பழந்தமிழ் இலக்கியங்கள் பெண் வழிபாட்டின் பல்வேறு தகவல்களை விட்டுச் சென்றுள்ளது. பெண்ணே உலகத்தைப் படைத்தவள் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. "மோடு" என்பது வயிறு என்று பொருள். எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய்த் தெய்வம் மோடி என்றழைக்கப்பட்டாள்31 (பெரும்பாணாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை - 458), மேடடேந்தரிவை (இராவண காண்டம் - 106), பெருமோட்டுக்கிழதன் (தனிப்பாடல்), பெரு மோட்டாள் (தகடூர் யாத்திரை)22 என்ற பெண் தெய்வங்கள் ஆண் உறவின்றி கன்னியாகவே உலகத்தைப் படைத்தாள் என்ற கருத்து, பெண்தெய்வ வழிபாட்டின் மூலம், பெண்; தலைமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இதையே தாயுமானவர்,"அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேபின்னையும் கன்னியென மறைபேசும்..."22- என்ற பாடலும் சரி, திருவாரூர் புராணம் "உலக முழுதீன்ற பெருங்கன்னி..."22 என்ற வரிகளும் சரி, "யமுனை, கங்கை, சரஸ்வதி, காவேரி போன்ற பெண்ணின் பெயரிலான ஆறுகளும் சரி, கடல்கொள் செல்வி (அகநானூறு-370) கானமர் செல்வி (அகநானூறு-345) காடமர் செல்வி (மணிமேகலை-6.53, 18.115) நீர் நிலக் கடவுள்.134 இதுபோன்ற பல பெண் தெய்வ வழிபாடுகள் இலக்கியச் சான்றாக எம்முன் எஞ்சிக் கிடக்கின்றது. காட்டை அடிப்படையாகக் கொண்டு "காடுகாள், கானமர் செல்வி, காடுகிழாள், காடமர் செல்வி"31 போன்ற பெண் தெய்வங்களை மக்கள் வழிபட்டனர். இங்கு காட்டின் செழிப்பை, காடமர் செல்வி என்று பெண்ணின் இளமைச் செழிப்பை அடிப்படையாகக் கொண்டு, பெண் தெய்வமாக வழிபட்டனர். இதை மாற்றிய ஆணாதிக்கம், பெண் தெய்வங்களை ஆண் தெய்வத்துக்கு அடிமைப்படுத்துவது அவசியமாகியது.
இந்து மதம் உயிரின் தோற்றத்தை "ஜீவாத்மா, அழியாத ஒன்று, கூடுவிட்டுப் பாய்வது ஆத்மா, அதனால் மனிதர்கள் பிறக்கின்றனர்"23 என்று விளக்கிச் சொல்லுகின்றது. இந்திய மதம் சார்ந்த தத்துவவியலில் உலகம் தோன்றியது பற்றி பால் சார்ந்து இரு விளக்கங்கள் இருக்கின்றது. உலகை ஜகன்மாதா பெற்று எடுத்ததாகவும், பிரமன் படைத்ததாகவும் உள்ள புனைவுகள் பெண்வழிச் சமூகம், ஆண் வழிச் சமூகத்தின் இரு வேறுபட்ட படைப்பு பற்றிய விளக்கங்கள் ஆகும்;. பார்ப்பனிய இந்து ஆதிக்கம் ஆண் வழிப்பட்ட போக்கில் பிரமனையும், சிறு வழிபாடுகள் தாய் வழிப்பட்ட போக்கில் ஜகன்மாதாவையும் குறிப்பிடுவதும், இன்று அவை ஆண்வழிப்பட்ட ஒற்றைப் போக்கில் மாறிச் செல்வதையும் நாம் காணமுடியும்.
உலகில் எந்த மதம் என்றாலும் விதிவிலக்கின்றி பெண்ணை ஆணுக்குக் கீழ் நிலையில் வைப்பதைத் தவிர்க்கவில்லை. மதங்களும், அதன் கோட்பாடுகளும் தனியுடைமை சமூகத்தின் பின்னால் உருவாக்கப்பட்டதால், ஒட்டுண்ணிகள் மதத்தை வைத்து வாழ இருக்கும் சமுதாயத்தைப் பிரதிபலிக்க வேண்டியிருந்தது. எதுவெல்லாம் எதார்த்தமாகச் சமுதாயத்தின் போக்காக இருந்ததோ, அதை எல்லாம் அதன் பிளவுகளில் நியாயப்படுத்த மதம் பின்நிற்கவில்லை. இதில் தமது நலனையடைய சீர்திருத்தத்தைத் தான் மதங்கள் செய்தன. இருந்த மனிதப் பிளவுகளைப் பண்பாட்டுக் கலாச்சார ரீதியில் இறுக்கி அதைக் கடவுளின் பெயரில் மனித மூளையில் அறையும் வேலைகளை மதம் வெற்றிகரமாகச் செய்து முடித்தது.
மனிதப் பிளவுகள் மனிதத் துன்பத்தின் ஆத்மா ஆகியது. இதனால் மனிதனின் அச்சம், கண்ணீர், இயலாமை, துயரங்களை வடிகால் இட்டு வளர்த்தெடுத்த மதமும், மதக் கோட்பாடுகளும் மனிதப் பிளவுகளைப் புறநிலையாக இட்டுக் காட்டின. இந்த வகையில் பெண்ணின் தாழ்ந்த நிலையை நியாயப்படுத்தின. இந்த வளர்ச்சி என்பது சமூகமயமாகியபோது அக்காலத்திய இலக்கியங்கள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது இருந்த ஆணாதிக்கச் சமூகத்தைச் சட்ட நெறி ஒழுங்குக்குள் நியாயப்படுத்தி, ஒழுக்கமாகப் புகட்டப்பட்டது. இதை மீறுவது மதக் குற்றமாகக் கடவுளின் பெயரில் அடக்குமுறைகள் பரிசாக வழங்கப்பட்டது. மத ஆதிக்கம் மூலம் நீடித்த சட்ட ஒழுங்குகள் பெண்ணை வீட்டு ஜென்மங்களாக, வளர்ப்பு நாய்களாக வாலாட்டக் கற்றுக் கொடுத்தது. இருந்தும் வீட்டு அதிகாரத்தையும் இழந்த பெண் பாலியலை வழங்கும் ஒரு இயந்திரமாக, குழந்தையை வளர்க்கும் இயந்திரமாக, ஆணுக்குச் சேவை செய்யும் வேலைக்காரியாக மதங்கள் புகழ்ந்து பெண்ணின் இழிவைப் புகழ்ச்சிக்குரியதாக மாற்றின. இதில் எந்த மதமும் விதிவிலக்கை வழங்கி விடவில்லை.
பெண் வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகத்தை உருவாக்கிய போது, பெண்வழிக் கடவுள்களுக்குக் கட்டாயமான திருமணத்தை ஆண் தெய்வங்களுக்குப் பார்ப்பனர்கள் செய்வித்தனர். அதேநேரம் பல மக்கள் கூட்டத்தில் இருந்த ஆண் தெய்வங்களை ஒரு ஆண் தெய்வமாகக் காட்டி, அவற்றுக்குப் பல பெயர்களைக் கொடுத்தனர். பல தெய்வங்களை ஒருதாரக் குடும்ப அமைப்பின் வடிவில் உறவினராக்கினர். இதுதான் இன்று உருவாகியுள்ள இந்துமதக் குடும்பத்தின் வடிவமாகும். இந்துக் குடும்பத்தில் பெண் தெய்வங்கள் தமது கடந்தகால மேன்மையை இழந்தன. இன்றும் இந்தியாவில் சில பாகங்களில் இந்துப் பெண் தெய்வ வழிபாட்டில் சில தேவதைகள் எஞ்சியுள்ளனர். "பிலிமாக்கா, புதுபுடிக்கி, தார்சி, டோய், கொல்ல, கடாபா, கங்காதிகாரா, ஒக்காலு, காங்கா, வறந்தி, வறல்லிகர், ஒக்கலிகா, வெறலவ, வெறாலெயா, இடிகா"11 போன்ற தேவதைகள், இந்தப் பார்ப்பன ஒருதார மணத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை. இன்றும் அவை, "பச்சைவாழி அம்மன், அங்காளம்மன், பொறையாத்தா, பொன்னியம்மன், கங்கையம்மன், பிடாரி, குடிதாங்கி அம்மன், திரௌபதி அம்மன், கீப்பாஞ்ச அம்மன்...."28 போன்ற பெண் தெய்வங்களாகக் கிராமப்புறத்தில் எஞ்சிக்கிடக்கின்றனர்.
இந்து சமயத்தில் பெரும்பாலும் எல்லாப் பெண் தெய்வங்களும் சுதந்திரமான வௌ;வேறு மக்கள் கூட்டத்தின் பெண் வழிக் கடவுளாக இருந்தவர்களே.
ஆணாதிக்கம் பெண்களுக்கு மேல் திணித்த கட்டாயத் திருமணத்தையே கடவுளுக்கும் பொதுவாக்கினர். பார்ப்பனர்கள் தமது ஆண் வழிக் கடவுள் மற்றும், உருவான ஆணாதிக்கக் கடவுளர்களாகக் கட்டாயமான திருமணம் மற்றும் உறவு வழியூடாக இந்து மதத்தை ஆணாதிக்க ஒருதார மணவடிவில் உருவாக்கினர். அதேநேரம் திருமணம் புரியாத பெண் கடவுள்களை மோசமான தெய்வங்களாகக் காட்டி மாற்றியதுடன், அவைகளைக் கிராமப்புற எல்லைக்கு ஆணாதிக்கச் சமூகம் துரத்தியடித்தது. அதேநேரம் கிராமப்புறத் தெய்வங்கள் ஆண் பாதுகாப்பை உள்ளடக்கியதாக்கி, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் தெய்வங்களை அடிமையாக்கினர்.
அனைவருக்கும் தெரிந்த உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. சிவபெருமான் உமாதேவியாருக்கிடையில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அதில் முடிவின்றி நீடித்ததால், நாட்டியத்தை ஆடுகின்றனர். நாட்டியத்தைச் சிவபெருமான் தொடர முடியாததால் திடீரென ஒருகாலைப் பூமியிலும் மறுகாலை விண்ணிலும் வைத்து ஆடுகின்றார். இதில்தான் உமாதேவியார் காலைத் தூக்கி வைத்து ஆடுவது, பெண்ணின் ஒழுக்கமல்ல என்பதால் தோற்கின்றார். இங்கு ஏன் உமாதேவியார் காலைத் தூக்கிவைத்து ஆடமுடியாது என்ற கேள்விக்கு, ஆணாதிக்க அமைப்பு பெண்ணின் மீதான ஒழுக்கக் கோவையால் கட்டுப்படுத்துகின்றது. ஏன் சிவபெருமான் போட்டியைக் குழப்பி, அத்துமீறிக் காலை மேல் நோக்கி வைத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றார். இது அதர்மமான நடத்தையல்லவா?. ஒரே நிலையில் உமாதேவியரோடு போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில்தானே, அடுத்த கட்டத்தைச் சிவபெருமான் தொடங்குகின்றார். வென்றது உமாதேவியார் அல்லவா!. ஆணாதிக்க ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லவா, சிவபெருமானின் வெற்றி ஏற்கப் படுகின்றது. ஆனால், ஆணாதிக்க அமைப்பு உமாதேவியார் வெற்றியை மறுக்கின்றது. ஆணாதிக்க அமைப்பில் தோற்ற உமாதேவியாரின் ஆணவத்தை அடக்க, சிவன் பூலோகம் சென்று வாழ சாபம் இடுகின்றார். அப்போதும் உமாதேவியாரின் துணையாக முருகன் (மகன்) அனுப்பப் படுகின்றான்.
பெண் ஆணுக்கு அடங்கி பாதுகாப்புப் பெற்று வாழமுடியுமே ஒழிய, சுதந்திரமாக வாழும் உயிரல்ல என்பதைத்தான், ஆணாதிக்கக் கதை தனது சமூக இருப்பை நோக்கி புனைந்து காட்டுகின்றது.
ஆண் லிங்க வழிபாடுகள் எல்லாம் இதில் இருந்து உருவாகின்றது. உமாதேவியாரின் பெண் உறுப்பில் தாங்கி நிற்கும் லிங்கத்தை நோக்கிய வழிபாடு எல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தி, ஆணைத் தாங்கி வாழ வேண்டுகின்றது. இந்தியாவில் சில இடத்தில் காணப்படும் "குடிதாங்கி அம்மன்"28 பெண் உறுப்பால் ஆனவை. இது பெண் வழிபாட்டின் எச்சமாக இருக்கின்றது. இன்று அப்பெண் உறுப்பைப் பாவாடைகட்டி மறைக்கின்ற போதே, ஆணாதிக்கப் பண்பாட்டின் வெளிபாடாகின்றது. பின் அதற்கு ஆண் தெய்வக் கண்காணிப்பு என்று தொடரும் நடத்தைகள் எல்லாம், எப்படி ஆணாதிக்க மதமாகக் கடவுள்கள் சமுதாயத்தையொட்டி மாறிவந்ததைக் காட்டுகின்றது.
இந்து சமயத்தின் ஆதாரமான ரிக்வேதத்தில் பெண்ணைக் குறித்த ஆணாதிக்கம் "பிரகஸ்பதி உன்னை எனக்காகக் கொடுத்திருக்கின்றான். நீ, நான் ஆகின்ற கணவனோடுச் சேர்ந்து சந்தானவாதியாக இருப்பாய். ஒரு நூறு சம்போகத்தின் ஆயுளை அனுபவித்துக் கொண்டு என்னுடைய அடிமையாக இருப்பாய்"10 என்று பெண்ணின் அடிமைத்தனத்தை ரிக்வேதம் பறைசாற்றுகின்றது. இந்து மதத்தின் அடிப்படையில் அதன் பின்னால் உள்ளோரின் கோட்பாடுகள் இவைதான். மேலும் "திருமணத்திற்குப்பின் பெண் கணவனின் வீட்டிற்குச் செல்ல வேண்டியவள்"10 என ரிக்வேதம் கூறுகின்றது. பெண் வழிச் சமூகத்தை மறுத்து ஆண் வழிச் சமூகத்தை மதம் மூலம் இறுக்கும் ரிக்வேதம், தாய்வழி வீட்டில் இருந்து பெண்ணை அகற்றுவதைக் காட்டுகின்றது. இங்கு இந்த உபதேசங்கள் பெண்ணின் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. இந்த ரிக்வேதம் கி.மு 1200 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு, கி.மு 600 களில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பெண் வழிச் சமூகம் ஆணாதிக்கச் சமூகமாக வளர்ச்சி பெற்ற போராட்டத்தையே இந்த ரிக்வேதச் சுலோகங்கள் எமக்குக் காட்டுகின்றன.பார்ப்பனிய இந்து மதம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பு சார்ந்து, கடவுளை அடைய உருவாக்கிய தானங்களில் பெண்ணும் உள்ளடங்கியிருந்தாள். பத்து வகையான தானங்களை சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் கொடுப்பதன் மூலம் மோட்சத்தை, புண்ணியத்தை, பண்பாட்டைப் பேணமுடியும் என்று கூர்மப்புராணம் கூறுகின்றது. "1.தங்கம், 2.குதிரை, 3.திலா, 4.நாகம், 5.அடிமைப் பெண், 6.இரதம், 7.நிலம், 8.வீடு, 9.மகள், 10.பசு"27 என்று கோருவதில், மகளும், அடிமைப் பெண்ணும் ஆணாதிக்கத் தேவையை அடிப்படையாகக் கொண்டே இந்துப் பார்ப்பனியம் தானமாக்கியது. இது நடைமுறையில் அமுலில் இருந்ததற்கு நாயன்மார் வரலாறுகளும், இந்துப் புராணங்களும் நிறையவே ஆதாரங்களைத் தருகின்றது. இன்றைய சடங்குகள் அதன் தொடர்ச்சியாக இருப்பது வேடிக்கையான நிகழ்ச்சிகள் அல்ல. திருமணத்தில் "கன்னிகாதானம்" கூட பார்ப்பனர்களின் உரிமை வழியாகத் தொடரும் ஒரு சடங்குதான்.
பெண்ணை அடிமையாகவே இந்து மதம் கருதுகின்றது. "உயர் சாதிப் பெண் கணவனிடம் நன்றியுள்ளவளாக இல்லாதிருந்தால் அவள் நாய்களால் விழுங்கப்பட வேண்டியவள் (நாய்க்கு உணவாக்கப்படுபவள்). அவளைச் சோரம் இழைத்தவன் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் கிடத்திக் கொல்லவேண்டும்"27 என்று மனுநீதி 374, 375 குறிப்பிடுகின்றது. அதேநேரம் கீழ்ச்சாதிப் பெண்ணைக் குறித்து மனுநீதி (11-178 இல்) "ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்துவிட்டால் அத்தகைய குழந்தை உயிரோடு இருந்தாலும் பிணம் போன்றதே" அத்துடன் அக்குழந்தை தந்தையின் சாதிக்கு ஏழு தலைமுறைக்குப் பின் உயர்த்தப்பட முடியும் என்ற மோசடியுடன் கூடிய சதி நிர்வாணமாகின்றது. இங்குச் சூத்திரப் பெண்களின் அடிமைத்தனம், வைப்பாட்டித்தனம், இணங்கிப் போகும் அடிமைத்தனத்தை இந்துமதம் ஆணாதிக்கம் சார்ந்து சமூகப் பண்பாக்கியது. இந்து மதம் பெண்கள் மேல் குறிப்பிட்ட சில வன்முறைகளைக் கையாண்டது.
தேவதாசி பிரதா என்ற சடங்கின் மூலம் கடவுளுக்குப் பெண்களைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம்;, கோயில் விபச்சாhரிகளை உருவாக்கியது.
சதிபிராரா என்ற சடங்கின் மூலம் கணவனின் சிதையில் பெண் ஏற வைக்கப்பட்டாள். பெண் மறுத்தபோது பலாத்காரமாகத் தள்ளி எரியூட்டினர்.
கங்கா பிரவர் என்ற சடங்கின் மூலம் குழந்தை இல்லாத பெண்கள் கங்கையில் நீராடியதுடன், முதல் குழந்தையைக் கங்கை நீருக்குப் பலிகொடுத்தனர்.
நரவதா என்ற சடங்கின் மூலம் ஒரு குழந்தையின் நலனுக்காக, ஏழைக் குழந்தைகள் அல்லது அநாதைக் குழந்தைகளைப் பிடித்து வந்து தேவதைக்குப் பலி கொடுத்தனர்.
கன்யவதா என்ற சடங்கில் இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யும் போது, உறவினர்க்கு முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பதால், இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைகளைக் கொன்றனர். இது போன்று காலத்தால் அழிந்தும், அழியாததுமான பல நூறு காட்டுமிராண்டிச் சடங்குகள், 2000 விரதங்கள், அது சார்ந்த தானங்கள் என நீண்டு, இந்துமதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.
பெண்ணின் நிலை பற்றி, "சிவனும் சூரியனும் உன்னுடைய கரங்களைப் பிடித்திருக்கின்றனர். அதனால் நீ தர்மபூர்வமாக என் மனைவியாய் இருக்கின்றாய். நான் உன் கணவனாகவும் இருக்கின்றேன்;"10 என்பதன் மூலம் மதத்தின் பெயரில் இந்து மதம் பெண்ணை இழிவுக்குள்ளாக்குகின்றது. பெண் ஆணின் கரத்தைப் பிடித்திருக்கவில்லை, ஆணே பிடித்திருப்பதன் மூலம் பெண் ஓடிவிடாது சிறைப்பிடிப்பதையே காட்டுகின்றது.
இ;ன்று சிவசேனை முதல் இந்திய பாரதிய ஜனதாக் கட்சி ஈறாக இந்து மதச் சிவில் சட்டத்தை இந்து மக்கள் மீது திணித்து பாசிசக் காட்டுமிராண்டித்தனத்தை அமுல் செய்யத் துடிக்கின்றனர். இந்த இந்துச் சட்டம் என்பது பார்ப்பனியத்தின் ஆதாரமான மனுவின் சட்டமே. இந்த மனுவின் ஆணாதிக்கம் பெண்ணை அன்றில் இருந்து அடிமைப்படுத்தியதையும், இன்று இந்து இராஜ்ஜியத்தில் பெண்ணையும் அவள் வென்ற உரிமைகளையும் தாழ்த்தத் துடிக்கின்ற ஆணாதிக்கக் கோட்பாடுகளை மேலே ஆராய்ந்துள்ளேன், பார்க்க.
பெண்கள் குறித்து இந்து சமயத்தின் பல்வேறு இலக்கியங்கள், வரலாறுகள், மத ஆவணங்கள்.... எப்படி அடிமைப்படுத்தி இழிவுபடுத்தின என்பதைத் தொடர்ந்து ஆராய்வோம்.
ரிக்வேதம் 8.3.17 இல், "பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்"32 என்ற கூற்றின் பின் பெண்கள் பற்றிய ஆணாதிக்கத்தின் நிலை இன்றுவரை மாறிவிடவில்லை. பெண்கள் உறுதியற்றவர்கள், நேர்மையற்றவர்கள் என்ற பழிப்புரை ஆணாதிக்கத்தின் அதிகாரத் திமிராகும். பெண்களைச் சமூகத்தில் இருந்து நசுக்க, அவர்கள் சமூக இயக்கத்தில் பங்கு கொள்வதைத் தடுக்க இந்த நிபந்தனை அடிப்படையானதாகின்றது. பெண் படிப்படியாக ஆணாதிக்கப் பண்பாட்டு வடிவமாக மாற்றப்பட்டாள். தொடர்ந்து ரிக் வேதம் 10.95.10 இல், "பெண்கள் நட்பு நீடித்ததல்ல, அவர்கள் கழுதைப் புலியின் தன்மையுடையவர்கள்"32 என்ற கூற்று பெண்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியாத தனிமனித வாதங்களின் மையம் என்கிறது ரிக்வேதம். ஆண்களின் தனிச் சொத்துரிமையும், அதனால் ஏற்பட்ட தனிமையின் மையவாதத்தையும் திருப்பி பெண்கள் மீது அள்ளி வீசி விடுவதே இவை. அத்துடன் கழுதைப்புலி என்றதன் மூலம் ஆண்களைப் புலியாக உருவகமாக்கியதன் மூலம் பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். பெண்களின் ஒன்று சேர்ந்த செயல் மற்றும் அவர்களின் போராட்டம் போன்றவற்றை மறுக்க, அதை நட்புக்குப் பங்கமானதன் குறியீடாகவும், அதேநேரம் அவை கழுதைப்புலிக்கு ஒத்ததாகவும் காட்டிச் சிறுமைப்படுத்திய ஆணாதிக்கத்தின் கொச்சைத்தனங்கள்தான் இவை.
மேலும் ரிக்வேதத்தில் 4.17.16 இல், "இந்திரன், நாம் விரும்பும் மனைவிகளைக் கொடுப்பவன்," 5.31.3 இல், "இந்திரா! உன்னை விட மேலானவன் வேறு யாருமில்லை, ஏனெனில் மனைவியில்லாதவருக்கு மனைவிகளை - காதல் கிழத்திகளைத் தருகிறாய்"32 என்று இந்திரன் என்ற பார்ப்பானை வணங்கும் இந்த விதியில் பெண் ஒரு பொருளாக ஆண் இனம் காண்பதைக் காட்டுகின்றது. இந்து மதத்தில் பெண்ணைக் குறித்துக் காட்டும் பொருள் பற்றிய மதிப்பீட்டுக்கு எதிரான போராட்டமின்றி பெண் விடுதலையடைய முடியாது. பொருட்களைப்பற்றி மனித மதிப்பீட்டை மாற்றாது, பெண் என்ற பொருளைப் பற்றிய மனிதச் செயற்பாட்டையும் மாற்றமுடியாது.
அத்துடன் இந்துச் சூத்திரம் பெண்ணை ஆணின் போகத்துக்குரிய படைப்பாக இந்திரன் படைத்தான் என்று கூறுவதன் மூலம் பெண் பாலியல் பண்டமாகின்றாள். அத்துடன் யுத்தங்களில் வென்று வரும் வீரனுக்குப் பெண்கள் பரிசளிக்கப்பட்டதுடன், பெண்கள் பலாத்காரமாக அவர்களின் குடும்பத்தில் இருந்த மற்றைய பொருட்களுடன் சேர்த்து சூறையாடப்பட்டாள். இதற்கு வேதங்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. இங்கும் பெண் பண்டத்துடன் பண்டமாகக் கவரவும், கற்பழிக்கவும் இருந்த உரிமையை இந்து மதம் அங்கீகரித்தது. பெண் ஒரு உயிருள்ள மனுசி என்பதை மறுத்த இந்து ஆணாதிக்கம், பெண்களின் உணர்வுகளை என்றும் மதித்ததில்லை, மதிக்கப் போவதுமில்லை.
போர் வீரர்களின் வெற்றியைப் பறைசாற்ற ரிக்வேதத்தில் 8.48.88 இல், "ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்"32 என்று கூறும்போதே யுத்தத்தின் ஆர்வத்தை, கொடுமையை எமக்குக் காட்டுகின்றது. இன்று உலகு எங்கும் யுத்தத்தில் பெண்கள் சூறையாடப்படுவதும், யுத்தத்தின் முன்னும் பின்னும் பெண்களை ஆண்களுக்கு விநியோகிப்பதும் காணமுடிகின்றது. சிங்கள இனவெறி அரசு இனவாத இராணுவத்துக்கு எல்லைப்புற பெண்களையும், ஏழைப்பெண்களையும் விபச்சார வாடகைக் கூலிகளாக மாற்றிப் பணிபுரியவைத்ததை எல்லா எல்லைப் புறமும் காட்டுகின்றது.
யுத்தத்தில் பெண்கள் பகடைக்காயாகவும், அவள் சூறையாடப்படவும் கூடியநிலையில் தான் யுத்தத்தை ஒடுக்கும் வர்க்கம் கட்டியமைக்கின்றது. பெண்கள் யுத்தத்தில் ஊக்கத்தைக் கொடுக்க கூடிய பண்டமாகின்றனர். அதேநேரம் அப்பெண்களை ஆக்கிரமிப்பாளன் கற்பழிக்கும் உரிமையை வேறு சுவீகரித்துக் கொள்கின்றான். இதற்குப் பெண்கள் எதிர்ப்பது என்பது சமூகத்துக்கு எதிரான குற்றமாகக் காட்டப்பட்டது. பெண்களின் உணர்வுகள், உரிமைகளை ஒவ்வொரு யுத்த ஆக்கிரமிப்பும் மேலும் அடக்கியதாகவே வரலாறு காட்டுகின்றது. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் பெண்ணைச் சிலநேரத்தில் விடுவித்தும், சிலநேரத்தில் மோசமான அடக்குமுறையையும் கூட கையாண்டுள்ளது. விடுதலை என்பது அதன் இலட்சியத்தின் வழியில் மக்களின் அணிதிரட்டலுக்கு உட்பட்டதாக எல்லைப்படுத்தியது.
பெண்களை ஆண்களின் சொத்தாகக் கருதிய ஆணாதிக்க ரிக்வேதம் அதை எப்படி பெண்கள் மீது அடக்கி ஆண்டதுடன், அதை நாட்டின் பாதுகாப்புடன் உவமையாக்கினர் எனப் பார்ப்போம்;. ரிக்வேதம் 7.2.63 இல், "பொதுவான கணவன் ஒருவன் தன் காதல் கிழத்திகளை வைத்திருப்பதுபோல், தான் கைப்பற்றிய கோட்டைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்."32 இதேபோல் தர்மநீதி என்ற நூலை எழுதிய யக்ஞவல்கியர் பெண் பற்றிக் குறிப்பிடுவதைப் பார்ப்போம். "உடைமைகளில் ஒன்றான பெண்களை மனிதன் கொள்ள வேண்டும்;."32 "மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டுவைக்காதே"32 என்று பெண்ணை ஆணின் உடைமையாக்கி அதை நியாயப்படுத்திய அடக்குமுறையைக் காட்டுகின்றது. பொருள், கல்வி, பெண் வேறுபாடு இன்றி சொத்தாக மதிப்பிடும் தனிச்சொத்துரிமை பெண்ணை மனுசியாக மதித்ததில்லை. பெண் செல்வங்களில் ஒன்றாக மாற்றியதையும், அவள் ஆணின் தனிச் சொத்துரிமையின் ஒரு அங்கமாக இருக்க நிர்பந்தித்ததும், பெண்ணை அடக்கி ஆளாகக் கூடிய ஒரு வீட்டு நாயாக வளர்க்க ஆண் கற்றுக் கொள்ளும் உரிமையை நியாயப்படுத்துவதே, இந்து ஒழுக்கநூல்கள் மற்றும் மத நூல் விளக்கங்கள்.
இதை மேலும் ஆராய்வோம்;. பீஷ்மர், "வேத சாஸ்திரி கட்டளைப்படி புருஷர்கள் தங்கள் மனைவிகளை, பூர்வீகப் புண்ணியத்தினாலோ அல்லது தெய்வச் சங்கற்பத்தாலோ தானடைந்த பொருளாகவே கருத வேண்டும்."32 ஆண் அடையும் தனிச் சொத்துரிமையில் பெண் ஒரு அங்கம் தான் என்பதைத் தனிச் சொத்துரிமை வளர்ந்து வந்த காலத்தில் எடுத்தியம்பப்பட்டது. அத்துடன் பெண்ணைச் சமூகத்தின் முன்மாதிரியான மரியாதைக்குரியவளாகக் கருதிய சமூகத்தை மாற்ற இவ்விதிகள், கொள்கைகள், விளக்கங்கள் அவசியமாகியதை வேறு இது நிறுவுகின்றது. சமுதாயம் இதற்குப் புறம்பான வழியில் இருந்து வந்ததையும், இதற்குப் புறம்பான போராட்டத்தையும் கொண்டு இருந்த மனித வரலாற்றில் பெண் மீதான அடக்கமுறையைப் புராணங்கள் மூலம், மதம் மூலம் அடக்கி ஆண்ட வரலாற்றை இவை காட்டுகின்றன.
அத்துடன் பெண்ணின் இடத்தை அடையாளம் காட்டிய மதக் கோட்பாட்டாளர்கள், அவளுக்கான கடமையாக அடிமைவேலை, அதன் கடமை, சமூகத்தில் அவளின் நிலை பற்றி குறிப்பிடுவதைப் பார்ப்போம். அதர்வன வேதம் 14.1.52 இல், "மேலும் அவள் (கணவனால்) அவனுடைய போஷ்யா அல்லது அடிமை கீழ்ப்பட்டவள் என்று அழைக்கப்பட்டவள்."32 "உபநிடதத்தில் மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே, காமவேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள்."32 "மனிதன் தனக்கு உதவிக்காக நீண்ட நாள் கஷ்டப்பட்டான். கடைசியாகத் தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய, தனக்கு எல்லா இன்;பத்தையும் தரக்கூடிய ஒன்றை மனைவி என்ற உருவத்தில் பெற்றான்."32 பெண் போகத்தின் இடமாகவும், மனிதனுக்குப் படைக்கப்பட்ட பொருளாகவும் கருதும் பார்ப்பனிய இந்து தர்மம் பெண்ணை மனுசியாகவே மதிக்கவில்லை. ஆணின் உதவியாளாகப் பெண்ணை நிலைநிறுத்தி, ஆணின் கஷ்டத்தைப் போக்கும் ஒன்றாகவே மனைவி உருவத்தில் ஆண் பெற்றான் என்ற விளக்கம் ஆணின் மேன்மையைப் போற்றிப் பெண்ணைச் சிறுமைப்படுத்துகின்றது. ஏதோ ஆண்தான் சமூகத்தைக் கட்டியமைத்ததாகவும், பெண் அதற்கு இடையில் வந்து உதவியதாகவும் கூறுவதன் மூலம் பெண்ணின் உழைப்பு மற்றும் கண்டுபிடிப்பை மறுப்பதில்தான் ஆணாதிக்கம் தனது கிறுக்குத்தனத்தை நிறுவியது. பெண்ணை அடிமையாக விளக்கிய அதேநேரம், குழந்தை பெறும் இயந்திரமாக, அதிகாரபூர்வ மனைவியின் வேலைக்காரியாக, அதிகாரபூர்வமற்ற மனைவியாக்கப்பட்டாள். ஆணின் காமத்தைத் தணிக்கும் ஒரு ஊடகமாகவே கருதிய இந்துப் பார்ப்பனியம் பெண்ணின் காமத்தை இட்டும், அவர்களின் உணர்ச்சியையிட்டும் கவலைப்படவில்லை. மாறாகப் பெண்ணின் காம உணர்ச்சியை மறுத்து பெண்ணை மனரீதியாக மனநோயாளியாக்கினர். இந்த மனநோயாளர்களின் அத்து மீறல்களைத் தடுக்க பெண் மீதான இரும்புப் பிடியிலான ஆணாதிக்க ஒழுக்கம், சட்டம் பெண்ணைக் குதறியது. அத்துடன் பெண்ணைக் கொச்சைப்படுத்தியது. அதைப் பார்ப்போம்.
மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், "பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. - எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! - எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள். - நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்"32 என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக் கூறுகின்றது.
பெண்களின் பிறப்பை ஒரு கேவலமான படைப்பாகக் காட்டும் ஆணாதிக்கம் சமூகத்தின் அனைத்துக் கேடுகளுக்கும் பெண்ணைக் குற்றம் சாட்டுகின்றது. தனிச் சொத்துரிமை வடிவில் மனிதர்களின் வாழ்க்கையைத் தனிமனிதர்களின் நலனில் இருந்து சிலருக்காக மாற்றியபோதுதான் ஆணாதிக்கம் சமூகத்தின் கேடுகளுக்கான மூலமாகியது. பெண்களின் தாய்வழி உரிமையைத் தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியில் படிப்படியாகப் பறித்தெடுத்த ஆணாதிக்கம், பெண்ணை இழிநிலைக்குத் தள்ளியதுடன், அதை நிரந்தரமாக்கப் பெண்ணின் பிறப்பு முதல் அனைத்தையும் கேவலப்படுத்தியுள்ளது. பெண்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யாத ஆணாதிக்கத்தின் சுயத்திருப்தி போக்கால், பெண் அதிர்வுற்று அத்துமீறி பாலியல் பூர்த்தியை அடைய முயல்வதை ஆணாதிக்கம் கொடூரமான வகையில் இழிவுபடுத்தப் பின்நிற்கவில்லை.
அத்துடன் பலதாரமணத்தில் பெண்ணுக்கு இருந்த பாலியல் உரிமையைக் கட்டுப்படுத்த, பெண்ணின் பாலியல் உரிமையை ஒருதாரமணத்தில் நிலைநிறுத்த, பெண்ணின் பாலியல் நாட்டத்தை இழிவுபடுத்துகின்றது. ஆண்களின் அடங்காத பாலியல் வேட்கை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப எல்லையின் அத்துமீறும் ஆண் பலதாரமணத்தில் இருந்தபடியே, ஒருதார மணத்தைக் கடைபிடிக்க மறுப்பதாகப் பெண்கள் மீது குற்றம்சாட்டிக் கேவலப்படுத்துகின்றனர். அத்துடன் பெண்கள் பற்றி எவ்வளவு கேவலமாக உவமைப்படுத்தித் திட்டமுடியுமோ அந்தளவுக்கு ஆணாதிக்கம் பெண்ணை இழிவுசெய்கின்றது. மகாபாரதம் போன்ற இதிகாசக் கற்பனைக் கதைகள் மூலம் பெண்களை இழிவுபடுத்தும் பாதையை மீளக் கட்டியமைக்க முயலும் முயற்சியில் மதவாத அரசியல் அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அங்கு பெண்கள் பற்றிய பார்வை இதைவிட மேலான நிலையில் இருந்து விடப் போவதில்லை. பெண்பெற்ற உரிமைகளை இழப்பதற்கான பாதையில் இவை மீள் உருவாக்கம் பெறுகின்றன.
தொடர்ந்து மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39.8 இல், "அதாவது பெண்களின் அறிவு, கண்டு பிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது." 49.22 இல், "பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. 43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள். 43.24 இல், உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டு, முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள். 43.24 இல், அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். 43.24 இல், "ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்."32
பெண்ணை ஆண் தனது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய ஓர் இயந்திரமே என்று இந்துப் பார்ப்பனியம் கூறுகின்றது. இந்து தர்மம் தனது தர்மத்தில் பெண்ணை ஜடமாக அணுகுகின்றது. மற்ற மிருகத்தில் கருணை காட்டுவதுபோல் நடிக்கும் இந்து மதம், பெண்கள் விடயத்தில் கருணையைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாகப் பெண்ணை இயந்திரமான வேலைக்காரியாகக் காட்டுவதும், ஆணின் ஒருதலைப்பட்சமான பாலியல் இன்பத்துக்குப் பயன்படுத்தக்கூடிய உருவமாகக் காண்கின்றது. பெண்ணின் அறிவைத் தந்திரத்தின் சதியாகக் காண்பதும், அதன் மீதான ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆழமான தந்திரமாகக் காண்கின்றது.
வியட்நாம் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின்போது வியட்நாம் மக்களின் தந்திரமான யுத்தத்தைக் காட்டுமிராண்டித்தனமாகக் கண்டதுபோல், ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் எதிர்ப்பை ஆழமானதும் தந்திரமானதுமாகத் தூற்றுகின்றது. அத்துடன் அவளை வஞ்சகத்தின் வடிவமாகவும், பாலியலில் தான் விரும்பியவனைத் தவிர பிற ஆண்களுக்குச் சுதந்திரமாக விட்டுக் கொடுக்க மறுப்பதாகவும் தூற்றுகின்றது. தான் விரும்பியவனுடன் உடன் புணரவும், தேவையெனின் பிரிந்து செல்லவும் தயாரான ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம்தான் இன்றைய அடக்குமுறை ஆணாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டது. பெண் தான் நேசிப்பவனுடன் வாழவும், தேவையெனின் பிரிந்து சென்ற அன்றைய வரலாற்றினைக் காட்டும் இந்த அவதூற்று ஆதாரங்கள், பெண் கடந்த காலத்தில் பெண்ணுரிமையைப் பெற்று இருந்ததை நிறுவுகின்றது. இதன் மீதான அவதூறும், பெண்ணின் திருப்தி ஒரு ஆணிடம் சாத்தியமில்லை என்றதன் மூலம், பெண்ணைக் கொச்சைப்படுத்தி பெண்ணை விலங்கிட்ட ஆணாதிக்கமே, தான் ஒரு பெண்ணிடம் திருப்தியடையாது, பல பெண்களை நாடும் பலதார மணத்தை இன்றுவரை விட்டுக் கொடுத்துவிடவில்லை. பெண்ணிடம் எதுவும் இல்லை. அவர்களிடம் கருணையில்லை. அவர்களிடம் அன்பு வைத்தல் கூடாது என ஆண்களை எச்சரிக்கும் இந்து தர்மங்கள் அதை மீறுபவன் அழிந்து போவான் என்று சாபம் இட்டு, இதற்கு எதிராக ஆண்களை மிரட்டி, ஆணாதிக்கத்தைப் பணியவைத்து, நிறுவியது.
மனு இதை 9.15 இல், "எல்லா மனிதர்களும் கடவுளர்களாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள். பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து, மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களைச் சிருஷ்டி செய்தார். ஆகவே, பெண்கள் மனிதச் சமுதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களாதலால் அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும் இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்."32
எல்லோரும் மனிதர்களாக வாழவும், எல்லோரும் தமது தேவைக்கு ஏற்ப வாழ்வதையும் மறுத்த இந்து தர்மம் பெண்ணை இழிநிலைக்குத் தள்ளியதைப் புராணங்கள் மூலம் நியாயப்படுத்தினர். தேவர்கள் என்ற பார்ப்பனர்கள் சாதி வடிவத்தை உருவாக்கி, அதில் பெண்களை இழிநிலைக்குத் தள்ளிய, தனிச்சொத்துரிமையின் பிரதிநிதிகளான பார்ப்பனர்களின் கனவைப் பெண்களின் வீழ்ச்சியுடன் நிறைவாக்கப்பட்டது. பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்ததையும், அவர்கள் வீPழ்ச்சிக்காகப் பிறந்ததாகவும் பார்ப்பனியப் புளுகுகளுடன் ஆணாதிக்கம் நிறுவப்பட்டது. பெண்களின் வாழ்வு அந்தஸ்து பறிக்கப்பட்டதைப் புராண இலக்கியங்கள் ஒத்துக்கொள்வதை வேறு இது நிறுவுகின்றது. இந்த வீழ்ச்சிக்குப் பெண்கள் பலம் இல்லாதது தான் காரணம் என்று விளக்கம் கூறப்பட்டது.
மனிதனை மனிதன் சுரண்டி, உபரியை ஆண் திரட்டத் தொடங்கிய போது பெண் அங்கு பலவீனமான ஜீவன் ஆக்கப்பட்டாள். பெண்கள் வீட்டிலும் விவசாயத்திலும் தங்கியிருக்க, ஆண் பெண்ணை விட அதிக உணவாக இறைச்சியை உண்ணத் தொடங்கி, இறைச்சியை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கியதைத் தொடர்ந்து அவன் உயிர்கள் மீதான அழிப்புக் கண்ணோட்டத்தைப் பெற்றதுடன், பெண்ணைவிட அதிக பலம் பெற்றான். குரங்கு மனிதக் குரங்காகவும், பின்னால் மனிதனாகவும் மாறிவந்த காலக்கட்டத்தில், மனிதன் நிலையாக வாழத் தொடங்கும் முன்பு, நிலத்தில் வாழத் துவங்கியபோதே விலங்குகளுக்கு எதிரான தற்காப்பு யுத்தம் அடிப்படையான நிபந்தனையாக இருந்தது. இந்தத் தற்காப்பில் கொல்லப்பட்ட மிருகங்கள் மனிதனின் புதிய உணவாகின. இந்தத் தற்காப்பில் பலம் பெற்றபோது தாக்குதல் நிலைக்கு மாறி இறைச்சி பிரதான உணவாகியது. பெண் குழந்தைகளின் தற்காப்பு கருதி, நிலையாகத் தங்கி, பாதுகாப்பை உறுதி செய்யாதபோது, பெண்கள் முக்கியமான திருப்பமாகத் தாவர உற்பத்தியைக் கண்டுபிடித்ததன் மூலம் தாவர உணவு உண்பதும் பிரதான வழக்குக்கு வந்தது. தற்காப்பு மாறி மிருக வேட்டையை உணவாகவும், பின்னால் வளர்ச்சிபெற்ற அழிப்புக் கண்ணோட்டமே மனிதர்கள் மீது உபரி அடிப்படையில் மேலும் வலு பெற்றபோது, அவன் பலசாலியாக நினைக்கத் தொடங்கிய அதேநேரம் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றி சீரழிந்தான். பெண்; அதிகளவு உணவு தாவரம் சார்ந்து இருந்;த அதேநேரம், விவசாய உற்பத்தி மற்றும் சிறு விலங்குக் குட்டிகளை வளர்த்தல் போன்றவற்றால் கருணையும், பரிவும் கொண்டவளாக இருந்தாள். இது ஆணின் அழிப்புக் கொள்கைக்கு எதிராக இருந்ததால், இதைப் பலவீனமாக ஆணாதிக்கம் விளக்கியது. இதன் தொடர்ச்சியில் உணவு வகையில் ஏற்பட்ட இரண்டு வேறுபாட்டால், உடல் பலத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நீண்ட பரிணாம வளர்ச்சியில் உடல் கூறுகளின் சில இயல்புகள் தீவிர மாற்றம் கண்டது. இதையே புராண இந்து தர்மம் பெண்ணின் பலவீனமாகக் கூறி அவளை வீழ்ச்சியின் மையமாக விளக்கியது.
இன்று உலகில் பலமான சமூகம் என்பது நவீன ஆயுதங்கள், தனிச் சொத்துரிமையின் பலம் (சொத்துள்ளவன்)ளூ அதிகாரத்தில் உள்ளவன் பலமானவனாக இருப்பதும், மக்கள் பலவீனமானவர்களாக இருப்பதும் பொதுவான மதிப்பீடாகும்;. இது நாட்டுக்கு நாடு கூட பொருந்தும். ஆனால், மக்கள் சக்தி அணிதிரண்டால் இந்த பலம் என்பது நொறுங்கி விடுவது எதார்த்தமாக உள்ளது. இதுதான் ஆண் பெண்ணுக்கிடையிலான நிலையும் கூட. ஆணாதிக்கம் பெண்ணைப் பலவீனமாகக் காட்டுவது என்பது தனது சமூக அதிகாரத்தில் இருந்துதானே ஒழிய மக்களின் பலத்தில் இருந்து அல்ல.
பெண்கள் மீதான பாலியல் கட்டுப்பாட்டை ஆண் தனக்குச் சார்பாக ஆணாதிக்கப் பலத்தில் இருந்து கையாளும்போது பெண் வஞ்சிக்கப் படுகின்றாள். வஞ்சிக்கப்பட்ட பெண் அந்த ஆணிடம் விசுவாசமாக நடக்க மறுத்து, தனது உணர்ச்சியைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்தால், ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, அதை அவளின் நிலையற்ற தன்மையின் பலவீனமாக இட்டுக்காட்டுகின்றது. அவள் பாலியலில் அடங்காப்பிடாரி என்ற கோட்பாட்டை ஆணாதிக்கச் சூறையாடலின் பின் ஜோடிக்கின்றது. அவள் ஆணாதிக்க அடக்குமுறையின் கீழ் ஒருவனின் மனைவியாக இருக்க மறுக்கும்போது, ஆசையும் நிலையற்ற பலவீனத்தின் வீழ்ச்சியையும் கொண்டவள், எனவே ஆண்கள் அவளைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆள வேண்டும் என புராணங்கள் சமூகத்துக்கு ஆலோசனை வழங்கி, அடக்கியது.ஆணாதிக்கம் பல மனைவியைச் சட்டப்படியும், சட்டத்துக்குப் புறம்பாகவும் கொண்டு பலவீனமாக வாழ்ந்தபடி, ஒருதார மணத்தில் பலதார மணத்தை ஆண் தொடர்வதுடன், விபச்சாரத்தை ஆதாரமாகக் கொண்டு தன்னைப் பாதுகாத்து நிலைநிறுத்துகின்றது.. இதற்காக மதத்தின் பெயரிலும், சடங்கின் பெயரிலும், உரிமையின் பெயரிலும் பெண்களை இழிநிலைக்கு இட்டுச் சென்று ஆண் அனுபவிப்பதைப் பலமானதாக ஜோடித்தது. ஆண் பல பெண்ணுடனான பாலியல் உறவு கொள்ளும் நடத்தை பலமானதாகவும், பெண்ணின் பல ஆணுடனான நடத்தை பலவீனமானதாகவும் ஆணாதிக்கம் விளக்கம் கொடுத்து பெண்ணை நசுக்கியது. ஆண் - பெண்ணுக்கிடையில், ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான விளக்கத்தை ஒரே நடத்தையைக் கொண்டு விளக்கப்பட்டது. இதன் மூலம் ஆணின் நடத்தை சமூக அங்கீகாரத்துக்கும், பெண்ணின் நடத்தை சமூகத் தூற்றலுக்கும் உள்ளாகியது. இதன் மூலம் பெண்ணின் நடத்தை தடை செய்யப்பட்டது. ஆணின் நடத்தை நியாயப்படுத்தப்பட்டதுடன், இன்றுவரை இதுவே ஆண் - பெண் முரண்பாட்டின் எதிர்த் தன்மையில் பொதுப் போக்காகவுள்ளது. இதிலிருந்து எந்தச் சமூகமும், எந்த மதமும் விலகி நின்றுவிடவில்லை.
இதை மேலும் இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், "உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்."32 பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள், எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது. இது எதார்த்தத்தில் பெண்மீதான அடக்குமுறையாக உள்ளது. ஆணாதிக்கக் கூற்றுக்களின் பின்னால் இவை எல்லாம் ஆணின் பொதுப்போக்காக இருக்க, அதைப் பெண்ணுக்குப் பூச் சூட்டியது ஏன்? அதுதான் இந்தியப் பெண்கள் தலையில் பூச் சூட்டுகின்றனரோ? ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அதிகாரத்தில் பெண் நுழைவதைத் தடுக்கவும், அதை எதிர்த்துப் பெண் போராடுவதை முறியடிக்கவுமே இப்படி பெண்மீது ஜோடித்து அழகுகாட்டுகின்றனர்.
பெண்ணின் அவல நிலை கண்டு அதற்கு எதிராகப் போராட முயலும் ஆண்களைக் கட்டுப்படுத்த, பெண்ணின் குணம் பற்றிய விளக்கம் ஆணை மந்தையாக்குகின்றது. பெண் ஆணின் ஆணாதிக்கத்தின் மீது குற்றஞ்சாட்டும் போது அது கொடுமையானது என்று, ஆணாதிக்கப் பார்ப்பனியம் எதை எல்லாம் ஆணுக்கு நியாயப்படுத்தி பெண்ணுக்குக் கொடுமையாகக் காட்டியதோ, அதேவழியில் பெண்ணைக் கொடுமைக்காரியாக்கியது. பெண், குழந்தைக்குக் கொடுத்த பின்பே மிகுதியை உண்ணும் தாய்மை உணர்வை, தனக்கும் சேர்த்து கடமையாக்கிய ஆணாதிக்கம்தான், உள்ளமில்லாதவர்கள் என்று பெண்ணைக் குற்றம் சாட்டுகின்றது. தாய்மை உணர்வு குழந்தைக்குச் செய்த கடமைகளை, ஆணாதிக்கம் தனக்கு நிபந்தனையாக்கி, வீட்டு வேலைக்காரியாக்கிய பின்தான் உள்ளமில்லாதவள் என்கின்றது. பெண்ணின் இயற்கையான பாலியல் உணர்வும், குழந்தை பெறுவதையும் ஆணாதிக்கம் தனது உணர்வுக்கும், பொருளாதார நலனுக்கும் தீனிபோடும் பாலியல் ஊடகமாக்கியது. அத்துடன் ஆணின் தனிச் சொத்துரிமைக்கு வாரிசுகளைப் பெறும் பண்டமாக்கி, அவளை ஆணுக்குக் கடமை செய்யும் பெண்ணாக்கிய பின்பு, அவளைக் கருணையற்ற உள்ளமில்லாதவள் என்கின்றது. உண்மையில் கருணை பற்றியும், உள்ளம் பற்றியும் பேசும் அருகதை ஆணாதிக்கத்துக்கு இருக்கமுடியாது. இந்தக் கொடூரத்தைச் செய்த ஆணாதிக்கம், அதைப் பெண்ணுக்கு இல்லை என்பதுதான் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையின் சமூகப் பலமாகும்;. சமூகப் பலம் சொத்துரிமையின் வடிவில் எப்போதும் தீர்மானிக்கப்படுவதால் அதைப் பெற்றுள்ள ஆணாதிக்கப் பண்பாடு சமூகமயமாகியது.
பெண் ஆணாதிக்கத்துடன் முரண்பட்ட போராட்டத்தில் ஆணைவிட மேன்மையான பாத்திரத்தை, ஆணுக்கான கடமையில் வழங்குவதன் மூலம் பெண்ணைத் திருப்திப்படுத்தவும், ஆணின் நோக்கங்களை நிறைவு செய்வதும் அவசியமாக இருந்தது. ஆணாதிக்கம் பெண்ணைப் பாலியல் பண்டமாகவும் ஆணின் சுகத்தைப் பூர்த்தி செய்ய படைக்கப்பட்டதாகவும் புராண மற்றும் இந்து தர்மம் கூற்றுகளை நிறைவு செய்ய பெண்ணைப் புகழ்ந்தவற்றைப் பார்ப்போம். இராமாயணத்தின் பிந்தியகால விளக்கங்களில் "பெண்ணின் முகங்கள் பூக்களைப் போன்றவைகள். அவர்களின் மொழிகள் தேன் போன்றவைகள். அவர்கள் உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக்கூடியது. அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர் யாருமில்லை"32 என்ற விளக்கங்கள் ஆணாதிக்கத்தின் பாலியல் வெற்றியைப் பறைசாற்றுகின்றது.
பெண்ணின் முகம், மொழி ஆணாதிக்கப் பாலியல் கண்ணோட்டத்துக்கு இசைவாக உள்ள நிலையில் அதை ஆணாதிக்கம் புகழ்கின்றது. பாலியலில் ஈடுபடும் ஆணின் தேர்வுகள் இந்த எல்லைக்குள் அலைபாய்கின்றன. இந்த இரண்டும் இல்லை என்றால் அவளை அரக்கியாக வருணிக்கத் தொடங்குகின்றது. பெண் தனது உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கும்போது, அது ஆணின் கொடூரத்தை அம்பலப்படுத்தும் போது, ஆணின் கருணை உள்ளமில்லாத் தன்மை அம்பலப்படும்போது, அவை ஆணாதிக்கத்தின் நாற்றத்தால் அம்பலப்படும்போது, இதை அடிப்படையாகக் கொண்டு இழிவான நடத்தை கொண்டதாகக் குறிப்பிட்டுப் பெண்ணை ஆணாதிக்கம் வருணிக்கின்றது. இதனால்தான் பெண் கணவனையோ, ஆணையோ நிமிர்ந்து, எதிர்த்துப் பேசக் கூடாது என ஆணாதிக்க இந்து தர்மம் கோரி அமுல் செய்கின்றது.
இந்துப் பண்பாட்டில் உருவான ஆணாதிக்கம் பெண்ணிடம் இரகசியம் சொல்ல முடியாது என்கின்றது. ஏனெனின் அவள் பகிரங்கமாக்கி விடுவாள் என்று கூறும் நடைமுறையில் உள்ள பழமொழிகள், பண்பாடுகள் ஏன் ஏற்பட்டன எனக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். சமூக இயக்கத்தில் இருந்து பெண் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சொந்தக் குடும்பத்திலேயே ஆணுடன் பேச முடியாத சூழலில், சொந்த மொழியையே சில எல்லைக்குள் வைக்கும்படி ஆணாதிக்கம் மட்டுப்படுத்தியது. அவளின் தொடர்புகள் சுற்றுவட்டாரத்தில் அதேநிலையில் வாழும் பெண்ணாக இருப்பதால், அவளின் மொழி எல்லை குறுகிய நிலையில், அவர்கள் பேசிக்கொள்ள விடயங்கள் அற்ற நிலையில் பேசியே ஆக வேண்டிய துயரத்தால் பீடித்துப் போய் நிற்கின்றாள். இது மட்டுமே அவளின் துயரத்தைப் போக்கும் வடிகாலாக எஞ்சுகின்றது.
கணவனின் ஆணாதிக்கக் கொடூரத்தை வெளியில் சொல்ல முடியாத வழிபாட்டு, பண்பாட்டு அடக்குமுறை, இதனால் தனக்கு எதெல்லாம் தெரிந்ததோ அதை எல்லாம் கொட்டித் தீர்த்து, பரம இரகசியமாவது தவிர்க்க முடியாத எல்லையாக இருந்தது. பெண்ணின் மொழி இதற்கு அப்பால் விரியாத நிலையில், பெண்ணின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் பகிரக் கோருகின்றது. அத்துடன் அவள் பகிர்ந்துண்டு வாழ்ந்த வாழ்க்கை மனிதச் சமூகத்தில் ஆணாதிக்க வழி சுரண்டும் இரகசிய மொழியை இயல்பில் தன்னையறியாமலே மறுக்கின்றது. இது ஆணாதிக்க மட்டத்தில் மோதல்களையும், புகைச்சலையும் கொண்டுவருகின்றது. இதில் இருந்தே ஷஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று பெண்ணை இழிவுபடுத்துகின்றது ஆணாதிக்கம். பெண் பேசும் பொருட்களின் எல்லை சுருங்கி பெண்ணை அன்னியப்படுத்திய ஆணாதிக்கம், பெண்ணை மௌனிக்கக் கோரியது. பெண் தனது குறுகிய வட்டத்தில் பரம இரகசியமாகத் தெரிந்ததைப் பேசுவது மட்டுமே அவளின் மொழியைப் பாதுகாத்தது மட்டுமல்ல, அவளின் மொழி இதுவாகவே இருந்தது. மொழியின் வளர்ச்சி என்பது ஆணாதிக்கப் பொருட்களிலும், பெண்ணை அடிமைப் படுத்திய உழைப்பின் எல்லைக்குள்ளும், அதன் வர்க்கப் போராட்டத்துக் குள்ளும் கட்டியமைக்கப்படுகின்றது.
பெண்ணை இழிவுபடுத்துவது ஆணாதிக்கத்தின் பண்பாகியது. இதனால் உருவான இலக்கியம் ஆணாதிக்க ஒழுக்கத்தைப் பெண் மீது திணித்தது. பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், "ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்."32 இதையே சுக்ரன் "பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்."32 சுக்ரா 3.163 இல், "பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம், 4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்"32 என்று புராண இலக்கியங்கள் தனது ஆணாதிக்கப் பெண் மதிப்பீட்டை முன்வைத்தது மட்டுமின்றி, பெண் கொடுமைப்படுத்தப்பட்டாள். பெண் உண்மையில் ஒருவனை நேசிக்க முடியாதவள் என்று கூறி, பெண்ணை அடக்கி, ஆணாதிக்கம் கட்டுப்படுத்தியதை இது காட்டுகின்றது. இது அன்று ஆண் அடக்குமுறைக்குள் பெண் நேசிக்க மறுத்த போராட்டத்தைக் காட்டுகின்றது. பெண்வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகம் வளர்ச்சி பெற்றபோது பெண் தனது சுதந்திரத்தைத் தக்கவைத்த போராட்டத்தில் தனது உரிமையினை நிலை நாட்டியபோது அதைத் தூற்றி, ஆண்வழிச் சமூகத்தைப் பெண்ணடிமைத்தனம் மீது கட்டியமைத்ததைக் காட்டுகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் ஒருவனை மட்டும் நேசிக்கக் கற்றுக் கொண்டாள். ஆனால் ஆண் அதை எப்போதும் மறுத்தான்.
இந்த நேசிப்பு என்பது ஆணாதிக்கப் பாலியல் வேட்கையின் தற்காப்பில் பெண் ஒரு ஆணைத் தெரிவு செய்த நிகழ்வுளூ அதைத் தொடர்ந்து காதலிக்க தொடங்கிய வரலாற்றில், அக்காதல் ஒருதார மணத்தில் நிபந்தனையாக இருந்ததில்லை. மாறாக, பெண் ஆணைத் தெரிவு செய்து கூடி வாழ்வதும், விலகிச் செல்வதும் அவளின் சுதந்திரமாக இருந்தது. இந்தச் சுதந்திரம் மறுக்கப்பட்ட வளர்ச்சியின் நீட்சியில்தான் பெண் மீதான நேசமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ஆணாதிக்கம் குறிப்பிட்ட தனி ஒரு ஆணை நேசிக்க நிர்ப்பந்திக்கின்றது. அத்துடன் முன்னைய சமூகங்கள் பெண்வழிச் சமூகமாக இருந்ததால், ஆண்வழிச் சமூகம் தனக்குள் கட்டுப்படுத்த முயன்றபோது அதை எதிர்த்து பெண்வழிச் சமூகம் போராட நிர்ப்பந்தித்தது. இதனால் பெண்ணின் போராட்டத்தை மறுத்த ஆணாதிக்க ஒழுக்கவியல், பெண்ணைக் கொலைக்காரியாக்கிக் குற்றம் சாட்டுகின்றது.
பெண்வழி, ஆண்வழி உறவுமுறையால் அடக்கப்பட்டது இலகுவாக நடந்துவிடவில்லை. மாறாக, கடினமான போராட்டத்தைக் குடும்பத்துக்குள்ளும், வெளியிலும் பெண் நடத்தினாள். பெண்வழிச் சடங்குகள், கடமைகள், உரிமைகள் பறிக்கப்பட்டபோது, பெண் அதற்காக உயிரைக் கூட விட்டு உள்ளதை, அவளின் பழைய தொடர்ச்சியான சடங்குகள் காட்டுகின்றன. இதை மேலே விவாதித்துள்ளேன். பெண்ணின் குணமாகக் காட்டப்படுபவை ஆணின் தனிச்சொத்துரிமையின் பகைமையான பக்கங்கள் ஆகும்;. ஆணுடைய தனிச் சொத்துரிமையின் மூர்க்கமான போக்குகள் அம்பலப்படும்போது, அதைப் பெண்ணின் குணங்களாகக் காட்டுவது ஆணாதிக்கத்துக்கு அவசியமாகின்றது. தனிச் சொத்துரிமையைக் கைப்பற்ற பொய், அதன் மீதான நிலையின்மை, அதை அடைய வஞ்சகம், இதற்காக இயற்கையை அழித்து சூறையாடும் மூடத்தனம், இதற்காகப் பேராசை, நேர்மையற்ற உள்ளத்தைக் கொண்ட மாசு, மனிதனைச் சூறையாடுவதில் கொடுமை, இதை எல்லாம் அடைவதில் வெட்கமற்ற துடுக்குத்தனம் ஆகியவை ஆணாதிக்கத்தின் பொதுப்பண்பாகும்.
பெண் உழைப்பில் (குழந்தை வளர்ப்பு, வீட்டுவேலை...) நேர்மை, அதைச் செய்வதில் உறுதி, குழந்தைகளில் அன்புடன் கூடிய நேர்மை, அறிவில் சமூகப் (இயற்கை அறிவு) புத்திசாலித்தனம், பகிர்ந்து உண்ணல், இதைச் செய்வதில் மாசற்ற தன்மை, இதை அடைவதில் பரிவு, இதைச் சாதிப்பதில் சகிப்பு ஆகியவை பெண்ணின் பொதுப்பண்பாகும். இதுதான் மனிதப் பண்பாகும். பாலியல் நடத்தைகள் என அனைத்திலும் இந்த ஆணாதிக்க மதிப்பீட்டுக்கு எதிர்மறைத் தன்மை காணப்படுகின்றது. ஆணாதிக்கத்துக்கும் பெண்ணுக்கும் உள்ள பிளவால் இவை பொதுவாகப் பிளந்து போயுள்ளது. ஆணாதிக்கம் பெண் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஆணாதிக்க ஆணினுடையவை. இதைப் பெண்கள் மீது திணித்துப் பெண்ணை எப்படி அடக்கியது எனப் பார்ப்போம்.அர்த்த சாத்திரம் 3-3-59 இல், "பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டில் மீது அடிகள் கொடுக்கலாம்;."32 இதை இராமாயணம் 25-17 இல், "ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம். சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் - அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கொன்று விடலாம். உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார். ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளைத் தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்."132
ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகள், அதனால் எழுந்த சமூக ஒழுக்கத்தை, வன்முறை மூலம் இந்து தர்மம் பெண்கள் மீது கட்டியமைக்கின்றது. பெண்கள் மீதான ஆணின் அதிகாரம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் என்பது ஆணாதிக்கம் பெண்ணை அடிக்கும் உரிமையை வழங்கியது. அத்துடன் சமூகத்துக்குத் தீங்கு என்ற கண்ணோட்டத்தில் பெண்கள் கொல்லப்பட்டனர். அதாவது ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தைத் தகர்த்து, கேள்விக்குள்ளாக்கும் பெண்கள் கொல்லப்பட்டனர். பார்ப்பனிய முட்டாள்த்தனம், மூடநம்பிக்கை, அடிமைப்படுத்துதல், அவதூறுகள், வன்முறை ஆகியவை மீது கேள்வி எழுப்பிய பெண்கள் கொல்லப்பட்டனர்.
இவை எல்லாம் உலகளாவிய சமூகத்திலும் பொதுவாக நடந்தவைதான். மதத்தின் ஆதிக்கம், அதன் அதிகாரச் செல்வாக்கு மனித ஒழுக்கத்தை ஒழுங்கமைத்து, கண்காணித்து, கட்டுப்படுத்தியது. பெண் பற்றிய ஆணாதிக்க வரையறைகள் மீறப்பட்டபோது அவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆணாதிக்கத்தால் கொல்லப்பட்டு, ஒழுக்கத்தை நிலைநாட்ட உதாரணம் காட்டும் பெண்களான தாடகை, மாதா வரலாறு முதலியவற்றை, அவர்கள் ஏன், எதற்காகக் கொல்லப்பட்டனர் என்பதை ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் போராட்ட வழியில் ஆராய வேண்டியுள்ளது. இது பற்றிய விபரம் முழுமையாக எடுக்க முடியாததால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்.
சமூகத்தில் ஆணாதிக்கம் கோலோச்ச, கோலோச்ச பெண்கள் மீதான வெறுப்பு அதிகரித்தது. ஆண் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பும், இலாபமும் உடையவனாக மாறியதால், அவன் சமூகத்தின் மேலான நபராக மதிக்கப்பட்டான். பெண்ணைச் சமூகத்தின் இழி பிறவியாகப் புராண இலக்கியங்கள் மக்களுக்குப் புகட்டின. ஆண் பரிசம் கொடுத்து பெண் பெற்ற முறைக்குப் பதில், பெண் சீதனம் கொடுக்கும் முறை பெண்ணைச் சுமையாக்கியது. சொத்துரிமை ஆணின் கையில் இருந்த நிலையில் மேலும் சீதனமூடாக அவளது சொத்தைத் தனதாக்கும் கண்ணோட்டத்தில், சீதனம் கொடுப்பது பெண் மீதான சுமையாக மாறியது. எனவே, சொத்தற்ற பெண் சீதனம் கொடுக்க சொந்தக் குடும்பத்தில் ஆணைச் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒழுக்கமாக மாறியது. இதனால் பெண்ணின் வாழ்வு மேலும் இழிநிலைக்குத் தரம்தாழ்ந்தது. பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு ஆண்களிடத்தில் உருவானது. இது குறித்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சொத்தை ஆணின் சொத்து கவர்ந்தது. பெரிய மூலதனம் சிறிய மூலதனத்தை விழுங்குவது போல், எஞ்சியிருந்த பெண்ணின் சொத்தையும், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சொத்தையும் சீதனம் சூறையாடியது. இதனால் பெண்குழந்தை மீதான ஆணின் வெறுப்பை, ஆணாதிக்கப் புராண இதிகாச ஒழுக்கங்கள் விளக்கம் கொடுத்து சமுதாயமயமாக்கியது.
அதர்வண வேதத்தில் 6-2-3 இல், "குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை. பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும் இங்கே ஆண் மகவு பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்."32 காதபாசன் ஹிதா 27ஏ யில், "பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்"32 என்று சொத்துரிமை பறிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்திய ஆணாதிக்க விளக்கத்தினூடாக வெறுக்கப்பட்டாள். ஆண் குழந்தை வேண்டி வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தை பெற்ற தாய், குழந்தைப் பேறு இல்லாத பெண் சமூகத்தால் தூற்றுதலுக்கு உள்ளாக்கப்பட்டாள். ஆணாதிக்கம் இதற்காகப் பெண்ணைத் துன்புறுத்தியது. அடிப்படையில் ஆண் சார்ந்த வாரிசுக் கண்ணோட்டமும், பெண்ணின் சொத்திழப்புமே ஆணாதிக்கம் கோலோச்சியதற்கான அடிப்படையாகும்.
இது இன்று எப்படி பொதுவாகச் சொத்துடைய வர்க்கம் மற்றைய வர்க்கத்தைச் சுரண்டி, அதையே ஜனநாயகமாகக் கையாண்டு கேவலப்படுத்தி, அடிமைப்படுத்துகின்றதோ அந்தளவுக்கு நிகரானது. இன்று பெண் குழந்தை பற்றிய இந்து - இந்தியச் சமூகத்தில் காணப்படும் கண்ணோட்டம் இந்த வரலாற்று வழி உருவாக்கப்பட்டவையே. இவை நவீனப்பட்டபோது நாகரிகமாக, பெண்ணின் பூர்சுவா சுதந்திரக் கோரிக்கையின் பின், பெண் குழந்தையைக் கருவிலேயே கொலை செய்வதும் சரி, இதற்கு வசதியற்றவர்கள் பெண் சிசுவைப் பிறந்தபின் கொல்வதும் சரி பிறந்த பின் பெண் குழந்தையை வேண்டாவெறுப்பாக வளர்ப்பது, திட்டுவது, புறக்கணிப்பது, ஒதுக்குவது, சொந்தக் குடும்பத்திலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது எல்லாம் பழைய ஆணாதிக்க இந்து தர்ம ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பட்டவைதான். பெண் கரு அழிப்பு, குழந்தைக் கொலை, பெண்ணின் ஒதுக்கப்பட்ட வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஆதாரமான ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது என்பது இந்து தர்மத்தைத் தகர்ப்பதால் மட்டுமே வெற்றிபெற முடியும். இது அனைத்துப் பிரிவு மக்கள் ஒற்றுமைக்கும் அதாவது சர்வதேச ஆணாதிக்க ஒழிப்புக்கும் முன்நிபந்தனையும் ஆகும். அந்தளவுக்கு இந்து தர்மம் மனித ஒழுக்கத்தைக் கட்டிப்போட்டு ஆணாதிக்க வக்கிரத்தைப் பெண்கள் மீது திணிக்கின்றது.
ஆணாதிக்கச் சுரண்டல் யுத்தங்களில் பெண்களை அபகரித்துக் கொண்டுவந்த போதும் சரி, ஆணாதிக்கத் திருமண எல்லைக்குள் பெண்ணை வன்முறையாகச் சூறையாடிய போதும் சரி, பெண்களின் பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கும் தண்டனையாகவே பெண்களைக் கொடுமைப் படுத்தியது. ரிக் வேதத்தில், "யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ அல்லது விவாகச் சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டுச் சாமான்களைப் போலவே நடத்தவேண்டும்."32 ஆணாதிக்க ஒழுக்க மீறலை வெளியில் உள்ள ஆண்கள் அவள் மீது நிகழ்த்தும் போது, பெண்ணின் வாழ்வை மேலும் சீரழிவாக்கி, சித்திரவதைப்படுத்திக் கொடுமைப்படுத்தியது. குற்றவாளியாக ஆணாதிக்க ஆண் இருக்கும் நிலையில், பெண்ணுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்பெண் இருந்த பண்ட மதிப்பில் மேலும் தரம் தாழ்த்தி, சமூக அந்தஸ்து மேலும் குறைக்கப்பட்டு சமூகத்தின் கறையாக்கப்பட்டாள். அவளைச் சமூகத்தில் யாரும் விரும்பியதுபோல் கண்காணிக்கவும், வேலை வாங்கவும், சிறந்த பாலியல் சரக்காகவும், அடிமட்ட வேலைக்காரியாகவும் அப்பெண்களைக் கண்காணித்து, சமூக ஒழுக்கத்தை வரையறுத்து, சித்ரவதை செய்தே சுரண்டியது. இதன் போக்குகள் இன்றுவரைகூட எதார்த்தத்தில் உள்ளதைக் காணமுடிகின்றது.
நீதியின் ஒழுக்கத்தில் சிறந்த கதாநாயகர்கள் ஆக்கி மக்களுக்கு ஒழுங்கமைத்த பாண்டவர் கதையில், பஞ்சபாண்டவர்கள் தமது மனைவியைச் (இங்கு திரௌபதி ஐவருக்குப் பொது மனைவியைக் கூட) சூதாட்டத்தில் பணயமாக வைத்தபோது பெண்ணை ஒரு பொருளாக, சரக்காகத் தரம் தாழ்த்தப்பட்டதையே காட்டுகின்றது. இதுபோல் இராமாயணத்தில் இராமன் பரதனுக்குத் தான் வகிக்கும் பதவி, மனைவி என அனைத்தையும் கொடுத்தபோது, இங்கும் பெண்ணை எப்படி இந்து தர்மம் சரக்காக்கிக் கைமாற்றியதைக் காட்டுகின்றது. இதை வால்மீகி இராமாயணம் 2-19-14 இல், தெளிவாகவே உணர்த்தி விடுகின்றது.
இதை ஒத்த ஒன்றை ரிக்வேதம் 40-31-24 இல் பார்ப்போம். "ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டுப் பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, பிரியமாயிருப்பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும், சிறந்த ஊழியராகவும் இருப்பதனால்தான் சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில், மற்றவர்கள் தங்கள் கைகளைத் தனது மனைவி மீது போடுகின்றனர் என்று வேறு கூறுகின்றார்."32 பெண் மிக மோசமாக நடத்தப்பட்டாள். பெண்ணை ஆண் சூதாட்டத்தில் வைக்கத் தடையாக இருப்பது அவளின் அழகு (பாலியல் கவர்ச்சி), அவளின் அன்பு (ஆணின் பாலியலைப் பூர்த்தி செய்யும் சரக்கு), தோழமை (ஆணின் சொத்து), கடமை தவறாத வேலைக்காரி என்ற ஆணின் நலன் சார்ந்த இலாபம்தான். இவைதான் பெண்ணைச் சூதாட்டத்தில் வைப்பதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகின்றன.
சூதாட்டத்தில் அவனின் பொருள் சார்ந்த சூறையாடும் கவனம் பெண்ணின் உரிமையைப் பணயம் வைக்கின்றது. அதாவது, மற்ற சூதாட்ட ஆண்களின் ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தில் பெண் மீதான கவனத்தைத் திருப்பவும், பெண் மீது கைபோடவும் அனுமதித்து. ஆண் சூதாட்டத்தில் வெற்றியைச் சாதிக்க முனைவதன் மூலம், பெண் பணம் திரட்டும் சரக்காகின்றாள். இதனால் ஆணாதிக்கப் பார்வையில் அழகான பெண்ணின் பாத்திரம், ஆணின் பொருள் ஈட்டவும் ஓர் ஊடகமாக இருக்கின்றது. இன்றுவரை அனைத்து சூதாட்டம் மற்றும் இது போன்றவற்றில், குறிப்பாக ஆணாதிக்க உற்பத்திகளை மக்களின் தலையில் கட்டிவிட, அழகான பெண்மீதான பார்வை மற்றும் அவளின் பாலியல் உடல், அங்ககச் செயல்கள் மீது திருப்பியே மனிதச் சமூகத்தை அடிமைப்படுத்தவும், சுரண்டவும் முடிகின்றது. இதற்கு வெளியில் இந்த முதலாளித்துவச் சந்தைப்படுத்தல் சாத்தியமில்லை.
ஆணாதிக்கம் தகர்கின்றபோது இந்தச் சுரண்டல் அமைப்பும் தகர்ந்து போகும்;. சந்தையே ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதைக் கைவிட்டால் சுரண்டுவதைக் கைவிட்டதாக அர்த்தம்;. எனவே, முதலாளித்துவச் சந்தைப்படுத்தலைத் தகர்க்காமல் பெண் பாலியல் ரீதியில் விளம்பரம் செய்யப்படுவதைத் தடுக்கமுடியாது. ஒன்றுடன் ஒன்று கலந்துறவாடும் இந்த ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையின் நோக்கில், வேறுபட்ட பொருளாதாரச் சமுதாயப் பண்பாட்டிலும் காலத்தைத் தாண்டி, ஒரே போக்கில், ஒரே நிலையில், ஒரே நோக்கத்துக்காகப் பெண்ணை அழகுபடுத்துவது முதல் அனைத்தையும் பயன்படுத்தியது. இங்கு பெண் உடலியல் கூறுகளிலும் சரி, சிந்தனையிலும் சரி, செயலாற்றுவதிலும் சரி இந்த ஆணாதிக்க அமைப்புக்கு வெளியில் சுதந்திரமாக இயங்க முடியாது.பெண், ஆணின் ஆணாதிக்கச் சரக்குப் பண்டமாக இச்சமூகத்தில் இயங்குகின்ற ஓர் இயந்திரம் மட்டுமே. பெண் அன்றும் ஆணின் சொத்துதான். இதற்குப் பொருத்தமாகச் சத்தியத்தின் நாயகனான அரிச்சந்திரன் தான்பெற்ற கடனுக்காகத் தனது மனைவியை விற்கின்றான். மனைவி ஆணை விற்க முடியுமா என்றால் இல்லை. மனைவியைச் சத்தியத்தின் நாயகன் விற்றால் அதில் சத்தியம் இருப்பதில்லை ஆணின் தனிப்பட்ட சொத்தாகின்றது. பொருளைச் சூறையாடுவது, பறிப்பது, சுரண்டுவது, சொத்து சேர்ப்பது போன்றன இச்சத்தியத்தின் குறிக்கோளில் அடங்கும். அந்தவகையில் பெண்ணை விற்பது, வாங்குவது, பண்டமாகச் சந்தையில் விடுவது என எதையும் செய்யக் கூடிய நிலை என்பது ஆணாதிக்கச் சத்தியத்துக்குப் புறம்பானவையல்ல.
பெண் பொருளியல் பண்டம்தான் என்பதை அன்று முதல் இன்று வரை ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை நியாயப்படுத்தி, அமுல் செய்து வருகின்றது. அரிச்சந்திர மயானகாண்டம் எந்தக் கட்டத்திலும் சந்திரமதியை விற்றதைக் கண்டிக்கவில்லை. அதற்காகக் கேட்போர் கூட்டங்களில் சோகத்தை, கண்ணீரை வரவழைக்கவில்லை. மாறாக, இடையில் பறையனாகிய நிகழ்வை மட்டுமே சோகமாகக் கருதியது. வாழ்க்கை முழுவதையும் பார்ப்பனியம் கேவலப்படுத்தியுள்ள பறையனான அந்த மக்களை இட்டு ஒருக்காலும் கண்ணீர் வடித்ததில்லை. சத்தியம், ஜனநாயகம் என்பன ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையில் ஏற்படும் பாதிப்புகள் மீதே கோரப்பட்டன. இவைதான் எல்லா மார்க்சிய எதிர்ப்பு, ஆணாதிக்கக் கோட்பாட்டாளர்களின் சத்தியமாகவும், நீதியாகவும், ஜனநாயகமாகவும் உள்ளது. இது இன்றுவரை எதார்த்தமாகவும், வக்கிரமாகவும் உள்ளது.
இந்த இந்துப் புராணங்கள் இன்று மீண்டும் முன்னணிக்குக் கொண்டுவரப்படும் நிலையில், இராமனின் ஆணாதிக்கக் கற்பு நோக்கு சீதையை இழிவுபடுத்திய வக்கிரத்தைப் பார்ப்போம். ஒரு வண்ணான் சந்தேகப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இறை அவதாரமாகக் கருதப்படும் இந்து நாயகன் இராமன், தனது மனைவி சீதையை, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போதும் காட்டுக்குத் துரத்திவிட்டான். பெண்கள் தம் மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தை, சாதியச் சமூகத்தில் இழிவாக்கப்பட்ட சாதி, ஆண்களுக்கு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது சாதிப் பிளவைத் தாண்டி அடிநிலைச் சாதி ஆண்கள், உயர்சாதிப் பெண்களின் ஒழுக்கத்தின் மீது கேள்வி எழுப்பவும் கண்காணிக்கவும் உரிமை பெற்று இருப்பதை இது நிறுவுகின்றது. வண்ணானின் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, இராமன் சீதை மீதான சந்தேகத்தைக் கொண்டு தண்டிக்கும் உரிமையை விளக்கமின்றி அமுல்படுத்த ஆணாதிக்க ஒழுக்கம் கோரியது, கோருகின்றது. இறை அவதாரம் பெற்ற இராமனாகப் புராணங்கள் புளுகிய போதும், இராவணன் இடம் இருந்து சீதையை மீட்டபோது, (முரண்பட்ட பல வரலாற்றுக் கதைகள் இருந்தபோதும்) சீதை தனது கற்பை நிலை நாட்ட தீ மிதித்து ஆணாதிக்க ஒழுக்கத்தை நிறுவ வேண்டி ஏற்பட்டது.
இன்று இராமன் பெயரில் நிகழும் படுகொலைகள், கற்பழிப்புகள்.... பின்னாலான ஆணாதிக்க ஒழுக்கத்தை, அன்றே சொந்த மனைவி மீது நடத்தப்பட்டதை, கற்பின் ஒழுக்கத்தின் பின் நியாயப்படுத்தப்பட்டது. இறைவன் என்று கூறப்படும் பார்ப்பனிய இந்துக் கடவுளான இராமன் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், சந்தேகத்தின் ஜென்மமாகவும் இருப்பதை, பெண்ணை நாயைப்போல் போடுதடியாக நடத்துவதை எப்படி ஜனநாயகவாதிகள் ஏற்றுக் கொள்ளமுடியும்;. இராம ஜென்ம பூமி சார்ந்த இந்து மதப் பார்ப்பன ஆட்சியாளர்களின் அதிகாரத்தில், இந்துச் சட்டக் கோவை உருவாக்கப்படின் பெண் பெற்று இருந்த உரிமைகள் எல்லாம் இராமன் பெயரால் அடக்கப்படும் என்பது தெட்டத்தெளிவானது.
பஞ்சபாண்டவர்களின் ஒரே மனைவியான திரௌபதி தனது ஐந்து புருசனுக்கு வெளியில் இன்னுமொரு ஆணை விரும்புவதாகக் கூறியபோது, இதை ஆணாதிக்கம் தமது விபச்சார நிலையில் நியாயப்படுத்தியது. இன்று பெண்ணியம் பேசும் ஆணாதிக்கப் பெண்ணியவாதிகள் பலதாரமுறையைத் தாமே எடுத்து நியாயப்படுத்துவதும், வாழ்வதும் இதன் போக்கில்தான். அதாவது சமுதாயத்தில் இருக்கக் கூடிய ஆணாதிக்கப் பலதாரமுறையை இப்பெண்ணியவாதிகள் தமக்கும் விரிவுபடுத்தும் பண்பாட்டில் ஆணாதிக்கமயமாகின்றனர்.
வரைமுறையற்ற ஆணாதிக்கப் புணர்ச்சியை ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் உண்டு என்ற கோரிக்கையின் பின், இது இன்று ஏகாதிபத்தியப் பண்பாடாகின்றது. அதாவது எல்லைகடந்த ஏகாதிபத்தியத் தலையீடு, கைப்பற்றல், அனுபவித்தலையே பெண் - ஆண் மீது செய்யும் ஆணாதிக்க உரிமை ஏகாதிபத்தியப் பெண்ணியமாகின்றது. இந்த வகையில் பெண் குடித்தல், புகைத்தல், பலதார விபச்சாரம் போன்ற ஆணாதிக்கக் கேடுகளில் இருந்து இரவல் வாங்கி உரிமையாகின்றாள். இதுபோன்ற கோரிக்கைகள் ஆணாதிக்கம் தனக்காக வைத்து இருப்பதும், நியாயப் படுத்துவதும், பெண்ணின் ஜனநாயகக் கோரிக்கையாகி விடுவதில்லை. மாறாக ஆணாதிக்கமயமாதலாகும். ஆணின் மனித விரோதச் செயல்களைப் பெண் இரவல் வாங்க முன்வைக்கும் பெண்ணியம் ஆணாதிக்கமாகும்;. இதற்கு எதிராக ஆணாதிக்க ஒழுக்கக் கேடுகளை எதிர்த்து பெண் போராட வேண்டுமே ஒழிய அதைக் கோரி போராடுவது கூடாது.
பெண்ணின் கற்பைப் போற்றும் இந்து தர்மக் கதைகளை ஒட்டி கண்ணகி பாண்டிய மன்னனிடம் கூறியவற்றைப் பார்ப்போம்.
1. காட்டுக்குச் சென்ற அழகிய பெண்ணை ஒருவன் உடலுறவு கொள்கின்றான். பின்னால் அந்த ஆண் அப்பெண்ணைத் தெரியாது என மறுக்கின்றான். பின்னால் இறைவனை வேண்டியபோது அவள் உறவு செய்த குடிசையும், அருகில் இருந்த மரமும் சாட்சி சொன்ன பின்பே அவளை அவன் ஏற்றுக்கொள்கின்றான். இதனால் இவள் பத்தினி.2. இரண்டு பெண்கள் ஆற்றங்கரையில் மண் பொம்மை செய்து விளையாடினர். ஒரு பெண்ணைப் பார்த்து, மணற் பொம்மையை அவள் கணவன் என்று மற்ற பெண் கூறியதால், அப்பொம்மையை வெள்ளம் அடிக்காது பாதுகாத்தாள். எனவே அவள் பத்தினி.3. கரிகாலச் சோழனுடைய மகளின் புருஷனை ஆற்றுவெள்ளம் அடித்துச் செல்ல, அவள் கடலிடம் முறையிட்டுத் திருப்பி பெற்றாள் என்பதால் பத்தினியாகின்றாள்.4. பெண் ஒருத்தியைக் கணவன் விட்டுச் சென்ற நிலையில் கல்லாகி கடற்கரையில் கணவனைப் பார்த்து கிடந்தாள். கணவன் வந்தவுடன் மீள உருவம் பெற்று வீடு வந்தாள். எனவே இவள் கற்புள்ள பத்தினியாகின்றாள்.5. பெண் ஒருத்தியை ஆண் விட்டுச் சென்ற நிலையில், வேறு ஒருவன் அவளை உற்றுப் பார்த்ததால், அவள் தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிக் கொண்டு வாழ்ந்தாள். கணவன் வந்த பின் அவள் பழையபடி மாறியதால் கற்புள்ள பத்தினியாகின்றாள்.6. ஒருத்தியின் மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழுந்துவிட, தன் குழந்தையையும் கிணற்றில் போட்டு, பின் வெளிவர வேண்டிப் பெற்றதால் இவள் கற்புள்ள பத்தினியாகின்றாள்.7. இரண்டு தோழிகள் விளையாடும்போது, நீ மகளும் நான் மகனும் பெற்றால் அவர்கள் இருவரும் கணவனும் மனைவியாக இருப்பர் எனக்கூறி விளையாடினராம்;. இதைப் பின் அப்பெண் தனது மகளிடம் கூற அவள் தோழியின் மகனுக்கு மனைவியானதால் கற்புள்ள பத்தினியாகின்றாள்.கற்பு பற்றி இந்த ஆணாதிக்கக் கூற்றுகளைக் கூறிய கண்ணகி, பாண்டியனை அழிக்கின்றாள். இவைகள் எதை எமக்கு விளக்குகின்றன. பெண் மீதான அன்றைய ஆணாதிக்கக் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகின்றன. இன்று இதன் போக்குகள் சில வேறுபாட்டுடன் இருப்பது காணமுடியும்.
இன்று ஒரு பெண்ணின் நம்பிக்கையை, காதலைப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி பின் கைவிடுவது எதார்த்தமாக உள்ளது. பெண் காதல் செய்யும்போது தற்காப்பு நிலையிலும், ஆண் தாக்குதல் நிலையிலும் எப்போதும் அணுகுகின்றனர். பெண்கள் மீதான ஆணின் பாலியல் நடத்தைகள் பெண்ணை அனுபவித்தபின் துப்பிவிடத் தயாரான தன்மையில் இருப்பதைப் பொதுவாகக் காணமுடியும்;. கருத்தரிப்பு ஏற்படாதவரை, இவை பகிரங்கமாகச் சமூகத்துக்குத் தெரியவராத வரை, இந்த உறவு சுதந்திரமாக நீடிக்கின்றது. கருத்தரிப்பு ஆணின் மறுப்புக்குச் சமுதாய அடையாளமாகின்றது. அதுவரை சுதந்திரமான காதல் என்பது, பாலியல் அனுபவிப்புவரை எல்லைப்படுகின்றது. இன்று கருஅழிப்பு என்பது இதனால் பெருகுவதும், ஆண் - பெண்ணை ஏமாற்றுவதும் காணமுடியும். பின்னால் ஏமாற்றியவனையே கட்டாயத்தின் பேரில் கட்டிவைப்பதும் நிகழ்வாக உள்ளது. இதுதான் கற்பழிப்புகளின் மீதான பொது வடிவமாக உள்ளது. இது மட்டும்தான் அப்பெண்ணின் நிம்மதியான சமூக அங்கீகாரமாகவும், திருமணமாகவும் இருக்கின்றது.
புராணங்கள் ஊடாகக் கற்பு பற்றிய ஆணாதிக்க ஒழுக்கவியல் கோட்பாடுகள் நடைமுறை வடிவமாக வரும்போது, மணற் பொம்மைகளும், நினைவுகளும் நிறைவேறாத கற்பனை வாழ்க்கைகளும் நிறைந்ததே பெண்களின் கண்ணீர் வாழ்க்கை. மணற் பொம்மைக்கே கணவனுக்குரிய அந்தஸ்தைக் கோரி பெண்ணை மண்டியிடவைத்த ஆணாதிக்கம், ஆணின் எல்லையில்லாத வக்கிரச் சுதந்திரத்தைப் பெண்மீது நிறுவியதை இது காட்டுகின்றது. இதையொட்டியே பெண் வழிபாட்டு முறைகள் கூட உருவாக்கப்பட்டன. அதாவது வெறும் கற்சிலைக்கு அர்த்தமற்ற கடவுள் விசுவாசத்தை எப்படி சமூகம் கொடுக்கிறதோ, அதையே கணவன் விடயத்தில் பெண்ணை அனுசரிக்கக் கோரியது. மணல், கல் என எதிலும் இதை விட்டுவைக்கவில்லை. இதற்கு இசைவாக ஆணாதிக்கப் பழமொழிகளையும் சமூகம் உருவாக்கிக் கொண்டது. "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று கூறியே பெண்ணை ஆணின் அடிமையாகச் சேவகம் செய்யும்படி நிர்ப்பந்தித்தது. பெண்ணின் பாலியல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திய சமூகம், பெண்ணின் உணர்வைத் தடுக்க, கல்லாலான கணவனைக் கூடக் கட்டியழ வைத்தது. குடும்பத்தின் அதிகாரம் பெண்ணின் சுதந்திரத்தை மறுக்கும் எல்லா நிலையிலும் பெண்ணுக்குப் போலியான பொம்மைக் கணவனையோ, வேறு மற்றோ (வழிபாடு.. போன்றன) பரிசளித்து, துயரத்தில் தள்ளிவிடுகிறது சமூகம்.
கணவனை இழந்த பெண் தனது வாழ்க்கையை, இயற்கை உணர்வுகளைச் சுதந்திரமாகத் தீர்க்கமுடியாத ஆணாதிக்கச் சமூகத்தில் பெண், கணவனை நினைத்து உருகக் கோரியது. அவன் வருவான் என்று காத்து இருக்க அல்லது அதை நினைத்து இலயித்திருக்க கோரியது. இல்லாது போனால், அப்பெண்ணின் அழகைச் சிதையவிட்டு வாழ அல்லது ஆணே, பெண்ணின் அழகைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி ஆணாதிக்க ஒழுக்கத்தை நிலைநிறுத்தினர். இதை நிலைநிறுத்த வீட்டில் பெண்ணைப் பூட்டி சிறைவைத்தனர் அல்லது காவலுக்கு ஆள் வைத்தனர். இதன் மீதான சந்தேகத்தைப் போக்க அடித்து நொறுக்கி மிதிப்பது ஒழுக்கக் காப்பாகியது. இப்படி அன்றும் சரி, இன்றும் சரி ஆணாதிக்க நிகழ்வுகள் எதார்த்தமாக நவீனப்பட்டு உள்ளது. அன்று ஒரு பெண்ணின் முகத்தைக் கணவன் அலங்கோலப்படுத்தியும், பெண்ணை வீட்டில் அடைத்துக் கல்லாக இருக்கச் செய்து அன்றும் சரி, இன்றும் சரி ஆணாதிக்கப் பாலியல் ஒழுக்கக் கோட்பாடு;கள் நிறுவப்பட்டன. ஆணின் இயல்பான சந்தேகக் குணம், பாலியலில் ஒருதலைபட்சமான ஆணின் நுகர்வு, பெண்ணை அதே நோக்கோடுச் சந்தேகிக்கின்றது. பெண் எப்படி மௌனமாகப் பாலியல் பூர்த்தியின்றி வாழமுடிகின்றது என்ற கேள்வி, ஆணின் சந்தேகத்தை நியாயப்படுத்துகின்றது. இதனால் பெண்ணை அலங்கோலப்படுத்துவது, துன்புறுத்துவது ஆணாதிக்கச் சந்தேகப் பண்பாடகின்றது.
பெண் எப்போதும் கல்லாகவும், குரங்காகவும் இருக்க மாற்றப்பட்டாள். அவளின் கடமைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதை மீறுவது குற்றமாகக் காணப்பட்டது. மாற்றாள் குழந்தை தவறி விழுந்து விட்டதால், கடமை தவறிய மனைவியாக இருப்பதைத் தடுக்க தன் குழந்தையையே அவள் கிணற்றில் போடும் அளவுக்குக் கடமை, கட்டுப்பாடு, கற்பு பெண்ணை மிரட்டியது. கடமையைச் செய்யாது என்ன செய்தாய்? யாருடன் குலவினாய்? என்ற சந்தேகங்களை எதிர் கொண்டதால், அவள் தன் குழந்தையையும் கொல்லத் துணிந்தாள், துணிகின்றாள்.
மறுதளத்தில் இன்று வரை நீடிக்கும் குழந்தைத் திருமணம் அன்று குழந்தை பிறக்கும் முன்பே தீர்மானகரமாகியது. இது பெண்ணின் கற்புக்கான எடுத்துக்காட்டுப் பண்பாடாக விளக்கியது. இன்று பெண்கள் கருவில் உள்ள குழந்தையைப் பெறுவது அல்லது அழிப்பது பெண்ணின் உரிமை என்ற ஆணாதிக்கப் பெண்ணியக் கோட்பாட்டைப் போல், அன்று பெண்கள் திருமணத்துக்கு முன்பே குழந்தை மீதான வாழ்க்கையை யாருடன் என்று, தீர்மானிக்கும் ஆணாதிக்க உரிமையைக் கொண்டு பெண் பண்பாட்டைக் கட்டிப் பாதுகாத்தாள். இன்று கருவில் வைத்தே குழந்தை உயிர் வாழ்வதைத் தீர்மானிக்க ஆணாதிக்கப் பெண் விரும்புகின்றாள். இதை இன்று பெண்ணின் உரிமை என்கின்றாள். அன்று அதைப் பண்பாடு, கலாச்சாரம் என்றாள். அன்று கருவுறும் முன்பே பிறக்க போகும் குழந்தை யாருடன் வாழ்வது என்பதைத் தீர்மானித்தாள். இதுதான் பத்தினி பெண்ணின் கற்புக் கோட்பாடாகும். இதுவே இன்று ஆணாதிக்கப் பெண்ணியமாகும்.
இன்று பெண்ணை இழுத்துச் செல்லும் அதிகார வர்க்கம் பெண்ணின் உடலை அனுபவிக்கச் சுதந்திரமாகின்றது. ஆணாதிக்கச் சுதந்திர, ஜனநாயகத்திடமிருந்து பெண்ணைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் வந்துவிடுவதில்லை. துரியோதனன்கள் உடுப்பைப் பிடுங்கியபோது எந்தக் கிருஷ்ணனும் வருவதில்லை. அவள் கற்பு இழந்தவளாகத் தூற்றப் படுகின்றாள். ஏனெனின் அவள், இந்தச் சுதந்திரமான சூறையாடும் தனிச் சொத்துரிமை சட்ட அமைப்பில் குற்றவாளி, எனவே, பெண்ணைக் கற்பழிக்கும் உரிமை அந்த ஆணாதிக்க வர்க்கத்தின் உரிமையாகும்;. இதுதான் இந்தச் சமூகத்தின், பத்தினியின் கற்புத்தனமாகும்;. இதையே கணவனும் ஏற்று, பெண்ணைச் சமூகத்திலிருந்து கேவலப்படுத்தி சித்ரவதை செய்கின்றான்.
இதற்கு மறுபுறத்தில், பெண்ணை உரிந்துவிடுவது பண்பாடாகின்றது. இந்த உரியும் நடத்தை புதிய கலையாகின்றது. விளம்பரங்கள் முதல் டிஸ்கோவரை பெண்ணின் உடுப்பைப் பிடுங்கி உரிவது, பெண்ணின் சுதந்திரத் தாகமாகின்றது. உதாரணமாகப் பெண்ணை, மலம் துடைக்கும் பேப்பர் மூலம் நிர்வணமான பெண்ணை, சுற்றிலும் கட்டற்ற சுதந்திரமான டிஸ்கோவில் நிறுத்தும்போது, சம்பையினின் உள்ளிருக்கும் காற்று அழுத்தத்தைக் கொண்டு பலர் சேர்ந்து மதுவினால்; பெண்ணை ஈரமாக்கி நிர்வாணமாக்கும் நவீன துரியோதனர்கள், கட்டற்ற, சுதந்திர நீதி மூலதனத்தை விரயமாக்க, புதிய மூலதனம் குவிகின்றது. உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் குவிக்கும் மூலதனத்தில், தனது பங்கை மூலதனத்துக்கு வெளியில் ஆணாதிக்க ஆபாசத்தைச் சுதந்திரமாகப் பொழுது போக்கும், சுதந்திரமாகக் கிறுக்குத்தனம் பண்ணும் பல ஆயிரம் மாடல்களாகப் பெண்ணை விபச்சார எல்லைக்குள் நிர்வாணப்படுத்துகின்றது. இது நவீனப் பண்பாடாக வருவதும், பெண்ணியம் இதற்குள் கோட்பாடாகச் சிதைவதையும் அவர்களின் கோரிக்கைகளை மேலும் நிர்வாணப்படுத்து கின்றது.
இன்று கற்பும் காதலும் தன்னளவில் விபச்சாரத்தைக் கோருகின்றது. சகுந்தலையின் தந்தையாகிய விசுவாமித்திரன் முனிவர்களுக்கே முனிவர். இந்த முனிவர் மேனகை மீது காதல் செய்கின்றார். இந்த மேனகை யார்? அவள் தெய்வக் கன்னிகை. தெய்வக் கன்னிகை என்பவர்கள் (தேவதாசிகள்) விபச்சாரிகள். விபச்சாரிகளுடன் உடல் உறவு கொண்ட முனி அதை நியாயப்படுத்த, அவர்கள் தவத்தைக் குழப்ப முயன்றதாகக் கூறியே தன்னை நியாயப்படுத்த முடிந்தது. இந்த முனியின் மகள் சகுந்தலையைத் துஷ்யந்தன் காதல் கொண்டு இச்சையைத் தீர்த்தான். இந்த இச்சைத் தீர்ந்தவுடன் அவனுக்கு அந்த உறவு மறந்து போய்விட்டதாம். எப்படி இருக்கிறது அந்தக்கால ஆளும் வர்க்கங்களினதும், கடவுள் எடுபிடிகளினதும்; ஒழுக்கம்? இந்த ஒழுக்கம் ஆணாதிக்கப் பாலியல் தேவைக்குச் சார்பாகக் கடவுளை உள்ளடக்கி, நியாயப்படுத்துகிறது. ஆண், பெண்ணை அனுபவிக்க காதல், மனைவி, விபச்சாரி என்று எத்தனை வடிவங்கள். அதேபோல் அனைத்தும் ஆணின் தேவையைப் பூர்த்தி செய்ய தெய்வக் கன்னிகைகளானாலும், பெண் பாலியல் நோக்கில் பயன்பாட்டுப் பொருள்தான்.
இதிலிருந்து வீட்டுவேலைக்காரிக்கும், விபச்சாரிக்கும் இடையில் உள்ள வேறுபாடு அனுசரிக்க கோருகின்றது, வழக்கில் உள்ள பழமொழி ஒன்று "காதல் கிழத்தி வாழ்க்கைக்கு உதவாள்", "வாழ்க்கைக் கிளத்தி காதலுக்கு உதவாள்" என்று கூறப்படும் விளக்கங்கள் ஆணின் பலதாரமணத்தை நியாயப்படுத்துகின்றன. இதேபோல் பெண்ணுக்கு ஆணாதிக்கம் உரிமை வழங்கிவிடவில்லை. அதாவது காதலுக்கு வாழ்க்கை மனைவி உதவாள் என்பதன் மூலம் அவளிடம் காதல் செய்ய எதுவுமில்லை. அவள் கணவனுக்கும் அவனைச் சுற்றியும் காதலுக்குப் பதில் வேலைக்காரியாக வாழ்கின்றாள் என்பதையே இப்பழமொழி நிறுவுகின்றது. கணவனின் உண்மையான காதலி அவனின் விபச்சாரி அல்லது வைப்பாட்டிதான் என்பதை நிறுவும்போது இருக்கும் இக்குடும்ப அமைப்பை எதற்குக் கட்டி அழவேண்டும்? பெண் வேலைக்காரியாக வாழக் கோருவதற்கு அப்பால் இருக்கும் இந்தக் குடும்பம் பெண்ணுக்கு வேறு எதையும் வழங்கி விடவில்லை.
அதேநேரம் வீட்டு வேலைக்காரியாகிய மனைவியை முன்நின்று கணவன் கூட்டிக் கொடுக்க ஆணாதிக்க இந்து தர்மம் கோருகின்றது. அதாவது கடவுளின் தொண்டர்களான பார்ப்பனர்கள், பக்தர்கள் இடம் கேட்டால், கேட்பதைக் கொடுக்கும்படி இந்து தர்மம் கோரியது. இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார். பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது பெண்டாட்டியை வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி, அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன். இதேபோல் ஆழ்வார் வீட்டில் ஒரு பக்தன் சாப்பாட்டுக்குப் போனார். உணவு சமைக்க உணவு இல்லாத நிலையில், கடையில் கடன் உதவி கேட்க, அவன் இவன் மனைவியைக் கேட்டான். இதற்கு அவன் பெண்டாட்டியைப் படுக்க விட்டு விருந்து வைத்தாராம்.
எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால் படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், பணக்காரக் கும்பல்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர். குழந்தை மருந்தின்றி உயிருக்குப் போராடும் போதோ, மருந்து வாங்கக் காசு இல்லாதபோதோ, வறுமையில் உணவுக்குக் கையேந்தும்போதோ, வேலை தேடிப் பெண் அலையும்போதோ, உயர் அதிகாரி பெண்ணின் உரிமையை மறுக்கும்போதோ .... படுக்கையில் பெண்ணின் உடலைப் பகிரங்கமாகவே கோருகின்றது, உலகமயமாதல் பண்பாடு. அன்று நிலப்பிரபுத்துவப் பக்திப் பண்பாடு, பக்தியால் பெண்ணைக் கூட்டிக் கொடுக்க கோரியது. அந்தளவுக்குப் பார்ப்பனியம் தனது சொந்தச் சதித்திட்டங்கள் மூலம் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் இருந்தபடி, பெண்ணை அனுபவித்ததை இறைப்பக்தியின் பின் நிகழ்த்தியது. பெண் தனது சொந்தக் கருத்தை விட ஆணின் பண்டமாக, அவனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு ஜந்துவாக, வாழ்ந்ததைக் காட்டுகின்றது, காட்டுகின்றன. இது இன்று பணத்துக்கு முன்னால், பெண் தொடர்ந்தும், ஆணின் பண்டமாகத் தொடர்வது பெண்ணின் வரலாறாக உள்ளது.
ஆண் பலதார மணத்தில் சுகித்திருக்க பெண்ணை அடிமையாக்கினான். இறை புருஷனாகக் கருதப்படும் இராமனின் அப்பன் தசரதன, 60,000 மனைவிகளைக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. இதுபோல் கிருஷ்ணன் ஆயிரக்கணக்கான கோபிகளுடன்; இருந்ததை இன்றும் வெட்கமின்றி, ரோஷமின்றி இரசித்துக் கேட்கின்றோம். இளம் கன்னிகள் தசரதன், கிருஷ்ணன் போன்றோர் முன் நடமாட முடியாத அளவுக்கு அவர்கள் மோசமான ஆணாதிக்க வெறியர்களாகத் திரிந்தனர். பெண்களைத் தமது அந்தப்புரத்தில் சிறைவைத்து, வக்கிரங்களை அரங்கேற்றிய வரலாற்றுப் போக்கில் தான் பெண்கள் தமக்குள்ளும், ஆண்கள் தமக்குள்ளும் இயற்கைக்குப் புறம்பான பாலியல் நடத்தையை, ஆணாதிக்க வழியில் கையாண்டதன் மூலம் அவர்கள் தமது பாலியல் உணர்ச்சியைத் தீர்த்தனர்.
பெண்கள், ஆண்கள் பால் வேறுபாடின்றி ஆணாதிக்க ஒடுக்கமுறையால் தமது பாலியல் தேவையை ஒருதார மணத்தில் பூர்த்தி செய்யமுடியாது போன நிலையில், கூட்டமாக ஆண் - பெண் தனித்து விடப்பட்ட நிலையில் ஓரினச் சேர்க்கை அவர்களின் தவிர்க்கமுடியாத ஆணாதிக்க நிலையாகியது.இயற்கையின் பாலியல் தீர்வை மறுத்து, ஆணாதிக்கச் சமுதாயத்துக்கேயுரிய பாலியல் தீர்வை, மனிதனின் பாலியல் வரலாறாகக் கொள்ளும் எல்லா நிலையிலும் ஓரினச் சேர்க்கை அங்கீகாரத்தைக் கொடுக்கின்றது. இன்று கிடைக்கும் அங்கீகாரமும் போராட்டமும் இயற்கையின் பாலியல் தேர்வில் இருந்து அல்ல, மாறாகச் செயற்;கையான ஆணாதிக்கப் பாலியல் விளைவால், அதற்குள் கோரப்படுபவைதான். இது மனித வரலாற்றை இயற்கையின் வரலாற்றுக்குப் பதில் பூமியின் வரலாறாக இன்று காட்டுவதற்கு ஒப்பானது. அதாவது இயற்கையின் அனைத்தையும் உள்ளடக்கிய வரலாற்றை மறுத்து, மனிதனின் மிகக்குறுகிய வரலாறை இயற்கை வரலாறு ஆக்கிய தனிச் சொத்துரிமைபோல், ஆணாதிக்கப் பாலியல் வரலாறு இயற்கையை மறுத்த பாலியலில் கோருகின்றது. இது ஓரினச் சேர்க்கை முதல் கூட்டுக் கலவிவரை அனைத்தையும் மனிதனின் இயற்கை வரலாறாக மாற்றக் கோருகின்றது. பெண்ணின் போராட்டத்தை ஆணாதிக்கம் இதற்குள் வரையறுக்கின்றது. இதைத்தான் தீவிரவாதமாகக் காட்ட முயல்கின்றது. இதை ஜனநாயகமாக, தனிமனிதச் சுதந்திரமாக இயற்கையை மறுத்து நிறுவமுயல்கின்றது. தனிச் சொத்துரிமையின் தனிமனித ஜனநாயகம், அனைத்து சமூகத்தின் பொதுஇயக்கமாக உள்ள நிலையில், இது அங்கீகாரத்தை எதிர்ப்பின்றி அராஜக வழியில் பெறுகின்றது, கோருகின்றது.
பெண்கள் மீது பெற்றோரால் கையாளப்படும் ஆணாதிக்க அதிகாரம் என்பது, மிருகப் பண்ணைகளை வைத்திருந்த கடந்தகால, நிகழ்கால மனித வரலாற்று வடிவத்துக்கு ஒப்பானது. இந்தப் பண்ணை வளர்ப்பு முறையினால், பெண்களுக்கு இடையில் தவிர்க்கமுடியாத, இயற்கைக்குப் புறம்பான பாலியல் நடத்தைகள் வளர்ச்சிபெற்றன. இதுபோல் நிரந்தர இராணுவங்கள், கட்டாய உழைப்பு, சிறைகள் ஆண்களின் புதியவகையிலான பாலியல் நடத்தையைக் கோரியது. இதைவிட ஆண் - பெண்ணுக் கிடையிலான பாலியல் நெருக்கடிகள், இயல்பான புறத் தடைகள், அகத்தடைகள் போன்றன, மேலும் இயற்கையை மறுத்த புணர்ச்சி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அடைக்கலமாவது சமூக விளைவாகியது. இது சமூகத்தில் காணப்படும் ஆண் - பெண் பிளவுக்குள், மேலும் பாலியல் நடத்தைகளைத் தீவிரமாக, புதியவடிவில், புதிதானவற்றை இந்தச் சமூகப் பொருளாதார, வர்க்க, பண்பாட்டு எல்லைக்குள் தோற்றுவித்தது.
பெண்ணுக்கு ஒருதாரமணம் நிபந்தனையாக மாற்றப்பட்ட நிலையில், பெண் சந்தித்த பாலியல் நெருக்கடிக்குத் தீர்வு மறுக்கப்பட்டது. விவாகரத்து, சுயமான தெரிவு, கற்புக் கோட்பாடுகள் போன்றனவற்றைப் பெண்ணுக்கு மறுத்து, ஒருதார மணத்தை வன்முறையாக ஆணாதிக்கம் திணித்தது. இங்கும் இயற்கைக்குப் புறம்பான பாலியல் தேர்வு, பெண்ணுக்கு மட்டும் திணிக்கப்பட்ட ஒருதாரமணத்தின் விளைவாக இருந்தது. ஆணுக்குப் பலதாரமணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம், இயற்கையைச் சார்ந்து மட்டும் பாலியலைத் தேர்ந்துவிடவில்லை. மாறாகச் சமுதாயத்தைப் பெண் உள்ளடக்கி, அடக்கியாள இருந்த நிபந்தனைகள், அவனுக்கு இயற்கைக்குப் புறம்பான பாலியல் தேர்வை விதியாக்கியது.
இந்து சமயத்தில் முருகன் போன்ற கடவுள்கள் இரண்டு பெண்டாட்டிக்காரனாக இருப்பதை இன்று வரை மறுக்காத சமூகம், பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இது எதார்த்த மனித வாழ்வில் வெட்டுமுகப் பக்கங்களாக இன்று உள்ளது. அதேநேரம் கற்பு கோட்பாடுகள் பணப் பலத்தை ஒட்டி மாறுதல் அடைகின்றன. வழக்கில் உள்ள ஒரு கூற்று ஒன்று, "பத்து பணத்துக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை" என்றும், இடம் கிடைத்தால் எந்தப் பெண்ணும் பதிவிரதையாய் இருக்க முடியாதென்றும்"32 தர்மச் சாத்திரம் கூறுகின்றது. இயற்கையில் ஆண் - பெண்ணின் விருப்பங்கள், தேர்வுகள் இந்தச் சமூகத்தின் எல்லைக்குள், அதன் ஆதிக்கத்துக்குள் இருப்பவைதான். இப்போது இருக்கும் ஒழுக்கம் அதன் முரண்பட்ட ஜனநாயக விரோதத் தன்மையால் ஒழுக்கக்கேட்டைக் கொண்டது. இதனுடன் மற்றைய ஒழுக்கமான தனிச்சொத்துரிமையைப் பாதுகாக்கும் பணம், நிபந்தனையின்றி ஒழுக்கக்கேட்டைக் கொண்டது. இரண்டு ஒழுக்கக்கேடுகள் பற்றி ஏங்கெல்ஸ் கூறியது போல், அதாவது கணிதத்தில் இரண்டு எதிர்மறைகளின் பெருக்கம் நேராவதுபோல், இரண்டு ஒழுக்கக்கேடுகள் ஒழுக்கமாகின்றன.
பணமும், ஜனநாயக விரோதமும் ஒன்று சேர்ந்த எல்லாப் போக்கிலும் அவை மறு ஒழுக்கமாகப் புதுவிளக்கம் காண்கின்றன. வரலாறு முழுக்க ஒழுக்கக்கேடுகள் தொடர்ச்சியாக நேராகி ஒழுக்கமாக வந்த நிலையில்தான், பணமும், ஜனநாயக விரோதமும் புதிய ஒழுக்கமாகின்றது. இன்று வரலாற்றில், பணத்தின் வலிமை மரபான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்கத்தைத் தகர்த்துள்ளது. முதலாளித்துவத்தைத் தொடர்ந்து ஏகாதிபத்திய வளர்ச்சியில், பணமும் தனிச்சொத்துரிமையின் தனிமனித ஜனநாயகத்தின் ஒழுக்கமும் சமூகத்துக்கான எதிர்மறை ஒழுக்கக் கேடாக உள்ள அதேநேரம், இவை இரண்டும் இணைந்து நேராகி புதிய ஒழுக்கப் பண்பாட்டை உருவாக்கின்றன. இந்த ஒழுக்கக்கேடு ஆண், பெண்ணை விடுவித்ததாக, தனிச் சொத்துரிமையின் ஜனநாயகத்தால் பூசி மெழுகப்பட்டபோது, இதைப் பெண்ணியமாக முன்வைப்பதும், கோருவதும் அதிகரிக்கின்றது.
இந்தப்போக்கு கடந்த நிலப்பிரபுத்துவ வரலாற்றில் பணத்தை வைத்திருந்தவர்களின் அந்தரங்கமான, அந்தப்புர நடத்தையின் ஒழுக்கமாக இருந்தது. பணம் கற்பை அந்தப்புரத்தில் இல்லாததாக்கியது. ஆனால், சமூகத்தில் அது கற்பாகவே நீடித்தது. இன்று அந்தப் பணம் கற்பைச் சமூகத்தளத்தில் மறுதலிக்கின்றது. பணத்தின் சுதந்திர எல்லை விரிவடைகின்ற போது அதற்கே உரியவகையில், அதற்கு உட்பட்ட சமூக நடத்தையைச் சுதந்திரமாக மாற்றுகின்றது. இந்த மாற்றம் சமூகத்தின் சுதந்திரமல்ல. மாறாகப் பணத்தின் சுதந்திரமாகின்றது. இதை வைத்திருப்பவனின் சுதந்திரமாக எல்லைப்படுகின்றது. இதைப்பாதுகாக்க, இதைச் சமூகச் சுதந்திரம் என்று திரிக்கப்படுகின்றது. இது பெண்ணின் கற்பை மறுக்கின்றது. பெண் பணத்தின் முன் வெறும் பண்டம் தான் என்பதாக இனம் காட்டுகின்றது. அதாவது மனித உழைப்பை இயந்திரங்கள் தனது பாகத்தின் ஒரு உறுப்பாக்கியது போல், பணம் பெண்ணின் நிலையைத் தனக்குள் ஆணாதிக்கம் சார்ந்த அங்கமாக்கியது. பெண் சுதந்திரமாகப் பாலியலில், விபச்சாரத்தில் ஈடுபட, மூலதனம் தனது இரகசியத் தளத்தில் இருந்து இன்று பகிரங்கத் தளத்தில் பண்பாடாகின்றது.
மனித உழைப்பு இயந்திரத்தின் முன் சமூக மதிப்பிழந்து, உதிரிப்பாகமாகிச் சீரழிந்த வரலாறு போல், தனிச்சொத்துரிமையின் உச்சத்தில் உருவான அதன் சுதந்திரத்தில், பாலியல் விபச்சாரத்தைப் பொது அங்கமாக்கி வருகின்றது. பெண் முன்பை விட தனிச்சொத்துரிமையின் ஆதிக்கச் சுதந்திரத்தில் மேலும் மதிப்பிழந்து போனாள், போகின்றாள். இந்துதர்மம் தனது ஏகாதிபத்திய விசுவாசக் கைக்கூலித்தனத்தில், இராணுவ ஒழுங்கமைப்புக்குள் விபச்சாரத்தைத் தீவிரமாக்க மத அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி அதனூடாக ஒழுக்கமாக்குகின்றனர்.
தமிழ் அரங்கம்
Friday, August 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment