தமிழ் அரங்கம்

Monday, July 30, 2007

சி.பி.எம்.இன் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

நந்திகிராமப் படுகொலைகள்:
சி.பி.எம்.இன் பயங்கரவாதத்துக்கு
எதிரான ஆர்ப்பாட்டம் - பிரச்சார இயக்கம்


மே.வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்களும் போலீசும் இணைந்து நடத்திய கொலைவெறியாட்டத்தை மூடி மறைத்து, கூசாமல் அவதூறு பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சி.பி.எம். கட்சி.


இக்கோயபல்சு புளுகுணிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியும், சி.பி.எம். கட்சியின் பாசிச கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டியும், மே.வங்க போலி கம்யூனிச அரசை மண்டியிட வைத்த நந்திகிராம மக்களின் உறுதிமிக்க போராட்டத்தை விளக்கியும், மறுகாலனியாக்கத்தை வீழ்த்த நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.


இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பாக, மே.வங்க சி.பி.எம். அரசின் படுகொலைகளைக் கண்டித்து 26.3.07 அன்று நடந்த ஆர்ப்பாட்டமும், பரமக்குடியில் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் 5.4.07 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டமும், புத்ததேவின் அண்டப்புளுகையும், விவசாயிகளை நரபலி கொடுத்து பன்னாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்யும் சி.பி.எம். அரசின் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்தி முன்னணித் தோழர்கள் ஆற்றிய கண்டன உரையும் உழைக்கும் மக்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தன. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் வீச்சையும் அது உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் கண்டு பீதியடைந்து, வாராந்திர நன்கொடை வசூலுக்காக வரும் சி.பி.எம். கட்சியினர், அந்த வாரத்தில் திருவாடனை சந்தை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.


சென்னை அருகே, ஆலைத் தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர்களும் நிறைந்த கும்மிடிப்பூண்டியில் மார்ச் 28ஆம் தேதியன்று பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றிய தெருமுனைக் கூட்டமும், நெய்வேலியில் ஏப்ரல் 9,10,11 தேதிகளில் டவுன்ஷிப், அனல் மின்நிலைய வாயில், மந்தார குப்பம் ஆகிய பகுதிகளில் பு.ஜ.தொ.மு. சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டங்களும், தொழிலாளர்களிடம் சி.பி.எம். மீதான பிரமைகளைத் தகர்த்து புரட்சிகர சங்கத்தில் அணிதிரண்டு போராட அறைகூவின.


கொலைகார முதல்வர் புத்ததேவின் கொடும்பாவியை எரித்து மார்ச் 17ஆம் நாளன்று போராட்டம் நடத்திய தஞ்சை ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு 8.4.07 அன்று தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் பொதுக்கூட்டத்தை நடத்தின. ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், கர்நாடக மாநில உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சி.பி.எம்.மின் ஏகாதிபத்திய சேவையையும், அதன் பொய்கள் சதிகள் கொலைகளையும் அங்குலம் அங்குலமாகத் திரைகிழித்துக் காட்டிய இப்பொதுக்கூட்டமும், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள அறைகூவிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.


புதுச்சேரியில் தேங்காய்திட்டு, முருங்கம்பாக்கம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், திருபுவனை, திருவண்டார்கோயில் ஆகிய இடங்களில் பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. சார்பாக ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. துறைமுக விரிவாக்கம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக புதுவை மக்கள் போராடி வரும் சூழலில், கொலைகார சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்தியும் நந்திகிராம மக்களின் போராடப் படிப்பினைகளை உணர்த்தியும் நடந்த இக்கூட்டங்கள் புதுவை மக்களிடம் விழிப்புணர்வூட்டுவதாக அமைந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.


உசிலம்பட்டி வட்டாரத்தில், விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற கொலைகார சி.பி.எம். ஆட்சியாளர்களுக்கு எதிராக சாத்தங்குடி, செல்லம்பட்டி, கருமாத்தூர், முண்டுவேலம்பட்டி, ஆரியபட்டி ஆகிய ஊர்களில் தெருமுனைக் கூட்டங்களையும், உசிலம்பட்டி, செக்கானூரணி, திருமங்கலம் ஆகிய ஊர்களில் பொதுக் கூட்டங்களையும் வி.வி.மு. நடத்தியது. செங்கொடி ஏந்தி விவசாயிகளின் தோழனாக நாடகமாடிய பாசிச சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்திக் காட்டிய இப்பிரச்சார இயக்கம், இவ்வட்டாரமெங்கும் உழைக்கும் மக்களிடமும் இடதுவலது போலி கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகளிடமும் புதிய பார்வையையும் புதிய சிந்தனையையும் விதைத்தது.


நந்திகிராமப் படுகொலைகளுக்கு எதிராக இப்புரட்சிகர அமைப்புகள் ஒட்டிய சுவரொட்டிகளை பல ஊர்களில் அவசர அவசரமாகக் கிழித்தெறிந்த சி.பி.எம். குண்டர்கள், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக, உழைக்கும் மக்களிடம் உண்மைகளை மூடிமறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், மறுகாலனியாக்கத்துக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து நடத்திவரும் பிரச்சாரமும் போராட்டங்களும், ஏகாதிபத்திய கைக்கூலிகளான இத்துரோகிகளை அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி முடமாக்கியே தீரும் என்பது உறுதி.




பு.ஜ. செய்தியாளர்கள்.

No comments: