தமிழ் அரங்கம்

Friday, August 17, 2007

தமிழுக்கு எதிராகப் பார்ப்பன – சூத்திரக் கூட்டணி

தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரில் உள்ள சிற்றம்பல மேடையில், பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி வழிபடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, ஜோதிமணி ஆகியோர் தடை விதித்திருக்கின்றனர். இந்தத் தீர்ப்பு, கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருக்கிறது. சட்டமும் நீதியும் பார்ப்பனர்களின் கோவணத் துணிக்குள் அடக்கம் என்ற உண்மை மிகவும் ஆபாசமான முறையில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதனைப் புரிந்து கொள்வதற்கு கடந்த இரு மாதங்களில் இது தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஏப்ரல் 30ஆம் தேதி அறநிலையத்துறை ஆணையரின் மேற்கூறிய உத்தரவு வெளியாகிறது. மே 17ஆம் தேதி கோயிலுக்குள் செல்கிறார் சிவனடியார் ஆறுமுகசாமி. ஆறுமுகசாமி தமிழ் பாடுவதற்கு முன்சீப் கோர்ட்டில் தீட்சிதர்கள் தடை உத்தரவு வாங்கியிருப்பதாகக் கூறி அவரைக் கோயிலுக்குள்ளேயே நுழைய விடாமல் கைது செய்கிறது போலீசு. அடுத்து, அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்குவதற்கு உயர்நீதி மன்றம் வருகிறார்கள் தீட்சிதர்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஆறுமுகசாமியின் சார்பில் ஆஜராகி தடைக்கு எதிராக வாதாடுகிறார்கள். ""அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவில் கருத்து வேறுபாடு இருந்தால், அரசுக்கு மேல்முறையீடு செய்யுங்கள். இடைக்காலத் தடை விதிக்க முடியாது'' என்று கூறி தீட்சிதர்களின் மனுவைத் தள்ளுபடி செய்கிறார் நீதிபதி ஜெயபால்.

வாதில் வெல்ல முடியாத தீட்சிதர்கள் சூதில் இறங்குகிறார்கள். நீதிபதி ஜெயபாலின் தீர்ப்புக்கு எதிராக தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்கிறார்கள். எதிர்மனுதாரராகிய ஆறுமுகசாமிக்கு "நோட்டீசு' அனுப்பாமலேயே காதும் காதும் வைத்தாற்போல தடையாணை கேட்கிறார்கள்; வாங்குகிறார்கள். வழக்கு முடியும் வரை, தமிழுக்கு நிரந்தரத் தடையே (Absolute Stay) விதித்து அருள்பாலிக்கிறது உயர்நீதி மன்றம். எதிர்தரப்பினரின் கருத்தைக் கூடக் கேட்காமல், அவருக்கே தெரியாமல் ஒருதலைப்பட்சமாக இப்படியொரு தீர்ப்பு வழங்குவது சட்டவிரோதமானது, இயற்கை நீதிக்கே முரணானது, கட்டைப் பஞ்சாயத்தை விட மோசமானது என்பதை ஒரு பாமரனும் புரிந்து கொள்ள முடியும். நீதிபதிகளுக்கா புரிந்திருக்காது?

பார்த்த மாத்திரத்தில் நீதிபதிகளின் உள்ளத்தைக் கவர்ந்திழுத்து தமிழுக்குத் தடை விதிக்க வைத்த தீட்சிதர்களின் வாதங்களை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.

""சிவபெருமானின் ஆணையின் பேரில் கைலாயத்திலிருந்து 3000 தீட்சிதர்களை வரவழைத்தான் மன்னன் இரண்ய வர்மன். சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்ததோ 2999 தீட்சிதர்கள்தான். "ஒரு ஆளைக் காணோமே' என்று எல்லோரும் விசனமுற்றபோது ""அந்த தீட்சிதன் நான்தான்'' என்று ஒரு அசரீரி ஒலித்தது. நடராசனே ஒரு தீட்சிதர்தான் என்பதால் நாங்கள் தெய்வப் பிறவிகள். இந்தக் கோயிலை நிர்வாகம் செய்வது தீட்சிதர்களின் பிறப்புரிமை. அதன்மீது ஆணையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது.

""இந்தக் கோயிலில் வேத நெறிப்படி வழிபாடு நடக்கிறது. ஆகம விதிகள் இதற்குப் பொருந்தாது. திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுப்பதற்கு முன்னமே அவற்றைத் தில்லையில் தீட்சிதர்கள் பாடி வருகிறார்கள். ஆன்மீக நம்பிக்கைகளைப் பகுத்தறிவு கொண்டு ஆராய முடியாது. மத நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராகத் தமிழைப் புகுத்துவதுதான் இந்த அரசின் கொள்கை. எனவே, ஆணையரின் உத்தரவு தொடர்பாக இந்த அரசிடம் மனுச் செய்தால் நீதி கிடைக்காது. ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக ஆணையர் கூறுகிறார். வழிபடுவதற்குத்தான் உரிமையே தவிர எங்கே நின்று வழிபடுவது, என்ன பாடுவது என்பதெல்லாம் வழிபாட்டு உரிமையில் சேராது.''

இவை தீட்சிதர்களுடைய மனுவில் காணப்படும் வாதங்களில் சில. இந்த வாதங்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. ""தீட்சிதன் ஒருவனை இப்போது காணாமல் போக வைத்தால் மீண்டும் அசரீரி ஒலிக்குமா?'' என்று நீதிமன்றம் கேட்கவில்லை. ""உருவ வழிபாட்டை எதிர்க்கும் வேள்வி வழிபாடான வேதத்துக்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு?'' என்று கேட்கவில்லை. தாமே திருமுறைகளைப் பாடியதாகப் புளுகும் தீட்சிதப் புரட்டர்கள் திருமுறைகளைப் பதுக்கி வைத்ததும் அழித்ததும், அவை இராசஇராசனால் மீட்கப்பட்டதும் பொய்யா என்று கேட்கவில்லை. ""தனக்குச் சாதகமான முடிவு கிடைக்காது என்பதற்காக அரசின் நிர்வாக அதிகாரத்தையே ஒரு குடிமகன் கேள்விக்குள்ளாக்க முடியுமா?'' என்றும் கேட்கவில்லை. ""எங்கே நின்று வழிபடுவது என்பதைத் தீர்மானிப்பவன் தீட்சிதன்தானென்றால், இது நவீன காலமா, நந்தன் காலமா?'' என்றும் கேள்வி எழுப்பவில்லை.

தடையாணை வழங்குவதற்கான காரணம், விளக்கம், நியாயம் ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூடக் கூறாமல், ஒரே வரியில் தடையாணை வழங்குமளவுக்கு உயர்நீதி மன்றத்தின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன தீட்சிதர்களின் இந்த வாதங்கள்! ""சேது சமுத்திரத் திட்டத்தால் இராமர் பாலம் பாதிக்கப்படக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்று வலிந்து பேசும் ஒரு நீதிபதியின் உள்ளம் தீட்சிதர்களுக்காகத்தானே துடிக்கும்! இதில் வியப்பொன்றுமில்லை.

""தில்லையில் சிவனுக்கு முன்னால் தேவாரம் பாடக்கூடாது'' என்று தீட்சிதர்கள் தடையாணை வாங்கியிருக்கிறார்கள் என்றால், "எவனுக்கு முன்னாலும் தேவாரம் பாடக்கூடாது' என்று தடையாணை வாங்கியிருக்கிறார்கள் தருமபுரம் ஆதீனத்தின் சீடர்கள். தில்லைக் கோயிலில் வேதநெறிப்படி வழிபாடு நடப்பதால் அங்கே தமிழ் நுழையக் கூடாது என்பது தீட்சிதர்களின் வாதம். தமிழில் வழிபாடு செய்வதும் குடமுழுக்கு நடத்துவதும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதும் ஆகம நெறிக்குப் புறம்பானது என்பதால் தமிழைத் தடை செய்யவேண்டும் என்பது ஆதீனங்களின் வாதம்.

இவர்களுடைய மனுவை ஏற்று, திரு.சத்தியவேல் முருகன், சண்முகசுந்தரம் ஆகியோர் தமிழில் நடத்திவரும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளுக்கும், தமிழ் குடமுழுக்கு மற்றும் தமிழ்த் திருமறைகளை ஓதி நடத்தப்படும் திருமணங்களுக்கும் தடை விதித்திருக்கிறது உயர்நீதி மன்றம். மே 30ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜோதிமணி, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ஆகியோர் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர்.

தமிழுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் இத்தகைய தடையாணைகள் அடுத்தடுத்துப் பிறப்பிக்கப்பட்ட போதும், இவற்றுக்கெதிராக குமுறலோ கொந்தளிப்போ கண்டன அறிக்கைகளோ எதுவும் இல்லை. இந்து அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட கூறாமல், இந்தத் தடையை நீக்கக் கோரி மேல் முறையீடு கூடச் செய்யாமல் மவுனம் சாதிக்கிறது தமிழக அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்குச் சட்டம் இயற்றி விட்டதாகவும், "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்ற அறிவிப்பை மாற்றி "தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என்று பலகையைத் தொங்கவிட்டு விட்டதாகவும் பெருமைப் பாராட்டிக் கொள்கிறார் கருணாநிதி. ஆனால், ""தமிழ் அர்ச்சனைக்கு பயிற்சியே கொடுக்கக்கூடாது'' என்று நீதிமன்றம் தடை விதிக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அரசு.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் பார்ப்பனரல்லாத இருவரை அர்ச்சகராக நியமித்து மே 7ஆம் தேதி இந்து அறநிலையத்துறை ஆணை வெளியிடுகிறது. ""பட்டாச்சாரியார் குடும்பத்தில் பிறந்து ஆகம பாடசாலையில் 6 ஆண்டுகள் குருகுலப் பயிற்சி பெற்றவர்களைத்தான் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் பார்ப்பனர்கள். உடனே, ""இரு அர்ச்சகர்களின் நியமன உத்தரவையும் நிறுத்தி வைத்திருப்பதாக'' பதில் அளிக்கிறது அரசு.

தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்களோ, ""தமிழில் அர்ச்சனை செய்தால் உலகம் அழியும் என்றும், குடமுழுக்கு நடத்தினால் அரசு கவிழும் என்றும், தமிழன் அர்ச்சகனானால் கடவுளுக்குத் தீட்டு'' என்றும் பகிரங்கமாக வழக்கு தொடுக்கிறார்கள். ""குஷ்புவுக்கு கோயில் கட்டி தமிழ் குடமுழுக்கு, தமிழ் வழிபாடு நடத்திக் கொள்ளட்டும். ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் அதைச் செய்ய முடியாது'' என்று தருமபுரம் ஆதீனத்துக்காக ஆஜரான வழக்குரைஞர் என்.ஆர்.சந்திரன் பார்ப்பனக் கொழுப்பு வழிய நீதிமன்றத்தில் தமிழை எள்ளி நகையாடுகிறார்.

ஜெயேந்திரனின் தரகனாகச் செயல்பட்டு வரும் புலவர் மகாதேவன் என்ற நபரோ, தருமபுரம் ஆதீனத்துக்கும் "மக்கள் தொடர்பு அதிகாரி'யாகச் செயல்படுகிறார். சிவராத்தியன்று காசிக்குச் சென்றிருந்த சிவனடியார் ஆறுமுகசாமி அங்கேயுள்ள திருப்பனந்தாள் மடத்தில் தங்கச் சென்றபோது ""சமஸ்கிருத விரோதிக்கு மடத்தில் இடமில்லை'' என்று விரட்டியிருக்கிறார்கள் அந்த "தமிழ்' மடத்தின் நிர்வாகிகள். இரண்டு வாரங்களுக்கு முன் ஆறுமுகசாமியை வழிமறித்து மிரட்டிய தீட்சிதøன் கையும் மெய்யுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்த போதும் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறது சிதம்பரம் நகர போலீசு.

""கடவுளின் நகைகளைத் திருடியது, பக்தர்கள் கொடுத்த காணிக்கைகளைக் கணக்கே இல்லாமல் சுருட்டிக் கொண்டது போன்ற குற்றங்களுக்காக தீட்சிதர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்'' என்று 1997லேயே சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை. கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிராக தீட்சிதர்கள் பெற்றிருக்கும் நீதிமன்றத் தடையாணையை உடைப்பதற்கும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெறும் 250 தீட்சிதப் பார்ப்பனர்கள் இத்தனை கோடி தமிழ் மக்கள் மேல் எவ்வாறு ஏறி மேய முடிகிறது என்ற கேள்வி யாருக்காவது இருந்தால், அதற்கான விடை மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாத அனைவரும் தமிழால் ஒன்றுபடுவதாகக் கூறப்படும் பித்தலாட்டத்துக்கு யாரேனும் மயங்கியிருந்தால், அவர்களுடைய மயக்கம் தெளிவிக்கும் மருந்து மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது. ஏமாளித் தமிழன் பார்ப்பன சூதுக்குப் பலியாகி விட்டான் என்ற நைந்து போன திராவிட இயக்கப் பொய்க்கு யாரேனும் பலியாகியிருந்தால், தருமபுரம் ஆதீனம் முதல் கோபாலபுரம் ஆதீனம் வரையிலான "ஏமாளிகளின்' யோக்கியதைக்குச் சான்று மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது.

தமது பதவி, நிலம், சொத்து ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதில் ஆதீனங்களும் தீட்சிதர்களும் ஒரே அணியில்தான் இருக்கிறார்கள். இன்று தீட்சிதர்களுக்கு நேருவது நாளை நமக்கு நேரக்கூடும் என்பதுதான் பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத "சூத்திர' ஆதீனங்களின் கவலை. ஆகையால், இந்த பார்ப்பனசூத்திரக் கூட்டணி மிகவும் இயற்கையானது. தம்முடைய சுரண்டலையும் ஆதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பார்ப்பனர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்ட தமிழ் மன்னர்கள் முதல் கருணாநிதி, வைகோ, ராமதாசு வரை இதுதான் உண்மை.

""எவன் வேண்டுமானாலும் அர்ச்சகனாக முடியுமா, வேதங்களின் இடத்தில் தேவாரமா?'' என்று ஆதீனங்கள் கொதிக்கும்போது அந்த உருத்திராட்சப் பூனைகள் அணிந்திருக்கும் பூணூல் வெளியே தெரிகிறது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. "சாதி கெட்டவன்' கையால் திருநீறு வாங்குவதைக் காட்டிலும், பார்ப்பான் காலை நக்குவதையே அவர்கள் கவுரவமானதாகக் கருதுகிறார்கள். பார்ப்பனியம் என்பது தங்களுடைய சொந்த சித்தாந்தம் என்பதை புரியாதவர்களுக்கும் புரிய வைக்கிறார்கள்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க சட்டமியற்றி விட்டதாகவும், அர்ச்சகர்களைப் பயிற்றுவிக்க பயிற்சிப் பள்ளிகள் நடப்பதாகவும் தி.மு.க. அரசு ஜம்பமடிக்கிறது. "பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை'ப் பிடுங்கி எறிந்ததற்காக கருணாநிதிக்கு பாராட்டு விழாவும் நடத்திவிட்டார் வீரமணி. ஆனால் நியமன உத்தரவை எதிர்த்து பார்ப்பனர்கள் வழக்கு போட்டவுடனே, நியமனத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கிறது அரசு. ""நான் சட்டமன்றத்தில் சட்டம் போடுகிறேன். நீ நீதிமன்றத்தில் போய் தடையாணை வாங்கிக் கொள்'' என்று பேசி வைத்துக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும் குடும்ப சகிதமாக தில்லைக் கோயிலுக்கு வருகிறார்கள். தீட்சிதர்கள் திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். மூசாவுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள். பஞ்சைப் பராரிகளால் பாராட்டப்படுவதை விட பார்ப்பனர்களால் பாராட்டப்படுவதே அவர்களுக்குக் கவுரவமாகத் தெரிகிறது. அவர்கள் வீட்டு அம்மணிகளுடன் ஐயர்கள் ஹாட்லைனில் தொடர்பு வைத்திருக்கிறார்கள். பதவியும், பணமும் ஏற ஏற ஜோசியம், ஜாதகம், நாள், நட்சத்திரம், மஞ்சள் துண்டு அனைத்தின் மீதும் நம்பிக்கை வருகிறது. பார்ப்பனியத்தை மிகவும் இயல்பாக அவர்கள் அரவணைத்துக் கொள்கிறார்கள்.

ஆதீனங்களும் அதிகாரிகளும், நீதிபதிகளும் அரசியல் தலைவர்களும் பார்ப்பனர்களுடன் அமைத்துள்ள இந்தக் கூட்டணி சாதிக்கூட்டணி அல்ல; இது வர்க்கக் கூட்டணி. தமிழை எதிர்ப்பவர்கள் தீட்சிதர்கள் மட்டும்தான் என்றால், இந்தப் பிரச்சினை என்றோ முடிந்திருக்கும். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் சூதும் சதியும் செய்து தீட்சிதர்களுக்குக் கவசமாக நின்று கொண்டிருப்பவர்கள் இந்தக் கேடுகெட்டத் "தமிழர்கள்' தாம்!

எனவேதான், தமிழுக்கு எதிராக இத்தனை கொடுமையான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், இவற்றைக் கண்டிக்கவோ, எதிர்க்கவோ யாரும் முன்வரவில்லை. தமிழால் வயிறு வளர்த்தவர்களும் பதவி அடைந்தவர்களும் பட்டம் சூடியவர்களும் பத்திரமாகப் பதுங்கிக் கொண்டிருக்க, சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும் தன்னந்தனியாக நின்று தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாரே, ஏன்? ஏனென்றால், இழப்பதற்கு அவரிடம் எதுவும் இல்லை ஒரு மஞ்சள் பையும் சோற்றுப் பாத்திரமும் தவிர!

· சந்திரன்

3 comments:

கோவி.கண்ணன் said...

ம் என்ன செய்வது பெருமூச்சை
விடுவதைத்தவிர

உண்மை said...

பார்ப்பனீயத்தையா கிண்டல் செய்றீங்க? உங்களை எங்க டோண்டு சாரிடம் சொல்லி செருப்பாலயே அடிக்கச் சொல்கிறேன். என் அருமை நண்பர் அதியமான் என்பவரும் டோண்டு சாரின் நண்பர்தான். அழழத்து வருகிறேன்.

Unknown said...

என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை? இசைத்தமிழுக்கு சோதனை வந்தபோது வந்த சிவபெருமான் தான் இதுக்கு விடையளிக்க வேண்டும்.