""எந்தவிதத் தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.'' (தினமணி, 26.6.07)
""சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் ஈர்க்கப்படும் தொழில் நிறுவனங்களுள், பெரும்பாலானவை மிகப் பெரும் முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. எந்தவிதமான தொழில்நுட்பப் பயிற்சியும் பெறாத தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, இது ஒன்றுதான் தக்க வழியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.'' (தி ஹிந்து, 24.5.07, பக்: 23)
மேலே காணப்படும் இரண்டு கருத்துக்களும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பவர்களால் கூறப்பட்டவையல்ல. முன்னது, ""தினமணி'' நாளிதழின் தலையங்கக் கருத்து. பின்னது, இந்தியாவின் வர்த்தகக் கொள்கை மீளாய்வு தொடர்பாக நடந்த கூட்டத்தில், உலக வர்த்தகக் கழகம் முன்வைத்த அறிக்கையில் கூறப்பட்ட விமர்சனம்.
""எந்தவிதமான அதிகார வர்க்கத் தடைகளுமின்றி, அந்நிய மூலதனத்தையும், அதி உயர் தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்வது; ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அந்நியச் செலாவணி ஈட்டுவதை உயர்த்துவது; வேலை வாய்ப்பைப் பெருக்குவது'' ஆகிய நோக்கங்களுக்காகத்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதாக இந்திய அரசு கூறி வருகிறது. ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தப் பலன்கள் கிடைக்கும் என்பதை ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே ஒத்துக் கொள்ளத் தயங்குகின்றன. ""தினமணி''யின் தலையங்கமும், உலக வர்த்தகக் கழகத்தின் அறிக்கையும் இந்தத் தயக்கத்தின் வெளிப்பாடுகள்தான்.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2001ஆம் ஆண்டே 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இம்மண்டலத்தில் அமையும் ஆலைகள் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்; இதனால் அப்பகுதியில் சாதிக் கலவரம் நடப்பது தடுக்கப்படும் என்றெல்லாம் அன்று கதையளந்தார்கள். ஆனால், ஆறாண்டுகளுக்குப் பிறகு பார்த்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணிதான் நான்குநேரியில் நடந்து கொண்டிருக்கிறது. ""வேலி அமைத்தவுடன், அங்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கும்; அது முடிந்தபிறகுதான் ஆலைகள் வரும்'' என்று இப்பொழுது புதுக்கதை சொல்கிறார்கள்.
நான்குநேரி திட்டம் இப்படி ஆமை வேகத்தில் நகர, ""இந்த ஆண்டிற்குள் தமிழகத்தில் 9 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 7,107 கோடி ரூபாய் மூலதனத்தில் அமையும்; இதன் மூலம் 1,76,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்'' என டாம்பீகமாக அறிவித்தது தி.மு.க. அரசு. ஆனால், இத்திட்டங்களுக்காக இதுவரை வெறும் 772.50 கோடி ரூபாய்தான் மூலதனம் போடப்பட்டிருப்பதாக அழுது புலம்பும் ""ஃபிக்கி'' என்ற தரகு முதலாளிகள் சங்கம், தமிழக அரசு இன்னும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தியாவின் உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது பயன் கிட்டுமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களுள் 63 சதவீத விண்ணப்பங்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கத்தான் அனுமதி கோரியுள்ளன.
இதுவொருபுறமிருக்க, ஏற்கெனவே நடந்து வரும் தொழில்கள், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு இடம் பெயர்வதை ""வளர்ச்சி'' என்று சொல்ல முடியாது; சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் பண்டங்கள், உள்நாட்டுச் சந்தைக்குள் நுழைந்தால், இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே அச்சப்படுகின்றனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தாராளமயத்தின் தீவிர பக்தரான நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் மைய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் எனக் கூறி, வர்த்தக அமைச்சர் கமல்நாத்தோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். உலக வர்த்தகக் கழகம் கூட இந்த வரி இழப்பு பற்றிக் கவலைப்படுகிறது.
தனியார்மயம் தாராளமயத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் என ஆளும் கும்பல் ஊதிப் பெருக்குவதெல்லாம், அடுத்த நிமிடமே நீர்க்குமிழி போல உடைந்து வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலமும் இந்தத் தோல்வியில் இருந்து தப்பப் போவதில்லை.
No comments:
Post a Comment