தமிழ் அரங்கம்

Saturday, August 4, 2007

திருட்டு முழி

""ஏ! சரோசா... என்ன, பாக்காத மாதிரி போய்ட்ருக்க?''

""ஓ! ராணி, வா, வா, தப்பா எடுக்காதே, மாப்புள கார்ல வந்து இறங்கிட்டாரு, ஆலம் கரைக்கச் சொன்னாங்க. அதான் ஒன்ன கூடப் பாக்குல.''

""ஆமாம்! வீட்லதான் மாடு கன்ன வச்சிட்டு பொழுதுக்கும் லோல்படுற. இங்கவேற ஆடுறியா, ஆலம் கரைக்குறாளாம், அதுக்குத்தான நம்பள கூப்புடுவாளுவ, வீடியோ எடுக்குறப்ப பாரு நம்மள கண்ணு தெரியாம போய்டும். போறியா, வா கெடக்கு!''

""ஹி... ஹி... தே மெதுவா பேசு.. நீ வேற!'' சிரித்துக் கொண்டே ராணியை அடக்கினாள் சரோசா.

""சரி! மவள கடலூர்ல கட்டிக் கொடுத்தியே... நல்லா இருக்கா?'' பேசிக் கொண்டே திருகாணியை திருகியபடியே தோட்டை பிடித்துப் பார்த்துக் கொண்டாள்.

""ஊக்கூம்... மருமவன் வேல சரியில்ல, அவரு வேல பாத்த சோடா கம்பெனிய இழுத்து மூடிட்டானுங்க. ரெண்டு புள்ளைய வச்சிகிட்டு அங்க இருந்து ஏன் கஷ்டப்படுறீங்கன்னு... சேம்பரத்துக்கே இட்டாந்துட்டேன்.''

""நம்ப விஜி புருஷன் கூட அப்புடி தாங்குறேன், புவனகிரியில ரொட்டிக் கம்பெனி வச்சு என்னமா இருந்தாரு, இப்ப என்னடான்னா? பொழப்பு சரியில்லேன்னு திருப்பூரு போயிருக்காராம் திருப்பூரு...!''

""ஆமாம் இப்ப எந்த புள்ள ரஸ்க்கு திங்குது, வர்க்கி கடிக்குது? நாய் பீயாட்டம் ஏதோ ஜிகினா தாள்ல சுத்தி வச்சி எப்பபோட்டதையோ கொடுக்குறான். அதத் திங்கதானே அலையுதுங்க.''

""என்னமோ போ... சொச்ச காலத்த ஓட்டுறதுக்குள்ளே உயிர் போய் உயிர் வருது... ஏது? புது டிசைனா காதுல கெடக்குது, நல்லா இருக்கு! எங்க எடுத்த?'' பேசிக் கொண்டே காது, மூக்கை நோட்டம் விட்டாள்.

""நீ வேறக்கா? காலுக்கு செருப்பே எடுக்க முடியல. இதுல காதுக்குஎங்க எடுக்குறது? கல்யாண வீட்டுக்கு வெறுங்காதோட வந்தா நல்லா இருக்குமா? அதான் எரவ வாங்கிட்டு வந்தேன். உங்க அண்ணன் கொடுக்குற காசுல மாட்டுக்கே நல்ல மூக்கணாங் கயத்தக் காணோமாம். இதுல நான் எங்க தோட்டுக்கு அலையறது?'' சரோசா அலுத்துக் கொண்டாள்.

அதுவரை ராணிக்குப் பின்னால் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அஞ்சம்மாளைக் கவனிக்காத சரோசா வடக்கயும், தெக்கயும் அது வாயசைப்பதை திடீரென்று கவனித்தவாறு பக்கமாய் போய் உட்கார்ந்து தோளைப் பிடித்து விசாரித்தாள்.

""என்ன பாட்டி! என்ன அடையாளம் தெரியுதா? என்ன பலமா சாப்பாடா! வாயை தெறக்கல?''

""சிங்கப்பூரு குலுக்கி, இங்க வாடி சிறுக்கின்னானாம்! நீங்க மினுக்குற மினுக்குல என்ன அடையாளம் தெரியுமா? நானே வெத்தல பாக்கு இல்லாம வெறும் வாய மென்னுகிட்டு இருக்கேன்... கல்யாணம் பண்றாளுங்களாம். கல்யாணம்... வந்தவங்களுக்கு ஒரு வெத்தலபாக்கு குடுக்க ஆளக் காணோம். அவ அவ குந்தானியாட்டம் போட்டோ புடிக்க ஆடுறாளுவ! இவுனுவளா, பெரிய முந்தானையா இருந்தா தடுக்கு தூக்கிட்டு அலையுறானுவ!''

""கடைஞ்ச மோர்ல வெண்ணைய எடுத்து, கடக்குட்டிக்கு கல்யாணம் பண்றவள்ல... லேசு பட்ட சிறுக்கியா அவ...''

""தே நீ வேற... வந்த இடத்துல வம்ப வளத்து வுட்றாத சரோசா. அது வாயை புடுங்காத... வண்ட வண்டையா வரும்.''

""என்னாது...'' அஞ்சம்மாள் காதை தூக்கி ஏதோ கேட்க, ""ஒண்ணுமில்ல! தோ வெத்தல வாங்கியாறச் சொல்றேன்!'' என்று சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருக்கும் காசை அவிழ்த்தாள் ராணி.

""ஊருபட்ட சனம் வந்துருக்குன்னுதான் பேரு? எது நம்பள வந்து எட்டி விசாரிக்குது. இதே அவுரு இருந்தா இப்புடி பார்க்காத மாதிரி போவானுவளா? சோறா கொளஞ்சி, ஆறால்ல ஓடி வருவானுவ, அஞ்சு பத்து வாங்க. இப்ப நமக்கு ஒரு சோடா வாங்கிக் கொடுக்க ஆளக் காணோம். அறுவடைக் காலத்துல எலிக்கு எட்டுக் கூத்தியாளாம்! இப்ப ஒரு நாயக் காணோம்!'' கிழவியின் வாய் எல்லா பக்கமும் வளைந்தது.

""அய்யய்யோ இது மண்டபத்த ரெண்டாக்காம போவாது போல இருக்கே! சரோசா நல்ல நேரத்துல நான் இத அழச்சுட்டு கௌம்பறேன்.. வரக்குள்ள சீர்காழி வந்துட்டுப் போ! என்ன?''

""எங்கக்கா இப்ப மறுவீடு வர்றப்ப எப்புடி வர்றது? அப்புறம் வாரேன்... நீயுந்தான் வீட்டுக்கு வந்து தங்கிட்டு காலைல போறது... இப்புடி பறக்குறியே...?''

""இல்ல சரோசா, கோவிச்சுக்காத... அடுத்த மொற வாரேன்! அங்க கோழி அடைக்கக் கூட ஆளு இல்ல... வர்றேன்.''

""ஏய் மாரி மவளே.. ரோசா... வர்றட்டா... கண்ணே புரியுல, இவுனுவ வேற சாணி மாடாட்டம் வழிய மறிச்சு மூஞ்சுல லைட்ட அடிக்குறானுவ... ஊக்கூம்'' கிழவி முனகிக் கொண்டே ஊர்ந்தது.

···

""வாங்க, வாங்க என்று விரித்த உதடுகளை மூடாதவாறு கைகூப்பியவாறு மண்டபத்துக்குள் வந்தவர், சந்தேகம் கேட்ட மனைவியிடம் எல்லாம் நம்ப சொந்தக்காரங்கதான் என்று சொல்லிக் கொண்டே வெடுக்கென ஏதோ நினைவுக்கு வந்தது போல ""செருப்பை இடத்த மாத்தி அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு விட்டியா?'' என்று மனைவியிடம் கேட்க அவள் விழித்தாள்.

""ஏண்டி! அறிவு கெட்டவளே! ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒவ்வொரு செருப்பா வாங்க முடியும்? உனக்கு எத்தன மொற தொலைச்சாலும் புத்தி வராதா! போய் மொதல்ல மாத்தி போட்டுட்டு வா''

தணிந்த குரலில், அதட்டலாக மனைவியை விரட்ட அவள் பட்டுப்புடவை சரசரக்க வாசல் பக்கம் ஓடினாள்.

""என்ன முகூர்த்தமே முடிஞ்சு, பந்தி போட்டாச்சு! இப்பதான் வர்றீங்க?'' மண்டபத்துக்குள் வந்தவரை வரவேற்றார் ஒருவர்.


""அதுக்குள்ளயா? மெல்ல ஆகும்னு நெனச்சேன்.'' பக்கத்திலிருந்த வயதானவர் ""அதெல்லாம் அப்ப! அந்த காலத்துல அய்யுரு மந்தரம் சொல்லி முடிக்கறதுக்குள்ள உட்கார்ந்துருக்குற நம்ம காலே மரத்துப் போயிடும். காலத்துக்கு ஏத்த மாதிரி அவரும் மொண மொணன்னு முடிச்சுக்குறாரு'' என்றார்.

""எங்க இந்த அய்யரு? பொண்ணு, மாப்பிள்ளைய நெற நாழி வச்சு மணவறைக்கு அழைக்கணும். ஒண்ணத்தக் காணோம். இடுப்புல செல்லு போன சொருவிவிட்டு எடுத்து எடுத்து பேசுறதுல, அந்தாளு மந்திரம் சொல்லுறானா, வூட்டுக்குப் பேசுறானான்னு ஒண்ணுமே புரியல. எல்லாம் புது பழக்கமா இருக்கு!'' அலுத்துக் கொண்டார் இன்னொருவர்.


""என்ன சாப்புட்டாச்சா! சாப்புட்டீங்களா! எல்லாம் சாப்புட்டா ஒரு வேல முடிஞ்சிடும்...'' கூட்டத்தைக் கிளப்பிவிட்டது ஒரு குரல்.

""வாங்க, வாங்க, என்னா! என்ன பாக்குறீங்க... மாப்ள வீடுன்னா இங்க எழுதுங்க! பொண்ணு வீடுன்னா அங்க...!'' வேறு எதற்கோ அங்குமிங்கும் அலைந்தவரை மொய் எழுதும் மேசை பக்கம் கவனிக்க வைத்தது இன்னொரு குரல்.

மாப்பிள்ளையின் அப்பா தங்கசாமி சற்று தள்ளி நின்று மொய் எழுத ஆரம்பித்தவனிடம் ஜாடை காண்பித்து தனியாக அழைத்தார்.

""டேய்... கூப்ட்டா சட்டுன்னு வரமாட்டீயா! தோ பாரு நீயும் கணேசனும் மட்டும் மொய் எழுதுங்க, அந்த ராமலிங்கத்தை ஏன் பக்கத்துல வுட்ட? பாதிய அவன் பாக்கெட்ல வச்சிட்டுப் போயிடுவான். புரியுதா? அவன மெல்ல போவ சொல்லிட்டு, கணேசன வச்சிட்டு எழுது, நீ கீழ குனிஞ்சிகிட்டே இருக்காத. சாப்புட்டுப் போறவங்கள பாத்து விசாரி... அப்பதான் கதைக்கு ஆவும். போ போ சொன்னது ஞாபகம்'' தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்தபடி... உள்ளே குரல் கேட்க வேகமாய்ப் போனார்.


···


""அப்பயே நெனச்சன்யா... மாப்பிள வீட்டு ஆளுன்னு ரோசனை பண்ணாம வுட்டுட்டேன்.'' கூட்டமாய்த் திரண்டபடி பந்தி பரிமாறும் வாசலில் ஒருவரை நடுவில் வைத்து ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.


தங்கசாமி வேகமாய் கூட்டத்தை விலக்கி நெருங்க ""வாங்க சம்மந்தி. திருட்டுப் பய போல இருக்கு. பந்தியில சாப்புடறப்பவே திருட்டு முழி முழிச்சிகிட்டு இருந்தான். பாத்தா மண்டபத்த நோட்டம் விட்டுகிட்டு கடைசியில இந்த சில்வர் குவளையத் தூக்கிகிட்டு வாச வரைக்கும் போயிட்டான்.. டப்புன்னு மடக்கிட்டேன். திருட்டுப் பய..'' அடிக்க கையை ஓங்கினார், பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர்.


""ரெண்டு நாளா கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திகிட்டு பாத்துகிட்டு இருக்கோம். இங்கயே நொழஞ்சிட்டீயா?'' தங்கசாமி அவன் முதுகில் பலமாய் வைத்தார்.

""அடிக்காதீங்க... சத்தியமா சோறு திங்கதான் வந்தேன். தண்ணி குடிக்கத்தாங்க ஜெக்க எடுத்தேன். திருடல சார்...'' பிடிபட்டவன் கும்பிட்டபடி இறைஞ்சினான்.


""தண்ணி குடிக்குற பய, எதுக்குடா வாசல் வரைக்கும் குவளயத் தூக்கிட்டுப் போன... நாலு போட்டாதான்யா அடங்குவானுங்க.''


""ஊம் ஆள பாத்தியா! மாப்பிள மாதிரி, வெள்ள வேட்டி, வெள்ள சட்டை.''


""வீடு பூந்து, பகல் கொள்ள அடிக்குற காலமா போச்சு. இவனுகள எல்லாம் இப்புடியே விடக்கூடாதுங்க போய் போலீஸ் ஸ்டேசன்ல விடணும்.''


""நீங்கவேற அதவிட பின்னாடி கொண்டு போயி கட்டிவச்சி உரிக்கணும், பட்டப் பகல்ல இத்தன பேரு இருக்கோம். துணிச்சலா வந்து குவளயத் தூக்குறான்னா உயிரோடு விடலாமா இவனை?'' ஆளாளுக்கு ஆவேசத்துடன் அடிக்கப் பாய்ந்தனர்.


""ஐயா... ஐயா... சார்! சார்! அடிக்காதீங்க. இன்னம உள்ளாற வரமாட்டேங்க. சத்தியமா திருடலங்க'' இழுத்த இழுப்பில் சட்டைப் பொத்தான்கள் கழண்டு விழ தழுதழுத்த குரலில் கெஞ்சினான்.


""குவளய திருடிட்டு பெரிய யோக்கியன் மாதிரி பேசுறியா? மூஞ்சப்பாரு, கல்யாண வூட்ல நாம ஏன் இந்த நாயி மேல கை வச்சிகிட்டு! வுடக்கூடாது, வாங்க பத்துபேரு... போய் ஸ்டேசன்ல செமத்தியா கவனிக்க வப்போம்... டேய் புடிடா குவளய கைல!''


""என்ன தைரியம் திருட்டுப் பயலுக்கு, போடு தேங்கா பால்சோறுன்னு உனக்கு மரியாத வேற கேக்குதா?'' சுற்றியிருந்தவர்கள் முணுமுணுக்க அவனைத் தரதரவென்று வாசல் பக்கம் இழுத்துச் சென்றது ஒரு கூட்டம்.


கழுத்தில் மாலையுடன் புது மாப்பிள்ளை குறுக்கே வர, ""அட நீங்க போய் உங்க வேலைய பாருங்க மாப்பிள்ள, இவன நாங்க பாத்துக்குறோம். மத்தவங்கல்லாம் போங்க, போங்க...'', ஒருவர் நிலைமையைச் சமாளிக்கப் பார்த்தார்.


""நீங்க வாங்க! நீங்க வாங்க!'' வேகமாய் மாப்பிள்ளையை அழைத்து வந்து, மணவறைக்கு முன்பு பரப்பி வைக்கப்பட்டிருந்த குடம், குத்துவிளக்கு, பண்டபாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர் இவைகளோடு பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒன்றாய் நிற்க வைத்தார் சம்பந்தி.


""என்ன வீடியோகார்! கிண்டியிலேந்து கிரைண்டர் வரைக்கும் ஒரு பொருளும் விடுபடாம மாப்பிள்ளையோட சேர்த்து புடிங்க, பாத்தா எல்லாரும் திருப்தியா சொல்லணும்.'' தங்கசாமியும் படம் பிடிப்பதற்கு ஏத்தமாதிரி பாத்திரங்களை ஒழுங்குபடுத்தினார்.


""ஸ்மைல் ப்ளீஸ். கொஞ்சம் சிரிங்க,'' மாப்பிள்ளை சிரித்தபடி நிற்க திரும்பவும் வீடியோகிராபர் ""சார் கொஞ்சம் கண்ணை சொருகாம கொஞ்சம் அப்படியே என்ன முழிச்சு பாருங்க'' மாப்பிள்ளை அப்படியே முழிக்க வீடியோவும் புகைப்படக் கருவியும் போட்டி போட்டுக் கொண்டு வெளிச்சத்தைப் பாய்ச்சின.


கையில் ஒரேயொரு குவளையைக் கொடுத்து இழுத்துச் செல்லப்பட்டவன், பரவிக் கிடக்கும் பாத்திரங்களையும், அதனுடன் மாலையும் கழுத்துமாய் கம்பீரமாய் நிற்கும் மாப்பிள்ளையையும் மாறி மாறி இமைக்காமல் பார்த்தபடி நடுங்கியபடியே நடந்தான். மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் அவனைப் பார்த்தபடி ""மூஞ்சையும், முழியையும் பாரு, இங்க என்னடா பார்வை'' என்று ஆவேசமாய் வசவிக்கொண்டேயிருந்தனர்.


· துரை. சண்முகம்

No comments: