நாடு மீண்டும் காலனியாக்கப்படும் நிலையில், அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க அணு ஆயுதப் போர்க்கப்பலான நிமிட்ஸ், கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு வந்ததை எதிர்த்தும், இக்கப்பலை இந்திய கடற்பகுதியில் உலாவ அனுமதிக்கும் துரோக ஆட்சியாளர்களை எதிர்த்தும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்க அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, இப்போது ""கூட்டுச் சேரா இயக்கத்திலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கி வரவேண்டும்'' என்று அமெரிக்க அரசுச் செயலர் கண்டலீசா ரைஸ் விடுத்த எச்சரிக்கைக்கு விசுவாசமாகப் பணிந்து இப்போர்க்கப்பலை அனுமதித்துள்ளது. அண்மை ஆண்டுகளில் இதேபோல் 5 அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு வந்து இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகள் நடத்தியுள்ளன.
இந்த உண்மைகளுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் ஈராக் மக்களைக் கொன்றொழித்த இப்போர்க் கப்பலை அனுமதிப்பதென்பது நாட்டுக்கே அவமானம் என்று விளக்கி, கடந்த ஜூலை 2ஆம் நாளன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்ற தோழர் சுப.தங்கராசு அறை கூவினார்.
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், திரளாக வந்த உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.
பு.ஜ. செய்தியாளர்கள்
No comments:
Post a Comment