பி.இரயாகரன்
30.05.2007
அரசியல் ரீதியான தோல்வியை இராணுவ வெற்றியாக்கிவிட முடியாது. புலிகள் மீள யாழ்ப்பாணத்தை கைப்பற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் முதல் ஊதிப்பெருக்கும் செய்திகளுமே அண்மைய செய்திகளாகின்றன. அதற்கான தயாரிப்புகள் பற்றிய செய்திகளும், மிக பெரிய மனித அழிவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற புலியிஸ்சமும் சார்ந்த செய்திகளும் வெளிவருகின்றது.
பல பத்தாயிரம் மக்கள் எக்கேடு கெட்டு மடிந்தாலும் பரவாயில்லை, சண்டையை பிடியுங்கள் என்கின்றனர் புலம்பெயர் லூசுகள். நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு அலையும் இந்த லூசுகள், ஆகா இந்த அற்புதம் நிகழாதா என்று விசர் பிடித்து அலைகிறார்கள். யாருக்காக என்றால் தமிழ் மக்களுக்காக என்று கூறிக்கொள்கின்றனர். தமது அரிப்புக்காக தமிழ் மக்களை கொன்று குவித்தபடி நடத்த முனையும் இந்த இராணுவ நடவடிக்கையை ஆதரித்து நிற்கும் இவர்கள், மக்களை வாயை மூடிக்கொண்டு ஓரம்போ என்கின்றனர்.
நடக்கும், நடக்கவுள்ள இந்த மனித அவலத்தின் அரசியல் பின்புலம் என்ன? ஆம் புலிகள் அரசியல் ரீதியாக தோற்றவர்கள், இராணுவ ரீதியாகவும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வருகின்றனார். அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற அரசியல் அரங்கில் அதை சரியாக வெற்றிகரமாக கையாளத் தெரியாது, தமது சொந்த பாசிச வழியில் தோற்றவர்கள். அதிலிருந்து மீள்வதற்காக மறுபடியும் இராணுவ நடவடிக்கையை தொடங்கினர். மக்கள் படை என்ற பெயரில் தொடங்கிய இந்த தவறான போராட்ட வழி, அது தொடங்கிய இடத்திலேயே முடிந்து காணாமல் போய்விட்டது. இதன் பின்பாக அண்ணளவாக 5000 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, வேறு எதையும் இந்த உத்தி சாதிக்கவில்லை.
மக்கள் படையின் தோல்வியும், அதன் அழிவும் இராணுவ ரீதியான முதல் தோல்வியாகியது. இதில் இருந்து மீள புதிய வழிகளில், இராணுவ ரீதியான பல தாக்குதல் உத்திகளை கையாள முனைந்தனர். இப்படி பல. ஆனால் அவை அவ்வவ் இடங்களிலேயே அழிக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கை முற்றாக பறிகொடுத்த நிலையில் சேடம் இழுக்கின்றது. இப்படி இராணுவ வழியும் தோற்கடிக்கப்பட்டே வந்தது.
இந்த நிலையில் திடீர் விமானத் தாக்குதலை புலிகள் நடத்தினர். மட்டுப்படுத்திய, எதிர்பாராத விமானத்தாக்குதல் மட்டுமே இன்னமும் தோற்கடிக்கப்படாத இராணுவ உத்தியாக எஞ்சியுள்ளது. இராணுவத்தின் எதிர்தயாரிப்பு அற்ற எல்லைக்குள் மட்டுமே, இவை தாக்குப்பிடிக்கக் கூடிய வெற்றியாக உள்ளது. வெற்றிகரமான தொடர்ச்சியான வலிந்த தாக்குதலை நடத்த முடியாதநிலை. அதே நேரம் இராணுவ ரீதியாக எல்லையோர சிறு தாக்குதல்கள், திடீர் தாக்குதல்கள் கூட வெற்றி அளிக்கவில்லை. ஒரு சில சிறியளவிலான வெற்றி தவிர, பலத்த சேதங்களையும் தோல்வியையும் புலிக்கு ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியான வழியிலும் கூட தோல்வி மேல் தோல்விகள் கண்டனர். புலிகள் வரலாற்றில் இப்படி நிகழ்ந்தது கிடையாது. இதில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்கு தெரிந்ததும், எஞ்சியுள்ள அவர்களின் வழி என்பதும், மிகப்பெரிய படை நகர்வு ஒன்றை நடத்துவது மட்டும் தான். புலிகளின் இராணுவ ரீதியான உத்தியில் எஞ்சி இருப்பது இதுமட்டும் தான். தற்கொலைக்கு ஒப்பான ஒன்றை நடத்துவதைத் தவிர, அவர்களுக்குத் தெரிந்த வேறுவழி கிடையாது. அதைச் சொல்லித்தான் புலி அரசியலே இன்று நடக்கின்றது.
அரசியல் ரீதியாக எதிரியிடம் தோற்ற புலிகள், கிழக்கை இழந்துள்ளனர். சிறிய தாக்குதல்கள் மூலம் அரசைத் திணறவைக்கும் ஆற்றலை தொடர்ச்சியாக இழந்த புலிகள், இராணுவ ரீதியாக பலமற்றவராக மாறிவிடவில்லை. ஒரு விசித்திரமான உண்மை தான். புலிகள் இன்னமும் பலமான இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு இருப்பதால், கண்மூடித்தனமான ஒரு பாரிய தாக்குதலை அவர்கள் நடத்தும் அளவுக்கு பலம் கொண்டவராகவே உள்ளனர்.
இந்த பலமான இராணுவத்தை தக்கவைக்க, வன்னியின் முழு மக்களையும் பலாத்காரப்படுத்தி ஆயுதமுனையில் பணிய வைக்கின்ற செயல்களே, வன்னிப் பெரும் நிலத்தில் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்கின்றது. அங்கு வாழும் மக்கள் அன்றாடம் புலிகளால் இதற்காக கடத்தப்படுகின்றனர்.
வன்னி மக்களின் வீடுகளில் புகுந்து அவர்களின் குழந்தைகளை புலிகள் இதற்காக களவாடிச் செல்லுகின்றனர். மொத்த சமூகத்தையும் ஆயுத முனையில் நிறுத்தி, சமூகத்தை ஆயுதபாணியாக்குகின்றனர். எதற்காக என்றால், அந்த மக்களின் சொந்த விடுதலைக்காக அவர்களையே கடத்தி சென்று, அவர்களை சண்டையிட வைக்கின்றனர். இப்படி பிரபாகரனின் தலைமையில் நல்லதொரு விடுதலை, நல்லதொரு புரட்சி.
இப்படி கடத்தப்பட்டு ஆயுத பாணியாக்கும் மக்களைக்கொண்டு, யாழ்குடாவை மீட்கும் பாரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சமூக விளைவுக்கு முன் போராடும் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.
1. வெறும் கூலி இராணுவ மனப்பாங்கு கொண்டதும், பின்னால் திரும்பிப் போகமுடியாத வகையில் துப்பாக்கி முனையில் சண்டையிட வைக்கமுடியும்.
2. விரும்பி இணைந்த படைகள் கூட புலித்தலைமையின் செயலால் அவநம்பிக்கை கொண்ட உறவே பொதுவாக காணப்படுகின்றது. கட்டாய பயிற்சிக்குள்ளாகும் பிரிவின் அவலங்களையும் அது தமக்குள் தாமே சுமந்தபடி போராடும் மன வலிமை இழந்தே நிற்கின்றது.
3. தலைமைக்கும் கீழ் அணிக்கும் இடையிலான இடைவெளியும், வெடிப்பும் என்றுமில்லாத ஒரு முரணிலை கொண்ட ஒரு பலவீனமான இராணுவமாக புலிகள் உள்ளனர்.
4. சமூகத்துடனான உறவு என்றுமில்லாத அளவுக்கு துப்பாக்கி முனையில் தான் பாதுகாக்கப்படுகின்றது.
ஒரு பாரிய யுத்தமுனையில் இவையும், இவை போன்ற பல காரணங்களும் புலிக்கு எதிரானதாகவே உள்ளது. இவை யுத்த முனையில் தீர்மானகரமானதும், அதன் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடியவையுமாகும்.
தோல்விக்கான காரணம் இராணுவத்தின் தோற்கடிக்கும் பலம் என்ற எல்லைக்குள் இருந்து மட்டும் பார்க்கமுடியாது. உள்ளார்ந்த புலியின் பின்னணியிலும், மக்களின் உணர்வு அம்சமே முதன்மையான காரணமாக உள்ளது. இதுதான் பேச்சுவார்த்தைக்கு பிந்தைய புலிகளின் இராணுவ உத்தியை தோற்கடித்தது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் யுத்தத்தைத் விரும்பவில்லை என்ற உண்மை, புலி தோற்கவும் அதனைத் தோற்கடிக்கவும் போதுமான காரணமாகவுள்ளது. இந்த மக்களின் ஒரு பகுதியை பலாத்காரமாக ஆயுதபாணியாக்கி, சில தலைவர்களினதும் புலம்பெயர் லூசுகளினதும் சண்டைக்கான விருப்பத்தை பூர்த்தி செய்து வென்று விட முடியுமா?
புலிகளின் ஒரு வெற்றி நிகழுமாயின், இராணுவத்தின் பலவீனத்தில் மட்டும் அல்லது தற்செயலான சம்பவங்களினால் மட்டுமே தான் சாத்தியம். இப்படி நடந்து புலிகள் யாழ் குடாவை கைப்பற்றினால் அல்லது அதில் தோற்றால் விளைவுகள் என்ன?
1. இத்தாக்குதல் தோல்வி பெற்றால், முழுமையாக இராணுவ ரீதியான புலியின் அழிவுக்குரிய பாதை செப்பனிடப்படும்.
1. பெருமளவிலான புலிகளின் படைப்பிரிவுகள் தானாகவே சரணடையும். தாக்குதலின் போதே கட்டாய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டவர்கள் பெருமளவில் இராணுவத்தின் முன்னரங்கின் ஊடாகவே தப்பியோடுவர்.
2. புலிகளின் எதிர்காலம் முற்றாக சூனியமாகும்.
3. புலியில் உள் மோதல்களும், உட் குழுக்களும் உருவாகும்.
2. இராணுவ ரீதியாக இத்தாக்குதலில் வெற்றி பெற்றால்
1. பாரிய மனித இழப்பையும், புலிப்படையில் பாரிய இழப்பையும் உருவாக்கும்.
2. யாழ்குடா மக்களின் மேலாக என்றுமில்லாத புலியின் இராணுவ ரீதியான ஒடுக்குமுறை அதிகரிக்கும். பல ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கொல்லப்படுவர்.
3. யாழ்குடாவை கைப்பற்றிய பின், மீண்டும் அரசியல் நெருக்கடி தான் உருவாகும். பொருளாதார தடையை எதிர்கொள்ளும் ஆற்றலை புலிகள் இழப்பர். சமூகத்தை வழிநடத்த அரசியல் அடிப்படை, பொருளாதார அடிப்படை எதுவும் புலிகளிடம் இல்லாது போகும்.
3. மீண்டும் பேச்சுவார்த்தை, பேரம் என்று தொடங்கும். புதிய அரசியல் நெருக்கடி மறுபடி தொடங்கும்.
4. யாழ்குடா மீதான கைப்பற்றல் நிகழுமாயின், இந்திய தலையீடு நடக்காது என்பதை உறுதி செய்யும் எந்த உத்தரவாதமும் புலிகளின் அரசியல் நடத்தையில் கிடையாது. இந்திய தலையீட்டுக்குரிய வகையிலான தயார்நிலை, சந்தர்ப்பங்கள், சூழல்கள் பொதுவில் காணப்படுகின்றது. இதற்குரிய கற்பனை சம்பவங்கள் கூட, நம்பத்தக்க வகையில் உண்மையில் நிகழ்த்தப்படலாம். இந்தியா செய்யாததை இந்தியா செய்ததாக கூறுகின்ற நிலையில், அதன் நம்பகத்தன்மை அம்பலமாகி நிற்கின்ற சூழல், மேலும் இதற்கு வாய்ப்பானது.
4. யாழ்குடாவை கைப்பற்றினால் சர்வதேச தலையீட்டுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். இன்று அதை தடுப்பது சிங்கள மக்கள் தான். சிங்கள மக்களின் எதிர்ப்பை இல்லாததாக்கும். சர்வதேச தலையீடு புலிக்கு எதிரானது தான்.
இப்படி பல, யாழ்குடா தாக்குதலின் பின் விளைவாக இருக்கும். மனித அவலங்களும், அதன் விளைவுகளும் பாரியதாக அமையும். அதேநேரம், அரசியல் ரீதியாக மக்களிடமிருந்து புலிகள் மேலும் அன்னியமாவர். புலம்பெயர் சமூகத்தின் லூசுகளின் அரிப்புக்கு ஏற்ப, அதனிடமிருந்து மட்டும் ஆதரவைப் பெறுவர். உண்மையில் இந்த தாக்குதலுக்கு அவர்கள் மட்டும் தான் ஆதரவளிப்பர். இந்த லூசுளுக்கு ஏற்பட்டு இருக்கும் சுயநலம் சார்ந்த மனநோய், தன்னையும் தனது குடும்பத்தையும் இங்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தான் கொக்கரிக்கின்றது. இது தான் எதார்த்தம். இந்த யுத்தத்தை ஆதரிப்போர் அங்கு வாழும் மக்கள் அல்ல.
இந்த எதார்த்தம் ஒருபுறம். இதை எப்படி எதிர்கொள்வது என்பது மறுபுறம். பேரினவாதம் தமிழ் மக்களை ஏமாற்றி, இராணுவ ரீதியாக தமிழ் மக்களை அடக்கியொடுக்கவே விரும்புகின்றது. அதைத்தான் அது செய்கின்றது. இதில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்க இராணுவ வெற்றிகள் அல்ல. அரசியல் வெற்றிகளே அவசியமானது.
இராணுவ வெற்றி என்பது அரசியல் வெற்றி மீது தான் சாத்தியம். அரசியல் ரீதியான வெற்றி அல்லாத இராணுவ வெற்றி, உள்ளடக்க ரீதியாக மீண்டும் அரசியல் தோல்விதான். தோல்வி சுழற்சி வடிவில் நிகழ்கின்றது.
அரசியல் வெற்றி என்பது
1. பேரினவாதத்தை அரசியல் ரீதியாக தோற்கடித்தல்
2. மக்களை அரசியல் ரீதியாக வென்றல்
3. சர்வதேச ரீதியாக அரசியல் வெற்றியை நிலைப்படுத்தல்
இந்த மூன்றையும் புலிகளால் செய்யமுடியவில்லை. முற்றிலும் தோற்றுள்ளார்கள். இந்த நிலையில் ஒரு இராணுவ வெற்றி அரசியல் வெற்றியாவதில்லை. அதுவே வெற்றியாகிவிடாது. சிலர் மட்டும் தமக்குள் தாமே, வெற்றி பெற்று விட்டதாக நம்பி பீற்றிக்கொள்வதுக்கு அப்பால், அவை வெற்று வேட்டுத்தனம் தான்.
பேரினவாதத்தின் சூழ்ச்சி, அதன் குதர்க்கம், ஏமாற்றுகின்ற வக்கிரம், இதை வெற்றிகரமாக அரசியல் ரீதியாக இன்றும் வெல்லமுடியும். இதை நாம் அறுதியிட்டு கூறமுடியும். இதன் மீது மட்டும் தான், இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றியாகும். அரசியல் வெற்றிகள் மீதுதான் இராணுவ வெற்றிகளை சாதிக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகின்றோம்.
அரசியல் ரீதியாக எதிரியிடமும், சொந்த மக்களிடமும் சதா தோற்றுக் கொண்டு பெற முனைகின்ற இராணுவ ரீதியான வெற்றி, மீண்டும் அரசியல் ரீதியான தோல்வியையே தரும். மீண்டும் மீண்டும் வரலாறு இதையே கற்றுக் கொடுக்கின்றது.
எதிரியின் பலவீனம் என்பது இராணுவ மூலோபாயத்தில் அல்ல, எதிரியின் அரசியல் தளத்தில் உள்ளது. எதிரியின் அரசியல் தளத்தின் மீதே போராட்டமே தொடங்கியது என்பதை மறப்பது, மறந்து இராணுவ கூச்சல் இடுவது அரசியலை துறந்து நிற்பதாகும். எதிரியின் பலவீனம் மீதான தாக்குதல் தான், இராணுவ ரீதியான வெற்றியை தீர்மானிக்கின்றது. அரசியல் ரீதியாக எதிரியை தனிமைப்படுத்தி தோற்கடிப்பது அவசியமானது. மாறாக எதிரியை தொடர்ச்சியாக பலப்படுத்துகின்ற செயல்கள், எதிரியின் பலவீனமான அரசியலைக் கூட வெற்றிக்கே இட்டுச்செல்லும்.
எதிரியின் அரசியல் அடிப்படை மனிதவுரிமையையே மறுப்பதாகும். ஆனால் அதை வெற்றியாக நகர்த்துவதே புலிகளின் அரசியல் இராணுவ மூலோபாயமாக இருப்பதே வேடிக்கையான துயரம்தான்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை எதிரி வழங்க மறுக்கின்றான். அதை சிதைக்கின்ற அனைத்து நடவடிக்கையையும் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டிய பணியை, எம்மைத் தவிர வேறு எவராலும் சுட்டிக் கூட காட்டப்படுவதில்லை. எதிரி அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மறுத்த நிற்கின்ற நிலையும், அதை மறுபுறத்தில் அம்பலப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்து. எதிரியை சுற்றி குலைக்கின்ற கும்பல்கள் கூட, அதைப்பற்றி தமக்குள் முரண்பாடு உள்ளதாக காட்டிக்கொண்டு எதிரியை விசுவாசமாக நக்குகின்றது. உண்மையில் எதிரியின் பின்னால், இவர்கள் நிபந்தனையின்றி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
வெளியில் இருந்து இதை அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் உரிமையை உயர்த்துவதன் மூலம், சுற்றி நின்று குலைக்கும் நாய்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, எதிரியை மேலும் தனிமைப்படுத்தமுடியம். அரசியல் ரீதியாக செய்யவேண்டிய பணி பல. மக்களின் உரிமையை வழங்கி அதை உயர்த்துவதன் மூலம், இராணுவ ரீதியான வழியை நகர்த்தவேண்டும். இது மட்டும் தான், மக்களின் அரசியல் உரிமைகளுடன் கூடியது.
எதிரி தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கின்ற அடிப்படை உரிமையை, ஒரு அமைப்பு முன்னெடுக்கத் தவறுவது என்பது, அந்த மக்களின் அரசியல் ரீதியான அடிப்படை உரிமையை மறுப்பதன் விளைவாகும். இதை பாதுகாத்துக் கொள்ள, இராணுவ ரீதியான மக்களுக்கு வெளியிலான நடத்தைகள், மற்றொரு அரசியல் தோல்விக்கான சொந்த பாதையை வலிந்து தேர்ந்தெடுப்பது தான்.
பல பத்தாயிரம் மக்களின் இழப்பின் ஊடாக சாதிக்கப் போவது எதை?
யாழ்குடாவை மீட்டால், சாதிக்கப் போவது எதை?
இதன் பின் என்ன நடக்கும்?
புலிகளால், அதன் பின்னுள்ள லூசுக் கூட்டத்தால் பதிலளிக்க முடியாத சூனியமும், தன்னியல்பான போக்கில் அதற்கு விடைகாணும் தலைமைகளாலும், தமிழ் சமூகத்தின் மொத்த அழிவைத் தவிர வேறு எதையும் வழிகாட்டமுடியாது.
No comments:
Post a Comment