தமிழ் அரங்கம்

Tuesday, July 31, 2007

வன்னி மக்களின் துயரங்கள்

வன்னி மக்களின் துயரங்கள்


பி.இரயாகரன்
31.07.2007



புலிகளின் தனிமனித பயங்கரவாதம் உருவாக்கிய இராணுவ வாதங்கள் சொந்த நெருக்கடியில் சிக்கி திணறுகின்றது. இப்படி மக்களின் வாழ்வியலில் இருந்து அன்னியமாகிய புலியிசம், தொடர்ச்சியாகவே தோற்கின்றது. இதன் விளைவு பேரினவாதத்தின் வெற்றியாகின்றது. புலிகளின் அரசியல் தமது சொந்த வர்க்க நலனுக்குள், அதுவும் குறுகிய ஒரு சிறு கும்பலின் நலனாகிவிட்ட நிலையில், அதை தனது சொந்த இராணுவ வழிகளில் தொடர்ச்சியாகவே பாதுகாக்க முனைகின்றனர்.



இதன் விளைவு தமது சொந்த தோல்வியை தவிர்ப்பதற்கான தற்காப்புக்கான இறுதி யுத்தத்தை, தமிழீழத்துக்கான இறுதி யுத்தமாக கூறிக்கொண்டு நடத்துகின்ற வெறியாட்டம் தான், இன்றைய வன்னித் துயரம். இதற்காக எல்லாவிதமான பாசிச கூத்துகளையும் மக்கள் மீது நடத்துகின்றனர்.



இப்படி புலிகள் தமது சொந்த அதிகார வன்முறைக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மக்களின் மீதும், இந்த புலிப் பயங்கரவாத வன்முறையை ஏவி விட்டுள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து விலகி தாமும் தம்பாடும் என்று வாழ்ந்தவர்களை, இனி அப்படி வாழமுடியாது என்பதை புலிகள் தமது வன்முறை மூலம் வீட்டுக்கு வீடு தமது அடாவடித்தனத்தால் உணர்த்தி வருகின்றனர்.



முன்பு வீட்டுக்கு ஒருவர் புலியில் இணையவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இணைத்தவர்கள், இன்று வீட்டில் ஒருவரைத் தவிர அனைவரையும் புலியுடன் பலாத்காரமாக இணைக்கின்றனர். முன்பு குழந்தைகளை பலாத்காரமாக திருடியவர்கள், இன்று சமூகத்தையே சூறையாடுகின்றனர். மக்கள் ஒடி ஒளிய முடியாத வகையில் மக்களையே கண்காணிக்கும் புலியிசமும், மறுபக்கம் மக்கள் பற்றிய முழு விபரத்தையும் திரட்டிவைத்துக் கொண்டு அலையும் சமூக விரோத லும்பன்கள்.



வீடுவீடாக புகுந்து, குழந்தைகளை குற்றவாளிச் சமூகமாக இழுத்துச் செல்லுகின்ற புலிக் காட்டுமிராண்டித்தனம். இதை தடுக்கும் பெற்றோருக்கு அடி உதை, கை கால் முறிப்பு முதல் மரணம் வரை பரிசாக கிடைக்கின்றது. எங்கும் இதை உணர்ந்தும், அனுபவித்தும், தெரிந்து கொண்டும் வாழ்கின்றது வன்னிபெரு நிலப்பரப்பு.



இது சார்ந்த மரணவோலங்கள் கேட்காத வன்னிக் கிராமம் கிடையாது. ஒவ்வொரு நாளும் வன்னிக்காடெங்கும் இது எதிரொலிக்கின்றது. மறுபுறம் புலிகளினால் பலாத்காரமாக இழுத்துச் செல்லப்படுபவர்கள், கட்டாயப் பயிற்சிக்குள்ளாகின்றனர். இதன் போது, அதை மீறுபவர்களுக்கு அடி உதை முதல் மரணம் வரை அன்றாடம் புலியிசத்தின் தீர்ப்பாகின்றது.



இப்படி ஆங்காங்கே உயிரற்ற சடலங்கள் பெற்றோரிடம் கொடுக்கப்படுகின்றது. ஏன் எப்படி இந்த மரணம் நிகழ்ந்தது என்று யாரும், சொந்த சுயவிசாரணையை செய்யமுடியாது. மரணங்களும், மரண ஓலங்களுமே கிராமங்களில் பொது நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. இதைக் கடந்து வாழ்தல் என்பது, புலி நிர்வாகத்தில் சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. மரணத்தின் வருகை புலியிசத்தின் வழியில் மட்டுமல்ல, பேரினவாதத்தின் குரூரத்தாலும் கூட விதைக்கப்படுகின்றது.



வன்னி நிலப்பரப்பு எங்கும், எதிலும் கண்காணிப்பும், தண்டனைகளும். வன்னியில் நிகழும் மரணங்களில் சுய ஒப்பாரியைக் கூட வைக்கமுடியாது. புலியிசத்தின் ஆட்சி, அதன் நீதி, அதன் ஒழுக்கம், அதன் பண்பாடு என அனைத்துமே இதுவாகிவிட்டது.



புலியிசத்தின் பாசிச கொடுங்கோலே, சமூக செங்கோலாக திணிக்கப்பட்டுவிட்டது. யாரும் ஏன் எதற்கு என்று மூச்சுவிட முடியாது. அனைத்தையும் தலையில் சுமந்த படி, பீதி பொருந்திய ஒரு ஊமையாக வாழுகின்ற சமூக வாழ்க்கையைத் தான், சுபிட்சமாக காட்டுகின்ற புலியிசத்தின் வக்கிரம்.



மக்கள் தாம் ஏன் எதற்கு புலிகளின் நுகத்தடியின் கீழ் இப்படி நடைப்பிணமாக வாழ்கின்றோம், மரணிக்கின்றோம் என்று கூட தெரியாத அளவுக்கு, மனித துயரங்கள்.



எங்கும் எதிலும் புலிகளின் அத்துமீறல்கள். இவை அனைத்தும் புலித் தமிழீழத்தின் பெயரில் தான் அரங்கேற்றுகின்றன. இதன் மூலம் தான், தமிழ் மக்களுக்கு சொர்க்கத்தை பெற்றுத்தரப் போகின்றார்களாம்!



அதற்காக மக்கள் புலிப் பயங்கரவாதத்துக்கு இரையாவதை கண்டுகொள்ளக் கூடாது என்பதே புலிக்கட்டுப்பாடு. இதையே தமிழீழப் போராட்டத்தின் போராட்ட வழி என்று கூறுகின்ற புலிப் பாசிசமும், அரங்கேறுகின்றது.



ஆனால் இந்த புலியிசம் தோற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வினாடியும் மக்களிடம் புலிகள் தோற்கின்றனர். இந்த தோல்வி கிழக்கில் மட்டுமல்ல வன்னியிலும் தொடங்கிவிட்டது. இதை ஒரு பாரிய இராணுவ வெற்றி மூலம் வெற்றியாக காட்டி தடுக்கின்ற கடந்த கால புலி உத்திகள், வன்னித் தோல்வியை தவிர்த்துவிடாது.



கிழக்கில் பேரினவாதத்தின் வெற்றி என்பது, கிழக்கு மக்களிடம் புலிகள் தோற்றதன் விளைவாகும். இந்த தோல்வி என்பது, வெல்ல முடியாத அரசியல் நிபந்தனைகளாலானது. இதே நிலைமை வன்னியில் இன்று எதார்த்தமாகிவிட்டது. பேரினவாதத்தின் சொந்த கூலி மனப்பாங்கைத் தாண்டி, அது தனது ஆக்கிரமிப்பு வெறியுடன் வெல்லும் அளவுக்கு, புலிகள் மக்களில் இருந்து நிரந்தரமாகவே அன்னியமாகிவிட்டனர். மக்களை வெறும் மந்தைகளாக்கி, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள் புலிகள். இப்படி அடக்கியொடுக்கியதன் விளைவால், மக்கள் தமது சொந்த சுயத்தை இழந்துவிட்டனர். மக்கள் தாம் தப்பிப்பிழைக்கவே, அங்குமிங்குமாக நாயிலும் கீழாக அலைபாய்கின்றனர்.



மக்களுக்கு வெளியில் வன்முறையை நம்பி இயங்கும் லும்பன் கும்பல், அதுவும் மனித பண்பாடற்ற காட்டுமிராண்டிகளால் ஒருநாளும் மக்களை தலைமை தாங்கமுடியாது.



மனிதத்தை நேசிக்கவோ, மனிதத்தை வாழவைக்கவோ இவர்களால் முடியாது. தட்டிச் சுருட்டி தின்பதில் தொடங்குகின்ற புலியிச வக்கிரமே, அனைத்துமாகி மிதக்கின்றது.



இந்த மக்களை காப்பாற்ற, வழிகாட்ட யாரும் கிiடாது. ஒருபுறம் பேரினவாதம் மறுபக்கம் புலியிசம். இதற்குள் புலியெதிர்ப்பு அணி புலியொழிப்பு என்று, மக்களின் முதுகில் குத்தி தனது துரோகத்தை காறி உமிழ்கின்றது. இப்படி இலங்கை வாழ் தமிழ் மக்களின் துயரங்களில் வாழ்கின்ற புல்லுருவிகளின் செயல்பாடுகளே அரசியலாகின்றது.



மக்களுக்காக, அவர்களின் சொந்த விடுதலைக்கான எந்த அரசியல் வழிகாட்டலையும், ஏன் எந்த முயற்சியையும் யாரும் செய்வது கிடையாது. இதுவே மக்களின் துயரத்தை தொடர்ச்சியாக பலமடங்காக்குகின்றது. சுற்றிச் சுற்றி இந்த மக்கள் விரோத அரசியல் சாக்கடைக்குள் மக்களை ஆழ்த்தி, மனித துயரத்தை தக்கவைத்து பிழைப்பதே எதார்த்தமாகி, அதுவே அரசியலாகி விடுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்கவும், மக்கள் தமக்காக தமது சொந்த விடுதலைக்காக போராடவும் வேண்டியுள்ளது. இதை மறுத்து நிற்கும் அனைத்தையும், அம்பலப்படுத்தி போராட வேண்டிய காலகட்டத்தில் தான், இந்த வன்னித் துயரம் மக்களின் தலைவிதியாக மக்கள் விரோதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.


No comments: