவாக இருந்தது. அப்பாவியான குழந்தைகளுக்கு உள்ளத்தை உருக்கும் கொடூரங்கள் பல இழைக்கப்பட்டது. அவர்கள் மிகையான உழைப்பால் மரணத்தின் எல்லையையே எட்டிவிட்டனர். அவர்கள் சவுக்கால் அடிக்கப்பட்டனர், விலங்கிடப்பட்டனர், கொடூரத்தின் பல நேர்த்தியான முறைகளில் சித்திரவதை செய்யபட்டனர். பட்டினி போடப்பட்டு எலும்புக் கூடுகளாகக் காட்சி அளித்தார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு துன்புறத்தப்பட்டனர் மார்க்ஸ் மூலதனத்தில் இதை போல் பலவற்றை எடுத்துக் காட்டுகின்றார்.
மூலதனத்துக்கு அடிமையும் ஒன்று, சொந்த மக்களும் ஒன்று தான். குழந்தை உழைப்பு முதல் சொந்த மக்களையே வாட்டிவதக்கியே மூலதனம் கொழுகொழுவெனக் கொழுத்தது. மார்க்ஸ் இதை அழகாகவே அம்பலப்படுத்திய போது ~~இன்று அமெரிக்காவில் தோன்றும் மூலதனத்தின் பெரும்பகுதி நேற்று இங்கிலாந்தில் இருந்தது. அது குழந்தைகளின் இரத்ததிலிருந்து உருவாகிய மூலதனமாகும் என்றார். ஒருபுறம் அடிமைகள், காலனிகள் என்றால் மறுபுறம் சொந்த நாட்டு மக்களையும் குழந்தைகளையும் கூட ஈவிரக்கமின்றி பலியிட்டது.
மனித உழைப்பை சிலர் தமதாக்கி உருவாக்கிய அடிமை உழைப்பின் வடிவங்களின் மூலம் தான், ஆரம்ப மூலதனம் குவியத் தொடங்கின. மனித அடிமைத்தனம், மனித இழிவுகளும் சிலரையே சொத்துகளின் அதிபதியாக்கியது. இந்த சொத்துகளை பெருக்கவும், அதை நாகரீகமான மனித விழுமியங்களாக்கி, கவுரவமாக சூறையாட உருவான வடிவங்கள் தான் இன்றைய ஜனநாயகம் சுதந்திரம் பற்றிய கோட்பாடுகளாகும். சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோட்பாடுகள் அனைத்தும், மனித உழைப்பை சுரண்டுவதையே அடிப்படையாக கொண்டது. சுரண்டுவதுக்கு வெளியில் ஜனநாயகம் சுதந்திரம் என்ற பேச்சை, இன்றைய நவீன அமைப்பு கொண்டிருக்கவில்லை. அன்று அடிமைகள், பின்னால் அரை அடிமைகள் என்று நவீனமாக நாகரீகமாக முன்னேறிய உலகம், இன்று நவீன சுதந்திர அடிமைகளை உருவாக்கியுள்ளது. நுகர்வு வெறியையும், ஆடம்பரத்தையும் சமூக உணர்வாக்கி, நவீன அடிமைத்தனம் வித்திடப்பட்டுள்ளது. மனிதன் மனிதனாகவே வாழமுடியாது. மாறாக பொருட்களின் அடிமையாக, அதற்குள் நுகரும் அடிமை வாழ்க்கை முறையே இன்றைய நவீன உலகம். இதிலும் சிலர் மட்டும் வாழும் உலகமே, உலகமயமாதலால் உருவாக்கப்படுகின்றது. மற்றைய மக்களின் வாழ்வின் இழிவு எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
தொடரும்
முன்னைய தொடர்
1. உலகளாவிய நிதி மூலதனம் சமூகசாரத்தையே உறுஞ்சுகின்றது.
2. கடனும் வட்டியும் இன்றி, உலகமயமாதல் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது
4 comments:
நல்ல முயற்சி ஒன்று ரயாகரன்.
நண்பர்களுக்கு அச்சிட்டு கொடுக்க நல்லதொரு ஆவணம்.
இது மற்றொரு தனி நூலுக்கான ஒரு பகுதி. இது நூலாக வரும்.
இந்த நூல் கூட இரண்டாவத தான்.
முதலாவது நூல் அச்சில் உள்ளது. விரைவில் வெளி வந்துவிடும்.
அதை பார்வையிட
http://www.tamilcircle.be/Bamini/books/07_book_bamini/07_main_bamini.html
சார்,
நான் இன்னும் இந்த பதிவை முழுதாக படித்து முடிக்கவில்லை.
எனினும் இது சிறந்த முயற்சி!!
நல்ல பதிவு!!
மிக்க நன்றி!!
வணக்கம் ரயாகரன்,
நல்ல கருத்து செரிவுள்ள பதிவு.ஆனால் வார்த்தைப்பிரயோகம் கடினமாக உள்ளது.சிறிது எளிமையாக தரலாம்.அனைவரையும் சென்று அடையும்!
Post a Comment