தமிழ் அரங்கம்

Wednesday, May 30, 2007

திருமாவளவன் - ரவிக்குமார் ரிலையன்ஸின் புதிய பாதந்தாங்கிகள்

திருமாவளவன் - ரவிக்குமார் ரிலையன்ஸின் புதிய பாதந்தாங்கிகள்

ண்பனைப் போல அரிதாரம் பூசிக் கொண்டு திரியும் துரோகிகளின் உண்மை முகம் நெருக்கடிகள் முற்றும்பொழுதுதான் அம்பலத்துக்கு வரும். மளிகை மற்றும் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஃபிரெஷ், பிக் பஜார் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கடைச் சிப்பந்திகளும் போராடத் தொடங்கியிருக்கும் நேரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவனும்; அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் ரிலையன்ஸ் என்ற பகற்கொள்ளைக்காரனுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் குதித்துள்ளனர்.


""ரிலையன்ஸ் காய்கறி கடைகளால் சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது; பாதிப்பு வரும் என்பது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம்'' என ரவிக்குமார் சட்டமன்றத்திலேயே பேசி, ரிலையன்ஸுக்கு வக்காலத்து வாங்கினார். சென்னைகோயம்பேட்டில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும், ""இது, ரவிக்குமாரின் சொந்தக் கருத்தா இல்லை, கட்சியின் முடிவா?'' எனக் குழம்பிப் போன நேரத்தில், திருமாவளவன், ""ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வியாபாரம் என்ற கொள்கைக்கு நாங்கள் எதிராகத்தான் உள்ளோம்; ஆனாலும், ரிலையன்ஸின் காய்கறிக் கடையால், சில்லறை வியாபாரிகளுக்குப் பாதிப்பு வராது; ரிலையன்ஸ் பெரிய நகரங்களில் மட்டும் கடைகளைத் திறந்தால் எதிர்க்க மாட்டோம்; தமிழகம் தழுவிய அளவில் திறந்தால் எதிர்ப்போம்'' என ""விளக்கமளித்து'', குழம்பிப் போன தோழர்களை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்துவிட்டார். திருமாவளவனின் இந்த விளக்கம், ஆர்.எஸ்.எஸ். இன் சுதேசி மோசடிக்கு நிகரானது.


""தமிழகத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், 75 நகரங்களில் 380 பேரங்காடிகளையும் (சூப்பர் மார்க்கெட்) 85 மீ அங்காடிகளையும் (ஹைபர் மார்க்கெட்) திறக்கப் போவதாக'' ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த 75 நகரங்களில் சென்னை, மதுரை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற கிராமப்புறம் சார்ந்த சிறு நகரங்களும் அடங்கும். உண்மை இவ்வாறு இருக்கும் பொழுது, ""ரிலையன்ஸை இப்பொழுது எதிர்க்க மாட்டோம்; அந்நிறுவனம் தமிழகம் தழுவிய அளவில் கடை திறந்தால் எதிர்ப்போம்'' என திருமாவளவன் ""உதார்'' விடுவது, கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஆகும்.


ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது பிற்பாடு பாய்வதற்காக, திருமாவளவன் இப்பொழுது ""பதுங்கவில்லை''; மாறாக, ரிலையன்ஸின் காலடிகளில் பம்பி படுத்துவிட்டார் என்பதே உண்மை. ""ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் துறைக்குள் வந்த பிறகுதான் அதில் பெரிய புரட்சியே ஏற்பட்டது; கோயம்பேட்டில் சாதாரண மூட்டைத் தூக்கும் தொழிலாளியான தமிழ்மாறனின் கையிலும் செல்போன் உள்ளது'' என அவர் ரிலையன்ஸ் நிறுவனம் பற்றித் துதி பாடியிருப்பதையே அவரின் சரணாகதிக்கு ஆதாரமாகக் காட்டலாம்.


ரிலையன்ஸ் நிறுவனம் தொலைபேசித் துறையில் ""புரட்சி''யைச் செய்வதற்காக அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். மொட்டையடிக்கப்பட்டது ஊரறிந்த உண்மை. அதேபோன்ற புரட்சியை சில்லறை வணிகத்திலும் நடத்த விரும்புகிறது ரிலையன்ஸ். ஆனால், அவர்கள் மொட்டையடிப்பதற்கு இங்கே அரசுத்துறை நிறுவனம் எதுவும் இல்லை. திருமாவளவன் குறிப்பிடும் கோயம்பேட்டை நம்பி வாழும் தமிழ்மாறன் போன்ற தலித் தொழிலாளர்களையும்; ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகளையும், தள்ளுவண்டி வியாபாரிகளையும் தான் ரிலையன்ஸ் மொட்டையடிக்கப் போகிறது.


இந்த ஏழைத் தமிழர்களுக்காக இப்பொழுது போராட முன் வராத திருமாவளவன்ரவிக்குமார் இணை, ""விலை குறைவாக இருக்கிறது; அதனால்தான் மக்கள் செல்கிறார்கள்'' எனக் கூறி, ரிலையன்ஸ் பிரெஷ்ஷில் காய்கறி வாங்கப் போகும் மேட்டுக்குடி தமிழர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோக்கும், பெப்சியும் ""விலை மலிவு'' என்ற ஆயுதத்தோடுதான் இந்தியச் சந்தைக்குள் இறங்கின. அதன் விளைவு காளிமார்க், வின்சென்ட் போன்ற பெரிய குளிர்பான நிறுவனங்கள் மட்டுமின்றி, குடிசைத் தொழிலாக நடந்துவந்த ஆயிரக்கணக்கான சோடா தயாரிப்பு கம்பெனிகளும் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துவிட்டன. உள்ளூர் போட்டியாளர்கள் ஒழிக்கப்பட்ட பிறகு, கோக்பெப்சியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தக் கழுத்தறுப்பு பாணி போட்டியைத்தான், ரிலையன்ஸ் சில்லறை வியாபாரத்தில் நடத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் 21.07.2006 தேதியிட்ட தினமணி நாளிதழில் ""பிளாஸ்டிக் சாமான்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் ஏகபோகம் வகிப்பதால், மூலப் பொருளின் விலையைத் தன்னிச்சையாக பல மடங்கு உயர்த்தி வருவதாக'' பகிரங்கமாக குற்றஞ் சுமத்தி இருந்தனர். இன்று, ரிலையன்ஸ் பிரெஷ் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளோடு போட்டி போட வேண்டியிருப்பதால்தான், தனது கடைகளில் காய்கறிகளையும், பழங்களையும் ""விலை மலிவாக''க் கொடுக்கிறது. நாளை, ரிலையன்ஸும் மற்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் காய்கறிமளிகை விற்பனையில் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பொழுது, பிளாஸ்டிக் சாமான் உற்பத்தியாளர்களைப் போலவே, நடுத்தர வர்க்க நுகர்வோரும் ரிலையன்ஸுக்கு எதிராகப் புலம்ப வேண்டிய நிலை ஏற்படும்.


""விலை மலிவு'' என்பதன் பின்னே உள்ள, ரிலையன்ஸின் இந்தச் சதியை அம்பலப்படுத்தத் துணியாத ""தலித்'' "அறிஞர்' ரவிக்குமார், ரிலையன்ஸை எதிர்ப்பவர்களை, விவசாயிகளின் எதிரிகளாகவும்; காய்கறி வியாபாரிகளின் ஏஜெண்டாகவும் அவதூறு செய்கிறார். கோயம்பேடு இடைத்தரகர், விவசாயிகளிடமிருந்து வாங்கும் கத்தரிக்காய்க்கும், தக்காளிக்கும் தரும் விலையைவிட, ரிலையன்ஸ் பத்து காசு அதிகம் கொடுத்துவிட்டால், அம்பானி விவசாயிகளின் நண்பன் ஆகி விடுவாரா?


""விதை தருகிறேன்; உரம் தருகிறேன்; காய்கறிகளைப் பயிர் செய்து கொடுத்தால், அதற்கு நல்ல விலையும் தருகின்றேன்'' என்று விவசாயிகளுக்கு வலை விரித்து அவர்களைத் தன்னுடைய குத்தகை விவசாயிகளாக மாற்றும் வேலையைத்தான் ரிலையன்ஸ் தொடங்கியிருக்கிறது. இதற்காகவே, ""ஒப்பந்த விவசாயம்'' (ஞிணிணtணூச்ஞிt ஞூச்ணூட்டிணஞ்), என்ற புதிய பாணி பண்ணையடிமை முறையை விவசாயத்தில் புகுத்தும் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் விரிக்கும் இந்த வலையில் சிக்கிக் கொள்ளும் தமிழகத்து விவசாயிகள் அதிலிருந்து மீள முடியாத கொத்தடிமைகளாக மாட்டிக் கொள்வார்கள். அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகள் போண்டியானதைப் போன்ற நிலையை, தமிழகத்தின் விவசாயிகளும் எதிர் கொள்ள நேரிடும்.


திருமாவளவன்ரவிக்குமார் இணை, சில்லறை வியாபாரத்தில் ரிலையன்ஸ் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் இறங்குவதை மட்டுமல்ல, சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் ஆதரிக்கிறார்கள். ""நிலத்தைச் சார்ந்துள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுமேயானால், அது வேளாண் துறையில் உள்ள சிக்கலையும் தீர்ப்பதாக இருக்கும்'' என ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக நிலங்கள் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதில் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும், பழங்குடி இன மக்களும்தான் முன்னணியில் உள்ளனர் என்பது தெரிந்திருந்தும்; சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது பொருள் உற்பத்தியைவிட ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காகத்தான் அமைக்கப்படுகிறது என்று நிரூபணமான போதிலும்; சிறப்புப் பொருளாதார மண்டலம் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் ஆபத்தானது என்பது அம்பலமான பின்னும், அதற்குப் பட்டுக் குஞ்சம் கட்டிவிட முயலுகிறார், "அறிஞர்' ரவிக்குமார். பட்டுக் குஞ்சம் கட்டிவிட்டால் வெளக்குமாறு சாமரம் ஆகிவிடுமா?


ஓட்டுப் பொறுக்குவதற்காக பார்ப்பனபாசிச ஜெயாவிடம் கூட்டணிக் கட்டிக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன ரவிக்குமாரிடமிருந்து, இந்தப் பொருளாதார சிந்தனையைத் தவிர, வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. நாட்டை மறுகாலனியாக்கி வரும் இப்பொருளாதாரத் திட்டங்களுக்குத் துணை நிற்கும் இவர்கள், எந்தத் தாழ்த்தப்பட்டவனை, எந்தத் தமிழனை விடுதலை செய்யப் போகிறார்கள்? இந்த மறுகாலனியாதிக்க ஆதரவினை ரவிக்குமார்திருமாவளவனின் தனிப்பட்ட சறுக்கலாகப் பார்த்துவிட முடியாது; பின் நவீனத்துவ அறிஞர்களால் போற்றப்படும் தலித் அரசியலின் உண்மை முகமே இதுதான்.


· செல்வம்

1 comment:

Tamilmind said...

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து என்ற கதையாக ரிலையன்ஸ் என்ற மடுமுழுங்கிக் கூட்டம் காய்கறி வியாபாரத்திலும் நுழையப்போகிறார்கள் என்ற செய்தி கேட்டபோது, அடப்பாவிகளா என்று பதைத்தேன். மற்ற மாநிலங்களில் இவர்களுக்குக் கிடைத்த எதிர்ப்பைப் பார்த்ததும், சரி, இவர்கள் தமிழ்நாட்டுக்குள் வருவதற்குள் இவர்களுடைய வண்டவாளம் இங்குள்ளவர்களுக்குத் தெரிந்து சுதாரித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இந்த செய்தியைப் படிக்கும்போது தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், விவசாயிகள், சிறு வியாபாரிகள் நிலையையும் நினைத்தால் பயமாக உள்ளது. படித்தவர்கள் (!), வசதியுள்ளவர்களுக்கு சிறு வியாபாரிகள் பிழைப்பு பறிபோவது பற்றித் தூக்கம் கெடப்போவது கிடையாது. ஆனால் ஏழை, எளியவர்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறிவந்தவர்களும் இன்று இப்படி விலைபோய்விட்டார்களே? ஆமை புகுந்த வீடுபோல் ரிலையன்ஸ் புகுந்த தமிழ்நாடு என்று ஆகிவிடக்கூடாது. அப்படியே அவன் கடை ஆரம்பித்தாலும், கொஞ்சமாவது தன்மானம் உள்ளவர்கள் அதில் வேலைக்குச் சேரவோ, அவன் கடையில் பொருள் வாங்கவோ கூடாது. அவனுக்கு deep pockets இருப்பதால் அவன் சிலகாலம் நஷ்டத்தில் கூட விற்க முடியும். ஆனால் கொஞ்சமாவது நியாய உணரச்சி உள்ளவர்கள் ரிலையன்ஸ் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் - அவன் சும்மாவே கொடுத்தால் கூட!