பி.இரயாகரன்
22.06.2007
பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.
பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட எதிர்வினையாகின்றது. இது வரையறுக்கப்பட்ட தெளிவான ஒரு சமூக அடிப்படையைக் கொண்டதல்ல. பூர்சுவா மன இயல்பில் ஏற்படும் அன்றாட தடுமாற்றங்கள் இவை. பெண்கள் தமக்குள் கொண்டுள்ள இந்த உரையாடல் சார்ந்த உணர்வே, பல குடும்பங்களின் மகிழ்ச்சியை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மற்றைய வீட்டில் உள்ளவர்கள் போல், பரஸ்பர கற்பனைகளை கட்டிக்கொண்டு சதா புலம்புகின்றனர். அந்த மற்றைய வீட்டிலும் இதே பல்லவியும், இதேநிலையும் தான். மற்றைய வீட்டில் நகை வாங்கினால் அதைப்போல் அல்லது அதைவிட உயர்வாக வாங்குவது, மற்றைய வீட்டார் ஒன்றைச் செய்தால் அதையே செய்வது, என்ற குறுகிய மனவியல்புகள், பெரும்பாலான பெண்களின் நிலையே இதுவென்றால், சிறியளவில் ஆண்களின் நிலையும் இதுதான். இணக்கமற்ற குடும்பங்கள் இதனடிப்படையில் உருவாகின்றது. தனது கணவன் பற்றி அல்லது மனைவி பற்றி, ஒப்பிட்டு இழிவை தமக்குள் தாமே உருவாக்குகின்றனர். தாழ்வுமனப்பான்மை கொள்கின்றனர். மற்றவர் எப்படி உள்ளனரோ அப்படி இருத்தல் பற்றி பொய்யான கற்பனையும், அது சார்ந்த பிரமைகளையும் தம்மைச் சுற்றி பரிவட்டமாக கட்டிவிடுகின்றனர். இப்படி மன உழைச்சலையும், திருப்தியற்ற வாழ்க்கை சார்ந்த உணர்வையும், தம்மைச் சுற்றி உருவாக்கிவிடுன்றனர். கற்பனை வாழ்க்கை, போலியான மனப்பாங்கை சிருஸ்ட்டிகின்றது.
சினிமாவில் நடத்தும் போலி நடிப்பை, வாழ்வின் உண்மையான அம்சமாக நம்பி அதுவாக மோசம் போகின்றனர். இது இயல்பில் மற்றவருக்கும் மோசம் செய்வதாகின்றது. சினிமா சார்ந்த கதாநாயக(கி) நினைப்பில், பிரிட்டிஸ் ராணிகளின் நினைப்பில் முத்தி, அதுவாக வாழ நினைக்கின்றனர். அங்கு காணப்படுவது போலியான நடிப்பு என்பதை காண்பதில்லை. தம்மைத் தாம் இப்பாத்திரங்களாக உருவகித்துக் கொண்டு வாழமுனைந்து கிடைக்கும் வாழ்வின் தோல்விகள், மீண்டும் மனவுழைச்சலை புகைச்சலைத் தருகின்றது. உண்மையில் கிடைத்த வாழ்வை மகிழ்ச்சியாக வாழத் தெரியாது, அதை துயரத்திலாழ்த்துகின்றனர். அந்தரத்தில் அங்குமிங்குமாக பொறுக்கும் நிலையற்ற வாழ்வியல் முறைகளால். எங்கும் வீங்கி வெம்பும் தனிமனித சீரழிவுகளையே வாழ்க்கையாக கற்பிக்கின்றனர். குடும்பத்தின் இணங்கி வாழும் சமூக கூறுகளையே, நஞ்சிட்டு அழிக்கின்றனர்.
இதில் இருந்து புலம்பெயர் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள் சற்று வேறுபட்டு, மேலும் கூர்மையடைகின்றது. வலதுசாரிய தமிழ் சமூகத்தினதும், அதன் அரசியல் தலைமையினதும் மொத்த விளைவால், இது மேலும் கூர்மையாகி நிற்கின்றது. குறைந்தபட்சம் இரண்டு தலைமுறையாவது தனது வாழ்க்கையை இதற்குள் தொலைத்து நிற்கின்றது.
வாழ்வியல் பிரச்சனைகள் ஏன் ஏப்படி உருவாகின்றது என்பதைக் கூட தெரிந்துகொள்ள முடியாத விட்டில் ப+ச்சியாகி அதில் வீழ்ந்து மடிகின்றனர். இதற்கு தீர்வு அடங்கிப் போதல் அல்லது வன்முறை மூலம் விடைகாணல் என்பதே பொதுவான வழியாக உள்ளது. இதைத்தான் தமிழ் தேசிய அரசியல் வழிகாட்டுகின்றது. பொதுவாக தமிழ் சமூகத்தின் இன்றைய நிலை என்பது, வன்முறையும் அதற்கு அடங்கிப் போதலுமே தீர்வாக உள்ளது. இதுவே குடும்பத்திலும் கையாளப்படுகின்றது. ஆணாதிக்க சமூகத் தன்மைக்கு வெளியில், இதைக் கையாளுவதில் ஆண் பெண் வேறுபாடு கிடையாது. ஒரு விடையத்தை பேசித் தீர்த்தல், விவாதித்தல் என்பது அறவே கிடையாது. மொழி வன்முறை (பெருமளவில் பெண்கள்) பொதுவாக குடும்பத்தின் உச்சத்தில் உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்பால், குழந்தைகள் மேல் கையாளும் மொழியில், இதை நீங்கள் இலகுவாக உணரமுடியும். இதன் விளைவே உடல் வன்முறையாக மாறுகின்றது.
குழந்தைக்கு விடையத்தை விளங்கப்படுத்துவதற்கு பதில், வன்முறையான மொழியாடல் மூலம் எதையும் சாதிக்க நினைக்கின்ற போக்கு, பொதுவாக அநேக குடும்பத்தில் காணப்படுகின்றது. இதன் பின் இருப்பது எதுமற்ற அலட்சியம், வெறுப்பு, சீற்றம், புறுபுறுப்பும் கோபமுமே. உண்மையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற வாழ்க்கைக்கே, தம்மை அறியாது நஞ்சிடுகின்றனர். தனக்கு எதிரான வெறுப்பை, தமது இணக்கமற்ற நடத்தை மூலம் சாதிக்கின்றனர். மகிழ்ச்சியை தொலைத்தபடி தொல்லைப்டுகின்றனர். சதா மற்றவர் மீது பிழை கண்டுபிடித்தல் மூலம், எதிரியை குடும்பத்தினுள் உருவாக்கி வைத்துக்கொள்கின்றனர். இதில் விட்டுக்கொடுப்பற்ற அடாவடித்தனமான மொழி வன்முறை மூலம் தான், அனைத்து உரையாடலும் நடத்தப்படுகின்றது. இந்த மொழி வன்முறை சார்ந்த உணர்வும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் எல்லையென்பது, எல்லா விடையத்துக்கும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. கடுமையானதும், மென்மையானதும் என்ற எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை. கற்றல், கற்பித்தல், உண்ணல், வீட்டை ஒழுங்குபடுத்தல், பிள்ளையின் நடத்தை என எதுவாக இருந்தாலும், மொழி வன்முறை மூலமே பதிலளிக்கப்படுகின்றது. அந்த உணர்வில் உணர்சியில் எந்த மாறுபாடும் கிடையாது. உணர்ச்சியை இழந்த அதிகாரமே வீட்டின் சொந்த மொழியாகின்றது.
அநேகமான புலம்பெயர் குடும்பத்தில் இதுவே நடக்கின்றது. ஆண்களில் சிறிய பகுதியும், பெண்களில் பெரும் பகுதியும் இப்படித்தான் குடும்பத்தை நிர்வகிக்கின்றனர். ஆண் பெண் உறவிலும் கூட இந்த மொழி சார்ந்த உரையாடல்தான் பொதுவாக காணப்படுகின்றது.
இப்படி அணுகுமுறையின் விளைவு என்பது பயங்கரமானது. தான் அல்லாத மற்றைய உறவுகளுடன் சதா முரண்பட்டு, தான் தனிமையில் தனித்து வாழ்கின்ற நிலை உருவாகின்றது. உண்மையில் தனிமைவாதத்திலும், சூனியவாதத்திலும் மூழ்கிவிடுவதும், அதற்குள் தீர்வுகளை காண்பதுமாக, உலகம் மிகக் குறுகியதாக தன்னளவில் சிறுத்துவிடுகின்றது. ஆண்கள் வீதிகளிலும், பெண்கள் வீட்டிலுமாக குறுகிய எல்லைக்குள், தம்மைத்தாம் கற்பித்து புளுத்து மனநோயாளராகின்றனர்.
ஆண்கள் குடியிலும், தாம் சம்பந்தப்படாத கற்பனையான (வீர, பாலியல்) வம்புகளிலும் வடிகால் தேடுகின்றனர். உலகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது, கூனிக்குறுகி அறிவிழந்து, சுயசிந்தனை இழந்து விடுகின்றனர். இதற்கேற்ற தமிழ் வலதுசாரிய பாசிச அரசியல், இதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளிக்கின்றது.
பெண்கள் உலகமோ குறுகிய (நாடகங்கள்) உலகமாகின்றது. தன்னைச் சுற்றி குடும்ப எதிரிகளை கற்பிக்கும் மனப்பாங்கை சிருஸ்டித்துக் கொள்கின்றனர். இதற்கு ஏற்றாற்போல், எமது வாழ்வியல் அனுபவங்கள் மறுக்கப்பட்ட அரசியல் சூழல்.
சிதைந்து செல்லும் சமூகத்தின் அற்ப உணர்வை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ் நாடகங்களின் வருகை அமைந்தது. குடும்பத்தையே எப்படி பிளப்பது என்பதே நாடகத்தின் சமூக நோக்கமாகும். இது உலகமயமாதலின் விதிக்கு உட்பட்டது. குடும்பத்தினுள் எதிரியை தேடத் தூண்டும், காணத்தூண்டும் கதை அம்சங்கள். எங்கும் எதிலும் எதிரி தன்னைச் சுற்றி உள்ளான் என்பதையே, சிந்திக்கத் தூண்டும் சுயவக்கிரத்தை உருவாக்குpன்றது. உணர்வியல் ரீதியாக, உளவியல் ரீதியாக பெண்கயே இதற்கு அடிமையாக்கப்படுகின்றனர். இயல்பற்ற குடும்பங்கள் இதனால் மொழி மற்றும் உடல் வன்முறைக்குள்ளாகின்றது. குடும்பம் தனது சொந்த நிம்மதியை மகிழ்ச்சியை இப்படியும், இதன் வழியிலும் இழந்து விடுகின்றது. நிம்மதியை இழக்க காரணமான பாத்திரமாகவே, புலம்பெயர் பெண்கள் தம்மை உருவாக்கி கொள்வது நிகழ்கின்றது. இதற்கேற்ற சூழலில் உந்தப்பட்டு நிம்மதியை அழிக்கின்ற பாத்திரங்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர்.
இதனால் இன்று பல ஆண்கள் வீதிகளில் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். சிலர் நிறை குடியில் மிதப்பவராக மாற்றப்படுகின்றனர். பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றது. பல குழந்தைகள் அன்னியமாகின்றனர். வீட்டுச் சூழல் வெறுத்து, பலர் வீதிகளில் நிற்பதும் வசிப்பதுமாகி விடுகின்றனர். வீட்டில் நிம்மதியை இழந்துவிடுகின்றனர். கணவன் முதல் குழந்தைகள் வரை வீட்டை விட, வீதி நிம்மதியான இடமாக அடையாளம் காண்கின்றனர் அல்லது உணருகின்றனர். புதிய நபர்கள், வேறு வீடுகள் நிம்மதியான இடமாக கருதி நாடிச் செல்வது உருவாகின்றது. இதுவே புதிய பழக்கவழங்கங்களையும், சமூகச் சீரழிவுகளையும் வீட்டுக்கு வெளியில் தோற்றுவிக்கின்றது. சொந்த வீடு மகிழ்ச்சியாக இருக்காத போதே, இவை தவிர்க்க முடியாத பொது விளைவுகளாகின்றது.
வீடும், வீட்டு நிர்வாகமும் பொதுவாக பெண்ணின் நிர்வாகமாக இருப்பதால், பெண்ணின் ஒவ்வொரு செயலும் குடும்பத்தை வழிநடத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. பெண்ணின் காய்தல் உவத்தலுக்கு ஏற்ப, குடும்பத்தின் மகிழ்ச்சி தீர்மானிக்கின்ற விடையமாகின்றது.
இதற்குள் புலம்பெயர் பெண்கள் விடையம் மேலும் நுட்பமாகின்றது. சமூகத்துடன் தொடர்சியான நெருக்கமான சமூகத் தொடர்பை புலம்பெயர் பெண்கள் சூழல் சார்ந்து இழந்துவிடுகின்றனர். திடீரென அனைத்தையும் நிர்வகிக்க பெண்கள் தொடங்குகின்றனர். இதில் ஏற்படும் இணக்கமற்ற விளைவுகள், குடும்ப அதிர்வுக்குள்ளாகி முழுக் குடும்பத்தையும் அழிக்கின்றது. குடும்பங்கள் என்பது பெண்களைச் சுற்றி இருப்பதனால், குழந்தை வரை அதன் விளைவை முழுமையாக பாதிக்கின்ற சமூக அவலங்கள்.
எதை எப்படி மொழிகளால் உரையாடுகின்றோம் என்பது மிக முக்கிமானது. அந்த மொழி வெளிப்படுத்தும் முகப்பாவனை கூட மிக முக்கியமானது. இவை குடும்பத்துக்கு எதிராக, எதிர்வினையாக அமைவதை நாம் அன்றாட வாழ்வில், பல குடும்பங்களில் காணமுடியும். இதை பெரும்பாலான பெண்கள் வீட்டின் பொது மொழியாகவே கையாளுகின்றனர். இந்த மொழி வன்முறையையே, வீட்டின் அதிகார ஊடகமாக பயன்படுத்துகின்றனர். தனது குழந்தையுடனான உரையாடல், கணவனுடனான உரையாடல், பெற்றாருடனான உரையாடல், மிக நெருங்கி வாழ்பவர்களுடனான உரையாடல், பெரும்பாலும் மொழி வன்முறை ஊடாகவே கையாளப்படுகின்றது. குடும்பத்தில் நெருங்கி வாழ்கின்றவர் மத்தியில், வீட்டு அதிகாரம் மொழி வன்முறை மூலம் கையாளப்படுகின்றது. அதாவது பெண்ணின் மொழியே, வன்முறை கொண்டதாக இருப்பதை பெரும்பாலான குடும்பத்தில் காணமுடியும்.
இந்தப் பொதுச் சூழலில் குடும்பத்தை வன்முறைக்குள்ளாக்கும் நாடகங்கள், பெண்ணை கவருகின்றது. நாடகங்கள் குடும்ப அதிகாரத்தையும், அதற்குள் எதிரியை தேடுவது பற்றி பேசுகின்றது. சமூகத்துக்கு எதிரான எதிரியை காணவிடாது, பெண்ணைத் திசை திருப்புவதே நாடகங்கள். குடும்பத்தினுள் இது பாரிய முரண்பாட்டை உருவாக்குகின்றது. நாடகங்கள் பெண்ணை முதலில் தனக்குள் அடிமையாக்கி விடுகின்றது. வெளியில் பகட்டும், குடும்பத்தில் சிடுசிடுப்பும், இதுதான் பெண்ணின் வாழ்வு, இதைத்தான் உலகமயமாதல் விரும்புகின்றது. இப்படி மொழியில் வாழ்வில் பெண் கொண்டுள்ள இரட்டை அணுகுமுறையை, வாழ்க்கையாக எப்படி வாழ்வது என்ற நடிப்பை நாடகங்கள் சிருஸ்டிக்கின்றது. உலகத்தை அதற்குள் சுற்றிச் சுற்றி காட்ட முனைகின்றது. குடும்பத்தின் பிளவுக்கு ஏற்றதும், மனநோய்க்கு ஏற்றதுமான இந்த நாடகங்கள், பெண்களின் உலகமாகின்றது. இது இருக்கின்ற நெருக்கடியான குடும்பங்களில், குடும்ப வன்முறையை தூண்டும் ஊடகமாகவே வீட்டினுள் அத்துமீறிப் புகுந்துவிடுகின்றது. தமிழ் நாடகங்கள் பெண்களுக்கு உளவியல் சார்ந்த மனநோயை உருவாக்குகின்றது. அவர்களைச் சுற்றிய ஒரு எதிரி உலகத்தை சிருஸ்ட்டித்து, கற்பிதங்களையும் கட்டளைகளையும் இடுகின்றது.
பெண்கள் பொதுவாகவே அதன் பாத்திரங்களாகவே மூழ்கிவிடுகின்றனர். தாம் ஒரு பாத்திரமாகவே மாறுகின்றனர். அவர்களை அறியாமலே குடும்பத்தினுள் எதிரியை எதிரிகளை தீவிரமாக தேடுகின்றதும், கற்பிக்கின்றதுமான ஒரு நிலை உருவாகிவிடுகின்றது. எதற்கும் கணவனையும், குழந்தைகளையும், பெற்றோரையும் குற்றம் காண்கின்ற, குற்றம் சாட்டுகின்ற நிலை உருவாக்கப்பட்டுவிடுகின்றது. எடுத்ததற்கெல்லாம் நச்சரிக்கின்ற தனக்கென்றதும், அதற்கெனவும் ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கிவிடுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் தனக்கு எதிராக வாழ்வதாக கற்பிக்கின்ற மனப் பிரமை உருவாகிவிடுகின்றது. ஆணாதிக்க சமூக அமைப்பு சார்ந்து உருவாகும் பெண்களின் பின்தங்கிய அறிவை, நாடகங்கள் மேலும் சமூக குருடாக்கி, அதையே வாழ்வாக வாழக் கோருகின்றது. இப்படியாக குடும்பத்தின் குறைந்தபட்ச மகிழ்சியைக் கூட அது மறுதலித்து விடுகின்றது.
அசாதாரணமானதும், இனம் காண முடியாத ஆட்டம், மயக்கம், தயக்கம், அச்சம், பீதி குடும்பத்தினுள் உருவாகின்றது. குடும்பத்தினுள் ஒளித்து மறைத்து காரியமாற்றுகின்ற விடையங்கள் உருவாகின்றது. அநேகமான குடும்பங்களில் பெண்களின் மொழி சார்ந்த வன்முறை அதிகாரம், குடும்பத்தின் அதிகாரமாகிவிடுகின்றது. இந்தநிலையில் பெண்ணின் பாத்திரம் என்பது, முழுக் குடும்பத்தையும் மனக்கசப்பு கொண்டதாக, ஒருவருக்கு ஒருவரை எதிராக நிறுத்திவிடுகின்ற ஒன்றாக மாறிவிடுகின்றது. குடும்ப உறுப்பினருக்கு இடையில் நிலவுவது அசாதாரணமான வௌவேறு துருவங்கள் கொண்ட தனி உலகமாகவே இயங்குகின்றது.
பெண்களின் அதிகாரம் வெளிப்படுத்தும் போலித்தனத்தையும், அதன் பகட்டையும் எடுத்துக்காட்டுவது என்பதும், அந்த அம்சத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதும் மிகக் கடினமானது. ஒரு ஆணாக நான் இருந்து கொண்டு செய்வதே முக்கியமான காரணமாகும். இருந்தும் இதை துல்லியமாக புரிந்துகொள்ள எடுப்பான சில உதாரணம் எம்முன்னுள்ளது.
ஆம், அது தான் புலம்பெயர் சமூகத்தின் இரண்டாவது புலம்பெயர்வு. இந்த இரண்டாவது புலபுபெயர்வை கோருபவள், நடத்துபவள் பெருமளவில் பெண்ணாக இருக்கின்றாள். ஆணின் தனி உழைப்பை நம்பிய குடும்பங்களிலும், ஆணின் உழைப்பு இன்றி பெண் வாழமுடியாத நிலையிலும், பெரும்பாலான புலம்பெயர்வு ஆண்களின் விருப்பமின்றி பெண்களால் வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு பெண்கள் கையாளும் வழி என்பது பெரும்பாலும் நச்சரிப்பு கொண்ட மொழி வன்முறை தான்.
இங்கு விசா போன்ற வாழ்வியல் எல்லைக்குள்ளான நெருக்கடி சார்ந்த புலம்பெயர்வைக் குறிப்பிடவில்லை. பெருமளவுக்கு பெண்களின் முடிவுக்கு அமைய நடக்கும் இந்த விடையத்தில், அறிவியல் பூர்வமாக இந்த இரண்டாவது புலம்பெயர்வு அமைவதில்லை. ஆணே தொடர்ந்தும் உழைக்க வேண்டிய நிலையில், புதிய சூழலில் அந்த ஆண் கடுமையாக துயரங்களுடன் மேலதிகமாக உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றான். அத்துடன் புதிய சூழலில் ஆண் உழைப்பு ஆற்றலை இழப்பதும், மீண்டும் திரும்பும் சூழல் கணிசமாக நடக்கின்றது. பெண் திரும்ப மறுக்கும் போது, ஆண் மட்டும் திரும்புவதும் அல்லது அங்குமிங்குமாக ஓடி வாழ்வதும் தொடருகின்றது.
ஆணாதிக்க அமைப்பில் பெண் வீட்டு அடிமையாக ஆணுக்கு உழைப்பது அவசிமானதாக இருந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் விதி இது. இதைக் கடந்த சமூக அமைப்பில், பெண் வீட்டின் நிர்வாகியாகி, குடும்பத்தை தனது மொழி அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்துபவளாக மாறுகின்றாள். இதன் போது ஆண் என்பவன் பெண்ணின் விருப்பத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உழைக்கும் ஒரு பொருள் இயந்திரமாக பெண் கருதி அணுகுகின்றாள். உலகமயமாதலில் ஆணாதிக்கம் என்பது பாலியல் அம்சத்திலும், உடல் பலத்திலும், உலக அனுபவத்திலும் தான் ஆணிடம் காணப்படுகின்றது. விட்டின் கடமை என்பது, பெண்ணின் மொழி அதிகாரத்துக்கு உட்பட்ட ஆணாதிக எச்சமாக மாறிவிடுகின்றது.
பெண்ணின் அதிகாரம் இப்படி நெருக்கடியான வழியில் திணிக்கப்படுகின்றது. ஆண் பெண்ணுக்கு இணங்கிப் போவதன் மூலம், மௌனமாகிவிடுவதன் மூலம், மாற்று அபிப்பிராயத்தை இழப்பதன் மூலம், தனது குடும்ப நிம்மதியை காப்பாற்றமுடியும் என்ற நிலை. இதை பல குடும்பத்தில் காணமுடியும். உண்மையில் மறுபுலம்பெயர்வை தூண்டும் காரணங்கள் பெரும்பாலானவை அறிவியலுக்கு புறம்பானவை. குறுகிய குருட்டுத்தனமான வாதங்கள், வீங்கி வெம்பும் பெண்ணின் பார்வைகள், தன்னாலாகாத இயலாமை, அவநம்பிக்கைகள், பெருமை பேசும் குறுகிய வட்டம், வாழ்கின்ற சமூகத்தை தெரிந்து கொள்ள முடியாத குறுகிய கண்ணோட்டம், சமூகத்துடன் இணைந்து வாழ மறுக்கின்ற தனிமைவாதம் போன்ற பல காரணங்கள் உள்ளன. வீம்பும், பகட்டும், மோகமும் குறிப்பான தூண்டும் காரணங்களாகும். இப்படித்தான் பல முடிவுகள் தவறானதாக எடுக்கப்படுகின்றது.
இது போல் மற்றொரு உதாரணம். இன்று அநேகமாக ஓடிவாங்கும் வீடுகள் ஒருபுறம். அந்த வீட்டை அழகுபடுத்துவதில் பெண்கள் செய்யும் கூத்து ஒருபுறம். பெண்கள் வீட்டின் வண்ணத்தை மாற்றுவதில் உள்ள மனப்பாங்கில், திருப்தியற்ற நிலையற்ற அவர்களின் மனதைப் பார்க்கமுடியும். பலத்த செலவுகொண்டதும், நிறங்களை அடிக்கடி மாற்றுவதில் பெண்ணின் முடிவு எதைக்காட்டுகின்றது. வேலை செய்பவர்கள் வேலையை முடிக்க முன்னமே, மீண்டும் வீட்டின் கலரை மாற்றியடிக்கின்ற பல சம்பவங்கள். இதை அண்மைக் காலத்தில் வீடுகளை திருத்திய பல தமிழ் வீடுகளில் காணமுடியும். இந்த முடிவை பெண் எடுக்கின்றாள். இதற்கு கணவன் இணங்கிப் போவதைத்தவிர வேறு வழிகிடையாது. இது ஒரு வன்முறை மூலம் பெண்ணால் சாதிக்கப்படுகின்றது. இதுவெல்லாம் தற்செயலானதல்ல. பெண்ணின் வக்கிரமாகிவிட்ட வாழ்வியல் முறை. அடிக்கடி வண்ணத்தின் நிறம் பிடிக்காத பெண் மனநிலை என்ன? அடிக்கடி பொருட்களை புதுசாக மாற்றும், மாற்றவிரும்பும் பெண்ணின் உணர்வு என்ன? தனது கணவன் மட்டும், மாறாது எப்படி வாழ்க்கை முழுக்க பிடித்துவிடும். பொருட்களை விரும்பியவாறு தனது அதிகாரத்தின் மூலம் பொருள் உலகில் மாற்றும் பெண், கணவனை குழந்தையை அப்படிச் செய்யமுடியாது. அவர்களை ஒரு பொருளாக விரும்பியவாறு விரும்பிய இடத்தில் வைக்கவும் எடுக்கவும் முடியாது. ஆகவே அந்தக் கற்பனைப் பிரமை, அதை நோக்கி மொழி வன்முறையாகின்றது. திட்டி தீர்க்கப்படுகின்றது. ஏன், எதற்கு, எதற்காக, நாம் திட்டுகின்றோம் என்று தெரியாது, திட்டிக்கொண்டே பெண்கள் இருக்கின்றார்கள். இதை புலம்பெயர் சமூகத்தில் அநேகமான குடும்பத்தில் காணமுடியும்.
அடிக்கடி எல்லாவற்றையும் மாற்றவிரும்புகின்றவர்கள், தனது கணவனை மனைவியை மாற்றுவதையே உள்ளார விரும்புகின்றனர் என்பதே உண்மை. ஆனால் அதைச்செய்ய முடியாது சமூகத்துக்கு நடிப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை திட்டுகின்றனர். திட்டுவதுக்கு காரணத்தைக் கண்டுபிடிக்கின்றனர்.
இதன் பின்னணியில் ஒரு ராணி, ஒரு மெடலிஸ்ராக இருக்கும் நினைப்பு. அவர்கள் எப்படிப்பட்ட கவர்ச்சி, அழகைக் கொண்டு இந்த உலகில் போலியாக நடித்து வாழ்கின்றனரோ, அப்படிப்பட்ட வாழ்வை நிஜத்தில் வாழ நினைக்கும் சொந்த மனப்பிரமை, குடும்பத்தினுள் பல முரண்பாடுகளை தூண்டுகின்றது. ஒரு மெடலிஸ்ற் தனது போலியான நடிப்பு சார்ந்த வாழ்வை கவர்ச்சி செய்து காட்ட விரும்புகின்றாள். முகப்பவுடர் பூசுவது முதல் தனது சப்பாத்து முதல் தலை வரை அணியும் அணிகலன்கள் வரை, கலர் முதல் விதவிதமாக அழகுபடுத்தியே, மற்றவனில் அற்ப உணர்வை ஏற்படுத்தி கவரமுடிகின்றது. இது நிஜவாழ்வில் சாத்தியமற்றது. அதை எமது பெண்கள் குடும்பத்தினுள் மற்றவருக்காக கோருகின்றாள். ஆனால் அதை குடும்பத்தினுள் அல்ல. வெளிப்பார்வைக்கு அதாவது மற்றவர்களுக்காக குடும்ப உறுப்பினரிடம் அதை கோருகின்றனர். உண்மையில் குடும்பத்தினுள் அவளால் கூட, பல்லைக்காட்டி போலியான மகிழ்ச்சியான வெளிப்பகட்டை உருவாக்க முடிவதில்லை.
வெளியில் உள்ளவர்களுக்கு காட்டவே பகட்டாக தன்னை அழகுபடுத்தும் பெண், தனது கணவனுக்கு முன்னால் தான் அழகாக இருப்பதில்லை. இதுவே வாழ்க்கையாக கருதும் பெண், கணவனுக்கு முன்னும் அப்படி இருக்க வேண்டும் என்று கருதுவது கூட கிடையாது. ஒரே விதியல்லவா எங்கும் காணப்படுகின்றது. வெளிப்பகட்டுக்கும், போலித்தனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம், தனது கணவனுடனான குழந்தை உடனான வாழ்வில் பெண்ணால் கையாள முடிவதில்லை. நல்ல அழகான மொழியை கணவனுடன், குழந்தையுடன் உரையாடக் கூட பெரும்பாலான பெண்களால் முடிவதில்லை. இதை வெளியுலகுக்கு செய்கின்றனர்.
உண்மையில் விளம்பரத்தின் வெற்றி இது தான். போலியாக நடித்து வாழ்தல். நெருங்கி வாழ்வில் கவர்ச்சியையும், அழகையும் இழந்து சிடுமூஞ்சிக்காரியாக, கோபக்காரியாக, அலங்கோலமாக வாழ்வதே காணப்படுகின்றது. வாழ்வை போலியாக, மற்றவனுக்கு காட்டுகின்ற வாழ்வாக்கிய பின், உண்மையான மகிழ்ச்சி என்ன என்று தெரியாது போவதும், அதைத் தாமாகவே இழப்பதும் நிபந்தனையாகும். மற்றவனுக்கு காட்ட வாழ்வதும், தனக்காக வாழ மறுப்பதும், இதன் சாரமாக இருப்பதை அவர்களின் அறிவின் எல்லை உணர்த்துவதில்லை.
இதன் எதிர்மறையில் மனைவி என்ன நினைக்கின்றாள். கணவன் தனக்கு ஏற்றவனாக இல்லை என்று கருதுகின்ற மனப்பிரமையையும் உருவாக்கிவிடுகின்றாள். கணவனுக்கு எந்த தகுதியும், தான் நினைக்கும் எல்லையில் கிடையாது என்று பல பெண்கள் நம்புகின்றனர்.
பல ஆண்கள் வேலையின் சுமை தாங்கமுடியாது களைத்து வீழ்ந்து சோர்ந்து வருவதை, அவலட்சணமாக பார்க்கின்ற மனப்பிரம்மை பெண்களிடம் காணப்படுகின்றது. உழைப்பின் மதிப்பின் ஊடாக கணவனை மதிக்கின்ற மனப்பக்குவம் அவர்களிடம் அறவே இல்லாமல் போகின்றது. அவனின் உழைப்பு உருவாக்கும் பணத்தை நுகரவே, பெண்ணாக (பெண் உழைத்த போது கூட) குடும்பத்தில் அவள் இருக்கின்றாள். இயல்பாக தனக்கு ஏற்ற கணவன் அல்ல என்று கற்பிப்பதற்கு ஏற்ற, காரணத்தை பெண்கள் தாங்களாகவே கட்டமைக்கின்றனர். இதுவே சதா புறுபுறுப்பையும், தூற்றலையும் கொண்ட வாழ்வாக மாற்றுகின்றது.
பெண்ணின் வீட்டு வேலை தரும் அழுத்தம், அதன் சுமை, ஓரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் வாழ்க்கையின் சுழற்சி, கணவன் பற்றி இந்த அதிருப்தியை மேலும் பல மடங்காக்குகின்றது. இங்கு வீட்டு வேலை தவிர வெளியிலும் வேலை செய்யும் பெண்ணாக இருந்தால், அது தரும் மேலதிக சுமை வாழ்வின் மீதான சலிப்பை உருவாக்குகின்றது. இந்த நிலையில் வாழ்கின்ற ஒரு வாழ்வை, குறைந்தபட்சம் ரசிக்கத் தெரியவேண்டும். இதை புறுபுறுப்பாக, ஒரு புலம்பலாக மாற்றுவதால் என்ன பயன்? யாரையாவது திட்டித் தீர்ப்பதோ, கணவனையும் குழந்தையையும் தூற்றுவதாலோ, இதற்கு பரிகாரம் காணமுடியாது. ஆனால் பெரும்பாலான பெண்கள் இதையே செய்கின்றனர். குடும்பத்தினுள் நிலவவேண்டிய குறைந்தபட்ச மகிழ்ச்சியை இழப்பதன் மூலம், நெருக்கடியை தம்மைச் சுற்றி அதிகரிக்க வைக்கின்றனர். கணவன், குழந்தை மற்றும் தாய் தந்தை அல்லது மாமன் மாமி தமக்கு எதிராக செயல்படுவதாக கற்பித்துக்கொண்டு எதிர்வினையாற்றுகின்றனர். சதா அவர்கள் மேல் பிழை பிடிக்கின்றனர்.
குடும்பத்தில் இருந்து தன்னை அன்னியப்படுத்தியபடி, தனது கடமைகளாக இதை தலைவிதியாக கருதி, தனக்குள் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டபடி சீரழிகின்ற நிலையே, பெரும்பாலான பெண்களின் உணர்வாகி விடுகின்றது. தன்னைச் சுற்றிய அதிருப்தியும், மற்றவர்கள் மேல் எரிந்து வீழ்வதும் வாழ்க்கையாகிவிடுகின்றது.
No comments:
Post a Comment