இரண்டாவது முறையாக தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபராகப் பதவி யேற்ற ஹீயுகோ சாவேஸ், இவ்வாண்டு மே தினத்திற்குள் நாட்டின் முக்கியத் தொழிற் துறைகளை நாட்டுடைமையாக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் வகையில் அரசியல் சாசனத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார்.
இந்த மே நாளன்று நடைபெற்ற தொழிலாளர்கள் பேரணியில் உரையாற்றிய சாவேஸ், ஒரினோகோ எண்ணெய்ப் படுகையில் இருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சொந்தமான முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நாட்டுடைமையாக்கும் முடிவை வெளியிட்டிருக்கிறார். இந்நிறுவனங்களில்
பன்னாட்டு முதலாளிகளின் பங்குகள் சிறுபான்மையாகக் குறைக்கப்பட்டிருக் கின்றன. விலக விரும்புகிறவர்களுக்கு பழைய மதிப்பீட்டின்படி நட்ட ஈடு வழங்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, ஐ.எம்.எப் போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக்கொள்வதாகவும் வெனிசூலா அறிவித்திருக்கிறது. இந்நிறுவனங்களை இனிமேலும் விட்டுவைத்தால் வெனிசூலாவைச் சூறையாடி விடுவார்கள் என்றும், இதுநாள் வரை அவர்கள் வெனிசுலாவிலிருந்து சுருட்டியதை திரும்பத் தரவேண்டும் என்றும் தேசியத் தொலைக்காட்சியில் முழங்கியிருக்கிறார் சாவேஸ்.
மேலும் மின்சாரம் தொலைபேசித்துறை போன்றவையும் நாட்டுடைமையாக்கப்பட இருக்கின்றன. உள்நாட்டுத் தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்குப் பன்னாட்டு வங்கிகள் மறுத்தால், அவையும் வெளியேற வேண்டி வரும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. வெனிசூலாவின் இரும்புச் சுரங்கங்களைத் தம் பிடியில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், வெட்டி யெடுக்கும் இரும்பு அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமக்குத் தேவையான இரும்பு எஃகுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை நிலவுகிறது. உற்பத்தியாகும் இரும்பை உள் நாட்டில் விற்க மறுத்தால், இரும்புக் கம்பெனிகளும் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் சாவேஸ்.
ஒடுக்கப்பட்ட நாடுகளைக் கேட்பாரின்றிச் சுரண்டி வரும் பன்னாட்டு முதலாளி கள் வெனிசூலாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். அமெரிக்க அதிபர் புஷ்ஷும், ஏகாதிபத்திய ஊடகங்களும் சாவேஸை சர்வாதிகாரி யென்றும், வெனிசூலாவில் ஜனநாயகம் இல்லையென்றும் ஏற்கெனவே அவதூறுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இனி அத்தகைய கூச்சலும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளும் தீவிரமடையும் என்பதில் ஐயமில்லை.
90களிலேயே புதிய தாராளவாதக் கொள்ளைக்குப் பலியாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில், அவற்றுக்கு எதிராக மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த பல போராட்டங்களின் ஒரு விளைவுதான் சாவேஸ். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை அரசுகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், திவாலான பொருளாதாரங்கள், உணவுக் கலகங்கள்.. என்பவைதான் 90களில் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தின் வரலாறு. வெனிசூலாவின் அரசு ஒரு கம்யூனிஸ்டு அரசு அல்ல என்ற போதிலும், சாவேஸின் நடவடிக்கைகள் முழு நிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்ற போதிலும் தனது நடவடிக்கைகளின் மூலம், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் உலக மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார் சாவேஸ்.
பொதுத்துறைகளையும், காடுகளையும், கனிவளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குவதன் விளைவு முன்னேற்றமல்ல, பேரழிவுதான் என்பதற்கு வெனிசூலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடந்த கால வரலாறு ஒரு பாடம். ""இன்றைய உலக நிலைமைகளில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் தவிர்க்கவியலாதவை'' என்று கூறி நந்திக்கிராமத்தையும் சிங்குரையும் நியாயப்படுத்தும் மார்க்சிஸ்டுகளுக்கோ, சாவேஸின் நடவடிக்கைகள் ஒரு சாட்டையடி. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் வெல்லப்பட முடியாதவை என்றும் அவற்றின் முன் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆளும் வர்க்கங்களும் போலி கம்யூனிஸ்டுகளும் செய்து வரும் பொய்ப்பிரச்சாரத்தைத் தனது நடவடிக்கைகளின் மூலம் பொய்ப்பித்திருக்கிறார் சாவேஸ்.
உலக முதலாளித்துவம் வெல்லப்பட முடியாதது அல்ல. இறையாண்மைக்கும் சுயசார்புக்கும் சோசலிசத்துக்குமான போராட்டங்கள் மென்மேலும் தீவிரமடையுமே யன்றித் தணிந்து விடாது என்ற உண்மையையும் வெனிசூலா நிரூபித்திருக்கிறது.
No comments:
Post a Comment