தமிழ் அரங்கம்

Saturday, June 2, 2007

மறையாது மடியாது நக்சல்பாரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!

நக்சல்பாரி பேரெழுச்சியின் 40-ஆம் ஆண்டு :

மறையாது மடியாது நக்சல்பாரி!
மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!



க்சல்பாரி — அது இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் பெயர். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்திலுள்ளது அந்தக் கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல் ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமம் இருந்தது.

1967ஆம் ஆண்டு மே 23ஆம் தேதிக்குப் பின்னரோ, அது கோடானுகோடி உழைக்கும் மக்களின் இலட்சியக் கனவு. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நிலம் கிடைக்குமென்று அரசு அதிகார வர்க்கத்தை அண்டிக் காத்துக் கிடப்பதா, அல்லது ஆயுதம் ஏந்திப் போராடி நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதா என்ற கேள்விக்கு விவசாயிகள் அங்கே விடை கண்டனர்.


அதுதான் நக்சல்பாரி உழவர்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி. சி.பி.எம். கட்சிக்குள்ளிருந்த கம்யூனிசப் புரட்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட எழுச்சி. மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்த மாபெரும் எழுச்சி. ""துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது'' என்று முழங்கிய எழுச்சி.


சிலிகுரி வட்டத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கிராமக் கமிட்டிகளை நிறுவி ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தங்கள் கூலிக்காக மட்டும் போராடும் தொழிற்சங்கவாதத்தைக் கைவிட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களோடு இணைந்து ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.


நிலப்பிரபுக்களின் பட்டாக்களும் கடன் பத்திரங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. வில்லும் அம்பும் துப்பாக்கியும் ஏந்திய விவசாயிகள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். மக்கள் நீதிமன்றம் அமைத்து, எதிரிகளைக் கூண்டிலேற்றி விசாரித்துத் தண்டனை வழங்கினர். சாட்டைகள் முதன்முறையாகக் கொழுத்த சதைகளைச் சுவைத்தன. கொடிய நிலப்பிரபுக்களுக்கு அங்கே மரணதண்டனை விதிக்கப்பட்டது.


அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் போகவேண்டிய இடத்திற்கு கூலி, ஏழை உழவர்களின் குடிசைக்கு முதன்முறையாகப் போய்ச் சேர்ந்தன. குத்தகை விவசாயிகளின் அனுபோக உரிமை நிலைநாட்டப்பட்டது. வயல்களெங்கும் படபடத்துக் கொண்டிருந்த செங்கொடிகள் நிலப்பிரபுக்களை எள்ளி நகையாடின.


1967 மார்ச் மாதத்திலிருந்து படிப்படியாக முன்னேறிய நக்சல்பாரி எழுச்சியைக் கண்டு ""ஐயோ, பயங்கரவாதம்!'' என்று ஆளும் வர்க்கங்கள் அலறின. மே 23ஆம் நாளன்று தங்களது தலைவர்களைக் கைது செய்ய வந்த போலீசு படையை நக்சல்பாரி விவசாயிகள் திருப்பித் தாக்கி விரட்டினர். பின்னர் பெரும்படையுடன் வந்து நரவேட்டையாடியது போலீசு. இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட போதும் நக்சல்பாரி தன் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை.


நக்சல்பாரி வெறுமனே நிலத்திற்கான போராட்டமல்ல; அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம். ""உழுபவனுக்கே நிலம்; உழைப்பவருக்கே அதிகாரம்!'' நக்சல்பாரி எழுப்பிய இந்த மந்திரச் சொற்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்தன. முஷாகரி, கோபிவல்லபூர், லக்கிம்பூர்கேரி, சிறீகாகுளம், தெலிங்கானா, கேரளா, தமிழ்நாடு... என நாடெங்கிலும் வர்க்கப் போராட்டம் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது.


""வேலை நிறுத்தம் செய்தால் ஆலையை மூடிக் கதவடைப்பு செய்வோம்'' என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை அவர்களது அறைக்குள்ளேயே கதவடைப்பு செய்து முற்றுகையிட்டார்கள் தொழிலாளர்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க போராட்ட வடிவமாக ""கெரோ'' எனும் முற்றுகைப் போராட்டம் நாடெங்கும் பரவியது. நாடெங்கும் மாணவர்கள் கல்வியை கல்லூரியைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அரசியல் உணர்வூட்டி அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.


போராட்டங்களைக் கட்டியமைத்து வழிநடத்திய "குற்றத்திற்காக' கைது செய்யப்பட்ட புரட்சியாளர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். ""ஆம்! நாங்கள்தான் பண்ணையாளர்களைக் கொன்றோம். மக்கள் எதிரிகளை அழித்தொழித்தோம். தூக்கு தண்டனையா, அதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தீர்ப்பை எழுதிவிட்டு ஏன் விசாரணை நாடகமாடுகிறாய்?'' என்று கலகக் குரல் எழுப்பினார்கள். நீதிமன்றங்களின் புனிதம், நாடாளுமன்ற சட்டமன்றங்களின் மீதான மாயை, போலீசின் மீதான அச்சம் அனைத்தையும் ஒரே அடியில் தகர்த்தெறிந்தது நக்சல்பாரி.


தகர்ந்தவை ஆளும் வர்க்க நிறுவனங்கள் மட்டுமல்ல; நாற்காலி புரட்சி செய்யும் இடது, வலது போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும்தான். நக்சல்பாரி பேரெழுச்சியை ஆதரித்தும், அதை ஒடுக்கி அவதூறு செய்த சி.பி.எம். கட்சியின் துரோகத்தையும் புரட்டல்வாதத்தையும் நிராகரித்தும் நாடெங்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்தனர். மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையே எங்களின் சித்தாந்தம்; தரகு அதிகார முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதே எங்களது உடனடி இலட்சியம்; போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்; ஆயுதப் போராட்டப் பாதையில் மக்கள் யுத்தத்திற்கு அணிதிரள்வோம் எனத் தமது கொள்கைகளைப் பிரகடனம் செய்த புரட்சியாளர்கள், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற புரட்சிகரக் கட்சியை லெனினது நூற்றாண்டு தினத்தில் 1969 ஏப்ரல் 22ஆம் நாளில் தோற்றுவித்தனர். அது, நக்சல்பாரி பேரெழுச்சி ஈன்றெடுத்த போராளி.


2007 நக்சல்பாரி எழுச்சியின் நாற்பதாம் ஆண்டு. கடந்த 40 ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் கற்றுக் கொண்டதும் சாதித்திருப்பதும் ஏராளம். அளவில் மட்டுமல்ல, அதன் முதிர்ச்சியும் அரசியல் செல்வாக்கும் பெருகியிருக்கிறது. நக்சல்பாரி என்ற சொல் இனி மே.வங்கத்திலுள்ள சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. அது, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. அது, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது; ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது; நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் அரசியல் மையமாகத் திகழ்கிறது; அதிகாரவர்க்க இராணுவ அரசியலமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது; உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக விளங்குகிறது.


1970களில் கல்கத்தா வீதிகளில் ஆயிரக்கணக்கான புரட்சிகர இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற சித்தார்த்த சங்கர் ரே; அதன் பிறகு, கிராமங்கள் நகரங்கள்சிறைச்சாலைகளிலும் புரட்சியாளர்களின் ரத்தம் குடித்த பாசிசக்காளி இந்திரா, 80களில் தருமபுரி வடஆற்காடு மாவட்டங்களில் புரட்சியாளர்களை நரவேட்டையாடிய பாசிச எம்.ஜி.ஆர். தேவாரம் கும்பல், ஆந்திராவில் வெங்கல்ராவ், சென்னாரெட்டி, என்.டி.ஆர்., சந்திராபாபு நாயுடு என கொலைவெறியாட்டம் போட்ட ஆட்சியாளர்கள்... ""ஒழித்து விட்டோம்'' என எதிரிகள் ஒவ்வொருமுறை மார்தட்டும் போதும், ""எழுந்து விட்டோம்'' என அவர்களது நெற்றிப் பொட்டில் தன் துப்பாக்கியை அழுத்துகிறது நக்சல்பாரி.


இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனத் தொடரும் மறுகாலனியாக்கத்துக்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஓரணியில் நின்று தமது எசமானர்களான ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்கின்றன. 70களில் நிலவிய கொள்கை வேறுபாடுகளோ அரசியல் குழப்பங்களோ இப்போது இல்லை. இடது, வலது போலி கம்யூனிஸ்டுகளும் தங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு அம்மணமாக நிற்கிறார்கள். இருப்பது இரண்டே முகாம்கள்தான். ஒன்று, ஆளும் வர்க்கங்கள்ஓட்டுக் கட்சிகளின் விரிந்த ஐக்கிய முன்னணி; மற்றொன்று, நக்சல்பாரி புரட்சியாளர்களின் தலைமையிலான உழைக்கும் மக்களின் புரட்சிப் போரணி.


அளப்பரிய தியாகத்தால் சிவந்து ஒளிரும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தைத் தோற்கடிக்கவோ மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவோ ஒருக்காலும் முடியாது. நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, ஆக்கப்பூர்வமான அரசியல்பொருளாதாரத் தீர்வை முன்வைத்து, நாட்டையும் மக்களையும் விடுதலை செய்யும் மாபெரும் புரட்சிக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தெளிவும் துணிவும் வேறெந்த அரசியல் இயக்கத்திற்கும் கிடையாது.

மறையாது மடியாது நக்சல்பாரி!


மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!


— ஆசிரியர் குழு

No comments: